கட்டுரைகள்
Trending

’LUST FOR LIFE; ஒரு கலைப்பித்தனின் சரித்திரம்’ – முஜ்ஜம்மில்

கட்டுரை | வாசகசாலை

இர்விங் ஸ்டோன் எழுதிய LUST FOR LIFE  வின்சென்ட் வான்கா பற்றிய வாழ்க்கை வரலாற்று நாவல். இதைப் படித்து முடித்தபோது ‘’இப்படியுமொரு மனிதன் கலைப் பித்தோடு வாழ முடியுமா? என்ற எண்ணம்தான் தோன்றியது. அர்பணிப்போடு ஒரு விஷயத்தைச் செய்வது என்பதாக நாம் சொல்வோம். அந்த அர்பணிப்பு எந்தளவு என்பது அவரவர் தனிப்பட்டது. சிலர் லட்சியங்களுக்காக தங்கள் உயிரையே அர்பணிகிறார்கள். லட்சியம் என்பது ஒரு போராட்டமாக இருக்கலாம், பணமாக இருக்கலாம், எதை பற்றிய ஆராய்ச்சியாகவோ இருக்கலாம், எதுவாகவோ இருக்கலாம். ஆனால் அதற்கான முயற்சிகள் எல்லாம் ஒரே மாதிரியானதுதான்.

வின்சென்ட் வான்கா ஒரு மதகுருவாகப் பணியாற்றி மக்களுக்கு நல்வழிகளை போதிக்க வேண்டும் என்ற நாட்டமுள்ளவராக இருந்திருக்கிறார். ஆனால், காலம் நம்முடைய நோக்கங்களை, கனவுகளை மாற்றியமைக்கிறது. அதுபோலவே வான்கா தன்னைச் சுற்றியுள்ள உலகை நேரடியாக தரிசித்து படிப்பினை பெற பல இடங்களுக்குச் செல்லும்போது ஒரு குறிப்பிட்ட இடம் அவரை மிகவும் பாதிக்கிறது. சுரங்கத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகளை சுரங்கத்திற்கே சென்று சந்தித்துப் பார்க்கும்போது அவருக்கு அதிர்ச்சியளிக்கிறது அவர்களுடைய அபாயகரமான சுரங்கப் பணி. சிறு குழாயைப் போன்ற சுரங்கத்திற்குள் ஊர்ந்து சென்று, நெருக்கடியான இடத்தில் வியர்வை பெருக்கெடுத்தோட அவர்கள் வேலைசெய்வதைப் பார்த்தபோது அக்காட்சி அவரைக் கடுமையாக பாதிக்கிறது. வாழ்வதற்காக  மனிதர்கள் எவ்வளவு அபாயங்களைச் சந்திக்கிறார்கள் என்பதை நேரடியாக உணர்கிறார்.

மிகுந்த கருணையும் இரக்கமும் உடைய வான்கா, வசதியிருந்தும் மிக எளிமையான வாழ்வை மேற்கொள்கிறார். கலை பொருள் விற்பனையாளரான அவர், பின்னர் அதிலிருந்து முழுமையாக விலகி ஓவியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். இது அவர் ஒரு புதிய உலகினுள், மிக விசித்திரமான ஒரு உலகினுள் ஆழ்ந்து செல்லக்கூடிய ஒரு நுழைவாயிலாக அமைகிறது. அதன் பின்னர் அவர் ஓவியமாக வரைந்து தள்ளுகிறார். எல்லாவற்றையும் வரைகிறார். ஓவியமே அவரின் மொழியாக ஆகிறது. அதன்  வழியாக அவர் உலகோடு உரையாடத் தொடங்குகிறார். ஆனால் அவருடைய வாழ்க்கை நிலை மகிழ்ச்சிக்குரியதாக இல்லை. குடும்பத்தில் பெரிய ஆதரவு இல்லை. அவர் தனித்த ஒரு குடிசையில் தங்கி ஓவியம் வரைகிறார். அவர் குடும்பம் வசதிபடைத்திருந்தும் அவர் எந்த உதவியும் பெறாமல் வறுமையிலும், அரைகுறை உணவை உண்டும்  சமாளித்துக்கொள்கிறார்.

அவர் அப்படி கலையை தீவிரமாக எடுத்துக்கொள்ள என்ன காரணம்? அப்படி அதில் என்ன கண்டார்? என்ற கேள்வி அவருடைய பெற்றோருக்கும் நமக்குமே எழும். ஆனால் அது ஒரு கலைஞன் மனதில் உணரக்கூடிய ஒரு ரகசியம், நிச்சயம் பிறர் அதைப் புரிந்துகொள்ள முடியாது. பிறருக்கு அவரின் செயல்பாடுகள் அபத்தமாகக் கூட தோன்றலாம். ஒரு கலைஞன் மேல் மதிப்பு வைத்து ஊக்குவிப்பவர்கள், ஆதரவு தருபவர்கள் கூட, அந்தக் கலைஞன் கலையின் வழியாக எதைத் தேடுகிறான் அல்லது உணர்கிறான் என்பதைப் புரிந்துக்கொள்ள முடியாது. வான்காவின் தம்பி தியோ கடைசி வரை அவரின் உற்ற ஆதரவாளராக, அரவணைக்கும் சகோதரனாக நீடிக்கிறார். இன்னும் சொன்னால் அவருடைய கலை வாழ்க்கைக்கு மிகப்பெரும் உதவியும் பக்கபலமும் தியோதான். தொடர்ந்து  ஓவியங்களை வான்காவிற்க்கு அனுப்பி வைக்கிறார். அவரோடு ஓவியம் பற்றி  கலந்துரையாடுகிறார். பணவுதவியும்  செய்கிறார். வான்காவுக்கும் தியோவுக்குமான உறவைப் பற்றி அவர்களுடைய கடிதங்களை படித்துப்பார்த்தால் புரியும். அக்கடிதங்கள்  தனி நூலாக வெளியாகியுள்ளது. IRVING STONE  இந்நூலை எழுத அடிப்படை ஆராய்ச்சி மூலமாக கொண்டது வான்காவின் கடிதங்களைத்தான். அக்கடிதங்களின் மூலம் கிடைத்த  தகவல்களின் அடிப்படையில்  இந்நாவலை  வடித்திருக்கிறார்.

IRVING STONEன்  மொழிக்காகவே இந்நூலை நிச்சயம் வாசிக்கலாம். அவ்வளவு தெளிவாக, நுட்பமான விவரணைகளோடு ஒரு ஓவியத்தை பார்பதைப் போலவே இந்நூலை எழுத முடிந்ததற்குப் பின் அவர் வான்காவை எவ்வளவு ஆழமாக உள்வாங்கியிருக்கிறார் என்பதை உணர முடிகிறது. இதன் இன்னொரு சிறப்பு என்பதாக நான் நினைப்பது வான்காவின் கண்களின் வாயிலாகவே இவ்வுலகைக் காண்பது போல் அவ்வளவு வண்ணமையமானதாக, ஒவ்வொரு சிறு இலைகள், பூக்கள், தெருக்கள், வீடுகள், அதன் நிறம், தட்டவெப்ப மாற்றம், அதில் நிறம் மாறும் காட்சிகளென்று நம்  கற்பனையை விரிவுபடுத்தும் விஷயங்கள் ஏராளம். ஓவியத்தை ரசிப்பது எவ்வாறு என்று தெரிந்துக்கொள்ள இந்த நூலை வாசித்தால் போதும். ஓவியர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு பிற கலைஞர்களுக்கு இந்நூல் நிச்சயம் நெருக்கமானதாக இருக்கும்.

உலகம் முழுக்க கலைஞர்களின் வாழ்க்கையில் பல ஒற்றுமைகள் இருக்கிறது. ஆன்டன் செகோவ், சிறுகதையின் தந்தை என்று கொண்டாடப்பட்டவர். ஆனால் அவர் வீட்டினர் ‘இந்த கிறுக்கல்களுக்காக உன் மருத்துவப் பணியைக் கைவிட்டுவிடாதே’ என்று ஏளனமாகக் கூறினார்கள். உலகம் ஏற்றாலும் வீட்டிலுள்ளவர்கள் கலைஞர்களைப் புரிந்துகொள்வதே இல்லை. வான்காவும் அப்படித்தான். ஓவியத்தோடு அவர் தன்னை சுருக்கிக்கொள்ளவில்லை. இலக்கியம், வரலாறு என்று நிறைய வாசிக்கிறார். இதைப்பார்த்து அவர் தந்தை “ஓவியனான உனக்கு எதற்கு இந்த இலக்கியம், புத்தகங்கள் எல்லாம்?” என்று கேட்டதற்கு வான்கா கூறுகிறார், “என்னால் வெறும் புறத் தோற்றங்களைப் பார்த்து மட்டும் வரைய முடியாது. மனிதர்களின் மனம், சிந்தனை இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதற்கு ஆழமான இலக்கிய வாசிப்பு நிச்சயம் தேவை” என்று கூறுகிறார். அவர் வாசிக்கும் ஹியூகோ, பால்சாக் போன்ற எழுத்தாளர்களைப்  பற்றி அவர் தந்தை கோபமாக, “அவர்கள் குற்றவாளிகளைப் பற்றியும், திருடர்களைப் பற்றியும் எழுதுகிறார்கள். அதைப் படித்து என்ன கிடைக்கப் போகிறது? அதற்கு பதில் சமய நூல்களைப் படித்தாலாவது அறம், ஒழுக்கம் என்று கற்றுகொள்ளலாம்” என்று சொன்னதற்கு வான்கா புன்னகையோடு,  “இந்த எழுத்தாளர்களும் அதைதான் கற்றுத்தருகிறார்கள்” என்கிறார். இதை அவருடைய தந்தையால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை. ‘’ஒரு கலைஞன் தன் துறை தாண்டிப் பிற துறைகளில் தொடர்பற்றவனாக இருந்தால் அவன் மிக மேலோட்டமான கலைஞனாகத்தான் இருக்க முடியும்” என்று வான்கா கூறுவதை இளம் கலைஞர்களுக்கான மிகச் சிறந்த அறிவுரையாகக் கருதுகிறேன்.  தொடர்ந்து  நிறைய வரைகிறார், ஓவியர்களை சந்திப்பதற்காகவும், ஓவியம் வரைவதற்காகவும் பல மைல் தூரம் நடந்தே, உணவில்லாமல், கந்தலாடையோடு, செல்கிறார். அவருடைய மனமெல்லாம் ஓவியம் மட்டுமே நிறைந்திருக்கிறது. பிற நிறங்களை விட மஞ்சள் நிறத்தின் மேல் அதிகம் விருப்பமுடையவராய் இருக்கிறார்.

ஓவியத்தில் பல புதுமைகளை நிகழ்த்தும் வான்கா சதாவும் மன உளைச்சல்களால் நிம்மதியற்றவராக இருக்கிறார். வறுமை, தனிமை, நரம்புக் கோளாறுகள் எல்லாம் சேர்ந்து அவரை வாட்டி எடுக்கிறது. பெண்களிடம்  மிகுந்த அன்பும், ஏக்கமும் கொண்டவராகவே வான்கா இருக்கிறார். பெண்ணின் அரவனைப்பிற்காக, காதலுக்காக ஏங்கித் தவிக்கிறார். கலை எப்படி தனக்கு முக்கியமோ அதேபோல் பெண் துணையும் தனக்கு முக்கியம் என்று ஓரிடத்தில் சொல்கிறார். பல பெண்களைக் காதலித்திருக்கும் வான்காவிற்க்கு ஒன்றும் வெற்றிகரமாக அமையவில்லை. தன் உறவினப் பெண் ஒருவள் மேல் தீராக் காதல் கொண்டு அவள் வீடு வரை பல மைல் தூரம் நடந்தே வந்து தன் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சுகிறார். அத்தோடல்லாமல் அவரை வெளியே போகுமாறு அவளுடைய தந்தை சொல்லும்போது அவள் தன்னைவந்து பார்க்கும்வரை போகமாட்டேன், இல்லையென்றால் எரியும் இந்த மெழுகுவர்த்தியில் என் கையை எரித்துகொள்வேன் என்று உள்ளங்கையில் ஒரு துளை விழுந்துவிடுமளவிற்கு மெழுகுவர்த்தியில் கையை வைத்திருக்கிறார். இதைவிட உச்சமாக தான் விரும்பும் ஒரு பெண்ணுக்கு காணிக்கையாக தன்னுடைய ஒரு காதை அறுத்துக் கொடுக்குமளவிற்கு அவருடைய உணர்ச்சிகள் எரிமலையைப் போல் கொந்தளிக்கின்றன.

தன்னுடைய 37ம் வயதில், மன நெருக்கடியின் உச்சத்திற்குச் சென்றதால் தற்கொலை செய்துகொள்கிறார். வான்காவின் செயல்களுக்கும் தாஸ்த்தவஸ்கியின்  ‘இடியட்’ நாவலில் வரும் மிஷ்கினின் கதாபாத்திரத்திற்கும் உள்ள  பல ஒற்றுமைகளை  வாசிக்கும்போது உணரமுடிகிறது. உலகம் முழுக்க கலைஞர்களை, எழுத்தாளர்களைப் பற்றி எழுதப்படுகிற நாவல்கள், வாழ்க்கை வரலாறுகளில் எல்லாம் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.  நட்ஹாம்சன் எழுதிய ‘பசி’ என்ற நாவல் எழுத்தாளனின் வயிற்றுப்பசி, உடற்பசி, கற்பனைப்பசி ஆகியவற்றைப் பற்றியது. அதை விட எழுத்தாளர்களுக்கு மிக நெருக்கமாக உணர முடிகிற ஒரு நாவல் ஜாக் லண்டன் எழுதிய ‘மார்டின் ஈடன்’. எழுத்தாளர்கள் நிச்சயம் வாசிக்கவேண்டிய ஒரு நூல் அது. மேற்சொன்னவைகளை விட இந்நூலுக்கு மிக இணையாக ஒப்பிட முடிகிற ஒரு நூல் உள்ளது. அதுதான் தொ.மூ.சி. ரகுநாதன் எழுதிய ‘புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாறு’. இந்நூலை வாசித்த பின் ஜுரம் வந்துவிட்டதைப் போல் உடலில் உஷ்ணம் ஏறிக்கொண்டது. பக்கமெல்லாம் சிக்கல்களும், வறுமையும், பிரச்சனையும், நோயும் நிரம்பியுள்ளது. ஒரு எழுத்தாளனாக நீடிக்க புதுமைப்பித்தன் எப்படியான தியாகத்தைச் செய்ய வேண்டியிருந்தது என்பதை புதுமைப்பித்தனின் ரத்தத்தையே மையாகக் கொண்டு இந்நூலை ரகுநாதன் எழுதியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றையும், வான்காவின் இந்த வாழ்க்கை வரலாற்று நாவலையும் ஒன்றாக ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டிற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஒருவர் சிறந்த ஓவியர், இன்னொருவர் சிறந்த எழுத்தாளர். இருவருமே பெரும் கலைஞர்கள்.

***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close