தொடர்கள்

காகங்கள் கரையும் நிலவெளி;14 – சரோ லாமா

தொடர் | வாசகசாலை

“A pure water is the best champagne in the world.” – Anu Aggarwal 

பக்கத்து வீட்டுப் பெண்ணோ அல்லது பாலிவுட் நடிகையோ எப்போதும் என்னை வசீகரிப்பது அவர்களுடைய அழகோ அல்லது உடல் வசீகரமோ அல்ல. அவர்கள் வாழும் அல்லது எதிர்கொள்ளும் வாழ்க்கைதான். அப்படித்தான் எதையோ தேடப்போய் எதிர்பாராமல் அனு அகர்வாலின் நினைவுக் குறிப்புப் புத்தகம், ”The Anusual: Memoir Of A Girl Who Came Back From The Dead” எனக்கு வாசிக்கக் கிடைத்தது.  நான் சமீபத்தில் வாசித்த மிக நல்ல புத்தகங்களில் ஒன்று.

இம்மீச்சிறு மானுட வாழ்வில், இமயமலையின் உயரத்தையும் இந்துமாக்கடலின்
ஆழத்தையும் ஒரு சேரக்கண்ட ஒரு பெண்ணின் அசாத்திய வாழ்வனுபவம் அனு அகர்வாலினுடையது.  ‘’ஒருவருக்கு இளம் வயதிலோ அல்லது அதற்குப் பிறகோ கிடைக்கும் அளவுகடந்த புகழ் என்பது அவருடைய ஆன்மாவைப் பாழாக்கிவிடும்’’ என்பது அனு அகர்வால் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம்.

ராஜஸ்தானிலிருந்து டெல்லிக்கு குடிபெயர்ந்த குடும்பம் அனு அகர்வாலுடையது. ஏழு வயதிலிருந்து கதக் நடனம் கற்றவர் அனு. டெல்லியில் அவர் படித்த கல்லூரி சீனியர்
ஒருவர் மூலமாக ஆதித்யா என்பவரின் நட்பு கிடைக்கிறது. ஆதித்யா ஒரு தொழில்முறை
புகைப்படக்காரர். ஆதித்யாவின் அப்பா ஓவியர். சினிமா ஆர்வலர். அபூர்வ ஓவியங்கள், கலைப்பொருட்கள், அரிதான தாவரங்கள் என கலைச் செழுமையோடு அலங்கரிக்கப்பட்ட மும்பையிலிருக்கும்  ஆதித்யாவின் அப்பா வீட்டில் அனு தன்னுள்ளிருக்கும் கலைஞனைக் கண்டடைந்ததாக நினைவு கூர்ந்திருக்கிறார். ஆதித்யா அப்பாவுக்கு வரும் திரைப்பட விழா அழைப்பிதழ்களைப் பயன்படுத்தி மும்பையில் அப்போது நடந்த சத்யஜித் ரே திரைப்பட விழாவுக்கு ஆதித்யா அனு அகர்வாலை கூட்டிச் செல்கிறார். அங்கேதான் அனுவுக்கு பாலிவுட்டின் ஜாம்பவான்களின் முதல் அறிமுகம் நிகழ்கிறது.

அதற்கும் முன்பே அனு அகர்வாலுக்கு நிகழ்ந்த காதலைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். ஆதித்யாவின் நண்பர் ரிக். ஆங்கிலோ இந்தியர். ஜாஸ் இசைக்குழு ஒன்றை மும்பையில் நடத்தி வந்தார். ஆதித்யா அனுவை ரிக்-குக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த முதல் அறிமுகத்தின்போதே கோகைன்-னுக்கு அடிமையான டிரம்மர் ரிக்கின் இதயம் அவரது ட்ரம்மை விட அதிவேகத்தில் அதிர்கிறது. அந்த இதயத்துடிப்பின் வேகத்தினூடே ரிக்-கின் மனம் கேட்கிறது, ‘யார் இந்தப் பெண்?’  பின்னாளில் விளம்பர மாடலாகி கோத்ரெஜ் மார்வல் சோப்பு விளம்பரத்தில் நடித்த அனுவைப் பார்த்து இந்தியா முழுக்க அந்தக் கேள்வியை கேட்டது, ‘’யார் இந்தப் பெண்?’’

ஒரு வாரம் மும்பையில் தங்க வந்த அனு, ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கேயே தங்குகிறார். அவருக்காக டெல்லியில் ஒரு வேலை காத்திருக்கிறது.  அவர் படிக்கும்போதே, பெண்கள் முன்னேற்றத்துக்கான குழுவை நிர்வகிக்கும் ஜெர்மன் என்ஜிஓ-வில் கிடைத்த வேலை அது. ஆனால் ரிக்கின் காதல் அனுவை டெல்லி செல்ல அனுமதிக்கவில்லை. ‘’ஒரு வளர்ந்த மனிதன் எனக்காக, என்னை விட்டுப் போகாதே என்று என் முன்னால்  அழுவதை என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் ரிக்-கின் உணர்வுப்பூர்வமான அன்பு என்னைக் கட்டிப்போட்டுவிட்டது” என்று அந்தக் காதலை நினைவு கூர்கிறார் அனு அகர்வால்.

அந்த கோத்ரேஜ் சோப்பு விளம்பரத்துக்குப் பிறகு அனு, இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் மாடலாக ஆகிறார்.  பத்திரிகைகளின் அட்டைப் படங்களை அலங்கரிக்கிறார். 1988ஆம் வருடம் Society Magazine இந்தியாவின் முதல், ‘சூப்பர் மாடல்’ என்று அனுவைப் புகழ்ந்து எழுதுகிறது. அனு அகர்வாலின் விரிவான பேட்டியும் அதே இதழில் வெளியாகிறது. பணம், புகழ், மீடியா வெளிச்சம், உலகளாவிய மாடலிங் விளம்பர வாய்ப்புகள் , இத்யாதி இத்யாதி…  பழுப்பு நிறமும் வசீகரக் கண்களும் கொண்ட அனு அகர்வால் மும்பைக்கு வந்து ஆறே மாதத்தில் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல், இந்திய அளவில் அடைந்த புகழ் என்பது அசாத்தியமானது. டெல்லிக்குத் திரும்பிப் போகவோ, என்.ஜி.ஓ வேலையில் சேரவோ, அல்லது ஒரு கதக் நடனக்காரியாக வேண்டும் என்கிற தன் இளம் வயதுக் கனவை நிறைவேற்றவோ காலம் அல்லது அவரது வாழ்க்கை அனு அகர்வாலை அனுமதிக்கவில்லை. அவருக்காக வேறு ஒன்று காத்திருந்தது. அவரே எதிர்பார்க்காத அல்லது எதிர்ப்பார்த்திருக்க முடியாத ஒன்று. அதுவே வாழ்வின் முடில்லாத வசீகரம் நிரம்பிய புதிர் அல்லவா?

1989 ஆம் வருடம். ஒரு நண்பர் மூலமாக இயக்குநர் மகேஷ் பட்-டைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது அனுவுக்கு. பெரிய வாய்ப்பு. மகேஷ் பட் சினிமாவில் நடிக்க விருப்பமா என்று நேரடியாகக் கேட்கிறார். அப்போது இருபது வயதைத் தொட்டிராத அனு தீர்மானமாக விருப்பமில்லை என்று சொல்கிறார்.  ”பாலிவுட் வணிகத் திரைப்படங்களில் அப்படி என்ன புதுமை இருக்கிறது? பணக்கார அப்பாவின் இளமையான, அழகான முழு முட்டாளாக ஹீரோயின் இருப்பாள். அவள் செய்வதெல்லாம் காதலனை உருகி உருகிக் காதலிக்க வேண்டும்.  ஐந்தாறு பாடல்களுக்கு தன் உடற்செழுமையைக் காட்டி நடனமாடவேண்டும். ஒன்று அப்பாவுக்கு அடிமை அல்லது காதலன் / கணவனுக்கு அடிமை. சுயம் என்பதையோ அல்லது சுயமரியாதை என்பதையோ அறியாதவர்கள் இந்த அழகான பாலிவுட் ‘கதாநாயகி’ முட்டாள்  பெண்கள். அவர்களில் ஒருத்தியாக இருப்பதற்கு நான் விரும்பவில்லை. எனக்கு நடிக்க விருப்பமில்லை”, அனு தீர்மானமாக சொல்லிவிட்டார். மகேஷ் பட், சரி மனம் மாறினால் என்னை தொடர்பு கொள், என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால் மகேஷ் பட்-டை அனு தொடர்பு கொள்ளவேயில்லை. பிரான்சின் பிரபலமான விளம்பர ஏஜென்சி அவரை மாடலிங் செய்யத் தேர்ந்தெடுத்திருந்தது. அதற்கான தயாரிப்புகளில் இருந்து பின்னர் பாரிஸ் சென்றுவிட்டார் அனு.  ஒரு வருடம் சென்ற பிறகு மகேஷ் பட் மீண்டும் அனுவைத் தொடர்பு கொண்டார். ”ஒரு கதை எழுதியிருக்கிறேன். உன்னுடைய கதைதான். நீதான் அதில் நடிக்க வேண்டும். நீ நடிக்கவில்லை என்றால் இந்தப் படத்தை எடுக்கமாட்டேன். இந்தக் கதாபாத்திரத்தை உன்னைத் தவிர வேறு யாராலும் உள்ளார்ந்த அழகுணர்ச்சியுடன் உணர்வுப்பூர்வமாகச் செய்ய முடியாது.” அனுவுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் உடனே சரி என்று ஒப்புக்கொள்ளாமல், “மதியம் அழைக்கிறேன் சார்” என்று போனை வைத்துவிட்டார்.

மகேஷ் பட்- டைச் சந்திக்க படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றார் அனு. ”ஸார், இன்னும் மூன்று மாதத்தில் பாரிஸ் செல்ல வேண்டும். மாடலிங் ஒப்பந்தம் இருக்கிறது. மன்னிக்கவும், உங்கள் படத்தில் என்னால் நடிக்க முடியாது” என்று சொன்னார் அனு.  மகேஷ் அமைதியாகச் சொன்னார், ”பரவாயில்லை. மூன்று மாதத்திற்குள் படத்தை முடித்துவிடுகிறேன். நீ பாரிஸ் செல்வதில் ஏதும் பிரச்சனை வராது.”  அதன் பிறகு அனுவுக்கு என்ன சொல்லி பட வாய்ப்பை நிராகரிப்பது என்று தெரியவில்லை, ஒரு வழியாக ஒப்புக்கொண்டார். Aashiqui – அனு அகர்வாலின் முதல் பாலிவுட் படம். அவர் அரைகுறையாக ஒப்புக்கொண்ட வாய்ப்பு. அந்த வாய்ப்பு அவரது வாழ்க்கையை அடியோடு மாற்றிப் போட்டது.

அதன் பிறகு ஒரே இரவில் அவர் புகழ் பெற்ற பாலிவுட் நடிகையாகிவிட்டார். இந்த வாக்கியம்
கிளிஷே என்றாலும் உண்மையில் நிகழ்ந்தது அதுதான். பின்னர் அவர் ஒப்புக்கொண்ட
படங்களில் ஒரு சில படங்கள் தவிர்த்து பெரிதாகப் பேசப்படவில்லை. தமிழில் மணிரத்னம் இயக்கத்தில், ‘திருடா திருடா’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.

“கொஞ்சம் நிலவு,
கொஞ்சம் நெருப்பு,
ஒன்றாக சேர்ந்தால்,
எந்தன் தேகம்…”

என் பதின் பருவத்தில் நான் அதிகம் கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான் பாடல். இளையராஜா ரசிகனான என்னைப் பித்துப் பிடிக்க வைத்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல். கல்லூரி விடுதியில் தூர்தர்ஷனில் அந்தப் பாடலைப் பார்த்துவிட்டு ஒளிமயமான அதன் கனவுத்தன்மையில் மூழ்கிக் கிடந்த இரவுகள் ஏராளம். கல்லூரிக் காலங்களில் நண்பன் செந்தில் வீட்டுக்குச் செல்வதற்கு அபோது இரண்டு முதன்மைக் காரணங்கள். ஒன்று ஸ்டார் மூவிஸில் படங்கள் பார்ப்பது. இன்னொன்று, எனக்குப் பிடித்த பாடல்களின் காட்சி அழகியலைக் கண்டு களிப்பது. அனு அகர்வால் என்னை அதிகம் வசீகரிக்கவில்லை, [நான் அப்போதும் இப்போதும் ‘சில்க் ஸ்மிதா’ ரசிகன்]. ஏ ஆர் ரஹ்மான், மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம் என மூவரின் கூட்டுழைப்பு என் பதின் பருவ மனதின் காட்சிப்பூர்வ அழகியலை, கனவுத்தன்மையை மெருகேற்றியது என்பதை இப்போது  மகிழ்ச்சியுடன் நினைத்துக்கொள்கிறேன்.

நூலில் எனக்குப் பிடித்த நான் ரொம்பவும் ரசித்த ஒரு பகுதி உண்டு. Aashiqui படம் வெளியாகி பெரிய பாலிவுட் நடிகையாகிவிட்ட பின்னர் ஒருநாள் Mg Stanley குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகி ஒருவர் அனுவை இரவு விருந்துக்கு அழைத்துச் செல்கிறார். விஷய விடிய நல்ல உணவு, மது, நடனம் மற்றும் கொண்டாட்டம். பின்னிரவில் அந்த நிர்வாகி அனுவை தனது வெள்ளை மெர்சிடஸ் பென்ஸ் காரில் திரும்ப வீட்டுக்கு அழைத்துவந்து விடுகிறார். ஜூஹூவில் தனது வாடகை வீடு இருக்கும் மூன்றாவது தளத்துக்குச் சென்று தனது பையில் சாவியைத் தேடுகிறார் அனு. சாவி இல்லை. மெல்லிய இருளில் தனது பூட்டிய வீட்டுக்கு முன்னே அனு நின்று கொண்டிருக்கிறார். என்ன செய்வது? மாற்றுச் சாவி இல்லை. வீட்டு முதலாளி வெளியூரில் இருக்கிறார். ‘’அந்த அழகான மரக்கதவு என்னை விழுங்கி என்னறைக்குளே என்னை  அனுப்பிவிடாதா?  அல்லது வெளியே இருக்கும் நான் மறைந்து உள்ளே எனது படுக்கையறையில் சென்று வீழ முடியாதா? இதெல்லாம் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.’’ ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

அப்போது அனுவின் நண்பர் தத்துவார்த்தமாக ஒன்றைச் சொல்கிறார்,

” நடக்கத் தேவையில்லாதவை எவையோ, அவை நடப்பதேயில்லை.”

பின்னர் அனுவின் நண்பர் தாஜ் ஹோட்டலுக்கு அவரை அழைத்துச் செல்கிறார். அதிகாலை
வானில் ஒரு விண்மீன் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. அறையை கவனமுடன் தேர்ந்தெடுத்து அனுவுக்கு ஆரஞ்சு பழச்சாறு பருகத் தருகிறார். அனுவை உறங்கச் சொல்லிவிட்டு மற்ற சராசரி ஆண்களைப்போல் எந்த விதத்திலும் உடல்ரீதியாகத் தொந்தரவு செய்யாமல் அல்லது அதற்கான முஸ்தீபுகளில் இறங்காமல் இன்னொரு தனித்த படுக்கையில் நண்பர் உறங்கிப்போகிறார்.  அனு அந்த நிகழ்வை இப்படிச் சொல்கிறார். ”அந்த தினம், அந்தக் கணம் என் நண்பன், நெருங்கிய நண்பனாக என் உள்மன சுவரில் என்றைக்குமாகப் பதிந்துபோனான்.’’

1990 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமாகி மிதமிஞ்சிய புகழை குறுகிய நாளில் அடைந்து பின்னர் படங்கள் சரியாக அமையாமல் திடீரென்று ஒருநாள் அனு அகர்வால் எல்லாவற்றையும் துறந்து வெளியேறுகிறார். பணம், புகழ், வெளிச்சம், மாயக்கவர்ச்சி, மாடலிங் மற்றும் பாலிவுட் தொடர்புகள், அதன்வழியே கிடைத்த அதிகாரத் தொடர்புகள் என தனக்குக் கிடைத்த எல்லாவற்றையும் விட்டு. அது ஓர் வெளியேற்றம் மட்டுமல்ல. விட்டு விடுதலையாதல். ஆன்மாவைச் சூழ்ந்திருக்கும் லௌகீக இருளை விட்டு அகத்தின் வெளிச்சத்தை நோக்கி நகர்தல்.

எல்லாவற்றையும் விட்டுவிட்டு யோகா கற்றுக்கொள்ள பீகார் செல்கிறார் அனு. யோகா
ஆஸ்ரமத்தில் அனுவிடம் நேர்முகத் தேர்வில் கேள்வி ஒன்று கேட்கப்படுகிறது. ”புகழ் பெற்ற மாடலிங், நடிகை அனு ஏன் யோகாவைத் தேர்ந்தெடுத்தீர்கள்?” அனு அதற்குப் பதில் சொல்கிறார். ”மனிதர்கள் தனது மூளையின் முழுபலத்தில் இரண்டு சதவீதத்தை மட்டுமே தம் வாழ்நாளில் பயன்படுத்துகிறார்கள். நான் என் மூளையின் முழுமையையும் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக மட்டும் யோகாவை நான் தேர்ந்தெடுத்தேன்.” அனுவின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வரிசையில் இரண்டாவது இருந்தது.

யோகாஸ்ரமத்தில் ஆரம்பத்தில் அனுவுக்கு கொஞ்சமும் ஒத்துப்போகவில்லை. முதல் நாள்
அனுவுக்கு தங்க ஒதுக்கப்பட்ட அறை சுத்தமாக இல்லை. முடை நாற்றத்துடன் ஒட்டடை
படிந்து சகிக்க முடியாத சூழலோடு இருந்தது அறை. நானே சுத்தம் செய்துகொள்கிறேன் என்று நிர்வாகத்திடம் கேட்டபோது ஆசிரமத்தில் எல்லாவற்றுக்கும் என ஒதுக்கப்பட்ட நேரம் உண்டு. நாளை காலை சுத்தம் செய்யப் பயன்படும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனப் பதில் வருகிறது. ஓரிரு வாரங்களில் ஆசிரமத்தை விட்டு வெளியேற முடிவு செய்கிறார். அப்போதுதான் அந்த ஆசிரமத்தின் ஸ்வாமிஜியைச் சந்திக்கிறார். அவரது வார்த்தைகள் மற்றும் அவரது உறுதியான, தவிர்க்கவே முடியாத இருப்பு அனுவின் மனதை மாற்றுகிறது. அனு தனது முடிவை மாற்றிக்கொள்கிறார். மாதங்கள் செல்லச் செல்ல கங்கைக் கரையில் இருக்கும் அந்த ஆசிரம சூழலும் யோகாவும், தன்னை அறிதலின் பயணத்தை நோக்கி அனுவைத் தள்ளுகிறது. தனது கடந்தகால கூச்சல்களை ஒதுக்கி அனு, தன் சுயத்தை நோக்கிப் பயணிக்கிறார். ஸ்வாமிஜியுடன் தாந்த்ரீக செக்சில் ஈடுபடுகிறார். [புத்தகத்தில் மிகவும் கவித்துவமாக எழுதப்பட்ட பகுதி அது.] சுவாமிஜியுடனான உறவு அவரை சந்யாசத்தை ஏற்றுக்கொள்ள வைக்கிறது. பின்னர் அதுவே அனு ஆசிரமத்தை விட்டு வெளியேறக் காரணமாகவும் அமைகிறது.

1999 – ஆம் ஆண்டு. காந்தியின் பிறந்தநாளுக்கு முந்தைய தினம். அமெரிக்கத் தூதரக கவுன்சில் ஜெனரல் அழைப்பின்பேரில், தனது அமெரிக்க ஆர்க்கிடெக் நண்பருடன் அனு இரவு விருந்துக்குச் செல்கிறார். அது மும்பையின் கன மழைக்காலம்.  விருந்து முடிந்த பின் அதிகாலையில் இருவரும் வீடு திரும்புகிறார்கள். காந்தி பிறந்த தினத்தில் நிகழும் கடுமையான காவல்துறை கட்டுப்பாடுகள், வாகன சோதனைகள் எல்லாம் முடிந்து வீட்டை நோக்கிப் போகையில் அவர்களின் கார் விபத்துக்குள்ளாகிறது. கற்பனை செய்யமுடியாத காயங்களுடன் உடல் உருக்குலைந்து, மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் அனு. உடல் முழுவதும் எலும்பு முறிவுகள். உருக்குலைந்த உடலின் பக்கவாதம். மருத்துவர்கள் பிழைப்பது கடினம் என்று சொல்லிவிட அனு 29 நாட்கள் சுயநினைவிழந்து மருத்துவமனையில் கிடந்தார். யதார்த்த வாழ்வின் உச்சபட்ச நாடகீயத் தருணம்.

அனு அந்தக் கொடூர விபத்திலிருந்தும் கோமாவிலிருந்தும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மீண்டு வந்தார். ஆனால் மூன்று வருடங்கள் அவர் படுக்கையிலேயே இருக்க வேண்டும் ஒரு வெட்டுண்ட காய்கறியைப் போல. கடந்த கால வாழ்வின் நினைவின் மிச்சங்கள் ஏதும் இல்லை. பால்ய நினைவுகள், பள்ளி, கல்லூரி வாழ்வு, வாழ்ந்த வாழ்வின் ஒழுங்கு மற்றும் ஒழுங்கின்மைகள் என மூளையின் நியூரான் பதிவுகள் இல்லாமல் போய்விட்டன. நினைவுகளை மீள மீட்பதற்கான வழிமுறைகளை நவீன மருத்துவம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

உடல் இருக்கிறது, உயிர் இருக்கிறது. ஆனால் எதுவும் கட்டுப்பாட்டில் இல்லை. தன்னைச் சுற்றி
என்ன நடக்கிறது தெரியவில்லை. அனு இருந்தார், இல்லாமல் இருந்தார். மேலோட்டமாக இது ஒரு குழப்பம் நிறைந்த தருணம் ஆனால் அனு அந்த அனுபவத்தை இப்படி எழுதுகிறார். ”நட்சத்திரங்களுடன் பயணிக்கும் விண்கலத்தைப் போல நான் இருந்தேன். சூரியன், சந்திரன், இன்ன பிற விண்மீன்களுடன் ஒளிவட்டப் பாதையில் நான் பிணைக்கப்பட்டிருந்தேன். எனது இருப்பு அதற்கும் மேலே சுடர்விட்டுக்கொண்டிருந்தது. பாரங்கள் இல்லாத சுயத்தின் இருப்பின் மகிழ்ச்சியை உணர்கிறேன். நான் கருணையோடோ அல்லது கருணையின்மையாலோ இந்தப் பிரபஞ்சத்தின் முடிவின்மையுடன் கலந்து போக விதிக்கப்பட்டேன். அந்த அனுபவம் வார்த்தைகள் சொல்ல முடியாத எளிமையும் கனமும் கொண்டது. எல்லா இருப்புகளுடன் எனது பிணைப்பை உணர்ந்தேன். நாமெல்லாரும் ஒன்றே. அன்பு நமது பொது இருப்பு. நம்மைச் சுற்றி அன்பு நிறைந்திருக்கிறது காற்றைப்வ்போல.”

Anusual: Memoir of a Girl Who Came Back from the Dead by Anu Aggarwal

***

இந்தப் புத்தகக் காட்சியில் வாங்கிய குறைவான நூல்களில் கமலதேவியின் ‘கடல்’ சிறுகதைத் தொகுப்பும் ஒன்று. இதற்கு முன் சில கதைகளை இணைய இதழ்களில் படித்திருந்தாலும் தொகுப்பாகப் படிப்பது வேறு ஒரு அனுபவத்தை எனக்குத் தந்தது.

கமலதேவியின் கதை சொல்லல் முறை நிதானமான நடையைக் கொண்டது. உணர்ச்சித் தீவிரங்களோ உறவு மோதல்களின் பெருவெடிப்புகளோ இல்லாதது. மனம் ஆழ்ந்து கனத்துக் கிடக்கும்போழ்தில் திடீரென வானில் வெளிப்படும் கீற்று நிலவைப் போல கமலதேவியின் சொற்கள் மேலெழுந்து ஒரு சித்திரத்தை உருவாக்குகின்றன. அந்தச் சித்திரம் வாழ்வின் மாயாஜாலச் சித்திரமாக தோற்றம் கொள்கிறது. மனித மனம் கொள்ளும் விசித்திரங்கள், இயலாமைகள், இயலாமையை மீற விரும்பும் மனித இருப்பு, குறிப்பாக பெண் இருப்பு இந்தக் கதைகளை முக்கியானதொன்றாக்குகின்றன. ‘அவரவர் மனத்தின் இயலாமைகளை மீறவே சக மனிதர்களிடம் நாம் நடித்துக்கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணம்’ கமலதேவியின் கதைகளைப் படிக்கையில் எனக்குள் உறுதிபெற்று நின்றது.

கச்சிதமான சொற்களால், கச்சிதமான உணர்வெழுச்சியைப் பின்னல் போல நெய்து இத்தொகுப்பில் சில பிரமாதமான கதைகளை அவரால் எழுத முடிந்திருக்கிறது. குறிப்பாக தொகுப்பின், ‘தையல்’ கதையைச் சொல்லலாம். அறுபதைக் கடந்த பின் மனிதர்களுக்குள் எழும் மூர்க்கம் குறிப்பாகத் தன் அடுத்த தலைமுறை மாந்தர்கள் மீது எழும் மூர்க்கத்தைப் பின்னணியாக வைத்து சிறப்பாகச் சொல்லப்பட்ட கதை இது. வாழ்வின் நடைமுறை சாத்தியங்கள் மனிதர்களைப் பிரித்து வைக்கும்போது அவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திக் கொள்ளும் அன்பும், வன்மத்தை நிதானமாக வெளிப்படுத்தும் கோபமும் அழகாக வெளிப்படுகிறது இந்தக் கதையில். கீரை விற்பவரின் மயில் குரலை எழுத்தில் அதே வாசனையோடும் வாஞ்சையோடும் கமலதேவியால் சொல்ல முடிந்திருக்கிறது.

பசுங்கீரை இலைகள் மூங்கில் முறத்தில் நிறைய நிறைய அந்த வாழ்ந்து செறிந்த மனிதர்களின் வார்த்தைகள் அதன் பின்னாலிருக்கும் காயங்கள், முன் முடிவுகள், ஏமாற்றங்கள்,
இயாலாமைகள்  என எல்லாமும் நம் முன்னே குவியத் தொடங்குகின்றன. ”புளிச்சக்கீரையில் கிடக்கிற வெங்காயம் அமுதமில்ல”, ”சும்மா பழுத்த பலாப்பழத்தை இல்லைங்காதே”, ”பாம்போட ரோஷம்தான் அதனோட விஷம் தெரியுமா? அதனாலதான் சிவனே கழுத்தில் போட்டிருக்கான் ” – செறிவும் அர்த்த அழகுணர்ச்சியும் நிரம்பிய உரையாடல்கள். அதன் வழி வெளிப்படும் அவரவர் கோணங்கள், குணச்சித்திர வாழ்வனுபவங்கள் நிச்சயம் வாசகனைப் புதியதொரு  வாசிப்பு அனுபவத்தால் நிரப்பும் என்று நான் நம்புகிறேன்.

‘பாம்பின் கால் பாம்பறியும்’ என்றொரு சொல்வழக்கு உண்டு ஊரில். மனிதர்களை மனிதர்களே அறிய முயலும் இந்தத் தொடர் ஓட்டத்தில் வெளிப்படும் அன்பும், அன்பு அதிகமாகிக் கசிந்துருகும் விஷமும். ஐம்பது பேர்கள் சூழ்ந்திருக்க அவர்களின் வலிமை முன்பு ஒன்றுமில்லாமல் போகக்கூடிய ஒரு நல்ல பாம்பு, துளி பயமில்லாமல் அந்த மனிதர் கூட்டத்தை [தன் விஷத்தை இறுகப் பற்றிக்கொண்டு] கடந்துபோகும் சித்திரத்தை கமலதேவியின், ‘தையல்’ என்ற கதை எனக்களித்தது என்றே சொல்ல வேண்டும். யாருமில்லாத நிலவெளியில் ஊர்ந்து திரியும் பாம்புகளென மனித மனங்கள் அசைகின்றன.

கமலதேவியின் கதைகளின் ஆதார உணர்ச்சி பொங்கிப் பெருக்கெடுக்கும் நதியில்லை. மாறாக ஆழத்து நீரோட்டம் போல சலனத் தொடர்ச்சியுடன் முழுக்கப் பரவும் குளிர்ச்சி. எளிமையான வாக்கியங்கள், இடையிடையே ஒளிரும் அதன் அர்த்த சேர்மங்கள், அந்த அர்த்த சேர்மானங்கள் ஒருங்கிணைந்து உருவாக்கும் தோற்ற வெளி [LANDSCAPE] – ஒரே நேரத்தில் மனித மனங்களின் தோற்றப் பரப்பாகவும் மனித வாழ்வின் தோற்றப் பரப்பாகவும் விரிகிறது. வாழ்வின் பெருநிலப்பரப்பில் மனிதர்கள் வெறும் பகடைக்காய்தானோ? நானறியேன்.

தொகுப்பின் பெரும்பாலான கதைகள் தீர்மானமாக ஒரு முடிவை நோக்கி நகரும் கதைகள் அல்ல. வாழ்வின் சலனங்களை ஒரு எளிமையான மொழியில் எளிமையான விரிப்பில் சொல்லிப்போகும் கதைகள். பெண் மனத்தைச் சூழும் மாயக்கரங்களை விலக்கி விலக்கி தன் மென் இருப்பை இறுகப் பற்றிக்கொள்ளப் போராடும் பெண்களின் கதைகளாக இவை முடிவில் தோற்றம் கொள்கின்றன. ‘மயில்தோகை’ கதையில் படிக்காத, காதலித்து திருமணம் செய்த கணவனை விலக்கி காதலனுடன் மனதால் நெருங்க விழையும் பெண்ணின் மனப்போராட்டங்கள்தான் கதைக்களன். அதனூடே இளைய மகளை எந்தச் சலனமுமின்றி தத்துக்கொடுக்கும் பெண்ணாகவும் அவள் இருக்கிறாள். நாற்பத்தைக் கடந்த பின் ஆண்/பெண் உறவில் எழும் சிக்கல்கள், மனதை நிறைக்கும் பனிப்படலங்கள், நிறைவைத் தேடும் காமம் என பெண் மனதின் ஏற்ற இரக்கங்களோடு கதை பின்னப்பட்டிருக்கிறது. சரி தப்புக்கு அப்பால் ஆண் பெண் உறவின் சூட்சுமம் இருக்கிறது என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் என்று  தெரியவில்லை. ஆனால் மனதை இயக்கும் மாய நூல் எப்போது எந்தப் பக்கம் சரியும் என்று யாரால்தான் சொல்ல முடியும்?

உடன் போக்கு, கடல், பனிப்பொழிவு, மயில்தோகை எனப் பெரும்பாலான கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் பெண் மனதின் ஆழங்கள், விசித்திரங்கள், கடவுள் தன்மை கொண்ட பிசாசு ரூபம், இயலாமை என இவர் உருவாக்கும் பின்னல்கள் இந்தக் கதைகளை கவனமாக வாசிக்கக் கோருபவை. கொடார்ட் படங்கள் மட்டுமல்ல, கமலதேவியின் கதைகளும் கூட பெண் மனதின் அசலான ரூபங்களை அதன் அசலான கவிச்சியை நமக்குப் புரிய வைக்கும் என்பது இந்தத் தொகுப்பை நான் வாசித்த பின் உணர்ந்துகொண்டேன். கமலதேவியின்  இன்னபிற சிறுகதைத் தொகுப்புகளையும் வாசிக்க ஆவல் கூடுகிறது.

கடல் – கமலதேவி, சிறுகதைத் தொகுப்பு, வாசகசாலை வெளியீடு.

தொடரும்…   

 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close