சிறார் இலக்கியம்
Trending

வானவில் தீவு; 17 – செளமியா ரெட்

சிறார் தொடர் | வாசகசாலை

இதுவரை…

தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போன அந்த ஊர்ச் சிறுவர்கள் கடலுக்குள் இருந்த கோட்டைக்குள் நுழைந்தனர். அங்கே தேவைதையின் தோழி இன்கி பின்கியை சந்தித்தார்கள். இன்கி வண்ண தேவதையைப் பற்றி சொன்னதைக் கேட்ட சிறுவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இனி…

பசியாறச் சாப்பிட்ட பின் எல்லோரும் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தனர். பல நாட்கள் பயணத்திற்குப் பின் கிடைக்கும் ஓய்வு. எல்லோருக்குமே நல்ல தூக்கம் வந்தது. வெகு நேரம் தூங்கினார்கள்.

கிட்டத்தட்ட அடுத்த நாள் காலைதான் அனைவருமே விழித்தனர்.

அணில்: என்ன தம்பிங்களா? எல்லாருக்கும் நல்ல தூக்கம் போலருக்கே?

ராம்: ஆமா அணிலண்ணே. இத்தனை நாள்ல இப்ப தான் இப்படி நல்ல சாப்பாடும் ஓய்வும் கிடைச்சது. அதான் எல்லாரும் நல்லா தூங்கிட்டோம்.

அணில்: நல்லது தம்பி. எல்லோரும் பின்பக்கம் இருக்கிற அருவில போய் குளிச்சுட்டு வாங்க. சாப்பிடலாம்.

ராம்: கடலுக்குள்ள அருவியா? அடேங்கப்பா.

அணிலும் கூட சேர்ந்து சிரித்தது.

அருவியில் கலகலவென குளித்து, உற்சாகமாக வந்து சேர்ந்தனர். பெரிய இலையில் விதவிதமான சாப்பாடு.

மகேஷ்: அம்மாடி, எவ்ளோ சாப்பாடு? எல்லாத்தையும் உடனே சாப்பிடணும் போல இருக்கே!

பாலா: அதுலயும் எவ்ளோ எவ்ளோ வண்ணம்! இத்தனையும் நம்ம தீவுலயும் இருந்தா ரொம்ப நல்லாருக்கும்ல…

ராம்: அதானடா, இவ்வளவு வண்ணத்த வச்சுகிட்டு நாம black & whiteல சாப்பிட்டு இருந்திருக்கோம்.

பாலா: ஆமாடா, ஆனா சீக்கிரம் நம்ம தீவுக்கும் வண்ணங்களைக் கொண்டு வரத்தான் போறோம்.

எல்லோரும் கலகலவென பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.

சாப்பிட்டு முடித்ததும், வட்டமாக அமர்ந்து ஆலோசிக்கலாம் என்று அமர்ந்தனர். யாருக்கும் எதுவும் தோன்றவில்லை.

அணில்: தம்பி, ஒரு சூப்பர் ஐடியா இருக்கு.

(கோரஸாக) ஹைய்யா…

பாலா: சொல்லுங்கண்ணே.. சொல்லுங்கண்ணே…

அணில்: இங்க இருந்து பாரேன். அங்க உயரத்துல பளிச்சுனு அலங்காரமா ஒரு ரூம் மாதிரி தெரியுதா?

பாலா: ஆமா..

அணில்: அங்க ஒரு மயில் இருக்கு. அந்த மயில்னா மழை தேவதைக்கு ரொம்பப் பிரியம். அது சொன்னா, மழை தேவதை உங்க ஊருக்குத் திரும்பி வர வாய்ப்பிருக்கு.

பாலா: அப்போ உடனே போய் மயில் கிட்ட கேக்கலாம்ண்ணே..

அணில்: பகல் பூரா அந்த மயில் தேவதைங்க கூட தான் இருக்கும். ராத்திரி நேரத்துலதான் இங்க வரும். இருட்டுல நம்மாலயும் அவ்ளோ உயரத்துக்குப் போக முடியாது தம்பி.

ராம்: அதுக்குதான் எங்ககிட்ட லைட் மீன் இருக்கே. நல்லா வெளிச்சம் தரும். எங்ககிட்ட இருக்க கண்ணாடி குடுவையில போட்டு லைட் மீன தூக்கிட்டு போயிடலாம்.

மகேஷ்: சூப்பர்.

லைட் மீன் பளிச்சென்று வழி காட்ட, மற்ற மீன்களை வெவ்வேறு குடுவையில் எடுத்துக் கொண்டு, எல்லோரும் கூட்டமாகச் சென்றனர். கிப்பர் மீன் மட்டும் மற்றவர்களோடு ஏறிச் சென்றது.

அணில்: மயிலக்கா.. மயிலக்கா.. கதவத் திறங்களேன். அணில் வந்துருக்கேன்.

கதவைத் திறந்த மயில், மலர்ந்த முகத்துடன் வரவேற்றது.

மயில்: வாங்க வாங்க அணிலாரே.. எப்படி இருக்கீங்க? பாத்து ரொம்ப நாள் ஆச்சு.

அணில்: நல்லாருக்கேன் க்கா.. நீங்க எப்படி இருக்கீங்க?

மயில்: நல்லாருக்கேன். என்ன இவ்வளவு கூட்டத்தோட இந்த நேரத்துல வந்துருக்கீங்க?

அணில்: பகல்ல வந்தா, உங்களப் பிடிக்க முடியாதே.. அதான்…

மயில்: சரி சரி… என்ன விஷயம்னு சொல்லுங்க.

அணில்: இதோ இவங்க எல்லாம், நம்ம முன்னோர்கள் இருந்த தீவுல இருந்து வந்திருக்காங்க. உங்ககிட்ட இருந்து ஒரு உதவி தேவை.

மயில் எல்லோருக்கும் பழச்சாறைப் பரிமாறியபடியே கேட்டுக் கொண்டிருந்தது. அது நடப்பதே மிக அழகாகவும் ஒயிலாகவும் இருந்தது.

மயில்: சொல்லுங்க அணிலாரே. என்ன உதவி வேணும்?

அணில் முழுக் கதையையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தது.

அணில்: இப்போ மழை தேவதைய கூப்பிடணும். நீங்க கூப்பிட்டா தான் அவங்க மறு கேள்வி இல்லாம வருவாங்க. நேரா போனா அவங்கள சந்திக்க வாய்ப்பில்லாமப் போயிடும்.

மயில்: நீங்க சொல்றது சரிதான். ஆனா மழை தேவதை என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காங்க. அதுவுமில்லாம ஏற்கெனவே அவங்க கோவமா இருக்கிற விஷயத்துக்காக, நான் பொய் சொல்லி கூப்பிட்டா, சரியா இருக்காது.

அணில்: வேற வழி இருக்குதான்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்களேன்.

மயில்: இல்லப்பா.. நீங்க என்ன சொன்னாலும் கண்டிப்பா நான் இதச் செய்ய மாட்டேன். பூர்வீக ஊருக்கு திரும்பிப் போற விஷயம் அவங்கள இன்னும் அதிகமாதான் கோவப்படுத்தும்.

அவர்கள் கேட்ட உதவியை மறுத்தாலும் மென்மையாகப் பழகியது மயில். ஆனாலும் வந்த விஷயம் நல்லபடியாக முடியாத சோகத்தில் எல்லாரும் கொஞ்சம் சோகமாகவே வெளியே வந்தனர். அடுத்து என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை.

தொடரும்…

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close