ராஜ் சிவா கார்னர்

கடவுளும் சாத்தானும் (V) – ராஜ்சிவா

ராஜ்சிவா கார்னர் | வாசகசாலை

‘Dark’ என்னும் நெட்பிளிக்ஸ் தொடரின் மூன்றாவது பகுதி வெளிவந்த நிலையில், பலர் அதுபற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பலருக்குப் பிடித்தும், சிலருக்கும் பிடிக்காமலும் இருக்கிறது. நான் இப்போது அதற்குள் போகவிரும்பவில்லை. ஆனால் டார்க் தொடர், காலப்பயணம் சார்ந்த அறிவியலைச் சொல்வதால் அதை இந்த இடத்தில் பேசுபொருளாக்குகிறேன். டார்க் தொடரின் ஆரம்பத்தில் இளம் காதலர்கள் இருவர் இப்படிப் பேசிக்கொள்கிறார்கள்.

அவள்: “இந்த இடமும், இப்போதிருக்கும் சூழ்நிலையும் ஏற்கனவே எனக்கு அறிமுகமானதாகத் தோன்றுகிறது. ‘டேஜா வூ’ (Deja vu) போல உணர்கிறேன்.

அவன்: “இந்த உலகமே ஒரு சிமுலேசன்தான். அதில் ஏற்படும் சிறிய தடுமாற்றமே டேஜா வூ”.

அவள்: இல்லை, அடுத்த பக்கத்திலிருந்து தற்செயலாகக் கசிந்துவந்த தகவலாக அது ஏன் இருக்கக்கூடாது?”

இவர்களின் உரையாடல் உங்களுக்குப் புரிகிறதா? ‘டேஜா வூ’ (Deja vu) என்றால் என்னவென்று தெரியாத பலர் இருப்பீர்கள். இந்த ‘டேஜா வூ’ உங்களுக்கும் பல சமயங்களில் நடந்திருக்கும். நீங்கள் முன்னர் எப்போதும் சென்றிருக்காத ஒரு இடத்திற்குப் போகும்போது, ‘அட! இந்த இடத்தை நான் எப்போதே, எங்கேயோ பார்த்திருக்கிறேனே!” என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால், நிச்சயமாக அந்த இடத்திற்கு நீங்கள் வந்தேயிருக்க மாட்டீர்கள். உங்கள் மனமோ அதை அடித்துச் சொல்லும், ‘இல்லை, இந்த இடம் எனக்கு ஏதோவொரு வகையில் பழக்கமானது’ என்று. இடம் மாத்திரமில்லை. முன்பின் அறிமுகமில்லாத சில நபர்களைப் பார்க்கும்போதோ, ஏதோவொரு காலச் சூழ்நிலையின்போதோ, ‘இவரை எங்கோ கண்டதுபோல இருக்கே!’ என்றோ, ‘இதேபோன்ற மழைக்காலத்தில் இருந்திருக்கிறேன்’ என்றோ தோன்றும். இப்படித் தோன்றுவதையே, ‘டேஜா வூ’ என்கிறார்கள். சிலருக்கு தொடர்ச்சியான சம்பவங்கள் சற்று அதிக நேரத்துக்கும் நடைபெறலாம். இப்படியான ‘டேஜா வூ’ எப்படி வருகின்றன என்பதற்கு மனவியலாளர்கள் பலவிதமான காரணங்களைக் கூறுகிறார்கள். இந்தக் காதலன் சொல்கிறான், நாம் வாழும் வாழ்க்கை ஒரு எழுதப்பட்ட கணினி நிரல் போன்றது. அதில் ஏற்படும் சிறிய குழப்பம்தான் இந்த ‘டேஜா வூ’ என்கிறான். ஆனால், அந்தப் பெண் சொல்வதுதான் இங்கு முக்கியமானது. நம் அண்டத்தின் எதிர்ப் பரிமாணத்திலிருந்து தற்செயலாக கசிந்துவந்த தகவலாக அது ஏன் இருக்கக்கூடாது என்கிறாள். இங்கு அவள் சொன்ன எதிர்ப் பக்கம் எது? அந்த எதிர்ப் பரிமாணம் எங்கிருக்கிறது? இவற்றிற்கான விடையை நாம் அறிந்துகொண்டால், ‘கடவுளும், சாத்தானும்’ என்னும் இந்தத் தொடரின் மூன்றாவது முடிச்சு அவிழ்ந்துவிடும்.

Rajsiva Corner
பேரண்டம் (Universe) ஒரு வெளியாக விரிந்திருக்கிறது. கிட்டத்தட்ட மிகமிகமெல்லிய இரப்பராக இழுத்து விரிக்கக்கூடிய மிகப்பெரிய பாய்போன்று அது விரிந்திருக்கிறது. தட்டையாக இருக்கும் பாய் ஒன்றிற்கு உயரம் கிடையாது. பேரண்டமும் எல்லையில்லாப் பெருவெளியாகத் தட்டையாய் விரிந்திருக்கிறது. இந்தப் பேரண்டப் பாயின் மேலே, பூமிபோன்ற கோள்களும், சூரியன்போன்ற உடுக்களும், பால்வெளி போன்ற உடுத்திரள்களும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் ஒரு சோபாவில் உட்காரும்போது, உங்கள் எடையின் காரணமாக அந்த சோபா சற்றுக் கீழ்நோக்கி அமிழும் அல்லவா? அதுபோல, பேரண்டப் பாயில் இவைகள் உட்காரும்போது, அந்தப் பாயும் அவற்றின் எடைகளுக்கேற்பக் கீழ் நோக்கி அமிழ்கின்றது. ஒரு உடுவின் (நட்சத்திரத்தின்) எடை அதிகமானதால் அது அதிகமான ஆழத்திற்கும், கோள்களின் ஆழம் சற்றுக் குறைந்தும் காணப்படும். கருந்துளையொன்று ஏற்படுத்தும் ஆழமோ மிகமிக அதிகமாக இருக்கும். இவை அனைத்தையும் உள்ளடக்கிய உடுத்திரள்கள் (காலக்சி) மிக அதிகமான ஆழத்தை உருவாக்கியிருக்கும். இந்தப் பொருட்களின் எடைகளுக்கேற்ப அவை இந்த அண்டவெளிப் பாயில் மேலே, கீழே என்று காணப்படுகின்றன. அதனாலேயே, பால்வெளி உடுத்திரள் தட்டையாக இருந்தாலும், அதற்கென ஒரு உயரம் கிடைத்து, முப்பரிமாணமாகக் காணப்படுகிறது. பேரண்டப் பாயானது, கண்களுக்கே தெரியாத நுண்தன்மை கொண்டதால், நம்மால் அதைக் காணமுடிவதில்லை. அதனால், அதில் உட்கார்ந்திருக்கும் பொருட்களெல்லாம் அந்தரத்தில் தொங்குவதுபோலக் காட்சி தருகின்றன. ஒன்றை ஞாபகத்தில் கொள்ளுங்கள். கதைகளில் வருவதுபோல கோள்களோ, உடுக்களோ அந்தரத்தில் தொங்குவதில்லை. அவை அனைத்தும் தமக்கென ஒரு இடத்தில், ஒரு பாயில் உட்கார்ந்தபடியே இருக்கின்றன.

Rajsiva Corner
இப்போது உங்கள் மனதில் தோன்ற வேண்டிய கேள்வி, “இவ்வளவு பிரமாண்டமான எடைகளைத் தாங்கக்கூடிய அண்டவெளி எவ்வளவு பலம் கொண்டதாக இருக்க வேண்டும்? அப்படியெனில், அதன் தடிப்பு மிகவும் பெரிதானதாக இருக்கவேண்டும்?” என்பதுதான். உங்கள் கேள்வி சரியானதுதான். அண்டவெளி, நம்பவே முடியாதளவு திடமானதுதான். எந்த எடையானாலும் தாங்கக்கூடியதுதான். ஆனால், நீங்கள் நினைப்பதுபோல, அது அதிகளவு தடிப்புக் கொண்டதல்ல. மிகமிக மெல்லியது. சொல்லப்போனால், ஒரு மென்சவ்வுபோன்றது. இவ்வளவு மெல்லிய வெளியால், அதிக எடைகளைக் கிழியாமல் எப்படித் தாங்கிக்கொள்ள முடிகிறது? இதற்குப் பதில், ‘தெரியாது’. சத்தியமாக யாருக்கும் தெரியாது. அறிவியலால் கண்டுபிடிக்க முடியாத பலவிசயங்களில் இதுவும் ஒன்று. ஆனால், ஐன்ஸ்டைன் சொன்ன கருத்து ஆச்சரியமானது. வெளியைத் துளைபோல் பிரிக்க முடியும் என்றார். அதிக ஆற்றலைக் கொடுத்து, அண்டவெளியில் ஒரு சிறுதுளையை உருவாக்க முடியும் என்றார். அந்தத் துளையினூடாக, அண்டவெளியின் வேறொரு காலம்/இடத்திற்குச் செல்லலாம் என்றார். அந்த துளையையே ‘புழுத்துளை’ (Wormhole) என்றார். இந்த வார்ம்ஹோலைப் பற்றி இப்போது பேசிக்கொண்டிருக்க முடியாது. அதை வேறொரு சமயத்தில் பார்க்கலாம்.

அண்டவெளி, மெல்லிய பாய்போன்று விரிந்திருக்கிறது. அதன் மேல்பக்கத்தில் கோள்கள், உடுக்கள் இருக்கின்றன என்பதெல்லாம் சரிதான். அந்த அண்டவெளியின் மறுபக்கம், அதாவது கீழ்ப்பக்கம் என்ன இருக்கிறது? இந்தக் கேள்வி எப்போதாவது உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? அண்டவெளியின் ஒரு பக்கம் நாமிருந்தால், அதன் எதிர்ப்பக்கம் இதேபோன்ற இன்னுமொரு அண்டம் ஏன் இருக்கக்கூடாது? இங்கிருப்பது போலவே அந்தப்பக்கமும் ஏன் கோள்களும், உடுக்களும் இருக்கக்கூடாது? இங்கு பூமியின் மனிதர்கள் வாழ்வதுபோல, அங்கும் ஒரு பூமியும், மனிதர்களும் ஏன் வாழக்கூடாது? இங்கு இதை எழுதிக்கொண்டிருக்கும் ராஜ்சிவாவும், படிக்கும் நீங்களும் இருந்தால், அங்கும் இதேபோல எழுதிக்கொண்டிருக்கும் ராஜ்சிவாவும், படிக்கும் நீங்களும் ஏன் இருக்கக்கூடாது? எல்லாமே எதிர்பிம்பமாக. கண்ணாடியில் நாம் பார்க்கும் பிம்பம் நிஜமானதல்ல என்று நமக்குத் தெரியும். ஆனால், அப்படியொரு கண்ணாடி விம்பம் நிஜமான உருக்கொண்டு அங்கு ஏன் இருக்கக்கூடாது? நிச்சயம் இருக்கும் என்கிறார்கள் இயற்பியல் அறிஞர்களில் சிலர். போல் டிராக்கின் சமன்பாடு கொடுத்த மூன்றாவது விளக்கம் இங்குதான் வருகிறது.

Rajsiva Corner

போல் டிராக்கின் சமன்பாட்டின் மூலமாக அறியப்பட்ட எதிர்த்துகள்கள், பேரண்டத்தைவிட்டு எப்படி மறைந்துபோயின என்பதற்காகக் கொடுக்கப்படும் மூன்றாவது விளக்கம் இதுதான். பிக்பாங்க் சமயத்தில் உருவான நேர்த்துகள்களும், எதிர்த்துகள் தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட பெருவெடிப்பினால், அழியாமல் எஞ்சிய நேர்த்த்துகள்கள் இந்தப்பக்கமும், எதிர்த்துகள்கள் எதிர்த்திசை நோக்கியும் வீசப்பட்டன. இந்தப்பக்கம் இருந்த நேர்த்துகள்களினால் படிப்படியாக ஒரு அண்டம் உருவாக்கப்பட்டதுபோல, எதிர்ப்பக்கமும் ஒரு எதிர் அண்டம் (anti universe) படிப்படியாக உருவானது. நேர்த்துகள்களால் எவற்றையெல்லாம் உருவாக்க முடிந்ததோ, அவையெல்லாம் எதிர்த்துகள்களாலும் உருவாக்கப்பட்டன. இரண்டு பக்கத் துகள்களுக்குமான வித்தியாசம், ஏற்றம் (charge) மட்டுமே! ஏற்றம் ஒரு பொருளின் தன்மையையோ, இருப்பையோ மாற்றுவதில்லை. அதனால், நாம் வாழும் பேரண்டத்தின் அச்சு அசலான எதிர் அண்டத்தையும் உருவாக்கியிருந்தன எதிர்த்துகள்கள். கடவுளும், சாத்தானும் போல. இங்கு இருக்கும் அனைத்தும் அங்கும் இருக்கும். ஆனால் எதிராக. அதாவது, அன்டி (anti) ஆக. அன்டி ராஜ்சிவாவும், அன்டி திரிஷாவும், அன்டி வாசகசாலையும், அன்டி பேஸ்புக்கும், அன்டி நீங்களும் அங்குமிருப்பீர்கள். அங்கிருப்பது சரிதான், ஆனால், அங்கு எங்கு இருப்பார்கள்? இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருப்பார்கள்?

Rajsiva Corner

அண்டத்தையும் எதிர் அண்டத்தையும் பிரிப்பது ஒரு மிகமெல்லிய வெளியென்று சொன்னேனல்லவா? அப்படியென்றால், இந்தப்பக்கம் இருப்பவர்களுக்கு மிகமிக அருகிலேயே, எதிர் அண்டத்தினரும் இருப்பார்கள். உங்கள் வீட்டிற்கும், பக்கத்து வீட்டிற்கும் கூட, ஒரு தடித்த மதில்சுவர் இருக்கும். ஆனால், இங்கு அதுகூட இல்லை. மெல்லிய காகிதம் போன்ற இடைவெளிதான் உண்டு. என்ன, அவர்கள் அருகே இருப்பதை நம்மால் காணமுடிவதில்லை, அவ்வளவுதான். இதைப் படித்துக்கொண்டிருக்கும்போது, உங்களின் காலருகே பயங்கரமான அன்டி முதலையொன்று வாயைத் திறந்தபடி ஓடிக்கொண்டிருக்கலாம். ஒரு மிகப்பெரிய உலகமே உங்களுக்கு அருகாமையில் இயங்கிக் கொண்டிருக்கலாம். இங்கு நடப்பது போலவே அனைத்தும் நடக்கும் எதிர்ப்பக்கதில் இருந்து நழுவிவரும் தகவல்கள்தான், டேஜா வூக்கள் என்கிறாள் டார்க் தொடரின் அந்தக் காதலி. “என்ன இது, அறிவியல் சொல்லவந்து, ஒரு கப்ஸாக் கதையை அளந்துகொண்டிருக்கிறார் இவர்” என்று நிச்சயம் நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால், இந்தக் கதைகளுக்கெல்லாம், கோட்பாட்டு ரீதியான ஆதாரங்கள் உண்டு. அவற்றிற்கான விளக்கங்களையும் கொடுக்கிறார்கள் இயற்பியல் அறிஞர்கள்.

எதிர்த் திசை நோக்கி எதிர்த்துகள்கள் எப்படிச் சென்றன? ஏன் சென்றன? என்னும் விளக்கம் தெரிந்தால், நீங்களும் சமாதானமடைவீர்கள். துகள்கள் எதிரெதிராகப் பிரிந்து சென்றதன் விளக்கமே, ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருந்துளைக் கதிர்வீச்சுடனும் ஒத்துப் போகிறது. கருந்துளைக் கதிர்வீச்சு, எதிர்த்துகள்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button