கவிதைகள்

ப.மதியழகன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

ஜோக்கர்

இந்த முறை
நான் வென்றுவிடுவேன்
ஜெனி ஐயம் எ காட்
இந்தப் பிரபஞ்சம் என் சொத்து
இந்த கேலக்ஸி என்
எண்ணத்திலிருந்து தான் பிறந்தது
அடுத்து என்ன வாட் நெக்ஸ்ட்
ஜெனி நான் மனிதனல்ல
ஐயம் நாட் ஹூமன்
ஆனால் உன்னை நான்
ஏமாற்ற மாட்டேன்
இந்தப் பூமி உனக்கு நான்
பரிசாக அளித்தது
என்னை மரணம்
தொடாது ஆனால் உன்னை
தயவுசெய்து எனது
ஆத்மாவில் கலந்துவிடு
அப்போது நாம் மரணத்தை
வென்றுவிடலாம்
நான் உன்னைக் காதலிக்க
காரணமிருக்கிறது இப்போது
என்னால் அதை
விளக்க முடியாது
ஆஃப்டர்ஆல் யு ஆர் ஹூமன்
ஐயம் எ காட்
நான் தூங்குவதில்லை
ஏன் தெரியுமா உன்னை
மறப்பதற்கு மூளைக்கு
சந்தர்ப்பம் அளிக்கக்கூடாது என்பதற்காக
அவர்களெல்லாம் பிணங்கள்
கல்லறையில் உறங்குபவர்கள்
என்னுடைய இன்னொரு முகத்தை
அறியாதவர்கள்
நான் ஒரு கொலைகாரன்
ஆனால் எனக்குள்ளும்
இதயம் இருக்கிறது
பிணக்கொட்டகை தான்
இந்த உலகம்
மூழ்கப் போகும்
கப்பல் தான்  இந்த உலகம்
Everbody is lonely
உன்னை மட்டுமாவது நான் ….
இந்த மண்தான் மனிதர்கள்
பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையே உலாவுபவர்கள்
ஐயம் எ காட்
இந்த உலகத்தில்
என்னுடைய அனுமதியில்லாமல்
மரத்திலிருந்து இலைகூட
கீழே விழாது
என்னைப் புரிந்துகொள்ள முடியாது
இது என்  முகமூடி
என்றுகூறி விலகினாலும் சரி
இது தான் நிஜம் என்று
என்னை ஏற்றுக்கொண்டாலும் சரி
நான் பிறக்கவில்லை
அதனால் இறக்கவுமில்லை
இயேசுவை உயிர்த்தெழ
வைத்தது நானல்ல
நான் இந்தப் பிரபஞ்சத்தின்
கடவுள்
இந்த விதி என் ஜெனிஃபரையும்
சவமாக்கிவிடும்
அவளை இழந்துவிட்டு
நான் அனாதையாக
பிணக்குவியல்களுக்கு மத்தியில்
அலைந்து கொண்டிருப்பேன்
Because
IAM A GOD!

***

ஆனந்தயாழ்

 

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்கு
அருகில் களிமண் உண்டியல்
வாங்கி வைத்திருந்தோம்
ஷமி குருவி சேர்க்கிறமாதிரி
அதில் சில்லரைகளை
சேர்த்து வைத்திருந்தாள்
பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு
வரும் போதெல்லாம்
அந்த உண்டியலை
குலுக்கிப் பார்ப்பாள்
அலுவலகம் விட்டு
வரும்போதெல்லாம் இரண்டுரூபாய்
நாணயத்துக்காக உறங்காமல்
வாசலிலேயே காத்திருப்பாள்
வாழ்க்கை நாம் எதன்மீது
அலாதிப் பிரியம் வைக்கின்றோமோ
அதைப் பறித்துக் கொண்டுவிடுகிறது
ஷமி இறந்து போய் மூன்று
மாதங்கள் உருண்டோடிவிட்டது
அவள் இல்லாமல் வீடே
வெறிச்சோடிக் கிடந்தது
சத்யா திருப்பதி போகலாம்
என்றாள்
எனக்கும் விருப்பம் தான்
போய்வந்தால் பாரம் குறையும்
அப்பா உண்டியல் காசை
துணியில் முடிந்து
திருப்பதி உண்டியலில்
போட்டுவிடலாம் என்றார்
ஷமியின் நினைவாக
வீட்டில் இருப்பது
அந்த உண்டியல் ஒன்றுதான்
அதை என்னால்
இழக்க முடியாது என்றேன்
இரவு வீடு திரும்பும்போதெல்லாம்
உண்டியலைக் குலுக்கும் சப்தம்
உள்ளேயிருந்து கேட்டுக்
கொண்டுதான் இருக்கிறது
கூடவே ஷமியின்
சிரிப்பு சத்தமும்!

***

எஸ்கலேட்டர்

எப்பவுமே நகரும்படிக்கட்டுகள்
எனக்கு அந்நியமாகத்தான் தோன்றும்
வேடிக்கைப் பார்ப்பதோடு சரி
எப்போதும் தூரத்தில் சற்று
விலகியே நிற்பேன்
சமதளம் எப்படி படிகளாகிறது
என்ற கேள்வி அடிக்கடி
எனக்குள் எழுவதுண்டு
எஸ்கலேட்டர் நமக்கு ஒத்துவராது
என்ற முடிவுடன்
படிக்கட்டுகளையே பயன்படுத்திவந்தேன்
சர்வசாதாரணமாக எஸ்கலேட்டரில்
பயணிப்பவர்களைப் பார்த்தால்
பொறாமையாக இருக்கும்
இனியும் அச்சம் கொண்டு
தயங்க எனது ஈகோ மறுத்தது
பாரதி கண்ட
புதுமைப் பெண்ணல்லவா
சென்ட்ரல் ரயில் நிலைய
எஸ்கலேட்டரில் கால்ஊன்றி
விறுவிறுவென நடக்க ஆரம்பித்தேன்
ஆனால் முன்நகராமல் அதே
இடத்தில் நிற்பது போன்ற
பிரமை ஏற்பட்டது
எதிரே வந்தவர் கைகாட்டினார்
அது மேலே செல்லக்
கூடியது என்று
எனக்கு அசடு வழிந்தது
இப்படியான உலகத்தில்
இப்படியாக இருப்பது
இப்படிப்பட்ட கஷ்டத்தில்
கொண்டு போய்விடும்
இப்படிக்கு இன்னார் என்று
எழுதி வைத்துக்கொள்ளுங்கள்!

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close