புரவி இதழ்- 1
Trending

“ராணுவ உடுப்பெல்லாம் கவிதைக்குத் தேவையில்லை’’ – கவிஞர் மனுஷ்யபுத்திரன்

நேர்காணல் | புரவி (இதழ் 1)

நேர்கண்டவர் – கவிஞர் மித்ரா அழகுவேல்
புகைப்படங்கள் – சுதர்சன் H

உங்களுடைய  முதல் கவிதை நினைவிருக்கிறதா?

கவிஞர் கண்ணதாசனின் மறைவின்போது அதைப் பற்றி எழுதிய கவிதைதான் நான் எழுதிய முதல் கவிதை. கண்ணதாசனின் மறைவு என்னை அவ்வளவு பாதித்தது. அந்தக் கவிதை எதிலும் பிரசுரமாகவில்லை. அப்போது எனக்கு ஒரு 14 வயதிருக்கலாம். கவிதை என்ற வடிவத்தில் நான் எழுதிப் பார்த்தது அதுதான் முதல்முறை. அப்போது என் அண்ணன் நான் அந்தக் கவிதையை எழுதியிருந்த காகிதத்தை வாங்கிப் பார்த்துவிட்டு, “என்ன இது, பைத்தியமாகிட்டியா என்னென்னமோ கிறுக்கிட்டு இருக்க..?” எனக் கேட்டார். அதுதான் என்னுடைய முதல் அங்கீகாரம் என்று கூட சொல்லலாம்.

அந்தக் கவிதை வரிகள் நினைவிருக்கிறதா?

இல்லை. வரிகள் எதுவும் நினைவில் இல்லை. ஆனால் மிகவும் வருத்தத்துடன் கண்ணதாசனைக் கொண்டாடி எழுதினேன் என்பது மட்டும் நினைவிருக்கிறது. பிரசுரமான என்னுடைய முதல் கவிதை காந்தி ஜெயந்தி அன்று, ‘அரசி’ என்று ஒரு இதழில் வெளியான, ‘வாழ்க நீ எம்மான்’ எனும் தலைப்பிலான கவிதை. காந்தியைப் பற்றிய கவிதை அது.

உங்கள் முதல் கவிதைத் தொகுப்பு வெளியாகும்போது உங்களுக்கு 16 வயது இல்லையா?

ஆமாம், முதல் கவிதை எழுதிய இரண்டு வருடங்களிலேயே கவிதைத் தொகுப்பும் வெளியானது. அப்போது கூட பெரிய கவிஞன் ஆக வேண்டுமென்றோ, கவிதை சார்ந்து என்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றோ நான் நினைக்கவில்லை. அதொரு விபத்து. இன்னும் சொல்லப்போனால் நானொரு ‘Accidental Poet’  என்றே சொல்லலாம். நான் வீட்டிலேயே அதிக நேரம் இருப்பேன். தர்மதுரை திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் ஒரு பெண் கதாபாத்திரம்  பத்திரிக்கைகளுக்கெல்லாம் கடிதம் அனுப்பிக் கொண்டே இருக்கும். அந்த கதாபாத்திரம்தான் நான். தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் வானொலி நிலையங்களுக்கும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பேன். அடிக்கடி என் பெயர், எனது ஊர் பெயரோடு சேர்ந்து பிரசுரமாகிக் கொண்டே, ஒலிபரப்பாகிக் கொண்டே இருக்கும். வெளியுலகத் தொடர்பே இல்லாமல் இருந்த எனக்கு அதில் எனக்கொரு மகிழ்ச்சி கிடைத்தது. அந்த சமயத்தில், கல்கண்டுக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்புவேன். வைரமுத்து, மு.மேத்தா ஆகியோரை வாசிக்கத் தொடங்கியதன் விளைவாக கவிநடையில் கடிதங்கள் எழுதி அனுப்பத் தொடங்கினேன். அவற்றைப் படித்துவிட்டு லேனா தமிழ்வாணன் எனக்கு கடிதம் அனுப்பி உற்சாகப்படுத்தினார். எனக்குள் இருந்த கவிஞனை முதலில் அடையாளம் கண்டுகொண்டது அவர்தான். கவிதைகள் எழுதி அனுப்புங்கள் நான் பிரசுரிக்கிறேன் என லேனா தமிழ்வாணன்தான் முதலில் என்னிடம் கூறினார். அப்போதெல்லாம் இரண்டு குயர் நோட்டில் நான் தினமும் கவிதைகள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். லேனா தமிழ்வாணன் கேட்டதும் அந்த நோட்டை நான் அவருக்கு அனுப்பி வைத்தேன். அவர் அதை புத்தகமாக வெளியிட்டார். அது எனக்கு ஒரு புதிய உலகத்தை திறந்து வைத்தது என சொல்லலாம். அங்குதான் என் கவிதை உலகப்பயணம் தொடங்கியது.

அதன் மூலமாக நிறைய தொடர்புகள் உருவானது எனக்கு. பெரியாரிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், சிறுபத்திரிகைகளைச் சேர்ந்த நண்பர்கள் எனப் பலதரப்பட்ட சிந்தனை சார்ந்த மனிதர்களை சந்திக்கத் தொடங்கியபோது, அவர்களுடன் இரவு பகலாக உரையாடத் தொடங்கிய போதுதான் என்  உலகம் விரிவடைந்தது. இப்போது நினைக்கையில் அது ஒரு கனவுக்காலம் போல் இருக்கிறது. அப்போது புத்தகம் எழுதியதால் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தனர். இப்போது புத்தகம் எழுதினால் எதிரிகள்தான் நிறைய கிடைக்கின்றனர்.

அப்போதைய காலத்துடன் ஒப்பிடும் பொழுது சமகாலத்தில் இலக்கிய உலகம் ஒரு எல்லைக்குள் சுருங்கி விட்டதாகத் தோன்றுகிறதா?

கண்டிப்பாக. இது ஒரு நல்ல கேள்வி. நான் ஒரு விஷயம் சொன்னால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால், இப்போதெல்லாம் நாம் புத்தகம் எழுதியது ஒரு வாரத்தில் நமக்கே மறந்து விடுகிறது. அத்தகைய சூழல்தான் இப்போது உள்ளது. அந்தக் காலம் அப்படி இல்லை. நான் எனது முதல் தொகுப்பான ‘மனுஷ்யபுத்திரன் கவிதைகள்’ புத்தகத்தில் என்னுடைய முகவரியைக் கொடுத்திருந்தேன். ஏறத்தாழ 350 வாசக கடிதங்கள் எனக்கு வந்தன எனச் சொன்னால் நம்புவீர்களா? அன்று புத்தகங்கள் சாமானியர்களால் தேடித் தேடி வாங்கப்பட்டு வாசிக்கப்பட்டன. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, நிறைய கடிதங்கள் முழுக்க பிழையுடன் இருக்கும். பெண்களிடம் இருந்து கூட  நிறைய கடிதங்கள் வரும். நான் சொல்லுவது 1982-83 களில். அன்று மேத்தாவுடைய கண்ணீர் பூக்களும், மீராவுடைய ஊசிகளும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகப் பிரபலம். அதேபோல  ந.காமராசனின் ’கருப்பு மலர்கள்’, வைரமுத்துவின் ’திருத்தி எழுதிய தீர்ப்புகள்’ ஆகியவற்றையும் குறிப்பிடலாம். இவையெல்லாம் இளைஞர்கள் மத்தியில் பெரிய அலையை ஏற்படுத்தின. புத்தகம் வாசிப்பதெல்லாம் அப்போது ஒரு கெளரவம். அதுமட்டுமில்லாமல், பொதுமக்களிலேயே கவிதைகள் மீது ஆர்வம் கொண்ட பலர் இருந்தனர். இன்னொன்று அப்போதெல்லாம் புத்தகம் எழுதுவது ஒரு அபூர்வமான விஷயம். இப்போது போல அது அவ்வளவு சுலபமெல்லாம் இல்லை. அது லட்சியவாதமும் நம்பிக்கையும் எங்கும் பரவியிருந்த காலம். இப்போது பொதுவாகவே உலகமயமாக்கலுக்குப் பிறகு நாம் அனைவருமே தன்னிலை கொண்ட மனிதர்களாக மாறி விட்டோம். நம்முடைய சுயத்தை மட்டுமே சார்ந்திருக்க கூடிய மனிதர்களாக மாறிவிட்டோம். யாருக்கும் யார் மீதும் எந்த மரியாதையும் இல்லை. யாருக்கும் எதன் மீதும் எந்த அக்கறையும் இல்லை. இதை நான் கடந்த காலத்தில் இருந்து சொல்லவில்லை. நிகழ்காலத்தில் இருந்தே சொல்கிறேன்.

இந்த வருடம் என்னுடைய மூன்று பெரிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகின.  ஆனால், அன்று ஒரு சின்ன பையன் ஒரு கவிதைத் தொகுப்பு எழுதுகிறான், அவனுக்கு 350 கடிதங்கள் வருகின்றன. அவ்வளவு பேர் என்னைத் தேடிக் கொண்டு அச்சிறிய கிராமத்திற்கு வருகின்றனர். இன்று இந்தப் புத்தகங்களின் நிமித்தமாக யாராவது ஒருவரேனும் என்னைத் தேடி வருவார்களா, இல்லை ஒரு கடிதமாவது வருமா என்பது சந்தேகம்தான். இப்போது நீங்கள் ஒரு இடத்தில வேலை செய்கிறீர்கள், ஒரு புத்தகம் எழுதியிருக்கிறீர்கள்.ஆனால், இந்த சமூகம் உங்களை ஒரு எழுத்தாளனாக உணரவே அனுமதிக்காது. திரும்பத் திரும்ப உங்கள் வேலை சார்ந்த ஒரு ஆளாக மட்டும்தான் உங்கள் வாழ்க்கைக்குள் நீங்கள் ஓடிக்கொண்டே இருப்பீர்கள். நான் ஒரு கவிதை எழுதக் கூடிய ஒரு ஆள், நான் ஒரு கதை எழுதக் கூடிய ஆள் என்றெல்லாம் எப்போவாவது ஒருமுறை அபூர்வமாகத்தான் உங்களுக்கே நினைவு வரும். ஏனென்றால், இன்று கலை சார்ந்த பிம்பங்கள் எதையுமே நாம் உருவாக்கிக்கொள்ள முடியாத அளவிற்கு அது சிதறடிக்கப்பட்டு விட்டது.

இது சமூக வலைத்தளங்களின் காலம். அதில் நாம் கவிதை எழுதுகிறோம். ஒரு லைக்கோ அல்லது ஹார்ட்டோ வருகிறது. அவ்வளவுதான். அதைத் தாண்டி யாருக்கும் ஒரு படைப்பின் மீதோ அல்லது படைப்பாளியின் மீதோ எந்த ஒரு பெரிய அக்கறையும் கிடையாது என்பதே உண்மை. ஒன்று இறந்துபோன கவிஞர்களைக் கொண்டாடுகிறார்கள், இல்லை தன்னைத்தானே கொண்டாடிக் கொள்கிறார்கள்.

அப்போது எழுத்தாளர்கள் அரிதாகத்தான் இருந்தார்கள் இப்போதுபோல் எழுத்தாளராவது சுலபமாய் இருந்ததில்லை  எனச் சொல்கிறீர்கள் இல்லையாஇந்தச் சூழலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நிறைய நபர்கள் எழுத வருவது, வாசகப் பரப்பு விரிவடைந்து வருவதை நான் கலாச்சார முன்னேற்றமாகவே பார்க்கிறேன். ஒரு எழுத்தாளனாக, பதிப்பாளனாக அது எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்தான். அதில் ஏதும் மாற்றுக்கருத்தே இல்லை.  எழுதுபவர்கள் இப்போது போல அப்போதும் அதிகமாகவே கூட இருந்திருக்கலாம். ஆனால், அதைவிட பல மடங்கு இன்று கல்வி வளர்ந்திருக்கிறது. அன்று கல்வியை நெருங்க முடியாத சமூகத்தினர் அல்லது கல்வி பரவலாகாத நிலப்பரப்பினர் கூட இன்று படித்திருக்கும் நிலையில் பலவிதமான குரல்கள் சமூகத்தில் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. இன்னொன்று அப்போது பிரசுர வாய்ப்புகள் குறைவு. இதை நான் இரண்டு விதமாக பார்க்கிறேன். ஒன்று இப்போது ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு ஊடகமாக செயல்படுகிறோம். சமூகவலைத்தளங்களின் பரவல் அதற்கு காரணம். அடுத்தது பதிப்பகங்களின் வளர்ச்சி. POD போன்றவற்றின் வருகையால் முதலீடு என்பது பெரிய அளவில் தேவையில்லை என்ற சூழல் உருவாகியிருக்கிறது.

ஆனால் அப்படி வெளியாகும் படைப்புகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்திருக்கும் நிலையில் வாசகர்களுக்கு அவற்றின் மீது ஆர்வம் குறைந்து போயிருப்பது உண்மைதான். இப்போதெல்லாம் உங்கள் படைப்பு விற்பனையாக ஒன்று நீங்கள் சமூகவலைதளங்களில் பிரபலமானவராக இருக்க வேண்டும். அல்லது நீங்களோ உங்கள் புத்தகமோ ஏதேனும் சர்ச்சையில் சிக்க வேண்டும். மாறாக தன்னியல்பில் ஒரு புத்தகம் கவனிக்கப்படுவது மிகக்குறைவாகவே உள்ளது என எனக்குத் தோன்றுகிறது. ஆனால், அபூர்வமாக அப்படிப்பட்ட விஷயங்களும் நடந்தேறுகின்றன. உதாரணத்திற்கு இமையத்தின் ‘எங்கதெ’ ஆகட்டும், ஜெயமோகன் ஊரடங்கு காலத்தில் எழுதிய கதைகளாகட்டும் அவை பரவலாக பேசப்பட்டன. என்னுடைய கவிதைகளும் அவ்வப்போது பேசப்படுகின்றன. மற்றபடி பொதுவாகவே, இலக்கியத்தின் மீதான அக்கறை என்பது குறைந்து கொண்டே வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அது வாசகர்களாகட்டும், விமர்சகர்கள் என்பவர்கள் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை இருந்தால் அவர்களாகட்டும் ஏன் எழுத்தார்களுக்குமே கூட பெரிதாக அக்கறை இருப்பதில்லை.

முதல் புத்தகத்திற்காக 350 வாசக கடிதங்களைப் பெற்றதாக சொல்கிறீர்கள். முந்தைய காலங்களில் ஒரு புத்தகம் எழுதிவிட்டு அதற்கு வாசகர்களிடம் இருக்கும் வரவேற்பைத் தெரிந்துக்கொள்ள சிறிதுகாலம் காத்திருக்க வேண்டியிருந்திருக்கும் இல்லையா, இப்போது உடனடியாக முடிவு தெரிகிறது. ஒரு கவிதையை நீங்கள் முகநூலில் பதிந்த சில நிமிடங்களிலேயே வைரல் ஆகிறது. இவை இரண்டிற்கும் உணர்வுரீதியாக என்ன வேறுபாடு இருப்பதாக நினைக்கிறீர்கள்?

ஆம், அதை நான் ஒப்புக்கொள்கிறேன். இன்று ஒரு கவிதை ஏதோ ஒரு பாதிப்பை வாசகனுக்கு ஏற்படுத்தும்படி இருந்தால் அது உடனடியாக வரவேற்பைப் பெறுகிறது. என்னுடைய ‘பிக்பாஸ் எல்லோரையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் ‘ கவிதையை ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்திருந்தனர். இன்று இருக்கும் தொழிநுட்ப யுகத்தில் படைப்பை எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பது எளிதாகியிருக்கிறது. ‘ரஜினி வெளியே வாருங்கள்’ என்றொரு கவிதை, அது அப்படியே மாலை முரசில் செய்தியாக வெளியாகிறது. ஒரு கவிதை செய்தியாக வெளியாகும் என்பது நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. அதே போல இதன்மூலம் சர்ச்சைகள் உண்டாகும் வாய்ப்புகளும் அதிகம். என்னுடைய, ’ஊழியின் நடனம்’ கவிதை அப்படித்தான் பெரும் சர்சைக்குள்ளானது. ரீச் என்பது வேறு. அது நடக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால், இலக்கியம் சார்ந்து, கவிதையியல் சார்ந்து அல்லது இலக்கியம் விமர்சனம் சார்ந்து உரையாடல்கள் எந்த அளவு நடக்கின்றன என்பதே என் கேள்வி. இந்தக் கேள்வியில் இருந்தே நான் இந்த விஷயத்தை அணுகுகிறேன். ஒரு படைப்பு பரவலாக படிக்கப்படுகிறது, ஆனால், படிக்கப்படும் அளவிற்கு அது பேசப்படுவதில்லை.

மனுஷ்யபுத்திரன் எனும்போதே கவிதைகளோடு சேர்ந்து சர்ச்சைகளும் நினைவுக்கு வரும். இத்தனை வருட இலக்கிய வாழ்வில் நீங்கள் நிறைய சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்திருப்பீர்கள். விமர்சனங்களை எவ்வாறு கையாள்கிறீர்கள்?அவற்றில் உங்களால் மறக்கவே முடியாத அல்லது உங்களுக்கு மிகவும் ஆச்சரியம் தந்த விமர்சனம் என்றால் எதைச் சொல்வீர்கள்?

என்னுடைய கவிதைகள் கவனம் பெறத் தொடங்கிய காலத்திலிருந்தே, சிறுபத்திரிகை உலகில் இயங்கத் தொடங்கிய காலத்திலிருந்தே என்னைச் சுற்றி சர்ச்சைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. நான் எதிர்கொண்ட முதல் மோசமான விமர்சனம் என்று சொன்னால், ஜெயமோகன் ஒரு பத்திரிகை நடத்தி வந்தார். அதில் ஒரு சிறுகதை வெளியானது. அந்தச் சிறுகதையை மறைந்த வேதசகாய குமார் எழுதியதாகச் சொல்லப்பட்டது. அப்போது நான் காலச்சுவடு பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் இருந்தேன். அந்த காலத்தில் ஜெயமோகன், வேதசகாயகுமார் போன்றோருக்கு காலச்சுவடோடு சில பிணக்குகள் இருந்தன. அந்நிலையில் அவர்கள் சுந்தர ராமசாமியைத் தாக்குவது போல ஒரு சிறுகதையை எழுதி வெளியிடுகின்றனர். அந்தக் கதையின் தலைப்பு, ‘நாச்சார் மட விவகாரம்’. ’நாச்சார் மடம்’ என்பதை சுந்தர ராமசாமியின் வீடாகவும் அவரை சாமியாராகவும் சித்தரித்து எழுதப்பட்ட ஒரு கதை அது. அக்கதையில் அந்த சாமியார் ஒரு நொண்டி நாய் வளர்க்கிறார் என ஒரு வரி.  அந்த உருவகம் என்னைக் குறித்து எழுதப்பட்டது என்பது தமிழ் சூழலில் எல்லோருக்குமே தெரிந்தது. கடுமையான விமர்சனங்கள் அந்த சூழலில் ஜெயமோகனுக்கு எதிராக அப்போது முன்வைக்கப்பட்டன. எனக்கு மிகப்பெரிய வியப்பு அது. இந்த அளவிற்கு ஒரு விமர்சனத்தை எடுத்துக்கொண்டு போக முடியுமா, வெறுப்பைக் காட்ட முடியுமா என. ஆனால், அதன் பிறகு  பல வருடங்கள் கழித்தும் அதே போன்றொரு தனிநபர் தாக்குதல் விமர்சனத்தை என்னுடைய ’பாய் பெஸ்டி’ கவிதைக்காக ஜெயமோகன் எழுதினார். இது நாச்சார் மட விவகாரம் சம்பவத்தை விட எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. முதன்முதலாக ஒரு அருவருப்புணர்ச்சியை இந்த விமர்சனத்தில் நான் உணர்ந்தேன். அதுமட்டுமல்ல ஜெயமோகன் என் கவிதைகள் குறித்து எழுதிய ‘கடவுளற்றவனின் பக்திக் கவிதைகள்’ என்ற கட்டுரையில் ‘ மனுஷ்ய புத்திரன் அவரது உடல் ஊனம் காரணமாக முழுமையான புரட்சியாளனாக முடியவில்லை’ என்றொரு கருத்தாக்கத்தை முன்வைத்தார். அதற்காக அந்த்தபுத்தகத்தை சாரு நிவேதிதா அதன் வெளியீட்டு விழாவில் கிழித்தெறிந்தார். அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அதை நான்தான் ஏற்பாடு செய்தேன் என்று நம்பிய ஜெயமோகன் என்னுடனான உறவை முறித்துக்கொண்டார். அது நல்லதுதான். ஜெயமோகனின் விமர்சன அளவுகோல்களுக்கு எந்தக் கோட்பாட்டு அஸ்திவாரமும் கிடையாது. அவை ஒருவரைப் பற்றிய அவரது பிம்பங்கள், கற்பனைகள் மற்றும் மனபிராந்திகளால்  ஆனவை.

ஜெயமோகன், போகன் சங்கர், லட்சுமி சரவணக்குமார் போன்ற எழுத்தாளர்கள் என் மீது உமிழ்வதும் இத்தகைய  வெறும் வெறுப்பைத்தான். இத்தனைக்கும் அவர்களையெல்லாம் ஒரு காலத்தில் நான் கொண்டாடியிருக்கிறேன். நான் மதிக்கும் எழுத்தாளர்களாக கவிஞர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் எவ்வளவு கீழிறங்கி என்னை விமர்சிக்க முடியுமோ அவ்வளவு விமர்சித்திருக்கிறார்கள். இவர்கள் என் கவிதைகளைப் பற்றியோ இலக்கியத்தைப் பற்றியோ விமர்சனம் வைத்தால்கூட என்னால் அதை எதிர்கொள்ள முடியும். பிறகுதான் புரிந்தது, இவர்கள் என் மீது காட்டும் வெறுப்பிற்கு காரணம் கண்டிப்பாக சித்தாந்தம் இல்லை என. அவர்கள் மனதில் தேங்கியிருக்கும் கசப்புதான் அத்தகைய விமர்சனங்களுக்குக் காரணம். அவர்களின் மனமே கசப்புகளின் கூடாரமாக இருக்கிறது.  என்னைப் பற்றி யாரென்றே தெரியாதவர்கள், இலக்கியப் பரிட்சயம் துளி கூட இல்லாதவர்கள் அரசியல் காரணங்களுக்காக என்னைத் தொடர்ந்து கடுமையாகத் தாக்கி வந்துள்ளனர். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஏனெனில் அதில் ஒரு பாமரத்தனம் இருக்கிறது.  இவை என் அன்றாட வாழ்வின் ஒரு பகுதி. ஆனால் இவர்களை என்னால் புரிந்துகொள்ளவே முடிந்ததில்லை. இவர்கள் யாரும் என்னுடைய ஒரு கவிதையைப் பற்றி கூட ஒரு புத்தகத்தை பற்றி கூட நேர்மையான ஒரு மதிப்பீட்டை முன் வைத்ததில்லை. ஆனால், தொடர்ந்து என் மீது வெறுப்பை மட்டுமே கக்கி வந்துள்ளனர். இந்த வெறுப்பு எனக்கு இலக்கியத்தின் மீதான நம்பிக்கைகளையே ஐயத்திற்குள்ளாக்கியது. எழுத்தும் படிப்பும் ஒரு மனிதனை அறிவுசார்ந்த உரையாடல் நிகழும் தளத்திற்கு கொண்டுசெல்லும் என நாம் நினைக்கிறோம். ஆனால், சாதாரண பாமரனுக்கும் இவர்களுக்கும் எத்தகைய வித்தியாசமும் இருப்பதில்லை. எனில் இலக்கியம் என்பது மனிதனுக்கு எதைக் கற்றுக்கொடுக்கிறது? அது உருவாக்கக்கூடிய கலாச்சாரத்தளம் என்பது என்ன? அது உருவாக்கக்கூடிய உரையாடல் மொழி என்பது என்ன? ஒரு சக தொழிலாளி மீதான எந்த ஒரு மதிப்பும் இவர்களுக்கு இல்லை.

யாரோ ஒருவரை மகிழ்விப்பதற்காக முன்னுரைகளில் சொல்லக்கூடிய பொய்களும் , யாரோ ஒருவரின் மீதிருக்கும் வெறுப்பின் காரணமாக அவர்களின் அத்தனை உழைப்பையும் நிராகரித்து நீ ஒன்றுமில்லை என்று சொல்லக்கூடிய விமர்சனங்களும் மலிந்திருக்கும் ஒரு சூழலில் ஒருவன் வேலை செய்வதற்கு மிகப்பெரிய மன உறுதி தேவைப்படுகிறது. பொதுத்தளங்களில் அரசியல் சார்ந்து எனக்கு வரக்கூடிய விமர்சனங்கள் குறித்து எனக்கு எந்தக் கவலையும் கிடையாது. அது எனக்கு பொழுதுபோக்குகளில் ஒன்று. ஆனால் இலக்கிய உலகில் சந்திக்கும் இந்த விமர்சனங்கள் எனக்கு ஏதோ ஒரு அருவருப்புணர்ச்சியைத் தருகின்றன என்றே சொல்ல வேண்டும்.

இலக்கியம், அரசியல், பதிப்பகம், ஊடகம் என ஏராளமான துறைகளில் தொடர்ந்து பங்களித்து வருகிறீர்கள். இத்தனைக்கு இடையிலும் நாளுக்கு குறைந்தபட்சம் இரண்டு கவிதைகளேனும் எழுதி விடுகிறீர்கள். உங்கள் கவிமனம் சோர்வடையாமல் இருக்கிறதே எப்படி?

கவிமனம் சோர்வடைவதில்லை என்பதைவிட வாழ்வில் நான் சோர்வடைவதால்தான் கவிதைகளே எழுதுகிறேன். இந்த சோர்வு இல்லையென்றால் நான் மகிழ்வாக இருப்பேன். என்னுடைய வேலைகள் எனக்குக் கொடுக்க கூடிய களைப்பு, என் வாழ்க்கை எனக்குக் கொடுக்கக்கூடிய சோர்வு, கசப்பு, ஒரு விலகல் இவற்றிலிருந்தெல்லாம் தப்பித்துக் கொள்ளத்தான் நான் கவிதையே எழுதுகிறேன். எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக நான் பிற செயல்களில் ஈடுபடுகிறேனோ அந்த அளவிற்கு என் கவிதைகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஒரு ஏழு எட்டு வருடங்களுக்கு முன்னெல்லாம் நான் இவ்வளவு எழுதியதில்லை. காரணம் அப்போதெல்லாம் நான் இத்தனை வேலைகள் செய்யவில்லை. தினமும் கொஞ்சம் படிப்பேன், கொஞ்சம் எழுதுவேன், கொஞ்சம் காதலிப்பேன், கொஞ்சம் குடிப்பேன் அவ்வளவுதான். நான் நிறைய வேலைகளில் ஈடுபட்ட பிறகுதான் கவிதைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.

நான் எல்லா வேலைகளில் இருந்தும் ஒருகட்டத்தில் விலகத் தொடங்குகிறேன் மித்ரா. அது ஏன் என எனக்குப் புரிவதில்லை. எதனொன்றிலும் முழு ஈடுபாட்டோடு என்னால் கடைசி வரை இயங்க முடிவதில்லை. அப்போதெல்லாம் நான் அடிபட்ட குழந்தையைப் போல என்னுடைய ஒரே புகலிடமாக என் கவிதைகளிடமே வருகிறேன். நான் ஏதோ ஒன்றை வெளிச்சம் என்று நம்பி உள்ளே போகிறேன். ஆனால், சிறிது தூரத்தில் அதனுள் ஒரு இருட்டே இருக்கிறது. அந்த இருட்டு எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. நான் திரும்பி வருகிறேன். வரும் வழியில் அந்த இருட்டைப் பற்றி என் மனதில் ஒரு வரி தோன்றுகிறது. அவையே என் கவிதைகள். நான் எழுதுவதற்கான கவிமனதை இந்த வாழ்வு எனக்குத் தரக்கூடிய சோர்வுகளும், கசப்புகளும் என் ஈடுபாடுகளில் நான் சந்திக்கும் தோல்விகளும் எனக்குக் கொடுக்கின்றன.

மனுஷ்யபுத்திரன் எழுதுவது கவிதையே அல்ல. மடக்கி மடக்கி எழுதுவதெல்லாம் கவிதை ஆகாது. கவிதை எழுதிவரும் இளைஞர்களை அவர் தவறாக வழிநடத்துகிறார் என்றெல்லாம் உங்களைப் பற்றி சொல்லப்படுகிறதே.

இளைஞர்களை மனுஷ்யபுத்திரன் தவறாக வழிகாட்டுகிறார் என்று சொல்வதை நான் ஒரு பெரிய பாராட்டாக எடுத்து கொள்கிறேன். ஏனெனில் சாக்ரடீஸைப் பற்றி இப்படித்தான் பேசப்பட்டது. அதற்காகத்தான் அவருக்கு விஷம் கொடுத்தனர். இந்த விமர்சனங்களை எனக்கு விஷம் கொடுக்கும் சிறிய முயற்சியாக பார்க்கிறேன். பொதுவாகவே இவர்களிடம் ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது. எது இருக்கிறதோ அது என்ன என்று இவர்களுக்குத் தெரியாது. நான் இந்த விமர்சனம் குறித்து விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். கவிதை குறித்த கோட்பாடுகளைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஏறத்தாழ 40 வருடங்களாக நான் கவிதை எழுதி வருகிறேன். ஆனால், கவிதை பற்றி நான் என்ன அறிந்திருக்கிறேன் என்றும், எந்தக் கோட்பாட்டின் வழி நான் இயங்குகிறேன் என்பதையும் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் சொல்லுங்கள்.  என்னைப் பிடிக்கவில்லை என்பதெல்லாம் என் கவிதையை மதிப்பிடுவதற்கான அளவுகோல் ஆகாது. மாறாக இந்தக் கவிதையில் இருக்கும் படிமம் பொருத்தமற்றது, வடிவத்தில் இந்த மாதிரியான சிக்கல் இருக்கிறது, இது ஒரு பிரச்சனையைத் தவறாகப் புரிந்துகொண்டு எழுதப்பட்டுள்ளது, இது வாழ்வை அணுகும் முறையில் ஒரு கோளாறு இருக்கிறது அல்லது இதன் மொழியில் கோளாறு இருக்கிறது என்று சொன்னால் நான் அதைப் பற்றி விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். மற்றதைதையெல்லாம் ஒரு பாமரத்தனமான விமர்சனமாகவே நான் பார்க்கிறேன். இலக்கியம் என்பது ஓர் அறிவுசார் செயல்பாடு. பாமரத்தனத்திற்கு அங்கே இடமில்லை. நான் ஒரு வடிவத்தைத் தெரிவு செய்து அதில் கவிதைகள் எழுதி வருகிறேன். அதை ஏன் நீங்கள் மறுக்கிறீர்கள் என்பதை காராணரீதியாக எனக்கு சொல்லுங்கள். அப்போது நாம் இலக்கியத்தை பற்றியும் கவிதையியலைப் பற்றியும் பேசலாம். என்னைப்பற்றி அல்ல.

இன்று ஒரு கவிஞரை நிறைய பேர் பின்தொடர்கிறார்கள். அவனை அடியொற்றி நிறைய பேர் எழுதுகிறார்கள் என்று சொன்னால், அவன் ஒரு புதிய மொழிக்கட்டமைப்பை உருவாக்குகிறான் என்று அர்த்தம். அந்த மொழிக்கட்டமைப்பிற்குள் நவீன வாழ்வின் அத்தனை சிக்கல்களையும் சொல்லிவிட முடிகிறது என்று அர்த்தம். நான் பொதுவாக நான் என்ன எழுதுகிறேன் என்பதைப் பற்றி பேச விரும்ப மாட்டேன். ஆனால், நான் உருவாகியிருக்கும் இந்த  இலக்கிய வடிவத்தில் நான் ஒன்றை செய்கிறேன். இதற்கு முன்னால் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த அனைவருமே குறிப்பிட்ட சில உணர்வுகளை மட்டுமே கவிதையாக்க முடியும் என்றொரு எல்லை வைத்திருந்தனர். ஆனால், எதை வேண்டுமானாலும் கவிதையாக்கலாம் என்றொரு வடிவத்தைக் கொண்டு வந்ததை என்னுடைய பங்களிப்பாக நான் பார்க்கிறேன். கவிதையின் வடிவத்தை பெருமளவு நெகிழ்வுத்தன்மை கொண்டதாக நான் மாற்றியிருக்கிறேன். இவர்கள் எதிர்பார்ப்பது போன்ற ஒரு ராணுவ உடுப்பெல்லாம் கவிதைக்குத் தேவையில்லை. இந்தக் காலகட்டத்திற்கான ஒரு மொழியை நான் கண்டறிந்தேன், அவ்வளவுதான்.

நீங்கள் ஏன் சிறுகதைகள், நாவல் போன்ற  இலக்கியத்தின் பிற வடிவங்களை முயற்சிப்பதில்லை? 

ஆரம்பகாலத்தில் சில சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். இப்பொழுது நிறைய  நாவல்களையும், சிறுகதைகளையும் என்னுடைய கவிதைகளுக்குள்ளேயே நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆயிரம் பக்கம் ஒருவர் மெனக்கெட்டு எழுதக்கூடிய நாவலை ஒரு பத்து வரிகளில் கவிதையாக என்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. அதுதான் காரணம்.

எல்லாம் சரி, திடீரென நடிகராகி விட்டீர்களே?

நான் எப்போதும் என் பிம்பங்களை நானே மறுக்கக்கூடிய ஒரு ஆள். நீங்கள் என்னை ஒரு கவிஞன் என்ற முடிவோடே அணுகினீர்கள் என்றால் அது நான் இல்லை என வேறொரு வேலையைச் செய்வேன். என்னை நடிகனாகப் பார்க்க விரும்பினீர்களென்றால் அதுவும் இல்லை என மற்றொரு வேலையைச் செய்வேன். இந்த பிம்பங்களை நாமே ஒட்ட வைத்துக்கொண்டு அவற்றைத் தூக்கிக்கொண்டு அலைவது அயர்வாக உள்ளது. எனக்கு என் பிம்பத்தைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. இது தவிர, எவ்வளவு வேலை செய்தாலும் எனக்கு நிறைய நேரம் இருக்கிறது. அந்த நேரங்களில் என்ன செய்வதென்றே தெரிவதில்லை. அப்படிப் பார்க்கையில், வாழ்க்கையில் வெவ்வேறு விதமான காரியங்களில் ஈடுபடும் பொழுது ஒரு குதூகலம் பிறக்கிறது. ஒரு கவிஞனுக்கு அந்த குதூகலமான மனது மிக முக்கியம். ஒரு கவிஞன் எப்போதும் கற்றுக்கொள்ளத் தயார் நிலையில் இருப்பவனாக இருக்க வேண்டும். அதனால் எந்தத் துறையில் எனக்கான கதவு திறந்தாலும், அதற்குள் சிறிது தூரம் செல்ல வாய்ப்பு கிடைத்தாலும் நான் அதை செய்வேன். அது என்ன எனத் தெரிந்து கொள்வேன். ஏனெனில் என் வாழ்க்கையில் நிகழும் அனைத்துமே நான் எழுதுவதற்கான ஒரு காரணி. அதற்காக நான் அழைக்கப்படாத வீடுகளில் கூட நுழைந்து சிறிது நேரம் உட்கார்ந்திருந்து விட்டு வருவேன். அப்படித்தான் நடிப்பு என்றொரு வாய்ப்பு வரும்போது ஒப்புக்கொண்டேன்.

கடந்த 20 வருடங்களாக தமிழ் இலக்கிய சூழலில் உயிர்மை ஒரு தவிர்க்கமுடியாத பதிப்பகமாக செயல்பட்டு வருகிறது. பதிப்பகத்துறை பற்றி, குறிப்பாக கொரோனா சூழலுக்குப் பிறகான பதிப்பகங்களின் நிலை குறித்த உங்களின் நிலைப்பாடு என்ன? 

பதிப்பகத் துறை முன்னரே கலாச்சார கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுத்தான் இருந்தது. சொல்லப்போனால் அந்தத் துறையே கலாச்சார  வறுமையின்  நோய்மையோடுத்தான் எப்போதும் போராடி வந்திருக்கிறது. நிறைய பேர் கொரோனாவால் பதிப்பகத்துறை பாதிக்கப்பட்டது எனச் சொல்லும்போது எனக்குப் புதிதாக இருக்கிறது. தி.நகர் பகுதிகளில் சுய முன்னேற்ற நூல்கள் பதிப்பிக்கும் பதிப்பகங்கள் வேண்டுமானால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு விற்பனை இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், என் புத்தகங்கள்தான் எப்போதும் விற்காதே. அதனால் எனக்கு எந்த நஷ்டமுமே இல்லை. சொல்லப்போனால் உயிர்மைக்கு லாபம்தான். ஏனெனில் இந்த கொரோனா சூழல் காரணாமாக ஒரு ஏழெட்டு மாதமாக எந்தப் புத்தகமும் பதிப்பிக்கவில்லை. அதனால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. இன்னும் ஊரடங்கு நீடித்திருந்தால்உயிர்மை  பதிப்பகம் இழப்புகள் இல்லாமல் செயல்பட்டிருக்கும். அதனால், பதிப்பகத்துறை எப்போதும் அழிவில்தான் இருந்து கொண்டிருந்தது, இப்போது கூடுதலாக அழிந்திருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இப்பொழுது புத்தகங்கள் படிக்கும் வழக்கம் மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது. பெரும்பாலானோர் மின்புத்தகங்களை விரும்பத் தொடங்கியுள்ளனர். கிண்டிலின் வளர்ச்சி அபரிமிதமானதாக உள்ளது. நன்கு பரிச்சயப்பட்ட எழுத்தாளர்களே கிண்டில் நோக்கி நகர்ந்து வருகின்றனர். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

கிண்டிலில் புத்தகம் வெளியிடுவதை பெரிய புரட்சி போல நம் எழுத்தாளர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். வாசிப்பவன் புத்தகமாக இருந்தாலும் படிப்பான். கிண்டிலில் இருந்தாலும் படிப்பான். வாசிக்காதவன் எங்குமே வாசிக்க மாட்டான். கிண்டிலில் வெளியிட்டால் மட்டும் ஆயிரம் பேர் வாங்கி விடுவார்களா என்ன? இது ஒரு கட்டுக்கதை. நம் எழுத்தாளர்கள் எப்போதுமே தொழில்நுட்பத்தில் கொஞ்சம் பின்தங்கியிருப்பவர்கள். அவர்களுக்கு எது புதிதாக வந்தாலுமே இதனால் நாம் உலகப்புகழ் அடைந்து விட முடியுமா என்றொரு எண்ணம் வந்துவிடும். எனக்கு அது போல எந்த மாயையும் இல்லை. எனக்கு அச்சுப் புத்தகமும் ஒன்றுதான், கிண்டிலும் ஒன்றுதான். இதை ஒரு பெரிய நெருக்கடியாக நினைத்துக்கொண்டு சில எழுத்தாளர்கள் கருத்து தெரிவிப்பதைப் பார்க்கிறேன். இவர்களுக்கு எழுதுவதைத் தவிர எல்லா நெருக்கடியும் இருக்கிறது.

கவிதை எழுத  ஒருவர் மற்றவருக்கு கற்றுக்கொடுக்க முடியும் என நம்புகிறீர்களா?

இந்த உலகில் அனைத்தையுமே கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. நடனம், பாடல் போன்றவற்றையெல்லாம் நாம் கற்றுக்கொள்ளத்தானே செய்கிறோம்? அது ஏன் இலக்கியம் என்று வந்த உடனேயே எதையும் கற்றுக்கொள்ளாமல் நாம் எழுதலாம் என்றொரு தைரியம் வருகிறது? தமிழில் எழுதியிருக்கக் கூடிய எந்தக் கவிஞனையும் படிக்க வேண்டியதில்லை. எந்த இலக்கியக் கோட்பாடுகளையும் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. தமிழ் எழுதப் படிக்கத் தெரிவதால் மட்டுமே நான் ஒரு கவிஞன் ஆகி விட முடியுமா? இதை முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டுமில்லையா? கவிதை எழுதப் படிக்கத் தெரிந்த எல்லோரும் எழுதுவதற்கான ஒரு வடிவம் இல்லை. கவிதை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், அது கவிதை ஆக வேண்டுமென்றால், அடிப்படையான சில விஷயங்களை நாம் அறிந்திருக்க வேண்டும். ஒன்று, அது சுய கற்றலின் மூலமாக நடக்க வேண்டும். அல்லது சொல் புத்தியின் மூலமாக நடக்க வேண்டும். ஆனால், 90% பேருக்கு சுய கற்றலும் கிடையாது, அவர்கள் யாரிடமும் கேட்பதும் கிடையாது.  நாம் கவிதையை எப்படி எழுத வேண்டும் எனக் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை, ஆனால், எவை கவிதையாகாது என்பதையாவது நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அரசியலில் நுழைவதற்கான உந்துதல் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

உந்துதல் எல்லாம் ஒன்றுமில்லை. சமூக அறிவு இருக்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் அரசியல் ஈடுபாடு வரத்தான் செய்யும். அது ஒரு சமூக செயல்பாடு. அரசியல் என்று தனியாக ஒன்றும் கிடையாது அது ஒரு கூட்டு செயல்பாடு. சமூகத்தில் சில சிக்கல்கள் இருக்கின்றன, பிரச்சனைகள் இருக்கின்றன. இவற்றைத் தாண்டி பலதரப்பட்ட மக்களுடன் சேர்ந்து ஒன்றாகப் பணியாற்ற முடிகிறது என்பதால்தான் நான் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இயக்கத் தோழர்களோடு பயணித்திருந்தேன். பாசிசம் இங்கு பெரிதாக வளர்ந்து வரும் நேரத்தில் ஒவ்வொரு எழுத்தாளனும் ஒரு தீவிரமான சமூக அரசியல் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்று தோன்றியது. இது ஒரு நீண்ட காலத்தின் தொடர்ச்சிதான். சொல்லப்போனால், என்னை இன்னும் உயிரோட்டமாக வைத்திருப்பது என்னுடைய அரசியல் செயல்பாடுகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

புதிதாக இலக்கிய உலகிற்கு கவிதை எழுத வரும் கவிஞர்களுக்கு ஒரு முன்னோடியாக  சில அறிவுரைகள் சொல்ல வேண்டுமென்றால் என்ன சொல்வீர்கள்?

அறிவுரை என்பதை விட நான் எப்படி உருவாகி வந்தேன் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். முதல் விஷயம், உங்களுடைய கற்றல். அது எந்த அளவிற்கு முழுமையாக இருக்கிறது என்பது முக்கியம். சமீபத்தில் இளம் கவிஞர் ஒருவர் தமிழ் இந்துவில் இடம்பெற்ற ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார். ‘கவிதை என்பதொரு மர்மமான தாவரம்’ என்று. எனக்கு அது விசித்திரமாக இருந்தது. அப்படி ஒரு சிக்கலான உருவகம் எல்லாம் ஒரு கவிதைக்குத் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை, ‘கவிதை என்பது வெட்டவெளியில் ஏற்றி வைக்கப்பட்டதொரு விளக்கு’. அதில் எந்த மர்மமும் இல்லை. அப்படிப் பார்க்கையில், கவிதைக்கான முதல் விஷயம் நம் அக்கறைகள் அதன் மீதான கற்றல் பரந்துபட்டதாக இருக்க வேண்டும். அரசியல், சமூகம்,  வரலாறு, பண்பாடு இன்னும் சொல்லப்போனால் சக மனிதர்களுடைய சிடுக்கு, இவற்றையெல்லாம் பற்றிய இடைவிடாத தேடலும் கற்றலும் இருக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து பிறர் வழியாகப் பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும். காதுகளால் தொடர்ந்து கேட்க வேண்டும். கண்களால் தொடர்ந்து பார்க்க வேண்டும். இதுதான் முதன்மையான விஷயம். இரண்டாவது, பலதரப்பட்ட இலக்கியப் பிரதிகளைப் படிப்பது. நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், தத்துவ வரலாற்று நூல்கள் இப்படியானவற்றை தொடர்ந்து வாசிக்க வேண்டும். இவை நம் மொழிக்களனை விரிவுபபடுத்திக்கொண்டே இருக்க உதவும். அதே நேரத்தில் இடைவிடாமல் தொடர்ந்து எழுத வேண்டும். கற்றல் எந்த அளவிற்கு உள்ளதோ அதே அளவிற்கு எழுத வேண்டும். சில கவிதைகள் நன்றாக வரலாம். சில வராமல் போகலாம். எழுதுவதற்கான மனநிலைக்காக காத்திருக்கக் கூடாது. பல கவிதைகள் எழுதப்படும்போதுதான் சிந்திக்கப்படுகின்றன. நீங்கள் சிந்தித்து ஒரு கவிதையை எழுதவே முடியாது. கற்றலும் வெளிப்படுத்துதலும் இடையறாத நிகழ்வாக இருந்து கொண்டே இருக்க வேண்டும். அவன்தான் ஒரு முழுமையான படைப்பாளியாக இருக்க முடியும்.

***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close