சிறுகதைகள்

இத்யாதி காதல் – R.சேவியர் ராஜதுரை

சிறுகதை | வாசகசாலை

ஒரு சிரிப்போடு “இல்லைங்க” என்றேன்.

“ஆச்சரியமா இருக்குங்க! இருபத்தாறு வருசமா நம்ம திண்டுக்கல்லே இருக்கோம். இருந்தும் நம்ம பாத்துகிட்டது இல்லனா..ம்ம்..” உதட்டை சுழித்துவிட்டு கேட்டாள்.

“ஸ்கூல் எங்க படிச்சிங்க? வெளியூர்லயா!”

“இல்லைங்க. இங்கதான் டட்லில.”

“டட்லியா!” அவள் முகம் மாறியது.

“ஏங்க! என்னாச்சு?”

“இல்ல. அந்த ரவுடி ஸ்கூல்லயானு…”

“பொதுவா சொல்லுவாங்க. ஆனா உண்மையாலுமே அப்படியெல்லாம் இல்லைங்க!”

“எனக்கே பர்சனலா நடந்துருக்குங்க. நான் கான்வென்ட்ல லெவன்த் படிக்கிறப்ப ஆட்டோல தான் ஸ்கூலுக்கு போவேன். செம ஜாலியா இருக்கும். அந்த ஆட்டோக்கார அண்ணன, என் வீடு எங்கனு கேட்டு ஒரு டட்லி ஸ்கூல்காரன் அடிச்சு பெரிய பிரச்சனையாச்சு.  அப்பறம் நான் ஆட்டோல போக அப்பா வுடல. டெய்லியும் அப்பா வந்து விட்டுட்டு கூட்டிட்டு போவாரு. என் சுதந்திரமே அவனால போச்சு..”

“ஓ..”

“அதுனால எனக்கு டட்லி ஸ்கூல்னாலே பிடிக்காது. ஸாரி… ஆனாலும் ஜான்பால்னு பேர் வச்சுட்டு ஜான்பால் ஸ்கூல்ல படிக்காம டட்லி ஸ்கூல்ல படிச்சிருக்கிங்க போங்க”

சிரித்தாள்.

என்ன சொல்வதெனத் தெரியாமல் அசெளகரியமாக அவளைப் பார்த்தேன்.

நான் சங்கட்டப்படக்கூடாதென்பதற்காக பேச்சை மாற்றினாள்.

“இப்ப மதுரை ப்ரான்ச்ல கேசியரா இருக்கிங்களா!”

“ஆமாங்க. இன்னும் ஒரு வருசத்துல இங்க திண்டுக்கல்லுக்கே ட்ரான்ஸ்பர் வந்துரும்.”

“ம்ம்.. எத்தனை வருசம் Banking க்கு படிச்சிங்க?”

“மூனு வருசம்”

“நானும் ரெண்டு வருசம் படிச்சேன்… அப்பறம் கடுப்பாகி விட்டுட்டே”ன்னு சிரித்தாள்.

என்ன சொல்வதென தெரியாமல் நானும் சிரித்தேன்.

“நான் உங்கள மாறி நல்லா படிக்குறவ இல்லைங்க. ஆவரேஜ் தான்” என கையால் சைகை செய்துகொண்டே அழகான அவள் சொன்னாள்

“நானும் ரொம்பயலாம் படிக்கமாட்டேங்க!”

“டட்லில படிச்சப்பவே தெரிஞ்சது!” என வாயில் சிரிப்பை மறைத்துக்கொண்டு சொன்னாள்.

என் முகம் சோகமாக மாறியதும் நன்றாக சிரித்துவிட்டு ஸாரி ஸாரி என்றாள்.

அந்த ஸாரி கேட்கும் அழகில் கொலை செய்தாலும் மன்னிக்கத் தோன்றும்.

அந்த ஸாரியில் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டேன்.

ஹலோ ஹலோ என கையை அசைத்து நினைவிற்கு கொண்டு வந்தாள்.

“ஸாரிங்க! வேற எதோ யோசனையில…”

“டக்குனு திரும்பாதிங்க. அவங்க நம்மளயே பாத்துட்டு இருக்காங்க.”

ஒரு ஆர்வத்தில் திரும்பி பார்த்தேன். எங்கள் இருவரையும் தான் எங்கள் இரு வீட்டாரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“திரும்பாதிங்க னு சொன்னேன்ல!” என சற்றே கோபமாக சொன்னாள்.

“ஐயோ ஸாரிங்க!” என அவளின் அந்த கோபத்திற்கு என்ன செய்வதென தெரியாமல் பதட்டமானேன்.

“சரி விடுங்க” என சாதாரணமாக மாறினாள்.

எனக்கு இன்னும் பதட்டம் குறையவில்லை.

மீண்டும் ஸாரி கேட்டேன்.

அவளுக்கு என் நிலை புரிந்தது. மெல்ல புன்னகைத்தாள்.

“ஏங்க இவ்வளவு டென்சனாகுறிங்க! விடுங்க.அவ்வளவு பெரிய விஷயமில்ல.”

“ம்ம்ம்”

“சாப்புட போலாமா!”

“இல்ல பசிக்கலங்க.”

“இங்க இருந்தா அவங்க நம்மள பாத்துட்டே இருப்பாங்க. அப்படியே வெளிய சாப்புட போற மாறி போயிடலாம்.”

“ம்ம் ஓகேங்க!”

போனை எடுத்து தூரத்திலிருந்த அம்மாவிற்கு கால் செய்து பசிக்குது ரெண்டு பேரும் வெளிய போயிட்டு வந்தறோம் என கூறினாள்.

நானும் என் அம்மாவிடம் சொல்லலாமா என போனை வைத்து யோசிக்கும் பொழுது அதனைப் பார்த்து சிரி்த்து “எங்கம்மா சொல்லிடுவாங்க.வாங்க நம்ம போலாம்” என்றாள்.

போனை வைத்துவிட்டு அவள் பின்னே நடந்தேன்.

“எங்கே போலாம்?”. சூசையப்பர் கோயிலிலிருந்து வெளியேறிக் கொண்டே கேட்டாள்.

“ம்ம் இங்க பக்கத்துல”..யோசிக்கும் பொழுதே

“சாந்தி குளிர்பானம் போலாமா?”.. அவளே பதிலும் சொன்னாள்.

“ம்ம் சரிங்க. கொஞ்சம் நடக்கணுமே”..

“அட பரவால்லங்க வாங்க!”

வெளியே பிச்சைக்காரர்கள் வரிசையாக தட்டை நீட்டி பிச்சைக்கேட்டனர். அவள் என்ன நினைப்பாள் தருவதா வேண்டாமா என்ற குழப்பத்திலே அவளைப் பார்த்தேன்.

பக்கத்தில் இருந்த குதிரை வண்டியைப் பார்த்ததும் சிரித்தாள்.

“எனக்கு இந்த குதிரை வண்டியில போகணும்னு சின்ன வயசுலருந்து ஆசை. போலாமா!” ஒரு குழந்தையைப் போல கேட்டாள்.

ஏறி அமர்ந்தோம்.

“சாந்தி குளிர்பானம் போங்கணே!” அவளே ஆசையாக அவரிடம் பேசினாள்.

குதிரை வண்டியில் இருவரும் பக்கத்து பக்கத்தில் அமர்ந்திருந்தோம்.

அவள் அந்த சிறிய பயணத்தை அவ்வளவு ரசித்தாள். பின்னால் வரும் வாகனங்களைப் பார்த்தாள்.

அவள் சந்தோசத்தில் திளைப்பதைப் பார்த்ததும் எனக்கும் சந்தோசமாக இருந்தது.

செயின்ட் மேரிஸ் ஸ்கூலைக் கடந்தது.

அவள் சிரித்தாள்.

“என்னங்க?”

“இல்லங்க. டட்லி ஸ்கூல்ல படிச்ச “ஜான்பால்” செயிண்ட்மேரிஸை க்ராஸ் பண்றாருனு நினைச்சேன் என்றாள்.

அவள் மனது நோகக் கூடாதென்பதற்காக சிரித்தேன்.

சாந்தி குளிர்பானம் வந்ததும் இறங்கினோம்.  “வெய்ட் பண்ணுங்கணா வந்தறோம் திரும்ப சூசையப்பர் கோயில்லயே விட்ருங்க” என்றாள்.

அவர் சரி என்றார்.

சாந்தி வழக்கம்போல கூட்டமாய் இருந்தது. வெளியேயும் ஆட்கள் நின்றுகொண்டிருந்தனர்.

“ச்சே கூட்டமா இருக்கே! வெய்ட் பண்ணலாமா?” என்றேன்.

“ஏன் பரமசிவன்ல குடிக்கலாம்!”

“அங்கயா!” சற்று யோசித்தேன்.

“ஆமா வாங்க!” என உள்ளே நுழைந்தாள்.

சாந்தியும் பரமசிவனும் அருகருகில் இருக்கும் குளிர்பானக்கடைகள். சாந்தியில் கிடைக்கும் அத்தனையும் பரமசிவனிலும் கிடைக்கும். சாந்தி கூட்டமாக இருந்தாலும் வெளியே நின்று காத்திருந்து செல்வார்களே ஒழிய யாரும் பரமசிவன் கடைக்கு செல்லமாட்டார்கள்.

பரமசிவன் கடை அண்ணன் மகிழ்ச்சியாக இருவரையும் பார்த்து “என்ன சாப்புடுறிங்க!” என்றார்.

“எனக்கு ப்ரூட் மிக்ஸர்”

“எனக்கும்” என்றேன்.

எடுக்க சென்றார்.

ரேடியோவில், ”நான் குழந்தையென்று நேற்று நினைத்திருந்தேன் அவன் கண்களிலே என் வயதறிந்தேன்” என ’காதல்’ சந்தியா வெட்கப்பட்டுக் கொண்டிருந்தாள்.

“நான் படிக்கறப்பலாம் ’காதல்’ சந்தியா போட்ருந்ததுதான் யூனிபார்ம். இதோ இந்த படம் வரவும் ஸ்கூல் மானம் போகுதுனு உடனே அடுத்த வருசமே யூனிபார்ம பிங்க்கா மாத்திட்டாய்ங்க..”

“ம்ம் எனக்கும் நியாபகமிருக்குங்க”

ப்ரூட் மிக்ஸரும் அதோடே மரவள்ளி குச்சி சிப்ஸூம் வந்தது. அதுதான் சாந்தி குளிர்பானத்தில் பேமஸ். பரமசிவனிலும் தான்.

ப்ரூட் மிக்ஸரிலிருந்த ஐஸ்கிரீமை கிண்டிக்கொண்டே “காலேஜ் எங்க படிச்சிங்க” என்றாள்.

“திருச்சி ஜோசப்ல ங்க”.

ஐஸ்கிரீமை விட்டுவிட்டு என்னைப் பார்த்தாள். “ஜோசப்பா!”…

“என்னங்க !”

“ஒரு தடவை எங்க காலேஜ்ல நடந்த இன்டர்காலேஜ் காம்படீசன்க்கு வந்த உங்க ஜோசப் பசங்களோட சண்டை வந்து ப்ரதீப்னு எங்க காலேஜ் சேர்மன அடிச்சு அவனுக்கு சப்போர்ட் பண்ணினதால நாங்க சஸ்பென்ட் ஆனோம்.உங்களுக்கே தெரியும் ஒரு பொண்ணு சஸ்பென்ட் ஆனா என்ன நடக்கும்னு…வீட்ல திட்டு வாங்கி பெரிய பிரச்சனையாகி…”

“ம்ம்..”

அவள் ப்ரூட்மிக்சரையே ஸ்பூனால் கலக்கி எங்கோ பார்வையை அலையவிட்டாள்.

“ஏங்க சாப்புடுங்க” என்றேன்.

“ப்ரதீப். என் எக்ஸ் லவ்வர் ப்ரேக்அப் ஆயிடுச்சு” என்றாள். ஒரு வெற்றுப் புன்னகை செய்தாள்.

நான் அவளை வெறுமேன பார்த்தேன்.

“அவன மறக்க முடியாம கொஞ்ச நாள் கல்யாணம் வேணானு சொல்லியிருந்தேன். இப்பதான் மனசு மாறுச்சு. இல்லைனா எங்க வீட்ல இருபது வயசுலே பண்ணி வச்சிருப்பாங்க. இப்படி இருவத்தாறு வர விட்ருக்கமாட்டாங்க. இன்ஃபாக்ட் நீங்கதான் பர்ஸ்ட் நேர்ல பாக்குற மாப்ள.நீங்க யாரையாவது லவ் பண்ணிருக்கிங்களா ! ஏன்னா கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சுக்கறது நல்லது தான!”

“எனக்கும் நீங்கதாங்க பர்ஸ்ட்.”

“லவ்வரே இல்லையா.. ம்ம்ம்.. எப்படி இருக்கும். நீங்கதான் பேசவேமாட்றிங்களே! அப்படியே பேசுனாலும் “ஆமாங்க .. சாரி சாரி ,இல்லைங்கனு மட்டுந்தான பேசுறிங்க!”

“அப்படியெல்லாம் இல்லைங்க” என சிரிச்சுகிட்டே சொன்னேன்.

“அதுக்கும் இல்லைதானா!.. இல்லைங்கறத தவிர வேற எதாவது பேசுங்களேன் ப்ளீஸ்”

அவள் கண்களைப் பார்த்து “உங்களுக்கு என்னைய பிடிச்சிருக்கா!” என கேட்டுவிட்டேன்.

தன் வலக்கையை கன்னத்தில் வைத்து யோசிப்பது போல பாவனை செய்து பேசினாள்.

“ம்ம். குட் லுக்கிங். பாக்க ஸ்மார்ட்டா இருக்கிங்க. கவர்மென்ட் ஜாப். அளவா பேசுறிங்க. சாரி இல்லைங்க னு மட்டும் சொல்றிங்க.” சிரித்துக்கொண்டாள். ஐ லைக் யூ. என சிப்ஸை சாப்பிட்டுவிட்டு ப்ரூட் மிக்ஸ்ர் ஸ்பூனில் எடுத்து சாப்பிட்டுக்கொண்டே

“உங்களுக்கு என்னைய பிடிச்சிருக்கா!” என அப்ஸரா கேட்டாள்.

***

“அப்ஸரா… இந்தப் பெயரைத் தெரிந்துகொள்வதற்காகவே எத்தனை வருடம் காத்திருந்தேன்…! ஸ்கூல் படிக்கும்பொழுது இவள் ஆட்டோவை ஃபாலோ பண்ணி சைக்கிளில் செல்வேன். அந்த ஆட்டோக்கார அண்ணனிடம் இவளின் பெயர் மட்டும்தான் கேட்டேன்.

அவன் என்னை கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டான். என்னை திட்டிருந்தாலும் பரவாயில்லை. என் அம்மாவையும் சேர்த்து திட்டினான். கோபத்தில் அவனை அடித்துவிட்டேன். அதன்பிறகு இவள் கூட செல்லும் பெண் கூப்பிடுவதை வைத்தே இவள் பெயர், ’அப்ஸரா’ எனத் தெரிந்துகொண்டேன். ஆனால் அந்த ஆட்டோக்காரனை அடித்த பிறகு இவள் அப்பாவைக் கூட்டிவந்து விட, பின்பு இவளிடம் பேசவே வாய்பபில்லாமல் போனது.

பாலகிருஷ்ணாபுரம் பாலம் மாதிரி பாதியிலேயே நின்று போன காதல் என்று நினைத்தபொழுது திரும்ப இவளை காலேஜ் கல்ச்சுரலில் பார்த்தேன். இவள் பெயர் சொல்லி கூப்பிட்டுக்கொண்டே சென்றேன். அந்த ப்ரதீப்தான் எங்க காலேஜ் பொண்ண கூப்புடக்கூடாதுனு மிரட்டினான். அதுக்கு அவனை அந்த அடி அடிச்சிருக்க தேவையில்லைதான். ஆனால் அப்ஸராவ லவ் பண்றேன்னு சொன்னான். அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதற்காக அப்ஸராகிட்ட சாரி கேட்க நினைச்சேன். ஆனா அதுக்குள்ள எங்களை கேம்பஸ் விட்டே துரத்தி என்னை எங்கள் கல்லூரியில் சஸ்பென்ட் பண்ணி ஹாஸ்டலில் டிஸ்மிஸ் பண்ணி…

எனக்கு அப்பொழுது அதெல்லாம் கூட கஷ்டமாக இல்லை. இதோ என் எதிரில் அமர்ந்து, “உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” எனக் கேட்டாளே இவள் எனக்கில்லை என்பதுதான் கஷ்டமாக இருந்தது.

கல்லூரி முடிந்து அப்பாவும் ரிட்டயரான பிறகு வாழ்க்கையில கஷ்டப்பட அதைவிட நிறைய இருக்கிறதென அறிந்துகொண்டேன். ரொம்ப கஷ்டப்பட்டு படித்து எக்ஸாம் க்ளியர் பண்ணிணேன்.

நேற்று இதுதான் பொண்ணுனு அப்ஸராவின் போட்டோவை காட்டிய பொழுது என்னால் நம்பவே முடியவில்லை.

“நாளைக்கு சூசையப்பர் கோயிலுக்கு பொண்ணு குடும்பத்தோட வராங்க. நீ பொண்ணுகிட்ட தனியா பேசிப்பாரு. ரெண்டு பேருக்கும் ஓகேனா உடனே கல்யாணத்தை வச்சிக்கலாம்னு பொண்ணு அப்பாவும் சொல்லிட்டாரு.” னு அம்மா சொன்னபோது அப்ஸராவை நான் பார்த்து பேசக்கூடாதென ஒரு காலத்தில் அவள் அப்பா அவளை பள்ளிக்கு அழைத்து சென்று வந்தது நினைத்து சிரிப்பு வந்தது.

அவள் பின்னாடி பைத்தியமாக அவளுக்குத் தெரியாமல் சுற்றியது, அவள் பெயர் தெரிந்துகொள்ள ஆட்டோகாரனை அடித்தது, அவள் லவ்வர் என்பதற்காகவே ஒருத்தனைப் போட்டு அடித்து சஸ்பென்ட் ஆனது, அதனால் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது என அவளிடம் சொல்லவே அவ்வளவு கதையிருக்கிறது…

ஆனால் அதையெல்லாம் எப்படி சொல்லமுடியும்?

இன்று என்னைப் பார்த்துவிட்டு ஒரு சிரிப்போடு என்னருகில் அவள் நடந்துவருவதைப் போல என் கனவில் எத்தனையோ நாட்கள் வந்து  “ஜான்பால்,எனக்கு உன்னைய ரொம்ப பிடிச்சிருக்கு! உனக்கும் என்னைய பிடிச்சிருக்கா? எனக் கேட்டிருக்கிறாள்.

நானும் “ம்ம்ம்” என வெட்கப்பட்டு சொல்லியிருக்கிறேன்.

இன்றும் அதேபோலவே நடந்து வந்தவள் கேட்டாள்.

“நாம இதுக்கு முன்னாடி பாத்துருக்கோமா!”

(என்ன சொல்ல..? மீண்டும் கதையின் முதல் வரியைப் படிக்கவும்.)

***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. இது கதை! இந்தக் காலத்துக் கதை.

    இதோடு சேர்ந்து வாசிக்க இன்னும் இரண்டு கதைகள் கிடைத்தன. ஒன்று பழைய பண்டாரக் கதை; இன்னொன்று ஊசிகொண்டு பலூன் வெடிப்பிக்கிற விதி-அபத்தக் கதை.

    நன்றி, R. சேவியர் ராஜதுரை, ஓர் அழகான வாசிப்பனுபவம் தந்ததற்கு! இதன் கூறுமுறை உத்தியும் சிறப்பு! அப்புறம் அந்தப் பையனும் பெண்ணும், இவ்வளவு பசுமையாக மனிதர்களை வாசித்து நாளாயிற்றா, அதில் சற்றுக் கூடுதலாக உணர்ச்சிவசப் பட்டுவிட்டேன்.

    வளவளா என்று அல்லது எனக்கு ரொம்ப டீட்டெய்ல்ஸ் தெரியுமாக்கும் என்று கழுதைப்பொதி கட்டுவதல்ல, இப்படி எளிமையாக, ஒரு கோட்டுச்சித்திரம்போல் எழுதப்படுவதே இக்காலத்திய எழுத்து. வாழ்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close