கட்டுரைகள்

செர்னியின் வழித்தடம் – சுபாஷ் சந்திர போஸ்

கட்டுரை | வாசகசாலை

“கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர், 

கடைசி மீனையும் பிடித்த பின்னர், 

காற்றின் கடைசித் துளியை மாசுபடுத்திய பின்னர், ஆற்றின் கடைசி சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர்தான் தெரியவரும்… 

இந்தப் பணத்தை தின்ன முடியாது என்று…” 

அமெரிக்க செவிந்தியர்கள் சொன்ன வரிகள் இவை.

இயற்கை உடனே திருப்பி அடிக்காமல் இருப்பதாலும், வாயைத் திறந்து பேசாததாலும் மனித பிண்டங்களின் ஆட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது. ஆனால் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அதே இயற்கை புதுப்புது வடிவங்களில் பதிலளிக்கத் துவங்கும்போது அந்த இயற்கையைப் போல் நாம் பொறுத்துக் கொள்வதில்லை. மனிதகுலத்தின் ஆதியிலிருந்து அறிந்த அனைத்து வசைப்பாடல்களாலும் பூமியை அர்ச்சனை செய்கிறோம். ஆனாலும் நாம் என்ன விதைத்தோமோ அதன் அறுவடைத்தான் இந்த பேரழிவுகள் என்பதை உணர்ந்தபாடில்லை.

அப்படி நம் சக உயிரிகளான விலங்குகளையும் நாம் விட்டுவைக்கவில்லை. அவைகளுக்கான பூமிப் பகிர்வையும் கபளிகரம் செய்து இயற்கை அமைப்பையே சூறையாடிக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து மிருக வேட்டை என்ற பெயரில் அவைகளுக்கான ஆதிக் குடியுரிமையை பிடுங்கிக்கொண்டே இருக்கிறோம். கடந்த ஆண்டில் மட்டும் பல நூறு விலங்குகள் துன்புறுத்தப்பட்டதாக, கொல்லப்பட்டதாக செய்திகள். கடந்த ஓராண்டில் மட்டும் பல நூறுக்கணக்கான யானைகள் இறந்துள்ளன என்பது வெளிப்படையாகவே சமூக வலைதள செய்திகள் மூலமே அறியப்படும் தகவல். அப்படியான ஒரு கதைக்களத்தைக் கொண்டு மரம் செடியை போலவே காடுகளுக்குள் விரவிக் கிடக்கும் அரசியலையும் சேர்த்து வடிவமைக்கப்பட்டுள்ள படமே, “செர்னி” (SHERNI). கடந்த ஜூன் 18ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், நடிகர் வித்யாபாலன் முன்னனி பாத்திரம் ஏற்று நடித்திருக்கும் இந்த படம் வெளியானது.

2018-ல் மஹாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்தில் ஆட்கொல்லிப் புலியாக அடையாளப்படுத்தப்பட்ட அவ்னி என்கிற பெண்புலியை, அரசு ஒப்புதலுடன் தனியார் வேட்டை ஆர்வலர் சுட்டுக்கொன்றார். அந்தப் புலி சுட்டுக்கொல்லப்பட்ட நேரத்தில், இரண்டு 10 மாதக் குட்டிகள் அதற்கு இருந்தன. அந்த உண்மை சம்பவத்தை தழுவி காட்டில் இருந்துக் கொண்டு உள்ளே வரும் மக்களை தொடர்ந்துக் கொல்லும் பெண் புலியைச் சுற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் கதைக்கருதான் செர்னி. ஆதிகாலத்திலிருந்தே மனிதனும், விலங்கும் ஓரினமாய் ஒன்றினைந்தே வாழ்ந்தே வந்துள்ளனர். என்னதான் வளர்ச்சியும், தேவையும் அத்தியவாசியமானது என்றாலும் சிலரின் லாப வெறியால் இந்த உறவு சங்கிலி உடைந்து நொறுங்கியுள்ளது. கனிம கரிம வளங்கள் மற்றும் இன்னபிற காட்டின் இயற்கை வளங்களை சூறையாடுவதற்காக காடுகளை ஆக்கிரமித்ததன் விளைவே விலங்குகள் ஒண்ட இடமில்லாமல் மனித இருப்பிடங்களை நாட வகை செய்கிறது. சொல்லப்போனால் நாம்தான் அதன் இருப்பிடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறோம். அதைதான் செர்னி தன்னுடைய களமாக எடுத்து வெளிப்படுத்தியுள்ளது. வனரக அதிகாரியாக வரும் வித்யாபாலன் காட்டுவிலங்குகளை வேட்டையாடும் வெறியர்களிடமிருந்து விலங்குகளையும், நாட்டு மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளிடமிருந்து உள்ளூர் மக்களையும் காப்பாற்ற நினைக்கிறார். அதிகாரிகளின் அழுத்தம், அரசியல்வாதிகளின் தொந்தரவு, சவாலான காடுகள், புரிதலற்ற விலங்குகள், சூறையாடும் கார்ப்பரேட் என தான் எடுத்துக் கொண்ட பணியில் வெல்கிறாரா? இல்லையா? இதுவே இரண்டாம் பகுதியாய் ஓடி முடிகிறது.

வெறும் இரு நபர்களுக்கான வெற்றி தோல்வியாக காட்டப்பட்டு இறுதியில் கதாநாயகர் வெற்றி என்று முடிந்திருந்தால் நாம் செர்னியை இங்கு தனியாக வாசிக்க வேண்டிய தேவையிருந்திருக்காது. ஆனால் அதையெல்லாம் தாண்டி பிர்ஸா முண்டா முதல் இன்றைய சூழலியல் போராளிகள் வரை பலநூறு ஆண்டுகளாக இயற்கை பிரமீட்டை காப்பாற்ற நடைபெறும் போராட்ட பாரத்தை சுமந்து செல்பவராக வித்யா வின்சன்ட் உள்ளார். குறிப்பாக அந்த படத்தில் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். EIA-வை நீரஜ் கபி ஆதரித்து பேசுவது போன்ற காட்சியில் ஒரு நிமிடம் நாமும் கூட படத்தின் கருவை சந்தேகிக்கக் கூடும். ஆனால் இறுதிக் காட்சியில் நீரஜூம் அரசின் எலும்புத்துண்டுக்கு கைநீட்டும் ஒரு மூன்றாம் தர நபர்தான் என்பது போல் காட்சியமைத்திருப்பார் இயக்குநர்.  ஊர்மக்களை கொல்லும் பெண் புலியை துரத்திச் செல்லும் பயணம் முழுதும் ஆணாதிக்க கருத்துக்கள், கார்ப்பரேட் லாபவெறி, அரசியல் சூதாட்டம் என அனைத்துவிதமான ஆதிக்கங்களையும் அடித்து நொறுக்கியிருக்கிறார் இயக்குனர் அமித். வி. மசூர்கர். இயற்கைக்கான விதி ஒன்று உள்ளது. காட்டுவிலங்குகள் அவற்றை சரியாக கடைப்பிடிக்கின்றன. ஆனால் அதைவிட ஆபத்தான நாட்டு விலங்குகள்தான் எப்போதும் அத்துமீறுகின்றன. இந்த அத்துமீறல் நடைப்பெறும்போதே அசம்பாவிதங்களும் ஏற்படுகின்றன.

இதுகாறும் நடந்தவற்றை சரிசெய்ய இனி நேரம் இல்லை. இனியாவது இயற்கை விதிகளைக் கடைப்பிடிப்பதே நன்று. அதற்கு செர்னியின் வழித்தடத்தில் நீங்களும் ஒருமுறை பயணித்தால்தான் புரியும்.

***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close