சிறுகதைகள்
Trending

சொதி – கோமதி ராஜன்

சிறுகதை | வாசகசாலை

ஆக்குப்பரையில் மதிய பந்திக்கான வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. திருவலகுத்தியில் ஒருவர் தேங்காயைத் துருவ, மற்றொருவர் துருவிய தேங்காய்ப் பூவிலிருந்து பால் எடுத்துக் கொண்டிருந்தார். கொழு கொழுவென வந்த முதல் தேங்காய்ப் பாலை ஒரு ஏனத்திலும், சற்றுத் தண்ணியாக வந்த இரண்டாம் பாலை வேறு ஏனத்திலும் ஊற்றி வைத்தார். பெண்கள் பேசிக்கொண்டே காய்களை நறுக்கிக் கொண்டிருந்தனர். சிறார்கள் அமர்ந்து பூண்டைப் பல்லுரித்துக் கொண்டும், இஞ்சியைத் தோலுரித்துக் கொண்டும் இருந்தனர். அடுப்பில் வெந்து கொண்டிருந்த பாசிப்பருப்பின் மணம் காற்றில் கமழ்ந்தது. வயதான மூதாட்டி எலுமிச்சைச் சாறு பிழிந்து கொண்டிருந்தாள். தவசுப்பிள்ளையை ஆளைக் காணவில்லை. சடையப்பன் அவ்வப்போது வந்து ஆக்குப்பரையை எட்டிப் பார்ப்பதும் போவதுமாக இருந்தான். மடத்தில் பெண் வீட்டார் சுற்றம் அறவேயில்லை. மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் நின்று கதையளந்து கொண்டிருந்தனர். பலகார பந்தியின் மிச்சத்தை மணமகனின் தந்தை வழி அத்தை, சட்டியில் அடைத்துக் கொண்டிருந்தாள். இராகவன் கூறிக் கொண்டிருந்த கதைகளை மனம் லயிக்காது கேட்டு உச்சுக் கொட்டிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்த மைதிலியின் கண்கள் தந்தையைத் தேடின. அங்குமிங்கும் பம்பரமாய்ச் சுழன்றுக் கொண்டிருந்த தம்பி சடையப்பன்தான் கண்ணில் பட்டான். இராகவன் எங்கோ எழுந்து செல்ல அவள் அங்கிருந்து நைசாக நழுவி தகப்பனைத் தேடிப் போனாள்.

நேற்று முகூர்த்தம் முடிந்து திருநீறு பூசும்போது அப்பாவைப் பார்த்தது. அதன்பின் இன்னும் பார்க்கவில்லை. நேற்றிரவு பந்தி முடிந்து, சுருள் கொடுக்கும்போதும்கூட தம்பியும், அத்தையும்தான் நின்றார்கள். அத்தையிடம் கேட்டதற்கு மாமாவும், அப்பாவும் மறுவீட்டுப் பந்தி சாமான் வாங்க காய்கறி மார்க்கெட்டுக்குப் போயிருப்பதாகச் சொன்னாள். காலை பலகார பந்தியிலும் அவர் கண்ணில் தென்படவில்லை. தாலி கட்டிய கையேடு யாரிடமும் ஆசி வாங்கவிடாது, காரில் ஏற்றி அவர்கள் வீட்டிற்குக் கடத்திக்கொண்டு போய்விட்டார்கள். கேட்டால் குலதெய்வத்தை வணங்கி ஆசி பெறாது வேறு எவரிடமும் ஆசி பெறக்கூடாது என மாமியார்  வியாக்கானம் கூறினாள். உடன்பிறந்தாள் அவள் பங்கிற்கு,

‘எந்த முகம் போனாலும் தங்க முகமாக

எடுத்த கைக்கு எலுமிச்சம் கனியாக

மண்ணைத் தொட்டாலும் பொன்னாக விளைந்து

அங்கு பேர் பட்டம் உங்கு சீர் சம்பத்தும் உண்டாகி

ஆண் போன பக்கம் அரசு பெற்று ஆட்சி செய்து

பெண் போன பக்கம் சகலமும் பெற்றுப் பெரிய குடியாகி

ஒரு வீட்டுக்கு ஆயிரம் வீடாகி

ஆயிரம் வீட்டுக்குத் தலைக்குடியாகிக்

கட்டிய மாங்கல்யம் காமாட்சி மாங்கல்யம் போல்

தாலிப்பாலும் எல்லா கீர்த்தியும் உண்டாகி

அண்ணனும் தம்பியும் மாமனும் மைத்துனனும்

கூட்டம் குறையாமல் கொண்ட பூ வாடாமல்

சகல சௌபாக்கியமும் பெற்று என்றும்

சிரஞ்சீவியாய் வாழ அருள்புரிவாய்

எங்கள் குலத் தாயே’

என ஒரு பாடல் பாடி, மீண்டும் பாடச் சொன்னாள். இவர்கள் தொந்தரவு  போதாதென்று மாமனார், “மருமகளே, ஆண்டாள் பாடுன தேவாரம், இல்ல அபிராமி பட்டர் பாடுன திருவாசகம் எதாவது படிமா” என்றார். மைதிலி அவரை எரிச்சலுடன் பார்க்க “என்னமா, உனக்கு தேவாரம், திருவாசகம் எல்லாம் தெரியாதா. உங்க அப்பா கோயில் பூசதான வைக்குறாரு” எனச்  சொல்ல, எல்லோரும் மொத்தமாகச் சிரித்தார்கள்.

சட்ரசம் பரிமாறும்போதும், நலுங்கு விளையாட்டின் போதும் கைபிடித்தவன் தன்னை ஏறிட்டுப் பார்க்காதது அவளுக்கு அச்சலாத்தியாக இருந்தது.

மண்டபம் முழுக்க சுற்றி வந்தவள் ஸ்டோர் ரூம் வாசலில் சேர் போட்டு உட்கார்ந்திருந்த கணேசன் அருகில் சென்றாள்.

“மாமா”

“வாமா மைதிலி”

“அப்பாவ எங்க காணல”

“அவுக தவசுப்பிள்ளையைப் பார்க்கப் போனாக”

“எங்க?”

“ஆக்குப்பரைக்குத்தான்”

“அங்கன இல்லையே”

“இல்லையா! வேற எங்க போயிருப்பாகனு தெரியிலேயே”

சொல்லிக்கொண்டே பார்க்க எதிர்திசையில் தவசுப்பிள்ளையும், சட்டநாதனும் வந்து கொண்டிருந்தார்கள்.

பூப்பெய்திய நாளில் பூசிக் கொண்ட அதே கன்னச் சிவப்பை  மூஞ்சியில் அப்பிக்கொண்டு வெட்கியபடியே நின்றாள்.

“எத்தான் மைதிலி ஒங்கள தேடிக்கிட்டு இருக்கா.”

“ஒரு நிமிசம் இருமா.”

“நான் சொன்னதை மனசுல வச்சுக்கிடுங்க” என்றார் தவசுப்பிள்ளையைப் பார்த்து.

“எல்லாம் நல்லபடியா நடக்கும். நீரு பொண்ணுகிட்ட பேசும்.”

“என்ன எல்லாரும் ஒண்ணா நின்னு மீட்டிங்கு போடுதீக போல.”

சத்தம் வந்த திசையில் மணமகனின் தாயார் நின்று கொண்டிருந்தாள்.

“ஒன்னும் இல்லமா. சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்.”

“தவசுப்பிள்ள, மொத பந்தி எப்ப ரெடியாகும்?”

“இன்னும் கால் மணி நேரத்துல ரெடியாகிடும்.”

“சொதியில திராட்சை போட்டு இருக்கீங்க இல்ல?”

“ஆமா.”

கணேசனும், சட்டநாதனும் ஒருவரையொருவர் பார்த்துக்  கொண்டனர்.

“தொட்டுக்க இஞ்சித் தொவையிலு,வேற என்ன வச்சிருக்கீக?”

“வேற என்னமா? இஞ்சித் தொவையிலும், உருளைக்கிழங்கு பொரியலும் தான்.”

“உருளைக்கிழங்கு சிப்ஸ் போடலையா?”

“சிப்ஸ் எதுக்கு. அதான் பொரியல் வைக்கிறோம்ல.”

“சிப்ஸ்-னா சின்னப் பிள்ளைகள்ல இருந்து பெரிய ஆள் வரைக்கும் எல்லாரும் சாப்பிடுவாங்க. அதான் பார்த்தேன்.”

தவசுப்பிள்ளை வெற்றிலை கறை படிந்த பற்களைக் காட்டியபடி தனது புன்முறுவலை அதற்குப் பதிலாக அளித்தார்.

“மைதிலி அப்பா”

“சம்மந்தி அம்மா”

“இனிமே சிப்ஸ் போட நேரங் கெடையாது. நீங்க யாரையாவது அனுப்பி சிப்ஸ் வாங்கிட்டு வரச் சொல்லுங்க. வா மைதிலி நாம போவோம்.”

மருமகளை அழைத்துக் கொண்டு போனாள்.

ஆக்குப்பரையில் இரண்டாம் பாலில் பாசிபருப்பும் காய்கறிகளும் கலந்து கொதிக்க  கட்டியான முதல் பாலை ஊற்றினார்கள்.

சடையப்பன் ஆக்குப்பரையில் நின்று கொள்வதாய்க் கூற, சட்டநாதன் தானே புறப்பட்டு வெளியே வந்தார். மண்டப வாசலில் கட்டியிருந்த வாழைக்குலையை ஆடு மாடுகள் இழுத்துக் கொண்டிருந்தன.

சட்டநாதனுக்குக் கோவில் பூசை தினத்தொழில். கோவில் பூசை என்றவுடன் அறநிலையத்துறை வருமானமும், மேற்படி வருமானமும் வருமென்று எண்ணலாகாது. அவர் பூசை செய்யும் கோவிலென்பது திருச்செந்தூர் தேவஸ்தானமோ,வனத்திருப்பதி சீனிவாசப்பெருமாள் கோவிலோ அல்ல. தக்கார் என எவரும் இலாத சிறு கோவில்கள். அன்றாடப் பணியென்பது ஒன்றாம் கேட் இசக்கியம்மன் கோயிலிலும், இரண்டாம் கேட் மங்கள விநாயகர் ஆலயத்திலும் மட்டுமே. மனிதர்களைப் போலவே கடவுள்களிலும் பாகுபாடு உண்டு என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. சிவன் கோவில் பாகம்பிரியாளுக்கு இருக்கும் மவுசு மேலூர் பத்திரகாளியம்மனுக்கு இருப்பதில்லை. உள்ளே கருவறையில் வீற்றிருக்கும் ஈசனுக்குக் கிடைக்கும் மாலையும் மரியாதையும்  வெளியில் நின்று காவல் காக்கும் வீரபத்ரனுக்குக் கிட்டுவதில்லை. கடவுள்களும் இவற்றை எல்லாம் கண்டுகொள்வதில்லை. அல்லது அவர்களுக்குக் கண்டு கொள்ள நேரம் இருப்பதில்லை. செவ்வாய், வெள்ளி மற்றும் விசேட நாட்களில் தட்டில் தட்சணை சில்லறைகளால் நிறையும்.

தாயில்லாப் பிள்ளையென மைதிலிக்கு இருபது வயதில் வரன் பார்க்கத் தொடங்கினார். கோவில் பூசை செய்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் குழந்தைகளை அவரால் சரிவரப் படிக்க வைக்க இயலவில்லை. பின் எங்கிருந்து மகளின் திருமணத்திற்கு வழி செய்வது. வயது ஏற, ஏற வரன் குறைந்து, கேட்கும் சவரன் கூடியது. ‘இருந்த பொண்ணுக்குத் தகுந்த மாப்பிள்ளை’ என்பதெல்லாம் வெறும் சொலவடை என்றாகிப் போனது. இருபத்தொன்பது வயதான முதிர்கன்னி மைதிலிக்கு, முப்பத்தொன்பது வயதே ஆன இளைஞன் இராகவன் வந்து சேர்ந்தான். பெண் பார்த்துவிட்டுச் சென்றவர்கள், பேசி முடிக்க வீட்டிற்கு வந்தார்கள்.

“எத்தனை பவுனு போடுவீங்க?”

“குறையில்லாம, என்னால இயன்றத செய்வேன்.”

“இப்படிச் சொன்னா எப்படி?” மாப்பிள்ளையின் அப்பா கேட்டார்.

“இருவது பவுனு நகை. இருவதாயிரம் ரொக்கம். கல்யாணத்த நீங்க முடிச்சு விடனும். ஒரு வருச கட்டு ஒழுங்காச் செய்யணும். சம்மதமுன்னா சொல்லுங்க உறுதி பண்ண நாள் பார்க்கலாம்”. மணமகனின் அம்மா சொன்னாள்.

“ரொக்கத்த இல்ல நகையைக் கொஞ்சம் குறைச்சிக்கிடுங்களேன்.”

“இது சரிபட்டு வராது. ஏங்க எழுந்திரிங்க.வேற எடம் பாப்போம்.”

“எம்மா கொஞ்சம் இருங்க.”

சட்டநாதனின் தங்கை முத்துலெட்சுமி அவர்களை ஆசுவாசப்படுத்தி அண்ணனை அழைத்துப் பேசினாள். தங்கையிடம் பேசிவிட்டு வந்த சட்டநாதன் “சரி. நீங்க கேட்ட படி எல்லாம் செய்யுறேன். ஆனா கல்யாணத்த நீங்க முடிச்சுக்கிடுங்க” என்று கூறினார்.

“கல்யாணத்த நாங்க முடிச்சுக்கிடுறோம். உங்களுக்கு அம்பது பத்திரிக்கைதான் தருவேன். மறுவீட்டுச் சாப்பாடு ஒங்க செலவு”

சட்டநாதன் சிந்தித்தார்.

“சரி இவ்வளவு யோசிக்கிறீங்க. காலையில பலகார பந்தி செலவு கூட நாங்க ஏத்துக்கிடுறோம். மதியம் சொதி சாப்பாடு செலவு மட்டும் நீங்க பார்த்துக்கிடுங்க.”

வேறு திக்குமில்லை. திசையுமில்லை. கையைப் பிசைந்தபடி அவர் ஒப்புக் கொண்டார்.

உருண்டு, பிரண்டு எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தார். ரொக்கமும், நகையும் அவரால் பெரட்ட இயன்றது. சொதி சாப்பாட்டிற்கான சாமான்களை எல்லாம் கடனுக்குத் தருவதாக சொன்னவர் கைவிரிக்க, தவசுப்பிள்ளைக்குக் கொடுக்க வைத்திருந்த பணத்தைக் கொண்டு அதனைச் சரி செய்தார்.

காலை முதலே காத்திருந்து சமயம் பார்த்து தவசுப்பிள்ளையிடம் விடயத்தைத் தெரிவித்தார்.

“ஒண்ணும் கவலபடாதீரும். எனக்கும் ரெண்டு பொம்பள பிள்ளைக இருக்குது. ஓமக்கு ரூவா எப்போ கிடைக்குதோ அப்போ தாரும்.”

தவசுப்பிள்ளை திருக்காவு சட்டநாதனை ஆற்றுப்படுத்தினார்.

வெயில் மெல்ல மெல்லப் பறந்து விரிந்து கறுத்து சிறுத்தது.

கையில் ஒரு கிலோ சிப்ஸ் பொட்டலத்துடன் மண்டபம் வந்தவரை, வாசலிலேயே வழிமறித்தான் சடையப்பன்.

“எங்க போனீக?”

“ஏம்ல, சிப்ஸ் வாங்க கடைக்குப் போனேன். இங்கன சத்திரம் பஸ் ஸ்டாப் கடையில இல்லைனு சொல்லிட்டான். பஸ்ஸ்டாண்டு கடைக்குப் போயி வாங்கிட்டு வாரேன். அதான் கொஞ்சம் லேட்டாயிட்டுது”

“உள்ள போய் பாருங்க.”

“என்னல?”

“போய் பந்தி போடுற எடத்த பாருங்க.”

வேகமாய் உள்ளே நுழைய, எள் விழ இடமிலாது ஆட்கள் பந்திக்கு வரிசையில் நிற்பதைப் பார்த்துத் திகைத்துப் போனார்.

சமாளித்து பந்தி பரிமாறும் இடத்திற்கு வந்தவரை தவசுப்பிள்ளை கைபிடித்து இழுத்துப் போனார்.

“மூணு பந்தி முடிஞ்சும் கூட்டம் குறையல. ஆளுக எக்கச்சக்கமா வாராக. இன்னும் மாப்பிள்ளை வீட்டு உருப்படி ஒண்ணு கூட சாப்பிடல.”

“இப்ப என்ன பண்ணுறது?”

“நான் ஏற்கனவே சொதியில தண்ணீய ஊத்திட்டேன். சோறும் வள்ளிசா காலியாகிடும் போல.”

“மைதிலி அப்பா”

கத்திக்கொண்டே மணமகனின் தாயும் உடன் அவள் கணவரும், மகளும் வந்தனர்.

“ஒங்க மனசுல என்ன நெனைச்சிட்டு இருக்கீக. மூணு பந்தி முழுசா முடியல சொதி தண்ணீயா ஓடுது. போதாக்குறைக்கு ஒமரு மகன் மண்டபத்து கேட் கதவ சாத்தி வந்தவங்கள திரும்பிப் போங்கன்னு சொல்லி அசிங்கப்படுத்துறான்”

“தெய்வானை கொஞ்சம் மெதுவா பேசு.”

“நீங்க சும்மா இருங்க” என வல்லென்று குரைத்தாள் கணவனைப் பார்த்து.

உள்ளே வந்த சடையப்பன் சொன்னான்.

“நீங்க செஞ்சது மட்டும் நியாயமா. எங்க கிட்ட நீங்க சொன்ன கணக்கு என்ன? இப்ப ஆளுக வந்த கணக்கு என்ன? பத்திரிக்கையக் குடுக்க சொன்னா வீடு வீடுக்கு நோட்டீஸ் மாதிரி வீசியிருக்கீக.”

“மரியாதையா பேசுல.”

“அப்படி என்ன இப்ப மரியாதை குறைச்சலா கேட்டுட்டேன்.”

“சடையப்பா பேசாம இரு.”

“நீங்க சும்மாகெடங்க அப்பா.”

சத்தம் கேட்டு மண்டபத்தில் எல்லாரும் கூடினார்கள். பந்திக்கு முந்திய கூட்டம் வாய் பொத்தி வேடிக்கை பார்த்தது.

வாய்ச்சண்டை வலுத்து, கைகலப்பு ஆகிவிடும் போலத் தெரிந்தது. தவசுப்பிள்ளை சுதாரித்துச் சண்டையை விலக்கினார். ஒருவரும் ஒத்துழைக்கவில்லை.

சடையப்பன் சீறினான். இராகவன் துள்ளினான். சட்டநாதன் கெஞ்சினார். மைதிலி மனதிற்குள் மருகி நின்றாள்.

“எம்மா நீ வாய மூடு. இந்த பாரு மைதிலி ஒன் பொறந்த வீட்ட இத்தோட தலை முழுகிட்டு எங்களோட வாராத இருந்தா வா. இல்ல அப்படியே போயிடு”

நாத்தனார் நரம்பற்ற நாவினால் நஞ்சை உமிழ்ந்தாள். மைதிலிக்கு அழுகை பீறிட்டு வந்தது.

“நான் ஒண்ணும் ஒங்ககூட வாழுறதுக்கோ ஒங்க அப்பா, அம்மா கூட வாழுறதுக்கோ வரல. நீங்க வாய மூடிட்டு நில்லுங்க. என்ன தொட்டு தாலி கட்டுன இவரு சொல்லட்டும் நான் கேட்டுக்கிறேன்.”

“ஏய் என்ன ஓவரா பேசுற. இந்தா நிக்குறானுங்களே ஒன் தும்பியும், ஓங்கொப்பனும் ஒழுங்கு மரியாதையா எங்க அம்மை காலுல விழுந்து மன்னிப்பு கேட்கனும். இல்ல, நீ இந்த சென்மத்துக்கும் என் கூட சேர்ந்து வாழ முடியாது. பாத்துக்க.”

இருள் இன்னும் முற்றும் முழுதுமாய் விலகவில்லை.                             உறக்கமற்றுக் கிடந்த சட்டநாதனைப் பேத்தியின் ‘வீல்’ என்ற அழுகை சத்தம் தன்னிலைக்குக் கொண்டு வந்தது.

“மைதிலி, பிள்ளை அழுகுது பாரு மா.”

தொட்டிலில் கிடந்த குழந்தையைக் கையில் தூக்கினார். மழலை அவரின் முகம் பார்த்து ரோஜா முகிழாய்ச் சிரித்தது.

“அதுக்குள்ள முழிச்சிட்டாளா. இங்க தாங்க. வயித்துக்குக் குடுக்கணும்.”

உறங்கி எழுந்தவள் பிள்ளையைக் கை நீட்டி வாங்கினாள்.

“மைதிலி”

“ம்”

“மைதிலி”

“சொல்லுங்கப்பா”

“நான் வேணுமுன்னா மாப்பிள்ளை வீட்ல இன்னொரு முறை  போய் பேசிப்  பாக்கட்டுமா அம்மா?”

அவள் பதிலேதும் கூறாது மகளின் பசியாற்ற முற்பட்டாள்.

***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close