சிறுகதைகள்

கடிதம் – ஷரத்

குறுங்கதை | வாசகசாலை

அந்தக் கடிதத்தைத் திறந்து பார்த்தபோது முகிலன் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான்.

இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு அதாவது அவன் பிறப்பதற்கு முந்தைய வருடம், யாரோ ஒரு பெண் தன் காதலனுக்காக எழுதிய கடிதம் அது.

அன்புள்ள ராமச்சந்திரனுக்கு எனத் தொடங்கிய அந்த கடிதம்,

…….

…….

…….

இப்படிக்கு…

உங்கள் மாதவி,

05.07.1995

என முடிந்திருந்தது.

1995 என்று எழுதப்பட்டிருந்த அந்த இடம் கிழிபட்டு இருந்ததால், கடைசியில் வரும் அந்த எண், ஐந்தா அல்லது ஆறா என முகிலன் குழம்பியிருந்தான்.

முகிலன் முதுநிலை தாவரவியல் இறுதியாண்டு படிக்கும் கல்லூரி மாணவன். புத்தகப் புழு. உலக இலக்கிய நூல்கள் முதல் உள்ளூர் கவிதை நூல்கள் வரை எந்த ஒரு புத்தகத்தையும் விட்டு வைக்க மாட்டான்.

அதிலும் பழைய புத்தகங்களைத் தேடி வாசிப்பதில் அவனுக்கு அலாதியான இன்பம். எந்நேரமும் பழைய புத்தக கடைகளில் தான் குடி கொண்டிருப்பான்.

அப்படி நேற்றும் பழைய புத்தகக் கடை ஒன்றுக்கு சென்றிருந்த போது, நீண்ட நாட்களாகத் தேடி கிடைக்காத ஒரு புத்தகம் அவன் கண்ணில் பட்டது.

‘காத்திருந்த இரவுகள்’ என்னும் தலைப்பில் இருந்த அந்த புத்தகத்தின் மேல் அட்டை செல் அரித்துப்போய், உள்ளே இருக்கும் காகிதங்கள் எல்லாம் பழுப்பு நிறமாக உருமாறியிருந்தன.

இருந்தும் அந்த புத்தகத்தை அவன் நல்ல விலை கொடுத்து வாங்க தயாராகவே இருந்தான்.

முகிலன் எப்போதும் கடற்கரையொட்டி இருக்கும் அந்த பூங்காவிற்கு சென்று படிப்பது தான் வழக்கம்.

கடல் அலையின் ஓசையை கேட்டவாறே படிக்கும் போது, எந்த ஒரு சாதாரண புத்தகமும் பொக்கிஷமாக மாறும் என நண்பர்களிடம் அடிக்கடி சொல்வான் அவன்.

‘காத்திருந்த இரவுகள்’ புத்தகத்தையும் அப்படித்தான் படிக்கத் தயாரானான். அப்போது அவன் கண்டெடுத்த கடிதம் தான் மேலே குறிப்பிட்டது.

கடித்ததில் எழுதியிருந்த வார்த்தைகளை முகிலன் திரும்ப திரும்ப படித்துப் பார்த்தான். விரல்களால் வார்த்தைகளை வருடினான்.

அப்போது எங்கிருந்தோ வந்த கடல்காற்று, அந்த கடிதத்தை தூக்கிச் செல்ல முயற்சி செய்தது. ஆனால் அதை இறுக பற்றிக் கொண்ட அவன், அவசர அவசரமாக புத்தகத்தினுள் மடித்து வைத்தான்.

‘அடுத்த வாரம் என்னை வீட்டில் மாப்பிள்ளை பார்க்க வருகிறார்கள். இதற்கு மேலும் நாம் காத்திருக்க வேண்டாம். உடனே இங்கிருந்து என்னை அழைத்து சென்று விடு. இல்லையென்றால் நான் உயிரோடு இருக்க மாட்டேன்…’

கடிதத்தில் எழுதியிருந்த வார்த்தைகள் முகிலனின் தூக்கத்தை தூர வைத்தன.

மாதவி என்னவாகியிருப்பார்?

அவர் காதல் நிறைவேறி இருக்குமா?

இருபத்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்த கடிதத்தை அவர் பார்த்தால் என்ன நினைப்பார்?

புரண்டு புரண்டு படுத்த அவனுக்குள் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தன.

திடீரென அவன் முகம் மலர்ந்தது.

படுக்கையிருந்து எழுந்த அவன், புத்தகத்தினுள் இருந்த கடிதத்தை திரும்பவும் உற்றுப் பார்த்தான்.

மாதவியின் முகவரி, பாதி அழிந்து போய் இருந்தது. ஆனால் அதில் இருந்த அஞ்சல் எண்ணை வைத்து, அவர் மதுரையை சேந்தவர் என்பதை மட்டும் கண்டுபிடித்தான்.

கண்டுபிடித்து மட்டும் என்ன செய்வது?

‘கடிதத்தை தூக்கிக் கொண்டு மதுரைக்கா செல்ல முடியும்? அதுவும் மாதவி என்ற ஒற்றைப் பெயரை வைத்துக் கொண்டு. என் வயதில் ஒரு மகனோ மகளோ அவருக்கு இருக்கக் கூடுமே! இனி இந்த கடிதத்தை பார்த்து மட்டும் அவர் என்ன செய்ய போகிறார்? தூக்கிப் போட்டுவிட்டு அடுத்த வேலையை பார்ப்போம்…’

முகிலன் தனக்குத் தானே சொல்லி சிரித்துக் கொண்டான்.

நாட்கள் கடந்தது. வருடங்கள் ஓடியது.

முகிலன் கிட்டத்தட்ட அந்த கடித்தத்தை மறந்தே போனான்.

‘ஏங்க…இந்த லெட்டர் யாருடையது?’

முகிலனுக்கு இப்போது திருமணம் முடிந்திருந்தது. கணவனின் புத்தகங்கள் அனைத்தையும் அன்று சுத்தம் செய்து கொண்டிருந்தாள் அகிலா.

அவள் கேட்ட பின்பு தான் அந்த கடிதத்தை பற்றிய நினைவே முகிலனுக்கு திரும்ப வந்தது.

‘அத தூக்கி போட்டுடுமா வேண்டாம்…’

அந்தக் கடிதத்தை பற்றி அகிலாவிடம் சொல்லிவிட்டு, அதை தூக்கிப்போடச் சொன்னான் முகிலன்.

‘ஹாய் ப்ரெண்ட்ஸ். கெஸ் வாட் ஐ ஃபவுன்ட் இன் மை ஹஸ்பண்ட் புக்ஸ் லைப்ரரி’ (Hi Friends. Guess What I Found In My Husband’s book Library)

அகிலா அந்த கடிதத்தின் புகைப்படத்தை போட்டு முகநூலில் இப்படி பதிவிட, லைக்ஸ் ஷேர்ஸ் கமெண்ட்ஸ் என ஒரே நாளில் பிச்சிக் கொண்டு போனது.

சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள்,

இரவு பண்ணிரெண்டு மணி அளவில் அகிலாவின் முகப்புத்தக மெசெஞ்சர் ‘டயிங்…டயிங்…டயிங்…’ என மூன்று முறை தொடர்ந்து அலறியது.

இந்நேரத்தில் யாரென நினைத்தவாறே கைபேசியை எடுத்தாள் அகிலா.

’எ நியூ மெசேஜ் ஃப்ரம் மாதவி ராமச்சந்திரன்’ என அதில் இருந்தது.

***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close