Uncategorizedஇணைய இதழ் 54சிறார் இலக்கியம்

சயின்டிஸ்ட் ஆதவன்; 9 – சௌம்யா ரெட்

சிறார் தொடர் | வாசகசாலை

தெருவே சுதந்திர தினப் பரபரப்பில் இருந்தது. சிறுவர்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். பெரியவர்களை விட சிறார்களின் ஆர்வம் தான் அதிகமாய் இருந்தது. சட்டையில் தேசியக்கொடி குத்திக்கொண்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். 

ஆதவன், மித்ரன், அமுதா, மருதாணி நால்வரும் வீட்டில் இருந்து தெருவுக்கு விளையாட வந்தனர். தெருவில் ஏற்கெனவே நிறையப் பேர் இருந்தனர்.

அபிஷேக்: டேய் என்னடா யாரையுமே காணோம்?

ஆதவன்: அம்மா ஒரு வீடியோ போட்டு காட்னாங்கடா. எப்படி நமக்கு சுதந்திரம் கிடைச்சதுனு. அதான் நேரம் போறது தெரியாம பாத்துட்டே இருந்துட்டோம்.

அமுதா: ஆமா. அதுவும் அதுல வந்த மியூசிக் இன்னும் சூப்பரா இருந்துச்சு.

மித்ரன்: சரி, நீங்க ஏன் லேட்? என்ன பண்ணிட்டு இருந்தீங்க?

அபிஷேக்: ஹேய், நாங்கலாம் விளையாட்டுக்கு ரெடி ஆயிட்டு இருக்கோம்.

ஆதவன்: அதான் திடீர்னு நம்ம தெருவுல இவ்ளோ பேர் இருக்காங்களா?

அபிஷேக்: ஆமாண்டா. மனோ அண்ணா நிறைய கேம்ஸ் வாங்கி வச்சிருக்காங்க. வரையலாம், ஆடலாம், பாடலாம், விளையாடலாம். மொத்தத்துல ஃபன் பண்ணலாம். 

மருதாணி: ஹையா. அப்படினா நான் டான்ஸ் ஆடுவேன்.

நகுல்: டேய் வாங்கடா போலாம். நேரம் ஆகுதில்ல.

எல்லோரும் சேர்ந்து மனோ அண்ணன் வீட்டுக்குச் சென்றனர். வீடு பயங்கரமாய் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. லைட்கள், அங்கங்கு தேசியக் கொடி வண்ணங்கள் என பார்க்கவே அழகாய் இருந்தது. 

சில தலைவர்களின் படம் அவர்களின் பெயருடன் ஒட்டப்பட்டு இருந்தது. வரைபடங்களுடன் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய தகவல்கள் எழுதப்பட்டிருந்தன. எல்லோரும் ஆர்வமாய்ச் சுற்றி சுற்றி வந்து படித்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் மனோ அண்ணன் வந்தார். 

மனோ அண்ணன்: என்னடா பசங்களா, எல்லாரும் எப்படி இருக்கீங்க?

“நல்லா இருக்கோம் ண்ணா” சத்தம் கோரஸாக கேட்டது. 

மனோ அண்ணன்: சரி, ரொம்ப வெயிலா இருக்கு. முதல்ல Indoor Games விளையாடலாம். சாயங்காலமா வெளிய போய் விளையாடலாம்.

“ஓகே அண்ணா”. எல்லோரும் பயங்கர குஷியாய் இருந்தனர்.

ரோஷனும் அபிஷேக்கும் செஸ் விளையாட அமர்ந்தனர். அவர்களைச் சுற்றி செஸ் விளையாட விரும்புபவர்கள் அமர்ந்து கொண்டனர். 

விஷ்ணு, மித்ரன், ஆதவன், ஜனனி நால்வரும் கேரம் போர்ட் விளையாட அமர்ந்தனர். இன்னும் சிலர் வண்ணம் தீட்ட வைத்திருக்கும் ப்ரிண்டட் பேப்பர்களையும் கலர் பென்சில்களையும் எடுத்துக் கொண்டு அமர்ந்தனர். மற்றும் சிலரோ க்ராப்ட் செய்வதற்காக கலர் பேப்பர்கள், கத்திரிக்கோல் போன்றவற்றை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தனர்.

விளையாட்டு ஜோரில் வெகு நேரம் சென்று விட்டது. சாயங்காலமே ஆனது. எல்லோருக்கும் மனோ அண்ணன் எலுமிச்சை ஜூஸ் கொடுத்தார். குடித்துக்கொண்டே சிறிது நேரம் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். 

மனோ அண்ணன்: என்னடா, எல்லாரும் வெளிய போய் விளையாடலாமா?

எல்லோரும் குஷியாக ‘போலாம்’ என்று கத்தினார்கள். மருதாணியும், மரியாவும் குதிக்கவே ஆரம்பித்து விட்டார்கள். முதலில் ஓட்டப்பந்தயம் நடந்தது. தீபக்கும் ஜனனியும் வேகமாக ஓடி இருவரும் பரிசை வென்றனர். அடுத்ததாக பச்சைக் குதிரை தாண்டி விளையாட ஆரம்பித்தனர்.

கொஞ்ச நேரம் ஜாலியாக போய்க் கொண்டிருந்த விளையாட்டில் திடீரென சலசலப்பு.

தீபக்: டேய் மித்ரன், ஓவரா பண்ணாதடா. 

அபிஷேக்: டேய் டேய், நீ பண்றது சீட்டிங்.

மித்ரன் எதுவும் பேசாமல் ஓடிவிட்டான். எல்லோரும் திரும்ப விளையாட ஆரம்பித்தனர். கொஞ்ச நேரத்தில் மித்ரன் மீண்டும் வந்தான். எல்லோரும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தனர்.

ஆதவன்: டேய், இப்படி தாண்ட கூடாதுனு ஏற்கெனவே சொன்னேன்லடா.

மித்ரன்: இவ்ளோ உயரமா இருந்தா நான் எப்படி தாண்டுறது. கொஞ்ச குனிய சொல்லுங்க.

ஹரி: நாங்கல்லாம் அப்படித்தானடா விளையாடறோம்.

மித்ரன்: நீங்க எல்லாரும் பெரியவனா இருக்கீங்க.

ஹரி: அப்ப பிரதாப் மட்டும் தாண்டுறான்?

மித்ரன் மீண்டும் கோபித்துக்கொண்டு போனான். பச்சைக்குதிரை விளையாடிக் கொண்டிருந்த எல்லோரும் மனோ அண்ணனிடம் சென்றார்கள். 

தீபக்: அண்ணா, இந்த மித்ரன் ரொம்ப பண்றான்.

மனோ அண்ணன்: என்னடா ஆச்சு?

தீபக்: அவன் ஜெயிக்கற மாதிரி இருந்தா மட்டும் தான் விளையாடறான். இல்லனா கோச்சுகிட்டுப் போயிடறான்.

மனோ அண்ணன்: அப்படியாடா மித்ரன்?

மித்ரன்: இவங்க எல்லாரும் பெரியவங்களா இருக்காங்க. அவங்க உயரத்துக்கு ஏத்த மாதிரி அவன நிமிர்ந்து நிக்க சொல்றாங்க.

ஹரி: அண்ணா, பிரதாப்பும் இவன் உயரம் தான். ஆனா தாண்டுறான்ல்ல.

 

மனோ அண்ணன் எல்லோரையும் விளையாடச் சொல்லி பார்த்தார். நகுலை கொஞ்சம் குனியச் சொல்லி பிறகு எல்லோரையும் தாண்டச் செய்தார். மீண்டும் சண்டை போய் எல்லோரிடமும் சந்தோஷம் ஒட்டிக்கொண்டது.

விளையாடி முடித்து மீண்டும் வீட்டுக்கு வந்த போது மனோ அண்ணன் பேசினார்.

மனோ அண்ணன்: எல்லாரும் ஜாலியா இருந்தீங்களா?

எல்லோரும் மகிழ்ச்சியாக ‘ஆமாம்’ என்றனர்.

மனோ அண்ணன்: இன்னிக்கு நீங்க எல்லாரும் ஒரு விஷயம் கத்துக்கனும். விளையாட்டுங்கறது முதல்ல சந்தோஷம் தர்றது. சும்மா விளையாடும் போது கூட கண்டிப்பா ஜெயிச்சே ஆகனும்னு நினைச்சு பிரஷர் ஆகிக்க கூடாது.

தோத்தா விளையாட்ட விட்டு ஓடக்கூடாது. பரவால்லனு அதையும் ஜாலியா எடுத்துக்கனும். அதான் நல்ல ஸ்போர்ட்மென்ஷிப் (sportsmanship). சரியா?

கோரஸாக ‘சரி’ வந்தது. திரும்பவும் மனோ அண்ணன் வீட்டுக்குச் சென்று பலகாரங்கள் சாப்பிட்டு, பரிசுகள் பெற்றுக்கொண்டு வீடு சென்றனர். மகிழ்வாய் முடிந்தது சுதந்திர தினம். 

தொடரும்…

sowmyamanobala@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button