சிறுகதைகள்
Trending

குறுங்கதைகள் – வளன்

வாசகசாலை

சுடும் நெருப்பு

குழந்தைகள்  நெருப்பைச்  செங்கொன்றை  மலர்களைப்  போல் வைத்து விளையாடிக் கொண்டிருந்த அந்தக்  கிராமத்தில்தான்  முதல்  நெருப்புக் கிடைத்தது.  அது அங்கிருந்த யாவருக்கும் எத்தீங்கும் இழைத்ததில்லை. இரவில் அவர்கள் இதமாக நெருப்பை அணைத்தவாறு உறங்குமளவுக்கு நெருப்புடன் இணக்கமாக இருந்தார்கள். நெருப்பு என்பதை அவர்கள் சூரியன் உமிழ்ந்த எச்சில் துளிகளென நம்பினார்கள். கடவுளால் சபிக்கப்பட்ட பிசாசுகள் நரகத்தைத் தங்களுக்கெனக் கட்டமைத்தபோது முடிவில்லாப் பாதாளங்களின் குளிரும் இருளும் அவைகளை வதைத்தன. எனவே நெருப்பைத் திருடிக் கொண்டு வர அவைகள் திட்டமிட்டன. பேராசைக் கொண்ட பிசாசுகள் முதன்முறை நெருப்பைப் பார்த்து மயங்கி அந்தக் கிராமத்தின் கடைசித் துளி நெருப்பு வரை எல்லாவற்றையும் திருடிக் கொண்டு நரகத்தை அலங்கரிக்கத் தொடங்கின. எல்லா நெருப்பும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டதால் அதன் வெப்பம் அதிகரித்துச் சுட்டெரிக்கத் துவங்கியது. வெப்பத்தால் பிசாசுகள் மேலும் அவலட்சணமாகின. அதே சமயம் ஒரு துளி நெருப்பில்லாததால் அந்தக் கிராம மக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர். அருகிலிருந்த வனாந்திரத்தில் தவம் செய்த துறவியிடம் மக்கள் முறையிட்டனர். நடந்ததை அறிந்த துறவி தன் கையில் இருந்த நீளமான கோலால் நிலத்தை ஊடுருவிக் குத்தினார். கோலின் முனை நிலத்தைத் துளைத்து நரகத்தை அடந்தது. நரகத்தைப் பொசுக்கிக் கொண்டிருந்த நெருப்பு, கோலையும் பற்ற துறவி கோலை உருவியெடுத்தார். கோலின் முனையில் இப்போது நெருப்பிருந்தது. ஆனால் அதன் இயல்பு மாறி இப்போது தொடுபவர்களைக் காயப்படுத்தியது. துறவி மக்களுக்கு நெருப்பைக் கையாளும் முறைகளைக் கற்றுக்கொடுத்தார். அதன்பின் நெருப்பை மக்கள் ஜாக்கிரதையாகப் புழங்க ஆரம்பித்தார்கள்.

*** *** ***

அம்மு

நிலவு தன் பூர்ணத்துவத்துடன் எழுந்து வந்த ஒரு நாளில் முதன்முதலாக அம்முவை நான் பார்த்தேன். ஊரை விட்டு விலகியிருந்த குளத்தின் கரையிலிருந்த பாறை ஒன்றில் அமர்ந்து தன் பிம்பத்தையும் நிலவின் பிம்பத்தையும் நோக்கி அவள் அமர்ந்திருந்தாள். தூக்கம் வராத அவ்விரவில் சற்று நடந்து வரலாம் என்றெண்ணி சென்ற நான் அவளைப் பார்த்தேன். சலனமில்லாத இரவின் மௌனத்தையும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த அவளையும் இடையூறாதவாறு அவளுக்கு வெகு சமீபத்தில் நின்றிருந்தேன். என் இருப்பை முன்பே உணர்ந்திருந்தவள் போலச் சாதாரணமாக என்னை நோக்கி “இன்று பௌர்ணமி” என்றாள். சற்றே திடுகிட்டு, “ஆமாம், அற்புதமாக இருக்கிறது” என்று சொன்னேன். “வா, என் அருகில் வந்து உட்கார்” என்றழைத்தாள். வசியப்பட்டவனைப் போல் நானும் அவளருகில் அமர்ந்தேன். தன் பெயர் அம்மு என்றும் குளத்தின் மறுக்கரையில் வசிப்பதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டாள். நானும் பதிலுக்கு என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இயல்பாக என் கையை எடுத்து அவள் கன்னத்தில் வைத்துக்கொண்டாள். பதறிவிட்டேன். ஆனால் அதை உள்மனம் வெகுவாக ரசித்தது. பச்சை நிலவின் குளிர்ச்சியால் அவளும் குளிர்ந்திருந்தாள். அவளது உடைகளும் நீண்ட கேசமும், நனைந்து பாதி உலர்ந்திருந்ததைக் கவனித்த போது என் நெஞ்சில் கரம் பதித்து என்னை முத்தமிட என்னருகில் வந்தாள். முதல் சந்திப்பில் முத்தமா என்ற தயக்கம் என்னில் மேலேழுந்தாலும் அவளது கனி உதட்டை சுவைக்க எத்தனித்துக் கண்களை மூடிக்கொண்டேன். அவள் முத்தமிடத் துவங்கியபோது சேற்றின் மணம் வீச ஆரம்பித்தது. குளிர்ந்த உதட்டிலிருந்து வந்த முத்த சுவையிலும் சேற்றின் சுவை. எவ்வளவு நேரம் முத்தமிட்டிருந்தோம் என்று நினைவில்லை. ஆனால் ‘தொபீர்’ என்று ஏதோ ஒன்று குளத்தில் விழுந்ததும் என் முகத்தில் விழுந்த நீர்த் துளிகளைத் துடைத்துக் கண் விழித்தபோது அம்மு அங்கே இல்லை. அடுத்த நாள் அவள் காண்பித்த குளத்தின் மறுக்கரையிலிருந்த வீட்டுக்குச் சென்று அம்முவை விசாரித்தபோது ரொம்ப வருடத்திற்கு முன் அம்மு என்ற இளம்பெண் இந்தக் குளத்தில் சேற்றில் சிக்கி இறந்துபோன செய்தியை சொன்னார்கள். வருடங்கள் கடந்தோடிவிட்டன இன்னமும் அம்மு இறந்து போனதாகச் சொன்ன செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. அம்முவை நினைக்கும் போதே நான் எங்கிருப்பினும் சேற்றின் மணமும் சுவையும் என்னை நிறைத்துக்கொள்கிறது.

*** *** ***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close