இணைய இதழ்இணைய இதழ் 52சிறுகதைகள்

ட்ரூ காலர் – கு. ஜெயபிரகாஷ்

சிறுகதை | வாசகசாலை

“மயிறு, நல்லா தூங்கறியாடா. நல்லா தூங்கு.. தூங்கு” என்ற வார்த்தையைக் கேட்டவுடனே சரவணன் தூக்கம் முழுவதுமாகப் போய்விட்டது. எழுந்து உட்கார்ந்து… “யார்ரா நீ. இப்படிக் காலங்காத்தல போன்ல பேசறவன்..சரியான ஆம்பளையா இருந்தா நேர்ல வந்து பேசுடா பாப்போம். பொட்டப்பையா”

“நீ பெரிய மயிறா இருந்தா கண்டுபிடிடா பாப்போம்”

“என் கையில் சிக்கத்தாண்டா போற. அப்ப இருக்குடா உனக்குக் கச்சேரி” – என்று பேசிக்கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டானது. ஏசி ரூமிலும் அவன்முகம் வேர்த்திருந்தது. 

“என்னங்க, யாருங்க? என்ன ஆச்சி” – என்று கேட்ட ரேவதியிடம், “எந்த மயிறான்னு தெர்லடி. காலையிலே என்னோட பீப்பிய ஏத்திட்டான்” என்று பெருமூச்சை விட்டான்.

அந்த நம்பருக்கு மறுபடியும் கால் பண்ணிபேசுங்க என்று மனைவி சொன்னவுடன், போனை எடுத்து அதே நம்பருக்கு காலைப் போட்டான். ஒரே ரிங்கில் காலை அட்டன்ட் பண்ணியவன், “என்னடா…என்கிட்ட இருந்து இன்னும் வண்ட வண்டையா பேச்சு வாங்கணுமா?”

“யார்ரா நீ? இன்னா கருமத்துக்கு எனக்கு கால் பண்ணற… மரியாதையா பேச ஒங்கம்மா கத்துக்கொடுக்கலையா?”. 

“எங்கம்மா கத்துக்கொடுக்கறது இருக்கட்டும்..உங்கப்பன் உங்காத்தா விட்டு எப்படி உன்ன வளத்தாங்கன்னு உனக்கு தெரியுமாடா? அத முதல்ல போய் தெரிஞ்சுகிட்டு வந்து எனக்கு கால் பண்ணுடா” – என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது தெரியாமல் இவன், “ஹலோ.. ஹலோ” என்று கத்திக்கொண்டிருந்தவன், போனைப் பார்த்து விட்டு தூக்கியெறிந்தான்.

கட்டிலுக்கு அருகில் இருந்த லைட்டைப் போட்டு விட்டு, சொம்பு தண்ணியை ஆவேசமாக எடுத்துக் குடிக்கக் தண்ணீர் சிந்தி பனியன் நனைந்தது. 

“என்னங்க, யாருங்க அவன்? கதிருக்கு போன் பண்ணி அந்த நம்பர யாருனு கண்டுபிடிக்கச் சொல்லுங்க..முதல்ல போன எடுத்து அந்த நம்பர ‘ட்ரூ காலர்ல’ போட்டு என்ன பேரு வருது பாருங்க” – என்று சொல்லி, அவனின் கோவத்தை இன்னும் அதிகப்படுத்தினாள். 

தூக்கி எறிந்த போனை எடுத்து மீண்டும் அந்த நம்பருக்குத் தொடர்ந்து அழைத்தான். 

‘சுவிட்ச் ஆஃப்’ என்று சொல்லியதைக் கேட்டு, “பொட்டபையன்..பயந்து சுவிட்ச்ஆஃப் பண்ணிட்டாண்டி” என்று சொல்லி லேசாக பல்லைக் காண்பித்தான். அவளோ மீண்டும் அந்த நம்பரை ‘ட்ரூ காலர்ல’ போட்டுப் பாருங்க என்றாள். இவனும் நம்பரைப்போட்டு பார்த்தபோது “ மயிறு கண்டுபிடிடா நாயே” என்று வந்ததைப் பார்த்து மீண்டும் போனைத் தூக்கியெறிந்தான். 

“எவனோ பேசனதுக்கு நீங்க ஏன் மாமா கோவப்பட்டுக்கிட்டு.. அந்த நாய யாருனு கண்டுபிடிச்சி வச்சிக்கலாம் கச்சேரி” என்று சொல்லிட்டு தனது போனை எடுத்து தன் தம்பி கதிருக்கு அழைத்தாள்…

ஏழாவது ரிங்கில் போனை எடுத்த கதிர், “என்னக்கா…இந்த நேரத்துல” 

“டேய், உன் மாமாவுக்கு ஒருத்தன் போன் பண்ணி அசிங்க அசிங்கமாப் பேசறாண்டா. யாருனு சொல்ல மாட்றாண்டா. அந்த நம்பர அனுப்பறேன், யாருனு கண்டுபிடிடா… எங்க இருக்கானு கண்டுபிடிடா”

“சரிக்கா..பாத்து சொல்றேன்” 

இடுப்பில் லுங்கியை இழுத்துக் கட்டிக்கொண்டு கடிகாரத்தைப் பார்த்தான். காலை மூணுமணி. கட்டிலுக்குப் பக்கத்திலே தூக்கம் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டிருந்தான். 

தலைகலைந்து நைட்டியுடன் இருந்தவள் மீண்டும் தன் தம்பிக்கு போன் போட்டாள். 

“என்ன.. கண்டுபிடிச்சிட்டியாடா?” 

“க்கா… விடிஞ்ச பிறகுதான்க்கா கண்டுபிடிக்கமுடியும். இப்ப நீங்க போய் படுங்க. காலையில் நான் பாத்துக்கிறேன். வீட்டுக்கு வரேன்” 

“இங்க உங்க மாமா போன் வந்ததில் இருந்து தூங்காம அங்கையும் இங்கையும் நடந்துகிட்டிருக்காரு நீ என்னடான்னா அசால்டா இப்படிச் சொல்ற” 

“புரியுதுக்கா. ஆனா, இப்பக் கண்டுபிடிக்க முடியாது, காலையிலதான் போன் ஆபிஸ் திறப்பாங்க. அப்பதான் கொடுத்துக் கண்டுபிடிக்கமுடியும்” என்று இழுத்தான். பேசிக்கொண்டிருக்கும்போதே போனை ‘கட்’ பண்ணி விட்டு போனை பெட்டில் எறிந்தாள்.

கட்டிலில் இருந்த போன் இரண்டு மூன்று முறை ஒலித்தது. அதை முறைத்துப் பார்த்தவள் போனை எடுக்கவேயில்லை. கடிகாரத்தில் காலை 5 மணியாகியிருந்த நேரம் கதிர் வீட்டிற்கே வந்திருந்தான். 

வீட்டின் வெளியே நின்று் கொண்டு காலிங்பெல்லை தொடர்ந்து அழுத்திக்கொண்டேயிருந்தான். ஆனால், யாரும் வந்து திறப்பதாகத் தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து ரேவதி வந்து கதவை திறந்தாள் 

கதிரின் அக்கா தான் ரேவதி. அவளின் கணவன் சரவணன் பணத்தை வட்டிக்குவிட்டு பிழைப்பு நடத்துபவன். வட்டியை வாங்குவதில் சரவணனை விடவும் ரேவதியும் கதிரும் மும்முரமாகயிருப்பார்கள். சரவணனின் அப்பா காலத்திலிருந்து இந்த வட்டிக்குவிடும் வேலை நடந்துவருகிறது. இப்பொழுது அடுக்குமாடி வீடும், காருமென வசதியாக இருக்கிறார்கள். ‘என்ன இருந்து என்ன பலன். கொழந்த குட்டியில்லையே. எல்லாம் வட்டிக்குவிட்ட பாவம். குட்டிபோடாம பாத்துகிதுனு’ ஊரே பேசினாலும், அதையெல்லாம் காதில் போட்டுக்காமல் இவர்கள் பாட்டுக்கு வேலையைப் பார்ப்பார்கள். வாயைத் திறந்தாலே பச்சை பச்சையாக பேசுவார்கள். பாவ தட்சணையைப் பார்க்கவே மாட்டார்கள். இவர்களைப் பற்றி தெரிந்த உள்ளூர் வாசிகள் இவர்களிடம் எதையுமே வச்சிக்கமாட்டார்கள். வெளியூரைச் சார்ந்தவர்கள் தான் இவர்களிடம் வந்து மாட்டிக்கொள்வார்கள். இப்படி அசலும் வட்டியும் சேர்த்து வாங்கும் போது கைகலப்பும் நிறையமுறை ஏற்படும். அப்படியிருந்தும் இவர்களிடம் யாரும் வம்பிற்கு வந்ததில்லை. அதுவும் தைரியமாக போன் பண்ணி வசைபாடும் அளவிற்கு என்பதே இவர்களின் பதட்டத்திற்கு முழுக்காரணம். 

உங்களையும் என்னையும் போலவே இப்போது அவர்களும் யோசித்துக் கொண்டிருந்தார்கள். கதிர் இப்போது ஒவ்வொரு பெயராகச் சொல்லிக்கொண்டிருந்தான்.

“மாமா, போன மாசம் ஆம்பூர்ல அடிச்சமே அந்த சதீஷ்..அவனா இருக்குமா..?”

“அவனுக்கு அந்த அளவுக்கு எல்லாம் தைரியமில்லடா….. அவனொரு தொட நடுங்கி”

“அப்படியே இருந்தாலும் நம்மகிட்ட வச்சிக்கமாட்டான்” என்றவனை மறுத்து, “இல்லைங்க.. நான்கூட கேள்விப் பட்டேன் அந்த சதீஷைப்பத்தி. நம்ப மாரிமுத்த சித்தப்பாகிட்ட பத்து ரூபா வாங்கிட்டு கொடுக்க கொஞ்சம் லேட்டாகியிருக்கு அவரும் ஆளவிட்டு மெரட்டியிருக்காரு அப்புறம் தினமும் ஆளவிட்டு திட்ட விட்டிருக்காரு..

பிறகு பணம் முழுசா கொடுத்த பிறகு அந்த சதீஷு என்ன பண்ணியிருக்கான் தெரியுமா?”

“என்னடி பண்ணான்..?”

“மாரிமுத்து சித்தப்பா வீட்டுக்கு தினமும் காலையில போய் இவன் திட்டியிருக்கான். கேட்டதுக்கு நீங்க கொடுத்த பணத்தையும் கொடுத்துட்டேன். உங்களோட வசவும் என்கிட்டயே இருக்கு. அதையும் கொடுத்திடறனு சொல்லியிருக்கான். தினமும் திட்டியிருக்கான், சித்தப்பா அவன் மேல கைவச்சும் அவன் அத விடாம செஞ்சிருக்கான்”

“எல்லாம் சரிடி.. ஆனா, நம்பதான் திட்டவேயில்லயே”

“ஆனா, அவனதாம் நம்ம அடிச்சமே” 

“அப்ப அவனுக்கு போனப்போடு” என்றான் சரவணன். கதிர் போனை எடுத்து சதீஷின் நம்பரைத் தேடி போட்டபோது அவனுடைய போன் ‘சுவிட்ச் ஆஃப்’ என்று சொல்லியதைக் கேட்டு சந்தேகமடைந்த சரவணன், “அவனை இங்க தூக்கி வந்து வச்சு செய்வோம்” என்று சொல்லிக் கொண்டே எழுந்த சமயத்தில், வாசலில் காலிங்பெல்லின் சத்தம் கேட்டது. ரேவதி வெளியேபோய் கதவைத் திறந்தாள். அங்கே சதீஷ் வந்திருந்தான். 

சதீஷைப் பார்த்த ரேவதி, “என்னாங்க..” என்று சத்தம் எழுப்பி சரவணனை அழைத்ததின் தொனி கடுமையாக இருந்ததால், விரைந்து வந்த கதிரும் சரவணனும் வந்த வேகத்தில் சதீஷுன் சட்டையப் பிடித்து உள்ளே இழுத்தார்கள். 

அப்போது சரவணனின் போன் ஒலித்திருந்தது. சதீஷை அடிக்கும் பரபரப்பில் போனை எடுப்பதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டது. ட்ரூ காலரில் அந்த நம்பரைப் போட்டு பார்க்கையில் “மயிறு கண்டுபிடிடா நாயே” என்று வந்தது.

******

phycojai@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button