சிறுகதைகள்

வசந்தி – ‘பரிவை’ சே.குமார்

சிறுகதைகள் | வாசகசாலை

வசந்தியின் இறப்புச் செய்தியோடுதான் அன்றைய பொழுது விடிந்தது.

என்னால் அந்தச் செய்தியை அவ்வளவு சுலபமாகக் கடந்துவிட முடியவில்லை.

மரணமடையக் கூடிய வயதொன்றும் இல்லையே அவளுக்கு என்பது மனசுக்குள் மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டேயிருந்தது.

எனக்கும் அவளுக்கும் ஆறு மாத வித்தியாசம்தான்…

மூன்று மாதத்திற்கு முன்னர்தான் நான் அம்பதைத் தொட்டிருந்தேன்.

அம்பது ஆகும் முன்னமே அவளுக்குச் சாவு.

ஏற்க முடியவில்லைதான் என்றாலும் இப்போது இருபத்தஞ்சி வயதில் கூட அட்டாக்கில் சாகின்ற காலமாகி விட்டதே.

யாருக்கு எப்போன்னு யாருக்குத் தெரியும்..?

விதி வந்தால் போக வேண்டியதுதானே…

அவள் பிறந்த வீட்டில் எல்லாரும் கூடியிருந்தோம்.

“என் மகளை அள்ளிக் கொடுத்துட்டேனே… என்ன செய்வேன்…” புலம்பி அழுதார் எழுபத்தைந்து வயதைக் கடந்த சீனிச்சாமி.

“நாம்பெத்த சீமையே…” எனக் கதறினாள் கண்பார்வை சரியில்லாத கருப்பாயி.

மகளைப் பறிகொடுத்து விட்டுக் கதறும் இருவரையும் பார்க்க பரிதாபமாக இருந்தது. இழப்புக்களைச் சுமக்கும் முதுமைகளின் வலியை அவ்வளவு எளிதாகச் சொல்லில் கடத்திவிட முடியாதுதானே… அது வலியின் உச்சம்… உயிருக்கும் வரை உள்ளிருந்து கொல்லும் வலி அல்லவா…?

ஊரே அழுதது…. அந்த ஒப்பாரிச் சத்தம் ஊரை தாண்டிக் கேட்கக் கூடும்.

“என்னாச்சுன்னு ஏதாச்சும் தெரியுமா மச்சான்…?” மெல்லக் கேட்டேன் அவளின் அண்ணனிடம்.

“ம்… ராத்திரி நல்லாத்தான் படுக்கப் போயிருக்கு… காலையில எழுந்திரிக்கலை… அட்டாக்காம்… என்னத்தைச் சொல்றது மச்சான்…” சொல்லும் போதே அவருக்கு அழுகை வெடித்தது. தோளில் கிடந்த துண்டால் முகம் துடைத்து வாய் பொத்திக் கொண்டவரை ஆறுதலாய் அணைத்துக் கொண்டேன். அணைப்பு ஒன்றுதானே துக்கத்தைக் கடத்தும்.

அவர் கொஞ்சம் ஆசுவாசமானார்.

“ம்… என்னத்தைச் சொல்ல… எதிர்பாராதது…” நானும் துண்டால் முகம் துடைத்தேன்.
“நல்ல வாழ்க்கைதான்… மச்சான் அதை கஷ்டப்படல்லாம் விடலை… ராணி மாதிரி வச்சிருந்தாரு… மூணு பிள்ளைகளுக்கும் கல்யாணம் பண்ணி பேரம் பேத்தியவும் பாத்திருச்சு… இருந்தாலும் இப்படி ஆயிருக்கக் கூடாதுதான்… இன்னம் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்… அதுக்குள்ள என்ன அவசரம்..?”

“ம்… எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் அதை…” துக்கம் தொண்டைய அடைத்தது எனக்கு.

“ஆமா… எங்க வீட்டுப் பொம்பளைங்க அதை ஒருநா ஒரு பொழுது நாத்தனான்னு பார்த்ததில்லை… அதுவும் அப்படித்தான்… ம்… எல்லாம் முடிஞ்சி போச்சு… இனிப் பேசி என்ன பண்ண…” கண்ணீர்த்துளி கன்னத்தில் இறங்கியது.

“ம்… அழுதுகிட்டே இருந்தா… பாக்க வேண்டிய காரியமெல்லாம் இருக்குல்ல மச்சான்…ஆமா எப்பக் கெளம்புறது..?”

“போ வேண்டியதுதான்… சத்திக்கிட்ட வேனுக்குச் சொல்லியிருக்கேன்… இப்ப வந்திரும்… போகும்போது அப்படியே சாமான்களை வாங்கிட்டுப் போயிடலாம்…”

“ம்…”

அழுகுரல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

வீட்டிற்குள் இருந்து முந்தானையில் முகம் துடைத்தபடி வெளியே வந்த மனைவி மேகலாவுடன் மெல்ல நடந்தேன்.

“அந்தச் சின்னத்தாவும் சித்தப்பாவும் கதறுறது சகிக்கலைங்க…” என்றாள் துக்கத்துடன்.

“ஆமா… பெத்தபுள்ளைய தூக்கிக் கொடுத்துட்டு வாழ்றது இந்த வயசுல பெருத்த வலியில்லையா..?”

“ம்…”

“அட்டாக்தானாமா…?”

“ஆமாவாம்… ராத்திரி போன்ல பேசியிருக்கே… அடுத்த வாரம் மகமூட்டுக்கு கோயம்புத்தூருக்குப் போறதாச் சொன்னுச்சாம். காலையில செத்துப் போச்சுன்னு சேதி வருது… ம்…. என்ன சொல்லி என்ன பண்ண… மனசு ஆறல… மனுசப் பொழப்பு இம்புட்டுத்தான்…” சேலை முந்தானையில் மூக்குச் சிந்தினாள்.

“ம்… அவங்களுக்கு ஆதரவு சொல்ல முடியுமா நம்மனால… யார் யாருக்கு எப்போன்னு எழுதியிருக்கோ தெரியல…”

“அட அந்த சின்னத்தா கண்ணு சரியாத் தெரியாமத்தானே கெடக்கு… அது போயிருக்கக் கூடாது…. அது கெடந்து கதறுறது பாக்கச் சகிக்கலை…”

“ம்… அது படக்குன்னு போயிருச்சு… இது கஷ்டப்பட்டுப் போகணுமின்னு எழுதியிருக்கு… என்ன பண்ண… சாவு எப்ப வரும்… எப்படி வரும்ன்னு நமகென்ன தெரியும்…”

“ஆமா… போன வருசம் உங்க மாமா காலையில பைக்கில போனவரு நம்ம வீட்டுக்கிட்ட நிப்பாட்டி உங்ககிட்ட பேசுறாரு… மத்தியானம் முடியலைன்னு ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போனாக… சாயந்தரம் பொணமாத் திரும்பி வரலையா… இம்புட்டுத்தான் வாழ்க்கை… இதுலதான் சொத்துப் பத்து… அது இதுன்னு ஆயிரம் சண்டைகளும் சச்சரவுகளும்…” மேகலா பேசிக் கொண்டே நடந்தாள்.

“அண்ணே… பொம்பளங்க வேனுல போவட்டும்… நாம வண்டியில போயிடலாம்… முன்னப்பின்ன ஆனாலும் நாம வண்டியில திரும்ப வசதியாயிருக்குமுல்ல…” என பின்னாலிருந்து கத்தினான் தம்பி தங்கராசு.

“ஆமா அவுக சொல்றதும் சரிதான்… வேனுல பொயிட்டு நீங்கள்லாம் உடனே திரும்ப முடியாதுல்ல… தூக்குற வரைக்கும் நிக்கணுமில்ல… ஒரு வண்டியில வந்தியன்னா தூக்குனதும் ஓடியாந்துடலாம்… நாங்க வேனுலயே வந்து ஆடு மாடுகளப் பாப்போம்…” என்றாள் மேகலா,

“ஆமா அதுவும் சரிதான்…”

வசந்தியை திண்ணையில் மின்சார குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்திருந்தார்கள்.

சுற்றிலும் அழுகுரல் ஒசை…

மகள்கள் கதறியது நெஞ்சை அறுத்தது.

மகன் வந்து கொண்டிருப்பதாய் தகவல்.

அவளின் கணவன் கண்ணீரோடு அவள் தலைமாட்டில் அமர்ந்திருந்தான்.

கையில் இருந்த மாலையை பெட்டியின் மீது போட்டுவிட்டு அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றேன்.

அவள் முகம் சற்று உப்பலாய்த் தெரிந்தது.

உதட்டில் எப்போதும் இழையோடும் சிரிப்பு இருப்பது போல் தெரிந்தது.

கலங்கிய கண்ணை துண்டால் துடைத்தபடி திரும்பினேன்.

“எப்ப எடுப்பாங்களாம்…?” கூட்டத்தில் யாரோ யாரிடமோ கேட்டார்கள்.

“மகன் வரணுமில்ல…” என்பது அதே கூட்டத்தில் பதிலாய் வந்தது.

நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமானது.

சீனிச்சாமி மாமாவின் சொந்த பந்தம் அதிகம்… ‘ஆத்தோ…’, ‘மகளே..’, ‘நாபொறந்த சீமை…’ அப்படின்னு அழுகுரல்களுடன் ஆட்கள் வந்தபடி இருந்தார்கள். நெருங்கிய சொந்தங்கள் பச்சை சுமந்து வந்தார்கள். மேளக்காரன் அவங்க முன்னாடி நாலு அடி அடிச்சிட்டு இருபது ரூபாய் வாங்கிக் கொண்டான்.

“குழி வெட்ட ஆள் போகச் சொல்லியாச்சா…”

“ஏம்ப்பா வெடி வாங்கணுமின்னானுங்க… போனானுங்களா…”

“மேளக்காரனுங்க கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்திருங்கப்பா…”

“அம்பட்டையனுக்கும் வண்ணானுக்கும் சொல்லியாச்சா..”

“எல்லாத்துக்கும் ஆளு நியமிச்சாச்சு…”

“ம்.. பூப்பல்லக்குன்னா அதுக்கு பூவு…”

“அதெல்லாம் மணிமாறங்கிட்ட சொல்லியாச்சு… அவன் ஏற்பாடு பண்ணி வாங்கிக் கொண்டாந்துருவான்…”

“பய வந்துதானே எடுக்கணும்…”

“எப்படியும் மூணு நாலு மணி ஆயிரும்ன்னு நினைக்கிறேன்…”

“ஆமாமா அவன் வந்து அப்புறம் நீர்மாலை எடுத்து… எல்லாம் பண்ணிப் போக மூணு மணிக்கு மேலாயிரும்…”

“எத்தனை மணிக்குன்னாலும் இன்னைக்கு எடுத்தாகணுமில்ல… நாளைக்கி சனிக்கிழமையில்ல….”

“ம்… ஏம்ப்பா குழி வெட்ட போனவனைப் போயி பார்க்கச் சொல்லுங்கப்பா… அவம்பாட்டுக்கு தண்ணியடிச்சிட்டு சாமிநாதனுக்கு வெட்டுன மாதிரி நீளமுமில்லாம அகலமுமில்லாம வெட்டிடப் போறான்…”

“அதெல்லாம் அவன் கூட ஆளு போயிருக்கு…”

“எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சிட்டா… பய வந்ததும் நீர்மாலை எடுத்துடாலாம்…”

“ஆமாமா… ரெண்டு மூணு நாளா சாயங்காலத்துல மழை வேற வருது… அதுக்குள்ள காரியத்தை முடிச்சிட்டு வந்திடணும்…”

ஆளாளுக்குப் பேசினார்கள்….

வசந்தியை மண்ணுக்குள் புதைக்க வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன.

மதியம் ஒரு மணிக்கு வந்த மகன் கதறிய கதறல் அங்கிருந்தவர்களை எல்லாம் உலுக்கியது. மண்ணில் உருண்டவனைத் தூக்கிக் கொண்டு போய் வசந்தியிடம் விட்டார்கள்.

எல்லாரும் கட்டிக் கதறி முடித்ததும் நீர்மாலை எடுக்கத் தயாரானார்கள்.

சடங்குகள் எல்லாம் முடித்து பூப்பல்லக்கில் புறப்பட்டாள் வசந்தி.

“தங்கராசு இருந்தது இருந்துட்டோம்… சுடுகாட்டுக்குப் போயி ஒரு கை மண்ணள்ளிப் போட்டுட்டுப் போயிருவோமுடா…” என்றேன் மெல்ல.

அவன் சரி என்றதும் வசந்தியின் பல்லக்கின் பின்னே நடக்க ஆரம்பித்தோம்.

சுடுகாட்டில் செய்ய வேண்டிய முறைகள் செய்து அவள் குழிக்குள் இறக்கப்பட்டாள்.

“பாத்து வையிங்கப்பா…”

“தலையை கொஞ்சம் லேசா கிழக்க பாத்த மாதிரி வையி…”

“கட்டெல்லாம் வெட்டி விடுங்க…”

“இந்தக் கூரைச் சீலையை நல்லா மேல போட்டு விடுங்கப்பா…”

“ரெண்டு பேரும் சொல்லி வச்சி ஒரே நேரத்துல மேல ஏறுங்கப்பா…”

“ஊர் நாட்டார் வாங்கப்பா… மண்ணள்ளிப் போடுங்க…”

“அடுத்தடுத்து உறவு… அங்காளி… பங்களி… எல்லாம் வாங்கப்பா… மேகம் இருட்டிக்கிட்டு வருது… மழை வர்றதுக்குள்ள குழியை மூடணும்…”

நானும் மண்ணள்ளிப் போட்டேன்…

அது அவள் நெஞ்சில் விழுந்தது.

எல்லாரும் அள்ளிப் போட்டதும்…

“சரிப்பா குழியை நல்லா மூடுங்க…”

“திரும்பிப் பாக்காம போங்கப்பா…”

நானும் நடக்க ஆரம்பித்தேன்…

மனசு மட்டும் ஏனோ அவள் குழியைச் சுற்றி சுற்றியே வந்தது.

அந்த சிரித்த முகம் மனசுக்குள் சிரித்தது.

“எப்ப வீட்டுல எங் கலியாணத்த முடிவு பண்ணுனாங்களோ, நீயும் எதுவும் சொல்ல முடியாத நிலையில இருந்தியோ அப்பவே செத்துட்டேன் செல்வம்… எங் கட்டதான் தாலி தாங்கி அந்த ஊருக்குப் போகும்…” என அவளுக்கு நிச்சயமான இரவில் என்னிடம் சொல்லி அழுத வசந்தியின் குரல் என் காதுக்குள் ஒலித்தது.

அந்த இரவில் கடைசியாய் அவளுக்குத் திமிரத் திமிரக் கொடுத்த முத்தம் நெஞ்சுக்குள் எட்டி உதைத்தது… உடைந்து அழ வேண்டும் போலிருந்தது…

வானம் அழ ஆரம்பித்தது.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close