தொடர்கள்
Trending

கடலும் மனிதனும்;18 ’வெள்ளைத் தங்கம்: காலனியாதிக்கத்தின் கடல் வீச்சம்’ – நாராயணி சுப்ரமணியன்

தொடர் | வாசகசாலை

அதன் செல்லப்பெயர் வெள்ளைத் தங்கம். பெரு நாட்டில் அதிகமாகக் காணப்படும் ஒரு கடல்சார் பொருள் அது. ஆங்கிலப்பெயர் குவானோ (Guano).

மக்கள் தொகை அதிகரிக்க, உணவுத்தேவையும் அதிகரித்தபோது, உற்பத்தியைப் பெருக்கி பலருக்கு உணவிடுவதற்கு குவானோ உதவியது. இப்போதைய, தொழில்மயமாக்கப்பட்ட நவீன வேளாண்மைக்கு வித்திட்டது இந்த குவானோதான்.

பசிபிக் பெருங்கடலில் உள்ள பல தீவுகளில் மனிதர்களின் குடியேற்றம் நடந்ததற்கு இதுவே முழுமுதற் காரணம். அமெரிக்கக் காலனியாதிக்கத்தின் தொடக்கப் புள்ளியே குவானோதான். குவானோவை முன்னிட்டு இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து தென்னமெரிக்க நாடுகளோடு போர் புரிந்தது ஸ்பெயின்! வரலாற்றின் பல பக்கங்களை குவானோவின் மூக்கைத் துளைக்கும் வீச்சம் இல்லாமல் நம்மால் கடக்கவே முடியாது.

குவானோ என்பது கடற்பறவைகளின் எச்சம்.

சரியாக சொல்லப்போனால், கடற்பறவைகளின் எச்சம், அவ்வப்போது இறக்கும் கடற்பறவைகளின் உடல்கள், கடற்பறவைகளின் முட்டையோடுகள் எல்லாம் கலந்த கலவை இது. இதில் எச்சமே பெரும்பங்கு வகிக்கிறது. குவானோ என்பது பல கனிமங்கள் நிறைந்த ஒரு வேதிக்கூட்டமைப்பு.  கடற்பறவைகள் பொதுவாக மனிதர்கள் அல்லது பாலூட்டிகளின் நடமாட்டம் அதிகமில்லாத தீவுகளிலேயே இனப்பெருக்கம் செய்து குஞ்சு பொரிக்கும். இவ்வாறு ஒரு தீவு கிடைத்துவிட்டால், அங்கு லட்சக்கணக்கில் கடற்பறவைகள் கூடுகளை அமைப்பது வழக்கம். இவற்றை Breeding colonies என்று அழைப்பார்கள். அதிக எண்ணிக்கையில் பறவைகள் கூடும்போது, அங்கு இடப்படும் எச்சமும் முட்டை ஓடுகளும் அதிகமாக இருக்கும், காலப்போக்கில் அந்த எச்சம் இறுகி, பாறை போல் ஆகிவிடும். இதையே குவானோ என்று அழைக்கிறார்கள்.

செடிகளின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் எல்லாமே குவானோவில் உண்டு. அதிலும் குறிப்பாக, பயிர் வளர்ச்சிக்கு முக்கியமானதாகக் காணப்படும் நைட்ரஜனும் பாஸ்பரஸும் குவானோவில் போதுமான அளவு கிடைக்கிறது. 804 மில்லியன் கடற்பறவைகளும் குஞ்சுகளும் இருக்கும் ஒரு தீவிலிருந்து குவானோ எடுத்தால், அதிலிருந்து 5,90,000 மெட்ரிக் டன் வரை நைட்ரஜன் கிடைக்கும்! குவானோ எளிதில் கரையக்கூடியது என்பதால், அதிகமாக கடற்பறவைகள் இருக்கும் தீவிலிருந்து வெளியேறும் மழைநீர் கூட ஊட்டச்சத்து மிக்கதாக இருக்கும்!

விலங்குகளின் சாணத்தையும் பறவைகளின் எச்சத்தையும் உரமாகப் பயன்படுத்துவது தொல் வழக்கங்களில் ஒன்று. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே பறவை எச்சங்களை உரமாக மனிதர்கள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உண்டு. உரத்தேவைகளுக்காகக் கொண்டுவரப்பட்ட புறா எச்சம் ஐந்து வெள்ளிகளுக்கு விற்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறது விவிலியம்.  பெருவின் இன்கா பழங்குடியினர் இந்த குவானோவை எச்சமாகப் பயன்படுத்தியது 1553லேயே ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது! “ஹுவாமன்கண்டாக்” என்கிற ஒரு இன்கா கடவுள், குவானோவின் கடவுளாகப் போற்றப்பட்டார். குவானோவை சேகரிப்பதற்கு முன் அவருக்குப் படையலிட்டு வெள்ளிக்காசுகள் சமர்ப்பணம் செய்வது இன்கா பழங்குடியினரின் சடங்காக இருந்தது.

1604ல் இருந்த தென்னமெரிக்க வழக்கங்களைப் பற்றி எழுதுகிற ஆய்வாளர் கார்சிலாரோ டெலா வேகா, “குவானோ தீவுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன. பறவைகளின் இனப்பெருக்க காலத்தில் தீவுகளுக்குள் மனிதர்கள் போவது தடை செய்யப்பட்டிருந்தது. பறவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. அந்தக் காலகட்டத்தில் யாராவது குவானோ தீவுக்குள் நுழைந்துவிட்டால் அவர்களுக்கு மரண தண்டனைதான் ஒரே தீர்ப்பு!” என்று எழுதுகிறார்.

பெரு உள்ளிட்ட பல தென்னமெரிக்க நாடுகள் நெடுங்காலமாக குவானோ இயற்கை உரத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கின. இந்தப் பகுதிகள் காலனியாதிக்கத்துக்குக்  கீழ் வந்தபோது, தாங்கமுடியாத நாற்றம் கொண்ட இந்த உரத்தை ஐரோப்பியர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். உள்ளூர் மக்கள் இதை உரமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்தும் அவர்கள் இதில் பெரிதாக அக்கறை காட்டவில்லை.

ப்ரூஷியாவைச் சேர்ந்த பல்துறை வித்தகரும் அறிவியலாளருமான அலக்சாண்டர் வான் ஹம்போல்ட், தனது தென்னமெரிக்கப் பயணங்களின்போது இந்த குவானோ மாதிரிகளை வேண்டிய அளவில் சேகரித்துக்கொண்டார். இது என்ன, இதன் பயன்கள் எப்படிப்பட்டவை என்று ஆராய விரும்பினார். ஐரோப்பா திரும்பிய உடனேயே தனது பல நண்பர்களுக்கு மாதிரிகளை அனுப்பிவைத்தார். வேதியியல் ஆய்வுகள் நடத்தப்பட்டன. குவானோவின் அதிக நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் அளவு வேளாண் அறிவியலாளர்களின் கவனத்தை ஈர்த்தது. 1808ல் அலெக்சாண்டர் பீட்சன் என்கிற விஞ்ஞானி, உருளைக்கிழங்குப் பயிர்களை வளர்ப்பதற்கு குவானோ உதவுகிறது என்று தனது சோதனைகளின்மூலம் நிறுவினார்.

பல்வேறு வகையான கழிவுப்பொருட்களை வைத்து உரப் பரிசோதனை செய்துகொண்டிருந்த ஐரோப்பியர்கள் குவானோவை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பாவுக்கும் தென் அமெரிக்காவுக்குமிடையே இருந்த குறைவான போக்குவரத்து வசதிகளும் ஒரு முக்கியமான காரணம்.

1824ல் பெரு ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது. விடுதலையடைந்த உடனேயே குவோனோவை ஏற்றுமதிப் பொருளாக முன்னிறுத்தியது. குவோனோவைப் பல இடங்களுக்கு அனுப்புவதில் முனைப்புக் காட்டியது. ஐரோப்பியர்களுக்கு லேசாக ஆர்வம் வந்தது. 1838ல் தென்னமெரிக்கப் பயணம் மேற்கொண்டு திரும்பிய இரண்டு ஐரோப்பியத் தொழிலதிபர்கள், நூற்றுக்கணக்கான டன் குவானோவை வாங்கி வந்து ஐரோப்பாவில் இறக்கினார்கள். பல விவசாயிகளுக்கு குவானோ மாதிரிகளை வழங்கினார்கள். அப்போது புழக்கத்திலிருந்த பல கழிவு உரங்களோடு ஒப்பிடும்போது குவானோ மிகச் சிறப்பான பயிர் வளர்ச்சியைக் கொடுத்தது.

குவானோ அலை ஆரம்பமானது.

வரலாற்றாளர்கள் இதை Guano Boom என்று செல்லமாக அழைக்கிறார்கள். “குவானோவை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் கரையை எட்டியபோது, நாற்றம் தாங்கமுடியாமல் நகரத்தில் இருப்பவர்கள் எல்லாரும் மலையை நோக்கி ஓடினார்கள்” என்றெல்லாம் கிண்டலடித்தாலும், செயற்கை உரம் எதுவுமில்லாத அந்தக் காலகட்டத்தில், நல்ல வளர்ச்சியைத் தரக்கூடிய இந்த குவானோவை ஐரோப்பா பெருமளவில் இறக்குமதி செய்யத் தொடங்கியது. குவானோவுக்கான தேவை ஏறிக்கொண்டே போனது. பெரு மட்டுமல்லாமல் ஆங்காங்கே குவானோ திட்டுக்களைக் கொண்ட சிலி, பொலிவியா, பட்டகோனியா போன்ற நாடுகளும் இதில் களமிறங்கின. இதே போல் ஆப்பிரிக்க நாடுகளிலும் குவானோ கிடைக்கும் என்ற செய்தி பரவியதால், ஆப்பிரிக்காவிலும் ஒரு சிறு குவானோ அலை தொடங்கியது.

தொழிற்புரட்சியின் இறுதியில் விவசாய முறைகளிலும் ஒரு புரட்சி ஏற்பட்டது. உற்பத்தியைப் பெருக்குவதை இலக்காகக் கொண்ட, தொழில்முறைப்படுத்தப்பட்ட ஒரு வேளாண் முறை உருவானது (Industrialisation of Agriculture). உற்பத்தியைப் பெருக்க வேண்டுமானால் நிலத்தின் உயிர்ச்சத்துக்களை அதிகப்படுத்த வேண்டும். அதற்கு, விலை குறைந்த, ஆனால் பயன்கள் நிறைந்த ஒரு உரம் தேவை. குவானோ இதற்கு மிகச்சரியான தேர்வாக இருந்தது. “எளிய உரங்களைக் கொண்ட, தற்சார்பு வேளாண்மையிலிருந்து நவீன விவசாயத்தை நோக்கி மனித இனம் நகர்ந்ததற்கு குவானோ ஒரு முக்கியக் காரணம்” என்கிறார் சூழல்சார் வரலாற்றாசிரியர் க்ரெகரி குஷ்மன்.

தென்னமெரிக்க நாடுகளின் குவானோவை வைத்துத் தன் உற்பத்தியைப் பெருக்கிக் கொண்ட ஐரோப்பா, மேலும் மேலும் தேவைகளை அதிகரித்துக்கொண்டே போனது. குவானோ அதிகமாகத் தேவைப்பட்டபோது, இறக்குமதியை நம்பாமல் குவானோ கிடைக்கும் தீவுகளையே கைப்பற்றிவிடலாம் என்று காலனியாதிக்கவாதிகள் திட்டம் போட்டார்கள். குவானோ கிடைக்கும் சின்ச்சா தீவைக் கைப்பற்றியது ஸ்பெயின். இதை அனுமதிக்க முடியாது என்று கிளர்ந்தெழுந்த தென்னமெரிக்க நாடுகளான பெருவும் சிலியும், ஸ்பெயினை எதிர்த்துப் போரிட்டன. குவானோ போர்  (Guano War) தொடங்கியது! மேலும் பல தென்னமெரிக்க நாடுகள் ஸ்பெயினுக்கு எதிராக ஒன்று சேர்ந்துகொண்டன. 1865 முதல் 1866 வரை இரண்டு ஆண்டுகள் நடந்த போரில் தென்னமெரிக்க நாடுகள் வென்றன. தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நாடு திரும்பின ஸ்பெயினின் கப்பல்கள்.

எங்கேயோ இருக்கிற ஐரோப்பாவிலிருந்து இத்தனை பேர் பெருவுக்கு வந்து போகிறார்கள் என்பதை கவனித்துக்கொண்டிருந்த அமெரிக்கா, பரபரவென்று கைகளைத் தேய்த்துக்கொண்டு களத்தில் இறங்கியது. குவானோவின் நன்மைகளையும், அது உற்பத்திக்குத் தருகிற உந்துதலையும் புரிந்துகொண்டு, “இத்தனை நாள் இது தெரியாம போச்சே” என்றபடி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. 1856ல் போடப்பட்ட இந்த சட்டத்தின் பெயர், “அமெரிக்க குவானோ தீவுகள் சட்டம்” (American Guano Islands Act). இந்த சட்டத்தின்படி, யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத, குவானோ கிடைக்கிற ஒரு தீவாக இருந்தால், எந்த அமெரிக்கக் குடிமகனும் அதைக் கைப்பற்றி அதை அமெரிக்காவின் நிலமாக அறிவிக்கலாம்! முதலில் அந்தத் தீவைக் கண்டுபிடிப்பவருக்கே குவானோவை எடுக்கும் முழு உரிமை வழங்கப்படும்!

புதிய தீவுகளைத் தேடிப்போனார்கள் அமெரிக்கக் குடிமக்கள். 94 குவானோ தீவுகளைக் கைப்பற்றினார்கள்! அமெரிக்காவுக்குள் குவானோவின் வீச்சம் வீசத்தொடங்கியது. வருடங்கள் உருண்டோட, பல தீவுகளைத் தென்னமெரிக்க நாடுகள் திரும்ப பெற்றுக்கொண்டுவிட்டன என்றாலும், அப்படி கைப்பற்றப்பட்ட 9 குவானோ தீவுகள் இப்போதும் அமெரிக்காவின் கைவசம்தான் இருக்கின்றன!

தொடர்ந்து குவானோவை எடுத்துக்கொண்டே இருந்ததால் தென்னமெரிக்காவின் குவானோ இருப்பு குறைந்தது. 1867ல் தொடங்கிய வீழ்ச்சி, 1871ல் உச்சத்தை எட்டியது. பெருவின் எல்லா குவானோ இருப்பும் முற்றிலுமாகக் கரைந்தது.இந்த காலகட்டத்தில் பெருவின் ஆங்கோவெத்தா (நெத்திலி) தொழிலும் அசுரவளர்ச்சியடைந்துகொண்டிருந்தது என்பதையும் கவனிக்கவேண்டும். கடற்பறவைகள் சாப்பிடும் மொத்த உணவில் 90% இந்த நெத்திலிதான்! நெத்திலியை அதிகமாக மீனவர்கள் பிடித்ததில், கடற்பறவைகளுக்கான உணவு கிடைக்காமல் போனது. பறவைகளின் எண்ணிக்கை குறைந்ததால் புதிய குவானோவின் வரத்தும் குறைந்தது. அடிக்கடி தென்னமெரிக்கக் கடல்களில் நிகழும் எல்நினோ நிகழ்வும் பறவைகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. குவோனோ தொழில் கொஞ்சம் ஆட்டம் கண்டது.

காலப்போக்கில் குவானோ ஏற்றுமதிக்கான விதிகளைக் கடுமையாக்கிய பெரு, ஒரு கட்டத்தில் ஏற்றுமதியை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் செயற்கை உரங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது குவோனோ மோகம் ஒருவழியாக அழிந்தது. தற்போதைய நிலவரப்படி, பெருவில் கிடைக்கும் குவானோவில் 20% மட்டுமே ஏற்றுமதிக்கு அனுப்பப்படுகிறது. ஜெர்மனியும் அமெரிக்காவும் முக்கிய இறக்குமதி நாடுகளாக இருக்கின்றன.

குவானோவும் தொழிலாளர்கள் மீதான சுரண்டலும்

குவானோவால் ஐரோப்பாவில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒருபுறம் என்றால், அது தென்னமெரிக்க நாடுகளையும் மாற்றியமைத்தது. இயற்கைப் பொருள் என்பதாலும், பறவைகள் தொடர்ந்து இயல்பாக இருந்தால் மட்டுமே குவானோ தடையின்றிக் கிடைக்கும் என்பதாலும், எந்திரங்களின் உதவி இல்லாமலேயே குவானோவை எடுக்க வேண்டியிருந்தது. ஆகவே இதற்கு அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் தேவைப்பட்டார்கள். முதலில் இதற்கு அடிமைகள் பணியமர்த்தபட்டார்கள். அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின்பு, குற்றவாளிகளுக்கு ஒரு தண்டனையாக இந்த வேலை வழங்கப்பட்டது. கடனைத் திரும்ப செலுத்த முடியாதவர்கள் கொத்தடிமைகளாக குவோனோ வேலைக்கு அனுப்பப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் அதுவும் போதாதபோது, முப்பதாயிரம் சீனக் கூலித் தொழிலாளிகள் இந்த வேலைக்காக சீனாவிலிருந்து பெருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். நிறவெறி நிரம்பிய சொல்லாடலில், “Yellow trade” என்று இந்த நிகழ்வைக் குறிப்பிடுகிறது வரலாறு. சீனத் தொழிலாளர்கள் தொடர்ந்து ராட்சதக் கப்பல்களில் வந்து பெருவின் கடற்கரையில் இறங்கிக்கொண்டேயிருந்தார்கள்.

ஒரு அலுவலகம், உணவுக்கூடம், தங்கும் விடுதிகள் ஆகிய கட்டிடங்கள் மட்டுமே இருக்கிற, வசதிகள் எதுவும் இல்லாத பசிபிக் தீவுகளில், மணிக்கணக்கில் வேலை செய்ய வேண்டியிருந்தது. முதுகை உடைத்துவிடும் இந்த வேலைக்கான கூலியும் மிகவும் குறைவு. விடுமுறை நாட்களே இல்லாமல் உழைக்கவேண்டியிருந்தது. ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளி மூட்டை மூட்டையாக முதுகில் சுமக்கும் எடையைக் கணக்குப் போட்டால், அது 6.25 டன் வரை இருக்கும்! இறுகிப்போயிருக்கும் குவானோவை சுரண்டும்போது எழும் தூசியால் ஏற்படும் நுரையீரல் பிரச்சனைகள், நாட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் தள்ளி இருக்கும் தென்னமெரிக்காவுக்குக் கடற்பயணம் வரும்போது ஏற்படும் உடல் உபாதைகளும் இறப்பும், அதிகம் காய்கறிகள் இல்லாத உணவால் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு, இடைவெளியற்ற உடல் உழைப்பால் ஏற்படும் பாதிப்பு, தென்னமெரிக்க நாடுகளின் பருவநிலையால் ஏற்படும் உடல்கோளாறுகள் என்று தொழிலாளர்கள் பல்வேறு முனைகளிலிருந்தும் தாக்கப்பட்டார்கள். பலர் தற்கொலை செய்துகொண்டார்கள்.

“உண்மையில் சொல்லப்போனால், அப்போது பெரு நாட்டில் இருந்த குறைந்தபட்ச ஊதியத்தோடு ஒப்பிடும்போது, குவானோ குவாரிகளில் அதிக ஊதியமே கிடைத்தது என்றுதான் சொல்லவேண்டும். நிலைமை அப்போது அவ்வளவு மோசம்” என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். உலகிலேயே மிகக்குறைவான ஊதியம் தரப்படுகிற, ஆனால் மிகவும் மோசமான வேலைகளில் ஒன்றாக இது இன்றும் பார்க்கப்படுகிறது.

“ஊட்டச்சத்துக் குறைப்பாட்டால் குழந்தைகள் இறந்துகொண்டிருக்கும் ஒரு நாட்டில், தீவனத்துக்காக நெத்திலி மீன்களை ஏற்றுமதி செய்வது சரிதானா?” என்ற கேள்வி பெரு நாட்டில் எழுந்தது என்று சென்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். இந்த முரணை விட மோசமானது குவானோவின் நிலை என்கிறார்கள் அறிவியலாளர்கள். “ஊட்டச்சத்துப் பிரச்சனை உள்ள நாடு, ஆனால், அங்கிருக்கும் பறவைகளின் வயிற்றில் உள்ள மீன் புரதம் குவானோவாக மாறி, அது ஐரோப்பாவுக்குப் பயணித்து, ஐரோப்பியத் தோட்டங்களுக்கு உணவிடுகிறது, இது என்ன நியாயம்?” என்கிறார்கள் எவால்ட் ஸ்வாங் உள்ளிட்ட சூழலியலாளர்கள்.

“எச்சத்துக்காகப் போரா? பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கிறது?” என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் இதில் காலனியாதிக்க மனநிலை, இயற்கையின் மீதான சுரண்டல், மூன்றாமுலக நாடுகளின் அறிவுப்புலன்களையும் இயற்கை வளங்களையும் பயன்படுத்தி எவ்வாறு மேலை நாடுகள் தங்களை உயர்த்திக்கொள்கின்றன, வளத்தைப் பற்றிய பார்வைகளில் உள்ள வேறுபாடு என்று பல அடுக்குகள் உண்டு.  நாற்றம் என்று முதலில் ஒதுக்கிய எச்சத்தை ’வெள்ளைத் தங்கம்’ என்று போற்றி, அதற்காக சட்டங்கள் இயற்றத் தயாராக இருந்தன மேலை நாடுகள்.

இனப்பெருக்கத்தின்போது குவானோ தீவுக்குள் நுழைந்தால் மரணதண்டனை என்கிற, சூழலை மையப்படுத்திய தொல்குடியினரின் நம்பிக்கைக்கும், தீவையே கைப்பற்றிவிட்டால் ஏற்றுமதிக்காசைத் தரவேண்டியிருக்காது என்கிற காலனியாதிக்க மனநிலைக்கும் நுணுக்கமான வேறுபாடுகள் உண்டு. குவானோ குறைந்தபோதுதான், “குவானோ வேண்டுமென்றால் பறவைகள் வேண்டும்” என்பதையே உணர்ந்து பறவைகளைக் காப்பாற்றுவதுபற்றி விவாதித்தனர் இறக்குமதியாளர்கள். மீன்களை அதிகமாகப் பிடித்ததால் பறவைகள் பசியால் இறந்தபோது, “ஆமா மீன் இல்லைன்னா பறவை சாப்பாட்டுக்கு என்ன செய்யும்?” என்று முதல்முறையாக யோசித்தனர். எல்நினோவால் பறவைகள் இறந்தபோது, அது குவானோ தொழிலை பாதிக்கிறது என்பதாலேயே அது தீவிரமாக ஆராயப்பட்டது. சூழல் என்பது வளத்தோடு மட்டுமே தொடர்புபடுத்திப் பார்க்கப்படும்போது வரும் சிக்கல் இது.

குவானோவால் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்களை நிச்சயம் மறுக்க முடியாது. அதே சமயம் குவானோவை முன்வைத்த இயற்கை வளம் சார்ந்த அரசியலும் தொழிலாளர்கள் மீதான சுரண்டலும் வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் இன்றும் வீச்சமடித்துக்கொண்டிருக்கிறது.

வெள்ளைத் தங்கம்’ ஒருபுறம் என்றால், ஒருவகை கடல்வாழ் விலங்கிலிருந்து கிடைத்த ஒரு நிறம் தங்கத்தை விட உயர்வாகக் கருதப்பட்டது. அது என்ன விலங்கு? அப்படியென்ன நிறம் அது?

தொடரும்…

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close