தொடர்கள்
Trending

‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’:3 – மொழி நடையும் அர்த்தங்களும் – மாரியப்பன் குமார்

தொடர் | வாசகசாலை

மொழி என்பது தொடர்பு ஏற்படுத்துவதில் மிக அடிப்படையான ஒன்று. மொழியானது, இடம், சூழல், உச்சரிப்பு, தொனி போன்றவற்றைப் பொறுத்து வெவ்வேறு அர்த்தங்களைத் தரக் கூடியது என்பதால் அது கவனமாக கையாளப்பட வேண்டும். நாம் பேசும்போது மேலே கூறப்பட்ட உச்சரிப்பு, தொனி போன்றவையெல்லாம் நமது கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால் எழுத்து மூலம் தொடர்பு கொள்ளும்போது, அதை வாசிப்பவர் எந்த நோக்கத்தில் எடுத்துக் கொள்வார் என்பது அது எழுதப்பட்டிருக்கும் விதத்தைப் பொறுத்தது.

கதவுகளில் இருக்கும் ‘இழு’ மற்றும் ‘தள்ளு’ என்ற குறிப்பு, வாகனங்களின் பின்னால் இருக்கும் ‘10 மீ இடைவெளி விட்டு வரவும்’ என்ற எச்சரிக்கை, சாலைகளில் உள்ள வழிகாட்டிகள் என இப்படி எல்லா இடங்களிலும் மொழியின் பங்கு நிறைந்திருக்கிறது. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தா விட்டால், அபத்தமான அர்த்தங்களைத் தந்துவிடும்.

உதாரணத்திற்கு, Local (லோக்கல்) என்ற ஆங்கில வார்த்தையின் அர்த்தம் என்ன?

குறிப்பிட்ட இடத்தில் வாழும் ஒருவர்; உள்ளூர்க்காரர்.

a person who lives in a particular place.

ஆனால் நம் ஊரில் பேசும்போது ‘லோக்கல்’ என்ற வார்த்தையை எவ்வளவு கவனமாகக் கையாள வேண்டி இருக்கிறது. ஒருவரை அல்லது ஒரு பொருளைத் தரக்குறைவாகக் குறிப்பிடும் சொல்லாக அதன் அர்த்தமே மாறிவிட்டது. ‘பொருள் லோக்கலா இருக்கு’, ‘இறங்குனா நான் உன்ன விட லோக்கலு’, ‘நாங்களாம் தர லோக்கல்’ இதையெல்லாம் சொல்வதன் அர்த்தம் என்ன?

ஒரு விலங்கியல் பூங்காவில் உள்ளூர்க்காரர்களுக்கும், வெளியூர்க்காரர்களுக்கும் தனித் தனி வரிசை என்று வைத்துக் கொள்வோம். காவலாளி ஒருவர், ‘லோக்கல் எல்லாம் இந்த வரிசைல நில்லுங்க’ என்று சத்தமாக அறிவித்தால், எல்லோரும் இதன் அர்த்தத்தை ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்வார்கள் என்பது சந்தேகம்.

இதேபோல மொழியில் காணப்படும் இன்னொரு சிக்கல் ஒரே அர்த்தம் தரக் கூடிய வெவ்வேறு வார்த்தைகள் மற்றும் வெவ்வேறு அர்த்தங்கள் தரக்கூடிய ஒரே வார்த்தையைக் கொண்டிருப்பது.

‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் ஒரு காட்சியில், மருத்துவர் ஒருவர் பிணத்தை வைத்து பாடம் நடத்திக் கொண்டிருப்பார். அப்போது கமல் அதைப் பார்த்து ‘Dead Body (பிணம்)’ என்று குறிப்பிடுவார்.

அதற்கு அந்த மருத்துவர், ‘Don’t call it dead body, call it CADAVER’ என்பார்.

பொதுவாக எல்லோரும் பயன்படுத்தும் வார்த்தையைத்தான் கமல் கூறுகிறார். ஆனாலும் மருத்துவத்துறை, அவர்களுக்கு என்று ஒரு சொல்லை வைத்திருக்கிறார்கள். அவர்களது புத்தகம், செயல்முறை போன்ற இடங்களிலும் CADAVER (அல்லது Corpse) என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. மருத்துவர்கள் அவர்களுக்குள் தகவலைப் பரிமாறிக்கொள்ளும்போது இவ்வார்த்தையைப் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் பொது மக்களிடம் பேசும்போது ‘டெட் பாடி’ என்றுதான் சொல்ல வேண்டி இருக்கும். எனவே மொழி என்பது யாரிடம் தொடர்பு கொள்கிறோம் என்பதைப் பொறுத்து ஒரே அர்த்தம் தரக்கூடிய வெவ்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்த நம்மை உட்படுத்துகிறது.

மற்றுமொரு நடைமுறை உதாரணம்,

Hotel அல்லது Restaurant வார்த்தைகளை மாற்றிப் பயன்படுத்துதல்

நம் ஊரில் ஹோட்டல் என்ற வார்த்தையையே எல்லா விதமான உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கும் பயன்படுத்துகிறோம். ஆனால் ஆங்கில அகராதிப்படி,

Hotel என்பது உணவு வசதியுடன் கூடிய தங்கும் இடம்

Restaurant என்பது வெறும் உணவு மட்டுமே வழங்கும் இடம்.

இது பெரிய பிரச்சனையா என்று கேட்கலாம்?

ஒருவர் கூகுள் மேப் (Google Map) இல், பக்கத்தில் ஏதாவது சாப்பிடும் இடம் உள்ளதா என்று தேடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். ‘Hotels near me’ (அருகில் உள்ள ஹோட்டல்கள்) என்றுதான் தேடுவார். ஏனெனில் அதைத்தான் நம்மைச் சுற்றி உள்ள உணவகங்களின் பெயர்ப் பலகைகள் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றன.

ஆனால் கூகுள் மேப் தங்கும் விடுதிகளைத் தான் காட்டும். சாப்பிடும் இடங்களைக் காட்டாது.

கூகுள் செய்தது அகராதிப்படி சரிதான் என்றாலும், நம் ஊர் பயனாளரின் தேவை பூர்த்தியாகவில்லை இங்கே. எனவே ஒரு இடைமுகத்தில் (Interface) உள்ள சொற்கள் கூட பயனாளரின் மொழியைப் பேச வேண்டும்.

ஒரே மொழியில் வெவ்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் நடைமுறைகளால் ஏற்படும் சிக்கல்களும் உள்ளன. நாம் சென்டிமீட்டர், கிலோமீட்டர் என்று நீளத்தை அளப்போம். ஆனால் அமெரிக்காவில் அடி(feet), மைல் (mile) என்று அளப்பார்கள். இவற்றையாவது பார்த்த மாத்திரத்தில் பின்னால் குறிப்பிடப்பட்டிருக்கும் cm, ft, kg, lbs போன்றவற்றைக் கொண்டு குழப்பமின்றி புரிந்து கொள்ளலாம்.

ஆனால் தேதிகளைக் குறிப்பிடும்போது குழப்பம் அதிகம் ஏற்படும்.

உதாரணத்திற்கு, 4/12/2021 இது ஏப்ரல் 12ம் தேதியா அல்லது டிசம்பர் 4ம் தேதியா என்பது நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும். இந்தியாவில் நாள்/மாதம்/வருடம் என்று எழுத வேண்டும் ஆனால் அமெரிக்காவில் (இன்னும் சில நாடுகளிலும்) மாதம்/நாள்/வருடம் என்று எழுத வேண்டும். எனவே, ‘நான் கலிபோர்னியா வருகிறேன் நாம் அங்கே சந்திக்கலாம்’ என்று ஒரு அமெரிக்கரிடம் தேதியைக் குறிப்பிடும்போது அவர் பயன்படுத்தும் தேதி வடிவத்தில் குறிப்பிட வேண்டியது முக்கியம். இவற்றைக் குழப்பமின்றி பயன்படுத்த சில தரநிலைகள் (Standards) வரையறுக்கப்பட்டு உலகம் முழுக்க எற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

எனவே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களுக்கான தயாரிப்பை உருவாக்கும்போது இவற்றையெல்லாம் முதலில் தெரிந்து கொள்வது மிக அவசியம். பயனாளரின் இடம், சூழல், வட்டார வழக்கு எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிடில் அபத்தமான அனுபவத்தைப் பயனாளர் பெற நேரிடலாம்.

தொடரும்…

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. மாப்பிள்ளை தொடர்ந்து எழுதுங்கள், ஆதரவுடன் உனக்காக நான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close