சிறுகதைகள்

நிழற்காடு – விஜய ராவணன்

சிறுகதைகள் | வாசகசாலை

நாம் நிழல்களைச் சுமந்து வாழ்வதில்லை. நிழல்கள்தான் நம் நிஜங்களைச் சுமந்தே திரிகின்றன. நாம் காணமுடியாத கனவுகளை… சொல்லமுடியாத வார்த்தைகளை… வெளிக்காட்ட முடியாத முகங்களை… நிறைவேறாத ஆசைகளை… அடக்கமுடியாத கோபங்களை… இப்படி எத்தனை எத்தனையோ விஷயங்களைச் சுமப்பதினால்தான் பாரம் கூடிகூடிச் சில நேரங்களில் நிழல்கள், நிஜங்களைவிடப் பூதாகரமாகத் தோன்றுகின்றன. 

ஒவ்வொரு சிறிய உருவத்துக்குள்ளும் அதன் உருவத்தைத் தாண்டிய பெரியதொரு நிழல்கள் வசிக்கத்தான் செய்கின்றன. இருளிலும் சுதந்திரமாய் வெளியேற, சின்னஞ்சிறு ஒளிக்கீற்றுக்காக அவை காத்திருக்கின்றன. உள்ளும் புறமும் புண்பட்டு, ஆறாத வடுக்களின் ரணங்களைச் சுமந்தே வாழும் புறக்கணிப்பட்ட உடல்களால் வேறு எங்கு முறையிட முடியும்? 

இருட்டில் தன்னை மறைத்துத் தனக்குள் ஒடுங்கிக்கொண்டே வாழும் மனிதனுக்கு, அவனது நிழல்கள்தான் கடைசிப் புகலிடம்!.

“சரிவா! கேமரா இல்லாம போட்டோ எடுத்துப்போம்” என்றாள் சிரித்தபடியே.

காற்றில் தனித்தனி உதிரிகளாய்ப் பறந்துகொண்டிருக்கும் கலைந்த தலைமுடியைச் சரிசெய்து, அருகருகில் நின்றுகொண்டு வெயிலில் நிழல்களாய் புகைப்படம் எடுத்துகொண்டார்கள்.

“பெயருக்கு ஏத்த புகைப்படம்”

“இல்ல நிழல்படம்னு சொல்லுறதே தப்புதான். இதுதான் நிஜம்.” 

குணாளன் பதில் ஏதும் சொல்லவில்லை. அவள் எதைச் சொல்ல விழைகிறாள் என்று மட்டும் புரிந்தது. நிழல்களை நேசித்து நேசித்து நிழல்களே போதும் என்று நினைப்பவள் வேறு என்ன சொல்லுவாள்?

ஊருக்கு வெளியே இருக்கும் ஆலமரக்காட்டுக்குப் போகும் செம்மண் ரோட்டுக்கு குணா வந்தபோது, மணி நான்கை தொட்டிருந்தது. ராணி முன்னமே காத்திருந்தாள். கொஞ்ச நேரம் பேசிவிட்டு இருட்டுவதற்குள் ஆலமரக் காட்டுக்குள் போவது என்று முன்னரே அவர்கள் பேசி வைத்திருந்த முடிவு. நாலு மணி வெயிலில் நீண்டுவிழும் தன் நிழலை வேடிக்கை பார்த்தபடியே பேசிக்கொண்டு நடப்பது அவளுக்குப் பிடிக்கும்.

ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் ஜல்லிகற்கள் செருப்பைத் தாண்டி குத்தின. இன்னும் கொஞ்சம் தூரம் இப்படித்தான் நடக்கவேண்டியிருக்கும். ரோட்டோரம் நிற்கும் இரட்டைப்பனைதான் கணக்கு. அதையொட்டி இறங்கும் ஒத்தையடிப் பாதையில் நேராக நடந்தால், ஒரு மைல் தூரத்தில் ஆலமரக்காடுதான்.

பாதி தூரம் நடந்ததுமே தூரத்தில் தெரிந்துவிடும்… காட்டு யானைக் கூட்டம்போல் ஒன்றுக்கொன்று போட்டிப்போட்டு வளர்ந்து நிற்கும் ஆலமரக்காடு. ஒளியின் ஒவ்வொரு கீற்றுக்கும் சவால்விடும் அடர்ந்த நீளமான விழுதுகள். கருமேகங்களாய்த் தரையில் பரந்து கிடக்கும் அவற்றின் கரிய நிழல்கள்… வெயில் புகமுடியாத அந்த நிழல்கூட்டத்தைக் கண்ணுக்கு மிக நெருக்கத்தில் அவன் யோசித்துப் பார்த்ததுமே லேசாய் உள்ளுக்குள் பதைபதைத்தது.

“பேய்க் கணக்கா குடிக்க!” என்று இஞ்சியப்பனே ஆச்சரியப்படும்படி நேற்று வழக்கத்தைவிட இரண்டு மடங்கு குடித்திருந்த போதை, இன்னும் அவன் கண்களில் மிச்சமிருந்தது. எல்லாமே கொஞ்சம் அதிகமாக போய்விட்டது. எதையும் அத்தனை எளிதில் போதும் என்று விட்டுவிட முடியவில்லை. உடம்பின் ஒவ்வொரு அணுக்களும் இன்று காலைத் தூக்கத்தை உதறித்தள்ளிவிட்டு, படுக்கையைவிட்டு எழுவதற்குக் கஷ்டப்பட்டன. இனி வாழ்நாள் முழுமைக்கும் பசி தோன்றாத அளவு மதியம் சாப்பிட்டுத் தீர்த்த நிறைவு வயிற்றுக்கு! காலையிலிருந்து பத்து சிகரெட்டுகளாவது தாண்டியிருக்கும். பஞ்சு கருகி விழும் வரை புகைத்த பின்னும் திருப்தியில்லை. உடல் தேடும் இந்த அற்ப உணர்வுகள் எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்திற்குத்தான்.

குண்டும் குழியுமான தார்ச் சாலையில் பக்கவாட்டில் விழும் இருவரின் நிழல்களைப் பார்த்துச் சொன்னாள், “உன்னைவிட நான்தான் வளத்தி!”

“நிழலு பொய் சொல்லுது!” புகைத்துக்கொண்டிருக்கும் சிகரெட்டோடு அவளுக்குப் பக்கவாட்டில் பக்கமாய் போய் நின்றான். இப்போது நிழல்கள் நிஜத்தைப் பேசின. அவனது நிழல், அவளைவிட நீண்டிருந்தது. கைகளை லேசாய்த் தூக்கி அசைத்தான். நிழலும் ஒரு குரங்குபோல் தரையில் அதையே செய்துகாட்டியது.

“சில நேரம் இந்த மாதிரி நிழலும் உண்மையச் சொல்லும்” என்று சிரித்தான். அவனின் இந்தப் பதில், நிச்சயம் அவளுக்குப் பிடித்திருக்கும். அவளே அறியாமல் இரண்டுமுறை கண் சிமிட்டினாள். மனதும் மூளையும் ஒரே சமன்பாட்டில் இணையும் அரிய சந்தோஷமான பொழுதுகளில், அவளே அறியாமல் இப்படிக் கண் சிமிட்டுவாள். 

தன்னைக் கருக்கிய விரல்களை சிகரெட் பழிதீர்த்துக்கொண்டது. கையை உதறியபடி, எரிந்துமுடித்த சிகரெட் துண்டைத் தூக்கி எறிந்தான். உணர்வுகள் வற்றிப் போகவிருக்கும் தருவாயில் இந்த சுடு உணர்வுகூட ஆசுவாசம்தான்.

கிழக்குப் பக்கம் ஒத்தையடிப் பாதைக்கான இறக்கம் வந்ததும், பிரதான சாலையிலிருந்து இறங்கி குறுக்கே வேகமாய் முன்னால் நடந்தாள். அவன் சற்றுத் தயக்கத்துடன் சில நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்தான்.

“ம்ம் என்ன ஆச்சு?” திரும்பிப் பார்த்துக் கேட்டாள்.

பலவித யோசனைகளில் இருந்தவன், “ஒண்ணுமில்ல!” எனத் தலையசைத்துவிட்டு அவளோடு நடக்கலானான்.

குறுக்குப் பாதையில் மணல் ரோட்டில் இருவரும் இறங்கி நடக்கத் தொடங்கினர். பாதை புதர் மண்டிக் கிடந்தது. எதிர்பார்த்ததுபோல் ஆளரவம் இல்லை. நிழல்காட்டுக்குப் போகும் ஒற்றையடிப் பாதையில் யார் வருவார்கள்?

அண்ணாந்து பார்த்தான். சாய்வாக விழும் மாலை நேர வெயில் கண் கூசவும், தலையைக் குனிந்துகொண்டான். ஆனால், இருவரின் நிழல்களும் எந்தவொரு கண் கூச்சமும் இல்லாமல் சூரியனை வெறித்தபடி இருந்தன. அவைகள் இன்னும் இரண்டடி வளர்ந்திருப்பதாய்த் தோன்றியது. வெயிலை உண்டு வாழும் நிழல்கள்தானே. வளர்ந்திருக்கலாம்! கால நேரத்தைப் பொறுத்து தன் உருவமும் உயரமும் மாற்றக்கூடிய சர்வ வல்லமை படைத்த நிழல்கள் முன்னால் நடக்க அவர்கள் பின்தொடர்ந்தார்கள்.

வலது பக்கம் பேச்சி மலை தெரிகிறது. கூந்தலைப் பின்னுக்கு விரித்துப் போட்டு, இரு கைகளையும் உடம்போடு நேராகப் பரத்தி, கால் நீட்டிப் படுத்திருக்கிறாள், பேச்சி! கால்களாய் நீளும் பாறை அமைப்புகளின் முடிவில் உருண்டு திரண்டிருக்கும் ஒற்றைப் பாறை, ஒரு காலில் மட்டும் அவள் அணிந்திருந்த தண்டையை நினைவுபடுத்தியது. 

அந்தச் சிறு மலையை எந்தப் பக்கம் நின்று பார்த்தாலும், ஊர்க்காரர்களுக்கு அப்படித்தான் தோன்றும். இரவு மெர்குரி விளக்கு வெளிச்சத்தில் தன் கிழிந்த சேலை காற்றில் ஆட, கோபத்தில் கைகளை உக்கிரமாய் அசைத்துத் தலைவிரி கோலமாய் ஒற்றைக் காலில் தண்டையை அணிந்தபடி கரிய உருவமாய் அவள் நிற்கும் காட்சியை நினைவுபடுத்தும். 

அவள்தான்! பேச்சியேதான்..! ஆலமரக் காட்டுக்குக் காவல் தெய்வமாய் கல் உருவில் படுத்திருக்கிறாள்.

“நீதான் எங்கள வழி நடத்தணும்” கைகளைக் கூப்பி கண்கள் மூடிக் கும்பிட்ட பின், கட்டை விரலை உதட்டில் முத்தமிட்டுக் கொண்டாள்.

“ம்ம்… நீயும் கும்டுக்கோ.” புறங்கையால் அவனை இடித்ததும் அவனும் கண்ணை மூடிக் கும்பிட்டுக்கொண்டான்.

“இன்னும் கொஞ்ச தூரம்தான் குணா. நிழல் காட்டுக்குப் போனப் பொறவு எல்லாம் மாறிரும்ல…?” அவன் பதில் ஏதும் சொல்லாமல் அவளைப் பார்த்தான். 

“இந்தப் பாழாப்போன ஒடம்புனாலத்தான என் வாழ்கை நாசமாச்சு. தெரு நாயைவிட மோசமா வெறி பிடிச்சு… நெனைச்சத சாதிச்சு… போட்டோ புடிச்சு… வாழ்க்கய சீரழிச்சு…” – பேசப்பேச மூச்சுத் திணறியது அவளுக்கு. அந்தக் கொடிய நிகழ்வைப் பற்றி தைரியமாய்ப் பேச நினைக்கும் தருணங்களில் இப்படித்தான். கேவலும் கண்ணீரும் கோபமும் தவிர்க்க முடியாதவை. 

உடல் லேசாய் ஜில்லிட்டது. கண்ணீர் முண்டியடித்து வந்தது. “நீயும் இல்லனா…” சப்தமாய் அழத் தொடங்கியவளை அவன் தடுக்கவில்லை. அழியப்போகும் உடம்பின் கடைசி உணர்வுத் தெறிப்புகள் அவை. மீட்கமுடியாத இந்தத் தருணங்கள் ஒவ்வொன்றும் இனி நிழல் வாழ்க்கையின் நினைவுப் பொக்கிஷம். 

அடுத்த சில நிமிடங்களில் அவளது பேச்சுத்தொனி மாறியது. கண்ணீர் நின்றுபோனது. கன்னங்கள் அதிர வேறொருவளாய்ப் பேசினாள்…

“எல்லாத்தையும் அத்து எறிஞ்சுட்டு ஒட்டுமொத்த பொம்பளையும் கூட்டிட்டு பேச்சி மேல பாரத்த போட்டு நிழல்காட்டுக்குள் ஓடிப் போயிரணும்! அப்புறம் எல்லாவனும் எங்க போவானுங்க பொம்பள ஒடம்புக்கு…?” 

கொழுந்து விட்டெரியும் அவள் கண்களை நேராகப் பார்க்க அஞ்சினான். பேச்சிதான் அவள் உருவில் இறங்கியிருக்க வேண்டும். தன் கைவிரல்களை இறுகப் பற்றியிருக்கும் அவளது உள்ளங்கையின் அனல் மேலும் அச்சுறுத்தியது.

“இனிமேயாச்சும் நமக்கு எந்தப் பிரச்னையும் இருக்காதுல குணா?”

கொஞ்சநேரம் முன்பு அவளுள் பொங்கி வழிந்த கோபம் அடங்கியிருந்தது. இப்போது ஆதரவான பதிலை எதிர்பார்க்கும் ஒரு சராசரி பெண்ணின் தவிப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. 

தூரத்தில் மூக்கையனின் குடிசை தெரிந்தது. குடிசையின் ஒரு பக்கம் ஓலை பிய்ந்து தொங்கிக்கொண்டிருந்தது. நட்டுவைத்த கம்புகள் எலும்புகூடுகளாய் எஞ்சி இருந்தன. அங்குதான் மேட்டில் உட்கார்ந்திருப்பான். தலையில் முண்டாசோடு மேலுக்குச் சட்டை அணியாமல், சாம்பல் நிற வேட்டி உடுத்தி, பீடி பிடித்தபடி கையில் கழியோடு… தன் நீண்ட நாக்கைத் தொங்கப் போட்டபடி கருவாய் செவலையும் அவனோடு எப்போதும் காவலுக்கு கூடவே நிற்கும். 

ராசாமணி, குணாளனைக் கட்டிப்பிடித்து அழுத அன்றுதான் அவனுக்குத் தெரியும், அப்பாவுக்கு அசலூரில் இன்னொரு குடும்பம் இருப்பது. அம்மா அப்படி அழுது அதுவரை குணா பார்த்ததில்லை. அப்போது பத்தாவது படித்துக்கொண்டிருந்த அவனுக்கு வயதைத் தாண்டிய கோபம் கிளைவிட்டது. ஆனால், அப்பாவின் முகத்துக்கு எதிரே நின்று இதுவரை அவன் விளையாட்டுக்குகூடச் சப்தமாய்ப் பேசியதில்லை.

வீட்டு வாசலில் பைக் சப்தம் கேட்டதும் “நீ எதுவும் பேசாத…” என்று சொல்லிவிட்டுக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, கட்டிலில் ஒருக்களித்துப் படுத்திருந்தவள், ஒருகையால் கட்டிலின் விளிம்பை அழுத்திப் பிடித்து எழுந்து உட்கார்ந்தாள். அந்த அழுத்தத்தில் இரும்புக் கட்டில் லேசாய் க்றீச்சிட்டு அமைதியானது.

மரப்படிகளின் கைப்பிடியைப் பற்றியபடி ஒரு பக்கமாய் மெல்ல அம்மா இறங்கும் வரை அவன் காத்திருக்கவில்லை. ஓரமாய் அவளை ஒடுக்கித் தள்ளிவிட்டு, கூப்பிடக் கூப்பிடக் கேட்காமல் வேகமாய் இறங்கி முற்றத்துக்கு ஓடினான்.

“இரண்டாந்தாரம் வீட்டுக்குப் போயிட்டு வாரியளோ?” – உத்திரத்தின் கொக்கியில் சங்கிலியில் தொங்கும் விளக்கு வெளிச்சத்தில் அவன் அப்படிக் கேட்டபோது, அப்பாவின் நேர் எதிரே கையை உயர்த்திப் பேசியதை சுவரில் விழும் அவனின் நிழல் இன்னும் பெரிதாய்க் காட்டியது. அடுத்த நொடியில் அப்பாவின் இறுகிய கை, அவனை ஓங்கி அறைந்த வேகத்தில் கீழே விழுந்தான். அவனோடு சேர்ந்து அவனின் நிழலும் சுவரின் பக்கவாட்டில் சரிந்தது.

“நீதான் அவன ஏவி விட்டதா?” – பாதிப்படியில் நிற்கும் மனைவியைப் பார்த்து கேட்டார்.

“இல்லங்க…” என்று அவள் சொல்லி முடிக்கும் முன் விழுந்து கிடந்தவனை எட்டி உதைத்து இன்னொரு அறையும் விட்டார். 

“எங்கேந்து வந்துச்சு இந்தத் தைரியம்? இன்னும் மீச கூட வளரல, அப்பன பார்த்து கேள்விக் கேட்கியோ?”

“அவன் கேட்டதுல என்ன தப்பு இருக்கு?” 

“என்னைய வேற என்னத்த பண்ணச் சொல்லுத?” 

அதற்கு என்ன அர்த்தம் என்று அவளுக்குத் தெரியும். அவள் பதில் ஏதும் சொல்லவில்லை. முற்றத்தின் பெரிய இலுப்பைத் தூணில் சாய்ந்தபடி முந்தானையால் முகத்தை மூடி அழுதாள். போன மாதம் புதிதாய் சுண்ணாம்பு அடித்திருந்த சுவரில் பின்னால் எரியும் குண்டுபல்பு வெளிச்சம், அவளது பெருத்த சரீரத்தை இன்னும் பூதாகரமாகக் காட்டியது.  

வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு விறுவிறுவென வாசலுக்குப் போனார். போகும் போக்கில் நடுவில் கிடந்த அலுமனிய ஏனத்துக்கும் உதை கிடைத்தது. நின்ற இடத்திலேயே கையை அழுத்தமாய் ஊன்றித் தூணில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

துருப்பிடித்த ஆணியில் வரிசையாய் எதிரே தொங்கவிடப்பட்டிருக்கும் கண்ணாடிச் சட்டமிட்ட பழைய புகைப்படங்களை அண்ணாந்து பார்த்தாள். அவளது வாழ்க்கையைப்போல் அவற்றிலும் தூசு படிந்திருந்தன. புருஷனுடன் கழுத்தில் கல்யாண மாலையோடு ஒரு புகைப்படம்… மாமியார், மாமனார் மரநாற்காலியில் உட்கார்ந்திருக்க, கணவரோடு பின்னால் நின்றபடியே இன்னொரு புகைப்படம். செல்லரித்துப்போன இரண்டு கறுப்புவெள்ளைப் புகைப்படங்களிலும் அழகாய் இருந்தாள். கொஞ்சமும் மிகையில்லாத எடுப்பான தேகம். குணாவின் பிரசவத்துக்குப் பின்தான் வீக்கம் போட்டுவிட்டது, தைராய்டு உடம்பு. 

எப்போதும் தன் உடம்பைப் பெருஞ்சுமையாய் மாடி அறையின் கட்டிலில் கிடத்தியேதான் இருப்பாள். அவர் வீட்டுக்கு வரும்போது மட்டும்தான் இறங்கி வருவாள். தேரைப்போலத்தான் அவளால் மெல்ல நகரமுடியும் மூணு வேளை சமையலுக்கும், வீட்டு வேலைக்கும் கன்னியம்மா ஆச்சிதான்.

ராசாமணியின் தடித்த சரீரத்தில் எப்போதும் தீராத அசதி இருந்துகொண்டே இருக்கும். “இந்த உளுத்துப்போன உடம்ப வச்சுட்டு அந்த ஆம்புளய என்ன குறை சொல்லமுடியும்? மரம் இலைய உதிர்க்குற மாதிரி இந்தப் பெருத்த உடம்ப உதிர்த்துப் போட்டாத்தான் நிம்மதியா இருக்கும்.”

அம்மாவும் பிள்ளையும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதனர். அவளின் வீங்கிய மோவாயின் தொங்குச்சதை, அழுகையின் இசைவுக்கு ஏற்ப தனியாய் ஆடியது.

அடுத்த நாள் குணா பள்ளிக்கூடத்திலிருந்து வந்தபோது, மாடியறைக்  கட்டில் காலியாய் இருந்தது. இருட்டிய பின்பும் ராசாமணியைக் காணவில்லை. கோபத்தில் பிறந்த வீட்டுக்குப் போயிருக்கலாம் என்று பேச்சு எழுந்தபோது, அங்கும் ஆட்கள் நேராகப் போய்ப் பார்த்துவிட்டார்கள். சாயங்காலம் ஆற்றுக்குப்போன ஆட்களிடமும் விசாரித்துவிட்டார்கள். இசக்கி அம்மன் கோயிலுக்கு எதிர்ப்புறம் இருக்கும் பெரிய கல்வெட்டாங் குழியில்கூட இறங்கிப் பார்த்தாகிவிட்டது. ஆனால், யாரும் ஆலமரக் காட்டுக்குள் போயிருப்பாள் என்று நினைக்கவில்லை. அவளுக்கு அத்தனை மனதைரியம் இருக்குமென்று கணவரும் எதிர்பார்க்கவில்லை.

வாசல் திண்ணையின் ஓட்டுத் தாழ்வாரத்தில் எரிந்துகொண்டிருக்கும் அரிக்கேன் விளக்கொளியில், அவர்களது வீட்டின் எதிர்ச் சுவரில் தடித்த பெரிய நிழலைப் பார்த்ததும் அந்த எண்ணம் வந்தது. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. சாம்பல் நிறத் தெருநாய் காது புடைக்கச் சுவரைப் பார்த்துக் குரைத்துக்கொண்டே இருந்தது.

“ராசாமணி நிழலாயிட்டா!”

“ஒத்தையாளா எப்படிக் காட்டுக்குப் போனா?”

“அவளும் எத்தனை வருஷம்தான் அந்தப் பாழாப்போன உடம்ப தூக்கிட்டேத் திரிவா?”

“இன்னும் எத்தனை பேர் உடம்பத்தான் பேச்சி எடுத்துக்கப் போறாளோ?”

அதிர்ச்சியில் உறைந்த கூட்டம் முணுமுணுத்தபடியே விலகிச் சென்றது. தெருவிளக்கு வெளிச்சத்தில் கீழே நீண்டு விழும் தங்கள் நிழலைக் குனிந்து பார்க்கவும் யாருக்கும் தைரியமில்லை.  

கணவரும் பேச்சுமூச்சில்லாமல் திண்ணையில் உட்கார்ந்தார். ஆனால், யாரும் எதிர்பார்க்கவில்லை குணா இத்தனை நிதானமாய் இருப்பானென்று. அப்பாவிடம் சண்டைக்குப் போகவில்லை! ‘அம்மா!’ எனக் கத்தியபடியே நிழலை நோக்கி ஓடவுமில்லை! சுவரில் நகரும் தன் அம்மாவின் நிழலை வைத்த கண் மாறாமல் வெறித்தபடியிருந்தான். 

இனி அம்மா, உடலைத் துறந்த சுதந்திர நிழலாய் உலா வருவாள். பழுத்த இலையைப்போல் பாரமில்லாமல் நகர்வாள். முடியாத வேளையில் எங்காவது மரத்தின் நிழலோடு நிழலாய் மறைந்துகொள்வாள். அப்போது யாருக்கும் அவளது தடித்த தேகத்தின் நிழலும் தெரியப்போவதில்லை. உச்சிவேளையில் சிறுத்துப்போகும் தன் நிழலைப் பார்த்து நிம்மதி அடைவாள். இனி யாரையும் சார்ந்திருக்க வேண்டாம். வசவுகள் கேட்காது. காலையும் மாலையும் மாத்திரை தேவைப்படாது. இனியாவது கண்ணீருக்கு அஞ்சாமல் தைரியமாய் அழலாம்… நிழலின் கண்ணீரற்ற அழுகை நிஜத்துக்கு என்றுமே கேட்கப்போவதில்லை…

இரவின் இருட்டிலும் தெருவிளக்கு வெளிச்சத்திலும் மாறிமாறி ஊடுருவி அம்மாவின் தட்டையான நிழல், பக்கவாட்டில் மெல்ல நகர்ந்து தெருவைத் தாண்டும்வரை பார்த்துகொண்டே இருந்த அன்று குணாவின் கண்களில் துளிக் கண்ணீரில்லை.

***

இது நடந்து பதினைந்து வருடங்கள் இருக்கும். தார் ரோட்டில் நேராக விழும் தன் நிழலை பேச்சி வெறித்தபடியே நிற்பாள். திடீரென்று சாமி வந்தவள்போல் வெறிபிடித்து ஆடுவாள். அவளது கறுத்த நிழலும் அவளோடு சேர்ந்து உக்கிரமாய் ஆடும். “அத்தனை பேரும் நாசமாத்தான் போவீங்க!” உரக்கக் கத்திச் சிரிப்பாள். “உங்களாலத்தான என் உடம்பு மேல சந்தேகப்பட்டு என் புருசன் இறந்தான். இனி ஊர்ல எல்லாரும் உடம்பே இல்லாமதான் அலைவீங்க.”

கோயில் மேட்டுப் பக்கமும் பஞ்சாயத்து ஆபிஸ் பக்கமும் லைப்ரரி வாசல் பக்கமும் என ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடத்திலும் இதே கதைதான். முகங்கள் பளிச்சிடும் சுவரொட்டிகளைத் தேடித் தேடிக் கிழிக்கத் தொடங்கினாள். கிடைக்கும் சுவரில் மனித உருவங்கள் போன்ற ஒன்றை வரைந்து, பின் அதே கரியைக்கொண்டு சரமாரியாக அவற்றின் மீது கிறுக்கி வைப்பாள். அவளுக்கு மனித உருவத்தின் மீது அடங்காத கோபம் இருந்தது. தனக்குள் புலம்பியபடியே எதிரே வருபவர்களை வசைபாடும் பேச்சியைப் பார்த்துப் பொடிசுகள், “ஏட்டி லூசு…ஏட்டி கிறுக்கி!” எனக் கல்லை எறிந்துவிட்டு ஓடும். காறித் துப்பி சப்தமாய் மீண்டும் சாபம் இடுவாள்.

“எல்லாவனும் முகம் இல்லாமத்தான் அலையப் போறிய!”

உச்சிவேளையில் நிழல் சிறுத்துப் போகும் சமயங்களில், ஆடி அயர்ந்துவிட்டவளாய் எங்காவது மரத்தின் நிழலில் போய்ப் படுத்துக்கொள்வாள். தன்னைவிட நீண்ட நிழல்கள் தோன்றாத மத்திய பொழுதுகளின் மேல் அவளுக்கு அச்சம் இருந்தது.

“இந்தக் கிறுக்கி சொல்லுறது பலிக்குமோ? உடம்பு மறைஞ்சுபோய் எல்லாரும் நிழலா அலைவோமா?” – பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பும் நேரத்தில் நிலைக்கண்ணாடியைப் பார்த்தபடி வகிடெடுத்து வாரிக்கொண்டிருந்த குணா கேட்டபோது…

“அவ கிடக்கா லூசு கிறுக்கி!” என்று சொல்லிவிட்டு, “அப்படி நடந்தா நல்லாதான் இருக்கும்” என்று தனக்குள் மெல்ல முணுமுணுத்துக்கொண்டு, நிலைப்படியைப் பிடித்துத் தன் பெருத்த சரீரப் பாரத்தை சிலுவையாய்ச் சுமந்தபடி மெதுவாக நடந்துபோன ராசாமணி, அடுத்த சில மாதங்களில் உடலைத் துறந்து வெறும் நிழலாகியிருந்தாள்.

***

“ஆலமரக்காட்டுல தனியா அலையுற நிழலுங்க உன்னைய ஏதாவது செய்யுமா?”

“கேக்குறான் பாரு கேள்வி, நிழல் என்ன பேயா பிசாசா? உன்னைய ஏதாவது செய்ய… வாழ்நாள் முழுசும் பேசாம உன்கூடவே வர நிழல்தான் அது. ஒருவிதத்துல நம்ம வாழுற வாழ்க்கை பாதி அதுங்களுக்கும் சொந்தம்தான். உனக்கும் உன் நிழலுக்கும் பெரிய வித்தியாசம் ஒண்ணும் இல்ல. என்ன நீ தரித்திரம் புடிச்ச இந்த உடம்ப தூக்கிட்டுத் திரியுற. உனக்கு உருவம் இருக்கு. உடுப்பு போடணும். அலங்காரம் பண்ணனும். உன் நிழலுக்கு இது ஒண்ணும் தேவயில்ல. ஒளி இருக்குற வரை வாழ்ந்துக்கும்.”

“அதுங்கள பெயரு சொல்லி கூப்பிட்டா தெரியுமா?”

“முகம்னு ஒரு சனியன் நமக்கு இருக்கு. வேற வழியில்ல, பெயரு வச்சுத்தான் ஆவணும். விருப்பமோ இல்லயோ ஏதாவது மொழியில கூப்பிட்டுத்தான் ஆவணும். நிழலுக்குத்தான் அந்தப் பிரச்னை இல்லயே! எந்த சாதியோ மதமோ, ஆம்புளையோ பொம்பளையோ, எல்லாத்துக்கும் ஒரே பெயருதான் ‘நிழல்!’. அப்படியே நீ பெயரு வச்சுக் கூப்பிட்டாலும் அதுங்களுக்குக் கேட்கவும் போறதில்ல.”

லுங்கி மடிப்பில் இருக்கும் பீடிக் கட்டைப் பற்றவைத்தபடி பேசும் மூக்கையனிடம், நிழல்களைப் பற்றிக் கேட்க எல்லாரிடமும் கேள்விகள் அப்போது அதிகமிருந்தன. ஆனால் இவையெல்லாம் அவன் ஊருக்குள் வரும் ஒருநாளில் மட்டும்தான். சிறுசுகளுக்கு அவனைத் தள்ளிநின்று வேடிக்கை பார்ப்பதே பெரிய பொழுதுபோக்கு! வீரச் செயல்!

மாதத்தின் முதல் நாள் அரிசியும் பருப்பும் காவல் காசும் வாங்கிப்போக மட்டும் ஊருக்குள் வருவான். ஊர்ப்படியைப் பிரித்து, ஆறுமுகம் அண்ணன்தான் கொடுப்பார். ஆறடி உருவமாய் கையை வீசி அவன் நடக்கையில், வேரோடு பிடுங்கப்பட்ட மரத்தின் நிழல் ஒன்று தனியாய் எழுந்து நடந்துவருவதைப் போலிருக்கும். பின்னால் கூட்டமாய் வரும் அரை டிரௌசர்களைத் தன் சிவந்த கண்களை அகலத் திறந்து நாக்கைச் சுருட்டி, ”ஓடுதியளா இல்லயா…” எனச் சப்தம் போட்டதும், கூடிய கூட்டம் சிதறி ஓடிவிடும்.

அவனது தாத்தா காலத்தில் இருந்தே இரவுக் காவல்தான் மூக்கையனின் குடும்பத் தொழில். ஆள் உயரத்துக்கு நீண்ட கழியைப் பிடித்தபடி இரவின் கரிய திரைகளை விலக்கி, அகலக் கால் எடுத்துவைத்து விறுவிறுவென அப்பாவின் பின்னால், ‘உஷார்!’ எனச் சப்தம் போட்டபடியே, தன் சிறுவயது முதல் இரவு காவலுக்குப் பழக்கப்பட்டவன். சாமத்துக்குள் ஊரை ஒரு சுற்று முடித்துவிடுவான். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரம் இரவில் காவல் ரோந்து. 

ஆனால், பேச்சியின் சாபத்துக்குப் பின்னால் எல்லாம் மாறிப்போனது. பஞ்சாயத்தில் இரவு ரோந்து இனி தேவையில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனால், காவல் காக்க வேண்டும். ஊரின் எல்லையில் அல்ல. நிழலுக்கும் நிஜத்துக்குமான ஆலமரத்து எல்லைக்கோட்டில்…

***

முதலில் யாரும் நம்பவில்லை. ஆனால், வழி தப்பிப்போய் ஆலமரக் காட்டுக்குள் நுழைந்த வேலையனின் செம்மறி ஆடுகள் ஐந்தும் கருநிழல் கூட்டமாய் வெளியே வந்தபோதுதான் பொறி தட்டியது. மூணு மணி வெயிலில் மண் ரோட்டில் அவற்றின் நிழல்கள் மட்டும் பக்கவாட்டில் உலாத்திக்கொண்டிருந்தன. `மே…மே..!’ எனத் தன் சிறு வாயைத் திறந்து அவை கத்துவதும், கழுத்தில் தொங்கும் மணி அசைவதும் அவற்றின் கறுப்பு நிழல்களில் தெரிந்தது. ஆனால், சப்தம் எழவில்லை. 

ஊருக்குள் அரசல்புரசலாய்ப் பேச்சுப் பரவியது. 

“அந்தப் பைத்தியக்காரி சாபம் பலிச்சிட்டோ!”

“நாக்குல போட்டுக்க… அவ சாமி… சாமி!”

“கண்டத உளறாதீங்கப்பா!”

ஆனால், மனித உருவம் என்று சொல்லப்போனால், ஊமையன்தான் முதலில் ஆலமமரக் காட்டுக்குள் ஓடிப்போய் நிழலானது. அவன் தனியாய் இந்த ஊருக்கு வந்தபோது ஐந்து வயது. எப்போதும் நடை மூடும்வரை கோயில் வாசல் திண்ணையில் உட்கார்ந்திருப்பான். இருபது வருடங்களாய் அங்கேயேதான் நித்தம் சோறு. இதுவரை யாரிடமும் அவன் பேசியதில்லை. அவன் பிறவி ஊமையா? இல்லை, இந்த ஊரோடு பேச அவனுக்கு ஒன்றும் இல்லையா என்றுகூட யாருக்கும் தெரியாது. அவன் காணாமல்போன முதல் இரண்டு நாட்கள் யாரும் பெரிதாய்க் கண்டுகொள்ளவில்லை. ஆனால், வெள்ளிக்கிழமை கோயில் நடை அடைக்கும்போதுதான் கவனித்தார்கள், கோயில் திண்ணையின் தடித்த பெரிய சிவப்புக் கோடுகளின் இடையில், மெலிதான கறுப்பு நிழல் ஒன்று விழுந்திருந்தது. ஆள் யாருமில்லை…

“ஊமையன் நிழலா போயிட்டான்!”

அதற்குப் பிறகு ஊமையனின் நிழலை யாரும் ஊருக்குள் பார்க்கவில்லை. ஒருவேளை அவன் வேறொரு ஊருக்குப் போயிருக்கலாம். நிழல்கள் பேசுவது என்றுமே நிஜத்துக்குக் கேட்கப்போவதில்லை என்று அவன் அங்காவது தைரியமாய் பேசத் தொடங்கியிருக்கலாம்.

ஊமையனைப் போன்ற நிகழ்வுகள் அடுத்தடுத்து தொடர்ந்ததும் ஊர்ஜிதமாயின. கடைசியாய் குணாளனின் அம்மா தன் பெருத்த உடலைத் துறந்த பின்தான் முடிவு எடுத்தார்கள். மூக்கையனை நிழல்காட்டுக்குக் காவல் போடுவதென்று!

நிழல்களின் காட்டுக்குப் போகும் ஒற்றையடிக் குறுக்குப் பாதையின் மேட்டிலேயே அவனுக்குத் தனியாய்க் குடிசைப் போட்டுக் கொடுத்தார்கள். தலையில் முண்டாசோடு பீடி பிடித்தபடி, மேட்டில் காவலுக்கு உலாத்திக் கொண்டிருக்கும் அவனது கால்கள் என்றுமே ஆலமரக்காட்டின் பக்கம் போனதில்லை. எல்லார் மனதுக்குள்ளும் ஏதோ ஒரு மூலையில் மறைந்து கிடக்கும் வெறுமையும் தனிமையும், அந்தக் காட்டின் இருட்டைப் பார்த்ததும் விழித்துக்கொள்ளும் என்ற பயம்தான் மூக்கையனுக்கும்.

***

“எப்படிப் பார்வையா இருந்த பொம்பள… ஒரு பய வச்சக் கண்ணு வாங்க மாட்டான். கடைசில புருஷனப் பலி கொடுத்துட்டுப் பைத்தியக்காரியாட்டம் அலைஞ்சா. இப்போ அவளையும் காணும்.”

“பாவம், புதுப் பொண்டாட்டியோட பொழப்ப தேடி நம்ம ஊருக்கு வந்தான். பொண்டாட்டி நடத்த கெட்டுப்போனா, எந்த மானமுள்ள புருசன்தான் உசுரோட இருப்பான்? அதான் நாண்டுக்குட்டு செத்துட்டான்.”

“அவ ஒழுக்கம்கெட்டுப் போனத நீ பாத்தியாக்கும்?”

“ஊர்ல பேசிக்கிட்டாங்கல்ல!”

“நல்ல வனப்பா வெளியூர்க்காரி ஒருத்தி ஊருக்கு வந்துட்டா போதுமே, இங்குள்ள பொம்பளய எப்படிக் கதைக் கட்டி விடுவாளுகனு தெரியாதா?”

“……”

“அவன் புருஷனயாச்சும் நம்ம ஊருக்குள்ள புதைக்க விட்டுருக்கலாம்.”

“அது எப்படி டேய் சரிப்பட்டு வரும். விவரம் இல்லாம பேசாதிய”

“சரி இப்போ அவ எங்க போய்த் தொலைஞ்சா?”

“எங்கேயாயாவது குளம் குட்டைன்னு விழுந்து செத்துட்டாளோ? ஒழிஞ்சுது சனியன்!” – கண்ணாயிரம் தாத்தாவே இப்படிச் சொன்னார். அவர்தான் பேச்சிக்கு எப்போவாது அலுமனியத் தட்டில் சோறு போடுவார். ஆம்பளையைப்போல் அள்ளி அள்ளித் தின்பாள்.

பாதிச் சோற்றை அப்படியே துப்பிவிட்டுச் சிரிப்பாள். கொஞ்சம் சோற்றைத் தனியாய்த் தன் புருசனுக்கு என்று ஒதுக்கிவைப்பாள். மீதிச்  சோற்றை, காக்கா குருவி சாப்பிட வேணாமா…? என்று வீசி எறிவாள். உக்கிரமாய்ச் சிரிப்பாள். பின், கண்ணீர் தீர்ந்துபோகாதவளாய் நிறுத்தாமல் அழுவாள். சாப்பிட்ட இடத்திலேயே படுத்துவிடுவாள். யாராவது தண்ணியை மேலே ஊற்றி விரட்டி விடும்வரை அங்கேயேதான்.

“நானும் என் புருசனும் உடம்பாலத்தானே இந்த ஊர்ல அழிஞ்சு போனோம். இனி ஒரு பயலுக்கு உடம்பு இருக்காது பாத்துக்க. உடம்பு இருந்தாதானே எரிப்ப? புதைப்ப…? எல்லாவரும் இனி உடம்பே இல்லாமத்தான் அலையப்போறீங்க.”

மெர்குரி விளக்கு வெளிச்சத்தில் தன் ஆஜானுபாகுவான நிழல் நிலத்தில் விழ, தலைவிரி கோலமாய் நிலத்தை அழுத்தி மிதித்தபடி மாராப்பில் அடித்துச் சபித்த பேச்சியை மூன்று நாட்களாய்க் காணாதபோதும் யாரும் பெரிதாய் பொருட்படுத்தவில்லை.

பஸ் ஸ்டாப்பில், ஈரப்பசை போகாமல், சிவப்பு நீலம் எனக் கலர்க்கலராய் ஒட்டியிருந்த இந்தியன் சர்க்கஸ் போஸ்டரைப் பார்த்து, ஊரே சனிக்கிழமை காட்சிக்கு வண்டி வைத்துப் போயிருந்தது.  அடுத்த சில நாட்களும் அதே பேச்சுத்தான். குள்ளன், கோமாளி, கடோத்கஜன், டிரௌசர் போட்ட யானை, சொன்னதை கேட்கும் சிங்கம், குட்டிப் பாவாடைப் பெண் என்றே ஊர் கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்ததே தவிர, யாரும் பேச்சியைத் தேடவில்லை.

கோயில் சுவரில் அவள் கிறுக்கி வைத்திருந்த உருவத்தைக் காட்டி ஊமையன்தான் ஊர்க்காரர்களுக்கு நினைவுப்படுத்தினான்.

குளம் குட்டை சுடுகாடு உச்சிப்பாறை எனத் தேடிய ஆட்கள், கடைசியில் ஒத்தையடிப் பாதையைத் தாண்டி, ஆலமரக்காட்டுக்குள் கண்கள் பிதுங்கி கழுத்து இறுகி, ஆலமர விழுதில் தொங்கிக்கொண்டிருந்த பேச்சியின் பிணத்தை, இருண்ட நிழல்களின் மத்தியில் நான்காவது நாள்தான் கண்டுபிடித்தார்கள். பேச்சியும் அவள் புருஷனைப்போல் ஏனோ ஊருக்கு வெளியேதான் புதைக்கப்பட்டாள்!

***

மூக்கையன் வாசலில் படுத்துக் கிடக்கும் கயிற்றுக் கட்டில் சுவரில் சாய்ந்திருக்கிறது. களிமண் தரை ஆள் புழக்கம் இல்லாமல் ஆங்காங்கே வெடிப்பு விட்டிருக்கிறது. காற்றில் ஊசலாடிக்கொண்டிருக்கும் கதவைத் தள்ளிவிட்டு, குணாளன் உள்ளே எட்டிப் பார்க்கிறான். பச்சைத் தாவணி காலைப் பிரட்டி, விடாமல் தூக்கிப் பிடித்து அவளும் அவனைப் பின்தொடர்கிறாள்.

ஒரு மூலையில் அனாதையாய் இருக்கும் தகரப்பெட்டியின் மீது சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் ஜமக்காளம், தலையணை, கறுப்புக் கம்பளி தவிர, மொத்த குடிசையும் பசித்தவனின் எச்சில் இலையைப்போல் காலியாக இருந்தது. இத்தனை வருடங்கள் ஒற்றை ஆளாய் உடலை வருத்தித் தூக்கத்தை விற்று, காவல் காத்து உழைத்ததற்கு இதுமட்டும்தான் அவன் சேமித்த கூலி. கரிபடிந்த பாத்திரமொன்று குடிசையின் கொல்லையில் எரியூட்டப்படாத சாம்பல் படிந்த மண் அடுப்பைத் தாண்டி உருண்டு கிடக்கிறது. 

எப்போதும் நிழல்களைப் பார்த்தே பொழுதைக் கழித்த மூக்கைகயனுக்கு, எப்போவாது கிடைக்கும் பேச்சுத் துணை குணாளன்தான்! வேலை தேடி சென்னைக்குப் போய், மறுபடியும் வெறுங்கையுடன் ஊருக்குத் திரும்பிய அன்றும், மிச்சமிருந்த காசில் டவுனிலிருந்து வாங்கிவந்த முழு பாட்டிலோடு மூக்கயைன் குடிசைக்குத்தான் நேராகப் போனான். 

“எனக்கு அப்பால வாழுற நிழல்களுக்கும் சேர்த்துத்தான் குடிக்கேன்!” எனச் சொல்லிவிட்டுச் சிரித்தான் மூக்கையன். இரவின் இருட்டில் வெளியே கேட்கும் மழைச் சப்தத்தையும், அந்த நொடியில் அந்தச் சிரிப்பரவம் மட்டுப்படுத்தியது. மூக்கையனின் முறுக்கேறிய கறுத்த முதுகுக்குப் பின்னால் ஓலைக்கீற்றுத் தாழ்வாரத்தில் தொங்கும் ஒற்றை மின்விளக்கின் மங்கிய வெளிச்சத்தில், ஊர்க்காவல் கருப்புசாமியே எழுந்துவந்து சாராயம் குடிப்பதைப்போல், எதிரே இருக்கும் பாறையில் பிரம்மாண்டமாய் அவன் நிழல் விழுந்தது.

“என்னிக்காவது நிழலுக்கும் தாகம் எடுக்கும்னு என் குடிசைக்குப் பின்னால தொட்டில தண்ணியும் ஒரு தட்டுல சோறும் எப்போதும் இருக்கும். ஆனால், இதுவரை எதுவும் சீண்டுனதில்ல. அதுங்களுக்கு என்ன பசியா தாகமா? பசிக்குப் பயந்துதானே பாதி பயலுவோ நம்ம ஊர்ல நிழலா அலையிறானுவோ! மேச்சல் திசைமாறி இந்தப் பக்கம் வர ஆடு மாட பத்திவிடலாம். ஆனால். எல்லாம் தெரிஞ்சுவர மனுசப் பயல்கள என்ன பண்ணமுடியும்?”

காலியான பிளாஸ்டிக் கப்பைத் தூக்கி எறிந்துவிட்டு, பாட்டிலில் மிச்சமிருக்கும் சாராயத்தை ஒரேவீச்சில் அப்படியே மூக்கையன் குடித்தபோது, இந்தக் காட்சிக்குப் பழக்கப்பட்ட குணாவும் ஒரு நிமிடம் பயந்துதான் போனான்.

“தினமும் புருசன்கிட்ட அடிவாங்கியே செத்துட்டு இருந்துச்சே முருகாத்தா, அப்புறம் சீக்காளி உண்ணாமலைக் கிழவி… இதுங்க இரண்டும் உள்ளே ஓடிப்போனப்போ நானும் தடுக்கல. பாவம், இனியாச்சும் நிம்மதியா இருந்துட்டு போவட்டும்னு கண்டும் காணாத மாதிரி இருந்துட்டேன்.”

வெளியே தூறல் நின்றுபோயிருந்தது. தலையைத் துவட்டாமல் ஈரமாய் நிற்கும் சிறுவனின் ஒட்டிய முடிக்கற்றைகளிலிருந்து சொட்டும் தண்ணீர்த் திவலைகள்போல், நனைந்த ஈரக் கூரையிலிருந்து சொட்டுச் சொட்டாய் வடியும் மழைத் துளியைப் பார்த்தபடி குணா கேட்டான்…

“உனக்கு என்னிக்காவது நம்மளும் நிழலாவே போயிரலாமான்னு தோணிருக்கா?”

“ராத்திரி வாசல்ல எரியுற ஒத்தைவெளிக்கு வெளிச்சத்துல பாத்துருக்கேன். அந்தச் சின்ன வெளிச்சத்துல நெறைய நிழலுங்க என்னையே பார்த்தபடி நிக்கும். தினமும் ஒரேமாதிரி வாழ்க்கை வாழ்ந்துட்டு அதே சோத்த வடிச்சு தின்னுட்டு கிடக்குறானே லூசு பயன்னு எல்லாம் ஒண்ணா சத்தமில்லாம சிரிக்குற மாதிரித் தோணும். 

அப்ப எனக்கும் அந்தக் காட்டுக்குள்ள ஓடிப்போய் நிழலா மாறிடலாம்னு தோணும்! ஆனா, இந்த ஒடம்பு மேல இருக்குற ஆசை இருக்கே, அத்தனை சுலபமா விடாது. அதுக்கெல்லாம் கல்லு மாதிரி மனசு வேணும். தாங்க முடியலியா செத்துப்போயிரலாம். ஆனா, நிழலா போகணும்னா சாவுறதுக்கும் மேல ஒரு தைரியம் வேணும். என்னைய இம்புட்டுக் கேக்குறியே, ஜோலி இல்லனு தினமும் உன் அப்பனும் சித்தியும் பொழியித வசவ கேட்க சகிக்காம நீயும் உன் ஆத்தாளப்போல நிழலாவே போயிரலான்னு நெனைப்போ?” 

வெளியே மின்விளக்கு வெளிச்சத்தின் சிறு ஒளி விட்டத்துக்கு அப்பால் விரிந்துகிடக்கும் இரவின் கரிபூசிய ஆலமரக் காட்டை வெறித்தபடி குணாளன் சொன்னான் “தெரியல!”

***

ஆளற்ற குடிசைக்குப் பின்னால் ஒற்றை முருங்கையும் கருவேப்பிலையும் தன் இஷ்டத்துக்கு வளர்ந்து கிடக்கும் பிரண்டையையும் காட்டுச் செடியையும் தாண்டி, இருபதடித் தூரத்தில் நிற்கும் புளியமரத்தின் பக்கம்தான் மருந்து குடித்து இறந்துபோன மூக்கையனுடைய சமாதி இருக்கிறது. வாழ்நாளில் பாதியை ஆலமரக் காட்டின் காவலிலேயே கழித்தவனை, அதன் எல்லைக்கோட்டிலேயே புதைப்பதுதான் சரி. 

கொண்டுவந்திருக்கும் தூக்குச்சட்டியின் விளக்கெண்ணெயைக் காய்ந்து கிடக்கும் மண்விளக்கில் ஊற்றித் திரி இட்டாள். அந்தச் சிறு தீபத்தின் வெளிச்சத்தில் மூக்கையன் சமாதி ஒளி கண்டது. இருவரும் கும்பிட்டு முடித்தபோதுதான் கவனித்தார்கள்.

எப்போதும் மூக்கையன் ஏறிநிற்கும் சிறு பாறை மேட்டின் மீது ஒரு நிழல் அசைவது தெரிந்ததும், குணாளனின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டாள். அந்த நாலு கால் நிழல், மெல்ல பக்கவாட்டில் பாறையிலிருந்து வழுக்கியபடி இறங்கி, அவர்களை நோக்கி கீழ்த் தாடையும் மேல் தாடையும் வேகமாய் அசைய குரைப்பது தெரிகிறது.

குணாளனை அதற்கு அடையாளம் தெரிந்திருக்க வேண்டும்! இல்லை, நிழலாய்த் தான் குரைப்பது யாருக்கும் கேட்கப்போவதில்லை என்று அந்த செவலையின் நிழலுக்குப் புரிந்திருக்க வேண்டும். குரைப்பதை நிறுத்திவிட்டு, காற்றில் பயணிப்பதைப்போல் சப்தமின்றி பக்கவாட்டில் ஓடி, மேட்டை விட்டுக் கீழிறங்கி மறைந்துபோகும் செவலை நிழலைப் பார்த்தபடி சொன்னான், “மூக்கையன் நாயும் நிழல் காட்டுக்குள்ள போயிட்டுபோல…” 

சூரியன் மெல்ல மேற்கு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறான். வடக்குப் பக்கம் ஊருக்குள் நுழையும் சாலையில் ஒன்றிரண்டு இருசக்கர வாகனங்கள் தெரிகின்றன. எதிரே சரிந்துவிழும் மாலை வெளிச்சத்தில் பேச்சி மலை, பாதி மஞ்சளும் மீதிப்பாதி அடர்க்கருப்புமாய் மாறியது. 

“இருட்டுது! வேற யாரும் பார்த்திரக் கூடாது. வா சீக்கிரம் போவோம்.” புகைவண்டி இஞ்சினைப்போல் அவனின் கைகளைப் பற்றிக்கொண்டு ராணி வேகமாய் மேட்டில் இருந்து முன்னால் இறங்கினாள். வெளிச்சம் தன் சாம்ராஜ்யத்தை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்துகொண்டிருக்கிறது. இருவரும் விறுவிறுவென நடக்கத் தொடங்கினர்.

இப்போது மிக நெருக்கத்தில் தெரிகிறது, பகலிலும் இருட்டின் தனித் தீவாய்ப் பிரமாண்ட ஆலமரங்கள்! எத்தனை எத்தனை விழுதுகள்! விரித்த தலைக் கேசத்தோடு கால்கள் நீட்டி உட்கார்ந்திருக்கும் பூதகணங்களாய். அதன் எல்லைக் கோட்டிலிருந்து விரிகிறது நிழல் உலகம். அடர்த்தியாய் வரிசையாய்ப் பத்து, பன்னிரண்டு மரங்கள். இங்குதான் பல உருவங்கள் தங்கள் உடலைக் கசங்கி நைந்துபோன துணியைப்போல் தூக்கி எறிந்திருக்கின்றன. 

“இனி நம்ம யாருக்கும் பயந்து ஒளிய வேணாம். ஒண்ணா பார்த்தா என்ன ஆகுமோன்னு ஓட வேணாம். நிழலுக்காக எவனும் வெட்டிட்டு சாக மாட்டான்.”

அவளுள் வேகம் பொங்கி வழிந்தது. இன்னும் கொஞ்சம் தூரம்தான். இனி உடல் பாரமாய் இருக்காது. யாருக்கும் அஞ்சி அதைப் பத்திரப்படுத்த வேண்டாம். மெல்லிய இழைகளாய் அவளின் புறங்கை ரோமங்கள் உணர்வு பெருக்கில் குத்திட்டு நின்றன.

கண்ணுக்கெதிரே இறைந்து கிடக்கும் ஆலமரத்து நிழல் விரிப்பைக் கண்ட மிரட்சியில், குணா அசைவற்று ஜடமானான். பயத்தில் எச்சிலை மீண்டும் மீண்டும் விழுங்கிக் கொள்கிறான். உமிழ்நீரின் ஈரம் வறண்ட நாக்கையும் மனதையும் கடைசிமுறை நனைத்தது. இனி பசியோ, தாகமோ, காமமோ எந்த உணர்வுமில்லை. இனி வாழ்க்கை அதோ அந்த ஆலமரத்தைப் போலத்தான். வெட்டினாலும் விழுதுவிட்டாலும் பட்டுப்போனாலும் உணர்வுகள் வற்றி நிற்கும் மரத்தின் வாழ்க்கைதான்.

“ஏ யாருப்பா அது? நில்லுங்கப்பா…”

தூரத்தில் சப்தம் கேட்டது. இரண்டு பைக் விரட்டி வந்துகொண்டிருக்கிறது. பின்னால் அமர்ந்திருப்பவன் தலையை எட்டிப் பார்த்து, கைகளைத் தூக்கி அசைத்து கத்தினான்.

“வா சீக்கிரம்…” – அவன் கைகளைப் பற்றி இழுத்துக்கொண்டு முன்னால் ஓடுகிறாள். உருவமற்ற உலகின் எல்லைக்கோட்டைக் கடந்து அவளது கால்கள் முன்னால் பாய்கின்றன. பயத்தில் ஜில்லிட்ட அவனது கரங்கள் அவளின் பிடியை உதறிக்கொண்டன. அதற்குள் அவள் உடலின் பாதி உள்ளே நுழைந்திருந்தது. பாதி நிழலும் பாதி நிஜமுமாய் அவள் திரும்பிப் பார்க்கும்போது அவனது புறமுதுகு தெரிகிறது.

“குணா..!”  உரக்கக் கத்தும் அவளின் குரல் எழவில்லை. 

மூக்கையன் குடிசையைத் தாண்டி வந்த பாதையில் குணா வேகமாய் ஓடுகிறான். பின்னால் கறுத்த நிழல் கூட்டம் கைகளை நீட்டி மணல் ரோட்டில் பக்கவாட்டில் அவனைத் துரத்துகிறது. அதில் அவளின் நிழலும் ஒன்று. 

                                                

                                                         

 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close