சிறுகதைகள்

தாய்க்கோழி – சோ.சுப்புராஜ்

சிறுகதை | வாசகசாலை

சுகந்திக்கு உளவியல் சிக்கல் ஏதும் இருக்குமோ? என்று சாமிநாதனுக்குச் சந்தேகமாக இருந்தது. அவளின் சமீபத்திய நடவடிக்கைகள் அவனை அப்படி யோசிக்க வைத்தன. இப்பொழுதெல்லாம் அவர்களின் ஒரே மகள் தீபிகாவின் விஷயத்தில் அவள் மிகமிகப் பதட்டமாக நடந்து கொள்வது சாமிநாதனை வேதனையூட்டுவதாகவும் சில சமயங்களில் பயமுறுத்துவதாகவும் இருந்தன.

சுகந்தியை மனநல மருத்துவரிடம் அழைத்துப் போய்க் காண்பிக்கலாமா? என்று ஒரு கணம் யோசித்து, அந்த எண்ணத்தை உடனேயே கைவிட்டான் சாமிநாதன். ஏனென்றால், அவளிடம் அப்படி ஒரு எண்ணத்தை வெளிப்படுத்தினால் உடனேயே, ’எனக்கென்ன நான் நார்மலாத் தான் இருக்கேன், நீதான் அப்பப்ப எக்ஸண்ட்ரிக்கா பிகேவ் பண்ணிக்கிட்டு இருக்குற. அதனால நீ வேணுமின்னா போய்ப் பாரு….!’ என்று ருத்ரதாண்டவம் ஆடி விடுவாள்.

தீபிகா வளர வளர சுகந்தி இயல்பிற்கு மாறாக அதீதமாய் ரியாக்ட் பண்ணத் தொடங்கினாள். ஒரு தாய்க்கோழியின் தவிப்பும் பதட்டமும் அவளின் நடவடிக்கைகளில் வெளிப்பட்டன. என்றாலும் தாய்க்கோழி பருந்துகளிடமிருந்து தன் குஞ்சுகளைக் காக்க முனைவதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், கிளிகளைப் பார்த்தும் பயந்து பதறினால் அதை எப்படி எடுத்துக் கொள்வது?

தீபிகா அவர்களுக்கு ஒரே பெண். அதுவும் கல்யாணமாகி நீண்ட நாட்களுக்குப் பிறகு பிறந்தவள். ஆரம்ப நாட்களில் குழந்தையின் மீது அன்பைப் பொழிந்து, அதீதமாய்ச் செல்லங் கொஞ்சியவள்தான் சுகந்தியும். ஆனால், தீபிகா வளர வளர அவளை, அளவுக்கு அதிகமாகக் கண்காணிக்கத் தொடங்கினாள் சுகந்தி.

தீபிகாவின் வயதொத்தவர்களுடன் வெளியில் போய் விளையாடக் கூட அனுமதிப்பதில்லை. சாமிநாதன்தான் மனைவியுடன் சண்டை போட்டு குழந்தையை வெளியில் போய் விளையாடிவிட்டு வர அனுமதிப்பான். அப்பொழுதும் தீபிகா சிறு பிள்ளைகளுடன் வீதியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது சுகந்தி அவளின் வீட்டு வாசலிலேயே உட்கார்ந்து தீபிகாவைக் கவனித்துக் கொண்டிருப்பாள்.

சரி ஒரே குழந்தை; செல்லமாய் வளர்க்கப்பட்டதால் கொஞ்சம் முரடாகவும் வயதுக்கு மீறிய வளர்ச்சியுடனும் இருக்கிறாள். அதனால் விளையாடும்போது அவளுக்கு அடிகிடிபட்டு ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகிவிடுமோ என்று மனைவி பயப்படுவதாக நினைத்துக் கொண்டு அவள் குழந்தையைக் கண்காணிப்பதைப் பெரிது படுத்தவில்லை சாமிநாதன்.

ஒரு விடுமுறை தினத்தில் தீபிகாவை வெளியில் விளையாட அனுப்பிவிட்டு ஆச்சர்யமாக வீட்டுக்குள் வந்து அவசர வேலை ஏதோ செய்து கொண்டிருந்தாள் சுகந்தி. சாமிநாதனும் மடிக்கணிணியில் மூழ்கி இருந்தான். வேலை மும்முரத்தில் இருவருமே நேரம் கடந்ததைக் கவனிக்கவில்லை. சுகந்தி வேலை முடிந்து வாசலுக்குப் போனபோது, வெளியில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் யாரையுமே  காணவில்லை.

சுகந்தி வீதிக்கு ஓடிப்போய் தீபிகாவின் பெயரைச் சொல்லிச் சத்தமிடத் தொடங்கினாள். சாமிநாதனும் எழுந்து போனான். அவர்களின் எதிர் வீட்டிலிருந்து சுந்தரி வெளியில் வந்து, “தீபிகா சுமதி வீட்டுல விளையாண்டுக்கிட்டு இருக்கிறாள் ஆண்ட்டி….” என்று சொல்லிப் போனாள்.

இருவரும் சுமதி வீட்டிற்குப் போய்க் கதவைத் தட்டவும் சுமதியும் அவளின் அம்மாவும் வெளியில் வந்தார்கள். “தீபிகா மாடியில எங்க தாத்தா கூட உட்கார்ந்து பெரிய மனுஷி மாதிரிப் பேசிக்கிட்டு இருக்கா ஆண்ட்டி…..” என்று சொன்ன சுமதி மாடியேறிப் போய் தீபிகாவை அழைத்துக் கொண்டு வந்தாள்.

தீபிகாவைக் கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்த சுகந்தி, “வெளையாண்டு முடிச்சுட்டா வீட்டுக்கு வராம, அடுத்த வீட்டுல போயி ஏண்டி இருக்கிற……”  என்று எகிறியவள், “மாடியில யாரெல்லாம் இருக்காங்கடி…..” என்றாள்.

”பாட்டி அவங்க பொண்ணப் பார்த்துட்டு வர்றதுக்கு ஊருக்குப் போயிருக்காங்களாம். அதனால தாத்தா மட்டும்தாம்மா இருக்கார்; நல்லா கதை சொல்றாரும்மா….” என்று தீபிகா கண்களை அகலமாக விரித்து ஆர்வமாகச் சொல்லவும் ரௌத்ரமாகி விட்டாள் சுகந்தி.

”பொட்டப் புள்ளைக்குக் கெழவன் கூட அதுவும் தனியா என்னடி பேச்சு….!” என்று சொல்லி தீபிகாவை அடிபின்னி எடுத்து விட்டாள். சாமிநாதன் இருவருக்கும் குறுக்கே விழுந்து மேலும் குழந்தையின் மீது அடி விழாமல் தடுத்தான். குழந்தை அழுது கொண்டே அவனுடன் ஒண்டிக் கொண்டது.

”ஒரு வயதான மனுஷன்கிட்ட உட்கார்ந்து கதை கேட்குறது அவ்வளவு பெரிய தப்பா? அதுக்குப் போய்க் குழந்தைய இப்படியா கண்ணு மண்ணு தெரியாத அளவுக்கு அடிப்ப. நீ பொம்பளையா இல்ல ராட்சசியா….?” என்று சாமிநாதனும் மனைவியிடம் சண்டை போட்டான்.

”ஊருல உலகத்துல நடக்குறது எதுவும் உங்களுக்குத் தெரியுமா தெரியாதா? வயசான மனுஷங்ககிட்டதான் பொம்பளைப் பிள்ளைங்க ரொம்ப ரொம்ப ஜாக்கரதையா இருக்கனும்…..!”

”அவ குழந்தைம்மா…..”

”அதான் பிரச்னையே! உங்க மரமண்டைக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைக்கிறதுன்னே தெரியல. குழந்தைகளுக்குத்தான் தங்களுக்கு என்ன நடக்குதுன்னே புரியிறதில்ல. அதனால அவங்களத்தான் ஈஸியா சீரழிக்கிறாங்க இந்தக் காலத்துல. பேப்பர்லயும் டீவியிலயும் தினம் நாறுதே, படிக்கிறதில்லையா….?”

”அதுக்காக எல்லாத்தையுமே சந்தேகப்பட்டா சமூகத்துல எப்படித்தாம்மா வாழ்றது. குழந்தையை வீட்டுக்குள்ளயே அடைச்சு வச்சிருந்தீன்னா அது எப்படி தன்னியல்பா வளரும்…..?”

”என்ன செய்றது? எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குமின்னு யாருக்கும் தெரியாது. அதனால சகலத்தையும் சந்தேகப்பட்டுத் தான் ஆகனும். பொட்டப் புள்ளைய எப்படி வளர்க்கனும்னு எனக்குத் தெரியும். நீங்களெல்லாம் இதுல தலையிடாதீங்க….” என்று கோபமாய்ச் சொன்ன சுகந்தி அதற்கு மேல் பேசப் பிரியப்பாடாமல் மாடி அறையில் போய்ப் படுத்துக் கொண்டாள்.

சாமிநாதன் எப்போதும் போல் கீழறையிலேயே படுத்துக் கொள்ள, தீபிகாவும் அவனுடனேயே படுத்துக் கொண்டாள். கொஞ்ச நேரத்தில் மாடியிலிருந்து இறங்கி வந்த சுகந்தி மகளை மாடிக்கு வரும்படி அழைக்க அவள், “போ நான் உன்கூட கா. அப்பா கூடவே படுத்துக்குறேன்…..” என்று முரண்டு பிடித்தாள்.

”மறுபடியும் அடிபடுவ தீபு. கேர்ள்ஸ், பாய்ஸ் கூடயெல்லாம் படுக்கக்கூடாது. பேசாம மாடியில அம்மா கூட வந்து படுத்துக்கோ….” என்றாள் கோபமாய்.

”இவர் ஒண்ணும் பாய்ஸ் இல்ல; என்னோட செல்ல அப்பா; நான் அவர் கூடத்தான் படுத்துப்பேன்….” என்று பிடிவாதம் பிடித்தாள் தீபிகாவும்.

”நீ மாடியில போய்ப் படுத்துத் தூங்கு சுகந்தி. அவ தூங்குனதும் நானே தூக்கிக் கொண்டு வந்து உன்கூடப் போடுறேன்….” என்றான் சாமிநாதன்.

”அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். இப்பவே நீங்களும் மாடிக்கு வாங்க. எல்லோரும் மாடியிலயே போய்ப் படுத்துக்கலாம்…..” என்று சொல்லி மூவரும் மாடி அறையில் போய்ப் படுத்துக் கொண்டார்கள்.

சுகந்தி பேசிய விதம் தீபிகா சாமிநாதனிடம் கூடத் தனித்து இருப்பதை விரும்பாத தோரணையில் இருந்தது. சாமிநாதனின் மனதிலும் அது சுருக்கென்று தைத்தாலும் அப்போது அவன் அதைப் பெரிது படுத்தவில்லை.

சாமிநாதன் – சுகந்தி இருவருமே வேலைக்குப் போவதால் தீபிகா பிறந்ததும் சாமிநாதன் கிராமத்திற்குப் போய்த் தூரத்துச் சொந்தத்தில் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து வீட்டோடு வேலைக்கு வைத்திருந்தான். ஆனால், சுகந்திக்கும் அந்தப் பென்ணிற்கும் ஒத்துப் போகவில்லை.

மேலும், அந்தப் பென்ணின் கணவர் அவ்வப்போது இங்கு வந்து தங்கிவிட்டுப் போவதையும் அவர் தீபிகாவுடன் கொஞ்சி விளையாடுவதையும் சுகந்தியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தீபிகாவை நர்சரி பள்ளியில் சேர்த்த கையோடு, அந்தப் பெண்ணைக் கிராமத்திற்குத் திருப்பி அனுப்பி வைத்து விட்டாள்.

அதற்கப்புறம் பலரிடமும் சொல்லி வைத்து விசாரித்து, தீபீகாவைச் சேர்த்த பள்ளிக்கு அருகிலேயே வசிக்கும் மீனாட்சி என்னும் பெண்ணைச் சாமிநாதன் வேலைக்கு ஏற்பாடு பண்ணினார்.

அவர்களின் வீட்டில் மீனாட்சியும் அவளுடைய கணவனும் மட்டும் தான். அவர்களுக்குக் கல்யாணமாகி ஏழெட்டு வருஷங்களாகவே குழந்தை இல்லை என்பதால் அவர்களும் தீபிகாவைத் தங்களின் குழந்தையைப் போலவே பார்த்துக் கொண்டார்கள்.

சாமிநாதனும் சுகந்தியும் வேலைக்குக் கிளம்பும்போது தீபிகாவை மீனாட்சியின் வீட்டில் விட்டுவிட்டுப் போய் விடுவார்கள். மீனாட்சிதான் தீபிகாவைக் குளிக்க வைத்து, சாப்பாடு ஊட்டி பள்ளியில் கொண்டு போய் விட்டு, பள்ளி முடிந்ததும் அழைத்துக் கொண்டு போய் வீட்டில் வைத்துக் கொள்வாள். குழந்தையும் அவர்களுடன் மிகவும் ஒட்டுதலாக வளர்ந்தாள்.

தினசரி சுகந்தி வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் மீனாட்சிக்கு போன் பண்ணுவாள். மீனாட்சி தீபிகாவை அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு பாத்திரம் துலக்குவது, வீட்டைப் பெருக்கித் துடைப்பது மாதிரியான வீட்டு வேலைகளையும் செய்து கொடுத்துவிட்டுப் போவாள்.

இது நான்கு வருடங்களுக்கு மேலாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் தொடர்ந்தது. ஒருநாள் சுகந்தி போன் பண்ணிய பின்பு மீனாட்சியின் கணவர் தான் தீபிகாவை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தார். மீனாட்சி வரவில்லையா? என்று சுகந்தி அவரிடம் விசாரித்தபோது, “பக்கத்து ஊரில சொந்தக்காரங்க ஒருத்தர் இறந்து போயிட்டாங்க. மீனாட்சி காலையிலேயே கிளம்பிப் போயிருச்சு மேடம்…” என்றார்.

“நீங்க சாவு விசாரிக்கப் போகலையா?” என்று சுகந்தி அக்கறையாகவே விசாரித்தாள்.

”நானும் போயிட்டால் பாப்பாவை யாரு ஸ்கூல்லருந்து அழைச்சிட்டு வந்து பாத்துக்குவாங்க. குழந்தைய உங்ககிட்ட ஒப்படைச்சிட்டு இனிமேதான் போகணும்….” என்று சொல்லிவிட்டுப் போனார்.

அவர் போனபின்பு தீபிகாவைக் கேள்விகளால் துளைத்து எடுத்து விட்டாள் சுகந்தி. “ஸ்கூலுல இருந்து வந்ததுலருந்து என்னவெல்லாம் பண்ணுனன்னு வரிசையாகச் சொல்லுடி……”

”என்னம்மா சொல்லனும். முதல்ல யூனிஃபார்ம மாத்தீட்டு சாதாரண ட்ரெஸ் போட்டுக்குவேன்…..” என்று குழந்தை ஆரம்பிக்கவும், “யாரு ட்ரெஸ் மாத்திவுடுவா….?” இடைமறித்தாள் சுகந்தி.

”என்னம்மா லூசு மாதிரி கேள்வி கேட்குற?”

”வாய்க் கொளுப்பு ஜாஸ்தி ஆயிடுச்சுடி உனக்கு. கேட்குற கேளிவிகளுக்கு ஒழுங்கா பதில் சொல்லுடி. இல்லைன்னா சாத்து பூஜை பண்ணீடுவேன்…..!”

”ஆண்ட்டி இருந்தால் அவங்க மாத்தி உடுவாங்க; அவங்க எங்கயாச்சும் வெளியில போயிருந்தா மாமா தான் மாத்திவுடுவார்……” என்று குழந்தை சொல்லவும், “மாமா வேலைக்குப் போயிருக்க மாட்டாரா?” என்றாள் சுகந்தி.

”அவரு வேலை பார்த்த கம்பெனிய மூடிட்டாங்களாம்மா. ஒரு மாசத்துக்கு மேல வீட்டுலதான் இருக்கார். இப்பல்லாம் பெரும்பாலும் அவரு தான் என்னை ஸ்கூலுல இருந்து கூட்டிக்கிட்டு வந்து ட்ரெஸ் மாத்திவுட்டு ஏதாவது சாப்பிடக் குடுப்பார்……” தீபிகா சொன்னதைக் கேட்டதும் சுகந்திக்கு உடம்பெல்லாம் திகுதிகுவெனத் தீ எரிவது போலானது. ”ட்ரெஸ் மாத்திவுடுறப்ப மாமா எங்கயாச்சும் தொடுவாரா….?” கண்களில் கனலுடன் கேட்டாள் சுகந்தி.

அம்மாவின் முகத்தைப் பார்த்ததும் பயந்து போன தீபிகா “அதெல்லாம் இல்லம்மா. நீதான் எனக்கு முன்னமே குட் டச், பேட் டச் பத்தி சொல்லிக் குடுத்துருக்கியே! மாமா குட் பாய்ம்மா. பேட் டச் எதுவும் பண்ண மாட்டார்ம்மா…..” என்றாள் நடுங்கியபடி.

இலேசாய் சமாதானமாகி  “சரி அப்புறம் என்ன பண்ணுவ….?” என்றாள் சுகந்தி.

”தூங்கிருவேன்ம்மா……”

”யார் கூடத் தூங்குவ. நம்ம வீட்ல நீ தனியாவே தூங்க மாட்டீயே….!”

”ஆண்ட்டி வீட்ல இருந்தால் அவங்களும் என்கூடப் படுத்துக்குவாங்க. அவங்க வெளியில போயிருந்தால் தனியாத்தான் தூங்குவேன். பகல்ல எல்லாம் தனியாத் தூங்க பயப்பட மாட்டேன்ம்மா….”

”நீ தூங்குறப்ப மாமா என்ன பண்ணுவார்….?”

”அவரு எப்பப் பார்த்தாலும் டீ.வி. பார்த்துக்கிட்டுத் தான் இருப்பார். ஆண்ட்டிகூட சத்தம் போடுவாங்க..”

சாமிநாதன் வேலை முடிந்து வந்ததும் அவனிடம் புகார் பண்ணினாள் சுகந்தி. “ மீனாட்சி பண்ணுன காரியத்தைப் பாருங்க. அவள நம்பி புள்ளைய பார்த்துக்கச் சொன்னா அவ புருஷன்கிட்ட புள்ளையப் பார்த்துக்கச் சொல்லிட்டு ஊரு மேயப் போயிருக்கா….”

”என்ன வார்த்தைம்மா பேசுற? நம்ம புள்ளைய யாரு பார்த்துக்கிட்டா என்ன? அந்த மனுஷனுக்கு இப்ப வேலை இல்ல; அதான் மீனாட்சி இன்னும் ரெண்டு வீடுகளுக்கு வேலைக்குப் போறாங்க….”

”அவருக்கு வேலை இல்லைன்றது உங்களுக்கும் தெரியுமா? எல்லோரும் சேர்ந்துக்கிட்டுத் தான் என்னை ஏமாத்தி இருக்கீங்களா?”

”இதுல உன்னை ஏமாத்துறதுக்கு என்னம்மா இருக்கு. அந்த மனுஷனோட கம்பெனிய மூடுனதும் எனக்குப் போன் பண்ணி ஏதாவது வேலைக்கு ஏற்பாடு பண்ண முடியுமான்னு கேட்டார். நானும் விசாரிச்சுச் சொல்றதா சொல்லி இருக்கேன்……”

”இதைப் பத்தி நீங்களும் என்கிட்ட சொல்லல; அந்த மீனாட்சியும் வாயே தொறக்கல. நீங்க தீபிகாவப் பார்த்துக்கிறதுக்கு வேற ஏற்பாடு பண்ணுங்க…..” என்று சீறினாள்.

”நல்ல மனுஷங்கம்மா. அவங்கள மாதிரி பொறுப்பா யாரும் பார்த்துக்க மாட்டாங்க சுகந்தி. வீண் பிடிவாதம் பிடிக்காத….”

”அதெல்லாம் அவங்க இதுவரைக்கும் பார்த்துக்கிட்ட லட்சணம் போதும். என் புள்ளைய எந்த ஆம்புளையோட கண்காணிப்புலயும் விடமுடியாது…..” என்றாள் சுகந்தி தீர்மானமாக.

”ஆம்புள வாசனையே இல்லாத அல்லி ராஜ்ஜியத்துல தான் நீ நெனைக்கிறது சாத்தியம். அப்படிப்பட்ட ராஜியத்துக்கு நானெங்க போறது…” என்று சாமிநாதன் அலுத்துக் கொண்டாலும் பெண்களே நடத்தும் குழந்தைகள் பராமரிப்பு இல்லம் ஒன்றைத் தேடிக் கண்டடைந்தார். அவர்களின் மாதக் கட்டணம் தான் மலைக்க வைப்பதாய் இருந்தது. வேறு மார்க்கமில்லாததால் தீபிகாவை அவர்களின் பொறுப்பில் விட்டார்.

வெளி ஆண்களை விரோதியாய்ப் பார்த்த சுகந்தி சமீப நாட்களில் சாமிநாதனையும் அப்படியே பாவிக்கத் தொடங்கி தீபிகாவை அவனிடமும் நெருங்க விடாமல் தடுக்கவும் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அப்போதுதான் அவளுக்கு மனநோயாக இருக்குமோ? என்கிற சந்தேகமும் சாமிநாதனுக்கு முளைவிட்டது.

தீபிகாவிற்கு மிகவும் தாமதமாகத்தான் பேச்சு வந்தது. பேசத் தொடங்கியதுமே அவள் கேள்விகளின் நாயகியாக மாறத் தொடங்கி இருவரையும் கேள்விகளால் வதைக்கத் தொடங்கினாள். சுகந்தி ‘போடி உனக்கு வேற வேலை இல்ல….’ என்று அவளின் பதில் தெரியாத கேள்விகளை மழுப்பிப் புறக்கணித்தாள். ஆனால், சாமிநாதன் ஓரளவிற்குக் குழந்தைக்கு ஈடு கொடுத்துப் பதில் சொல்வான்.

தீபிகா குழந்தையாக இருக்கும்போது சாமிநாதனின் வெற்று மார்பில்தான் படுத்துத் தூங்குவாள். அவன் மார்பில் அடர்ந்து கிடக்கும் முடிக்கற்றைகளை விரல்களால் உருட்டியபடி கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டுதான் தூங்குவாள். அவள் ஆழ்ந்த உறக்கத்திற்குப் போனபின்புதான் அவளைச் சாமிநாதன் மார்பிலிருந்து கீழே இறக்கிப் படுக்கையில் போடுவான்.

”உன் மார்ல மட்டும் ஏம்ப்பா அவ்வளவு முடி இருக்கு. அம்மா மார்ல முடியே இல்ல….” என்று ஒருமுறை கேட்டாள் தீபிகா. ”பாய்ஸுக்குத் தான் அங்க முடி முளைக்கும். கேர்ள்ஸுக்கெல்லாம் முடி முளைக்காதுடா…..” என்றான் சாமிநாதன்.

”ஏன்ப்பா அப்படி? கடவுள் எப்படிப்பா அவ்வளவு கரெக்டா பாய்ஸுக்கு மட்டும் மார்ல முடி முளைக்க வைக்கிறார்….” அவளின் அடுத்த கேள்வி. “பாய்ஸ் பொறக்கும் போதே அவங்க உடம்புல ஒரு ஹார்மோன் சுரக்குறது மாதிரி வச்சுப் படைச்சிடுவார் கடவுள். அதனால அவங்க பெரியவங்களா ஆன பின்னாடி முடி முளைக்கும்….”

”ஹார்மோன்னா என்னப்பா, அது எப்படி இருக்கும். உன் உடம்புல இருக்குற ஹார்மோனை எனக்குக் காட்டுறியா….?” வரிசையாகக் கேள்விகள்.  “அதெல்லாம் இப்ப உனக்குப் புரியாதுடா செல்லம். நீயும் பெரிய பொண்ணா மாறுனதுக்கு அப்புறம் நீயே பாடங்கள்ல படிச்சுத் தெரிஞ்சுப்ப…..” என்று கூற ஓரளவிற்குச் சமாதானமாகித் தூங்கிப் போவாள்.

மிகச்சில நாட்களிலேயே “அதென்ன பொட்டப் புள்ளைய அப்படி மார்ல போட்டுத் தூங்கப் பண்றது? அப்புறம் அதுவே பழக்கமாயிடும்….” என்று சுகந்தி ஆட்சேபிக்கத் தொடங்கினாள். ஆனால், படுக்கையில் தூங்கப் போட்டால் தீபிகா  தூங்க முடியாது என்று அழுது அடம் பிடித்தாள்.

புசுபுசுவென்று பெரிய பொம்மை ஒன்று வாங்கி அதன் நூலைத் தீபிகாவின் விரல்களில் கொடுத்து அவள் அதை உருட்டிக் கொண்டே தூங்கப் பழக்கினார்கள். இப்பொழுதும் அவள் அப்படித்தான் தூங்குகிறாள்.

தீபிகாவிற்கு மூன்று வயதிருக்கும் அப்போது, ஒரு சாயங்காலம் மூவரும் வெளியில் போய்விட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் ஒரு சிறுவன் சிறுநீரால் கோலம் போட்டுக் கொண்டிருந்தான். அதைப் பார்த்துவிட்டு தீபிகா, “அவனுக்கு மட்டும் ஏன்ப்பா உச்சா போற எடத்துல சின்னதா இன்னொரு விரல் முளைச்சிருக்கு. எனக்கு இல்ல….” என்று கேட்டாள்.

சாமிநாதனுக்குப் பதில் சொல்வதற்கே சங்கடமாக இருந்தது. “பாய்ஸையும் கேர்ள்ஸையும் வித்தியாசப்படுத்திப் பார்க்குறதுக்குத்தான் அந்த விரல்….” என்றான். சுகந்தி மகளின் முதுகில் ஓங்கி அறைந்து, “என்னடி கேள்வி இது. பாய்ஸ் உச்சா போறதையெல்லாமா பார்ப்ப….?” என்று கடிந்து கொண்டாள்.

இப்படி அந்தரங்கமாய்க் கேள்விகள் கேட்டு அப்பனிடம் அந்நியோன்யமாய் வளர்ந்த மகள் சீக்கிரம் தன்னியல்பிலேயே விலகிப் போகத் தொடங்கினாள்.

அன்றொருநாள் குளித்துவிட்டு எப்போதும் போல் இயல்பாய் அம்மணமாய் ஓடி வந்தவள், அறையில் அமர்ந்திருந்த அப்பனின் இருப்பைத் திடீரென்று பூதாகரமாய் உணர்ந்து திகைத்து, ‘ப்ளீஸ்ப்பா கண்ணை மூடிக்கப்பா….’ என்று செல்லமாய்ச் சிணுங்கிய கணத்தில் தீபிகாவிடம் அறியாச் சிறுமியிலிருந்த அறியாமை விலகிப் போயிற்று…..!

அப்பன் தேய்த்து விட ஆனந்தமாய்க் குளித்து மகிழ்ந்தவள் மொட்டெனச் சிறுமுலை முகிழ்க்கத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் ’ஏனப்பா எனக்கு அங்கெயெல்லாம் இலேசாய் வலிக்கிறது….?’ என்று குழந்தமையுடனான கேள்விகளைக் குதூகலமாய் அடுக்கியவள், ஆடைகளை மாற்றும் அறையிலிருந்து அப்பனைத் துரத்திய தினத்தில் அவளிடமிருந்த சிறுமியும் விடைபெற்றுப் போனாள் அவசரமாய் ….!

சாமிநாதனும் கொஞ்சம் தூரத்திலிருந்தபடியே செல்லமகள் வளர்வதை அவதானித்து ரசித்துக் கொண்டிருந்தான். ஆனால், சுகந்தியின் நடவடிக்கைகள் அப்பனிடமிருந்து மகளை இன்னும் தூரம் தூரமாய் விலக்குவதாய் இருந்தன.

சாமிநாதன் எப்போதுமே வேலை முடிந்து வீட்டிற்கு வர இரவு ஏழரை எட்டு மணிக்கு மேலாகி விடும்.  வந்ததும் குளித்து, சாப்பிட்டுத் தூங்கத்தான் நேரமிருக்கும். சில நாட்களில் அவன் வருவதற்கு முன்பாகவே தீபிகா தூங்கிப் போய்விடுவாள். அதனால் அவன் விடுமுறை தினங்களில் மகளிடம் அதிகநேரம் செலவழிக்க விரும்புவான். ஆனால், சுகந்தி அப்பனையும் மகளையும் சேர்ந்து உட்கார்ந்து பேசக்கூட விடமாட்டாள்.

”தீபிகா, அப்பாவைத் தொந்தரவு பண்ணாதே, ஹோம் ஒர்க் ஏதாச்சும் இருந்தா பண்ணு; இல்லைன்னா புக்க எடுத்துட்டு மாடிக்குப் போய்ப் படி….” என்று விரட்டி விடுவாள்.

மாடி அறை என்பது அம்மாவிற்கும் மகளுக்குமான தனி அறை. அதற்குள் சாமிநாதன் தப்பித் தவறிக்கூட நுழையவே கூடாது என்று கடுமையான சட்டத்தை அமல்படுத்தி வைத்திருக்கிறாள் சுகந்தி.

தீபிகாவிற்குச் சாமிநாதனின் மடியில் படுத்துக் கொண்டு கதைகேட்க மிகவும் பிடிக்கும். அதைக்கூட அனுமதிக்க மாட்டாள் சுகந்தி. பார்த்த மாத்திரத்திலேயே “பாய்ஸ் மடியில எல்லாம் கேர்ள்ஸ் படுக்கக்கூடாது….” என்று எழுப்பி விட்டுவிடுவாள்.

“ஏன்ம்மா என்னையும் குழந்தையையும் இப்படி வதைக்கிற….?” என்று சாமிநாதன் கோபித்துக் கொண்டால், “அவள் ஒன்னும் குழந்தையில்ல; பதினோறு வயசாகப் போகுது. எப்பன்னாலும் உட்கார்ந்துடுவா.  குறிப்பிட்ட வயசுக்கு மேல அப்பன் – மகள் உறவெல்லாம் சீராட்டிக்கிட்டு இருக்கக் கூடாது…..” என்று எரிந்து விழுவாள். அப்பனுக்கும் மகளுக்கும் இடையில் சுகந்தி மானசீகமாய் ஒரு சுவரை உருவாக்கி விட்டிருந்தாள்.

ஒருநாள் சாமிநாதனுக்கு அலுவலகத்தில் வேலை எதுவும் இல்லை என்பதால் சீக்கிரமே வீட்டிற்கு வந்து விட்டான். ஆனால், சுகந்தி அப்போது வீடு திரும்பியிருக்கவில்லை.

அவன் சுகந்திக்குப் போன் பண்ணியபோது, அவளுடைய அலுவலகத்தில் பெரிய ஆபிஸர் யாருக்கோ பிரிவு உபச்சார விழா நடக்க இருப்பதாகவும், அதனால் விழா முடிந்து அவள் வீட்டிற்கு வரத் தாமதமாகும் என்றும் கூறினாள். மட்டுமல்லாது நீ, தீபிகாவைப் போய் வீட்டிற்கு அழைத்து வரத் தேவையில்லை; நானே காப்பகத்திலிருந்து குழந்தையை அழைத்து வந்து கொள்கிறேன் என்றும் கண்டிப்பான குரலில் சொன்னாள்.

ஆனால், சாமிநாதன் மனைவி சொன்னதைப் பொருட்படுத்தாமல், காப்பகத்திற்குப் போய்த் தீபிகாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டான்.

சாமிநாதனுக்குச் சில சமயங்களில் அலுப்பில் உடம்பெல்லாம் வலிக்கும். அந்தச் சமயங்களில் குப்புறப் படுத்துக் கொண்டு தீபிகாவை அவன் மேல் ஏறி மெதுவாய் மிதிக்கச் சொல்வான். சின்ன பூப்பாதங்கள் அவன்மீது மெல்ல நடக்கும்போது அலுப்பெல்லாம் பறந்து அலாதியான சுகமாக இருக்கும்.

அன்றைக்கும் அப்படித்தான் தீபிகா அவன் முதுகின்மீது மெதுவாய் மிதித்துக் கொண்டிருந்தாள். அப்போது வீட்டிற்கு வந்த சுகந்தி சாமிநாதனைக் கன்னாப் பின்னாவென்று திட்டத் தொடங்கி விட்டாள். தீபிகாவிடமும் “அப்பன் என்ன செய்யச் சொன்னாலும் அசடு மாதிரி செய்வியாடி…..!” என்று எகிறினாள்.

“பொட்டப் புள்ளைய மிதிக்க விட்டு அப்படி என்ன உடம்பு சுகம் வேண்டிக் கிடக்கு உங்களுக்கு? இன்னைக்கு மிதிக்கச் சொல்லி சுகம் அனுபவிப்பீங்க; நாளைக்கு…?” என்ற அவளின் கேள்வியே ஆபாசமாக இருக்கவும், கோபம் தலைக்கேறி மனைவியைப் பளாரென்று அறைந்து விட்டான் சாமிநாதன்.

அப்புறம் கொஞ்ச நாட்களுக்கு இருவருக்கும் பேச்சு வார்த்தையே இல்லாமல் முறிந்து கிடந்தது. தீபிகாதான் இருவருக்கும் இடையில் கிடந்து அல்லாடினாள். அந்தச் சமயத்தில் குழந்தையைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

அலுவலக நண்பர் ஒருத்தரின் மூலம் சைக்கியாரிஸ்ட் ஜெயராணியை அவளின் கிளினிக்கில் போய்ப் பார்த்து மனைவியின் அதீத நடவடிக்கைகள் பற்றிச் சொல்லி ஆலோசணை கேட்டான் சாமிநாதன்.

அவள் “உங்க மனைவிக்கு உளவியல் சிக்கல் ஏதும் இருப்பதாகத் தெரியலையே! தினம் தினம் குழந்தைகள் பலாத்காரம் பண்ணப்படுகிற செய்திகள் நிறையவே நம் காதிலும் கண்ணிலும் வந்து விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. சிறு குழந்தைகளை வைத்திருக்கும் எந்த அம்மாவாலும் அவற்றை எல்லாம் சாதாரணமாகக் கடந்து விட முடியாது இல்லையா….?” என்றாள்.

“ஆனால் பெத்த அப்பனையே சந்தேகக் கண்ணோடத்தில் பார்க்கிறது மனநோய் இல்லையா? மேடம்….”

“அவங்க உள் மனசுல ஆறாத காயம் எதுவும் இருக்கலாம். நான் பேசிப் பார்க்கிறேன்….” என்று சொல்லிச் சாமிநாதனை அனுப்பி வைத்த ஜெயராணி, சுகந்தியை அவளின் அலுவலகத்தில் போய்ச் சந்தித்து, “பணிசெய்யும் இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் சீண்டல்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினாள்.

ஜெயராணி அடிக்கடி சுகந்தியின் அலுவலகத்திற்குப் போய் அவளுடன் நட்பை வளர்த்துக் கொண்டு பல விஷயங்கள் பேசத் தொடங்கிய பின்பு, சுகந்தி மெதுமெதுவாய் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் பற்றிச் சொன்னதைக் கேட்டதும் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஜெயராணி சாமிநாதனைக் கிளினிக்கிற்கு வரவழைத்துப் பேசினாள்.

“உங்க மனைவி, மகளை அதீதமாய்க் கண்காணிப்பதற்கும் உங்களையே மகள்கிட்ட நெருங்கிப் பழகவிடாம இருக்கிறதுக்குமான காரணம் தெரிஞ்சிருச்சு ஸார். ஆனா அதைத் தெரிஞ்சுக்கிட்டு வீட்டுக்குப் போனதும், நீங்க உங்க மனைவியை வெறுக்கவோ வித்தியாசமா நடத்துறதோ கூடாது. அதுக்கு உத்திரவாதம் கொடுத்தீங்கன்னா சொல்றேன்…” என்றாள்.

”பரவாயில்ல; சொல்லுங்க டாக்டர். என் மனைவியும் எனக்கு இன்னொரு குழந்தை மாதிரித்தான். எந்தச் சூழ்நிலையிலும் அவள நான் வெறுக்க மாட்டேன்……” என்றான் சாமிநாதன் மிகவும் நம்பிக்கையாக.

”இப்ப உங்க மகளோட வயசுல உங்க மனைவி இருந்தப்ப அவங்களுக்கும் பாலியல் பலாத்காரம் நடந்துருக்கு. பலாத்காரம் பண்ணுனது யார் தெரியுமா? அதிர்ச்சி ஆயிடாதீங்க உங்க மனிவியோட அப்பா…” டாக்டர் சொன்னதைக் கேட்டதும் சுளிரென்று இருந்தது சாமிநாதனுக்கு.

சாமிநாதனுக்கும், தன் மனைவிக்கு அவளின் சிறு வயதில் பாலியல் தொந்தரவு நிகழ்ந்திருக்கும்; அதனால்தான் தன்னுடைய மகளை அளவுக்கு அதிகமான கண்காணிப்பில் வைத்திருக்கிறாள் என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் அவளின் அப்பாவாலேயே அது நிகழ்ந்திருக்கும் என்று அவன் நினைத்தே பார்த்திருக்கவில்லை.

”பாலியல் உறவென்பதைப் பற்றி அதிகம் அறிந்திடாத வயதில் அது தப்பே இல்லை என்பது போலவும் அப்பனுக்கும் மகளுக்கும் இடையில் எல்லாக் குடும்பங்களிலும் அது சாதாரணமாக நடக்கக் கூடியதுதான் என்றும் உங்கள் மனைவியை நம்பவைத்து அவளைக் கையாண்டிருக்கிறார் அவளுடைய அப்பா என்கிற மிருகம். ஒரு கட்டத்தில் அது உங்கள் அத்தைக்குத் தெரிய வந்த பின்பு அவள் கணவனுடன் சண்டை போட்டுவிட்டு அம்மாவும் மகளும் வீட்டைவிட்டு வெளியேறி அவருடைய கண்ணில் படாத தூரத்திற்குப் போய் வாழ்ந்திருக்கிறார்கள்.

தனக்கு நேர்ந்தது தன்னுடைய மகளுக்கும் நேர்ந்து விடக்கூடாது என்பதால் தான் உங்களின் மனைவி அப்படி அதீதமாய் நடந்து கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் எந்தக் காலத்திலும் உங்கள் மனைவியின் அப்பாவைப் போன்றவர் இல்லை என்பதை உங்களின் நடவடிக்கைகளின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாய் உங்கள் மனைவிக்கு உணர்த்தி அவர்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அதற்காக உங்களின் மகளிடமிருந்து நீங்களே அதிகமாக விலகிப் போவது மாதிரிகூட நடிக்கலாம்….”

டாக்டர் சொன்னதைக் கேட்டதும் சாமிநாதனுக்கு முதல் முறையாக மனைவியின் மீது இரக்கம் சுரந்தது. இனிமேல் அவளை ஒரு கண்ணாடிப் பாத்திரம் மாதிரி கையாள வேண்டும் என்கிற முடிவோடு வீட்டிற்குப் போனான்.

தீபிகா ஓடிவந்து அப்பா என்று அவனைக் கட்டிப் பிடிக்கவும், ‘’நோ. பாய்ஸை எல்லாம் இப்படிக் கட்டிப் பிடிக்கக் கூடாது….” என்று சொல்லி மகளிடமிருந்து விலகினான் சாமிநாதன்.

”நீ ஒண்ணும் பாய்ஸ் இல்ல; என்னோட அப்பாவாக்கும்….” என்று சிணுங்கியபடி நெருங்கி வந்த மகளை “நோன்னா நோ தான். அப்பாவும் பாய்ஸ் தான்…..” அவன் மகளை மூர்க்கமாக தன்னிடமிருந்து விலக்கியதை ஆச்சர்யமாகவும் நம்பிக்கையாகவும் கண்கள் கசியப் பார்த்தாள் சுகந்தி.

***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. ‘தாய்க்கோழி’ வாழ்க்கையில் தனக்கு நேர்ந்த அவலம் மகளுக்கு வரக்கூடாது என்று ஆதித அக்கறையில் வளர்க்கும் தாயுள்ளம் கொண்ட கதை.அருமை.
    -தஞ்சிகுமார், வேலூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close