கதைக்களம்

முட்கள் நகர்கின்றன

உமா மோகன்

கயல்விழி தான் பொம்முவை அறிமுகப்படுத்தினாள். பொம்முவை என்றில்லை, பட்டுநூல் ஆபரணங்கள் செய்யும் கீர்த்தியை, பெங்கால் காட்டன் விற்கும் லோகேஷை, ஹைதராபாத் முத்துகள் கொண்டு வரும் நாயுடுவை …இப்படி யோசித்துக் கொண்டே போனால் தனக்குத் தெரிந்தவர் எல்லோரையும் கயல்விழி தான் அறிமுகப்படுத்தியிருப்பாளோ எனத் தோன்றியது காயத்ரிக்கு .

  ஆனால் யோசனை கயல்விழியைப் பற்றியல்ல .பொம்முவைப் பற்றி தான் தொடங்கியது. இன்றைக்கு எப்படியும் பொம்முவை சந்தித்து தான் ஆக வேண்டும். வரிசையாக,கல்யாணம்,காட்சி எனப்போக வேண்டியிருக்கிறது. கயல்விழி இப்போதெல்லாம் பொம்முவிடம் வருவதில்லை. கயல் மேடம் என்று சொல்ல வராமல் “காயல்” காயல்” எனச் சொல்கிறாளாம். அதனால் எரிச்சலாக இருக்கிறது எனச் சொன்னாள். உண்மையில், காரணம் அதுவல்ல எனத் தோன்றியது. அவள் பெயரை பொம்மு நான்கைந்து வருடங்களாகவே அப்படித் தான் கொல்கிறாள்.   இவ்வளவு நாளும் இல்லாமல் இப்போதென்ன திடீரென்று ….அதுவும் மாதத்தில் ஒருமுறை போகும் போது ஒரு தடவை ,இரண்டு தடவை சொல்வாளாயிருக்கும்…

 கயல்விழி குடும்பத்தின் பொருளாதாரம் கொஞ்சம் உயர்ந்து விட்டது. அதற்கேற்றாற்போல், சென்னை போன்ற இடங்களில் மட்டுமே இருந்து வந்த சலூன், ஸ்பா வகையறாக்கள் ஒன்றிரண்டு இங்கும் வரத் தொடங்கிவிட்டது. இப்போது அவளது வட்டமும் லயன்ஸ்,ரோட்டரி என மாறி வருவதால், அந்த தோழிகளிடம் பொம்முவை அறிமுகப்படுத்துவது கூச்சமாக இருந்திருக்கலாம். அல்லது…”……பார்லர் போயிருந்தப்போ “ என யாராவது தோழியர் கயல்விழியின் ஆசையை உசுப்பிவிட்டிருக்கலாம். ஏதோ ஒன்று பொம்மு தன் ஆரம்பகால வாடிக்கையாளர் ஒருத்தியை இழந்தாள்.

   என்னடா இது…பொம்முவிடம் பேசவேண்டும் எனத் தொடங்கி கயல்விழியையே நினைத்துக் கொண்டிருக்கிறோம் எனச் சலித்துக் கொண்டாள் காயத்ரி.

  ஒரு அழைப்பு….போகவில்லை

மற்றொன்று  “வாடிக்கையாளர் வேறொரு இணைப்பில் இருக்கிறார்”

அடுத்து..”தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார்”

சே ….இருக்கிறாளா…இல்லையா…தெரியாமல் எப்படிப் போவது…

      திரும்பப் போட்டாள். எடுக்கவேயில்லை….  பேசாமல் கயல்விழியிடம் கேட்டுக் கொண்டு அந்தப் புதிய அழகுநிலையத்துக்குப் போய் விடலாமா எனத் தோன்றியது. செலவு அதிகம் பிடிக்கும் என்ற எச்சரிக்கையும் கூடவே வந்தது.

    “என்ன…குளிக்கப் போலியா நீ” கணவரின் குரல் வந்துவிட்டது.

“போச்சுடா…..போன எடுத்திட்டியா” என்ற எரிச்சலூட்டும் வாசகம் அடுத்து வந்து விடலாம்.

     சரி…பொம்முவோ புது பார்லரோ தலைக்கு ஷாம்பூ போட்டு விடலாம். மற்றதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு குளியலறைக்குள் நுழைந்த பின் அலைபேசி அழைப்பது கேட்டது .

       “ஏங்க….யாருன்னு கொஞ்சம் பாருங்களேன்”

      பதிலில்லை

பார்க்கமாட்டார். துண்டைக் கட்டிக் கொண்டு நாலு தடவை உள்ளும் வெளியுமாக அவரைப் போல சுற்ற முடியாது. போய் பார்த்துக் கொள்ளலாம்.

    தலைதுவட்டியவாறே வந்து எடுத்துப் பார்த்தால் பொம்மு தான் கூப்பிட்டிருக்கிறாள் .

   “என்ன பொம்மு ரொம்ப பிசியா..”

 “அதெல்லாம் ஒண்ணுமில்ல மேம்..சொல்லுங்க..இன்னிக்கு வரீங்களா “

முதல் வரியிலேயே விஷயத்துக்கு வந்துவிடுவாள். சமர்த்தி.காயத்ரிக்கும் அதுதான் வேண்டியிருந்தது. ”ஆபீஸ் கிளம்புற நேரத்துல போன எடுத்திட்டியா “ என்று கணவர் எந்த நொடியிலும் அதட்டும் வாய்ப்பிருந்தது.

    “ஆமா பொம்மு …ஒரு அஞ்சரைக்கு வரட்டுமா”

“வாங்க மேம்.நா ஒரு மஞ்சாத்தண்ணி மேக்கப் போறேன்.சிக்ஸுக்கு  ஆகி வந்துரும் . பார்தீ இப்ப வருது ..ஐப்ரோ முடிங்க வந்துரும் ..”

   மஞ்சள் நீராட்டுவிழாவுக்கு இவளை அழைத்தவர்கள் இந்த மஞ்சாத்தண்ணியைக் கேட்டால் என்ன செய்வார்கள் எனச் சிரிப்பு வந்தது. கன்னடமா, தெலுங்கா தெரியாது…ஓரளவு புரியும்படி தமிழ் பேசக் கற்றுவிட்டாள்.

 பாரதி திரும்ப வந்துவிட்டாளா என யோசனை வருவதற்குள் கண் கடிகாரத்துக்குப் போக,கிளம்பும் வேலைக்குள் நுழைந்தாள் காயத்ரி.

   மாலை வரத் தாமதம் ஆகுமென்பதால் கூடுதல் கவனம் எடுத்து ஒழுங்கு செய்ய வேண்டும். பார்லர் சென்ற எரிச்சலை நேரடியாகக் காட்டாமல் கோபித்துக் கொள்ளவும் அவருக்கென்று வாய்ப்புகள் இருக்கும்.

   பிள்ளைகள் ,பள்ளி,கல்லூரி என ஓடியாயிற்று.வண்டியைவிட்டு அலுவலகத்தில் இறங்கும்போது சொன்னால் போதும். இல்லாவிட்டால் போகும் வழியெல்லாம் வண்டி திடுக் துடுக்கெனப்  பாயும்.

   மாட்டியிருந்த தனது காரியர் பையை விடுவித்துக் கொண்டே

“இன்னிக்கு சாயங்காலம் நா வர நேரமாகும்.ஏதாச்சும் பார்சல் வாங்கிட்டுப் போயிடுங்க நைட்டுக்கு”

 “ஏன்..என்ன விஷயம்..”

“பார்லர் போகணும் ..முடிஞ்சா மதுவை வரச் சொல்லுங்க ஒரு எட்டு மணிக்கு.இல்லாட்டி நா ஆட்டோல வந்துக்கறேன்”

   சட்டென நகர்ந்து அலுவலகப் படியேறினாள்.நின்றால் பேச்சு வளரும்.

 “ஏன்..இன்னிக்கே போகனுமா..”

“எனக்கு வயிறே சரியில்ல.இன்னிக்குன்னு ஹோட்டல் டிபனா..”

“மதுவே மேட்ச் முடிஞ்சு டயர்டா வருவான்.திருப்பி இங்க போடான்னு சொன்னா அவ்வளவுதான்.”

அவனும் அப்பாவுக்கு சளைத்தவனில்லை. வந்து நின்றாலும் உடனே கிளம்பி விடவேண்டும் என்று கண்டிஷன் போடுவான்.ஹார்ன் அடித்துக்கொண்டே இருப்பான்.இல்லாவிடில் கிளம்பிப் போய்விடுவான். முதல்முறை அவன் போய்விட்டபோது ,எங்கோ அருகில் போயிருப்பான் வருவான் என்று நின்று கொண்டேயிருந்தாள். பார்லரே மூடும் நேரமாகிறது போலிருக்கே என்று கயல்தான் போன் போடச் சொன்னாள். கேட்டால் அலட்டிக் கொள்ளாமல் உன்னைக் காணோம்…எவ்வளவு நேரம் நிற்பது…வீட்டுக்கு வந்துவிட்டேன் என்றான். கோபப்பட்ட கயல் தானே கொண்டுவந்து விடுவதாகக் கிளம்ப பெரும்பாடுபட்டு அவளை நிறுத்திவிட்டு ஆட்டோவில் போனாள்.

ஆட்டோவிலேயே வந்து விடுகிறேன் என்றும் சொல்ல முடியாது.

“ஆட்டோ சார்ஜ் தெண்டச்செலவு  ..”

“வீட்ல இருக்கும்போது இதெல்லாம் தோணாதா உனக்கு…மத்தவங்க சவுரியம் என்னன்னே கேக்காம ஒரு முடிவு பண்ணிடுறே..”

   இத்யாதி! இத்யாதி!

உயரும் குரலையும்,கடுக்கும் முகத்தையும் ,என்ன பரபரப்பாக நுழைந்தாலும்   அவளது சக பணியாளர்கள் நமட்டுச் சிரிப்போடு கவனித்துக் கடப்பதெல்லாம் அவருக்கு பொருட்டேயில்லை.

   பார்லர் போவது சர்வசாதாரணமான ஒரு விஷயம்.இதுக்கென்ன இத்தனை யோசனையும் திட்டமிடலும் என்று கயல்விழி நொடிப்பாள். அதுவும் இவள் ஒவ்வொருமுறையும் பதட்டமாவதும், புலம்புவதும் அவளுக்கு எரிச்சலைக் கூட்டும்.

   “என்ன காயத்ரீ இது…ராக்கெட் விடறவன் கூட இவ்ளோ யோசிக்க மாட்டான் போல.அதுவும் நம்ம பொம்மு எவ்ளோ அட்ஜஸ்டபிள்…காசும் ரீசனபிளாதான் வாங்குறா…அதுவும் நீயென்ன பண்றே …ஒரு ஐப்ரோ ..ஒரு கலரிங்….அதுக்கே தலைக்கு குளிக்கணும்கிற …எனக்கு பீரியட்ஸு…எம்பொண்ணுக்கு பீரியட்ஸு….அவருக்கு ஆடிட்டுன்னு ஆயிரத்தெட்டு காரணம் சொல்லி …மாசத்துக்கொரு தரம்கிறத..ஒண்ணரை மாசமாச்சும் ஆக்கிடறே..”

   “இல்லப்பா….எனக்கு பீரியட்ஸ்னா தெனம் தலைக்கு ஊத்தறதுலையே நாலு நாளைக்குள்ள எப்பிடியும் சளிபிடிக்கும் ..இதுல டை போட்டுட்டு இன்னொருக்கா வேற…”

  “த பாரு…..திருந்தமாட்டியா நீ …டை போடறதுன்னு பஞ்சாங்கமாட்டம் பேசாத..கலரிங்க்னு சொல்லு”

  “சரி ..ஏதோ ஒன்னு…பண்ணிட்டு வேற தல குளிக்கணும்.அது பிரச்னை…”

“சரி..உனக்கு ஓகே ..சஞ்சுவுக்கு பீரியட்ஸ்னு சொல்றியே அதுதான் கடுப்பு…”

“இல்ல கயல் ..நமக்கு முடியாட்டி கூட பாத்துக்கலாம்.பாப்பாவுக்கு +2 வேறயா.வேல ஜாஸ்தி…..வயித்துவலி வேற வந்துடும் அவளுக்கு..வரும்போது நாம வீட்டுல இல்லேன்னா பேசாது …மிஞ்சிப்போனா சண்டை…ரகளை பண்ணிடும்..”

   “ம்க்கும் இவ்ளோ பண்ணுது ..நீ இன்னும் பாப்பா பாப்பான்னுகிட்டிரு ….சஞ்சனான்னு அழகா ஒரு பேரு வெச்சிருக்கே ..அட செல்லமா கூப்பிடக்கூட புஜ்ஜி சொஜ்ஜீங்கறாங்க ..நீ என்னடான்னா….ஆமா அது என்னடி…பொண்ணையும் பாப்பாங்கிறே..தங்கச்சியையும் பாப்பாங்கிறே..”

    “அது..அது அப்பிடியே பழகிருச்சி கயல்..”

“காயத்ரி ..பட்டிக்காடும் இல்லாம…பட்டணமும் இல்லாம ,ரெண்டுங்கெட்டான் தமிழ்ப் பொண்ணுக்கு அக்மார்க் பிரதிநிதி நீ தான் .உன் ரேஞ்சுக்கு நீ இதெல்லாம் செஞ்சுக்கறதே புரட்சி தான் போ..”

  “என்ன பண்ணித் தொலயறது….முப்பதுலையே நரைக்க ஆரம்பிச்சிடுச்சி ..என்ன டிரஸ் பண்ணினாலும் கண்ணாடி பாக்கவே எரிச்சலா இருந்துது.எங்க நாத்தனார் சொன்னாங்களேன்னு மருதாணிய அப்பிக்கிட்டுதானே திரிஞ்சேன்…

“ஹா..நல்லா ஞாபகம் இருக்கு…நா டிரான்ஸ்பர் ல இங்க வந்தப்ப நீயும்..உன் தலையும்….நெனச்சாலே சிரிப்புதான் வருது…”விழுந்து விழுந்து சிரிப்பாள் கயல்.

  “விக்கிற பாக்கெட்லாம் போட்டா கெமிக்கல் இருக்கும்…முகத்துல கருப்பு விழுந்துடும்னு அவங்க அக்கா சொன்ன ஐடியாதான் அது…நா என்ன பண்றது முனங்குவாள் காயத்ரி.

 “அவங்கள விடு ..கிராமத்து மனுஷி …நம்ப சூப்பர்வைசர் மாலதி மேடம்க்கு என்ன ஒரு காண்டு தெரியுமா நம்ப மேல. ”யு நோ கயல் ..ஏஜிங் க்ரேஸ்புல்லி னு தான் நாம சொல்லப்படணும் .பெரிய பெரிய கம்பனி சீ.இ.ஓ ல்லாம் கூட பாருங்க கிரே ஹேரோட எவ்ளோ அழகா இருக்காங்க ..”அப்படி இப்பிடின்னு புதுசா வந்திருக்கானே ஆபீசர் டிரெய்னி அவன் முன்னாடி அலட்டுது…

  “நீ எப்பிடி சும்மா இருந்தே?ஆச்சர்யமா இருக்கு….”

“நா எப்பிடி காயு சும்மா இருப்பேன்.கண்ணுக்குக் கண் ..பல்லுக்குப் பல் …இல்லாட்டி எனக்கு செரிக்காதுல்ல….மேடம்…அவங்கள மாதிரி ..உங்கள மாதிரி வயசானவங்களுக்கு அது சரி! அது அழகு ! ஏஜ் எங்க கிட்ட கிரேஸ் புல்லா இல்லாதப்ப இதுதான் எங்களுக்கு சரி! அத்தோட ,நான்லாம் அடிக்கடி கண்ணாடி பாப்பேன் மேடம்னு சிரிச்சிகிட்டே சொல்லிட்டு வந்துட்டேன்….மஞ்சமாதா மூஞ்சியத் தூக்கிகிட்டு ரெண்டுநாளா சுத்துது ..”

பழுத்த மஞ்சள் நிறத் தலையோடு உர்ரென நகரும் மாலதியின் முகத்தை நினைவில் கொண்டு விழுந்து விழுந்து சிரித்து முடித்தார்கள்.

 “பின்ன என்ன காயத்ரி…பிரச்னைக்கும் கவலைக்குமா பஞ்சம் .இதே தலைக்குள்ள டன் டன்னா உக்காந்திருக்கு .அதுக்காக நம்ப மொகத்த கண்ணாடியில பார்த்தா நமக்கே சோகம் இன்னும் நாலு டிகிரி ஏறிடறமாதிரியா இருக்குறது….”

  யோசித்தபடியே இருக்கையில் அமர்ந்து வேலையைத் துவக்கினாள்.

கயல்விழி  சற்று தாமதமாக வந்தாள்.

“ஹாய் …என்னடி…தலையெல்லாம் இப்படிக் கெடக்கு..”

“ஷாம்பூ போட்டேன்..காயவைக்க டைமில்ல.வண்டியில வர்ற வேகத்துல காஞ்சிடுமேன்னு லூஸ் ஹேர் விட்டேன்..”

அசட்டுச் சிரிப்பொன்றைச் சிந்தினாள் காயத்ரி.

“போ..போ..எல்லாம் காஞ்சிருக்கும்…அந்த கோயிந்து கோந்து வந்து பரட்டை…இது எப்பிடி இருக்குன்னு பன்ச் டயலாக் சொல்லி தானே சிரிச்சுப்பான்…மொதல்ல சரி பண்ணிட்டு வா..”

திரும்பியவுடன் முதல் வேலையாக கயலிடம் சொன்னாள்.

  “ஹேய்ய்..அந்த பாரதி  பொம்முகிட்டேயே திரும்ப வந்துட்டாளாம்பா”

“ஓ..பரவால்ல.இவளுக்குக் கொஞ்சம் உதவியா இருக்கும்…”என்றதோடு விட்டுவிட்டாள்.

கயல்விழியும் பொம்முவின் பார்லருக்கே வந்து கொண்டிருந்த போது அவளுடனே வண்டியில் போய் விடுவாள். அவள் சில மாதங்களாக வேறு இடம் போகிறாள் என்பதை அறிந்த பின் கொண்டு போய் விடு எனக் கேட்க என்னவோ போல் இருந்தது. முதல்முறை ஆட்டோ பிடித்து போய்விட்டாள். அது பற்றிய பேச்சே வரவில்லை. மறுமுறை காயத்ரி நடந்து போனாள். அந்த முறை கயல் மறுநாள் கேட்டாள்

    “பார்லர் எப்பிடி போனே காயு…”

“சும்மா..இப்படி ..நடந்தே போயிட்டேன் கயல் ..வாக்கிங் மாதிரியும் ஆச்சுல்ல..”

அவ்வளவு தான்..சரமாரியாகத் திட்டினாள் …

“வாக்கிங் போக நல்ல நேரம் பார்த்த பாரு…ஏற்கனவே லேட்டாகுதுன்னு உங்க வீட்டுல எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.இன்னொரு அரைமணி நேரம் வேறயா…”

“அதயேன் கேக்குற ..அந்த பாரதி வேற நின்னுட்டாளா..பொம்மு ஒவ்வொருத்தருக்கும் பாதி பாதியா திருப்பதி ரேஞ்ச்ல உக்கார வெச்சி செஞ்சு…ரொம்ப லேட்டாயிருச்சு…”

“பெரிய இவளாட்டம் ..ஆளையும் மாத்த மாட்டே நீ….”

“இல்ல கயல்..இவ எதோ ஹெர்பல் பொடி தானே பண்ணிப் போடறா….வேற எங்கயாச்சும் போயி…ஏதாச்சும் சைட் எபக்ட் ஆயிட்டுதுன்னா ..”

“ஆமா டோடல் உலகத்துக்கே இவதான் போடறா பாரு…நீ காசு கணக்கு பார்ப்ப….அது போகட்டும்..நீ சரியான ..முரளி அக்கான்னு ப்ரூவ் பண்ணிட்டே இருப்படி….என்கிட்டே டிராப் பண்ணச் சொல்லி கேட்கக் கூட என்ன யோசனை..”

சட்டென வாய்திறந்து எதையும் சொல்ல யோசிப்பதாகவும் அதனால் இதயம் முரளிக்கு அக்கா நீ என்றும் காயத்ரியை அவள் எரிச்சல் பொழுதுகளில் சொல்வாள் .

   “இல்ல கயல்…இப்ப நீ வேற இடம் போற….அங்க எப்பிடி உன்ன கூப்பிடறது”

“என்ன காயத்ரீ இப்பிடி இருக்கே….நா வேற பார்லர் போனா பொம்மு கூட வெட்டுப்பழின்னு அர்த்தமா …இல்ல அந்தத் தெருவே நா வரக்கூடாத ஏரியாவா ..சொல்லப்போனா ..உன்ன டிராப் பண்ணிட்டு அவகிட்ட ஒரு ஹாய் சொல்லிட்டு கூட வருவேன்…”

  கயல்விழி இவள் குணமறிந்து ,தானே முன்வந்து அழைத்துப்போகக் காத்திருந்தது ஆசுவாசமாக இருந்தது.

“பொம்முவ விட்டா வேற யார்கிட்டயும் இவளுக்கு செட் ஆகாது பாரு”

சாலை இரைச்சலில் சரியாகப் புரியாமல் “யாரு..”என்றாள் காயத்ரி.

  “பாரதிய தான் சொல்றேன்.பணம்..காசு…டைம்..லீவு ..எல்லாம் பொம்மு மாதிரி யாரு அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்க “

 “ஆமா..இதோட மூணாவது தடவை..”

“ஆனா…பொம்முவும் அவ வரதுக்காகவே வெயிட் பண்ற மாதிரி வேற யாரையும் வெக்க மாட்டேங்கிறாளே..”

  வண்டியை இருவருமாக வரும் போது செய்வது போலவே தெருமுனை பேக்கரியில் நிறுத்தினாள்.

  நெகிழ்ச்சியாக இருந்தது காயத்ரிக்கு. இதோ…இரண்டு தெரு தாண்டினால் கயல் வீடு வந்துவிடும்.தனக்காகத்தான் இங்கு வந்திருக்கிறாள்.

  சமோசாவும் டீயும் முடிக்கும் போது கயல்விழியின் மகனிடமிருந்து அழைப்பு.சாவி வேண்டுமாம்.

  “நீ போ கயல்…தோ ரெண்டு வீடு தள்ளித் தானே… நா போய்க்கிறேன்..”

“சரி..பொம்மு கிட்ட இன்னொரு முறை வர்றேன்னு சொல்லு”

மெதுவாக நடந்து போன போது ,ஏதோ பாடலை முணுமுணுக்கத் தோன்றியது. கிளம்பும் போது மது வராவிட்டால் கூடப் பரவாயில்லை. தகராறு செய்யாத ஆட்டோ கிடைத்தால் சுபமாக முடியும்.

  பார்லரை நெருங்கிய போது தான் பூட்டு தொங்குவது தெரிந்தது.சீக்கிரம் வந்துவிட்டோமோ ..மணி பார்த்தாள்.

                  ஐந்தே முக்கால்!

பாரதி இருப்பாள் என்றாளே..

வீட்டின் ஒரு பகுதியை பார்லருக்கு விட்டிருந்த வீட்டுக்காரம்மா இவளைப் பார்த்தும் பாராதது போல வாசல் விளக்கைப் போட்டு விட்டு கதவைச் சாத்திக் கொண்டாள். நிறையப் பேர் வரப்போக இருந்தால் தொந்தரவாகிவிடும் என இடம் தரவே அவள் யோசித்ததாகவும் ,சிபாரிசு உறுதிமொழி என்று பலபடி தாண்டியே இடம் பிடித்ததாகவும் பொம்மு சொல்வாள்.

    ஆறுமணிக்கு வருவதாகச் சொன்ன பொம்முவை அழைக்கவும் யோசனையாக இருந்தது.வண்டி ஓட்டிக் கொண்டிருப்பாளோ..

   ஓரிரு பெண்கள் வண்டியில் வந்தார்கள். பூட்டு தொங்குவதைப் பார்த்ததும் போய் விட்டார்கள்.

  பாரதியின் நம்பரும் இல்லை.

எதற்கும் இருக்கட்டுமென பொம்முவையே அழைத்தாள்.

  எடுக்கவில்லை.

  எடுக்கவில்லை.

  வேறொரு இணைப்பில் உள்ளார்.

ஹப்பாடி …இதோ அவளே அழைக்கிறாள் ..

“சொல்லுங்க மேம்”

“என்னம்மா பார்லர் பூட்டியிருக்கு….உன்னையும் காணோம்”சொல்லும் போது “தோ டீ குடிச்சுட்டு வந்துர்றேன் மேம்” என்ற பதில் வருமென காயத்ரியின் மனம் விரும்பியது.

   “அப்பிடியா….பாரதிகிட்டே நால் மணிக்கே வர சொன்னேனே ..வெயிட் மேம்..பாரதி பேசிட்டு வரேன்”

நின்று கொண்டே இருப்பது காலெல்லாம் வலித்தது. கொசு வேறு ஒரு பக்கம் பிடுங்கி எடுத்தது.கணவன் மனைவியாக இருவர் வந்து இறங்கி பூட்டு தொங்குவதற்கு இவளிடம் விளக்கம் கேட்டனர். ”திறக்கலே” வெறுமையாகப் பார்த்தபடி சொல்லி முடித்த போது அவளுக்கே அதன் அபத்தம் புரிந்தது. சின்னப்பெண் தான்..முகப்பொலிவுக்காக வந்திருப்பாளாயிருக்கும். அந்தப் பெண் கணவனிடம் எதோ சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு திரும்பி இவளிடமே வந்து “எப்போ வருவாங்க…லேட்டாகுமா” என்றாள்.தானென்ன இதைச் சொல்வதற்காக இங்கே நிற்க வைக்கப் பட்டிருக்கிறோமா எனக் காரணமற்ற ஒரு சலிப்புடன் வெறுமனே உதடு பிதுக்கினாள் .

இருளில் அது தெரிந்ததோ என்னவோ ..அவர்கள் இருவரும் பேசிச் சிரித்தபடியே வண்டியைக் கிளப்பினர்.

“மேம் என்னாச்சி தெர்ல…வெரி சாரி.பார்தீ போனே எடுக்கலே ..அவங்க மம்மி ஒடம்பு பிரச்னேன்னு சொன்னா….”

“சரி …அதிருக்கட்டும் பொம்மு.நீ வந்திருவேன்னு சொன்னியே…”

“அதான் மேம் ப்ராப்ளம் ..” எனத் தொடங்கி அவள் புலம்பியதிலிருந்து  மஞ்சள் நீருக்கு அழைக்காத இன்னொரு மாமனும் சீர்வரிசையோடு வந்துவிட்டதாகவும்,திடீர்ப் பஞ்சாயத்தில் சமரசமாகி அந்தப் புடவையையும் கட்டி மணையில் அமர்த்துவது என முடிவாகிவிட்டதால், பொம்முவின் சேவை  மேலும் விசேஷ வீட்டுக்குத் தேவை என்று உத்தரவாகிவிட்டது புரிந்தது.பாவம் நிச்சயம் ஏழோ எட்டோ படிக்கும் குழந்தையாகத் தான் இருக்கும். புடவைக்கு மேல் புடவை மாற்றி நலுங்கு வைத்து…நிச்சயம் களைத்துப் போய்விடும்…சஞ்சுவுக்கு இதெல்லாம் இப்போ வேண்டாமென்று கணவரே முடிவு செய்தது நல்லதாய்ப் போயிற்று.இவள் தொடங்கியிருந்தால் நடக்காது.

அது போகட்டும்.ஒரு புடவை கட்டி முடித்ததும் பொம்மு கிளம்பியிருக்க வேண்டியது தானே …காயத்ரியின் உறவினர் வீட்டு திருமண நிகழ்வில் ஒரு புடவை கட்ட வேண்டும் என்றுதான் பேசினீர்கள், நான் இன்னொரு நிகழ்ச்சிக்கு போகவேண்டும் என்று பரிசப் புடவையோடு பணத்தை வசூலித்து கறாராகக் கிளம்பிய பார்லர் பெண்ணைப் பார்த்த நினைவு வந்தது. பொம்முவென்றால் பியூட்டிஷியன் வாழ்வில் இதெல்லாம் சகஜமப்பா என்ற தொனியில் பேசுகிறாள்.

“உன்கிட்ட சொல்லிட்டுதானே பொம்மு வந்தேன்”

“ரொம்ப சாரி மேம்.இந்த பார்தீ இப்பிடி செய்வான்னு தெரில..”

ஏதேதோ சொல்லிக்கொண்டே போனது காயத்ரிக்குக் காதில் விழவேயில்லை.இவள் வைத்துவிட்டாளென நினைத்து அவள் வைத்துவிட்டாள்.

எப்படியும் இன்றைக்கு ஆனது ஆகிவிட்டது. மீண்டும்,எரிச்சல்,ஹோட்டல் டிபன்,ஆட்டோ என்றெல்லாம் நாளைக்கே ஆரம்பிக்க முடியாது. நாளை மறுநாள் ஊருக்குப் போகவேண்டும். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக, மூடியிருந்த வெளுப்பு ஷாம்பூ புண்ணியத்தில் என்னைப் பார் என் அழகைப் பார் என நிற்கிறது.

வீட்டிலேயே ஏதாவது தற்காலிகமாகப் பாக்கெட் வாங்கி சுய சேவையில் இறங்கலாம் என்றால் எங்காவது ஒன்றிரண்டு என்றால் பரவாயில்லை.தலை முழுக்கப் புரட்டி அப்பிக் கொள்வதெல்லாம் சரிவராது.அத்தோடு இதைச் செய்து காட்டிவிட்டால் இப்படியே செய்து கொள்ளலாமே என்ற யோசனை பலவந்தமாகி விடும்.

எப்போதோ,பள்ளியில் படிக்கும் காலத்தில் அம்மாவோ, எதிர்வீட்டு அக்காவோ பேன் பார்க்க தலையைக் கொடுத்து விட்டு சொக்கி சொக்கித் தூங்கிப் போன காலத்திற்குப் பின் தலையை யார் வசமோ விட்டுவிட்டு சற்றுநேரம் அக்கடாவென உட்கார்ந்திருக்கும் இந்த அனுபவத்திற்கும் ஆப்பு.

கொஞ்ச நேரத்தில் பொம்மு வந்துவிட்டால் கலரிங் முடித்து விட்டுக் கிளம்பி விடலாம். வீட்டில் போய் அலசிக் கொள்ளலாம். என்ன….வியர்வையில் காயாத சாயம் கொஞ்சம் காதோரம், முன் நெற்றி என வழியும். ஒருமுறை அப்படிப் போன போது ஆட்டோக்காரன் பக்கவாட்டுக் கண்ணாடியில் எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டே வந்தான். மனசுக்குள் சிரித்துக் கொண்டானோ என்னவோ…பரவாயில்லை..வீட்டுப் பிடுங்கலுக்கு இதைச் சமாளித்து விடலாம். அந்த ஆட்டோக்காரன் நிச்சயம் தெரிந்தவனாக இருக்கப் போவதில்லை.

மீண்டும் பொம்முவை அழைத்தாள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ வந்து சேர்…இங்கேயே நிற்கிறேன் எனச் சொல்லிவிட்டு அவள் சொன்ன ஒரு கூடை ஸாரியையும் உதறுவது போல் கையை உதறிவிட்டு அலைபேசியை அணைத்து கைப்பையில் போட்டாள்.

அந்த தெருமுனை பேக்கரி வரை போய்வரலாமெனத் தோன்றியது. தனியாகப் போனதில்லை என்றாலும் இப்போது ஒரு டீ தேவை.அதைவிட ஐந்து நிமிடமாவது உட்கார வேண்டும். இந்த கைப்பை,சாப்பாட்டுப்பை எல்லாவற்றையும் தெருவோரத்தில் எப்படி இறக்குவது எனச் சுமந்து சுமந்து கைவேறு வலிக்கிறது.கடையில் சற்று வைத்து விட்டு உட்காரலாம்.

விளக்கு வைக்கும் நேரம் என்ற தனது கணக்கீடு முடிந்து விட்டது போல வீட்டுக்காரம்மாள் உள்ளிருந்தே கொஞ்ச நஞ்ச வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்த வாசல் விளக்கையும் அணைத்து விட்டாள். போகட்டும் …தேநீரோடு சான்ட்விச் ஏதாவது வாங்கி மெதுவாக நேரம் கழிக்கலாம். இப்போது அவ்வளவு கூட்டம் இருக்க வாய்ப்பில்லை..சாலையைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தால் பொம்மு வருவதைப் பார்த்து உடனே வந்துவிடலாம்..

தன் யோசனையைத் தானே மெச்சியபடி கிளம்பிய போது தான் இந்த பாரதிக்கு என்ன பிரச்னையாக இருக்கும் என்று கூட இவ்வளவு நேரமும் யோசிக்காது தன்னையே யோசித்துக் கொண்டிருந்ததை நினைத்து எரிச்சலும் வெட்கமுமாக இருந்தது. பொம்மு வரட்டும். அவளிடம் நம்பர் இருக்கும்.வாங்கி விசாரிக்கலாம்.

நடக்கத் தொடங்கினாள்.

தெருமுனையில் ஒரு மோட்டார் சைக்கிள் திரும்பியது.மது மாதிரித் தான் இருந்தது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close