சிறுகதைகள்
Trending

செட்டிகுளம் போகவில்லை- நிவேதினி நாகராஜன்

02.01.2018

‘செட்டிகுளம்’ என்ற பெயர் கொண்ட எழுத்துக்களின் வண்ணம் கொஞ்சம் அழிந்திருந்தது. அந்தப் பலகையின் மேல் அமர்ந்து பலர் அவர்களின் கால்களை ஆட்டிக் கொண்டிருந்ததினாலும், ஊரில் அப்பொழுது எதுவும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை என்பதையும் காட்டிக் கொடுத்துவிட்ட அந்த மஞ்சள் பலகையும், பின் விவசாய நிலங்களும், அதையொட்டி ஒரு சின்ன கோபுரம் இல்லாத கோவிலும், அங்கு வெளியில் கையில் ஏந்திய அருவாளுடன் அய்யனார் சிலையும் அதற்கு கீழ் ஒரு கருப்பு நாயும் சுருண்டு படுத்திருந்தது. அதைத் தொடர்ந்து தெரு நெடுக மகிழ மரங்கள் என அவன் சொல்லிக் கொண்டிக்கும் போதே கேமரா ஒரு வீட்டுக்குள் நுழைந்தது. தங்களை ஒவ்வொருவராக பேத்திக்கு அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களில் யாழினியின் ஆச்சி மட்டும் பேச ஆரம்பித்து பேசாமல் அழுதார். ‘போமா நீ ஒரு ஆளு’ என்ற குரல் மெலிதாகக் கேட்டது. கொல்லைப் பக்கம் வைக்கோல் தெரிய கருப்பு வெள்ளைக் கட்டம் போட்ட சட்டையுடன் முகிலன் மரத்திற்கு அடியில் போடப்பட்டியிருந்த நாடாக் கட்டிலில் அமர்ந்து கேமராவை முன் பக்கம் வைத்துப் பேச ஆரம்பித்தான்.

பார்சல் வந்திருந்தது. அவன்தான் அனுப்பியிருக்கிறான் என்று தெரிந்தும் பிரிக்க வேண்டிய சூழ்நிலை. பென்ட்ரைவ் பார்த்தவுடன் நான் ‘முகிலன் அனுப்பிருக்கான்’ என்றேன். ‘டீவியில் போடு’ என்றவள் அவன் காணொளியில் வந்ததும் எழுந்து உள்ளே போனாள்.

“என்னால் இதெல்லாம் பார்க்க முடில. இந்த மாதிரியான எதையும் பார்க்க எனக்குப் பிடிக்கல. எரிச்சலா இருக்கு” என அவள் குரல் வெம்பி என்னிடம் சொன்னதை முகிலனிடம் சொல்லி விட வேண்டும் என்பது போலிருந்தது.

15.2.2018

“நான் பிந்து பேசுறேன்.”

“ம்ம்… சொல்லுங்க”

“நீங்க அனுப்பினதைப் பார்த்தோம்.”

“பிளீஸ், இனி இந்த மாதிரியெல்லாம் அனுப்பி அவளை இன்னும் கஷ்டப்படுத்த வேணாம்.”

“ஒரு நிமிஷம் வச்சுராதீங்க”

“எல்லாரும் பார்த்தீங்களா, எப்படி இருந்தது?”

“ம்ம்..நைஸ்” என்ற அடுத்த நொடியே, அய்யோ எனத் தலையில் கை வைத்து போனைக் கட் செய்து விட்டேன்.
தேவையில்லாமல் அப்படி சொல்லியிருக்கக் கூடாதோ என நினைத்துக் கொண்டேயிருந்தேன்.

“ஏய்! நீ ஏன் கொஞ்சம் யோசிச்சு முடிவு எடுக்கக் கூடாது. உன் பிள்ளையை நினைத்துப் பாரு, தனியாக உன்னால் வாழ்ந்திட முடியுமா, விவாகரத்து ஒன்றுதான் முடிவா? இப்படியான பல கேள்விகள் பலரிடம் இருந்து வந்த வண்ணம் இருந்தன. நந்தினிக்கு .இப்படியான பலரில் நானும் ஒருத்தியாக இருக்க எனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. இருந்தும் கூட அவனின் குறும்படம் என்னை ஏதாவது யோசிக்க வைத்துக் கொண்டேயிருந்தது.

17.1.2019

யாழினி பிறந்த போது அவள் உச்சந்தலை படிந்த குருதி புகைப்படத்தில் இருந்து தொடங்கிய அந்தக் குறும்படம், அடுத்து அடுத்து தொடர்ச்சியாக எண்ணெய் படிந்த அவளின் தலைமுடி, அதில் புதிதாக ட்ரை பண்ணிய வார்ப்புகள், உச்சித்தலை முடியில் போட்ட குடுமியைப் பிடுங்கி ‘நானா’ (வேண்டாம் என்பதின் மழலை மொழி) என்று அவள் அழுதவைகள், ஹேர் பேண்ட் எடுத்து வாயில் போட்டு அதை முழுங்கி இரண்டு நாட்கள் கழித்து படாதபாடு பட்டு, நிறைய ஸ்கேன் எடுத்து முடிவில் மலத்தில் வந்தவுடன் நிம்மதியான பொழுதுகள் என சொல்லிக் கொண்டே, முடிவில் அவளின் குட்டி டோலாக்குடன் முடிந்த அந்த வீடியோ ஏதோ ஒரு விதமான உணர்வைக் கொடுத்தது. ஒரு நல்ல திரைப்படம் பார்த்து அவைகள் சில நாட்கள் கொடுக்கும் பாதிப்பைப் போல் இருந்தது.

காது குத்தி மொட்டை அடித்த போது, எனக்கு ஒரு புதிய நம்பரில் இருந்து வாட்ஸ் ஆப்பில் வந்த வீடியோ இது.
அன்று நைஸ் என சொல்லி இருக்கக் கூடாது என்ற குற்ற உணர்வை மேலும் அதிகரித்தது. சொல்லச் சொல்ல கேட்காமல் அனுப்பியிருக்கான் என்ற கோபம் இவைகளைப் பார்த்த சில மணி நேரங்கள் கழித்துத் தான் வந்தது. உடனே அவன் அனுப்பிய அந்த நம்பரையும் நான் ப்ளாக் செய்து விட்டேன்.

பொழுது போகாமல் சில நேரம் பழையவைகளைக் கணினியில் பார்த்துக் கொண்டிருக்கும் போது, மறுபடியும் முகிலன் அனுப்பிய காணொளிகளை பார்த்தேன். உண்மையாக சொல்லப் போனால் அவனது அடுத்த காணொளிக்காக நான் காத்திருந்தேன்.

யாழினி பிறந்து மூன்று மாதங்களிலேயே ஒருத்தியைத் திருமணம் செய்து அவளையும் ஏமாற்றி நந்தினியையும் ஏமாற்றிக் கொண்டிருந்தவனை விட்டு வேறு பாதையில் வருவது அவளுக்கு பிடித்ததாகவே இருந்தது.

அவன் நடிப்பிற்கான மேடை நிறைய இருந்தும் அவர்களின் திருமணத்தில் இருந்தே அதற்கான ஒத்திகையை ஆரம்பித்திருந்தான். இப்போதும் கூட அவன் ஒத்திகை முடியவில்லை என்று தோன்றினாலும் அவன் மகளுக்காக மட்டும் இதைப் பண்ண வேண்டிய காரணம் என்னவாக இருக்கும். அவள் பிறந்த போது அட்டைப் பெட்டி நிறைய இனிப்புகளை மருத்துவமனை முழுவதும் அள்ளிக் கொடுத்தது இனம் புரியாத மகிழ்ச்சியில் இல்லை, அவன் ஆண்மையை வெளிக்காட்டிக் கொள்ள என்பது எங்களுக்குப் பின்புதான் தெரிந்தது. ஒத்திகை அரிதாரம் அவனுக்கு அழகாக பொருந்திருந்தது.

24.2.2021

நான் திருந்தப் போவதில்லை. என் இயல்பு இது. எனக்காக இந்த ஒன்றை மட்டும் யாழினியிடம் காட்டுங்கள். அவள் பள்ளி சேரும் போது இதைப் பார்க்க வேண்டும்.
ப்ளீஸ் ..
ப்ளீஸ்ஸ் …

7.4.2021

அவள் சைக்கிள் ஓட்டும்போது, வயதுக்கு வரும் போது, கல்லூரி செல்லும் போது, வேலை கிடைத்த போது, இது ஒரு வேளை அவள் காதலித்தால், திருமணத்தின் போது , குழந்தை பிறந்தால் இப்படி நீண்டது அவன் எனக்கு அனுப்பிய வீடியோக்கள்.

ஒன்றொன்றாகப் பார்க்கும் போது இருந்த பதற்றம் அவைகளுக்குள் சென்றவுடன் கொஞ்சம் விலகி எல்லாவற்றையும் பார்த்த முடிவில் அதிகமாயிற்று . இவற்றையெல்லாம் அவள் சந்திக்கும் போது எப்படியாவது இவைகளை யாழினிடம் காண்பியுங்கள். இதில் எதிலும் அவனை அவன் நியாயப்படுத்தவில்லை. மன்னிப்பும் கேட்கவில்லை. இவற்றையெல்லாம் நான் நந்தினிடம் காண்பிப்பது , இல்லை. நந்தினிக்குத் தெரியாமல் யாழினியிடம் காண்பிப்பது என்ற இரண்டுமே தவறாகப்பட்டது.

10.4.2021

சர்க்கரையும் , உப்பையும் கலந்து வயிற்றுப் போக்கின் போது குடிக்கும் மனநிலையைப் போலிருந்தது . கையில் வண்டிச் சாவியை வைத்துக் கொண்டே தேடிக் கொண்டிருந்தேன். நெற்றியில் இரண்டு பொட்டுகள் இருந்ததினால் கிண்டல் செய்தனர். பரப்பரப்பான அந்த கணம் முகிலனின் அப்பா என்னை வந்து பார்த்துச் சென்று பேசிய தருணங்களாலும் என்னால் இயல்பு நிலைக்கு மீள முடியவில்லை .

“என்னப்பா இங்க வந்திருக்கீங்க ? அவரு அனுப்பினாரா ?”

“அவன் உனக்கு அனுப்பியதை மட்டும் எப்படியாவது யாழினியிடம் காமிச்சுரு. நாங்க உங்களை இனி தொந்தரவு பண்ண மாட்டோம். அதான் அவன் இறப்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டாம் என சொன்னான். அவன் செய்த பாவத்துக்குத்தான் சீக்கிரமே போய் சேர்ந்துட்டான்” எனச் சொல்லி அழுதார்.

“யாழு குட்டிக்கு அனுப்பத்தான் டாக்டர் சொன்ன மூணு மாசம் தாண்டியும் உயிர வச்சிருந்தான். ஆசையா பண்ணிக்கிட்டிருந்தான். அதை யாழு குட்டியிடம் மட்டும் காமிச்சுரு ஆயி. அதைச் சொல்லத்தான் வந்தேன். இனி தொந்தரவு பண்ண மாட்டேன். ”

ஷேர் ஆட்டோவில் என்னுடன் வண்டியில் வந்தவர், நான் கண் துடைக்க எதுவும் இல்லாமல் பையை துழாவிக் கொண்டிருப்பதைப் பார்த்து டீஸ்யூ பேப்பர் எடுத்துக் கொடுத்தார். அந்த கும்பல், கூச்சல், நகரம் அப்போது பெரிதாய்த் தெரியவில்லை. இரவுகள் அதிகம் யோசிக்க வைக்கின்றன. அவன் அனுப்பியவைகளை மறுபடியும் பார்க்க இனி என் மனம் ஏற்காது. இறப்பின் விளிம்பு கூட ஒருவனை சுயநலமான நல்லவனாக்கி விடுகிறது. நல்ல அப்பாவாக நான் இருந்திருப்பேன் என அவன் நேரடியாகச் சொல்லாமல் சொன்னான்.
அவள் அண்ணனிடம் முதலில் சொன்னேன். அவர் அவளிடம் சொல்ல வேண்டாம் எனச் சொன்னது எனக்கு சரி எனப்பட்டது. மரணம் மிகச்சரியாக ஒருவனின் தவறுகளை மறக்கடிக்கச் செய்து விடும் என்பதின் வரையறை புரிந்தது.

5.6.2025

இரண்டு வருடப் பிரிவு, தினம் தன் மகளுக்காக டைரி எழுதுவது, வேலை என அவள் மனம் இப்போதுதான் அமைதியாகியது. இடையில் நான் வந்து மாட்டிக்கிட்டேன் என்ற என் நிலையின் மீதான கோபம் நீடித்துக் கொண்டேயிருந்தது. யாழினி சைக்கிள் ஓட்டிக் கற்றுக் கொண்டிருந்தாள். கால்கள் இன்னும் எட்டவில்லை.
நிறைய குழப்பம் , யோசனைகள் , நிர்பந்தங்கள் தாண்டி ஒத்திகை இல்லாத இயல்பாகக் காதல் அவளுக்கு ஒருவரைப் பிடிக்க வைத்தது.

3.5.2026

நந்தினிக்கு தனசேகரனுடன் திருமணம் ஆனது. யாழினிக்குக் கொஞ்சம் கொஞ்சமாக தனசேகரனை பிடித்துப் போனது. சைக்கிள் எட்டி விட்டது. வேகமாக ஓட்டுவது பழகி விட்டது. அவளை வண்டியில் ஏற்றிக் கொண்டு சுற்றுவது அவனுக்குப் பிடித்து விட்டது.

நிறைய மாறிவிட்டது. நான் வேலைக்கு துபாய் வந்துவிட்டேன். முகிலன் அப்பா கூட ஒரு முறை பேசினார் . நந்தினியின் திருமணம் தெரிந்து விசாரித்தார். மறுபடியும் நான் அழைத்துப் பேசவில்லை. முகிலன் இறந்ததும் நந்தினிக்கு தெரிய வந்தது. இரண்டு நாட்கள் அழுதாள். தனசேகரன் அவளை முடிந்த வரை சமாதானம் செய்தான். என் கணினியில் இருக்கின்றனவா என அவ்வப்போது பார்த்துக் கொள்வேன்.
தனசேகரன் எனக்கு நல்ல நண்பரானார். அவன் அவளுக்கு வாழ்கை தந்ததாக எல்லாம் எண்ணவேயில்லை. இருவரும் ஒன்றாக சண்டைபோட்டுக் கொண்டு ஜாலியாக இருந்தனர். தயக்கத்துடன் ஒரு நாள் அவனிடம் முகிலனின் வீடியோக்களைப் பற்றிச் சொன்னேன்.

“உங்களிடம் இருக்கா?”

“ம்ம் ..பார்க்குறியா?”

“ஏய் ! கண்டிப்பா.”

நாங்கள் பார்த்து முடிக்க இரண்டு மணி நேரம் ஆனது . அம்மா இடையில் கொடுத்த டீயும் ஆறிப் போய் விட்டது .

“ஹீ இஸ் வெரி டாலேண்டட். செமையா பண்ணிருக்காரு. நிச்சயம் நந்தினிக்கும் யாழ் குட்டிக்கும் தெரியணும்.”

“யாழ் ரொம்ப குஷியாகிடுவா. நான் ‘காப்பி’ பண்றேன்.”

மறுபடியும் சூடாக டீ போட்டுக் கொண்டிருந்தேன் .

முன்பே அவளிடம் சொல்லாதது நல்லதாகப் போய் விட்டது என்ற ஒரு திருப்தி மனதை லேசாக்கிக் கொண்டிருந்தது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button