இணைய இதழ்இணைய இதழ் 50சிறுகதைகள்

பிரதியெடுக்காதே – ராம்பிரசாத்

சிறுகதை | வாசகசாலை

“உனக்குத் தெரியுமா? சரித்திரம் புகழும் ஈடு இணையற்ற காதலர்களாய் நாம் வலம் வருவோம் என்று ஒரு காலத்தில் நான் நினைத்திருந்தேன்” என்றாள் மிலி படுத்திருந்த படுக்கையில் வீட்டின் கூரையைப் பார்த்தபடி.

“ஏன்? அதற்கென்ன?” என்றான் கரீம் மிலியின் அருகில் அவளுக்கு முதுகைக் காட்டியவாறு.

“அதற்க்கென்னவா? நாம் காதலிக்கத் துவங்கி ஆறு ஆண்டுகள் ஆகிறது கரீம். இன்னமும், நாம் ஒருவருக்கொருவர் பொருத்திக்கொள்ளவும், பொறுந்திக்கொள்ளவும் பிரயத்தனப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறோம். உன்னுடன் ஒரு ஒருமைத்தன்மையை இன்றளவிலும் நான் உணரவில்லை. இதற்கு மேலும் அப்படி ஒரு ஒருமைத்தன்மை நமக்குள் ஏற்படும் என்ற நம்பிக்கையும் இல்லை. ” என்றாள் மிலி.

அவள் முகத்தில் கவலையின் ரேகைகள் படர்ந்திருந்தன. படுக்கையில் அவளின் அருகில் படுத்திருந்த கரீம், திரும்பி, ஒரு கணம் தலை உயர்த்தி மிலியைப் பார்த்தான்.

“எப்படி எப்படியெல்லாமோ முயற்சித்து விட்டேன் கரீம். முதற்கண் என் எதிர்பார்ப்புகளைக் குறைத்துகொண்டேன். என் பிறந்த நாளுக்கு நீ எனக்கு மிகவும் பிடித்த பொருளை பரிசளிக்காதபோது, அது சந்தையில் கிடைத்திருக்காது என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன். அது என்ன பொருள் என்பதைக் கூட நீ கவனிக்கவில்லை என்பது பிற்பாடு தான் தெரிந்தது. அன்றொரு நாள், நான் எனது மகிழுந்தில் மிக நீண்ட தூர பயணம் சென்று வரவேண்டும் என்று சொன்னபோது, நீ உடனே கிளம்பினாய். ஆனால், சக்கரம் வெடித்துப் பாதியில் நின்றபோது தான் காற்றடிக்கத் தேவையில்லாத சக்கரங்களை நீ என் மகிழுந்தில் பொருத்தாமல் உனது மகிழுந்தில் பொறுத்திக்கொண்டாய் என்று புரிந்துகொண்டேன். என் மீதான உன் அக்கறை இவ்வளவு தானா? ஒருக்கால் அந்தத் தொலைதூரப் பயணத்தை நான் தனியே மேற்கொண்டிருந்தால் என்னவாகியிருக்கும்? இப்போதெல்லாம் உன்னிடம் செய்யச் சொன்னவைகளை, நான் வெளி ஆட்களை வைத்து, அவைகள் சரியாகச் செய்யப்பட்டிருக்கின்றனவா என்று ஒருமுறை சோதித்துக்கொள்கிறேன். சமயத்தில் குழப்பமாக இருக்கிறது. நீ என்னுடையவனா, அல்லது என் கவலைகள் மட்டுமே என்னுடையதா என்று”

“நம்முடைய இந்த உறவில் நானே எப்போதும் மன்னிப்பு கோருபவளாக இருக்கிறேன்; தவறு என்னுடையது இல்லை என்றபோதிலும். உனக்கு முக்கியமான எதையும் நீ இதுவரை எனக்காகத் துறந்ததே இல்லை. படுக்கையில் நீ என்னைக் கட்டி அணைத்துக்கொள்வதில்லை.  காதல் ஒரு இருவழிப்பாதை. ஆனால், அது நம்மிடையே ஒருவழிப்பாதையாக மட்டுமே இருக்கிறதோ என்று தோன்றுகிறது. நான் என்ன செய்ய வேண்டும், வேண்டாம் என்பதை நீ மட்டுமே முடிவு செய்து விடுகிறாய். அடுத்தவர்கள் முன் என்னைத் தரம் கெட்டு விமர்சிப்பதை, உள் நோக்கமற்று தற்செயலாக நிகழும் ஒன்று என்றே நீ வகைப்படுத்த முயல்கிறாய்.  என் பிரச்சனைகள் குறித்தும் சுயஐயங்கள் குறித்து, அவைகள் கேட்டுக்கொள்ளப்படமாட்டாது என்ற புரிதலில் நான் வெளிப்படுத்துவது கூட இல்லை. பெரும்பாலான சமயங்கள் என் வார்த்தைகள் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகின்றன.  என் வருமானத்தில் நீ கடன் பெற்று வாங்கிப்போடும் விலை உயர்ந்த பொருட்கள், நமக்கே நமக்கான ஒரு குடும்பத்தை நாம் உருவாக்கிக்கொள்வதிலிருந்து நம்மை விலக்கியே வைக்கின்றன. நான் இது எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வைத் தேட முயல்கிறேன். ஆனால், என் முயற்சிகள் பெரும்பாலும் வீணாகவே காண நேர்கிறது” என்றாள் மிலி, கண்களில் வழிந்தோடும் கண்ணீருடன்.

பின் அவள் படுக்கையில் எழுந்து அமர்ந்தபடி கூந்தலை அள்ளி கொண்டையிட்டாள்.  கண்ணீரில் நனைந்த கண்களை அசட்டையாக வலது முன்னங்கையால் துடைத்தாள்.

கரீம் அவள் மீது உருண்டு, படுக்கையின் விளிம்பை அடைந்து, சரிந்து கால்களை தரையில் வைத்தான். எழுந்து நின்றான். தோல்களை குலுக்கி, ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றிற்கு உடல் மொழியில் உருவம் தந்தான்.  பின் சற்று தள்ளி நகர்ந்து, ஜன்னலருகே சென்று, படர்ந்து கிடந்த வெள்ளைத் துணி ஒன்றை உருவினான். வெள்ளை நிறத்தில் ஆளுயற எந்திரம் ஒன்று வெளிப்பட்டது. ஒரு நவீன பிரதியெடுக்கும் இயந்திரம் போல் பொத்தான்களுடனும், மின் இணைப்புகளுடனும் தோற்றமளித்தது.

மிகைப்படுத்தப்பட்ட அடர் சிகப்பு நிறத்தில் அந்த இயந்திரத்தின் செயல்பாடுகள் விவரிக்கப்பட்டிருந்தன.

துவங்கு’ – துவக்க  இப்பொத்தானை அழுத்தவும்.

பிரதியெடு’ – பிரதியெடுக்க இப்பொத்தானை அழுத்தவும்.

பின் செல்‘ – பின் செல்ல  இப்பொத்தானை அழுத்தவும்.

இடை நிறுத்தம்’ – இடை நிறுத்த  இப்பொத்தானை அழுத்தவும்.

திருப்பிச் செய்’ – செய்ததை மீண்டும் செய்ய  இப்பொத்தானை அழுத்தவும்.

நிறுத்து’ – முற்றிலுமாக நிறுத்த  இப்பொத்தானை அழுத்தவும்.

இடை நீக்கம்’ – இடை நீக்க  இப்பொத்தானை அழுத்தவும்.

தொடர்’ – இடை நீக்கியதைத் தொடர  இப்பொத்தானை அழுத்தவும்.

பணி நிறுத்தம்’ – பணி நிறுத்த  இப்பொத்தானை அழுத்தவும்.

உதவி’ – உதவி கோர  இப்பொத்தானை அழுத்தவும்.

வேலை நிலை’ – எந்திரத்தின் தற்போதைய நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ள  இப்பொத்தானை அழுத்தவும்.

‘+’ – செய்ததை இன்னொருமுறை செய்ய  இப்பொத்தானை அழுத்தவும்.

‘-‘ செய்ய இருக்கும் எண்ணிக்கையைக் குறைக்க  இப்பொத்தானை அழுத்தவும்.

“இது என்ன?” என்றாள் மிலி தன் பார்வையை அந்த எந்திரத்தின் மீது அலைய விட்டவாறே. கரீம் அந்த எந்திரத்தின் மின் இணைப்புகளைத் தொடுக்க, எந்திரம் உயிர்பெற்றது. ஒரு எக்கலுடன் ‘ நான் தயார்’ என்றது.

“இது பிரதியெடுக்கும் இயந்திரம் மிலி. என்னை இது வெவ்வேறு விதமாகப் பிரதியெடுக்கும்” என்ற கரீம், தன் விரல்களை விசைப்பலகையில் வைத்து ‘திருப்பிச் செய்’ பொத்தானை அழுத்தினான். பின் ‘துவங்கு’ பொத்தானை அழுத்தினான். இயந்திரம் இயங்கத்துவங்க, ரத்தமும் சதையுமாக இன்னொரு கரீம், அந்த இயந்திரத்திலிருந்து வெளிப்பட்டு வழிந்து விழுந்தான். பின் அவன் தன் கை, கால்களை ஊன்றி எழுந்து நின்றான்.  மிலியைப் பார்த்து சினேகமாய்ப் புன்னகைத்தான். கரீமுக்கு அருகே அச்சு அசலாக அவனைப்போலவே இன்னொரு கரீம்!!.

மிலி அந்த நான்கரை அடி உயர எந்திரத்தையும் , இரண்டாவது கரீமையும் மாறி மாறிப் பார்த்தாள். வெறித்தாள். தோற்றத்தில் அந்த இயந்திரம், குவாண்டம் தகவல்களைத் தொகுத்து, பிரதியெடுக்கும் உலோகத்தால் செய்யப்பட்ட வாடகைத்தாய் போலத் தோற்றமளித்தது.

“நிறுத்து! உடனே நிறுத்து இந்தப் பைத்தியக்காரத்தனத்தை!” என்று கூவினாள் மிலி மிகையான பதற்றத்துடன்.

சுதாரித்த கரீம், உடனடியாக ‘இடை நிறுத்தம்’ பொத்தானை அழுத்த இயந்திரம் ஒரு கேவலுடன்  இடை நின்றது.

மிலி தன் கண்களில் வழியும் கண்ணீரை கடைசி முறையாக முழங்கையால் துடைத்தாள்.

“உன் ஏதேனும் ஒரு பிரதி என்னை முழுமையாக திருப்திப்படுத்தும் என்று எண்ணுகிறாயா?” என்றாள் மிலி.

“ஆம். அதுதான் நோக்கம், மிலி. எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனக்குத் தெரிந்து இது தான் நம் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரே வழி என்று நினைக்கிறேன்.” என்றான் கரீம்.

“இதில், ஒரு பிரதியில் நான் மிக புத்திசாலி இளைஞனாகவும், பிரிதொன்றில் வசீகர தோற்றமுள்ள  இளைஞனாகவும், இரண்டும் கலந்த ஒருவனாக இன்னொன்றிலும், சிந்தனாவாதியாகப் பிரிதொன்றிலும், நகைச்சுவையாகப் பேசுபவனாக மற்றுமொன்றிலும், இரண்டும் கலந்த ஒருவனாக இன்னுமொன்றிலும் இருப்பேன் மிலி.”

“உன் வேலை என்னவென்றால், என் பல்வேறு பிரதிகளை முயற்சிப்பதுதான். எத்தனை வசீகரமான சிந்தனை பார்த்தாயா? கிட்டத்தட்ட பல தார மணம் போலத்தான். ஆனாலும் எல்லாமும் நானாகவே இருப்பேன். வசீகரத்தின் உச்சம் அல்லவா இது!! ஒரு நாளுக்கு ஒரு பிரதி என்று நீ முயற்சி செய்யலாம், மிலி. உன்னை திருப்தி செய்யாத என் பிரதியை நீ எளிமையாகக் கடந்து, அடுத்த என் பிரதிக்கு சென்றுவிடலாம். என் பிரதிகள் உன்னைக் கட்டுப்படுத்தாது. உன் மீது எதையும் திணிக்காது.  உன் புறக்கணிப்பை ஏற்று, உடனே கடந்து போய் விடும். என் எந்தப் பிரதியும் உன்னை திருப்தி செய்யவில்லை எனில், நான் மேற்கொண்டும் பிரதிகள் எடுக்கிறேன், அவற்றையும் நீ முயற்சித்துப் பார்க்கலாம். இன்னுமொன்றும் நீ செய்யலாம். அது, தேவையற்ற பிரதிகளை நீக்குவது. ஒரு பிரதி உனக்கு திருப்தியற்றுப் போகையில், அதன் எந்த அம்சம் அதிருப்தி அளித்தது என்பது குறித்து நீ தெரிவித்தால், அந்தந்த அம்சங்கள் நிறைந்த பிரதிகளை நான் உருவாக்குவதைத் தவிர்ப்பேன். இதன் மூலம் கால விரயம் தவிர்க்கப்பட்டுவிடும். அதுமட்டுமல்லாமல், இந்த முறையில், உன்னை திருப்தி செய்யும் அந்த ஒரு பிரதியை நீ சுலபமாக, துரிதமாக அடைய முடியும். இது எல்லாவற்றின் முடிவிலும் ஒரு நாள் வரும், மிலி. அந்த நாள் நீ என்னுடன் உன்னை திருப்தி செய்யும் ஒரு பூரண வாழ்வை நிச்சயம் பெறுவாய். இந்த முறையில், நீ எப்போதும் தனிமையில் இருக்க மாட்டாய். எப்போதும் நீ என்னுடன் இருப்பாய். முயற்சித்துத் தோற்ற ஒன்றை வெற்றியடையச்செய்ய உனக்கு ஏகத்துக்கும் வாய்ப்புக்கள் கிட்டும். இது ஒரு எல்லையற்ற அல்லது நமக்கு விருப்பமுள்ள வரை எல்லையற்ற ஒரு முயல்வு.” என்றான் கரீம் எதையோ கண்டுவிட்ட முக பாவனைகளுடன்.

“இது மிகவும் பழைய தீர்வு.. உன் தீர்வுகள் கூட என்னை ஈர்க்க முடியாமல் திணறுகிறது, கரீம். இதைப் போல் ஒரு ஏமாற்றம் எனக்கு  நேர வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.” என்றாள் மிலி. அவள் முகத்தில் லேசான பரிகாசம் கலந்த ஏமாற்றம்.

“இதுதான் உன் தீர்வெனில், இதை நாம் செய்யவே வேண்டாம். முயலக்கூட வேண்டாம். அர்த்தமற்றது” என்றாள் மிலி தொடர்ந்து.

“ஏன்? ஏன் அப்படிச் சொல்கிறாய்? பழைய தீர்வாக இருந்தால் என்ன? நமக்கு வேண்டியது தீர்வு தானே? யோசித்துப் பார்த்தால் வேலை செய்யும் என்று தானே தோன்றுகிறது. இல்லையா?” என்றான் கரீம்.

“ஐயோ கரீம்! இதைத் தீர்வென்று சொல்லாதே. இது நம் இணையின் மோசமான மறுபக்கத்தைக் காட்டும் கண்ணாடி அன்றி வேறொன்றும் இல்லை” என்றாள் மிலி ஆற்றாமையுடன்.

“ஏன் இல்லை? என்ன சொல்கிறாய் நீ” என்றான் கரீம் புரியாமல்.

“உனக்குத் தெரியாமல் நான் இந்தத் தீர்வை எப்போதோ கைகொண்டு விட்டேன் கரீம். இன்னும் சொல்லப்போனால் நானே இப்படியாக உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிகளில் ஒருத்திதான். துவக்கத்தில் இந்தத் தீர்வு வேலை செய்யும் என்று தான் என்னை நானே பல்லாயிரக்கணக்கில் பிரதியெடுத்தேன். ஒவ்வொரு முறை நமக்குள் ஒத்துப்போகவில்லை என்று தெரியும்போதும், நான் வேறொரு பிரதியாக உன்னை அண்டுவேன். ஆனால், இந்த முயல்வுகளின் ஒட்டுமொத்த விளைவுகளை நான் முழுமையாக உள்வாங்கவில்லை. என்னை நானே பிரதியெடுத்து, ஆயிரக்கணக்கான மாற்றுப் பிரபஞ்சங்கள் உருவாகக் காரணமானது தான் மிச்சம்.” என்றாள் மிலி சோர்வுடன்.

“என்ன? மாற்றுப் பிரபஞ்சங்களா? என்ன சொல்கிறாய் நீ?” என்றான் கரீம் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியுடன்.

“நான் மற்ற என் பிரதிகளுடன் அளவளாவியவரையில், பற்பல பிரதிகள் எடுத்ததினால், பல நிலைகளில் நான் ஏமாற்றங்களையும், அதிர்ச்சிகளையும், சிக்கல்களையும், பிரச்சனைகளையும், சண்டைகளையுமே நான் இந்த மாற்றுப் பிரபஞ்சங்களில் உன்னுடன் மேற்கொள்கிறேன். இது நம் சேர்க்கையை மேலும் மேலும் மலினப்படுத்தவே செய்கிறது என்பதை உணர்கிறாயா? இப்படி யோசித்துப் பார். ஒரே ஒரு பிரபஞ்சம். அதில் ஒரே ஒரு  நீ மற்றும் நான். நம்மிடையே உள்ள இந்த திருப்தியளிக்கா உறவு, ஒரே ஒரு முறை உறவு தான். இதோடு விலகி, அவரவர் பாதையில் சென்றுவிட்டால் போதும். பாதையில் தவறானவர்களைக் கடப்பதில்லையா என்பது போல் கடந்து விடலாம். இல்லையா? ஆனால், பிரதியெடுத்தபிறகு, பல்லாயிரக்கணக்கான பிரபஞ்சங்களிலும் நாம் திருப்தியளிக்கா உறவுகளைத்தான் மேற்கொள்கிறோம். கொஞ்சம் யோசித்துப் பார். ஒரு பிரபஞ்சத்தில் ஒரு உறவு திருப்தியளிக்கவில்லை என்பதை விட, பல்லாயிரக்கணக்கான பிரபஞ்சங்களிலும் குறிப்பிட்ட இருவருக்கிடையிலான உறவு திருப்தியளிக்கவில்லை என்பது இன்னும் இன்னும் மோசம் இல்லையா? இது எதைக் குறிக்கிறது? இது அந்த உறவு குறித்து, அந்த இருவர் குறித்து என்ன சொல்ல வருகிறது? ஆகச்சிறந்த மோசமான சேர்க்கை என்று தான். அல்லவா?”

“ஒரே ஒரு முறை மேற்கொள்ளப்படும் உறவுகளிலாவது பொறுத்தமின்மை ஏற்படின், வேறொரு முயல்வில் நன்றாக இருந்திருக்கும் என்ற  நம்பிக்கை – அது உண்மையற்றதாக, அர்த்தமற்றதாக இருப்பினும் – சற்று ஆசுவாசம் தருவதாக இருக்கும்.  ஆனால், பல்லாயிரம் பிரபஞ்சங்களில் முயற்சிக்கப்பட்டும் தோல்வியையே தழுவும் நம் உறவில் தோல்வியின் சதவிகிதம் அச்சுறுத்த மட்டுமே செய்கிறது. இந்த உறவை மேற்கொண்ட நம்மைப் பற்றி அது உயர்வாக எதையும் சொல்வதில்லை. மாறாக, அது நம்மை ஒரு மோசமான உதாரணமாகவே சித்தரிக்கிறது கரீம்” என்றாள் மிலி.

கரீம் எதுவும் பேசாமல், அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்க, மிலி மேலும் தொடர்ந்தாள்.

“என்னையே பல பிரதிகளாக்கி உன்னுடன் உறவை மேற்கொள்ள வைத்தபோதுதான்  நான் சிலவற்றை அவதானித்தேன். அதில் நமக்கிடையேயான பொறுத்தமற்ற அம்சங்களில் முதலாவதாகவும், உதாரணமாகவும் சேமிப்பு மீதான நம் அணுகுமுறையைச் சொல்லலாம். ‘இன்றே வாழ்ந்துவிடவேண்டும்’ என்பது உன் சித்தாந்தமாகவும், ‘நாளைக்கு வேண்டும்’ என்பது என் சித்தாந்தமாகவும் இருந்தது. இதனால் நீ செலவாளியாகவும் நான் சேமிப்பவளாகவும் இருந்தோம். இந்தப் பொறுத்தமின்மையை, எத்தனை பிரதியெடுத்தும் தீர்க்க முடியவில்லை. எல்லா பிரதிகளிலும், நீ உன் அடிப்படை நிலைப்பாடான, ‘இன்றே வாழ்வு’ என்பதைக் கைவிடவில்லை. எந்தப் பிரதியிலும், என் அடிப்படை நிலைப்பாடான, ‘நாளையும் வாழ்வு’ என்பதை என்னாலும் மாற்றிக்கொள்ள முடியவில்லை. ஆயிரக்கணக்கான பிரதிகளைக் கடந்தும் நாம் ஒருவருக்கொருவர் பொறுந்த முடியாமல் திணறுவதைப் பார்க்கையில், நம் பிரதிகள், நம் தேர்வுகளில் தான் மாற்றங்களைக் கண்டனவே ஒழிய நம் அடிப்படைகளில் அல்ல என்றே சொல்லத்தோன்றுகிறது.  நம் விஷயத்தில் இந்த அடிப்படைகள் மரபணுக்களோடு தொடர்புடையனவாக இருக்கத்தான் அதிகபட்ச சாத்தியக்கூறுகள் உள்ளன. பிரதிகள் மரபணுக்களை மாற்றுவதில்லை. இங்கே இன்னுமொன்றையும் சொல்ல வேண்டும். மரபணுக்களுக்கு வெளியே உள்ளவைகளை மாற்ற நமக்குப் பிரதிகள் தேவையில்லை. நாமே மாறிக்கொள்ளலாம். ஆக, பிரதிகள் தேர்வுகளை மட்டுமே மாற்றுகின்றன. இந்த வேறுபாட்டை நான் முன் கூட்டியே கண்டறிந்திருந்தால், நம் சந்திப்பே முதற்கண் நிகழ்ந்திருக்காது. நாம் காதலர்களாகவே ஆகியிருக்க மாட்டோம். நம் பொருட்டு ஆயிரக்கணக்கான மாற்றுப் பிரபஞ்சங்கள் தோன்றியிருக்கவே செய்யாது.”

“நான் ஒரு தொலை நோக்கு பார்வையைக் கொண்டவளாக இருந்தேன். நீ அவ்விதம் இல்லை. அதனாலேயே உன்னால், ‘இன்று வாழ்ந்தால் போதும்’ என்று இருக்க முடிந்தது. பார்க்கப்போனால், இதையும் நான் உன்னுடனான உறவில் தான் கண்டுகொண்டிருக்க முடியும் என்றில்லை. என்னை நானே உள் நோக்கிப் பார்த்திருந்தால் கூட இதைக் கண்டிருக்க முடியும். அவ்விதம் கண்டிருந்தால், அதை நான் என் துணைத் தேர்வில் சேர்த்திருந்தால், நம் சந்திப்பே நிகழ்ந்திருக்காது. ஆனால், நமக்கு மிகவும் பொறுத்தமான இணைகளை நாம் இருவருமே கண்டடைந்திருப்போம். அது உனக்கு நானும், எனக்கு நீயுமாக இருந்திருக்காது. இந்த இரண்டும், மாற்ற முடியாத மரபணுக்கூறுகளால் விளைபவைகளாய் நம் பிரதிகளில் இருந்தன, இந்தப் பின்னணியில், இப்போது யோசித்தால், நம் சேர்க்கையே தவறென்று தோன்றுகிறது கரீம். ஆதலால் பிரதிகளே வேண்டாம். பிரதிகள் மாற்றுப் பிரபஞ்ச அளவில் நம் உறவை மென்மேலும் மலினப்படுத்தவே, தோல்விக்குறியனவாகவே சித்தரிக்கிறது.” என்ற மிலி, கைப்பையிலிருந்து தன் அலைபேசியை உருவினாள்.

அதிலிருந்து ‘ மாற்றுப் பிரபஞ்ச இணைச்சேர்க்கை ஆரோக்கியச் செயலி’ என்ற செயலியைச் சுட்டித் திறந்தாள். அது சற்று நேரம் யோசித்துவிட்டு,

மிலி – கரீம் இணையை வெற்றிகரமான இணையாக்கப் போதுமான மாற்றுப் பிரபஞ்சங்கள் இல்லை. காத்திருக்கவும். எதை முயற்சித்தீர்களோ, அதை மென்மேலும் முயற்சிக்க வெற்றிக்கான சதவிகிதம் அதிகமாகலாம். ‘

என்ற வாசகம் திரையில் தோன்றியது. மிலி அதைக் கரீமிடம் காட்ட, கரீம் அந்த அலைபேசித் திரையையே வெறித்தான். தொடர்ந்து, எந்திரத்தின் ‘பின் செல்’ பொத்தானை அழுத்த, இரண்டாவது கரீம் மெல்ல மெல்ல காற்றில் கலைந்து அழிந்து போனான்.

******

 – ramprasath.ram@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. Very nice story and it narrates the human values as such and warn the concepts like cloning, robot etc., with the simple terms of app and a machine like photocopying (commonly known as xerox).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button