தொடர்கள்

கடலும் மனிதனும்;24 – நாராயணி சுப்ரமணியன்

தொடர் | வாசகசாலை

கோடுகளால் துண்டாடப்படும் கடல்

எங்கோ ஒரு தீவுக்கூட்டத்தின் மூலையில் இருக்கிற, எதுவும் விளையாத, பாறைகள் மட்டுமே நிரம்பிய ஒரு கையகலத் தீவுக்காக பல லட்சம் டாலர்கள் செலவு செய்து வழக்காடுகின்றன உலக நாடுகள். எல்லைகளின் குழப்பமான கோடுகளுக்கு நடுவே சர்வதேசக் கப்பல்கள் பயணிக்கக் கற்றுக்கொள்கின்றன. ஏதாவது ஒரு சின்ன ஓட்டை கிடைத்தால் நழுவிவிடலாம் என்று சட்டப்புத்தகத்தைக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு தேடுகின்றன பெருநிறுவனங்கள்.

சோமாலியாவின் கடற்கொள்ளையர்கள் உருவான வரலாற்றுக்கும் இந்த சட்டத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அசௌகரியங்கள் பல இருந்தாலும் இப்போதைக்கு இந்த சட்டத்தை விட்டால் வேறு வழியில்லை என்றுகூட ஏற்றுக்கொள்கிறார்கள் சூழலியலாளர்கள்.

அப்படியென்ன சட்டம் அது?

இன்னொரு கேள்வியையும் கேட்டுக்கொண்டே வரலாற்றுக்குள் நுழையலாம்…

“கடல் யாருக்கு சொந்தம்?”

கடல் யாருக்குமே சொந்தமல்ல, மனிதர்களின் பொதுச்சொத்து அது என்பதெல்லாம் உணர்வுரீதியாக சரிதான். ஆனால் யாராவது ஒருவர் வந்து “கடலின் இந்தப் பகுதி என்னுடையது, இதற்குள் யாரும் நுழையக்கூடாது” என்று சொல்லிவிட்டால் அப்போது நாம் ஒரு நிலைப்பாட்டுக்குள் வந்துதானே ஆகவேண்டும்?

1455ல் போர்ச்சுகல் நாடு வெளியிட்ட ஒரு அறிக்கை அப்படி ஒரு நெருக்கடியைத்தான் உருவாக்கியது. தன் காலனியாதிக்கத்துக்குக் கீழ் இருக்கும் நாடுகளை ஒட்டிய கடற்பகுதிகள் தனக்கு சொந்தம் என்று அறிவித்தது.

17ம் நூற்றாண்டில் ஸ்பெயின் கொடுத்த ஒரு உலகளாவிய அறிவிப்பு அடுத்த பேரிடியாக இறங்கியது. “பசிபிக் கடலின் இந்த சில பகுதிகளை மூடப்பட்ட கடற்பகுதிகளாக அறிவிக்கிறோம். ஸ்பெயின் நாட்டவரைத் தவிர யாரும் இங்கு நுழையக்கூடாது” என்று அறைகூவல் விடுத்தது ஸ்பெயின். ஆசியாவின் சில பகுதிகளைத் தங்கள் காலனியாதிக்கத்தின் கீழேயே வைத்திருக்க வேண்டி நடந்த ஒரு ஏற்பாடு இது. பல காலனியாதிக்க நாடுகளின் கடல்பகுதிகளுக்கு அடிக்கடி சென்று, அங்கிருந்த கால்வாய்களுக்குள் யார் நுழைகிறார்கள் என்றும் உளவு பார்க்கத் தொடங்கியது ஸ்பெயின்.

அறிஞர்கள் பலரும் நொந்துபோனார்கள். கடலைப் போய் ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்களே என்று ஒரு கருத்தியலை உருவாக்க முனைந்தார்கள். எதிர்வினையாற்ற அப்போதெல்லாம் முகநூல் இருக்கவில்லை என்பதால் சிரமப்பட்டு தன் கருத்துக்களை ஒரு புத்தகமாக வெளியிட்டார் ஹூகோ க்ரோட்டிஸ் என்ற அறிஞர். 1609ல் வெளிவந்த இந்தப் புத்தகத்தின் தலைப்பு: “பெருங்கடல்களின் சுதந்திரம்”. தனது நூலில்,”கடல் என்பது ஒரு சர்வதேச பொதுச் சொத்து. தலைக்கு மேல் இருக்கும் காற்றையும் ஆகாயத்தையும் தனி மனிதர்கள் சொந்தம் கொண்டாட முடியுமா என்ன, கடலும் அதைப் போலத்தான்” என்று விரிவாக எழுதினார் க்ரோட்டிஸ்.

சூரியன் மறையாத ஒரு எல்லையற்ற பேரரசைக் கனவுகண்டு வைத்திருந்த பிரிட்டனுக்கு இது பிடிக்கவில்லை. அங்கிருந்த பல அறிஞர்கள், “அதென்ன கடலைக் காற்றோடு ஒப்பிடுவது? நியாயமாக நீங்கள் அதை நிலத்தோடுதானே ஒப்பிட்டிருக்கவேண்டும்? நிலத்துக்கு சொந்தக்காரர்கள் இருக்கலாம் என்றால் கடலுக்கும் சொந்தக்காரர்கள் இருக்கலாம்தானே” என்று எதிர்வினை விடுத்தார்கள்.

1702ல் பீரங்கிகுண்டு பாயும் வேகத்தை ஒட்டிய ஒரு கோட்பாடு (Canonfire theory) உருவாக்கப்பட்டது. அதாவது, நிலத்தில் நின்றுகொண்டு கடலை நோக்கி ஒரு பீரங்கியை இயக்கினால், அந்த குண்டு எத்தனை தொலைவு பயணிக்குமோ, அத்தனை தொலைவு வரை உள்ள கடற்பகுதி அந்த நாட்டுக்கு சொந்தம், மீதி இருப்பது பொதுவான கடல் என்ற ஒரு கருத்தாக்கம் கொண்டுவரப்பட்டது. அப்போது இருந்த தொழில்நுட்பத்தின்படி இது மூன்று நாட்டிக்கல் மைல் (5.6 கிலோமீட்டர்) என்று வரையறுக்கப்பட்டது. அப்போதைய பேரரசுகளான அமெரிக்கா, ப்ரிட்டன், ஃப்ரான்ஸ் போன்றவை இதை ஏற்றுக்கொண்டன.

உலகப்போருக்குப் பிறகு, பொருளாதாரத் தேவைகளுக்காக, இது 12 நாட்டிகல் மைலாக உயர்த்தபப்ட்டது. இதுவே பொதுவாக 1960கள் வரை அமலில் இருந்தது.

சர்வதேச சட்டத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதா என்று ஏற்கனவே நெளிந்துகொண்டிருந்த அமெரிக்கா, சில மாதங்களிலேயே ஒரு மாற்று அறிவிப்பை வெளியிட்டது. 1945ன் இறுதியில், கடற்கரையிலிருந்து 200 நாட்டிக்கல் மைல் வரை அல்லது கடற்கரையை ஒட்டிய ஆழம் குறைவான பகுதியான கண்டத்திட்டு (continental shelf) வரை இருக்கும் கடற்பகுதி, அந்த நாட்டுக்கு சொந்தம் என்று அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரூமன். அர்ஜன்டைனா, சிலி, பெரு, ஈக்வடார் போன்ற தென்னமெரிக்க நாடுகளும் இதே போன்ற அறிவிப்புகளை வெளியிட்டன. அங்கு இருக்கும் கடல்நீர், மீன்கள் உள்ளிட்ட உயிர்வளங்கள், கடற்படுகை, கடல் மண் எல்லாமே அந்தந்த நாட்டுக்கு சொந்தம் என்ற ஒரு அறிவிப்பும் வந்தது.

உலகப்போருக்குப் பின்னான காலகட்டங்களில், காலனியாதிக்கத்தின் பாதிப்பு குறையக் குறைய, தனித்தனி நாடுகளாகப் பிரிந்த நிலப்பகுதிகளிடையே கடல் உடைமை குறித்த பெரும் போட்டி நிலவியது. ஐ.நா சபையின் முன்னோடி அமைப்பான லீக் ஆஃப் நேஷன்ஸ் மூலம் பல பேச்சுவாரத்தைகள் நடத்தப்பட்டாலும் எல்லாமே தோல்வியில் முடிந்தன. 25 நாடுகள் மூன்று நாட்டிகல் மைல்களையும், அறுபது நாடுகள் 12 நாட்டிக்கல் மைல்களையும், 8 நாடுகள் 200 நாட்டிகல் மைல்களையும் அளவுகோலாக வைத்திருந்தன. நாடுகளின் கடல் எல்லை குறித்த கடும் சர்ச்சைகள் நிலவியிருந்த காலம் அது.

1973ல், கடல் பகுதிகளைப் பற்றிய சர்வதேச சட்டம் ஒன்றை உருவாக்குவதற்காக அனைத்து நாடுகளையும் ஒன்று திரட்டியது ஐக்கிய நாடுகள் சபை. நீண்ட விவாதங்கள், வெளிநடப்புகள், சண்டை சச்சரவுகள், கத்தை கத்தையாகக் குவிந்த அறிக்கைகள் எல்லாமாக சேர்ந்து இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தை ஒன்பது ஆண்டுகள் நீடித்தது!

1982ல் ஒருவழியாக, பல நாடுகளின் ஒப்புதலோடு, ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டங்களுக்கான மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது  United Nations Convention on the Law of the sea – UNCLOS என்று அழைக்கப்படுகிறது. நாமும் இந்தக் கட்டுரையில் அதை அன்க்ளாஸ் என்றே அழைக்கலாம். 1994ல் அன்க்ளாஸ் அமலுக்கு வந்தது. 2016ம் ஆண்டின் நிலவரப்படி, ஐரோப்பிய யூனியனோடு சேர்த்து 167 உறுப்பினர் நாடுகள் இதில் கையெழுத்திட்டிருக்கின்றன.

வழக்கம்போல அன்க்ளாஸ் ஒப்பந்தத்தில் இன்னும் அமெரிக்கா கையெழுத்திடவில்லை. “இது ஒரு மோசமான ஒப்பந்தம்” என்று அமெரிக்க அறிஞர்கள் கட்டுரைகளாக எழுதித் தள்ளுகிறார்கள். அன்க்ளாஸில் கையெழுத்து போடாத காரணத்தினாலேயே, கடல் எல்லைகள் சார்ந்த விவாதங்களில் தன் உரத்த குரலை ஒலிக்கவிடும் உரிமையையும் இழந்திருக்கிறது அமெரிக்கா. சுவாரஸ்யமான நிலை இது.

அன்க்ளாஸின் அடிப்படை சட்டங்கள் இவைதான்:

  • கடற்கரையிலிருந்து 12 நாட்டிகல் மைல் வரை நீளும் கடற்பகுதி, Territorial waters என்று அழைக்கப்படுகிறது. இதை அந்தந்த நாட்டின் எல்லை எனலாம். குறிப்பிட்ட நாடுகள் அந்த எல்லைக்குள் இயங்கவேண்டிய சட்டங்களை வகுத்துக்கொள்ளலாம். வெளிநாட்டுக்கப்பல்கள் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு, பயணத்தின்போது அந்த எல்லையைக் கடக்க அனுமதி உண்டு. இதை Innocent passage என்கிறார்கள். அதாவது, பயணத்தின்போது அந்த எல்லை குறுக்கிட்டால் அமைதியாக அதைக் கடக்கவேண்டும். அங்கு மீன்பிடிக்கவோ, ஆயுதங்களைப் பயன்படுத்தி பயிற்சி செய்யவோ, உளவு பார்க்கவோ கூடாது.
  • தீவுகள் பல இருக்கிற ஒரு தீவுக்கூட்டத்தில், வெளிப்புறத்தில் இருக்கும் எல்லாத் தீவுகளையும் இணைத்து ஒரு எல்லை உருவாக்கப்படும். அதற்குள் இருக்கும் பகுதிகள் அந்தத் தீவுகளின் ஆளுகைக்கு உட்பட்டவை. அவை கிட்டத்தட்ட territorial waters போலவே பாவிக்கப்படும்.
  • 12 நாட்டிகல் மைலுக்கு அப்பால், அடுத்த 12 நாட்டிகல் மைல்கள் contiguous zone என்று வரையறுக்கப்பட்டுள்ளன. அந்தந்த நாடுகளின் சுங்க சோதனை, வரி, புலம்பெயர்தல், மாசுபாடு தொடர்பான சட்டங்கள் இங்கே செல்லுபடியாகும்.
  • கடற்கரையிலிருந்து 200 நாட்டிகல் மைல் வரையிலான இடம் பிரத்தியேக பொருளாதார மண்டலம் (Exclusive economic zone-EEZ) என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்துக்குள் இருக்கும் எல்லா இயற்கை வளங்களையும் அந்தந்த நாடுகள் தனி உரிமையோடு பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • இதற்கு அப்பால் இருக்கும் இடம் பொதுப் பகுதி. high seas என்று அழைக்கப்படுகிறது. இந்த இடம் யாருக்கும் சொந்தமில்லை, அந்த வகையில் அனைவருக்கும் சொந்தமானது.

இவற்றில், பிரத்யேக பொருளாதார மண்டலம் என்ற வகைமைதான் மிகவும் சுவாரஸ்யமானது. ஒரு நாட்டின் எல்லையில் தீவுகள் இருந்தால், அதுவே இறுதி கடற்கரைப்பகுதியாக மாறிவிடும். அப்போது, தீவின் வெளிப்புறத்திலிருந்து ஒரு வரைபடம் உருவாக்கப்பட்டு, பொருளாதார மண்டலம் பலமடங்கு விரியும். ஆகவே தங்கள் கடற்பகுதிகளின் விளிம்பில் உள்ள தீவுகளைக் கைப்பற்ற நாடுகள் அதீத ஆர்வம் காட்டுகின்றன.

அந்தமான் தீவுகளை இந்தியாவிடமிருந்து பறித்துக்கொள்ள பல நாடுகள் ஆர்வம் காட்டுவதும், பல கோடிகள் செலவழித்து இந்தியா அந்தத் தீவுகளைப் பாதுகாப்பதும் இதனால்தான். அந்தமான் தீவுகளை சேர்ப்பதால் மட்டுமே கிட்டத்தட்ட ஆறரை லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குக் கூடுதலான பொருளாதார மண்டலம் நமக்குக் கிடைக்கிறது!

வடகிழக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள ஒரு பெரும்பாறை ராக்கால் (Rockall). ஒரு நான்குமாடிக் கட்டிடத்தின் உயரம், ஒரு பேருந்தின் அகலம் இருக்கும் பாறையான ராக்கால், நடுக்கடலில் உயர்ந்து நிற்கிறது. இது ஒரு தீவுப்பகுதி என்று சொல்லிவரும் இங்கிலாந்து, அதிலிருந்து தன் எல்லைக்கோட்டை வரைந்து தனது பொருளாதார மண்டலத்தை அதிகரிக்கவேண்டும் என்று ஐ.நா சபையிடம் வழக்காடிக்கொண்டிருக்கிறது. அயர்லாந்து, ஐஸ்லாந்து, ஃப்ரோ தீவுகளைக் கைவசம் வைத்துள்ள டென்மார்க் ஆகிய நாடுகளும் இதைப் போலவே போராடுகின்றன. அன்க்ளாஸ் வல்லுநர்களோ “அது வெறும் கல்லுதானே சார்” என்று எல்லாவற்றையும் புறம்தள்ளிவிட்டார்கள்! ஒரு தீவு என்று அங்கீகரிப்பதற்கு ராக்காலின் எந்த ஒரு அம்சமும் இல்லை என்பது அவர்களின் வாதம். ஆனாலும் நாடுகள் இதை முழுமனதாக ஏற்கவில்லை. இழுபறி தொடர்கிறது.

தெற்கு சீனக்கடலில் உள்ள ஸ்ப்ராட்லி தீவுகளின் (Spratly islands) கதை சற்றே வித்தியாசமானது. மொத்தம் 45 தீவுகளைக் கொண்ட இந்தக் கூட்டத்தில் யாரும் வசிக்கவில்லை என்றாலும், ப்ரூனே, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள் ஒவ்வொரு தீவாகப் பிடித்துவைத்துக்கொண்டு ராணுவத் தளங்களை அமைத்திருக்கின்றன. இது எங்க பாட்டன் சொத்து என்று ஒவ்வொரு நாடும் ஒரு பழுப்பேறிய ஆவணத்தைக் கையில் காட்டி உடைமைக்கு முயற்சி செய்கின்றன. இதில் பிலிப்பைன்ஸுக்கும் சீனாவுக்கும் பெரிய அளவில் பிரச்சனை வெடிக்க, அன்க்ளாஸ் வல்லுநர்கள் வழக்கை விசாரித்தார்கள். 2016ல் ஃபிலிப்பைன்ஸுக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. இந்த இடம் தனக்கு வரலாற்று ரீதியாகவே சொந்தம் என்ற சீனாவின் வாதம் ஆதாரமற்றது என்று அறிவிக்கப்பட்டது.

இது ஒரு வெற்றிதானே தவிர, தெற்கு சீனக் கடலில் உள்ள பல தீவுகள், பல்வேறு நாடுகளின் எல்லைக்கு உள்ளேயும் வெளியேயுமாக இருப்பதால், சர்வதேசக் கடல் அரசியலின் பிரஷர் குக்கராக அந்த இடம் மாறிக்கொண்டிருக்கிறது. சில நாடுகள் செயற்கையாக தீவுகளை உருவாக்கித் தங்கள் எல்லைகளை விரிக்க முயற்சி செய்கின்றன என்றுகூட ஒரு குற்றசாட்டு உண்டு!

In this photo taken Sunday, Sept. 23, 2012, masked Somali pirate Abdi Ali stands near a Taiwanese fishing vessel that washed up on shore after the pirates were paid a ransom and released the crew, in the once-bustling pirate den of Hobyo, Somalia. The empty whisky bottles and overturned, sand-filled skiffs that litter this shoreline are signs that the heyday of Somali piracy may be over – most of the prostitutes are gone, the luxury cars repossessed, and pirates talk more about catching lobsters than seizing cargo ships. (AP Photo/Farah Abdi Warsameh)

சோமாலியாவின் கதை சோகமானது. உள்நாட்டுப் போரால் சிதைந்துபோயிருந்த சோமாலியாவில் தெளிவான அரசும் எல்லைப்பாதுகாப்பும் இல்லாமல் இருந்த காலம் அது. 1950 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் அந்த மந்தநிலையை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அன்க்ளாஸ் விதிகளைக் காற்றில் பறக்கவிட்டன உலக நாடுகள். சோமாலியாவின் கடல் எல்லைக்குள் புகுந்து, கப்பல் தரை தட்டுகிற ஆழம் வரை பயணித்து ராட்சத வலைகளால் எல்லா மீன்களையும் பிடித்துத் தீர்த்தன. இத்தாலி, ஜப்பான், கிரேக்கம், சிங்கப்பூர், ரஷ்யா, சீனா என்று எல்லா நாடுகளும் சோமாலியக் கடல்களுக்கு ரகசியமாகக் கப்பல்களை அனுப்பிவைத்தன. உள்நாட்டுப் போரால் சீர்குலைந்திருந்த பொருளாதாரத்தோடு போராடிக்கொண்டிருந்த சோமாலிய மக்கள், இந்த வெளிநாட்டுக் கப்பல்களை விரட்டியடிக்க ஆயுதம் ஏந்தினார்கள்.  அவர்களை விரட்டிய பின்னும் தங்கள் கடற்பகுதிகளில் மீன்களும் வாழ்வாதாரமும்  இல்லாமல் வெகுண்டெழுந்தார்கள். சோமாலிய மக்கள் கடற்கொள்ளையர்களான வரலாற்றின் ஆரம்பப் புள்ளி அது.

இவற்றைப் படிக்கப் படிக்க ஒரு விஷயம் தெளிவாகியிருக்கும். யாரிடம் அதிக நிலம் இருக்கிறதோ, அவர்களிடமே அதிகமான கடலும் சென்று சேர்கிறது. அன்க்ளாஸ் மீது இருக்கும் முக்கியமான குற்றச்சாட்டு இது. நீண்ட கடற்கரைகளைக் கொண்ட ரஷியா, ஆஸ்திரேலியா, தீவுக்கூட்டங்களை எல்லைகளாகக் கொண்ட இந்தோனேசியா, ஜப்பான், காலனியாதிக்க காலகட்டங்களின்போது உலகெங்கும் பயணித்து தொல்குடிகளைக் கொன்றழித்து நிலங்களையும் தீவுகளையும் கையகப்படுத்திவைத்திருக்கும் அமெரிக்கா, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் அன்க்ளாஸால் பெரிய அளவுக்கு நன்மை பெறுகின்றன. சமகாலத்தில் ஒரு சிறு தீவுக்காகப் போருக்குப் போககூடத் தயங்காத சீனா போன்ற நாடுகளுக்கும் அன்க்ளாஸ் சாதகமாகவே இருக்கிறது. காலனியாதிக்க நாடுகளின் கடல் பேராசையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட அன்களாஸ், இப்போது அந்த நாடுகளுக்கே சாதகமாக இருப்பது நகைமுரண்தான்.

ஒருவகையில் கடலைத் தனியார்மயமாக்குவதற்கும் தேசியமயமாக்குவதற்குமான முயற்சி இது என்ற விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. “கடல் என்பது மனிதனின் பொதுச் சொத்து, அது தனித்துவமான நம் கூட்டு மரபின் அடையாளம்” என்பது போன்ற அறிஞர்களின் அறைகூவலோடு ஒப்பிடும்போது, நாம் நெடுந்தூரம் விலகி, கடலுக்குப் பட்டா போடுகிற இடத்துக்கு வந்துவிட்டோம் என்று தோன்றுகிறது.

எல்லாருக்கும் சொந்தமான, ஆனால் யாராலும் சொந்தம் கொண்டாட முடியாத இடமான பொதுக்கடல் பகுதிகள் இன்னும் குழப்பமான அரசியலுக்கு உள்ளாகின்றன. சமீபகாலமாக, “இங்கு இருக்கும் மீன்வளங்கள் அளவுக்கு அதிகமாக சுரண்டப்பட்டால் என்ன செய்வது? இங்குள்ள வளங்களை எப்படிப் பாதுகாப்பது? இந்த இடத்தின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?” என்ற கேள்வி எழுந்திருக்கிறது. 2017 முதல் வருடாவருடம் கூட்டங்கள் நடத்தி, இதற்கான சட்டத்தை இயற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறது ஐக்கிய நாடுகள் சபை. “கடல் என்பது பொது மரபு” போன்ற சொல்லாடல்களை ரொமாண்டிசிஸம் என்று ஒதுக்கிவரும் மேலை நாடுகள், பரபரப்பாகக் கைகளைத் தேய்த்தபடி, அங்கும் கொடிநாட்ட வாய்ப்புக் கிடைக்குமா என்று காத்திருக்கின்றன. கீழை நாடுகள் அயற்சியில் இருக்கின்றன.

அன்க்ளாஸின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், இப்போதைக்கு இந்த சட்டம் ஓரளவு பயன்படுகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அன்களாஸ் இல்லாத பட்சத்தில், நிச்சயம் இந்நேரத்துக்கு கடல் துண்டாடப்பட்டிருக்கும். எல்லாக் கடல்களிலும் தேசியக்கொடிகளும் “தடை செய்யப்பட்ட கடற்பகுதி” என்பதுபோன்ற எச்சரிக்கைத் தட்டிகளும் மின்னிக்கொண்டிருக்கும். சர்வதேச கடற்பகுதி வரைமுறையின்றி சூரையாடப்பட்டிருக்கும்.

மீன்களைத் தாண்டி, சர்வதேச கடற்பகுதிகளின்மீது உலக நாடுகள் இந்த அளவுக்கு அக்கறை காட்டுவதற்குப் பின்னால் ஒரு முக்கியமான கடல் வளம் இருக்கிறது. ஆனால் அந்த வளத்தை சரியாக அகழ்ந்தெடுக்கும் தொழில்நுட்பம் இன்னமும் வளர்ந்தபடியேதான் இருக்கிறது என்பதுதான் சுவாரஸ்யம். அப்படி என்ன வளம் அது?

தொடரும்…

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close