சிறுகதைகள்

டொப் டொப் – மணி.கோ

சிறுகதை | வாசகசாலை

அலைந்து திரியும் மார்க்கெட்டிங் வேலை, மதிய நேரப் பசி……. அகோரப் பசியில் பைக் ஓட்டி வந்தவனுக்கு “5ஸ்டார் சிக்கன்” கடை கண்ணில் பட்டது. ஏதாவது மாயமா? இல்ல பைக் கைப்பிடியில் பெண்ட் ஏதும் இருந்ததா? தெரியல. பைக் தானாகவே அந்தப் பக்கம் இழுத்துட்டுப் போயிடுச்சு….. சாப்பிடலாம்னு நிறுத்திய பின்தான் தேதி நினைவுக்கு வந்தது…. அன்று தேதி இருபத்தி ஒன்பது.

தேதி நினைவுக்கு வந்ததும்தான் பேங்க் பாலன்ஸ் நினைவுக்கு வந்தது”  ரூபாய் : முட்டை முட்டை புள்ளி எட்டு முட்டை.” அதன் பிறகுதான் பையில் இருந்த கடைசி 130 ரூபாயில் 100 ரூபாய்க்கு பைக்குக்குச் சரக்கு வாங்கி ஊற்றியது நினைவுக்கு வந்தது……(ஓ புரிஞ்சிடுச்சு அதுனாலதான் பைக் ஒரு பக்கமா இழுக்குதா).

அப்புறமா தான் இந்த ‘பேடிஎம், அமேசான் பே’ல்லாம் நினைவுக்கு வந்தன. அதுல ஏதாவது இருக்கா பாப்போம் னு அப்ளிகேஷனைத் திறந்து பார்த்தேன் “அம்மஞ்சல்லி”  தேறலை…..

சரினு “கூகுள்பே” திறந்து பாத்தேன்…. ரெண்டு சுரண்டுர கார்ட் திறக்காமலே இருந்தன…..

ஆஹா ‘ஒளி தெரிகிறது, ஒளி தெரிகிறது’னு ‘ஈ’னு ஈ.பி.எஸ் மாதிரி க்யூட் ஆ  இளிச்சுகிட்டே சொரண்டுனேன்….

முதல் கார்டில்  “பெட்டர்லக் நெக்ஸ்ட் டைம்” னு வந்தது.

கடுமையான பசி ஆனா அது பார்த்தப்போ எனக்கு பெருசா கோபம் வரல, அதான் இனொன்னு இருக்கேனு 2வது கார்டை சொரண்டுனேன். 2வது கார்ட் சொரண்டுனப்போ 5 ரூபாய் தான் கிடைச்சுது. கடுமையான பசி இருந்தாலும் அப்போவும் கூட எனக்குக் கோபம் வரல…. ஆனா அந்த “5 ரூபாய் கிடைச்சத நண்பர்கள் கிட்ட சொல்லுங்க” (“டெல் யுவர் பிரெண்ட்ஸ்”)னு ஒரு வரி படிச்சத்தும்  தான் மனசுல இதான் தோணிச்சு….

“லேய் சுந்தர்பிச்ச….நீ லாம் பண்ணி முட்டி தாம்ல ச்சாவ போற”

சரி வேற வழி இல்லை…..30 ரூபாய் இருக்கு இன்னைக்கு மதிய சாப்பாடு டீ யும் பிஸ்க்ட்டும் தானா?

ஆனா என் பைக்தான் பாவம், பார்க் செஞ்ச அப்புறமா தலையைத் திருப்பி அந்த 5 ஸ்டார் சிக்கன் கடயவே வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு இருந்துச்சு….

பைக் பார்க் செஞ்சிட்டு எதிர்ல பார்த்தேன்….

“கங்கா டீ ஸ்டால்” ஆனா அங்க ஏன் இவ்வளவு கூட்டமா இருக்கு?

டீ ஒரு வேளை நல்லா இருக்குமோ?

இல்ல ஒரு வேளை நிக்கிற எல்லாவனும் மாச கடைசில காசு இல்லாம மதிய சாப்படுக்குப் பதிலாக  டீ குடிக்கவே வந்துட்டானுங்களா?

நம்ம பொருளாதாரம்தான் மந்த நிலைல இருக்குனு பார்த்தா, நாடோட பொருளாதாரமே மந்தமாதான் இருக்கும் போலனு மனசுக்குள்ள சொல்லிகிட்டே ரோடு தாண்ட தயாரானேன்.

ரோடு தாண்ட தயாரானபோதுதான் கவனிச்சேன் தூரத்துல 2 பொண்ணுங்க அந்த கங்கா டீ கடை இருந்த அதே ரோட்டில் ஓரமாக நடந்து வந்துட்டு இருக்காங்க……நானும் பப்பரக்கானு அவங்கள பார்த்துட்டே ரோடு தாண்ட ஒவ்வொரு நடையா எடுத்து வெச்சேன்.

ஒரு பெண் சிகப்பு நிற புடவை, இன்னொரு பெண் மஞ்சள் நிற சுடிதார். பார்ப்பதற்குப் புடவை அணிந்த பெண் கொஞ்சம் உயரம், புஷ்டியான உடல், தோளில் ஒரு தோள்பை, சுடிதார் அணிந்த பெண் ஒல்லியான உருவம், கொஞ்சம் கம்மியான உயரம்.

“அம்மா, பொண்ணாக இருக்குமோ?”

இல்லை இல்லை தூரத்தில் பார்த்துலாம் அப்படிச் சொல்ல முடியாது……

ஒரு வேளை அக்கா தங்கையாக இருக்குமோ?

தூரத்திலேயே தெரிகிறது அந்தப் பெண் அவ்வளவு நேர்த்தியாக அழகாகப்  புடவை அணிந்து இருக்கும் முறையைப் பார்க்கும்போது கண்டிப்பாக அது ஒரு வயதான பெண்மணியாகத்தான் இருக்கணும்னு மனது சொல்லியது….

அதற்குள் நான் பாதி ரோட்டை அடைந்திருந்தேன்…..அந்தப் பெண்களும் கொஞ்சம் முன்னேறி வந்திருந்தார்கள்…

இப்போது அந்தச் சுடிதார் அணிந்த பெண் கொஞ்சம் தூரத்தில் அழகாகத் தெரிந்தாள்…

அந்தச் சேலை அணிந்த பெண்மணியும், சுடிதார் அணிந்த பெண்ணும் பேசிக்கொண்டே கங்கா டீ ஸ்டால்க்குப் பக்கத்தில் வரவும் நானும் ரோட்டைத் தாண்டி கங்கா டீ ஸ்டாலுக்குப் போகவும் சரியாக இருந்தது….

அந்த 2 பெண்களுமே கங்கா டீ ஸ்டாலில் நின்றுவிட்டார்கள்…..நான் வெளியில் கிடந்த சிறிய நாற்காலியில் உட்கார நினைக்கும்போதுதான் அந்த இருவரையும் பக்கத்தில் பார்த்தேன்…..

 

2 பேருமே திருநங்கைகள்……. அதில் அந்தச் சுடிதார் அணிந்தவளைப் பார்க்கும்போது அவள் நிஜமாகவே திருநங்கைதானானு சந்தேகமே வந்துடுச்சு. அவ்வளவு அழகான பெண் போலவே இருந்தாள். எந்தப் பெண்ணும் இவ்வளவு நேர்த்தியாகச் சேலை உடுத்தியோ, சுடிதார் அணிந்தோ நான் பார்த்ததே இல்லை…அவளை என்னவோ மறுபடி திரும்பிப் பார்க்கத் தோன்றியது.  இருந்தாலும் ஒரு பயம் மனசுக்குள் ஓரமா இருக்கவே செய்தது.

 

பயத்திற்குக் காரணம் அவர்களைப் பார்த்ததும் என் பழைய சில அனுபவங்கள் மண்டைக்குள் ரிவைண்ட் அடித்ததுதான்.…..

 

ஐதராபாத்க்கு ரயில் பயணம் செய்கையில் ஒருநாள் “டொப் டொப்” என்ற கைதட்டல் சத்தம் கேட்டுக் கண் விழித்துப் பார்த்தேன்….. குடு மாமா….னு ஒரு குரல் பக்கத்து இருக்கையில் கேட்டது…. நான்  யோசித்து சுதாரிக்கும் முன்னாலேயே என் பக்கம் இன்னொருவளின் குரல் குடு குடு….. “குடு மாமானு உரிமையோட கேட்டு வாங்குரா”….னு பதட்டத்தில் அரக்க பறக்க ஒரு 10 ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொடுத்தேன்.

“குடு மாமா” னு எவ்வளவு உரிமையோட கேட்டாளோ அவளவு உரிமையோட என் தலையில் கைவைத்து “நல்லா இருப்ப ராசா”னு சொன்னது அந்தக் குரல்.

ஆனாலும் அவர்கள் அடுத்த இருக்கைக்குப் போனதும்தான் ஏனோ ஒரு நிம்மதி பெருமூச்சு விடமுடிந்தது.

 

அந்த முதல்  நினைவின் பாதிப்பினால் எப்போதும் நான் ரயில் பயணங்களில் 10 ரூபாய் வகையில் சில்லறை வாங்கி வைப்பது வழக்கம். ஆனால், இந்த சம்பவம் நடந்த அன்று ரயிலைக் கடைசி நேரத்தில் தான் பிடித்தேன். அதனால் 10 ரூபாய் வகையில் சில்லறை வாங்க முடியல..

மறுபடியும் அதே டொப் டொப் சத்தம்…. என் பக்கத்தில் வந்த ஒருத்தி என் முகத்திற்கு முன்னால் கைகளால் டொப் டொப் என்றாள்.

“சில்லறை சுத்தமா இல்லமா 100 ரூபாய் தான் இருக்கு” என்றேன்.

“பரவால்லயா குடு நான் சில்லறை தரேன்.” என்ற வார்த்தையை நம்பி 100 ரூபாய் கொடுத்து “10 ரூபாய் எடுத்துக்கோங்க” என்றேன். என்ன நினைத்தாளோ தெரியல ஒரு 50 ரூபாயை என் கையில் திணித்துவிட்டு என் தலை மேல் கை வைத்துவிட்டு வேகமாக நடந்து சென்றுவிட்டாள்.

 

இப்படி எல்லாம் நடந்தால் யாருக்குத்தான் கோபம் வராது சொல்லுங்க. மாச கடைசியில் சோத்துக்கு அலந்து ரோடு ரோடாகத் திரியும் ஒருவனுக்கு 50 ரூபாய் எவ்வளவு பெரிய தொகையாக இருந்திருக்கும்….?

 

இதனாலேயே கோபத்தில் அடுத்த முறை யாருக்கும் காசு கொடுக்கக் கூடாதுனு முடிவு பண்ணுனேன்….ஆனாலும் 10 ரூபாய் வகையில் சில்லரை  வாங்கியே வைத்திருந்தேன். எல்லாம் ஒரு பயம் தான்….

“கண் முழிச்சு பார்த்தா தான காசு கேட்ப….இப்ப பார் என் ராஜ தந்திரத்தை”

இந்த முறையும் அதே “டொப் டொப்”.

கண்களை மூடிட்டு என் இருக்கையில் படுத்துப் போர்வையை முகத்தோடு போர்த்திக்கொண்டேன்….

முகத்திற்கு முன்னால் ரொம்ப அருகில் வந்து ‘டொப் டொப்’ என்ற சத்தம் என் காதில் கணீர் என்றே கேட்டது…

ஆனாலும் நான் எழும்பவே இல்லையே….

ஒரு 1 நிமிடம் இருக்கும் டொப் டொப் சத்தம் நின்றுவிட்டது. என் போர்வைக்கு வெளியே ஏதோ நிழலாடியது போல உணரவே  சரி எழும்புவோம்னு மெதுவா போர்வையைச் சிறிது விலக்கிப் பார்த்தேன். அவள் என் இருக்கையில் என் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாள். அவள் என் போர்வையை விலக்க கையை நீட்டவும் நான் போர்வையை விலக்கவும் சரியாக இருந்திருக்கிறது….. அவள் முகத்தை அவ்வளவு பக்கத்தில் பார்த்ததும் அரண்டு, புரண்டு போர்வையை முழுவதுமாக  விலக்கி விட்டு எழுந்து உட்கார்ந்தேன். 10 ரூபாயைப் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தேன்… காசை வாங்கிய பிறகு ஏதோ வெற்றி பெற்ற மாதிரி ஒரு நமட்டு சிரிப்புடன் ‘டொப் டொப்’ என்று அடுத்த இருக்கைக்கு நகர்ந்தாள்.

 

பசி சுருக்கென்று  வயிற்றில் ஒரு குத்துக் குத்தியதும்தான் சுய நினைவு வந்தது…..சரி டீ ஆடர் பண்ணுவோம்.

சின்னதா ஒரு பிளாஷ்பேக் யோசிக்கிறதுக்குள்ள டீ வாங்குறதுக்குக் கொஞ்சம் பேர் கூடிட்டானுங்க…

சரி என்ன பண்றது, அந்த 30 ரூபாயில் 10 ரூபாயை எடுத்து டீக்குக் கொடுக்குறதுக்காகவே சட்டை பையில் தயாராக வைத்தேன். கூட்டத்தில் நானும் “அண்ணா ஒரு டீ”னு சொல்லி எல்லோருக்கும் பின்னாடி இருந்து கத்தினேன்… கண்டுக்கவே இல்ல அந்த டீ மாஸ்டர். சரி கொஞ்சம் கூட்டம் கலையட்டும்னு பொறுமையா கூட்டத்துக்கு உள்ளேயே நின்னேன். நான் கூட்டம் கலைந்தது கூட தெரியாமல் பிரெட் ஆம்லெட் என்னென்ன வகைனு ஒட்டி இருந்த ஒரு பேப்பரை மெய்மறந்து சப்புகொட்டி வாசிச்சுட்டு இருந்தேன். ….அந்த நேரத்தில் பின்னாடி திடீர்னு ஒரு கம கம வாசனை, யாரோ வித்யாசமாக ரொம்ப பக்கத்தில் உரசிக்கொண்டு நிற்பதாக  மனதுக்குத் தோன்றவே திரும்பிப் பார்த்தேன். அந்தப் புடவை அணிந்த திருநங்கை என் பின்னால் நின்றிருந்தாள் எனக்குப் பகீரென்றது….

பதட்டத்தில் நான் பையில் டீக்கு வைத்திருந்த அந்த 10 ரூபாயை எடுத்து அவளிடம் நீட்டினேன்.

அவள் நிமிர்ந்து பார்த்தாள்,

அவள் என்னை, என் கண்ணை அலட்சியமாக  ஒரு பார்வை பார்த்து விட்டுச் சொன்னாள்:

“நான் கேட்கவே இல்லையே.”

அந்த அலட்சிய பார்வை நான் வாழ்க்கையில் நிறைய இடத்தில் சந்தித்திருக்கிறேன்… முதல் காதலைச் சொல்லும்போது, வேலை தேடி அலையும்போது, வேலை இல்லாமல் இருந்த என்னைச் சொந்தபந்தம் பார்க்கும்போது, இப்படி எந்த அலட்சியபார்வையும் என்னைப் பாதிக்கவில்லை. ஆனால் அவளுடைய அலட்சியப் பார்வை என்னை ரொம்ப பாதித்தது.

“அண்ணா 2 டீ மீடியமா” என்று சொல்லி விட்டுக் காத்திருப்பதற்காக டீ ஸ்டாலின் வெளியே இருந்த வட்ட மேசை பக்கத்தில் இருக்கையில் அவளுடன் வந்த அவள் தோழி அருகே போய் உட்கார்ந்தாள்…

“நான் கேட்கவே இல்லயே” என்ற அந்த வார்த்தை என்னை என்னவோ செய்தது,

“சே அவமான படுத்திட்டோமோ?”

“அவங்க மனசு எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கும்”

“அவங்க கேட்காமலேயே எடுத்து அவங்க கிட்ட காசு எதுக்குக் கொடுக்கூற, பைத்தியமாடா நீ” னு உள்ளுக்குள்ள ஒரு குரல் கேட்டுட்டே இருந்துச்சு.

எனக்கான டீ வந்தது வாங்கிவிட்டு மனதுக்குள்  ஒரு முடிவு செய்தவனாய் அந்த இரு திருநங்கைகளும் உட்கார்ந்து இருக்கும் இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன்.

முகத்தைப் பார்க்காமல் குனிந்து டீயைப் பார்த்தவாறே “ஐயாம் எக்ஸ்ட்ரீட்ம்லி சாரி” என்றேன்…

“பரவா இல்ல, எங்களுக்கு இது ஒன்னும் முதல் தடவ இல்லை” என்று வலியோடு ஒரு புன்னகை செய்தாள்.

“இல்லை எனக்கு இதுக்கு முன்னாடி அனுபவம் அப்படி, அதும் இல்லாம பின்னால் வேற நின்னீங்களா அதன் பதடத்துல அப்படி……”

“பரவால்ல சார்”

அவர்களுக்கான டீ வந்தது.

டீ எடுத்து வந்தவனிடம் “தம்பி 4 பிஸ்கட் மட்டும் குடுப்பா” என்றேன். “இதோ சார்” என்றவாறே கிளம்பினான்.

“நீங்க வேலை பாக்குறீங்களா?”

“ஆமா ஒலிம்பியா டெக் பார்க்ல வேலை.”

“ஆனா இந்த மதிய நேரத்துல இங்க? ஆஃபீஸ் போகலையா?”

“இல்ல இங்க பக்கத்துலதான் வீடு இப்போ மதிய ஷிப்ட் அதான் இப்போ கிளம்புறோம்”

“ஓ கம்பெனி பெயர் என்ன?

“7 ஸ்டார் இன்போடெக்ல டெக்னிக்கல் சப்போர்ட் ல இருக்கேன்”

இந்த வார்த்தையைச்  சொல்லும்போது அவள் முகத்தில் ஏதோ ஒரு பெருமை, பாருடா முட்டாள் உன்னை விட நல்ல நிலமையில் இருக்கிறேன்…. எனக்கும் ஒரு வாழ்க்கை இருக்குனு சொல்ற மாதிரியான ஒரு பெருமை.

“இது ஒரு நல்ல இனிசியேடிவ் அண்ட் அகேயின் ஐயாம் எக்ஸ்ட்ரீட்ம்லி சாரி” என்றேன்….

“அட ஏன் சார் மறுபடியும்” என்றாள் சிரித்துக்கொண்டே…..

இதற்குள் எங்கள் இருவருக்குமான பில்லை அந்த டீ கடை பையன் கொண்டு வந்தான்.

“சார் உங்களுக்கு 30 ரூபாய்”

அவர்களைப் பார்த்து “உங்களுக்கு 20 ரூபாய்” என்றான்.

என் பையில் தடவினேன்…..

10 ரூபாய் சட்டையிலும், 20 ரூபாய் பணப் பையிலும் இருந்து எடுத்துக் கொடுத்தேன்….

பணத்தை வாங்கிய அந்தப் பையன் சொன்னான்.

“சார் இந்த 10 ரூபாய் நோட்டுல, ஒட்டு போட்டு இருக்கு அதும் இல்லாம இங்க் பட்டு இருக்கு இது செல்லாது” என்றான்.

தலைவர் சொன்ன மாதிரி  “எனக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு”.

ஆம் அவளிடம் நான் நீட்டிய அதே 10 ரூபாய்தான் இப்போது செல்லாக் காசு ஆகிக் கழுத்தை நெறிக்கிறது.

வேறு வழி இல்லை நானும் பணம் இருப்பது மாதிரி பணப் பையை எடுத்து ஒவ்வொரு இடமாகச் சல்லடை போட்டுத் தேடினேன்….எங்கேயாவது எப்போவாவது மறந்து ஒரு 10 ரூபாய் வைச்சு இருக்க மாட்டேனா…என்ற நப்பாசையில் முழுக்கத் தேடினேன்……

“சாருக்கும் சேர்த்து எடுத்துட்டு மீதி குடுங்க”என்றாள் .

அந்தக் குரல் கேட்டு பணப் பையில் பணம் தேடுவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். அவள் என்னைப் பார்த்துச் சிறு புன்னகை செய்து கொண்டே 500 ரூபாய் நோட்டை அந்தப் பையனிடம் நீட்டியிருந்தாள்.

மீதியை வாங்கிக்கொண்டு அவள் திரும்பிக் கூடப் பார்க்காமல் ‘முன்னோக்கி’ நடந்து போனாள்.

அவளைப் பார்த்துக்கொண்டே ‘பின்னால்’ தூரத்தில் வந்த ஒரு சத்தத்தைக் காதை கூர்மையாக்கிக் கவனித்தேன்….

“டொப் டொப்”………………..

***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close