இணைய இதழ்இணைய இதழ் 52கவிதைகள்

நிழலி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

முத்தங்களைச் சேகரிப்பவர்

காலை எழுகையில் காது பிடித்து
கட்டியணைத்தபடி நெற்றி நிறைத்துவிட வேண்டும்
அவசர அவசரமாக பள்ளி
புறப்படுகையில் புத்தக மூட்டையை
ஊடுருவியபடி கன்னத்தை
நிரப்பிவிட வேண்டும்
மாலை வீடு திரும்பும் வரை
வறண்டு கிடக்கும் மறு கன்னத்திற்கு
ஓர் அருவியின் பேரிரைச்சலோடு
நனைத்திட வேண்டும்
பின்னரான யானை சவாரிக்கு
ஓடிப் பிடித்தலுக்கு கண்ணாம்பூச்சிக்கு
குறும்பு செய்யும் வெள்ளை மீசைக்கு
இரவு உணவுக்குப் பின் நிறைவுறும் நாளின் உறக்கத்திற்கு
அதற்கிதற்கென ஓராயிரம் முத்தங்களை என்னிடம்
வாங்கிக் கொள்ளும் தாத்தாவின்
வெத்தலைப்பெட்டிக்குள்ளும்
பேத்தியின் முத்தச்சுவடுகளை
ஒளித்து வைத்திருப்பதாக
கர்வம் கொள்கிறார்
முத்தங்களாலே நீள்கிறது
தாத்தாவின் பாதை.

***

வெற்றிடம் பேசும்

விடுமுறை முடிந்து வீடு திரும்பியதும்
கூச்சலற்று வெறுமையாகி இருக்கும் வீட்டை
தாத்தாவும் பாட்டியும் வேதனையோடு வலம் வருகையில்
சுவரெல்லாம் கிறுக்கிய கோடுகளும்
அரைகுறையாக வரைந்து வைத்திருந்த பொம்மைகளும
மெல்ல அசைவதாக பித்துப் பிடிக்கும்
மறந்து விட்டுச் சென்ற பேத்தியின்
விளையாட்டுப் பொருள் ஒன்றை
பத்திரப்படுத்தி பெட்டியில் பூட்டி வைக்கையில்
நினைவுகள் மனதில் அடைபட்டுக் கொள்ளும்
திசைகளைக் காரணமின்றி கோபித்துக் கொண்டு
தலையணையில் முகம் புதைத்து மூடிக்கொண்டு
சிறு பிள்ளையெனத் தேம்புகையில்
வீடெங்கும் பேத்தியின் சிரிப்பொலி அதிரும்
பிரமைகளைக் களைத்து நகர்கையில்
வெற்றிடம் கூட பேசிக்கொண்டிருந்தது
பேத்தியின் குறும்புகளை…

***

கோடை விரும்பிகள்

எல்லா மாதங்களின் வறட்சியும்
கோடையில்தான் துளிர்ந்தது
நின்று நடந்து நகர்ந்து
உயிரற்று நிற்கும் மற்ற நாட்களை
பெருங்கோபத்தோடு அடித்து
விரட்டும் குதிரை வண்டியென
சாட்டையால் சுழற்றிக் கொண்டிருப்பார்கள்
பேத்தியின் வருகைக்காகவே
வருடம் முழுவதும் காத்திருக்கும்
மே மாத விடுமுறையை
காலச் சுழலில் நிறுத்தி வைத்திடும்
வித்தை தேடி அலையும்
கோடை விரும்பிகள் என்பேன்
தாத்தாவையும் பாட்டியையும்.

***

மிட்டாய் பெட்டி

உள்ளங்கை உடைத்து விரல் இடுக்குகளை
பிளந்து கீழே விழும்
அளவிற்கு மிட்டாய்களை வாங்கி
கொடுக்கும் பாட்டியின் பேரன்பை
சப்பித் தின்று கொண்டிருக்கையில்
சொத்தைப் பல்லென சொத்தையாக
காரணம் காட்டி அனைத்தையும்
பிடுங்கிக் கொள்ளும் அம்மாவின்
அதீத அன்பை ஏமாற்றி
அத்தனை மிட்டாய்களையும்
தன்னிடம் ஒளித்து கொள்வார் தாத்தா
ஒவ்வொரு முறை வெற்றிலை கிள்ளி
வாயில் அடக்கும் போதும்
யாருமறியாது ஒரு மிட்டாயும்
தந்துவிட்டு கண்ணடித்துக் கொள்வார்
வெற்றிலை பெட்டி மிட்டாய் பெட்டியாக
பரிணமித்தது பேரன்பின் ரகசியம்.

***

k.tamilbharathi@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button