சிறுகதைகள்

பதினான்காம் அறிவு – துரை. அறிவழகன்

சிறுகதை | வாசகசாலை

இலங்கையின் தென் பகுதி ‘காலி’ நகரம் வரை தாமிரபரணி ஆறு பாய்ந்து கொண்டிருந்தது எனும் குறிப்பை படித்ததில் இருந்து நிலை கொள்ளாமல் கொதிக்கத் தொடங்கிவிட்டது ரிஷியின் மூளை. தாத்தாவின் தாமரைப்பூ சித்திரம் வரையப்பட்ட ஆரஞ்சு நிற டிரங்கு பெட்டியை குடைந்து கொண்டிருந்தபோது அகப்பட்ட பழமை வாய்ந்த ஓலைச்சுவடியில் இருந்துதான் தாமிரபரணி ஆற்றைப் பற்றிய தகவல்கள் ரிஷியின் மூளைக்கு எட்டியது.

கை நரம்புகளை உரசிய ஓலைச்சுவடியின் அதிர்வோட்டம், முன்பு ஒருநாள் இருளப்பன் சொன்ன கதை ஒன்றை நினைவுபடுத்தியது ரிஷிக்கு. ஆதிச்சநல்லூர் காளி கோவில் குதிரை எடுப்பு திருவிழாவுக்கு முந்தின நாள் கதை அது. காளி கோவில் குளத்தை பத்து, இருபது ஆட்களோடு  தூர் வாரிக் கொண்டிருந்தபோது கிடைத்த ஆளொசர மண்பானைகள் பற்றிய சில்லிப்பான காட்சிகளை ஒரு திரைப்படம் போல் ஊருக்குள் சொல்லித் திரிந்தான் இருளப்பன். அவனுடைய ராக, பாவனையோடு ‘முதுமக்கள் தாழி’யின் கதை ரிஷியின் செவியை எட்டியிருந்தது.

குளத்தை சூழ்ந்திருந்த பனை மரங்களுக்குள் பம்மிக் கிடந்த காடைகள் ‘கீச்சொலி’ எழுப்பிக் கொண்டிருந்த உச்சிப் பொழுதில், குளத்து மேட்டுக்கு கொண்டு வரப்பட்டது ஆளொசர மண்பானைகள்; ஊர் சனங்களில் பாதிப்பேர் கூடி நிற்க, பானைகளை உடைத்துப் பார்த்தால், உள்ளே உயிர் கண் காட்டி உறைந்த நிலையில் மூதாதையர் பிணங்கள் ஒடுங்கிப் போய் இருந்தன. ஒரு டசன் பானைகள் இருக்கும். உறைந்து கிடந்த பிணங்களை ஒட்டிக் கொண்டு மண்குவளை, குவளை தாங்கி, இரும்பு அடுப்பு என கொஞ்சம் பொருட்கள் கிடந்தன. உடைபட்ட பானைகளில் இருந்து ஒடுங்கிய மூதாதை உடல்கள் ஈர மண் தரையில் சாய்ந்த கணத்தில் பனையோலைகள் முறிபட்ட சத்தமும், நாரைகள் அலறலும் கேட்டதாக நடுங்கியபடி சொன்னான் இருளப்பன். அதற்குப் பிறகு கொஞ்ச காலம் காளி கோவிலுக்கு ரெண்டு பர்லாங் தொலைவில்,  தாழைமரக் காட்டுக்குள் இருந்த ஈசமுத்துவின் கள்ளுக் கடையே கெதியாகக் கிடந்துதான் தெளிச்சி அடைந்தான் இருளப்பன்.

பனையோலைச் சுவடியில் இருந்து கிளம்பிய புராதன வௌவால்களின் எச்ச வாடைதான் ரிஷிக்குள் காளி கோவில் நினைவுகளை கிளர்ந்தெழச் செய்திருக்க வேண்டும். ரிஷியின், மண்மணத்தில் வேரோடிய மூளை பரபரக்க ஆரம்பித்துவிட்டது. தாமிரபரணி குறித்த வேறு எதுவும் குறிப்புகளைச் சுமந்த ஓலைச்சுவடிகள் இருக்குமா, என்று தூசு படிந்து நாழி ஓட்டு அடுக்குகளாகக் கட்டப்பட்டிருந்த ஓலைச் சுவடிகளைப் பிரித்து அக்குவேறு ஆணிவேராகப் பார்த்துவிட்டான் ரிஷி. அவனுடைய கட்புலனுக்கு வேறு எதுவும் புலப்படவில்லை.

ஓலைச் சுவடிகளின் தூசு மூக்கில் ஏறியதில் உண்டான தும்மலில் ரிஷியின் மூளை நரம்பொன்று விழித்துக் கொண்டு, பாபநாசத்து சிவன் கோவிலை அடைக்கலமாகக் கொண்டு வாழ்ந்து வந்த தீட்சன் சந்நியாசியை நினைவுபடுத்தியது. முன்பொருநாள் தாமிரபரணி ஆறு இலங்கையின் ‘காலி’ நகரம் வரை பாய்ந்து கொண்டிருந்த தகவலை  தீட்சன் சந்நியாசி மூலமாகக் கேட்டிருந்த நினைவுப் பொறியும் ரிஷியின் மூளைக்குள் தட்டியது.

அரச பரம்பரையைச் சேர்ந்த தீட்சன், சந்நியாசி கோலம் தரித்து வள்ளலார் வாழ்வையும், அவரது பாடல்களையும் பாடியபடி, சிவன் கோவிலின் ஈசான்ய மூலையில் காவி துண்டு சொத்துடனும் ராஜ தேஜஸ்சுடனும் வாழ ஆரம்பித்த இருபது வருடங்களுக்கு முந்தைய நாளில் ரிஷிக்கு அறிமுகமானார். இருவரும் அறிமுகமாகிக் கொண்டது ஒரு பௌர்ணமி நாளில்.  அன்றைய தினத்தில் ‘கல்யாண தீர்த்தம்’ குளக்கரையில் நின்று கொண்டிருந்த ரிஷியைப் பார்த்தவுடன், என்ன தோன்றியதோ தெரியவில்லை,  அவராகவே அறிமுகப்படுத்திக்  கொண்டு மடமடவென்று பேச ஆரம்பித்துவிட்டார் தீட்சன் சந்நியாசி.

தீர்த்தக்குளத்தின் கரையில் நின்ற புங்க மரத்தின் பச்சை நிற இலைகளின் அடர்வுக்குள் இருந்து சிவப்பு மூக்குகளை நீட்டிக் கொண்டிருந்த கிளிகளின் தலைகளுக்கு இடையில் நீந்தியபடி பயணித்துக் கொண்டிருந்தது முழு நிலவு. நிலவின் வெண்மைக்குள் கரைந்து போய் நின்ற ரிஷியின் தோளில் கை போட்டபடி பேச ஆரம்பித்தார் தீட்சன் சந்நியாசி.

” ‘பொசோன் நிலவு’ இப்படித்தான் பூத்து நின்ற ஒரு ஆடிப் பூரனை நாளில், வேட்டைக்காக காட்டுக்குச் சென்ற இலங்கை மன்னன் நீசனைப் பத்தி உனக்கு தெரியுமா? அநுராதபுரிக்கு அருகில் இருக்கும் மிகிந்தலை என்னும் மலை உச்சியில் தரிசனம் தந்த துறவியின் வாயிலாக பௌத்த தருமோபதேசம் பெற்று, மனம் திரும்பி ஆயுதங்களை வீசியெறிந்துவிட்டு, உலகின் சகல உயிர்களையும் நேசிப்பதே காவலனின் கடமை என வாழ ஆரம்பித்தவன் ‘நீசன்’ எனும் அந்த இலங்கை மன்னன். அப்படி ஒரு ஜோதி ரூபத்தின் தரிசனம்தான் என்னையும் இப்படி  சந்நியாசி கோலம் தரிக்க வைத்துவிட்டது”.  இவ்வாறு கூறிமுடித்து புன்னகைத்த போது அவரிடமிருந்து மின்னலாக புறப்பட்ட ஒளி ஒன்று மேற்கிலிருந்து, கிழக்கு நோக்கி பாய்ந்து மறைந்தது.

தீட்சன் சந்நியாசி சொன்ன விஷயம் வியப்பூட்டுவதாகவும், புதிதாகவும் இருந்த போதும், இதையெல்லாம்  ஏன் நம்மிடம் சொல்கிறார்? என்ற கேள்விதான் ரிஷியின் மனதுக்குள் முதலில் எழுந்தது. பௌர்ணமி நிலவைப் பார்த்தபடி, குளத்தங்கரை அருகாமையில் தன்னந்தனியனாக தான் நின்ற கோலம் தான் தீட்சன் சந்நியாசியை ஈர்த்து பேசத் தூண்டியிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான் ரிஷி.

“என்ன, வேலையத்த சாமியார் சமபந்தமில்லாமல் நம்மிடம் வந்து ஏதோ உளறுகிறானே என்று திகைப்பாக இருக்கிறதா?”, கேட்டு விட்டு மெல்லிதான கீற்றாக புன்னகைத்தார் தீட்சன் சந்நியாசி.

“அப்படியெல்லாம் இல்லை. தாராளமாக மனதில் நினைப்பதை பேசுங்கள்”, ரிஷி சொன்னதைக் கேட்டு கீற்று போல் கோடாக விரிந்த புன்னகை, பல் தெரியும் சிரிப்பாக மலர்ந்தது சந்நியாசி முகத்தில். சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டு இங்கும் அங்குமாக தன்னை விடுவித்துக்கொள்ள போராடும் சிறு பூச்சியாக பரபரத்து அலைந்தது ரிஷியின் மனம். காய்ந்த இலையிலிருந்து வெளிப்பட்ட நரம்புகளாக காட்சியளித்த ரிஷியின் முகத்திலிருந்து அவனது எண்ணவோட்டத்தை வெகு துல்லியமாக படிக்க முடிந்தது சந்நியாசியால். தொடர்ந்து தீட்சன் சந்நியாசி பேசிக் கொண்டு போனதைக் கேட்ட ரிஷிக்குள் இருந்து ஒரு தவிட்டுக் குருவி எச்சரித்தது.  “இவரை எளிதாக எண்ணிவிடாதே”.

உண்மையில் அவர் பேசிக் கொண்டு போன பேச்சு நாழி ஓட்டு அடுக்குகளாக ரிஷிக்குள் முகம் காட்டி படர்ந்தது. வானவியல், ஜோதிடம், மருத்துவம், புராணம் என பல்வேறு தளங்களைத் தொட்டு, தொடர்பற்ற திசைகளில், ஒரு தொடர்புப் புள்ளியை இணைக்க முயன்றதாக இருந்தது தீட்சன் சந்நியாசியின் பேச்சு. சுடராக அவருக்குள் ஒளிர்ந்த புள்ளியொன்று படலாக விரிந்து ரிஷியைப் போர்த்தியது.

“நாம இப்ப நிக்கிற இடத்தைப் பற்றி ஏதாவது தெரியுமா? அகத்தியருக்கு தன் திருமணகோலத்தை சிவன் காட்சியளித்த இடம் இது. அதனால் தான் இந்த குளத்துக்கு ‘கல்யாண தீர்த்தம்’ என்று பெயர் வந்தது”, ரிஷியின் எண்ணவோட்டத்தையோ, பதில் எதையுமோ எதிர்பார்க்காமல் தன் பேச்சை தொடர்ந்தார் தீட்சன் சந்நியாசி. கல்யாண தீர்த்தத்தில் ஆரம்பித்து, கிழக்காக பயணித்து, பாணதீர்த்தம், பொதிகை மலை என தாமிரபரணி ஆற்றின் தோற்றப்புள்ளியைத் தொட்டு, ஆறு கடலில் கலக்கும் புன்னக்காயல் நிலக்காட்சி நோக்கி விரிந்தது அவர் உரையாடல். புன்னக்காயல் கடல் நீட்சி அடைந்து இலங்கையின் தென் பகுதி ‘காலி’ நகரத்தைத் தொட்டது வரை சென்றுதான் தீட்சன் சந்நியாசியின் பேச்சு ஒரு முடிவுக்கு வந்தது; அப்படித்தான் ரிஷி நினைத்தான். ஆனால் இலங்கையின் ‘காலி’ நகரத்திலிருந்து கிளையாக விரிந்தது மற்றொரு கதை தீட்சன் சந்நியாசியிடமிருந்து.

“தொல்பொருள் ஆராய்ச்சியாளன் என்றுதானே சொன்னாய் உன்னைப் பற்றி? கிரேக்க பயணி ஒருவர் தனது பயணக் குறிப்பில் தாமிரபரணி ஆற்றை ‘தாம்ரபர்னே’ என்று குறிப்பிட்டிருப்பதும், ஈழத் தமிழர்கள் நம் குமரி மாவட்டத்து மண்ணோட மொழியைத்தான் பேசி வந்தார்கள் என்பதும் உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். ‘ஆதிச்சநல்லூருக்கும், இலங்கையின் ‘காலி’ நகரத்துக்கும் இடையில் உள்ள தொடர்பு இன்று அறுந்து போய் கிடப்பதைப் போல்தான் தாமிரபரணியின் ஓட்டமும் துண்டாகிக் கிடக்கிறது”, எங்கெங்கோ தொட்டு ரிஷிக்குள் பொறியாக இருந்த புள்ளியை நோக்கி வந்தார் தீட்சன் சந்நியாசி. அவரது பேச்சிலிருந்து, ஒரு நாரை தன் சிறகுகளைக் கோதிக் கொள்ளும் நேர்த்தியுடனும், அழகுடனும், நாழி ஓட்டு அடுக்குகளாக இருந்த பூர்வம் பாசித் தாவரமாகப் பூத்தது. நீண்ட கால  இடைவெளிகளுக்குப் பின் தீட்சன் சந்நியாசியுடனான இறந்த காலத்து உரையாடல் நினைவுகளை டிரங்குப் பெட்டிகளுக்குள் இருந்து வெளிப்பட்ட வௌவால் எச்ச வாடை சுமந்த ஓலைச் சுவடிகள் ரிஷிக்குள் விழிப்புறச் செய்துவிட்டது.

அன்றைய இரவின் இருளுக்குள், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு ஓலைச் சுவடிகளுக்குள் மின்மினிப்பூச்சிகளின் ஒளிப்புள்ளிகளாக காட்சி உருவம் கொடுத்த பௌத்த சூத்திரங்களும், தொன்ம பதிவுகளும்தான் ரிஷிக்குள் கடத்தப்பட்டு அவனை தூங்கவிடாமல் செய்தது.

‘கீச்சொலி’ எழுப்பியபடி சாம்பல் பட்சி ஒன்று விழிப்புற்ற கருக்களில் எழுந்து தீட்சன் சந்நியாசியை சந்திக்கும் நோக்கத்தில் சிவன் கோவில் நோக்கி புறப்பட்டு விட்டான் ரிஷி.

புறாக்கள் சடபடத்தும், பதுங்கியும் வாழ்ந்த மாடப் பொந்துகள் நிறைந்த மண்டபத்தில் நிஷ்டையில் இருந்தார் தீட்சன் சந்நியாசி. சிவன் கோவிலின் ஈசான்ய மூலையில் அமைந்திருந்த அந்த மண்டபத்தை ரிஷியின் கால்கள் தொட்டவுடன் கடந்த காலத்தில் முதல் நாள் சந்திப்பில் சந்நியாசி சொன்னதுதான் ரிஷியின் காதுகளுக்குள் ரீங்காரமிட்டது.

“கற்பனையின் விளைவே ஆசை; உள்ளார்ந்த விருப்பமே தேடலின் ஆரம்பம். இந்த குளமும், நிலவும் ஒரே நேரத்தில் உனக்குள் மாய உருவங்களை உருவாக்கி உன்னை அலைபாய வைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு கணத்தில், பல திசைகளில் பாயும் மனம், நீ தேடி நிற்கும் அமைதியை உனக்குக் கொண்டு வரப்போவதில்லை. செயல்பாடற்ற சோம்பல், இயலாமை, கற்பனை என உன் ஆசை மனம் உருவாக்கும் உணர்வுகள் உன்னை எந்தப் புள்ளியை நோக்கியும் நகர்த்தப் போவதில்லை. ஒரு கணத்தில் ஒன்றில் மட்டும் மனம் குவிவதுதான் தேடல்; அந்தத் தேடல் புள்ளியை நோக்கி நகரும் போதுதான் ஞானம் எனும் மொட்டு, விழிப்புணர்வாக மலரும். அந்தக் கணத்தில் நீ தேடுவது உன்னை வந்தடையும்”.

மசமசத்த எண்ணெய் வாடையும், மந்தகாசமான இருளும், புறாக்கள், வௌவால்களின் றெக்கையடிப்பும் சூழ்ந்த அமானுஷ்ய சூழலுக்குள், மௌன நிஷ்டையில் தன்னை மறந்து அமர்ந்திருந்தார் தீட்சன் சந்நியாசி. பூர்வீகத்திலிருந்து புறப்பட்டு மடை திறந்து தன்னைக் காட்டிவிட்டு மீண்டும் பூர்வீகத்துக்குள் ஒடுங்கிய ஆன்மாவும், நிஷ்களங்கமற்ற குழந்தையின் முகத்தோற்றமுமாக காட்சியளித்தார் இன்றைய சந்நியாசி. காலம் அவர் உடலில் போட்டிருந்த முதுமைக் கோடுகள் பெருத்த வித்தியாசம் எதையும் காட்டவில்லை ரிஷிக்கு.  மீண்டும் பழைய உரையாடல் ஒன்றின் ஞாபகக் கீற்று ரிஷியின் நினைவில் தட்டியது.

“சாமி உங்கள் பூர்வீகம் இலங்கையா?”

“இருக்கலாம். ஊன் உடலின் கடந்த காலம் எல்லாம் முழுமையாக நினைவில் இல்லை”

என்னது ஊன் உடலா? அப்படியானால் தன் முன்னால் காட்சி அளிப்பது எந்த வகையான உடல்? கேள்விகள் குடைந்து குடைந்து ரிஷியை சந்நியாசியின் மாயச் சுழல் நோக்கி இழுத்துச் சென்றது.

சட்டென்று விழிப்பு தட்டி தன் முன்னால் நிலை குத்தி நின்ற ரிஷியை உற்றுப் பார்த்தார் தீட்சன் சந்நியாசி. சந்நியாசியின் அந்தப் பறவைப் பார்வையில் இறந்த காலத்தில் இருந்து மீண்டு நிகழ் காலத்தில் தரை பாவினான் ரிஷி.

ஆகாயத்தின் நீலநிறத்தைப் போர்த்தியபடி, கழுத்தைச் சுற்றிய வெள்ளை வளையத்துடன் பூமியை உற்று நோக்கி பயணிக்கும் பருந்தின் கூர்பார்வையாக இருந்தது தீட்சன் சந்நியாசியின் பார்வை. உஷ்ணமா, சில்லிப்பா, தனக்குள் பரவும் உணர்வை புரிந்து கொள்ள முடியவில்லை ரிஷியால். நீண்ட இடைவெளி என்றாலும் ரிஷியின் முகம் சந்நியாசியின் ஞாபக அடுக்குகளுக்குள் பதிந்து போய் இருந்தது. அறிந்த முகத்திற்கான அடையாளப் புன்னகையுடன் வரவேற்றார் சந்நியாசி. தேடி வந்த நோக்கத்தை நேரடியாக ஆரம்பிக்கவில்லை ரிஷி.

“வயசாகிப் போன அடையாளமே தெரியலையே? இருபது வருடங்களுக்கு முன்பு பார்த்தது போல் அச்சு பிசகாமல் இருக்கிறீர்கள்!”, ரிஷியின் ஆச்சர்யம் படர்ந்த முகத்தைப் பார்த்தவுடன் தீட்சன் சந்நியாசியின் ஊற்றுக் கண் திறந்து கொண்டு வார்த்தைகள் மடையின் பாய்ச்சலாக வெளிப்பட ஆரம்பித்தது. கடந்த காலத்தில் விட்ட புள்ளியில் இருந்து தொடர்வது போல பேச ஆரம்பித்தார் தீட்சன் சந்நியாசி.

தூசு படிந்த தொன்ம இருளுக்குள் இருந்து  நட்சத்திரமாக ஒளிர்ந்த சந்நியாசியின் முகத்தில் வெளித் தெரியாமல் அசைந்த உதடுகளில் இருந்து பறவையின் கீச்சொலியாக வெளிப்பட்டது அவர் குரல்.

“ஒளி வடிவம் பெற்ற வள்ளலார் குறித்து உனக்குத் தெரியாமல் இருக்க முடியாது. முக்தி எனும் வீட்டின் கதவு திறந்து, இறுதி நிலை ஆன்ம அணுக்கள் ஒளி வடிவ அணுக்களாக மாறி ஊன் உடல் மறைந்து ஒளி உடலுடன் நூற்றி நாற்பத்தி ஆறு ஆண்டுகளாக நம்முடன் வாழ்ந்து வருகிறார் அவர் என்றால் உன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை”.

மேலும் தொடர்ந்தார் தீட்சன் சந்நியாசி: “வர்மம், மருத்துவம், விஞ்ஞானம், பூகோளம், இலக்கணம், இலக்கியம், யோகம், தியானம், நவபாஷாண சித்து, ரசவாதம் என பல கலைகளிலும் சித்தி பெற்ற ‘போகநாதரிடம்’ யோகப் பயிற்சி பெற்று சீனா சென்று ‘லீ.சு’ என்ற பெயரில் தொண்டு ஆற்றியவர் இங்கிருந்து சென்ற ‘புலிப்பாணிசித்தர்’ என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அது மட்டுமா? ‘யாகோபு’ என்ற பெயரில் அரபு நாடுகளில் பயணித்து தொண்டாற்றிய ‘இராமதேவரை’யும் யாருக்குத் தெரியும்?  தொல்லியல் ஆராய்ச்சியாளன் உனக்கே எந்த அளவிற்கு இந்த முடிச்சுகளின் தொடர்கண்ணி தெரியும்?” கேட்டுவிட்டு சிறிது நேரம் ரிஷியை உற்று நோக்கினார் தீட்சன் சந்நியாசி.  முழுவதுமாக இல்லாவிட்டாலும் ரிஷியின் மசமசத்த நினைவு நிலத்தில் சில  ஞாபக இழைகள் இன்னும் உயிர்ப்புடன் தான் இருந்தது. ஆனாலும் ஒரு ‘ஜென்’ பௌத்த குருவின் முன்பாக அடிபணிந்து மௌனத்துடன் அமர்ந்திருக்கும் சிஷ்யனின் பாவத்துடன் தீட்சன் சந்நியாசி சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தான் ரிஷி.

“என்ன கேட்டாய், என் பூர்வீகம் இலங்கையா, என்றுதானே? ‘மஹாமகரிஷி’ என்று இலங்கையில் போற்றப்பட்ட ‘குணாநிதி’ குருஜி திருக்காதீஸ்வரம் கோவிலில் நிகழ்த்திய சித்து விளையாட்டு, பாலாவி ஆறு, பேசாலை முருகன் கோவில் காலடி தடம் என்று என் ஞாபகங்களுக்குள் இழையோடும் சில நினைவுகள் அப்படித்தான் என்னை நம்பச் சொல்கிறது”. தொல்பொருள் ஆராய்ச்சியாளனே தவிர, ஆன்மீக நம்பிக்கையெல்லாம் துளி கூட ரிஷியிடம் கிடையாது. ஆனாலும் அந்தத் திசை நோக்கித்தான் சந்நியாசியின் பேச்சு பயணிப்பதாக ரிஷியின் அறிவு சொல்லியது. அவரது பேச்சையும் மீறி, அந்த மண்டபத்தின் தோற்றமும், அங்கு நிலவிய சூழலும் ரிஷியின் கவனத்தை சிதறடித்தன. அவனுடைய தொல்லியல் அறிவும், தீட்சன் சந்நியாசியின் ஆன்ம தரிசன பேச்சும் மறைந்து ரிஷியின் அறிவை ‘தீநுண்மி’ எனப்படும் வைரஸ் குறித்த அச்சம் உடைமர முள்ளாக தைத்தது.

காற்று, நீர், குருதி வழியாக உடலுக்குள் நுழையும் தீநுண்மி எனும் வைரஸ்கள் பல்கிப் பெருகி மனித சமூகத்தில் உருவாக்கும் நோய்த் தொற்று குறித்த அச்சத்தை அந்த மண்டபத்தை நிறைத்திருந்த எச்சவாடை  ரிஷிக்குள் ஏற்படுத்திவிட்டது. புற்று நோய், அம்மை, மஞ்சள் காமாலை, எயிட்ஸ், என வைரஸ்கள் மூலம் பரவிய தொற்று நோய்களின் தொடர் வரலாறு ரிஷியின் மன நிலையை சிதைவுறச் செய்தது. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல் வௌவால்களின் அடர் வாடையும், ‘கொரோனா’ நோய் தொற்று நினைவின் எச்சமும் ரிஷியின் மூளையைக் குடைந்து அவனை நிலை குலையச் செய்தது.

இலங்கையின் ‘காலி’ நகரம் வரை ஒரு காலத்தில் பாய்ந்து கொண்டிருந்த தாமிரபரணி ஆற்றைப் பற்றிய குறிப்புகள், பௌத்த சூத்திரங்கள் என புராதன கீற்றுகளைத் தாங்கி நின்ற ஓலைச் சுவடிகளையும், அதன் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்களையும் தனது மூளையிலிருந்து சுத்தமாக துடைத்துவிட பரபரத்தது ரிஷியின் சிந்தனை. அதோடு மட்டுமல்லாமல் தீட்சன் சந்நியாசியை சந்தித்த நிகழ்வு, அவர் பேசியது, தன்னுடைய தொல்லியல் ஆய்வு என எல்லாவற்றையும் நினைவிலிருந்து துடைத்தெறிந்துவிட்டு, மீண்டும் வாழ்வை பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும் ஆவேசம் கிளர்ந்தெழுந்தது ரிஷிக்குள். தலைகீழாக மண்டபத்து மேற்கூரையில் முளைத்து தொங்கிக் கொண்டிருந்த வௌவால்கள் அந்த அளவிற்கு ரிஷியின் உணர்வுகளை கொந்தளிக்கச் செய்துவிட்டது.

“இந்த இடத்தில் மனித உடல்களை ஊடுருவி, உடலின் செல் இயக்கங்களின் வழி செயல்படக் கூடிய கொரோனா தீநுண்மிகள் நிச்சயம் இருக்கும்; இன்னும் மனித இனத்தால் கண்டுபிடிக்கப்படாத, உலகெங்கும் விரவியிருக்கும் பதினேழு மில்லியன் தீநுண்மிகளில் எத்தனை ஆயிரம் வைரஸ்கள் இந்த மண்டப்த்துக்குள் நிறைந்து கிடக்கிறதோ?” அச்சம் தரும் மரண நினைவுகள் ஆக்கிரமித்ததில் ஆடிப்போய்விட்டான் ரிஷி. “இது பசுந்தளிர் அடர்வனமல்ல, மரணத்தின் ஊற்றுவாய்” இப்படியான நினைவு ஒரு நெருப்புச் சித்திரமாக ரிஷிக்குள் விரிந்து அவனை விரட்டியது. மனதை இறுக்கிக் கொண்டு அறுபடும் சுவடு தெரியாமல், சந்நியாசியிடமிருந்தும், அந்த சூழலிலிருந்தும் விடைபெற்று வீடு நோக்கி நகர்ந்தான் ரிஷி.

அவனுக்குள் படிந்துவிட்ட சந்நியாசியின் பேச்சுக்களை மட்டும் துடைத்தெறிய முடியவில்லை ரிஷியால். வீட்டின் பாதுகாப்புக்குள் முடங்கிக் கொண்டவனை விரட்டிப் பிடித்து அதிர வைத்தது சந்நியாசியின் குரல்.

வட்ட வடிவ களத்தில் மூங்கில்களைப் பிளந்து, தென்னங்கீற்றுகளைப் படலாகப் பின்னி  கூரையாக வேயப்பட்ட குடிசை போல் ரிஷியின் நெஞ்சுப்பரப்பில் படர்ந்த நோய்த் தொற்று அச்சத்தை விரட்டி அடிக்க சந்நியாசி பேசிய பேச்சுக்கள்தான் ரிஷிரின் பதுங்கிய மனதுக்குள், ஒரு பறவையின் மஞ்சள் மூக்காக எட்டிப்பார்த்தது.

உடலில் உள்ள மூன்று கூறுகளான, ‘ஸ்தூல’, ‘சூக்கும’, ‘சக்தி’ ஆகியவைகளின் சமச்சீரற்ற தன்மைதான் நோயின் ஆரம்பம் என ஆரம்பித்து, உணவு, உடல் குறித்த விழிப்புணர்வைப் பெறுவதன் வழியாக நோய் தொற்றை கடந்து போகும் தடம் நோக்கி பயணித்தது தீட்சன் சந்நியாசியின் பேச்சு. “விழிப்புணர்வு அடையும் உடலின் உள்மண்டல செல்களை சக்தியூட்டம் பெறச்செய்யும் ‘மஹாயோகம்’ எனும் சூக்கும கலையைப் பயிற்சி செய்ய ஆரம்பித்தால், உனக்குள் கண் திறக்கும் நோய் தொற்று அச்சத்தைக் கடந்து போகலாம். மண் மலர்வது போல் மனம் மலரும் சூக்கும கலையின் வழி தான் இனி மனித இனம் பல்லாயிரக்கணக்கான தீநுண்மிகளின் அபாயத்தைக் கடந்து போகமுடியும்”.

இப்பொழுது நினைத்தாலும் சந்நியாசி சொன்னது ரிஷியின் மூளை நரம்புகளில் சலன அலையை அதிர வைத்தபடி இருந்தது. சித்தி விஞ்ஞானத்தின் அனைத்து வேர்களையும் உள்வாங்கி அற்புதங்களை நிகழ்த்திய ‘போகரைப்’ பற்றியும், அவரது வழித் தோன்றல்கள் ‘புலிப்பாணி’, ‘இராமதேவர்’ குறித்தும் தீட்சன் சந்நியாசி தொடர்ந்து பேசியதன் சாராம்சம் இதுதான். இந்த கருத்தோட்டம் பாய்ச்சிய வெப்ப அலையைத்தான் தன்னுடைய நினைவிலிருந்து நீக்க முடியாமல் தவித்தான் ரிஷி.

“பன்முகக் கலைகளில் சித்தி பெற்று, சித்த பாரம்பரியத்திற்குரிய உச்ச நிலையை எட்டியவர் ‘போகநாதர்’. ‘லீ-சு’ என அழைக்கப்பட்ட ‘புலிப்பாணி’ சித்தரும், ‘யாக்கோபு’ என அழைக்கப்பட்ட ‘இராமதேவரும்’, ‘போகநாதரிடம் யோகம் பயின்று உன்னத நிலையை அடைந்தவர்களே; ‘மஹாயோக’ கலையின் சல்லி வேர்களான ‘கிரியா’யோகத்திலும், ‘சித்த விஞ்ஞானத்’திலும் மேன்மை பெற்றவர்கள் இவர்கள்.

ஞானசித்தி அடைந்த ஒருவர் ஏழாவது அறிவைப் பெற்றவராக இருப்பார். சுய விழிப்பு அடைந்த இந்த நிலை, ஆன்மீகத்தில் தொடக்க நிலை மட்டுமே; ஒன்பதாவது அறிவு நிலை என்பது ‘சித்த சமாதி’ அனுபவ நிலையே. இதனையும் கடந்து பத்து முதல் பதிமூன்றாவது அறிவு நிலையையும் பெற்றவர்கள் ‘சித்தர்’ பெருமக்கள். பதிமூன்றாம் அறிவையும், அஷ்டாமா சித்திகளையும் கடந்து ‘ஒளித்தேகம்’ எனும் மரணமில்லாத பெருவாழ்வை அடைவதே உச்சநிலையான பூரணத்துவமடைதல் ஆகும்; இதுவே அறிவின் முடிவு நிலை என்கிறார்கள்  ஆதி சித்த விஞ்ஞானிகள். ‘வள்ளலார்’, ‘போகர்’, போன்றவர்கள் இத்தகைய சித்திநிலை அடைந்தவர்களே.  ‘நவகண்ட சித்தி’ எனும் உடலை பல துண்டுகளாகப் பிரித்து, பின் இணைக்கும் கலையைக் கைவரப் பெற்ற மஹாயோகிகள் இவர்கள்.

இலங்கையின் ‘காலி’ நகரத்தில் காடைகள் பம்மிக்கிடந்த பனைகள் சூழ் நாழி ஓடுகள் அடுக்கப்பட்ட சிறு வீட்டில் வாழ்ந்து, ஒரு கார்த்திகை பௌர்ணமி நாளில் ‘ஒளித்தேகம்’ அடைந்தவர் ‘குணாநிதி மஹாயோகி’; “மனித ஆற்றல் மருத்துவ யோகக் கலை’யில் பூரணத்துவம் அடைந்த  இவர் இப்போது  ஆதிச்ச நல்லூருக்குக் கிழக்குத் திசையில் ஒரு நக்ரத்தின் மையத்தில் தான் அமைதியாக தொண்டாற்றி வருகிறார். தொல் பொருள் ஆரய்ச்சியில் குவிந்த உன் கண்கள் இன்னும் வெளிச்சம் பெற்று காண வேண்டியதை காணாமல் குருடாகத்தான் இருக்கிறது. அவரிடம் தீட்சை பெற்று யோகத்தின் வழி விழிப்பு நிலை அடைந்த இந்த ஊன் உடம்புக்கு தீநுண்மிகள் குறித்தோ, வைரஸ் தொற்று குறித்தோ எந்த அச்சமும் கிடையாது. பேரிக்காய்கள் காய்த்துக் குலுங்கும் பழ தோட்டமும், வௌவால்கள் அடைந்த இந்த மண்டபமும் எனக்கு ஒன்றுதான்.

தியானமும், உடற்பயிற்சியும் ஒன்றாகக் கரைந்து உருக்கொண்ட ‘ஜென்ஸ்கர்’ கலையின் குரு, தற்போது ஆதிச்சநல்லூருக்கு அருகில் வசித்துவரும் ‘குணாநிதி மஹாயோகி’;  “வில் வித்தையின் உச்சம் வில்லை எய்யாமல் இருப்பது” என்பதை உணர்ந்த மெய்விஞ்ஞான மருத்துவ ஞானி அவர். சீனாவின் ‘லூயாஸ்’ மருத்துவமையில் சிறப்பு வருகைப் பேராசிரியராக சிறிது காலம் பணியாற்றியவர் இந்த ‘குணாநிதி மஹாயோகி’ என்பது இந்த தேசத்தில் எத்தனை பேருக்குத் தெரியும்? மஹாயோக தியானத்தின் சக்தியால் மனித இதயத்துடிப்பில் வியத்தகு மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியவர் இவர்.

சீனாவில் சித்தர்களின் பாரம்பர்ய மருத்துவ முறையான ‘வர்மானிய அலகு ‘(Accu Puncture)’ முறையை, சமகால மனிதகுல உடல்நலக் கோளாறுகளை தீர்க்கும் வகையில் நவீனமாக ‘Accu Varma’  என்று தனது ‘மனித ஆற்றல் மருத்துவத்தின்’ ஒரு கிளையாகச் சேர்த்துள்ளார் இந்த மஹாயோகி”.

ஒரு அடர்ந்த நீரூற்றுப் பொழிவை ரிஷியின் உள்ளங்கால் முதல் உச்சந்தலை பாய்ச்சிய பிறகு இறுதியில் தீட்சன் சந்நியாசி எழுப்பிய கேள்விகள்தான் அவனுக்குள் புகுந்து குளவியாகக் குடைந்தது.

“உடல் வழியாக பரவிவிடாமல் கைகளை கிருமிநாசி ஊற்றி சுத்தம் செய்யலாம்; சுவாசம் வழியாக உள் நுழையும் கிருமிகளால் பாதிப்படையும் நுரையீரலை எப்படி சுத்தம் செய்வது? “ஏழாம் அறிவு” திரைப்படத்திற்கு முன்னர் இந்த மக்களில் எத்தனை பேருக்கு ‘போதிசத்வரை’ தெரியும்? “ஏழாம்அறிவு” திரைப்படம் வெளிவருவதற்கு பல காலம் முன்பாகவே ‘குணாநிதி மஹாயோகி’ ஏற்படுத்திய “போதிதர்மா ஆர்ட்ஸ் அகாதெமி” நிறுவனத்தையும், அதன் செயல்பாட்டையும் குறித்து இந்த சமூகத்திற்கு எந்த அளவிற்கு புரிதல் உள்ளது?

கிரியாசக்தி யோகம் மூலமும் மஹாயோக சுவாச பயிற்சி மூலமும் பாரம்பரிய வியாதிகளிலிருந்தும், தீய குணாதிசயங்களை உருவாக்கும் நுண்கிருமிகளிடமிருந்தும், மனித குலத்தை நிரந்தரமாக விடுவிக்கும் கலையை நோக்கி  இந்த உலகம் பயணிக்கப் போகும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

தீட்சன் சந்நியாசியுடனான கடைசி சந்திப்புக்குப் பின் தனது பூர்வீக கிராமம் நோக்கி நகர்ந்துவிட்டான் ரிஷி.

பனையேறி கெண்டை, கெளுத்தி, உலுவை, ஜிலேபிக்கெண்டை, என மீன் வாடை பரவிய கண்மாயையும், பனையோலை சரசரப்பு அடர்ந்த தோப்பையும் சுற்றி வந்தபடி தொல்லியல் ஆய்வு அறிவையும், தீட்சன் சந்நியாசியின் பேச்சுக்கள் பற்ற வைத்த நெருப்பில் உடங்கருவல் வாடை படர்ந்த மன உலகையும், சிறிது சிறிதாக மறக்க ஆரம்பித்தான். சீவிப்போட்ட நொங்குகளை வண்டிகளாக்கி, பொடிக்குருவிகளின் ‘கீச்சொலி’யையும் மீறி குரலெப்பியபடி நெருஞ்சிக்காட்டை சுற்றி  ஓடித்திரிந்த குழந்தைகள் ரிஷிக்குள் மஞ்சணத்தி மர வாடையை பரவ விட ஆரம்பித்தார்கள். ஆனாலும் கால ஓட்டத்தின் விசித்திரக் கணக்கை யார்தான் அறிய முடியும்?

மீண்டும் அது ஒரு பௌர்ணமி நாள்; ஆதிச்சநல்லூருக்கு கிழக்காக, வளர்ந்து வந்த நகரம் நோக்கி ஒரு வேலையாக பயணிக்கும்படி காலம் ரிஷியைத் தள்ளியது. அந்த நகரத்தின் மையத்தில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஊர்க்காரன் ஒருவனை பார்த்துவரும் வேலை; விதிதான் அந்த மருத்துவமனைக்கு ரிஷியை அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.

‘மஹாகிரியா’, ‘தியானம்’ மற்றும் பாரம்பரிய உணவு முறைகளால் உடலில் உள்ள நச்சு கழிவுகளை நீக்கி, நோய்த் தொற்றுகளில் இருந்து மனித உடல்களை விடுதலை பெறச்செய்யும் மருத்துவமனை அது. மனிதனின் மகத்தான சக்தி “உயிர்” என்று சொல்லக்கூடிய “மூச்சுக்காற்றே” என்பதை ஆணிவேராகக் கொண்டு, மனித நாகரீகம் மறந்துவிட்ட தெய்வீக சுவாசத்தை, உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, மந்திர ஒலி ஆகியவைகளின் தொகுப்பு மூலம் மீள் உருவாக்கம் செய்யும் மருத்துவமனை அது. கிரியாயோகமே அந்த மருத்துவமையின் விஞ்ஞான மருத்துவமாக இருந்தது.

சித்த, ஆயுர்வேத, அலோபதி, ஹோமியோபதி, சக்தியூட்டல் மருத்துவம், அக்குபஞ்சர், பிஸியோதெரபி, யோகா மற்றும் நேச்சுரோபதி என ஆதி விஞ்ஞான மருத்துவத்தின் கிளைவேர்களை தங்களுக்குள் படரவிட்ட மருத்துவ விஞ்ஞானிகளை ஒன்றிணைத்து செயல்பட்டது அந்த மருத்துவமனை.

வைரஸ் தொற்றுக்கு எதிராக செயல்பட்டு மனிதனுக்குள் இயற்கையாக இருக்கும் மருந்தை வெளிக்கொண்டு வந்து, இனி வரும் தலைமுறைகளை நோய் தொற்று அச்சத்திலிருந்து பூரணமாக விடுவிக்கும் மருத்துவ விஞ்ஞானம் “மஹாயோகம்” எனும் ஆனி வேரிலிருந்து படர்ந்த சல்லிவேர்களின் உயிர்பரவிய காற்றில் சில்லிப்பாக கிளை விரித்து நின்றது அந்த மருத்துவமனை.

மருந்தின் நெடியோ, கிருமிநாசினியின் நெடியோ இல்லாத அதிசயத்தில் சிலிர்த்துப் போய் மருத்தவமனையை விட்டு வெளியேறினான் ரிஷி. வாசலில் தலைவிரித்து நின்ற மஞ்சணத்தி மரத்தின் இலைக்குவியலுக்குள் இருந்து சிவந்த மூக்கை நீட்டி ‘க்ளாக்..க்ளாக்” என அதிசய ஒலி எழுப்பியது பட்சி ஒன்று. மரத்தின் கீழ் கருப்பு பளிங்கில் பொன்னிறத்தில் பதிக்கப்பட்ட வாசகம் ரிஷியின் கண்ணில் பாய்ந்து மூளைக்குள் ஊடுருவியது.

“இயற்கை மீது மனிதன் கொள்ளும் பகையே நோய்; மனிதன் மீது இயற்கை வைத்திருக்கும் கருணையே ஆரோக்கியம்”. தேடித்தேடி தீட்சன் சந்நியாசியின் கரங்கள் தன்னை வளைத்து அணைப்பது போல் இருந்தது ரிஷிக்கு. அதே உணர்வுடன் மருத்துவமனையின் எல்லையைத் தாண்டும் போதுதான் அந்த விபரம் ரிஷியின் காதுகளைத் தொட்டது.

தீட்சன் சந்நியாசி முன்பு விலாவாரியாக விவரித்த “போதி தர்மா ஆர்ட்ஸ்” அகாடமியின் நிறுவனரும், ‘ஜென்ஸ்டர்’ கலையின் குருவுமான “மஹாயோகி குணாநிதி”தான் அந்த பிரமிப்பூட்டிய மருத்துவமனையின் தலைமை மருத்துவ விஞ்ஞானி.

***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close