தொடர்கள்
Trending

‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’: 6 – கண்களுக்கு அப்பால்

தொடர் | வாசகசாலை

டிசைன் என்பது கண்ணால் பார்க்கக் கூடியது மட்டும் அல்ல. மற்ற புலன்களும் இதில் அடங்கும்.  கேட்பது, பேசுவது, உணர்வது போன்றவற்றாலும் ஒரு நபர் அல்லது ஒரு பொருளுடன் நாம் தொடர்பு கொள்கிறோம். உங்கள் தொலைக்காட்சியை ஆன் (ON) செய்யும்போது ஒருவகையான ஒலியும், ஆஃப் (OFF) செய்யும் போது வேறு மாதிரியான ஒலியும் கேட்பதைக் கவனித்திருப்பீர்கள். இந்த வேறுபாடு மூலம் தொலைக்காட்சி ஆன் செய்யப்படுகிறதா அல்லது ஆஃப் செய்யப்படுகிறதா என்று பார்க்காமலே நம்மால் கண்டுபிடிக்க முடியும். இது முக்கியமாகப் பார்வையற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

டிசைன் என்பது பயனாளரின் ஒன்றுக்கும் மேற்பட்ட புலன்களை ஒரே நேரத்தில் சென்றடையுமாறும்  அமைக்கப்பட்டிருக்கலாம். உதாரணத்திற்கு ஆம்புலன்ஸ் மேலே இருக்கும் சைரன். அது சத்தமாக ஒலி எழுப்புவது மட்டுமல்லாமல் சிகப்பு மற்றும் நீல வண்ணத்தில் கண்ணைக் கூசுமாறு ஒளிரவும் செய்யும்.

இதே ஐடியா தான் ஏடிஎம்மில் கூட பயன்படுத்தப்படுகின்றது. கார்டை தவறாகச் செருகினாலோ, பணம் இருப்பு இல்லையென்றாலோ திரையில் பிழை காட்டப்படுவதோடு பிழையைச் சுட்டிக்காட்டும் வகையில் ஒரு ஒலியும் கேட்கும்.

கேட்பது மட்டுமல்லாமல் உணர்வது மூலமும் தொடர்பு ஏற்படுத்தலாம். உங்கள் ஃபோனில் அழைப்பு வரும்போது சத்தத்தோடு சேர்ந்த ஒரு அதிர்வும் இருக்கும், அதாவது வைப்ரேஷன். ஒருவேளை நீங்கள் ஒலி அளவை முற்றிலுமாக குறைத்து வைத்திருந்தாலும் வைப்ரேஷன் மூலம் உங்களுக்கு  அழைப்பு வருகிறதா என்று தெரிந்துகொள்ள முடியும்.

இவ்வாறெல்லாம் தற்கால கருவிகள் பயனாளருக்கு ஒலி, ஒளி, உணர்தல் போன்றவற்றின் மூலம் ஒரு உள்ளீட்டைக் கொடுப்பது போல,  அவையும் பதிலுக்கு நம்மிடமிருந்து உள்ளீட்டை எடுத்துக்கொள்கின்றன.

அலெக்சா, ப்ளே அனிருத்’ என்று கட்டளையிட்டால். இசையமைப்பாளர் அனிருத் அவர்களின் பாடல்களை மட்டும் ஒன்றன்பின் ஒன்றாக ஒலிக்க வைக்கும்.

இது போன்ற கட்டளைகளை ஒலி வடிவத்தில் தற்கால கருவிகள் மிகவும் லாவகமாகக் கையாள்வதை எல்லோரும் பார்த்திருக்கலாம். முக்கியமாக அவரவர் தாய்மொழியிலேயே, சாதாரணமாக நாம் பேச்சுவழக்கில் கூறினால் கூட அதைப் பிழையின்றி நவீன கருவிகள் சரியாக எடுத்துக்கொள்கின்றன. இப்பொழுது நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த கட்டுரை தட்டச்சு செய்யப்படவில்லை, முழுக்க முழுக்க ஒலி கட்டளையால் எழுதப்பட்டது. இதனால் எழுதும் மற்றும் பிழை திருத்தும் நேரம் வெகுவாக சேமிக்கப்படுகிறது.

இவற்றை வடிவமைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தமிழ் மொழியை எடுத்துக் கொண்டால் மூன்று விதமான உச்சரிப்புடன் கூடிய ‘la’ என்ற ஒலி தரும் எழுத்துக்கள் உள்ளன.

சரியாக உச்சரிக்கவில்லை என்றால் தவறான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு அவை விரும்பத்தகாத முடிவுகளைத் தரலாம்.

உதாரணத்திற்கு உங்கள் ஃபோனின் பிரகாச அளவைக் குறைக்க

‘ஒளியைக் குறை’ என்று கூகுளிடம் கட்டளையிட்டால், அது தவறாக ஒலி என்று எடுத்துக்கொண்டால் உங்கள் ஃபோனில் சத்த அளவைக் குறைத்து விடும். இது ஒரு வேலைக்கு இரண்டு வேலை ஆகிவிடும்.  மற்ற மொழிகளிலும் இந்த பிரச்சனை இல்லாமல் இல்லை. ஒவ்வொரு மொழி மக்களும் எந்த வார்த்தைகளை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் ஒரு சொற்றொடரில் எந்தெந்த வார்த்தைகள் அதிகமாகப் பயன்படுத்தபடுகின்றன என்பதையெல்லாம் நம்மிடமிருந்து கற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ள இந்த சேவை மேம்படும்.

தொடுதல் மற்றும் ஒலி மட்டுமல்லாது அசைவினால் கூட நாம் உள்ளீட்டைக் கொடுக்க முடிகிறது.

நவீன வீடியோ கேம்களில் இவை பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கண்களில் மெய் நிகர் கருவியைப் பொருத்திக் கொண்டு நமது உடல் அசைவை உள்ளீடாக எடுத்துக்கொண்டு  திரையைத் தொடாமலே கேம் விளையாடுவதைப் பார்த்திருக்கலாம். உதாரணத்திற்கு கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களை ஒரு அறையிலிருந்து கொண்டு நிஜத்தில் விளையாடுவது போன்ற அனுபவத்தைப் பெறலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொலைக்காட்சி, வாஷிங் மெஷின் போன்ற கருவிகளில்  இந்த டெக்னாலஜி வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

திரைகளைத் தவிர்த்துப் பல கருவிகளில் பட்டன்கள் மூலம் உள்ளீடு செய்கிறோம். வெறும் அழுத்துதல்  மட்டுமின்றி  தள்ளுதல், இழுத்தல், நகர்த்தல், சுற்றுதல் இதுபோன்ற மற்ற வகை செயல்களாலும் உள்ளீட்டைக் கொடுக்க முடியும். நம் வீட்டில் இருக்கும் மின்விசிறியின் வேகத்தைக் கட்டுப்படுத்த  ஸ்விச் பக்கத்தில் இருக்கும் வட்டவடிவ சீராக்கியை (Regulator) சுற்றுவதன் மூலம் தேவைக்கு ஏற்றார்போல் வேகத்தை மாற்றிக் கொள்கிறோம். அதிகபட்ச வேகத்தை அடைந்தபின் அந்த சீராக்கியை மேலும் சுற்ற முடியாதபடி அது வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே முழு வேகத்தில் மின்விசிறியை இயக்க வேண்டுமென்றால், கண்ணை மூடிக்கொண்டு முழுவதுமாக திருகி விடுவோம். இவ்வாறு வைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்வது ஒரு டிசைனர் தான்.

இவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டு டிசைன் செய்வது மிகவும் முக்கியம், ஏனென்றால் இதுதான் எதிர்காலம்.  நேரடியாக ஒரு பொருளை அல்லது அதில் உள்ள திரையைத் தொடுவதன் மூலம் மட்டுமே செய்யப்பட்டு வந்த மனித-கணினி தொடர்பு (Human-Computer Interaction) இப்போது அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது.

இதுவரை காட்சிகளை மட்டுமே டிசைன் செய்து வந்த டிசைனர்கள் இனி இதுபோன்ற அடுத்தகட்ட இடை முகங்களையும் டிசைன் செய்ய தங்களைத் தாங்களே அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.  இல்லை எனில் பழைய கருவிகளைப் போல டிசைனர்களும் காலாவதி ஆகிவிடுவோம்.

பயந்துவிட வேண்டாம், டிசைன் பற்றிப் புரிந்து கொள்ள அல்லது தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இந்த தொடரைப் படிப்பவர்கள் மேலே பேசப்பட்ட விஷயங்களை மேம்போக்காக ஒரு துணுக்கு செய்தி போல  எடுத்துக் கொண்டால் போதும். ஆனால் டிசைன் துறையில் கால்பதிக்க நினைப்பவர்கள் இவற்றைப் பற்றி மேலும் தேடிப் படித்து அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்கு நவீன கணினி சம்பந்தப்பட்ட கட்டுரைகளை அல்லது செய்திகளைத் தொடர்ந்து படித்து தங்களைத் தாங்களே அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். தமிழில் கூட இந்த செய்திகள் தற்போது எளிதாகக் கிடைக்கின்றன.

 

தொடரும்…

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close