தொடர்கள்
Trending

கடலும் மனிதனும்:15- கறுப்பு வைரம்: பண்டமாக்கப்பட்ட மீனின் கதை- நாராயணி சுப்ரமணியன்

1966ல் இந்த ஒரு மீன் இனத்தைப் பாதுகாப்பதற்காக மட்டும் International Commission for the Conservation of Atlantic Tunas என்ற சர்வதேச அமைப்பு நிறுவப்பட்டது. ஒவ்வொரு முறையும் இந்த அமைப்பிலிருந்து புதிய விதிமுறைகள் வரும்போது, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெருநிறுவனங்கள் “மீன்பிடி உச்சவரம்பை உயர்த்துங்கள்” என்று கூச்சலிடும். உலகத்தின் பார்வையில் இது வெளிப்படையாக நடந்துகொண்டிருக்கும்போதே தினமும் காலையில் ஜப்பானில் உள்ள மீன் சந்தையில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட இந்த மீன் இனங்கள் லாரிகள் கொண்டுவந்து குவிக்கப்படும். புவியின் மறுபக்கத்தில், அமெரிக்காவில் உள்ள மேட்டுக்குடியினரைப் பொறுத்தவரை, உயர்தர ஜப்பானிய உணவகங்களில் “Tuna Sushi” சாப்பிடுவது என்பது, “நாங்கள் பணக்காரர்களாக இருக்கிறோம்” என்று காட்டிக்கொள்வதற்கான ஒரு வழி.

2019ல் ஜப்பானில் நடந்த ஒரு மீன் ஏலத்தில், 277 கிலோ உள்ள ஒரு சூரை மீன் 3.1மில்லியன் டாலர்களுக்கு விலைபோனது. அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 22 கோடி! ஜப்பானிய மீன் சந்தைக்காரர்களுக்கு இந்த மீன் ஒரு செல்லப்பிள்ளை. “கறுப்பு வைரம்” என்ற பெயரில் இது கொண்டாடப்படுகிறது,

அப்படி என்ன மீன் அது?

Atlantic Bluefin Tuna என்பது இதன் ஆங்கிலப்பெயர். இதன் துடுப்புகள் நீல நிறத்தில் இருப்பதால் வந்த காரணப்பெயர் இது. சூரை இனத்தைச் சேர்ந்த இந்த மீனை இந்தியக் கடற்பகுதிகளில் பார்க்க முடியாது. சராசரியா ஆறு முதல் பத்து அடி நீளம் வளரக்கூடிய இந்த மீன், 680 கிலோ வரை எடை இருக்கும்! 

“ஒரு பெரிய படகு அளவுக்கு நீளமாக வளரும், இரண்டு எம்பயர் ஸ்டேட் கட்டிடங்களை ஒன்றன்மீது ஒன்றாக வைத்தால் எத்தனை மீட்டர் இருக்குமோ (700 மீட்டர்), அந்த ஆழம் வரை நீந்திச் செல்லக்கூடியது, ஒரு ரேஸ்குதிரைக்கு ஈடுகொடுக்கும் வேகத்தில் நீந்தக்கூடியது. ஒரு ஸ்பெர்ம் திமிங்கிலம் எத்தனை தூரம் பயணிக்குமோ, அத்தனை தூரம் அலட்டிக்கொள்ளாமல் வலசை போகக்கூடிய திறன் உடைய மீன்” என்று ஆச்சரிய வார்த்தைகளில் இந்த மீனை வர்ணிக்கிறார் சூழலியல் பத்திரிக்கையாளர் பென் கோல்ட்ஃபார்ப். 

பொதுவாக மீன்கள் குளிர் ரத்தப் பிராணிகள். ஆனால், தன்னைச் சுற்றி உள்ள சூழலோடு ஒப்பிடும்போது 21 டிகிரி செல்சியஸ் கூடுதலாக உடல் வெப்பநிலையைப் பராமரிக்கும் ஆற்றல் இந்த மீனுக்கு உண்டு! ஆகவே ரத்தத்தை உறையவைக்கும் அளவுக்கு இருக்கும் குளிர் நீரிலும் இயல்பாக இவற்றால் நீந்த முடியும். இதனாலேயே மற்ற மீன்களைப்போல இல்லாமல் இவற்றின் தசை அடர் சிவப்பாகவும் எளிதில் கெட்டுப்போகக்கூடிய நெகிழ்தன்மை கொண்டதாகவும் இருக்கும். 

இந்த மீனைப் பற்றிய கதையில் இரு கோணங்கள் உண்டு. மீன்பிடித் தொழில் செய்துவந்த தொல்குடியினரால் மரபார்ந்த முறையில் பிடிக்கப்பட்டுக்கொண்டிருந்த ஒரு மீன், எப்படி ஒரு பண்டமாகவே மாற்றப்பட்டது என்பது ஒரு கோணம். “இதெல்லாம் ஒரு மீனா! ருசியே சரியில்ல” என்று குப்பையில் வீசப்பட்டுக்கொண்டிருந்த ஒரு இனம், எப்படி மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போகும் கறுப்பு வைரமாக மாறியது என்பது இன்னொரு கோணம்.

 

முதல் கோணம் ஐரோப்பாவில் துவங்குகிறது.

கிறிஸ்து பிறப்பதற்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பாகவே க்ரோட்டா டெல் ஊஸோவின் சுவர்களில் இந்த மீனின் ஓவியத்தை வரைந்து வைத்திருக்கிறார்கள் பண்டைய ரோமானியர்கள்.  இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்கக் கவிஞர் ஒப்பியன் “மீன் வலைக்குள் செல்கிறது. ஒரு பெருநகரத்தின் கோட்டைக் கதவுகள் மூடிக்கொள்வதைப் போல, இந்த வலையின் கதவு மூடிக்கொள்கிறது. வலைக்குள் மீன்கள் பெருகுகின்றன” என்ற கவிதை ஒன்றை எழுதினார். 

கதவு மூடுவதும் திறப்பதுமாக அவர் வர்ணிக்கும் மீன்பிடி முறைக்குப் பண்டைய ரோமானியர்கள் வைத்திருந்த பெயர் La Tonnara. எலிப்பொறி எப்படியோ, அதுபோல மீன்களைப் பிடிக்கும் ஒரு பொறியாக இதை நாம் கற்பனை செய்து கொள்ளலாம். மீன்களை விரட்டிப் பொறிக்குள் சிக்கவைக்கும் மரபார்ந்த மீன்பிடித் தொழில் இது. கரைக்கு அருகிலேயே அதிகமாக வந்துசேரும் நீலத்துடுப்பு சூரைகளை இந்தப் பொறியின்மூலம் எளிதாகப் பிடித்தார்கள் ரோமானியர்கள். உப்பு சேர்த்துக் காயவைத்த நீலத்துடுப்பு சூரையின் கருவாடும், சிசிலியில் விளைந்த கோதுமையால் ஆன ரொட்டியும்தான் பண்டைய ரோமானியர்களின் கடற்பயணத்தின்போது முக்கிய உணவுகளாக இருந்தன. தங்களுக்கும் மிகவும் பிடித்த இந்த நீலத்துடுப்பு சூரையின் உருவத்தைக் காசுகளிலும் பொறித்து ரோமானியர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். இந்த சூரைமீனின் கருவாடு பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. “பொறிக்குள் சூரைமீன்கள் நீந்தும்போது, உள்ளூர் தேவாலயங்களில் பெரிய மணிகளை ஒலிக்கச்செய்வார்கள், பிரார்த்தனைகள் நிகழ்த்துவார்கள்” என்று சொல்கிறது பண்டைய மீனவர் ஒருவரின் குறிப்பு.

மீனவர்களாலேயே பராமரிக்கப்பட்ட இந்த  மீன்பிடிப் பொறிகள் பல விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கிக்கொண்டிருந்தன. அதனால் அளவுக்கு அதிகமாக மீன்பிடிப்பது எளிதில் தடுக்கப்பட்டது. நிலப்பிரபுத்துவ முறையிலிருந்து மெதுவாக முதலாளித்துவத்தை நோக்கி நகர்ந்தது ஐரோப்பா. 17 நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த மாற்றம் இத்தாலியையும் வந்தடைந்தது. பொது சொத்துக்களாக, மீன்பிடி கிராமத்தில் உள்ள அனைவராலும் பராமரிக்கப்பட்ட மீன்பொறிகள் தனிநபர் உடைமைகளாக மாறின. போட்டி அதிகரித்தது. அதிகமாகப் பணம் வைத்திருந்த ஒரு சில குடும்பங்களிடம் எல்லா பொறிகளும் சென்று சேர்ந்தன. செலவைக் குறைத்து லாபத்தை அதிகப்படுத்துவதற்காக அவர்கள் பொறிகளின் அமைப்பை மாற்றினார்கள். “உப்புநீரில் ஊறப்பதற்கு பதிலாக ஆலிவ் எண்ணெயில் ஊறவைத்தால் இன்னும் எளிதாக இந்த சூரை மீன்களை ஏற்றுமதி செய்யலாம்” என்பது அனுபவபூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்றுமதி பன்மடங்கு பெருகியது. தற்சார்புக்காக உருவாக்கப்பட்ட மீன்பொறிகள் தொழில்முறைப்படுத்தப்பட்டன. 

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அடுத்த பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதிக அளவில் மீன்பிடிப்பதற்கான புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றோடு ஒப்பிடும்போது இந்த மீன்பொறிகளிலிருந்து கிடைக்கும் லாபம் ஒன்றுமேயில்லை என்ற நிலை வந்தது. “மீன்பொறிகளோடு ஒப்பிட்டால் சூரை மீன்களை டின்னில் அடைக்கும் தொழிலிலிருந்து அதிகமான வருமானம் கிடைக்கும்” என்ற சூழல் வந்தது. உலகளாவிய உணவு முறைகள் மாறிய நேரம் அது. டின்னில் அடைத்து விற்கப்படும் சூரை மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது. சூரைகளை விரட்டிப்பிடிக்கும் கப்பல்கள், இவற்றைப் பதப்படுத்தி டின்னில் அடைக்கும் தொழிற்சாலைகள், ஏற்றுமதி/இறக்குமதி மையங்கள் என்று வேலைவாய்ப்பு அதிகரித்தது. பல்லாயிரக்கணக்கான மீன்பொறிகள் மூடப்பட்டன. மரபுசார்ந்த ஒரு மீன்பிடி முறை அழிக்கபப்ட்டது.

1980களின் பிற்பகுதியில் ஆயிரக்கணக்கான தூண்டில்களைக் கொண்ட Longline மீன்பிடி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சூரைக்கூட்டங்களை வளைத்துப் பிடிக்கும் சுருக்கு வலைகள் அமலுக்கு வந்தன. மீன்பிடிப் படகுகளின் எஞ்சின்கள் பேராற்றல் கொண்டவையாக மாற்றப்பட்டன, அதனால் வேகமாக நீந்தும் சூரைகளை விரட்டிச்செல்ல முடிந்தது. அதிகமான எடை உள்ள ஒரு பெரிய சூரைக்கூட்டத்தைப் பிடித்தாலும் அந்த வலையை அப்படியே தூக்கும் திறன் உள்ள கிரேன் போன்ற அமைப்புகள் படகுகளில் பொறுத்தப்பட்டன. சூரை மீன்கள் எங்கு இருக்கின்றன என்று தேடிப் பிடித்து சொல்வதற்காக சிறு விமானங்கள் பயன்படுத்தப்பட்டன! 

 

1950களில் ஒரு வருடத்துக்கு சராசரியாகப் பிடிக்கப்பட்ட சூரைமீனின் அளவு ஆறாயிரம் டன். இது 1990களில் இருபத்தி எட்டாயிரம் டன்னாகப் பலமடங்கு உயர்ந்தது.

இந்த அளவுக்கு அசுரத்தனமான வளர்ச்சி எதற்காகத் தேவைப்பட்டது? சிறு மீன்பொறிகளை வைத்து ரோமானியர்கள் பிடித்துக்கொண்டிருந்த ஒரு மீனுக்காக விமானங்களை அனுப்பும் அளவுக்கு என்ன அவசியம் ஏற்பட்டது? விதவிதமான தொழில்நுட்பங்கள், இராட்சத இயந்திரங்கள் எல்லாம் தேவைப்படுகிற அளவுக்கு ஒரு தொழில் விரியவேண்டுமானால் அந்த மீனுக்கான தேவை எங்கிருந்தோ வரவேண்டும். எங்கேயோ ஒரு இடத்தில் “எத்தனை லட்சம் கொடுத்தாலும் தகும்” என்ற நிலைக்கு இந்த மீன் ஒரு விலையுயர்ந்த பண்டமாக மாறியிருக்கவேண்டும். இந்தப் பண்டமாக்கல் (Commodification) எப்படி நடந்தது?

இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறது சூரைமீனின் கதையில் உள்ள இரண்டாவது கோணம்.

அந்தக் கோணம் தொடங்குவது, அட்லாண்டிக் கடலுக்கு சற்றும் சம்பந்தமேயில்லாமல், பசிபிக் கடலில் கால்நனைத்துக்கொண்டிருக்கும் ஜப்பானில்.

அட்லாண்டிக் கடற்பகுதிகளிலிருந்து அனாயாசமாக இந்த மீன் பசிபிக் கடல்களுக்கு வலசை போகும். அப்படிப் போகும்போது, ஜப்பானியக் கடலோரங்களில் உள்ள மீனவர்கள் இந்த மீனை அவ்வப்போது பிடிப்பார்கள். ஆனாலும் அதை ஜப்பானியர்கள் கண்டுகொள்ளவில்லை. 1840களில் இந்த  மீனின் செல்லப்பெயர் “நெகோ மடாகி” – ஜப்பானிய மொழியில் “பூனை கூட இந்த மீனை சீந்தாது” என்று பொருள்! வெள்ளை நிறத்தில் உள்ள மீன் தசைகளையே விரும்பி உண்ணும் ஜப்பானியர்களுக்கு, இரும்பின் ருசி கொண்ட, அடர் சிவப்பு நிறத்திலான இந்த மீனின் ருசி பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

இந்த மீனை நான்கு நாட்கள் மண்ணுக்கடியில் புதைத்துவைத்தால் அதன் தீவிர ருசி கொஞ்சம் மட்டுப்படும். “நான்கு நாட்கள்” என்ற பொருள்தரும் ஜப்பானிய சொல்லான “ஷிபி” என்ற பெயரில் இந்தப் பதப்படுத்தப்பட்ட மீன் விற்கப்பட்டது. அதுவும் பரவலாக மக்களால் விரும்பப் படவில்லை. அளவுக்கு அதிகமான சோயா சாஸில் இந்த மீனை மூழ்கடித்தால் இந்த இரும்பு ருசி தெரியவில்லை என்று கண்டுபிடித்த ஜப்பானியர்கள், அவ்வப்போது வேறு எதுவும் கிடைக்காத பட்சத்தில் இந்த மீனை சாப்பிட்டார்கள்.1923ல் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுப் பலர் வீடுகளை இழந்து வறுமையில் இருந்தபோது, தெருவோரத்தில் உள்ள கடைகளில் விற்கப்படும் விலைகுறைந்த எளிய மனிதர்களின் உணவாக இந்த மீனும் பரிமாறப்பட்டது. சமூகப் பொருளாதார அடுக்கில், மிகவும் கீழே நீந்திக்கொண்டிருந்தது இந்த மீன்.

அமெரிக்காவில் சூழல் வேறு மாதிரி இருந்தது. வேகமாக நீந்துகிற இந்த மீனின் அளவும் பெரியது என்பதால், இந்த மீனை விரட்டி, வெறும் தூண்டிலை மட்டும் போட்டு தசைகளின் பலத்தாலேயே இழுத்துப் பிடிப்பது பெரிய சாகசமாகப் பார்க்கப்பட்டது. நீலத்துடுப்பு சூரையைப் பிடிப்பதற்காக மீன்பிடிப் போட்டிகள் நடத்தப்பட்டன! ஐந்நூறு கிலோ மீனைப் பிடித்துவரும் சாகசப் பிரியர்கள், மீனோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு, பிடித்த மீனை அப்படியே கடலுக்குள் வீசிவிடுவார்கள்! 1960கள் வரை நிலைமை இதுவாகத்தான் இருந்தது.

ஒரு காலகட்டத்தில் பூனைகளுக்கான உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த மீனை சொற்ப விலைக்கு எடுத்துக்கொள்ள முன்வந்தன. சும்மா ஒரு கிலோ ஐந்து ரூபாய் என்ற அளவுக்குப் பேருக்குக் காசு கொடுத்து இந்த மீனை வாங்கிக்கொண்டன பூனைஉணவு நிறுவனங்கள். “தூக்கிப்போடும் மீனுக்குக் இந்த அளவுக்காவது காசு கிடைக்கிறதே” என்று நிறுவனங்களுக்கு மீன்களை விற்கத் தொடங்கினார்கள் மீனவர்கள். ஆனாலும் கிடைக்கிற நீலத்துடுப்பு சூரைகளோடு ஒப்பிடும்போது கொள்முதல்/விற்பனை அளவு குறைவாகத்தான் இருந்தது. பல டன் எடையுள்ள நீலத்துடுப்பு சூரைகள் வாங்க ஆளில்லாமல் அழுகின.

 

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஜப்பானிய மரபில் மேலைநாடுகளின் ஆதிக்கம் அதிகமானது. 1970களின் தொடக்கத்தில் மாட்டிறைச்சி முதலான இறைச்சி வகைகளை ஜப்பானிய மக்கள் விரும்பி சாப்பிடத் தொடங்கினார்கள். இதுபோன்ற தீவிர இறைச்சியின் சுவை கொண்ட வகைகளை சாப்பிட்டுப் பழகியதால், நீலத்துடுப்பு சூரைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் விரும்பத் தொடங்கினார்கள்.

இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டன ஜப்பானிய விமான நிறுவனங்கள். ஜப்பானிலிருந்து எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவுக்குச் செல்லும் விமானங்கள், திரும்பி வரும்போது காலியாகத்தான் வரவேண்டும். அப்போது அமெரிக்காவில் வாங்குவதற்கு ஆளில்லாமல் காத்துக்கிடந்த உறைந்த நீலத்துடுப்பு சூரைகளைப் பார்த்த விமானசேவை அதிகாரிகள், அவற்றை சரக்கு விமானங்களில் நிரப்பிக் கொண்டார்கள். “ருசியான உணவு” என்று இதை ஜப்பானில் கொண்டுபோய் இறக்கினார்கள். விளம்பரங்கள் தொடங்கின. இதுபோன்ற தீவிர ருசி கொண்ட இறைச்சிக்கு ஏற்கனவே கொஞ்சம் பழகியிருந்த ஜப்பானியர்கள் இந்த மீனை விரும்பி சாப்பிடத்தொடங்கினார்கள். ஜப்பானின் பிரபலமான பச்சைமீன் உணவான சூஷி (Sushi) வகைமையில், நீலத்துடுப்பு சூரைக்கான குறிப்புகளும் சேர்ந்துகொண்டன.

அதே காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களால், பல ஜப்பானிய நிறுவனங்கள் அமெரிக்காவில் தொழில் தொடங்கின. அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஜப்பானியர்களுக்காக பல சூஷி உணவகங்கள் தொடங்கப்பட்டன.  ஒரு மாறுதலான ருசியைத் தேடி, காலப்போக்கில் இந்த உணவகங்களில் அமெரிக்கர்களும் சாப்பிடத் தொடங்கினார்கள். சூரை முதலான பல்வேறு வகைக் கடல் உணவுகள் அமெரிக்காவில் பிரபலமடைந்தன.

அமெரிக்காவிலிருந்து கிளம்பி ஒரு சாதாரண சரக்கு மீனாக ஜப்பானில் சென்று இறங்கிய நீலத் துடுப்பு சூரை, இரண்டு மூன்று வருடங்களிலேயே ஒரு ஆடம்பர உணவாக, தலைக்குப் பின்னால் ஒளிவட்டத்தோடு மீண்டும் அமெரிக்காவுக்கு வந்து இறங்கியது. ஜப்பானிய முறையில் தயாரிக்கப்பட்ட பச்சை மீனை உண்பது அமெரிக்கர்களின்  புதிய கேளிக்கையாக மாறியது! ஒவ்வொரு சிற்றூரிலும் சூஷி உணவகங்கள் முளைத்தன.

 

அமெரிக்காவிலும் ஜப்பானிலும் இருக்கும் எண்ணற்ற சூஷி உணவகங்களுக்கு அனுப்புவதற்காக அதிகமான அளவில் நீலத்துடுப்பு சூரைகள் தேவைப்பட்டன. சந்தையின் தேவையைப் புரிந்துகொண்ட நிறுவனங்கள், தொழில்நுட்ப முன்னேற்றம், ராட்சத இயந்திரங்கள் என்று எல்லாவற்றையும் இறக்கி, கடலில் உள்ள எல்லா நீலத்துடுப்பு சூரைகளையும் வேட்டையாடும் அசுர முயற்சியில் இறங்கின.

தேவை அதிகமாக அதிகமாக, நீலத்துடுப்பு சூரையின் விலையும் அதிகரித்தது. அதிகரிக்கிற விலை தேவையை இன்னும் அதிகரிக்க, ஒரு மீளா சுழற்சி உருவானது. அளவுக்கு அதிகமாகப் பிடிக்கப்படுவதால் மீன்களின் வரத்து குறையத் தொடங்கியது. இது விலையை இன்னும் ஏற்றிவிட்டது!

2020 நிலவரத்தைப் பொறுத்தவரை அரைகிலோ நீலத்துடுப்பு சூரையின் சராசரி விலை 15,000 ரூபாய்! உலகளாவிய சூரை சந்தையின் சராசரி மதிப்பு 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள்! 1950ல் இருந்த அளவோடு ஒப்பிடும்போது, 2016 காணப்பட்ட நீலத்துடுப்பு சூரைகளின் எண்ணிக்கை, 50க்கு ஒன்று என்ற அளவுக்கு சரிந்திருக்கிறது. இது எத்தனை மடங்கு வீழ்ச்சி என்று நாம் கணக்குப் போட்டுக்கொள்ளலாம். 

இந்த மீன் அழிந்துவரும் விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக உலகளாவிய சட்ட வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த மீனுக்கான் தேவை குறையவில்லை. ஆகவே இது நேரடி மீன்பிடித் தொழில் என்ற இடத்திலிருந்து சட்டவிரோத மீன்பிடித் தொழில் என்ற இடத்துக்கு நகர்ந்திருக்கிறது! உணவுக்கான ஒரு மீன் இனம், சந்தையின் தேவைகளுக்காகப் பண்டமாக மாற்றப்பட்டதால் நடந்த சீர்கேடு இது. இதை Tragedy of Commodification என்று அழைக்கிறார்கள் வல்லுநர்கள்.

மனிதர்களால் சந்தைப்படுத்தப்பட்டு, அதனால் வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கும் மீனின் கதை இது. தனது அறிவுத்திறனால் மனிதர்களின் புரிதலுக்கே சவால்விடும் ஒரு கடல்விலங்கு உண்டு. அப்படியென்ன புத்திசாலி விலங்கு அது?

தொடரும்…

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close