சிறுகதைகள்

சைலோசைபின் – வளவன்

சிறுகதை | வாசகசாலை

“வா பிரபா. பிரியாணி பார்சல் தான. அஞ்சு நிமிஷம், உட்காரு”

கடைவாசலில் ஓரமாயிருந்த நாற்காலியில் அமர்ந்தான் பிரபாகர். கண்கள் சொந்த ஊரின் புதிய கடைகளை அலசிக் கொண்டிருந்தன. எதிரே டீக்கடையில் நான்கைந்து பேர் புகைப்பிடிப்பதைப் பார்த்தவுடன் சென்னை நாட்கள் நினைவுக்கு வந்தன. நெடுநாள் கழித்து, அதுவும் கொரோனா ஊரடங்கால் தான் ஊருக்கு வந்திருக்கிறான். வந்து ஆறு மாதங்களாகியும் சிகரெட்டைத் தொடாதது ஆச்சர்யம் தான். சொந்த ஊரில் ஒருவனாகவும், சென்னையில் மற்றொருவனாகவும் இருப்பது போலித்தனமென்றால், யார் நிஜமான ‘நான்’ என்ற சிந்தனைக்குள் போவதற்குள், “பிரியாணி ரெடிபா” என்று பார்சலை நீட்டினான் ஒருவன். அவனுடைய பால்ய காலத்து நண்பனின் கடை தான் அது. அவனைப் பார்த்தவுடனே எண்ணவோட்டங்கள் திசை மாறின. கூடப் படித்தவன் சொந்தமாகவே கடை திறந்துவிட்டான், நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற சிந்தனை தனக்கு வருவது எதார்த்தமான இந்த வயதின் தேடல் என்பதைப் புரிந்து கொண்டான். பிரபாகரின் தற்போதைய வேலை, ஒரு யூடியுப் சேனலில் காணொளிகளுக்கும், விளம்பரங்களுக்கும் வசனம் எழுதுவது. இதெல்லாம் வீட்டிற்குத் தெரியாது. பொறியியல் சம்பந்தமான ஒரு கம்பெனியில் இருப்பதாகச் சொல்லி வைத்திருந்தான். யூடியூப் சேனலை ஒரு பணியிடமாகக் கொள்ள முடியுமா என்ற சந்தேகமுள்ள தலைமுறையின் புதல்வன் அவன்.  எழுதுவது தான் அவன் கனவு. இலட்சங்கள் சம்பாதிக்கப் போகும் பொறியாளனாகத் தன்னைப் பார்க்கும் அப்பாவிடம் எப்படி இதைப் பற்றி சொல்வது? உண்மையான அவன் யார், எது போலி என்று அவனால் ஒருவாறு சொல்லிவிடமுடியும். ஆனால், அப்பாவிடம் முடியாது.  இருந்தாலும் அதற்கான மனம் இப்போது வந்துவிட்டது, வாய் தான் வரவில்லை.

தன் வீட்டு மாடியிலிருந்து பிரியாணி வருவதை ரசித்துக்கொண்டிருந்தான் பிரபாகரின் தம்பி, திவாகர். துள்ளியோடி வந்து பிணத்துக்கு முன்னாடுபவன் போல் பிரியாணிக்கு வரவேற்பு கொடுத்தான்.

மஞ்சள் நைட்டி, அடர்த்தி குறைந்த கருப்பு வெள்ளை முடி, இதெல்லாவற்றையும் ஒரு தண்ணீர் குடம் தூக்கிக் கொண்டுபோவது போலிருந்தது. சமைத்து சமைத்தே மெலிந்த உடல்.  வடிவம்மா குடத்துடன் கொல்லைப் பக்கத்திலிருந்து வந்தாள். “எடுத்து வை, சாப்டலாம்” எனக் கண்ணால் சொல்லவே, பிரியாணிப் பொட்டலம் திறக்கப்பட்டது. லேப்டாப்பில் வீட்டிலிருந்தே வேலை செய்து கொண்டிருந்த அப்பா வேகமாக வாசனையை நோக்கி வந்தார். அடைத்த மூக்கைச் சரி செய்தவாறு, வடிவம்மா தண்ணீர் எடுத்து வந்து அமர்ந்தாள்.  பொட்டலத்தைத் திறந்ததும் தம்பிக்குத் திருப்பம்! , “மா! சிக்கன் தானம்மா கேட்டேன். இது”. அப்பா என்னவென்றே தெரியாமல் இரண்டு வாய் வைத்த பின், “ஆமா டா. இது மஷ்ரூம் டா. சிக்கன் வாங்கத் தான போன”. “இல்லப்பா, இதான் இருந்துது”

“எனக்குத் தெரியாது. இதுலாம் கணக்குல கிடையாது. எனக்கு சிக்கன் வேணும்” தம்பி பத்தாவது படிக்கிறான், ஆனால் இப்போது அவன் முகத்திற்கு மூன்று வயதானது.

“இன்னிக்கு சாப்டுடா, நாளைக்கு வாங்கிக்கலாம்” என்று கொஞ்சினார்கள் இருவரும். பிரபாவுக்கு, “இதெல்லாம் ஒரு பிரச்சனையா. நாட்டுல எவ்ளோ பிரச்சன இருக்கு” எனத் தோன்றியது. அம்மாவின் ப்ளேட்டில் ஒதுக்கப்பட்டிருந்த மஷ்ரூம் பீஸ்களைத் தம்பி ஒவ்வொன்றாய் எடுத்தான். இதைக் கண்டே கொள்ளாத அண்ணனுக்குத் தெரியாமல் திருடுவதாய் வேறு ஒரு நினைப்பு. “எனக்குப் போதும் நீங்க சாப்டுங்க” கை கழுவதற்காகக் கொல்லைப்பக்கம் போனாள் வடிவம்மா. அம்மாவின் பாதியை மூவரும் முடித்தாயிற்று.

அப்பா எழுந்திருக்க நினைக்கிறார். முடியவில்லை. “என்னடா ஒரு மாதிரி வைத்தடிச்ச மாதிரியிருக்கு” என்று சுவற்றில் சாய்ந்தாற்போல எழுந்து ஒரு மாதிரி இடதும் வலதுமாய் நடந்து சென்றார். ஒரு வேலை அப்பா திரும்பவும் குடிப் பழக்கத்தை ஆரம்பித்துவிட்டாரோ என்று சந்தேகம் வந்து விட்டது.

தம்பி “டேய். பிரபா” என்றான். பிரபா, டிவி பார்த்துக்கொண்டிருந்ததால் சரியாக கேட்கவில்லை. “டேய் பிரபா. எல்லாமே ரெட்டா தெரியுதுடா” என சொல்வதற்குள், “என்ன எப்ப பார்த்தாலும் டேய் டேய்னு!” என திட்டிக்கொண்டே பிரபா அடிக்கக் கையை ஓங்கினான்.  திவாகரின் முதுகெலும்பு செடி சாய்வதுபோல் தரையில் வீழ்ந்தது. தன் வலக்கையிலிருந்த ஒரு பெரிய கத்தியில் இரத்தம் வடிவதைக் கண்டான். தம்பியின் இடப்பக்க இடுப்பில் பச்சை இரத்தம் கசிகிறது. தலையே சுற்றிவிட்டது பிரபாவுக்கு. தலையை தெருநாய் போல உதறிய பின் கத்தியும் இரத்தமும் மறைந்தது.

தம்பியை எழுப்புகிறான், எழுந்திருக்கவில்லை. ஆனால் தம்பி கண் திறக்காமலே பேசத் தொடங்கினான். “மிஸ். நா எதுமே பண்ல மிஸ். பிரபா தான் உங்களுக்கு ஸ்மேக் போட்டான்” என்று புலம்பியதும் பிரபாவிற்கு எல்லாம் புரிந்தது. கொல்லைக்கு சென்ற அப்பாவை பார்க்க போனான். முகத்தை திரும்ப திரும்பக் கழுவிக்கொண்டிருந்தார். அந்த ஆறடி மனுஷன் அசதியாயிருந்தாலும் கண்ணில் ஒரு தெளிவான தொனியிருக்கும். அது லேசாக குறைந்ததுபோல் உணர்ந்தான். ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு தலையை உதறினார். அவர் தலையில் ஒரு மினுக்கும் கற்கள் கொண்ட தங்கக்கிரீடம் இருந்ததைப் பார்த்தான். மீண்டும் தலையை உதறினான். கிரீடம் போய் ஹெல்மெட் ஆனது. வேகமாகத் தலைப்பொட்டில் கைகளால் தேய்த்துக் கொண்டான். அம்மாவைத் தேடி ரூமுக்கு சென்றால், ராணியைப் போல விக்டோரியா உடையிலிருந்த அம்மா, “டேய், அந்த வெளிக்கதவ மட்டும் பூட்டிடு, நா கொஞ்ச நேரம் தூங்கப் போறேன்” என்றாள்.

“சொந்த ஊரில், மேஜிக் மஷ்ரூம் கெடக்கிது. இவனுக்கு தெரில பாரேன். சரியான பழம்டா நீ” என்று தன் நண்பர்கள் தன்னைத் திட்டியது நினைவுக்கு வந்தது. அவன் அதுவரை முயன்றதேயில்லை. ஏதோ கலர் கலரா வரும், நிறைய கற்பனைத்திறன் வளரும்னு என்னென்னமோ சொல்லியும் அவன் அன்று முயலவில்லை. “யாராவது வருவதற்குள் கதவைச் சாத்து. போ, போ, போ” என ரூமிலிருந்து வாசல் வரை இரு பக்கங்களும் இளஞ்சிவப்பு நிற ராணுவப்படை உடுப்பில் கையில் துப்பாக்கியுடன் பத்து பேர் வரிசையாய் நின்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். வேகமாக ஓடிச் சென்று கதவையடைத்தான். அந்தக் கூட்டம் மறைந்தது. பொறுமையாக உள்ளே வந்தான். அப்பா தம்பியை எழுப்பிக் கொண்டிருந்தார். அப்பாவிடம் “மேஜிக்” மஷ்ரூம் பற்றி சொன்னான். தர்மசங்கடமான ஒரு காட்சி தான். “நல்லவேளையாக அம்மா மஷ்ரூமை தவிர்த்து விட்டாள்” என்றார்.  நண்பனின் கடை தானே, அப்பாவிடம், “போய், கடைல கேட்டு வரேன்பா. நீங்க ரெஸ்ட் எடுங்க” என பிரியாணிக்கடைக்கு விரைந்தான். பயந்து விட்ட அப்பா, மருத்துவமனை செல்ல ஆயத்தமானார்.

கடை வாசலில், போதையானவர்களின் சண்டை போடும் உடல் பாவனையே விநோதமாயிருந்தது. அதை இவன் போதையுடன் பார்த்ததும், எண்ணிலடங்காக் கண்ணாடி பிம்பம் போல் குழம்பி விட்டான். வானவில்லில் குளித்தவர்கள் போல அவர்கள் நிறம் குழைந்து கொண்டேயிருந்தது. நிறையப் பேர் கடைக்கு முன் தகாத வார்த்தையில் தகுந்தவாறு திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கடையில் வேலை செய்யும் வயதானவர், பிரபாவைப் பார்த்ததும் வேகமாக வெளியே வந்தார். “தப்பாயிப் போச்சு , பிரபா. மஷ்ரூம் மாறி வந்துருச்சு. எவனோ மெனக்கெட்டுப் பண்ண மாதிரியிருக்கு. இருபது முப்பது பேர் கிட்ட சாப்ட்டாங்க. போலீஸ் கேஸாய்டும் போல. என்னா பண்றதுன்னே தெர்ல.  வீட்ல சாப்டாங்களா?” அவன் முகத்திலிருந்தே புரிந்து கொண்டார். “ஒன்னும் பிரச்சனையில்லனு சொல்லிடு பிரபா. விஷ மஷ்ரூமில்லையாம். இவங்கலாம் ஆஸ்பிட்டல் போய்ட்டுத் தான் வந்திருக்காங்க. பயப்பட வேண்டாம்னு சொல்லிடு. டாக்டர் நாலஞ்சு மணி நேரம் தூங்குனாச் சரியாயிடும்னு சொன்னாராம்”

மதிய வெயிலில் லேசான வியர்வைத் துளியாய், அவன் மூளையில் மஷ்ரூம் பூத்திருந்தது. வீட்டு வாசலில் அப்பா தலைக்கு முட்டுக் கொடுத்து அமர்ந்திருந்தார், மருத்துவமனைக்குப் போவதற்கு தயாராக. நடந்ததைச் சொன்னான். அம்மாவுக்கு இப்போது தெரிந்தால், பதற்றமடையலாம் என்பதால் இருவரும் தம்பியை மெல்ல நடக்க வைத்து, வீட்டை வெளிப்புறமாய்ப் பூட்டினார்கள். மொட்டை மாடியில் ஒரு அறையுள்ளது. பிரபாவின் அறை. மெதுவாக மாடிக்கு போதையுடன் ஏறினார்கள். போதையும் கூடவே ஏறியது. தம்பியைக் கட்டிலில் சாய்த்து விட்டு, அப்பாவும் மகனும் எதிரெதிர் வாக்கில் சுவரில் சாய்ந்தவாறு அமர்ந்தார்கள். இதுவரைக்கும் பிரபா பயந்ததை விட, இப்போது தான் பீதி மலையுச்சியிலிருந்தது. அப்பாவின் கிரீடம் வேறு வந்து வந்து போகிறது. தான் இப்போது அப்பாவுக்கு எப்படித் தெரிவேன் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தான். அவராகப் பேசட்டும் என்று அமைதியாக இருந்தான். கடையையும் முதலாளியான அவன் நண்பனையும் அப்பா புதுப்புதுக் கெட்ட வார்த்தைகளில் திட்டினார். ஆனால் அவனுக்கு நெஞ்சில் தங்கக் கவசத்துடன் , லுங்கியில் போர்வாள் இருப்பது போல் தான் காட்சியளித்தார். முதல் முறையாக குடும்பத்துடன் மஷ்ரூம் போதையான ஒருவனுக்கு எந்தக் காட்சியும், நகைச்சுவையாகத் தோன்றுவதில்லை தான். அவர்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை அவன் ஒரு பழம். எதையாவது உளறி விடுவானோ என்ற பயம் தான் அவனுக்கு நிறைய இருந்தது. அப்பாவே தொடங்கினார். “உன்னப் பாத்தாலே எரிச்சலாவுது” பேசினால் இன்னும் வளருமென அமைதியாக இருந்தான் பிரபா. “படிச்சு மூனு வருஷமாச்சு, ஒரு நல்ல வேலைக்குப் போனாத் தான நாலு பேர்ட்டச் சொல்ல முடியும். பத்தாயிரம்லாம் ஒரு சம்பளமாடா. வாட்ச்மேன் சம்பளம்டா”

இதை ஒரு நல்ல நேரமாகவும், இதைப் பயன்படுத்தி எழுத்து மீதுள்ள ஈடுபாட்டைப் பகிர நினைத்தான். ஓரளவு பயந்தாலும், இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. எதாவது சண்டையானால், போதையில் சொன்னதாகச் சொல்லிக் கொள்ளலாமெனத் திட்டமிட்டான். தோன்றியவற்றையெல்லாம் சொல்லிப் பார்ப்போம், அப்பா ஆழ்மனசுல எப்படி நினைக்கிறாரென்றாவது தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு நினைக்க நினைக்க அப்பாவின் உருவம் பெருசாகமலே பிரம்மாண்டமாவது போல் தெரிந்தது.

“எனக்கு காலேஜ்லந்தே எழுதுறது பிடிக்கும்பா. புக் எழுதனு, சினிமால எழுதனும்னுலாம் ஆசை. உங்கள்ட்ட எப்படி சொல்றதுனு”

தன் கைகளால் அவனை நோக்கி, ஏதோ சொல்லவந்துவிட்டு நிறுத்திக்கொண்டார்.

“அதெல்லாம் ஈசியில்லாடா. எவ்ளோ பேர் கெடக்காம வாழ்க்கையத் தொலச்சிருக்காங்க. எழுதி நல்லா சம்பளம் வந்து செட்டில் ஆகுறதெல்லாம் யாராச்சும் நூத்துல ஒருத்தனுக்குத் தான் கிடைக்கும். நம்ம நிலம தெரியாமப் பேசுற. சின்ன வயசுலயே கடனெல்லாம் சொல்லி வளத்துருக்கணும் “

“நம்ம மிடில் க்ளாஸ் தான்பா. ஏழையில்ல. ஒரு வீடிருக்கு. கடைசி வரைக்கும் ஓரளவு சம்பளம் இருந்தாக் கூடச் சாப்பிட்டுப் பொழச்சிக்கலாம். பணந்தான் பிரச்சன்னனா, எப்படியாச்சும் நா பொழச்சிக்குவேன். அந்தளவுக்கு என்னால சம்பாதிக்க முடியும்”

“முட்டாப் பையனா விட்ருலாம். நல்லாப் படிக்கிற பய, உன்கூட இருக்குறவுங்க மாதிரி நீயும் நல்லாச் சம்பாதிப்பனு நெனச்சேன் பாரு. என்னச் சொல்லனும். மிடில் க்ளாஸ் தான், ஏழையில்லங்குற? நானும் இதே மாதிரி நாம பிச்சக்காரங்கயில்லை. ஏழை தான், கடைசி வரைக்கு சாப்புடலாம்னு எங்கப்பாட்ட சொல்லிருந்தா, ஊர்ல குடிசைல தான் இருந்திருப்ப”

மஷ்ரூமின் குடை போல இருவர் மனமும் பரந்து விரிகிறது. அதன் நடுவே செங்குத்தாக நறுக்கியதுபோல, ஒரு பிளவு.  ஒன்று, எந்த போதையுமறியாத எப்போதும் சாதாரணமாக தனக்குள்ளிருக்கும் ஆசை, கோபம், கனவு, இலட்சியம் என்ற எல்லாம் கொண்ட ஆழத்திலுள்ள “மனது”. இன்னொன்று, தான் போதையில் இருக்கிறோம் எதைப் பேச வேண்டும், வேண்டாம் என்பதைத் தெளிவாக அறிந்து தணிக்கை செய்யும் “மூளை”. இப்போது கோவப்படனுமென ஒன்றும், போதையில் உள்ளோம் பார்த்து யோசித்து, போதையான அப்பாவிடம் பேச வேண்டுமென இன்னொன்றும் களமாடிக் கொண்டிருந்தது. மூளையை மடித்துப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, மனது விவாத மேடைக்கு வருகிறது.

“கிராமத்துல நம்ம தாத்தா படிக்கல, வீடுமில்ல. நீங்க படிச்சு டவுன்ல வீடு வாங்கிட்டீங்க. கஷ்டப்பட்டுப் படிச்சு, கிராமத்த விட்டு வெளிய வந்து ஏதோ ஒரு வேலைக்குப் போய் நீங்க தாத்தாவ விட ஒரு படி மேல வந்தீங்கல்ல? அந்த ஏதோ ஒரு வேலைக்குப் பதிலா,ஒரு படி மேல போய் எனக்குப் புடிச்ச வேலைய பாக்குறேன். தாத்தாட்ட காசில்ல, நீங்க ஏதோ ஒரு வேலைக்குப் போயாகணும். உங்கள்ட்ட இப்ப நிலையான சம்பளமிருந்தும், நான் ஏன் ஏதோ ஒரு வேலைக்குப் போயே ஆகணும்? எனக்குப் புரியல மை லார்ட்”. ஒருவேளை அவன் ஒரு வக்கீலாக அவர் கண்ணுக்குத் தெரியலாம் என்ற எண்ணத்தில் மஷ்ரூம் “மை லார்ட்” என்ற வார்த்தையைச் சேர்த்துவிட்டது. வலப்பக்கத்தில் ஒரு குற்றவாளிக் கூண்டு உருவாகிக் கொண்டிருந்தது. அறையே அவனுக்கு நீதிமன்றமானது. பின்னாடி அம்பேத்கர், காந்தி படங்களுக்குப் பதில், சுவர் முழுதும் தன் அப்பாவின் நண்பர்கள், சொந்தக்காரர்கள் படங்களாயிருந்தது. அவர்களுக்கு ஏற்றப்பட்ட ஊதுபத்தி மெல்லிசான மஷ்ரூம் உருவத்திலிருந்தது.  இது போதை தான் என்று சொல்லும் மூளையை மூக்கில் குத்தி மீண்டும் வென்று வந்தது மனது.

அந்தக் கூண்டில் நின்றது வேறு யாருமல்ல. சாட்சி சொல்ல வந்த காளியப்பன், அவன் தாத்தா. தாத்தா – “ எல்லாம் நான் பண்ண தப்பு. இவன் இஞ்சினியரிங் படிக்கிறேன்னு ஒத்தக்கால்ல நின்னான். பீஸ் கம்மியா இருக்கும் வேற எதாச்சும் படின்னேன். கடைசில உங்க பாட்டி நகைய அடமானம் வெச்சுத் தான் பீஸ் கட்டுனோம். ஆனா சும்மா சொல்லக் கூடாது, நல்லாப் படிச்சான். ராஸ்கோல், அன்னிக்கே வாடா, வந்து என்கூட விவசாயம் பண்ணு, காசில்ல, எதுக்குப்பா இவ்ளோ செலவு பண்ணிப் படிக்கனும்? விவசாயத்தப் பாத்துக்க. ஊர்ல எல்லாரும் பட்டணம் போயிப் படிக்கிறாய்ங்களான்னு கேட்டுருக்கணும். என் தப்புத் தான்”

அந்த கோர்ட்டின் நீதிபதி வடிவம்மா நடுமேஜையில் வேறொரு தீர்ப்பை எழுதிக் கொண்டிருந்தாள்.

“ஆசிரியர் பயிற்சி நடக்குறப்பவே கல்யாணம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்னைப் படிக்க அனுப்பல. இந்த வருத்தம் அடிக்கடி வருவதாலும், இப்போது நடக்கும் பிரபாவின் வழக்குக்கும் இந்த வருத்தத்திற்கும் சம்பந்தமில்லாததாலும் எப்போதும் செய்வதைப் போல காலம் குறிப்பிடாமல் என் வழக்கு தள்ளி வைக்கப்படுகிறது”. இவ்வாறு எழுதிக் கொண்டேயிருக்கும் போது, அப்பாவும் மகனும் தன் வாதத்தைக் கேட்காமலே நடந்து கொள்வது அவளுக்குக் கடுப்பாகி விட்டது. ஒரு பெரிய மஷ்ரூமால் மேடையை அடித்து அடித்து, “ மேஜிக்! மேஜிக்! மேஜிக்! “ என்று போகப் போகச் சத்தம் அதிகமாகத் தடார் தடாரென திரும்ப திரும்பக் கத்திக் கொண்டேயிருந்தாள். அவன் தலையிலேயே அடித்தது போலிருந்தது. அந்தக் கோவத்தில், தாத்தா சொன்னதை அப்படியே அவன் கேள்வியாக அப்பாவிடம் கேட்டான்.  அவர் மிரண்டுபோனார்.

“நல்லாப் பேசுறடா. அன்னெக்குலாம் படிக்க எவ்ளோ கஷ்டப்பட்டோம்னு உனக்குத் தெரியாது. ஒவ்வொரு நாளும் காலேஜ் போறப்ப நகைய வித்துப் படிக்கிறோம், எப்படியாச்சும் வீட்டுக்குக் காசு சம்பாதிக்கணுங்குற நினைப்போட போவேன். அதெல்லாம் உனக்கில்ல, நிம்மதியாப் படிச்சு சீக்கிரம் நல்ல வேலைக்கு போய், காலாகாலத்துல செட்டிலாய்ட்டனா, அடுத்துக்த கல்யாணம், அடுத்தது அவனுக்கும்”

நண்பர்கள் கல்யாணம் என்றால், பேச்சு எப்படியும் காமத்தில் தான் முடியும். சொன்னது அப்பா, எனவே மூளை விவாதத்திற்குப் புரட்சிப் பாதையைத் தேர்வு செய்தது. “கல்யாணம் ஒரு விஷயமா. பல ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி யாரு யார வேணாலும் வெச்சுக்குவாங்க. அப்பறம் நாலஞ்சு பேர வெச்சுக்குவாங்க. அடுத்தது என்னவோ. என்னோட அறுவது வருஷ வாழ்க்கைய, வேலைய, நிம்மதிய இப்படிக் கன்னாபின்னானு மாறிக்கிட்டேயிருக்கிற கல்யாணம்ங்கிறத வெச்சி முடிவு பண்ணணுமா”

“இந்தளவுக்கா என் எதிர்பார்ப்புகளை வித்ட தூரமாயிருப்பான்!” ,அவன் அதீத போதையில் உளறுவதைப் புரிந்து கொண்டார். ஆனால், அப்பாவுக்கு வயது இன்னும் போதையைக் கூட்டியிருந்தது. ஏதோ அந்தரத்தில் மிதப்பது போலிருந்தது. பாதங்களில் ஜில்லுப்பு.  ஐஸ் கட்டிகள் கால்களைச் கூசியது. வெண்ணிற மஷ்ரூம் உருவ மேகமொன்றின் உச்சியில் அமர்ந்திருக்கிறார். கண்ணில் லேசாக நீர் வடிகிறது. கீழே அந்த நகரமே தெரிகிறது. மஷ்ரூம் மேகம் கொஞ்ச கொஞ்சமாக உயரமாக வளர்கிறது. மஷ்ரூம் குடை வளர வளரச் சாய்ந்து சறுக்கலாகிறது. இறக்கத்தில் சற்று வழுக்குகிறது. பிரபாவின் நண்பன் கெளதம் திருமணம் செய்து கொண்டு விலையுயர்ந்த காரில் செல்கிறான். தறதறவெனச் சறுக்கித் தேய்கிறார். பக்கத்து வீட்டுப் பையன் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு வெளிநாட்டில் இருக்கிறான். திருமணமாகாமல் தன் மகன் ஓரமாக ஒரு வாடகை வீட்டில் பல் துலக்கிக் கொண்டிருக்கிறான். குடையின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்த அப்பாவிற்கு சக மேகங்களிலுள்ள பெற்றோர்கள் தன்னைப் பார்த்துச் சிரிக்கும் சத்தம் கேட்க கேட்க அவர் கைகள் வியர்த்து மேலும் வழுக்க ஆரம்பித்தது.  கைகள் தவறுவதற்குள் பயம் உந்தி விட, மூளை மனதை வீழ்த்தி நினைவைக் கொண்டு வருகிறது.

அப்பாவின் மனது தன் உண்மையான எண்ணங்களை அப்படியே  கொட்டியது.

“நீ கஷ்டப்படுறத என்னால பாக்க முடியாதுப்பா. மத்தவுங்க எல்லாம் நல்லாருக்குறப்ப நீ மட்டும் கஷ்டப்படுறத பாக்க முடியாதுப்பா. ஒரு நல்ல சம்பாத்தியத்துல சந்தோஷமா இருக்கணும்.  என்னல்லடா கேப்பாங்க. என்னா புள்ள வளர்த்திருக்கணு”

அப்பாவின் கண்ணீர், போதையில் உச்சத்தில் வந்ததென மூளை சொன்னாலும், அந்தக் கண்ணீர் வந்ததற்கு என்ன காரணமாகயிருந்தாலும், அது தனக்காகத் தான் வருகிறது என்பதை மனது ஆணித்தரமாக நம்பியது. அவனே நினைத்தாலும், இப்போது யோசிப்பது எந்த “நான்” என்று கணிக்க முடியவில்லை. உடல் சில்லானது. மூச்சு முட்டுகிறது. மூழ்கித் தவிக்கிறான். அருவியை நோக்கிய நதியைப் போல, அப்பாவின் கன்னத்தில் பாயும் கண்ணீரில் தத்தளிக்கிறான். “காப்பாத்துங்க!” எனக் கத்துகிறான். துளிகளினுள்ளே மூழ்கி மூழ்கி மேலே வருவதுமாய் அவன் தலை அலை போலத் துடிக்கிறது.  அப்பாவின் மலை போன்ற கன்னங்களில் தவழ்கிறான் . கண்ணீரிலிருந்து தவறியதும் ஒரு மாபெரும் வெள்ளை மரத்தைக் கட்டிக் கொள்கிறான். இலைகளோ, கிளைகளோ இல்லாமல் ஒரு சாம்பல் தூணாக அவனைக் காப்பற்றியது அப்பாவின் ஒரு மெல்லிய தாடி முடி. நதிவெள்ளம் நின்றதும், அதில் தொங்கிக்  கொண்டிருக்கும்போதே மஷ்ரூம் சிந்தனையைத் தட்டி விட்டது.  ஒரு வெள்ளை மயிர் அவனுக்கு காலத்தைக் காட்டியது. இப்போது விட்டு விட்டால், வெள்ளைத் தாடியாகும் வரை புலம்புவோமோ? என அஞ்சினான். அந்தரத்தில் தொங்கியதால் தவித்த அட்ரினலினும், காலம் காட்டிய பயமும் அவனைத் தெளிவாக்கிய மூளைக்கும் , உணர்ச்சிவசப்படுத்திய மனதுக்கும் நடுவில் அவனை கசக்கிப் பிழிந்தது.  மண்டை கனமான பிரபாவுக்கு என்னென்னமோ தோன்றுகிறது.  ”ஆ” ”வூ” எனக் கத்தித் தத்தளித்ததைக் கண்டு அப்பா அவன் அருகில் வந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். “என்னாச்சுடா. இங்க பாரு” என போதையில் அப்பா, அவனைக் குழந்தையாக நினைக்கும் குழந்தையாக மாறினார்.

போதை அவன் நாவில் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. “ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி இதே ப்ளாட்ல இங்க வாழந்தவுங்க எவ்ளோ கெத்தா செல்வாக்கா வாழந்தாங்க, அவுங்க பேரென்ன. சொல்லுங்கப்பா!”. இந்த உச்சகட்ட உளறலில் அவருக்குப் போதையே இறங்கி விட்டது. “தெரிலப்பா. இப்ப எதுக்கு அது”.  “தெரியாதுல்ல. இதே மாதிரித் தான் இன்னும் ஆயிரம் வருஷத்துக்கு அப்பற வரவுங்க 2020 ல வாழ்ந்தவுங்க யாரு கார் வெச்சிருந்தா, யாரு நல்லாச் சம்பாதிச்சானு கண்டுக்க மாட்டாங்கப்பா. உலகம் எதுக்கும் ரெக்கார்ட் வெச்சிக்கிறதில்லை. நம்ம  கண்ணுக்கு முன்னாடி இருக்குறது தான் வாழ்க்க. சுத்தி இருக்குறவன் என்ன சொன்னா என்ன. ஆயிரம் வருஷங் கழிச்சு எல்லாம் மண்ணுல தான். அன்னிக்கு வேற ரூல்ஸ், வேற டிரஸ், வேற மைன்ட் இருக்கும். இப்ப நம்ம சந்தோஷமா இருக்கோமாயில்லையா. அதான் முக்கியம். நான் சந்தோஷமா இருப்பேன். எனக்குத் தெரியும். நீங்களும் சந்தோஷமா இருங்க”

பேசி முடிக்கையில் அப்பா கண் மூடி ஒரு பக்கமாகச் சாய்ந்துக் கிடந்தார்.  “என்னென்னமோ பேசுற. அடப்போடா” என முனகினார்.

அன்று மாலைவரை இருவரும் அந்த அறையிலேயே தூங்கி விட்டார்கள். தம்பி எச்சிலொழுக அசந்து தூங்கியிருந்தான். அப்படி இப்படியென்று வடிவம்மாவிடம் பாதி சொல்லியும் சொல்லாமலும் சமாளித்து விட்டார்கள். அந்த விவாதம் பற்றி இருவரும் பேசிக் கொள்ளவேயில்லை. வள்ளுவர் கணக்கா தத்துவமெல்லாம் பெனாத்திவிட்டானோ என்று கூச்சமாயிருந்தது அவனுக்கு. “படிச்சது, யூடியுபில் கேட்டது எல்லாத்தையும் உளறி விட்டோம் போல”.  ஆனால், நடந்ததில் அவனுக்கு ஒரு சில விஷயங்கள் தான் நினைவுக்கிருக்கிறது. அவருக்கு எல்லாம் நினைவிருக்கிறதா?. இந்தக் குழப்பம் இருவருக்கும் இருந்ததாக இருவரும் நினைத்துக் கொண்டார்கள்.

மாலை, அப்பாவும் மகனும் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பா சேனலை ஒவ்வொன்றாக மாற்றும் போது சட்டென. “ரஹ்மானக் கூப்பிட்டு, அவுங்க அப்பா கிரிக்கேட் விளையாடுனு சொல்லிருந்தாலோ, டெண்டுல்கரைக் கூப்பிட்டு பியனோ தான் கத்துக்கணும்னு சொல்லிருந்தாலோ, அவர்கள் வாழ்க்கை என்னாகியிருக்கும்”. பட்டிமன்றம் பார்க்க வந்த  கூட்டத்திலிருந்து பலத்த  கை தட்டல்கள்.

“கை மட்டும் நல்லாத் தட்டுவாய்ங்க” என்று மனதில் நினைத்தான் , பிரபா. இப்ப அப்பா என்ன நினைக்கிறார்? ஆதரிக்கிறாரா?  சேனலையாவது மாற்றாமலிருக்க வேண்டுமென அவன் மனது ஏங்கியது. மாற்றிவிட்டால் அவன் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாகி விடுமே. அற்பம்.

அவருடைய கையிலிருக்கும் ரிமோட்டையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரபா.  வடிவம்மா, அந்த நேரம் பார்த்து அப்பாவுக்குக்  காபி கொடுக்க வந்தாள்.  ரிமோட்டை அவனிடம் வைத்துவிட்டு எழுந்து சென்றார். தன் வாழ்க்கையையே தன்னிடம் கொடுத்தது போல் உணர்ந்தான். மகிழ்ச்சி.

அவன் நன்றியுணர்ச்சியுடன் பார்க்கும்போது, அப்பாவின் தலையில் மீண்டும் அதே கிரீடம் இருப்பது போல் தெரிந்தது.  காபி டம்ளர் அவர் கை தவறி தரையில் ஊற்றியதைக் கூட அப்பா கவனிக்காமல் போகிறார். சூர போதை  இருவருக்கும்.  அநேகமாக நம்மெல்லோருக்கும்.

***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close