சிறுகதைகள்
Trending

உடலுறவு – சிசுக்கு

சிறுகதை | வாசகசாலை

“அடிபட்டுருச்சா?”

கேட்டுக்கொண்டே அவர் கை தன்னிச்சையாக என் கால்களைத் தொட்டுப் போனது.

“இல்லண்ணா…அதெல்லாம் ஒன்னும் இல்ல”

உடனடியாக அந்த பதில் என் வாயில் உருவாகி இருந்தது. ஆனால் அந்த கை அந்த கை… பாசிப்பருப்பு மாவு போட்டு குளித்தது போன்றே எப்போதும் மிருதுவாய் இருக்கும் அம்மாவின் கை போல இருந்தது. மிருதுவாய் எந்தத் தடையும் இல்லாமல் தொட்டால் வழுக்கும் தோலாக இருந்தது. நான் அவருடன் வண்டியில் சென்றுகொண்டிருக்கிறேன்.

அலுவலகத்தை அடைந்தவுடன் அவர் வீட்டிற்குக் கூட்டிச் செல்லும்படி கேட்டுக்கொள்வேன். “உங்க வீட்டுக்கு என்னைய கூப்புட்டுப் போறீங்களா?” அவர் மறுப்பேதும் சொல்லாமல் என்னை அழைத்துச் செல்கிறார். வீட்டிற்குள் என்னை வரவேற்று கூட்டிப் போகிறார். நான் உள்ளே நுழைந்ததும் உடைகளை அவிழ்த்துப் போடுகிறேன். கேள்வியாய் அவர் என்னைப் பார்க்கிறார். நான் புன்னகையுடன் உடையைக் கழட்ட சொல்லி சைகை செய்கிறேன். அவர் தனது சட்டையின் பட்டன்களைப் பிரிக்கிறார், காற்றினுள் அவர் உடைகள் நுழைந்து தரையில் விழுகின்றன. நான் அவரை நெருங்குகிறேன், மண்டியிட்டு அவர் வயிற்றில் முகம் புதைத்துப் பார்க்கிறேன், மிருதுவாக என்னை உள்ளிழுத்துக் கொள்கிறது. நான் கைகள் விரித்து அவர் வயிற்றை அணைத்துக்கொண்டிருக்கிறேன். என்னை அவர் எழுப்பினார். கையை என் இடுப்புடன் சேர்த்து அணைக்கிறார், இன்னொரு கையைப் பற்றிக்கொள்கிறார். மெதுவாய் அசைகிறார். நாங்கள் சிறு அசைவுகளுடன் நடனமாடிக்கொண்டிருக்கிறோம் என்பது சிறிது நேரம் கழித்துதான் எனக்குப் புலப்படுகிறது. நான் அவர் தோளில் சாய்ந்து கொள்கிறேன். நாங்கள் ஆடுகிறோம். எவ்வளவு நேரம் இப்படி இருந்திருப்போம் என்று எனக்குத் தெரியவில்லை. அவரின் மிருதுவான தோளில் நான் தலைசாய்த்து கண் மூடிக்கொண்டேன். அவர் கைகளால் என்னை அணைத்து இன்னும் அருகில் அழைக்கிறார். என் உடலும் அவர் உடலும் சேர்ந்திருக்கிறது, அவர் தோளில் என் உடல் சாய்ந்து இளைப்பாறிக்கொண்டிருக்கிறது. அவர் தோலுடன் என் தோல் இணைந்திருக்கிறது. எவ்வளவு நேரம் என்று எனக்குத் தெரியவில்லை.

அலுவலகத்தை அடைந்தவுடன் எவ்வளவு ஆனது என்று கேட்டு பணத்தை நீட்டினேன். நன்றி சொன்னேன், அவர் தலையசைத்து ஏற்றுக்கொண்டார். நான் அலுவலகக் கதவைத் திறந்துகொண்டு உள் நுழைந்தேன். எப்போதும் போலான ஒரு இரை தேடும் நாள், அது என்னை உண்டு முடித்து மிச்சத்துடன் நான் இரவு என் இருப்பிடத்தை அடைந்தேன். கீழ்வீட்டில் குட்டி குரைத்துக் கூப்பிட்டது, ஆனால் அதைக் கொஞ்ச எனக்கு தெம்பு இருக்கவில்லை, நான் மேலே ஏறி என் வீட்டிற்குச் சென்றேன்.  தண்ணீரில் உடலைக் கழுவி அப்படியே கட்டிலில் படுத்தேன். காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. இத்தனை மணிக்கு அடிப்பது நிச்சயம் சிகரெட் இருக்கிறதா என்று கேட்பதற்காக நிற்கும் பக்கத்துவீட்டு சத்யாவாகத்தான் இருக்கும். இப்படியே போய் கதவைத் திறக்கலாமா என்று நினைத்தேன்.

அப்படியே எழுந்து போய் கதவைத் திறந்தேன். சத்யா சிகரெட் இருக்கிறதா என்று கேட்கவில்லை. மாறாக என்னை வியப்புடன் ஏறிட்டான், உள்ளே வரச் சொல்லி புன்னகைத்தேன். அமைதியாக உள்ளே வந்து கதவை அடைத்தான். “நீயும் கழட்டு” தலை சாய்த்து சொன்னேன். மெதுவாய் உடைகளை அவிழ்த்தான். என்னை நெருங்கி என் இரு கன்னங்களையும் தாங்கிப் பிடித்தான். அவன் உள்ளங்கைகளின் மீது என் கைகளை வைத்துக்கொண்டு அவன் கண்களைப் பார்த்தேன், என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான். உள்ளங்கையின் வழி வெப்பத்தை நான் உள்ளிழுத்துக்கொண்டிருந்தேன். மென்சூடு என்னை முன்னோக்கித் தள்ளியது. அவன் நெற்றியோடு என் நெற்றியை இணைத்தேன். காத்திருந்தாற்போல் சூடான கண்ணீர்த் துளிகள் வெளிவந்தன, அவன் கைகள் என் கன்னங்களைப் பற்றிக்கொண்டிருப்பதை நிறுத்தவில்லை, நான் அவன் உள்ளங்கைகளை பொதிந்துகொண்டிருப்பதை நிறுத்தவில்லை. இரை உண்ட நாள் எங்களுக்கு எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்துக்கொண்டிருந்தது. நான் கையை எடுத்து அவன் கன்னங்களில் வைத்தேன், சில்லென்று இருந்தது. அவன் கண்களை மூடிக்கொண்டிருந்தான். அவனை இறுக்கி அணைத்துக்கொண்டேன், வெகு இறுக்கமாக இடையில் காற்று புகாவண்ணம், என் தோலோடு அவன் தோலை அழுத்திக்கொண்டேன். கண்ணீர் வெளியாகி வழிந்தது, அவன் கழுத்து மடிப்பில் தலை சாய்த்துக்கொண்டேன். எவ்வளவு நேரம் அணைத்துக்கொண்டிருந்திருப்பேன் என்று தெரியவில்லை.     

காலிங்பெல் இன்னமும் அடித்துக்கொண்டிருந்தது. நான் எழுந்து போய் கதவைத் திறந்தேன். சத்யா ஹாய் சொல்ல வந்து வாயடைத்து நின்றான். நான் புன்னகைத்து உள்ளே வர சொன்னேன். உள்ளே நுழைந்து கதவை அடைத்தான். உடைகளைக் கழட்டி வீசினான். நான் நெருங்கி அவனை அணைக்கப் போனேன். என்னை இறுக்கி அழுத்தமாய் உதட்டில் முத்தமிட்டான், என்னை இடுப்புடன் பிடித்து அறைக்குள் கட்டிலில் சாத்தினான். நான் அவனைப் புறம் தள்ளி எழுந்து நின்றேன். என் வாய்க்குள் அவன் எச்சில் நுழைந்தது எனக்கு நினைவில் இருந்துகொண்டே இருந்தது, நான் வாயைப் பலமுறை சப்பி அதை வெளியேற்ற முயன்றுகொண்டே உளறினேன், “இது இல்ல…வேண்டாம்…வேண்டாம் நீங்க போயிருங்க…நீங்க போயிருங்க” நான் கெஞ்சிக்கொண்டிருந்தேன், மன்னிப்பு கேட்க தயாராய் இருந்தேன்.

அவன் நான் பதறி எழுந்ததும் புரியாமல் விழித்தான். பொதுவாக ஒரு ஸாரி சொன்னான். உடைகளை விசையுடன் உதறி உடுத்துவதில் அவன் கோபம் தெரிந்தது. “இது இல்லன்னா அப்போ என்ன மயித்துக்கு இப்புடி நிக்குது…” மேற்கொண்டு அவன் முணுமுணுத்தது எனக்குக் காதில் ஏறவில்லை. என் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. அவன் கதவை அறைந்து சாத்திவிட்டுப் போன பின்தான் என் நடுக்கம் குறைந்தது. நான் கட்டிலில் அமர்ந்தேன். எனது அறை எதுவமற்று இருக்கிறது. நான் ஏதுமற்று இருக்கிறேன். என்னிடம் கொடுக்க எதுவுமில்லை, ஆதலால் எடுத்துக்கொள்ளவும் யாரும் முன்வரமாட்டார்கள். நான் எதுவுமற்றவள். அந்த நாள் என்னிடம் மிச்சம் வைத்திருந்தவற்றையும் சேர்த்து உண்டுவிட்டது என்று தோன்றியது. நான் உச்சியைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தேன்.

அடுத்த நாள் நான் எழுந்து அலுவலகம் சென்றேன், என் இருக்கையில் அமர்ந்தேன். அலுவலகம் சத்தங்களால் சூழப்பட்டிருக்கிறது. ஆயிரம் கைகள் விசைப்பலகையைத் தட்டும் சத்தம். ஆயிரம் கைகள், ஆயிரம் உடல்கள், ஆயிரம் மனிதர்கள். நான் பணியைத் தொடங்க முயன்றேன். ஆனால் முடியவில்லை. என் கைகள் நடுங்கிக்கொண்டிருக்கின்றன. நேற்று நான் கட்டிலில் வீழ்த்தப்பட்டதும் அந்த முத்தமும் நினைவில் எழுந்துகொண்டே இருந்தன. அந்த செய்கையில் உறைந்திருந்த அந்நியம் என்னை இரண்டாய்த் துண்டித்து விட்டதுபோல் இருக்கிறது. அந்த உலகிற்கும் எனக்கும் இடையே எவ்வளவு தூரம் இருக்கிறது? இந்த ஆயிரம் கரங்களும் எழுப்பும் சத்தத்தைத்தான் என்னால் உடனிருந்து எழுப்ப முடியும். வேறெந்த உடனிருப்பும் எனக்கு கிடைக்காது. நான் கழிவறைக்குச் சென்று கதவை அடைத்தேன். அங்கேயே தரையில் அமர்ந்து கதறி அழுதேன்.

எனக்கு உடலுறவு வேண்டாம்…ஆனால் எல்லா உடல்களுடனும் உறவு எனக்கு வேண்டும்… எனக்கு வேண்டும்…எப்படியாவது எனக்கு வேண்டும்…எப்படி கேட்பது?

இரவு வீடு திரும்பினேன். அடுக்ககத்தின் கீழ்வீட்டுப் பெண்மணி நான் வந்து சேர்வதற்காகக் காத்திருந்தார். அவர் ஊருக்குச் செல்வதால் குட்டியைப் பார்த்துக்கொள்ள சொல்லி என்னிடம் ஒப்படைத்தார், இரண்டு நாட்களில் திரும்புவதாக bye சொல்லிவிட்டுக் கிளம்பினார். நான் நாயுடன் வீட்டினுள் நுழைந்தேன். குளியறைக்குள் சென்று நீண்ட நேரம் உடலை நீருக்கு ஒப்புக்கொடுத்து நின்றேன். ஆற்றாமையாய் இருந்தது. சத்யா காலிங்பெல் அடிப்பானோ என்று பயமாய் இருந்தது. ஏனோ தண்ணீரால் என் உடலைக் கழுவி அணைக்க முடியவில்லை, அது உயிருள்ள மனிதரால் மட்டும்தான் முடிகிறது. நான் வெளியே வந்து அப்படியே தரையில் அமர்ந்தேன், கண்ணீர் பெருகி வழிந்தது, நான் மூக்கை உறிஞ்சிக்கொண்டேன், கண்ணீர் நிற்காமல் வழிந்தது. சத்தம் கேட்டு நாய் எழுந்து வந்திருக்கிறது போல, என் அருகில் அமர்ந்து இன்னும் நெருங்கி நெருங்கி அமர முயன்றுகொண்டிருந்தது. என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.

என்னால் என் தலைக்குள் மட்டும்தான் எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்க முடியுமா? நிஜத்தில் நான் என்ன செய்ய முடியும்? இந்த மனிதர்களின் மொழியை என்னால் பேச முடியாதா? எங்கிருந்து நான் இவர்களுடன் உறவாட முடியும்?

நான் அதைத் திரும்பிப் பார்த்து அழுதேன். அது அதன் காலை நீட்டியது, என் மடி மீது வைத்தது, எனது ஈர உடலில் அதன் கால் முடி மீது தண்ணீர் பட்டு ஈரமாகியது, அது தவித்துக்கொண்டே மறுபடி மறுபடி காலைத் தூக்கி என் மடி மீது வைக்க முயன்றுகொண்டே இருந்தது, அது பதறுவதை என்னால் பார்க்க முடிந்தது. சட்டென்று எனக்குள் ஏதோ திறந்தது போல் இருந்தது. “எனக்கு ஒண்ணுமில்ல குட்டி…எனக்கு ஒண்ணுமில்ல” நான் அதன் காலைப் பிடித்துகொண்டு சொன்னேன். அதைத் தட்டிக்கொடுத்து வலியுறுத்த, தூக்கி மடி மேல் இருத்திக்கொண்டேன். அதன் கால்களால் சம்மணமிட்டிருந்த என் தொடைகளைப் பிடித்துக்கொண்டது. அண்ணாந்து என் முகம் பார்த்தது, என் மார்பில் அதன் தலை இருந்தது, நான் சிரித்துக்கொண்டு அதற்குத் தட்டிக்கொடுதேன். என் தொடையின் மீது தலை வைத்துக்கொண்டது. அதன் உடல் முழுதும் என் உடல் மேல் இருந்தது, அதன் சின்ன உடலுக்குள்ளாக வெகு வேகத்துடன் அதன் இதயம் துடிப்பது என் உள்ளங்கையில் பிரதிபலித்தது, நான் நாயைக் கையால் அணைத்து அதன் உடல் மீது என் தலையை வைத்து கண் மூடினேன். அப்போது என் உதடுகள் சிரிப்பில் மெலிதாய் மலர்ந்திருந்தன.            

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. தனிமையுடன் சேர்ந்த ஒரு விரக்தி..

    கூடவே அந்த தனிமையையும்.. ஒரு இலகுவான இயலாமை நிலையை ஒரு தனிப்பட்ட மனிதன் ஒரு மனுஷியின் நிலை உணராமலும்.. அவளின் உணர்வுகளை யோசிக்காமலும்.. அவள் ஆசைகளை புரிந்துகொல்லாமலும் அவளின் மேலோட்டமான தேவைகளை கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு ஆழ்மனதின் தவிப்புகளை கேட்டு கேள்விப்படாமலும் வெறும் உடலென பயன்படுத்த முற்பட்ட ஒரு நிகழ்வு.

    ஆசைக்குள் இருக்கும் அன்பு புனிதமானதுதான் ஆனால் அன்பிலிருந்து பிறப்பதுதான் ஆசை!

    ஆனால் இங்கே ஆசைகளுக்கு மட்டுமே தான் தீனிபோடபடுவதாகவும், அதற்குத்தான் பெரும்பாலுமானவர்கள் முயற்சிப்பதாகவும் எழுத்தாளர் அருமையாக உணர்த்தியுள்ளார்.

    அன்பு.. எல்லா ஆசைகளை தாண்டியது.. அதற்க்கு மொழியில்லை.. வயதில்லை.. அறிவில்லை.. அன்பிற்கு மனிதனாகதான் இருக்கவேண்டும் என்று வரையறையும் இல்லை.. என்ற எழுத்தாளரின் மேலான கருத்திற்கு வாழ்த்துக்கள்!

    #படித்தால்_பரிசு
    #வாசகசாலை_இணைய_இதழ்40

    #உடலுறவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button