சிறார் இலக்கியம்
Trending

பறங்கிக்காய் சொன்ன கதை  – (சிறுவர் கதை)

ஞா.கலையரசி

கதிர் பள்ளி முடிந்து, மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.

அவன் நடந்து வந்த போது, “தம்பி!” என்று, ஒரு குரல் கேட்டது.  அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.

தெருவில் அவனைத் தவிர, வேறு யாருமில்லை என்பதால், பயம் ஏற்பட்டது.

“பயப்படாதே; நான் தான் கூப்பிட்டேன்,” என்றது, தெரு ஓரமாகக் கிடந்த ஒரு பறங்கிக்காய்.

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  ‘பறங்கிக்காய் பேசுமா?’

அதன் அருகில் சென்று, கையில் தூக்கிப் பார்த்தான்.  கனமாக இருந்தது.

“நீ யாரு? ஏன் இங்கக் கிடக்கிறே?” என்று கதிர் கேட்டான்.

“சந்தையில விக்கிறதுக்காக, எங்களை வண்டியில ஏத்திக்கிட்டு போனாங்க.  நான் மட்டும் குலுக்கல்ல, உருண்டு வந்து, கீழே விழுந்துட்டேன்;  வண்டிக்காரர் என்னைக் கவனிக்காமப் போயிட்டார்,” என்றது, பறங்கிக்காய்.

“எதுக்காக, இப்ப என்னைக் கூப்பிட்டே?” என்றான் கதிர்.

“என்னைத் தூக்கிட்டுப் போய், ஒன் அம்மாக்கிட்ட கொடு.  சமைச்சிக் கொடுப்பாங்க.  நல்லா இனிப்பா இருப்பேன்,” என்று சொன்னது பறங்கிக்காய்.

“ஒன்னைத் துண்டு துண்டா வெட்டிச் சமைச்சிடுவாங்களே! ஒனக்கு வலிக்காதா? வருத்தமாயிருக்காதா?” என்று கதிர் கேட்டான்.

“ஹூகும்.  இந்த மண்ணுல பொறந்ததுக்கு, யாருக்காவது பயன்படணும்;  இங்கக் கிடந்தா, வீணா அழுகித்தான் போவேன்; ஏதோ ஒரு விதத்துல மத்தவங்களுக்கு உதவுறதுல தான், எனக்கு அதிக மகிழ்ச்சி கிடைக்குது”, என்றது பறங்கிக்காய்.

“அப்படியா?  சரி.  நான் ஒன்னைத் தூக்கிட்டுப் போயி, அம்மாக்கிட்ட கொடுக்கிறேன்”.  என்றான் கதிர்.

“ரொம்ப நன்றி தம்பி.  மறக்காம என் விதைகளை, எடுத்துக் காயவைச்சி  மண்ணுல போடு. மறுபடியும் மொளைச்சி, நெறையாக் காய் கொடுப்பேன். என் மஞ்சள் பூவைப் பறிச்சி, மார்கழி மாசத்துல பெரிய கோலம் போட்டு நடுவுல வைப்பாங்க; அழகா இருக்கும்”, என்று பறங்கிக்காய் சொன்னது.

அதனைத் தூக்க முடியாமல் தூக்கிச் சென்று, அம்மாவிடம் கொடுத்தான் கதிர்.

அதைப் பார்த்தவுடன், “நல்ல முத்துன பறங்கிக்காய்; இனிப்பா இருக்கும்!” என்று அம்மா மிகவும் மகிழ்ந்தாள்.

“ஆடி மாதம் தான் விதைப்பதற்கு ஏற்ற மாதம்,” என்று அம்மா சொன்னபடி,  அதிலிருந்த விதைகளைச் சேகரித்து, எடுத்து வைத்துக் கொண்டான்.

மறுநாள் அவள் செய்து கொடுத்த பறங்கிக்காய் அல்வா, மிகவும் இனித்தது.

கதிர் பறங்கிக்காய்க்கு மனதிற்குள் நன்றி சொன்னான்.

———————————————————————————————————————————–

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close