சிறுகதைகள்

குளம் – ராம்ப்ரசாத்

சிறுகதை | வாசகசாலை

“தம்பிகளா…. தண்ணீரில் இத்தனை ஆட்டம் தேவையா? சளி பிடித்துவிடலாம்… விரைவாக வீடடையுங்கள்..” தள்ளாகுளம் கிராமத்தின் அகண்ட குளத்தைக் கடந்து  போன வீரையன் கரையில் இருந்தபடியே கத்தினார். கரை என்பது அந்த அதிகம் ஆழமில்லாத குளத்துக்கு சற்று தூரம் தான். வரிசையாக நடப்பட்ட பனைமரங்களுக்கு மத்தியில் மல்லாந்து  படுத்திருக்கும் கூத்துக்காரி போல் கிடந்தது குளம்.

கிராமத்தவர்கள் காளைகளையும், பசுக்களையும் அந்தக் குளத்தில் நிற்கவைத்து குளிப்பாட்டி விடுவது வழமை.  நாள் கிழமை போக எஞ்சிய நாட்களிலெல்லாம் zகுளம் என்பது கிராமத்து சிறுவர்களின் விளையாட்டுத் திடல் தான். ஒருவகையில் அவர்கள் தான் குளத்தின் ஜீவாதாரமும் கூட. முங்கிக் குளிக்கையில், குளத்தின் அடிப்பகுதியில் முளைவிடும் சின்னச்சின்னச் செடிகளைக் கையோடு பிய்த்து விடுவதால், குளத்தை தூர்வார வேண்டிய தேவைகளே கிராமத்தார்களுக்கு எழுவதில்லை. சிறுவர்களின் சேட்டைகள் அவ்விதம். குளத்தால் சிறுவர்களும், சிறுவர்களால் குளமும் சுத்தமானது.

வீரையன் குரலைக் கேட்டு குளத்திலிருந்து சிறுவர்கள் முத்து, பழனி, ராசு, கதிர் திரும்பிப் பார்த்தனர். அவர்கள் இடுப்பளவு நீரில் நின்றிருக்க, அவர்களுக்கிடையில் தெர்மகோல்கள் பரவிக்கிடந்து நீரிலாடிக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றின் மீதும் சிறிது சிறிதாய் முகம் பார்க்கும் கண்ணாடிகள்!

“இதோ முடிந்தது..  செல்கிறோம்..” என்று மட்டும் சொன்னான் ஒருவன். அதற்கு மேல் குரல் உசந்தால் மரியாதை கெட்டுப்போகுமென்று எண்ணியவராய், குளத்தைக் கடந்து போனார் வீரையன்.

“கதிர், இழுத்துப் பிடி..” என்றான் ராசு. கதிரும், பழனியும், முத்துவும் இணைந்து நான்கைந்து தெர்மகோல்களைக் கயிற்றால் இழுத்துக் கட்ட, அவற்றின் மீதிருந்த மிகப்பெரிய முகம் பார்க்கும் கண்ணாடிகள் சூரியனின் கிரணங்களை அப்படியே பிரதிபலித்து விண்ணுக்குத் திருப்பி அனுப்பின.

அத்தனை பெரிய சூரியனின் கிரணங்களை விண்ணுக்கே திரும்பச் செய்துவிட்டதில் அறிவியலின் ஏதோவொரு விடைத்த நரம்பை சற்றே வளைத்துப்பார்த்துவிட்ட, தளர்த்திப்பார்த்துவிட்ட, நெகிழ்த்திப்பார்த்துவிட்ட பூரிப்பு அவர்களின் முகத்தில் வியாபித்திருந்தது.

~ * ~

காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துவிட்டு, குளித்துவிட்டு, ஒரு கப் காபியுடன் ஹாலுக்கு தியாகு வந்தபோது ராஜீவ் ஏற்கனவே தொலைக்காட்சியில் ஈ.எஸ்.பி.என். சானலில் சாக்கர் விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“ராஜீவ், காலையிலேயே கால்பந்தாட்டப்போட்டியா? இன்றைக்கு முழுவதும் இது மட்டும் தானா…”

“ஏன் கூடாதா? நீ முயற்சிக்கும் அமெரிக்க விசா கிடைத்துவிட்டால், சிறிது நாட்களில் நீயும் தான் இந்தப் போட்டியை அது நடக்கும் மைதானத்திலேயே உன் க்ளையன்ட் உடன் அமர்ந்து ரசிப்பாய்.. அப்போது க்ளையண்டிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டிருப்பாயா? இப்போதே தெரிந்துகொள் தியாகு” என்றான் ராஜீவ்.

“அப்படியே அமர்ந்தாலும் அந்த க்ளையன்ட் என்னிடம் இந்தியா குறித்துக் கேட்டுத் தெரிந்துகொள்ளத்தான் வாய்ப்புக்கள் அதிகம் ” சொல்லி விட்டு, ராஜீவிடமிருந்து ரிமோட்டைப் பிடுங்கிச் செய்திச் சானல் ஒன்றை தெரிவு செய்து வருவித்தான். செய்திச் சானல் ஒன்று, திரையில் ஓடும் எழுத்துக்களுடன் அன்றைய செய்திகளை விவரித்துக்கொண்டிருந்தது….

‘சற்று முன் கிடைத்த தகவல். தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தள்ளாகுளம் கிராமத்தில் திடீரென ஒரு கரும்பள்ளம் தோன்றியிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. சிறிது நாட்களுக்கு முன்னர் உலகின் பல இடங்களில் உலோக ஸ்தூபிகள் தோன்றி பீதி உண்டாக்கி பின் மறைந்தது நினைவிருக்கலாம். இப்போது தோன்றியிருக்கும் இந்த கரும்பள்ளங்கள் அதன் தொடர்ச்சியோ என்ற ஐயம் விண்வெளி ஆய்வாளர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தள்ளாகுளம் கிராமத்திலிருந்து புறப்பட்டிருக்க வேண்டிய பேருந்து புறப்படாததால், விவசாய சந்தைக்கு வந்திருக்க வேண்டிய காய்கறிகள், நெல் முதலான பொருட்கள் வராததால் விவசாயப் பொருட்கள் பதுக்கப்படுகின்றனவா என்றொரு கேள்வியும் இதனடிப்படையில் எழுந்திருக்கிறது. …………’ தொலைக்காட்சிப்பெட்டியில் செய்தித்தொகுப்பாளினி செய்தி வாசித்துக்கொண்டிருந்தாள். தொடர்ந்து ஒரு சிறிய காணொளி காட்டப்பட்டது.

“தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் இருந்த குளத்தில் கரும்பள்ளம் தோன்றியிருக்கிறதாம்”

“ஓ… சரி.. அதற்க்கென்ன?”

“அதற்கென்னவா? வாழ்க்கையில இதுகாறும் இப்படி எத்தனை முறை கேட்டிருக்கிறாய் நண்பா?”

“பூஜ்யம்”

“பிறகு என்ன? கிளம்பி வா.. ”

“எங்கே?”

“அந்த கிராமத்துக்கு. போய்ப் பார்ப்போம்.”

“ஆனால்,  அடுத்த வாரம் டிப்லாய்மென்ட் (deployment) இருக்கிறதே…இன்றைக்கே நான் கோட் (code) எழுதி முடிக்கவேண்டும்.. அப்போதுதான் ஆற அமர உட்கார்ந்து நான் எழுதியதை நானே பூரணமாய்ச் சோதித்துவிட்டு டெலிவர் செய்ய முடியும்”

“அதெல்லாம் நீ  நிச்சயம் செய்துவிடுவாய்.. உன் மீது எனக்கு அபார நம்பிக்கை இருக்கிறது. இதற்கெல்லாமும்  நீ ஒரு வாரம் எடுத்துக் கொண்டால் அது உன் திறமைக்கே அசிங்கம்”

“அடப்பாவி.. இந்த டிப்ளாய்மென்டுக்குள் என்னை மொத்தமாக காலி செய்துவிடலாம் என்பதுதான் உன் உத்தேசமா” என்ற ராஜீவ் சற்று அமைதிக்குப்பின்,

“சரி..வருகிறேன்” என்றான்.

தியாகு சமையற்கட்டிற்குச் சென்று அவசரமாக ரொட்டியை முட்டையில் நனைத்து, அடுப்பில் பிரட்டி எடுத்து ஹாட் பேக்கில் வைத்துக்கோண்டான். ஒரு கைப்பையில் அணிந்துகொள்ள ஜீன்ஸ், டீசர்ட்கள், பிரஷ், பேஸ்ட், பேட்டரி, சார்ஜர் என எல்லாவற்றையும் எடுத்துத் திணித்துக்கொள்வதற்கும், ராஜீவின் கார் வாசலில் ஹாரன் அடிப்பதற்கும் சரியாக இருந்தது.  அபார்ட்மென்ட் வீட்டைப் பூட்டிவிட்டு மாடிப்படியிறங்கி ராஜீவின் காருக்குள் தன்னைத் திணித்துக்கொள்ள, ராஜீவின் கார் தஞ்சாவூரை நோக்கி விரைந்தது.

அங்கே தள்ளாகுளம் கிராமமே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. கிராமத்தில் கரும்பள்ளம் என்றவுடன், அக்கம்பக்கத்து கிராமங்களிலிருந்தெல்லாம் மக்கள் தள்ளாகுளம் கிராமத்துக்கு வந்து பார்க்க, அந்த கிராமத்துக்கு தற்காலிகமாக சுற்றுலா மதிப்பு கிடைத்துவிட்டிருந்தது.

காரை நிறுத்திவிட்டு ராஜீவும், தியாகுவும் கிராமத்தின் எதிர்பாராத பரபரப்பை தங்கள் மொபைல் காமிராக்களில் சலனப்படங்களாக உள்வாங்கிக்கொண்டார்கள். மீடியா உலகில், இந்த சலனப்படங்களுக்கும் ஏதேனும் கிராக்கி இருக்கலாம் என்பது அவர்களது ஊகமாக இருந்தது.

கூர்ந்து அவதானித்ததில் கரும்பள்ளம் உண்மையிலேயே கரும்பள்ளம் இல்லை எனவும், நீர் அடர் கருமை நிறம் கொண்டிருக்கிறது என்பதுவும் புரிந்துவிட்டபிறகும், ‘கரும்பள்ளம்’ என்ற பதம் ஏதோவொரு விதத்தில் கவர்ந்ததில், அவ்விதமே தொடர்ந்து அழைக்கப்பட்டதை ராஜீவும், தியாகுவும் புரிந்துகொண்டார்கள். அந்தப் பதம் தான் அந்தக் கிராமத்தை உலகறியச்செய்யவும் செய்திருந்தது.

கிராமத்தில் இருந்த ஒரே குளமும் இப்படியாகக் கரும்பள்ளமாகிவிட்டபடியால் இனி கிராமத்தில் வாழ்க்கை இல்லை என்று தோன்றி மக்கள் பரபரப்பானார்கள். அந்தக் குளத்து நீரை இனிமேலும் பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழுந்திருந்தது.

கோயில்களில் சிலர் சாமியாடினார்கள். கோயில் பூசாரி, தெய்வக்குத்தம் நடந்துவிட்டதாய் ஆரூடம் சொல்லி பரிகாரமாக கிடாய் விருந்து வைக்கச்சொல்லி பணித்தார். கிராமம் அவசரமாகக் கூடி கிடாய் விருந்துக்கு பரபரப்புடன் தயாரானது.  கிராமத்திலிருந்த ஒரே ஒரு பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், பள்ளிக்கூடத்திலிருந்த வாத்தியச்சி தானியம்மா டவுனுக்குப் போய்விட்டிருந்தாள்.

கிராமத்திற்கு நாட்டின் பரபரப்பான செய்தி நிறுவனங்களிலிருந்து  நிருபர்களும், பத்திரிக்கையாளர்களும் குவிந்தார்கள். ஆளுக்கொரு கிராமத்து மனிதரை அண்டி பேட்டி எடுத்து ஒளிபரப்பினார்கள். அயலூர் செய்தி நிறுவனங்கள் தங்கள் வசதிக்கு உபகரணங்களை  நிறுத்தி வைக்க டெண்ட் அமைக்க, அந்த கிராமம் சட்டென ஜீன்ஸ் அணிந்த கிராமத்துப்பெண் போல தோற்றப்போலிவு கண்டிருந்தது.

“அதெப்படி.. திடீரென்று ஒரு குளம் இருட்டாகும்? ஒருவேளை குளத்து தண்ணீரில் யாரேனும் கருப்பு  நிற பெயிண்ட்டை (paint) ஊற்றிவிட்டார்களோ?” என்றான் தியாகு.

“தெரியவில்லை. நான் கூட ஏதோ புரளி என்று தான் நினைத்தேன்.. இப்போதுதான் தெரிகிறது.. உண்மையாகவே இங்கு ஒரு முழுக்  குளம் கருப்பாகியிருக்கிறது” என்றான் ராஜீவ் எட்ட நின்று கருப்பாகிவிட்ட குளத்தை வேடிக்கை பார்த்தபடி.

கரையில் நின்றபடி சிலர் குளத்தினுள் கல் விட்டு எரிய, கல் குளத்தில் நீரில் ‘பளக்’ என்ற ஓசையுடன் முங்க, அந்தக் கல்லிற்கு சமமான எடையுள்ள நீரை குளம் தூக்கிப் போட்டு காட்ச் பிடித்துக்கொண்டது. அப்படி மேலெழும்பிக் குதித்த நீர், எப்போதும் போலான நீர் போலத்தான் தோற்றத்தில் இருந்தது. எனினும், அது சென்று சேர்ந்த குளம் கருப்பாகவே இருந்தது. தன் மேல் விழுந்த ஒளியை அந்தக் குளம் பிரதிபலிக்க மறந்துபோனது போலவே நடந்து கொள்வதாகத் தோற்றம் தந்தது அந்தக் குளம்.

ராஜீவும், தியாகுவும் கிராமம் முழுக்க அலைந்தார்கள். எங்கேனும் கிராம மக்களே கூட்டாகச் சேர்ந்து தங்கள் கிராமத்திற்கு சுற்றுலா மைய அந்தஸ்தைப் பெற குளத்திற்கு மட்டுமென ஏதேனும் செய்துவிட்டார்களோ என்று சோதிப்பது அவர்களது நோக்கமாக இருந்தது. கிராமத்தின் ஒரே ஒரு பள்ளிக்கூடம், மலையடிவாரம், பெரிய கிணறு, ஒரே ஒரு அய்யனார் கோயில் என எதையும் விடாமல் அலைந்தார்கள்.

அரசு தரப்பிலிருந்து சிலர் வந்து குளத்து நீரை கொஞ்சம் எடுத்துப்போய் சோதித்துவிட்டு, நீர் இயல்பாகவே தான் இருக்கிறது என்றும், எவ்வித கலங்கமும் இல்லை என்றும் சான்றிதழ் அளித்தார்கள். ஆயினும் அவர்களாலும், எவ்விதக் களங்கமும் இல்லாதிருப்பினும், குளம் ஏன் கரும்பள்ளமாகக் காட்சி அளிக்கிறது என்பதை விளக்க முடிந்திருக்கவில்லை. ஆராயக் கால அவகாசம் கோரிவிட்டு சென்றார்கள்.

“எனக்குத் தெரிந்து வாண்டாப்ளாக் (Vantablack) என்ற ஒன்று இருக்கிறது. அது தன் மேல் படுகிற ஒளியை நூறு சதம் பிரதிபலிக்காதாம். ஒரு வேளை அப்படி ஒன்றை எடுத்து இந்த குளத்தில் வீசிவிட்டிருப்பார்களோ?” என்றான் தியாகு.

“அப்படி ஒரு சமாச்சாரம் இருப்பதையே இவர்கள் அறியாதவர்களாகத்தான் இருப்பார்கள் தியாகு. அதுமட்டுமில்லாமல், அப்படி ஏதேனும் கலக்கப்பட்டிருப்பின், அரசு தரப்பில் சோதனை மேற்கொண்டபோது வெளிப்பட்டிருக்கும். குறைந்தபட்சம், நீர் கலங்கப்பட்டிருக்கும் அல்லவா? நீருக்கு ஏது நிறம்?” என்றான் ராஜீவ்.

“பிறகு ஏதேனும் பில்லி சூன்யம்….” என்றான் ராஜீவ் தொடர்ந்து.

“நீயெல்லாம் ஒரு கணிணி மென்பொறியாளனென்று சொல்லிக்கொள்ளாதே ராஜீவ்.. ” என்றான் தியாகு கிண்டலாக.

அந்த கிராமத்தின் மூலை முடுக்கெல்லாம் வெளிச்சம் பரவிக்கிடந்தது. ஆனால் அந்த குளம் மட்டும் இருளாகியிருந்தது. எட்டிப்பார்த்தால் எல்லையில்லாத கரும்பள்ளம் போல் காட்சி அளித்தது. தொட்டால் ஒட்டுக்கொள்ளுமோ என்று அச்சம் தரும் அளவிற்கு இருந்த அந்த கருமை நிறம் தோற்றத்திலேயே பார்ப்பவரை அச்சமூட்டுவதாய் இருந்தது.

ஆயினும், யாரேனும் கல் வீசி எறிந்தால்,  நீர் சற்று மேலெழும்பி மீண்டும் குளத்தில் விழுந்தது. அந்த நீர், நீர் போலத்தான் இருந்தது. குளத்துள் விழுந்ததும் மீண்டும் கருப்பாகிப்போனது.

தியாகுவும், ராஜீவும் அந்த கிராமத்தினருடன் அந்த நாளின் மாலை, பின்மாலை மற்றும் இரவைக் கழித்தார்கள். கிராமத்தில் அந்த கிராம மக்களின் பொருட்டு, உதவ முன்வந்த அனைவருக்கும் கிராமத்தார் உணவு வழங்கினார்கள்.

குளம் கரும்பள்ளமாகிப்போய், குளத்து நீரைப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துவிட்ட பிறகு கிராமத்தை, கிராமத்தின் மக்களை ஒட்டுமொத்தமாக தத்து எடுத்துக்கொள்ள அரசாங்கம் முன்வந்திருப்பதாகத் தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்பட்டது.

நேரம் செல்லச்செல்ல அக்கம்பக்கத்து கிராமங்களிலிருந்து ட்ராக்டரில் குடி நீரைக் குடம் குடமாக எடுத்துவந்து தள்ளாகுளம் கிராமத்து மக்களுக்குத் தந்து உதவினார்கள்.

இரவு வரை திரும்பிடாத இயல்பில் சோர்வுற்றிருந்த கிராம மக்களை உற்சாகப்படுத்த, இரவெல்லாம் பாட்டு பாடியும், நடனமாடியும் கழித்தார்கள். வள்ளி திருமணம், நல்லதங்காள் நாடகங்கள் கிராமத்து மக்களால் ஒரு பொதுவான இடத்தில் அரங்கேற்றப்பட அதுவே மற்றவர்களுக்கு அந்த இரவை கழிக்கும் ஒரு மார்க்கமாகவும் ஆயிற்று.

நாடகங்கள்  நடந்து கொண்டிருக்கையிலேயே சென்னையிலிருந்து தஞ்சாவூர் வந்த பயணக் களைப்போடு கிராமம் முழுக்க அலைந்ததில் சோர்வுற்றிருந்த தியாகுவும், ராஜீவும் கிராமத்தின் குளத்தில் இறங்கி சற்று நீரள்ளி முகத்தில் தெளித்துக் கொள்ள, அவர்கள் கண்களில் ஒன்றிரண்டு தெர்மக்கோல் துண்டுகள் தென்பட்டன. அதன் மீது முகம் பார்க்கும் கண்ணாடிகள் தெரிந்ததையடுத்து தியாகு மணி பார்த்தான். விடிகாலை ஐந்து மணியை நெருங்கிக்கொண்டிருந்தது.

“அது நம்ம பயல்கள் விளையாடியது தான்.. ” என்ற குரல் கேட்டுத் திரும்ப, அங்கே கரையில் வீரையன் நின்றிருந்தார்.

“விளையாடியதா? என்ன விளையாட்டு?” என்றான் தியாகு.

“அந்த தெர்மாக்கோல் மேல் கண்ணாடியை வைத்தால், கண்ணாடி சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும்…. அந்த விளையாட்டுத்தேன்..  நேற்று இந்த நேரத்திற்கு  கண்ணாடியை வைத்து சூரியனுக்கே சூரிய ஒளியைத் திருப்பி விட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்” என்றார் கரையோரம் நடந்தபடியே.

அவர் நடந்து செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த தியாகு, ஏதோ யோசனையில் ஆழ்ந்திருக்க,

“என்ன?” என்பதாய் தியாகுவை ஏறிட்டான் ராஜீவ்.

தியாகு அவசர அவசரமாகத் தேட, சற்று தள்ளி, குளத்தில் மீன் பிடிக்கும் பொருட்டு கிடத்தப்பட்டிருந்த வலை ஒன்று கரையில் தென்பட்டது.

தியாகு அந்த வலையை எடுத்து தலையை சுற்றி இரண்டு முறை சுற்றி, குளத்தில் வீச, வலை அழகாய் வட்டமாய் விரிந்து குளத்தில் விழுந்தது. பின் தியாகு வலையை பலம் கொண்ட மட்டும் இழுக்க, ராஜீவ் தியாகுவுக்கு உதவ, இருவருமாய் வலையைக் கரைக்கு இழுத்தனர். வலையோடு எல்லா கண்ணாடிகளும், தெர்மாக்கோல் துண்டுகளும் வலையில் சிக்கி கரைக்கு வந்தன.

“இன்னும் சற்று நேரத்தில் இங்கு இந்தக் கரும்பள்ளம் மறைந்துவிட்டால் நான் நினைப்பது தான் சரி” என்றான் தியாகு.

சொல்லிவிட்டு தியாகு குளத்தையே பார்க்க மெல்ல மெல்ல குளத்தை மூடிக்கிடந்த கருமை நீங்கி, குளம் இயல்பான தோற்றத்துக்கு வந்தது. பகல் பொழுதானதால், குளம் ஒரு செல்ஃபி போல் செயல்பட்டு வானத்தையும், அதில் கடந்து போகும் வெண் மேகங்களையும் அவற்றினூடே பறந்து திரியும் பறவைகளையும் பிரதியெடுத்தது.

24 மணி நேரத்துக்குப்பின் குளம் தன் இயல்பான தோற்றத்திற்கு மீண்டதைப் பார்த்த சந்தோஷத்தில் கிராம மக்கள் துள்ளிக்குதித்தனர்.

கிராமத்தில் குவிந்திருந்த செய்தித்தொகுப்பாளர்கள், தள்ளாகுளம் கிராமத்தில் 24 மணி நேரத்துக்குப் பிறகு கரும்பள்ளம் நீங்கிவிட்டதாக விவரித்து செய்திச் சலனப்படங்கள் உருவாக்கி தங்கள் செய்தி நிறுவனங்களில் தலைமைச் செயலகங்களுக்கு அனுப்பினர்.

“எப்படிடா சொன்னாய், கரும்பள்ளம் மறைந்துவிடுமென்று” என்று காதருகே வந்து வினவினான் ராஜீவ்.

“சொன்னாலும் நீ நம்ப மாட்டாய் ராஜீவ்”

“சொல்றான்னா”

“சொல்கிறேன். நேற்று இந்த கிராமத்தின் சின்னப் பிள்ளைகள் சூரியனை நோக்கி கண்ணாடியை திருப்பிக் காட்டியிருக்கவேண்டும். அதனால், சூரியனின் ஒளி மீண்டும் சூரியனுக்கே திருப்பி விடப்பட்டிருக்கவேண்டும்”

“அதனால்?”

“கொஞ்சம் கற்பனை செய்து பார். நீ ஒரு கணிணி மென்பொருள் ப்ரோக்ராம்மர். ஒரு கணிணித்திரைக்கான மென்பொருளை உருவாக்குகிறாய். நீ கணிப்பொறியை வைத்து உருவாக்குற ஒரு திரையில ஒரே ஒரு இடத்தில் ஒரு வெளிச்சப்புள்ளி அளவுக்கு அதிகமாக ஒளிர்ந்தால், எப்படி நீ அதைச் சரி செய்வாய்?”

“அது எங்கிருந்து வருகிறதென்று பார்த்து, அந்த இடத்தில் என்ன பிழை என்று பார்த்து, அதை சரி செய்வேன்”

“எங்கிருந்து வருகிறதென்று உன்னால் சட்டென்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிகவும் கடினமான சிக்கலான ப்ரோக்ராம் அது. ஆனாலும், நீ உடனடியாக அதைச் சரி செய்யவேண்டுமென்ற ஓர் இலக்கு இருந்தால்?”

“வோல்க்ஸ்வேகன் (volkswagen) கார்களில் எமிஷன் டெஸ்டிற்கென (emission test) செயற்கையாக ஒரு தீர்வை வைத்தார்களே. அது போல, அப்போதைக்கு, அதிகப்படியாக வெளிச்சம் வரும் இடத்தில் ஒளி தானாகவே மங்குவதாக தற்காலிகமான ஒரு தீர்வை மென்பொருள் வாயிலாகவே வழங்குவேன். எப்போது அப்படி ஒரு மிகை ஒளி வந்தாலும், மென்பொருள் தானாகவே அந்த ஒளியை மங்கச்செய்துவிடுமாறு செய்வேன்.”

“அதுதான் இங்கும் நடந்திருக்கிறது. அந்தப் பிள்ளைகள் சூரிய வெளிச்சத்தை கண்ணாடி மூலமாக பிரதிபலித்து விண்ணுக்கே திருப்பி அனுப்பியபோது, அதை அதிகப்படியான ஒளி என்று உணர்ந்து, தற்காலிகமாக தள்ளாகுளம் கிராமத்தை  நாமிருக்கும் சிமுலேஷன் மென்பொருள் மங்கலாக்கிவிட்டிருக்கிறது. அதுதான் தள்ளாகுளம் கிராமத்துக் குளத்தில் கரும்பள்ளம் உருவான தருணம். ” என்றான் தியாகு.

“எனக்கு ஒன்றுமே புரியவில்லை தியாகு” என்றான் ராஜீவ் பரிதாபமாக.

“தெளிவாக விளக்குகிறேன். உன் கணிணியில் வைரஸ் (virus) வந்தால் என்னாகும்?”

“ஆண்டி-வைரஸ் (anti-virus) ப்ரோக்ராம் போன்ற ஒரு க்ளீன்-அப் ப்ரோக்ராம் உடனே வந்து அந்த வைரஸ் ப்ரோக்ராமை அழிக்கும்”

“இப்போது தள்ளாகுளம் கிராமத்து குளத்தில் கரும்பள்ளம் வந்ததற்கு நாம் தான் க்ளீன்-அப் ப்ரோகிராம்”

“என்ன சொல்கிறாய் நீ? நிஜமாகவா?”

“ஆமாம். நன்றாக யோசித்துப்பார். நீ ஈ.எஸ்.பி.என்னில் சாக்கர் விளையாட்டு பார்த்துக்கொண்டிருந்தாய். நான் தான் உன்னைக் கட்டாயப்படுத்தி, சானலை நியூஸுக்குத் திருப்பினேன். நீயும் நானும் ஒன்றாக இங்கே வந்தோம். இங்கே இருந்த பிரச்சனையைச் சரி செய்தோம்.”

“அப்படியானால் நாம் தள்ளாகுளம் கிராமத்தில் குளம் கரும்பள்ளம் ஆனதைச் சரி செய்ய அனுப்பப்பட்டவர்களா?

“ஆமாம்”

ராஜீவ் தலையில் கைவைத்தபடி காரை நோக்கி நடந்தான். இருவரும் காருக்குள் அமர்ந்தார்கள்.

“இது நிஜமாவே நடக்கிறதா தியாகு? நாம் ஒரு சிமுலேஷனுக்குள் இருக்கிறோமா” என்றான் ராஜீவ் நம்பிக்கையே இல்லாமல்.

“சர்வ நிச்சயமாக.. இன்னும் சொல்லப்போனால், இதற்கு முன்பும் நடந்திருக்கிறது..”

“இதற்கு முன்புமா?”

“ஆமாம்.. பிள்ளையார் பால் குடித்தார் என்று கேள்விப்பட்டதில்லையா? ஜீசஸ் கண்ணீர் விட்டார் என்று கேள்விப்பட்டதில்லையா? அதுவெல்லாம் வேறு என்ன?  நாம் எல்லோருமே ஒரு சிமுலேஷனின் அங்கமாகத்தான் இருக்கிறோம், ராஜீவ்.. நன்றாக கவனித்துப்பார்..  நம் எல்லாருக்குமே ஏதோ ஒரு பிரச்சனை யாராலோ  நேர்கிறதுதான். அதே நேரம் அந்த பிரச்சனைகளும் யாராலோ எப்படியோ தீர்ந்த படியே தான் இருக்கிறது. தீர்வுகள் நமக்கு சாதகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால்,  யாரோ தீர்த்தபடி தானே இருக்கிறார்கள்… இந்த கிரகம், இதில் இருக்கிற மானுட வாழ்வு, இதிலுள்ள கஷ்ட நஷ்டங்கள் ,சந்தோஷங்கள், துக்கங்கள் என்று எல்லாமுமே ஒரு பெரிய கம்யூட்டர் ப்ரோக்ராம்தான். ”

“எப்படிச் சொல்கிறாய்?”

“நம் பார்வைக்கோணங்களை வைத்துத்தான் நாம் விரும்பவோ, வெறுக்கவோ படுகிறோம். அதை கவனிக்கிறாயா? எந்த விதமான பார்வைக்கோணங்களும் அற்ற ஒருவர் ஏன் யாராலுமே விரும்பப்படுவது இல்லை? இதற்கு என்ன பொருள்? நாம் சுமந்திருக்கிற கருத்தாக்கம், பார்வைக்கோணம்,   நம்மால் யாருக்கு எவ்வகையில் எந்தளவிற்கு பயனுள்ளவராக இருக்க முடியும்? இதுதான் இந்த உலகத்தோடு நம்மைப் பிணைக்கிற சக்தியாக இருக்கிறது. அப்படியானால் நாம் எல்லோருமே வெறும் கவனிப்பான்களாகவே (listener) இருப்பது போலத்தான் இருக்கிறது. இல்லையா?”

“சரிடா..இதற்கெல்லாம் என்ன  நிரூபணம்?”

“எதிர்கால மனிதர்களான போஸ்ட் ஹியூமன்ஸ் (Post-Humans) தொழில் நுட்பத்தில் நம்மை விடவும் பன்மடங்கு மிகவும் ஆற்றல் மிக்கவர்களாய் இருப்பார்களென்று  நம்புகிறாயா?”

“ஆமாம்”

“அதை ஏற்றுக்கொள்ளும் நீ, அவர்களால் நாம் ஒரு சிமுலேஷன்களாவோம் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சில சமயங்களில், நாம் சரியான பார்வைக்கோணங்களையே பெற்றிருந்தாலும், அதை சரியான முறையில் வெளிப்படுத்தியிருக்காவிட்டாலும், வெளிப்படுத்தி இருந்தால் அடைந்திருக்கக்கூடிய சாதகங்களை அடைவதில்லை. நாம் நமக்குள்ளாக சரியாகவே இருந்தாலும், நாம வெளிப்படுத்திக்கொள்கிற விதம் சரியாக இல்லாதபோது, நாம் தவறாக பார்க்கப்படுகிறோம் எனில் அதற்கு  என்ன அர்த்தம்? இப்படியெல்லாம் பொருண்மை லாபத்தை மையப்படுத்தி நம் இயங்கு இயல்பைத் தீர்மானிப்பது ஒரு கணிணி மென்பொருளை ஒத்திருக்கிறது அல்லவா?” என்றான் தியாகு.

“இல்லை. இந்த உன் பதில் உன் வாதங்களை ஒப்புக்கொள்ளவைப்பதாக இல்லை தியாகு” என்றான் ராஜீவ் உதட்டைப் பிதுக்கியபடி.

“சரி. உன் வாதம் தான் என்ன? இது ஏன் சிமுலேஷன் இல்லை என்கிறாய்?” என்றான் தியாகு.

“நாம் ஒரு சிமுலேஷன் என்றால் இன்னொரு சிமுலேஷனை உருவாக்கும் வகையினதான ஒரு தொழில் நுட்பத்தை, அதற்குத் தேவையான சக்தியை இந்த நேரம் பெற்றிருந்திருப்போம். அது இதுகாறும் நிகழவில்லையே? இன்றும் நகரத்தில் சுமார் பதினாறு மணி நேரத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்படுகிறதே. அதுமட்டுமில்லாமல் இது சிமுலேஷன் என்றால், பிள்ளையார் பால் அருந்தியதோ, ஜீசஸ் கண்ணீர் விட்டதோ சிமுலேஷனிலிருந்து  நீக்கப்பட்டு, நம் நினைவுகளிலிருந்தும் அகற்றப்பட்டிருக்கலாம் அல்லவா? அப்படி நடக்கவில்லையே?” என்றான் ராஜீவ்.

“நீ சொல்வதெல்லாம் இது சிமுலேஷன் இல்லை என்பதாக நம்மை நம்ப வைக்கும் உத்தியாகக்கூட இருக்கலாம். எப்படியாகினும், உன் வாதம் அதுவானால், என் கேள்வி இதுதான்.  நாம் விண்மீன்களுக்கிடையே ஏன் பயணிக்கவில்லை?”

“அதற்கு ஒளியின் வேகத்தில் செல்ல வேண்டும். அது சாத்தியமில்லை அல்லவா?”

“கொஞ்சம் யோசித்துப்பார். ஏன் சாத்தியமாவதில்லை? அது சாத்தியமானால், நீ சிமுலேஷனுக்கு வெளியே சென்று விடுவாய். ஆகவே அது திட்டமிட்டே நமக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால், இது சிமுலேஷன் இல்லாமல் என்ன?” என்றான் தியாகு.

ராஜீவ் யோசனையாய் தியாகுவைப் பார்த்துவிட்டு மெளனித்தான். சற்று  நேரம் இருவருமே எதுவுமே பேசிக்கொள்ளாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்கள். சற்று நேர ஆழ்ந்த யோசனைக்குப் பின்,

“சரி. இருக்கட்டும் தியாகு. இது சிமுலேஷனா இல்லையா என்பது நமக்கோ, இந்த கிராம மக்களுக்கோ தேவையற்றது என்று எண்ணுகிறேன். இது சிமுலேஷனாக இல்லாமல் நிஜ உலகாக இருந்தாலும், நீயும் நானும் பிறிதேதோவோர் காரணத்திற்காகவோ காரியத்திற்காகவோ விரும்பப்படவோ வெறுக்கப்படவோ தான் ஆகியிருக்கும். இது சிமுலேஷனோ இல்லையோ, இந்த அமைப்புக்குள் இருக்கக் கிடைத்த வாய்ப்பில், இந்த ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பில், இந்த ஒட்டுமொத்த சட்டகத்தில் நீயும் நானும் எதை நடத்திவைக்க, எதை அனுபவிக்க, எதற்கு காரணகர்த்தாவாக விதிக்கப்பட்டிருக்கிறோமோ, அதைப் பூரணமாக நிறைவேற்றுவதில் தான் நம் இருப்புக்கான அர்த்தமும் கிடைக்கிறது என்று எண்ணுகிறேன்”

“ஒரு வேளை, இது சிமுலேஷனாகவே இருந்தாலும் கூட, இந்த சிமுலேஷனை உருவாக்கிய அந்த அதியுயர் உயிர்களும் இவ்விதம், தங்களின் இருத்தலைக் கொண்ட ஒருங்கிணைப்பில், கட்டமைப்பில், தாங்கள் எதை நடத்திவைக்க, எதை அனுபவிக்க, எதற்கு காரணகர்த்தாவாக விதிக்கப்பட்டிருக்கிறார்களோ, அதைப் பூரணமாக நிறைவேற்றுவதில் தங்கள் இருப்புக்கான அர்த்தங்களைக் காண்பவர்களாகத்தான் இருக்க அதிகபட்ச வாய்ப்பிருக்கிறது. அப்படியானால் அவர்களின் இயக்கமும் கூட, ஒரு மென்பொருளின் இயக்கத்தை ஒத்திருக்கவே வாய்ப்பிருக்கிறது. இந்தப் பின்னணியில் இது சிமுலேஷனா இல்லையா என்பது ஒரு பொருட்டாக இருக்க வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது.” என்றான் ராஜீவ்.

“அதுவும் சரிதான்” என்றான் தியாகு.

தள்ளாகுளம் கிராமத்துக்குளத்தில் இப்போது அந்த கிராமத்து மக்கள் தத்தமது வீடுகளின் தேவைக்கென தண்ணீர் எடுக்கவும், தத்தமது மாடுகளைக் குளிப்பாட்டவும், பொடியன்கள் தொப்பென்று விழுந்து விளையாடவும் செய்து தங்கள் வழமைக்குத் திரும்பியிருந்தார்கள்.

தியாகுவையும் ராஜீவையும் சுமந்துகொண்டு அவர்களது கார், நகரத்தின் வழமைக்குத் திரும்ப சாலையில் விரையத் துவங்கியிருந்தது.

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close