சிறுகதைகள்
Trending

நிஜமாத்தான் சொன்னேன் ஆனந்தி- செல்வசாமியன்

பேக்கிங் செய்த சாம்பிள் பீஸ்களை பாண்டியன் சார் டேபிளில் கொண்டு போய் வைத்தோம். அவர் அதற்காகவே காத்திருந்தது போல அதை எடுத்துக் கொண்டு பையர் ஆபீஸிற்குப் புறப்பட்டார். நாங்கள் அவர் பின்னாடியே கார் வரைக்கும் நடந்தோம். காரில் ஏறி அமர்ந்தவர் எங்களைப் பார்த்து மெல்லிய புன்னகையுடன், “அப்ரூவ்டு கிடைச்சிடும்னு நெனைக்கிறேன்.. பாக்கலாம்..!” என்று காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினார். பாண்டியன் சாரின் வார்த்தைகளை விட அவரின் மெல்லிய புன்னகை இந்த ஆர்டர் கிடைத்துவிடும் என்று உறுதியாகச் சொன்னது. ஒரு நாளைக்கு ஐந்நூறு பனியன்களை மட்டுமே தயாரிக்கும் திறன் கொண்ட எங்கள் கம்பெனிக்கு ஏழாயிரம் பீஸ் என்பது குவியலான ஆர்டர்.

நாங்கள் லாட் ரூம் ஜன்னல் ஓரமாகக் கிடந்த கட்டிங் வேஸ்ட் மூட்டையின் மீது  அமர்ந்து கொண்டோம். நாங்கள் என்பது நான், கட்டிங் மாஸ்டர் ரவி, ஓவர்லாக் இன்சார்ஜ் சேகர், சிங்கர் மெஷின் டைலர் கோபால் ஆகியோரை. ஒரு ஆர்டருக்கும் அதன் அடுத்த ஆர்டருக்கும் இடையிலான வேலையில்லாத பொழுதுகளை, பஞ்சுமெத்தைப் போன்று இருக்கும் அதில் அமர்ந்துதான் வேடிக்கை பார்த்தும்.. புகைத்தும்.. கதைத்தும்.. கழிப்போம். இப்படியாகத் தொடர்ந்து ஒரு ஞாயிறையும் மூன்று வேலை நாட்களையும் கழித்திருந்தோம். சாம்பிள் பீஸ் தயாரிக்கும் போது, பாண்டியன் சார்இந்த ஆர்டரை பத்து நாட்களுக்குள் முடித்துத் தர முடியுமா..?” என்று கேட்கிறார்கள் என்றார். சேகர் அண்ணனும் ரவி அண்ணனும்டெய்லி நைட் ஷிப்ட் செஞ்சா முடிச்சிட்லாம்ங்க..” என்றார்கள். நைட் ஷிப்ட் என்ற வார்த்தையை அவர்கள் உச்சரித்தபோது அவர்களின் முகத்தில் நூல் தடிமனுக்கு ஒரு வெளிச்சக் கோடு தெரிந்தது. அதற்குக் காரணம், கூடுதலாக கிடைக்கும் ஊதியம். ஆனால், எனக்கு அப்படி அல்ல. ஒருநாளுக்கு எத்தனை மணி நேரம் வேலை செய்தாலும் ஒரே ஊதியம்தான். ஏனென்றால் நான் தொழிலாளி அல்ல பணியாளி. அதாவது கம்பெனி ஸ்டாஃப். இருந்தும் அவர்கள் நைட் ஷிப்ட் என்று சொன்னபோது என் முகத்தைப் பார்த்திருந்தால், அவர்களிடத்தில்  தெரிந்ததை விட அதிகமான பிரகாசத்தைப் பார்த்திருக்க முடியும். அதற்குக் காரணம், இரவு ஒரு மணிக்கு கம்பெனி கணக்கில் வாங்கித் தரப்படும் டீயும், தேங்காய் பன்னும்..! இன்னொரு காரணமும் இருக்கிறது, அது பாடல்கள் கேட்பதற்கான அனுமதி. அதுவும் எண்பதுகளின் மெலடிகளை கேட்டுக் கொண்டே வேலை செய்வதில் ஒரு அலாதி. அப்புறம் இவற்றையெல்லாம் விட இன்னொரு முக்கியமான காரணம் இருக்கிறது.. அது ஆனந்தி.! இரண்டு மணிக்கு ஷிப்ட் முடிந்ததும் அவள் வீடிருக்கும் தெரு வரைக்கும் நான்தான் வழித்துணையாய் போவேன். கம்பெனியில் இருந்து வெறும் எட்டு நிமிட நடை தூரம்தான். இருந்தும் யாருமில்லாத சாலை.. நள்ளிரவின் மெல்லிய குளிர்.. பின்னலாடைகளின் வாடை.. பேசிக்கொள்ளாத மௌனம்..  அந்த எட்டு நிமிடத்திற்காகவே நைட் ஷிப்ட்டுக்கு ஏங்குவேன்.

பேச்சுவாக்கில் ரவியண்ணன், “டேய் சேகரு, துணி வந்து இறங்கிட்டா பத்து நாளைக்கி நைட்டும் பகலும் பிசிறு கௌம்பும்.. நேரமே இருக்காது.. படத்துக்கு போயிட்டு வரலாமா..?” என்று கேட்டார். அவர்போகலாமே..” என்று உற்சாகமாய் சொல்ல, மூன்று பேரும் சிவன் தியேட்டருக்கு நடையைப் போட்டார்கள். நான் தனியாக அமர்ந்திருந்தேன். இப்படி யாருமில்லாத நேரங்களில் கம்பெனியின் ஒரு பாதிக் கதவை மூடிவிட்டு, நிலைப்படி ஓரமாக இருக்கும் கட்டிங் டேபிளின் கீழிருக்கும் அடிப்பலகையில் படுத்துக் கொள்வேன். டேபிளைச் சுற்றி முழுப்பாவாடை போன்று ஸ்கிரீன் தொங்கும். யாரேனும் உள்ளே வந்தால் தெரிந்து கொள்வதற்காக ஸ்கிரீனை சற்று விலக்கி வைத்திருப்பேன். தூக்கத்திற்கு தேவையான அளவு இருள் படர்ந்திருக்கும். தொழில் செய்கிற இடத்தில் தூங்கக்கூடாது என்று சொல்லப்பட்டதால் விழித்துக் கொண்டே படுத்திருந்தேன்

திறந்திருந்த ஒரு பாதி கதவின் வழியே யாருடைய நிழலோ உள்ளே நுழைந்ததுபின், என்ன நினைத்தோ அந்த நிழல் நிலை வாசலில் பாதி உள்ளேயும் பாதி வெளியேயுமாக தேங்கி நின்றது. நான்யாரது..?” என்று தலையை வெளியே நீட்டினேன். ஆனந்தி நின்று கொண்டிருந்தாள். அருகில் யாரும் இல்லாதபோது எங்களைச் சுற்றி பேசிக் கொள்ளாத அந்த மௌனம் உறைபனி போல சூழந்து கொண்டு பொழியத் தொடங்கி விடுகிறது. நான் டேபிளின் அடியில் இருந்து வெளியே வந்தேன். அவள் என்னைப் பார்க்க விரும்பாதது போல முதல் மாடிக்குச் செல்லும் படிக்கட்டைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். எங்களுக்குள் தனிப்பட்ட உரையாடலென்று எப்போதும் இருந்ததில்லை. வேலை நிமித்தமாக அவ்வப்போது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிக் கொள்வோம். அதனால் அவள்தான் கேட்டாள், “பாண்டியன் சார் இல்லையா..?” என்று. நான், “பையர் ஆபீஸுக்கு சாம்பிள் பீஸ் கொண்டு போயிருக்காரு..” என்றேன். மீண்டும் பனிப்பொழிவு. அவள், “அடுத்து எப்போது வேலை இருக்கும்..” என்று கேட்டுப் போகத்தான் வந்திருப்பாள் என்று நானாக நினைத்துக் கொண்டு, “சாம்பிள் ஓகே ஆயிடுச்சின்னா, இன்னிக்கே நைட்டே லாட் வந்து இறங்கிடும்னு சொன்னாங்க.. நாளைக்கு கட்டிங் பண்ண ஆரம்பிச்சாங்கனா, செக்கிங்க்கு பீஸ் வர ரெண்டு நாள் ஆகும்..” என்றேன். அவள், “நான் அதற்காக ஒன்றும் வரவில்லை..” என்பது போல நின்று கொண்டிருந்தாள். பின், தயக்கமாக என் பக்கம் திரும்பிஇருநூறு ரூபா பணம் கெடைக்குமா..?” என்றாள். நான் எதுவும் சொல்லாமல் பர்ஸில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தேன். வாங்கியவள் என்னைப் பார்க்காமல் திரும்பிப் போனாள். “தேங்க்ஸ்என்று சொல்லியிருப்பாள், எனக்குத்தான் அது கேட்கவில்லை.

ஆனந்தியின் முகத்தில் எப்போதும் மங்கலான ஒரு சோகம் படர்ந்திருக்கும். அந்த சோகம்தான் அவள் வந்திருந்ததற்கான காரணத்தை சரியாக கண்டுபிடிக்க விடாமல் தடுத்து விட்டது. ஆனந்தியை முதல்முறை பார்க்கும் போதே சட்டென அவளைப் பிடித்துப் போனதற்கு காரணம் அவள் முகத்தில் தெரிந்த துடைக்க முடியாத அந்த சோகம்தான். அந்த சோகத்தை அவள் சிரிக்கும்போது இன்னும் துலக்கமாக உணர முடியும். ஏனென்று தெரியாமலே சோகமாக தெரியும் எதுவொன்றின் மீதும் அப்படி ஈர்க்கப்படுகிறேன். அதுமட்டுமல்லாமல் ஆனந்தி எல்லா வகையிலும் என் ரசனையோடு ஒத்திருந்தாள். அவள் அழகின் மீது பூஞ்சையென ஒட்டிக்கிடந்த  ஏழ்மை, என்னை விட சிறிது குறைவான உயரம், முகத்திலும் கைகளின் உள்புறத்திலும் எனக்குப் பிடித்த அவளின் இயல்பான நிறம் என எல்லாமும், அவள் எனக்கெனப் பிறந்தவள் என எண்ண வைத்தது.  

செக்கிங் வேலைக்கு வரும் யமுனா அக்காதான் ஆனந்தியை அழைத்து வந்தது. அப்போது, பாண்டியன் சார் வெளியில் போயிருந்ததால் என்னிடம் அவள் பெயர் ஆனந்தி என்றும், ஊர்  ஆன்டிப்பட்டி என்றும் அறிமுகப்படுத்தியது. தன் தங்கை குடியிருக்கும் காம்பவுண்டில் தம்பியுடன் வீடெடுத்துத் தங்கியிருப்பதாகச் சொன்னது. தம்பி ஈஸ்வரி டெக்ஸில் கை மடித்துக் கொண்டிருப்பதாகவும், ஆனந்தி கூட இதற்கு முன்பு அங்குதான் செக்கிங் வேலை பார்த்ததாகவும் சொன்னது. எனக்கு ஆச்சர்யம், ஏன் ஈஸ்வரி டெக்ஸ் வேலையை விட்டுவிட்டு இங்கு வரவேண்டும் என்று. ஈஸ்வரி டெக்ஸ் திருப்பூரில் இருக்கும் பெரிய நிறுவனங்களில் ஒன்று. அங்கு வேலை செய்வது ஏறக்குறைய அரசு வேலைக்கு சமமானது. குமரானந்தபுரத்தில் இருக்கும் இந்த ஒரு யூனிட்டில் மட்டும் இரண்டாயிரம் பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். காலையில் நான் எங்கள் கம்பெனியைத் திறக்கும் போது, பள்ளி மாணவர்கள் போல தொழிலாளர்கள் உலவிக்கொண்டும் சாலையோரமாக நின்று பேசிக்கொண்டும் இருப்பார்கள்.    சரியாக  ஒன்பது மணிக்கு சங்கு ஒலிக்கும்போது வெளியில் யாரும் இருக்க மாட்டார்கள். டீ டைம், மதிய உணவு வேளை, ஷிப்ட் முடியும்போது என ஒவ்வொரு முறையும் சங்கு ஒலிக்கும். செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டு விட்டு கிளம்பலாம். உள்ளேயே கேண்டீன். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நைட் ஷிப்ட்சனிக்கிழமையானால் இருப்பிடம் தேடி வந்து விடும் சம்பளக் கவர். ஆனால்எங்கள் கம்பெனி அப்படி அல்ல. ஜாப் ஆர்டர் எடுத்துச் செய்யும் சிறிய கம்பெனி. ஆயிரம் சதுர அடியில் நான்கு ஓவர்லாக் மெஷினும், இரண்டு பேட் லாக் மெஷினும், ஐந்து சிங்கர் தையல் மெஷினும், ஒரு பெரிய கட்டிங் டேபிளும், இரண்டு சிறிய செக்கிங் டேபிளும், ஒரு ஸ்டீம் இஸ்திரி டேபிளும் மட்டுமே உடையது. தினசரி வேலைக்கு உத்திரவாதம் கிடையாது. அவசர நேரங்களில் டீ சாப்பிடக்கூட போக முடியாது. சம்பளத்திற்கு கால் கடுக்க நிற்க வேண்டும். ஆனால், அவள்தான் பின்னொரு நாள் யமுனா அக்காவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்அங்க ஸ்விட்ச் போட்டா வேலை செய்கிற மெஷின் மாதிரி கிடுகிடுனு ஓடணும்க்கா.. இங்க அப்படி இல்ல, நம்ம வீட்டு வேலைய செய்ற மாதிரி இருக்கு..” என்று

ஆனந்தியிடம் ஒரு நேர்த்தி இருக்கும். குறைவான வார்த்தைகளையும் ஒலி குறைவாகத்தான் பேசுவாள். கழுத்தில் மெலிதிலும் மெலிதான சில்வர் நிற செயின் ஒன்று போட்டிருப்பாள். நெற்றிப் பொட்டு கூட அப்படித்தான், கண்களை ஜூம் செய்து பார்த்தால்தான் தெரியும். ஐந்து சுடிதார் செட்டுதான் வைத்திருக்கிறாள். அதை ஒவ்வொரு வாரமும் ஆர்டர் மாறாமல் போட்டு வருவாள். ஒருநாள் கூட மதிய உணவு எடுத்து வந்ததில்லை. வீட்டுக்கு போய்தான் சாப்பிட்டு வருவாள். தேனீர் நேரத்தில் எல்லோரும் டீ குடிக்கப் போய்விட, அவள் மட்டும் செக்கிங் டேபிள் அடியில் அமர்ந்து, தான் வாங்கி வைத்திருக்கும் பிஸ்கட் பாக்கெட்டில் இரண்டை மட்டும் சாப்பிட்டு மீதியை பேக்கினுள் வைத்துக் கொள்வாள். பாண்டியன் சாருக்கு அல்லது அவரைச் சந்திக்க வரும் நபர்களுக்கு டீ வாங்கி வரும் போது அவள்தான் கிளாஸில் ஊற்றிக் கொடுப்பாள். மிச்சமான டீயை குடிக்கச் சொன்னால் மறுத்துவிடுவாள். ஒருமுறை வற்புறுத்தி சொன்ன போது, லாட்டுகள் அடுக்கி வைக்கும் அறைக்குள் எடுத்துச் சென்று குடித்தாள். அதன் பிறகு அவளுக்காகவே கூடுதல் டீ வாங்கி வருவேன்

இங்கு வேலை செய்யும் எல்லோரும் அவளிடம் கண்ணியமாகவே நடந்து கொள்வார்கள். அதற்கு அவள் நடந்து கொள்ளும் முறைதான் காரணம் என்று சொல்ல முடியாது. அவள் முகத்தில் தெரியும் கவலையாகக் கூட இருக்கலாம். அவளை எல்லோரும் ஒரு பரிதாபமான பெண்ணாகவே பார்த்தார்கள்ரவி அண்ணனும் சேகர் அண்ணனும் அவளை சிஸ்டர் என்றுதான் அழைப்பார்கள். நான் மட்டும்தான் அவளை அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தோடு அணுகுகிறேன். அவளும் எல்லோரையும் அண்ணன் என்று அழைத்துவிட்டு, என்னை மட்டும் சார் என்பாள்.  

நான் அவளைக் காதலிக்கிறேன் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். வேலைக்கு வந்த இரண்டொரு நாளிலேயே அதைக் கண்டு கொண்டாள். இத்தனைக்கும் அவளுக்குத் தெரியாமல்தான் நான் அவளைப் பார்ப்பேன்அவளுக்கு உடம்பெங்கும் கண் இருக்கிறது போல. என் பார்வை விழும் இடத்தில் வெயில் விழுந்து கூசுவதைப்போல அவள் உணர்வதாக எனக்குத் தோன்றும். அவள் இதுவரை ஒருமுறை கூட பேச்சிலோ, சிறு செயலிலோ தன் எதிர்ப்பைக் காட்டியதில்லை. அதனால் அவளுக்கும் என் மீது விருப்பம் இருப்பதாக நினைத்துக் கொண்டேன். எங்களுக்குள் இப்படி ஒரு அலை அடித்துக் கொண்டிருப்பது கம்பெனியில் வேறு யாருக்கும் தெரியாது

அவளிடம் காதலை சொல்லி விட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தேன். என் காதலை அவள் நிச்சயமாக நிராகரிக்கமாட்டாள் என்ற நம்பிக்கை அதிகமானபோது அவளிடம் காதலைச் சொல்வதற்கு ஆயத்தமானேன். அன்று நைட் ஷிப்ட் வேலை இருந்தது. இன்று சொல்லி விட வேண்டியதுதான் என்று தீர்மானித்தேன். செக்கிங் வேலை செய்பவர்களுக்கு மட்டும் நைட் ஷிப்ட் என்பதால் மற்ற தொழிலாளர்கள் போய் விட்டார்கள். செக்கிங் வேலை என்பது பனியன்களில் இருக்கும் பிழைகளைக் கண்டுபிடித்து நீக்குவது. பிசிறு நறுக்குதல், அழுக்கு கறை நீக்குதல், அடாஸ் கண்டுபிடித்தல், தையல் சரிபார்த்தல் என்ற முக்கியமான பணி அது. பெண்கள்தான் செய்வார்கள். ஏதாவது கதை  பேசிக்கொண்டே வேலை செய்வது அவர்களின் இயல்பு. அன்று, ஆனந்தி தான் ஈஸ்வரி டெக்ஸ் வேலையை விட்டதற்கான கதையை யமுனா அக்காவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அங்கு வேலை பார்த்த சூப்பர்வைஸர் ஒருவர் ஆனந்தியைக் காதலித்து இருக்கிறார். அதை அவளிடமும் சொல்லி இருக்கிறார். ஆனந்தி அதை நிராகரிக்கஅவர் விடாமல்  மீண்டும் மீண்டும் காதலைச் சொல்வதும், பார்த்து சிரிப்பதும், பின்தொடர்வதுமாக அவளை டார்ச்சர் செய்திருக்கிறார். “வேறு வழி தெரியவில்லை.. வந்துவிட்டேன்..” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். நான் இன்று காதலை சொல்லப் போவதைத் தெரிந்து கொண்டுதான் இந்தக் கதையை அவள் சொல்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன். “தினமும் அவளைப் பார்க்கிறேன்.. யாருமற்ற சாலையில் அவளோடு அவள் வீடிருக்கும் தெரு வரைக்கும் போகிறேன்.. அது போதும்..“ என்று நினைத்து, காதலை மொழியும் எண்ணத்தைக் கைவிட்டேன். இப்போது வரை வெறும் பார்வை மட்டும்தான். எப்போதாவது சிலநொடிகள் மட்டும்  எதிரெதிரே வரும் பேருந்துகள் போல எங்கள் பார்வைகள் சந்தித்துக் கொள்ளும். அப்போது அந்த பேருந்துகள் எழுப்பும் ஹார்ன் சத்தம் போல சில்லிடும் ஒரு அதிர்வொன்று எனக்குள் தோன்றி அடங்கும்.

நாங்கள் நினைத்தது போல் அந்த ஆர்டர் எங்கள் கம்பெனிக்குத்தான் கிடைத்தது. இரவே துணி வந்து இறங்கி விட்டது. மறுநாள் காலையில் ரவி அண்ணன் கட்டிங்கை ஸ்டார்ட் பண்ணினார். பெரிய ஆர்டர் என்பதால் வழக்கமாக வரும் நபருடன் மேலும் இருவரை அழைத்து வந்திருந்தார். சேகர் அண்ணனும் கோபாலும் வந்து கட்டுகளைப் பார்த்துவிட்டு, நாளைக்கு ஸ்டிட்சிங்கை தொடங்கலாம் என்றார்கள். சிங்கர் டைலர்களுக்கு  பணியனில் வேலை குறைவாகத்தான் இருந்தது. கழுத்துப் பட்டியில் டூல் டேப்பும், மெயின் லேபிளோடு சைஸ் லேபிளும், ஒரு வாஷ்கேர் லேபிளும் தைப்பதுதான் வேலை. அதனால் வாடகைக்கு மெஷின் எடுக்க வேண்டாம் என்று பாண்டியன் சாரிடம் சொன்னார்

ஸ்டிட்சிங் பணிகளும் தொடங்கியது. டைலர்களும், கை மடிப்பவர்களும்  பத்து நாட்கள் தினமும் இரண்டு ஷிப்ட் என்று உற்சாகமானார்கள். பாண்டியன் சார், செக்கிங் வேலையை நாளைக்கு ஸ்டார்ட் பண்ணிவிடலாம் என்று யமுனா அக்காவிடமும் மற்றவர்களிடமும் சொல்லிவிட்டு வர சொன்னார். நான் பைக்கை எடுத்துக்கொண்டு, முதலில் யமுனா அக்கா வீட்டிற்கு போய் சொல்லிவிட்டு, பின் ஆனந்தி வீட்டுக்கு போனேன்வீட்டு ஓனர் கேட்டிலேயே மறித்துக் கொண்டார். நான் ஆனந்தி வேலை செய்யும் கம்பெனியில் இருந்து வந்திருப்பதாகச் சொன்னதும், அவர்ஆனந்திஎன்று அழைத்தபடி உள்ளே போனார். ஆனந்தி தம்பி வந்தான். கை விரலில் கட்டு போடப்பட்டிருந்தது. “என்னாச்சு..” என்றேன். “மெஷின் ஊசி இறங்கிடுச்சு..” என்றான். “எப்போ..” என்று கேட்டதற்கு, “போன புதன் கிழமை..” என்றான். ஒரு வாரமாக தம்பியும் வேலைக்குப் போகவில்லை, அவளுக்கும் வேலை இல்லை..  அதனால்தான் என்னிடம் பணம்  கேட்டாளோ என்று நினைத்துக் கொண்டேன். ஆனந்தி உள்ளே இருந்து வந்தாள். நான் நாளையிலிருந்து செக்கிங் வேலை ஆரம்பிப்பதாக சொன்னேன். அவள் எந்த உணர்ச்சியும் செய்யாமல் சரி என்று தலையாட்டினாள். இதையே நான் யமுனா அக்காவிடம் சொன்னபோது, வானத்தில் கருமேகம் திரள்வதைப் பார்ப்பதைப் போன்று அவர் முகம் மாறியது. ஆனந்தி இப்படித்தான். அதுவும் என்னிடம் மட்டும்தான் இப்படி இருக்கிறாள். வேறொருவர் இதை சொல்லியிருந்தால், அவள் மனதில் தோன்றுவது வெளிப்பட்டிருக்கும்

கம்பெனியில் கால் வைக்கக் கூட இடமில்லை. கட்டிங் டேபிள், செக்கிங் டேபிள், தையல் மெஷின்கள், நடை வழி என  எங்கும் நிரவிக் கிடந்தன துணிகள். வழக்கத்தை விடக் கூடுதலான தொழிலாளர்கள் வேறு. கம்பெனியை இப்படிப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. நான் வெளி வேலையாகவே அலைந்து கொண்டிருந்தேன். பட்டன் வாங்கவும், லேபிள் வாங்கவும், நூல் வாங்கவும் என பையர் ஆபீஸ்க்கு ஓடிக்கொண்டிருந்தேன். இடையில் டீ வாங்க வேறு போக வேண்டும்.   இன்ஸ்பெக்ஷனுக்கு வந்தவர் கட்டுக்கு ஒன்று என பத்து டீசர்ட்டுகளை எடுத்து  ஆராய்ந்து கொண்டிருந்தார். எல்லா டீசர்ட்டிலும் பாட்டம் அளவு ஒரு இன்ஞ் குறைவாக இருப்பதாகப்  புகார் சொல்லிக் கொண்டிருந்தார். சேகர் அண்ணனுக்குதான் தலைவலி. “சார், ரிப் கிளாத்து சார்.. அயரினிங் பண்ண பின்னாடி மெஸர்மென்ட் செக் பண்ணுங்க..” என்றார். “அப்ப இது என்ன..?“ என்று பனியனை விசிறி வீசினார். பனியனில் இருக்கும் கோடுகளின் இணைவு ஏற்ற இறக்கமாக இருந்தது. ஸ்ட்ரைப்டு பனியன்களில் இணைப்புகள் துல்லியமாக இருக்க வேண்டும். ஒரு நூல் பிசகி இருந்தாலும் அந்த டீசர்ட் ரிஜக்ட் செய்யப்படும். கஸ்டர்ட் ஆர்டர் என்றாலே கெடுபடிகள் அதிகமாக இருக்கும். பேக்கிங் பெட்டிகள் ஒரு ரிட்டர்னாவது வந்துவிடும் என்று சொல்வார்கள். அவரை குளிர்விப்பதற்காகவே டீயும் வடையும் வாங்கி வந்தேன். ஆனந்திதான் டீயை ஊற்றிக் கொண்டு போனாள். நான் வெளியே கிடக்கும் கட்டிங் வேஸ்ட் மூட்டையில் வந்து அமர்ந்துகொண்டேன். பின்னாடியே ரவியண்ணனும் சேகர் அண்ணனும் வந்து  வேஸ்ட் மூட்டையில் அமர்ந்து சிகரெட் குடித்தார்கள். நான் சேகர் அண்ணனிடம், “ரொம்ப குடைச்சல் குடுக்குறாங்களா..?” என்றேன். “இதெல்லாம் சும்மா.. நான் இவங்களவிட பெரிய பெரிய கம்பெனியெல்லாம் பாத்துட்டு வந்துட்டேன்..” என்று தன் அனுபவப் பெருமைகளை அடுக்கத் தொடங்கினார். ஆனந்தி  மீதமிருந்த டீயை பிளாஸ்க்கோடு லாட் ரூமுக்குள் கொண்டு வைத்துவிட்டு, படிக்கட்டு ஓரமாய் இருக்கும் பாத்ரூமுக்குள் போனாள். சேகர் அண்ணன் தன் பெருமைகளுக்கு இடையேகுண்டி பாத்துருக்கியா..?” என்றார். நான் புரியாமல் அவரைப் பார்த்தேன். “அங்க பாரு..” என்றார். அங்கே பாத்ரூம் கதவின் அடிப்புறத்தில் துருப்பிடித்து உடைந்திருந்த  இடைவெளியில், உள்ளுக்குள் இருக்கும் ஆனந்தியில் நிர்வாணமான பின்புறம் தெரிந்தது. நான் வெடுக்கென்று முகத்தை திருப்பிக்கொண்டேன். சேகரும் ரவியும் சிரித்தார்கள். நான் தலை குனிந்திருந்தேன். ஆனந்தி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். நான் அவளைப் பார்க்கவில்லை. அவள் தன் ஈரக்கைகளை துப்பட்டாவில் துடைத்தபடி போகக்கூடும் என்று நினைத்துக் கொண்டேன். சேகரும் ரவியும் சிகரெட்டை காலில் போட்டு மிதித்துவிட்டு உள்ளே போனார்கள். போகும் போது லாட் ரூமிற்குள் டீ குடித்துக் கொண்டிருக்கும் ஆனந்தியைப் பார்த்துஎன்ன சிஸ்டர்.. எங்களுக்கெல்லாம் டீ கெடையாதா..?” என்று சேகர் கேட்பது என் காதில் விழுந்தது. அதற்கு ஆனந்தி என்ன சொல்லியிருப்பாள். “அண்ணா, உங்களுக்கு இல்லாததா.. இந்தாங்கஎன்று கிளாஸை நீட்டிருப்பாள். நான் திரும்பி பாத்ரூம்மைப் பார்த்தேன். முதல் மாடிக்கு போகும் படிக்கட்டில் நான்கு படிக்கட்டுகள் ஏறித்தான் பாத்ரூமுக்குள் போக முடியும். லாட் ரூம் ஜன்னலை ஒட்டியபடி தரையில் கிடக்கும் வேஸ்ட் மூட்டையில் உட்கார்ந்திருந்தால், பார்வை மட்டத்தில் இருக்கும் கதவின் உடைந்த அடிப்பகுதி. நிற்கும் போது தெரியாது. உள்ளே விளக்கு எரியவும் தெளிவாகத் தெரிந்தது. ஒரு நொடிதான் என்றாலும் மேகத்தில் செருகி வைத்த நிலவு மாதிரி தெரிந்த அவளின் பின்புறத்தில் நான் பார்த்தது துயரமான  ஆனந்தியின் அந்த முகத்தைதான். பார்க்கும் இடங்களிலெல்லாம் அந்த சித்திரம் கடல் அலைகள் போல எழுந்து என்னை நோக்கி வந்து கொண்டே இருந்தன. கம்பெனி உள்ளே போவதற்கே எனக்குப் பிடிக்கவில்லை. ஆனந்தியின் முகத்தை இனிமேல் என்னால் பார்க்க முடியுமா என்று யோசித்தபடி அப்படியே அமர்ந்திருந்தேன்ஆனந்தி வந்து பாண்டியன் சார் கூப்பிடுவதாக சொன்னாள்.

அதன் பிறகு, ஆனந்தியின் முகத்தை நான் பார்க்கவே இல்லை. அவள் கழிவறை நோக்கி போகும் போதெல்லாம் சேகரையும் ரவியையும் பார்ப்பேன். அவர்கள் ஒவ்வொரு முறையும் கண்களால் பேசிக் கொண்டு வெளியே போய் தம் அடித்துக் கொண்டு நிற்பார்கள். எனக்கு அந்த காட்சியும், அவள் முகமும், அவர்கள் அதை வெறித்துப் பார்ப்பதுமாக மாறி மாறித் தோன்றி மறைந்தன. ஆனந்தி ஈரக் கைகளைத் துப்பட்டாவில் துடைத்தபடி வந்து, பனியனை எடுத்து பிசிறுகளை வெட்டினாள். எனக்கு ஓடிப்போய் அவளை மார்போடு அணைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. சேகரும் ரவியும் உள்ளே வந்து அவரவர் வேலைகளைத் தொடர்ந்தார்கள். அப்போது நான் ஒரு முடிவுக்கு வந்தேன். இன்று நைட் ஷிப்ட் முடிந்து வீட்டிற்கு திரும்பும்போது ஆனந்தியிடம் தன் காதலை சொல்லிவிட வேண்டுமென்று.

சரியாக இரண்டு மணிக்கு ஷிப்ட் முடிந்தது. எல்லோரும் கிளம்பினார்கள். ஆனந்தி ஹேன்ட் பேக்கை எடுத்துக் கொண்டாள். நான் அவள் பின்னாடியே வெளியே வந்தேன். வாசலில் அவள் தம்பி நின்று கொண்டிருந்தான்அவனைப் பார்த்ததும் எனக்கு திக்கென்று ஆனது. ஆனந்தி என்னிடம் திரும்பி, “தம்பி வந்திருக்கான் சார்.. நான் அவன்கூட போயிக்கிறேன்..” என்றாள். நான் அவளிடம் நெருங்கி, “ஆனந்தி.. உங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்..” என்றேன். அவள், “அய்யோ.. தம்பி இருக்கான்..” என்று ரகசிய குரலில் சொன்னாள். ஆனால், நான் அவளிடம் இன்று சொல்லி விடுவதென்று தீர்மானமாய் இருந்தேன். அவர்கள் இருவரும் மெயின் ரோட்டில் திரும்பி மறைந்தார்கள். நான் வேகமாக நடந்து சென்று அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். அவள் என் பக்கம் திரும்பவில்லை. அவன்தான், “அண்ணே நீங்க போங்க.. நாங்க போயிக்கிறோம்..” என்றான். “பரவால்ல, நானும் கூட வரேன்..” என்றேன். அமைதியாக நடந்தோம். ஆனால், உள்ளுக்குள்எப்படி சொல்வது..?” என்று அடித்துக் கொண்டது. மெயின் ரோட்டில் இருந்து அவள் வீடிருக்கும் தெருவுக்குள் நுழையும்போது, “ஆனந்தி, உன்னை நான் லவ் பண்றேன்..” என்றேன். அவள் சட்டென நடையை நிறுத்தினாள். ஒரு பெருந்துளி அவள் கண்ணிலிருந்து விசுக்கென கசிந்தது. துடைத்தபடி என்னிடம் திரும்பாமலே வேகமாக நடந்து போனாள். அவள் தம்பிதான் சில நொடிகள் நின்று என்னை முறைத்துப் பார்த்து விட்டுப் போனான். நான் அந்த இடத்திலேயே நின்று அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். “நாளைக்கு அவள் வேலைக்கு வருவாளா.. மாட்டாளா..”  என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவள், வீடிருக்கும் காம்பவுண்டுக்குள் நுழையும்போது ஒரு நொடி நின்று என்னைப் பார்த்தாள்.

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. எதார்த்தமான கதை. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button