இணைய இதழ்இணைய இதழ் 54சிறுகதைகள்

எனது அறைக்குள் டார்வின் – உக்குவளை அக்ரம்

சிறுகதை | வாசகசாலை

(1)

னது அறையின் கதவு எப்போதும் திறந்ததே கிடக்கும். எப்போதும் என்ற பொருள்கோடல் நான் அறையிலிருக்கும் சந்தர்ப்பம் என்பதைக் குறிக்கும். இவ்வறையின் உரிமையாளர் விடுமுறையில் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டால், அறைக்குள் நானிருந்தாலும் கதவைத் திறப்பதே இல்லை. அப்படித் திறந்து கிடந்தால், வருடக்கணக்கில் செலுத்தப்படாதிருக்கும் வாடகை பாக்கியைத் தருமாறும் இல்லாவிட்டால் வேறு ஒரு அறையை பார்த்துக் கொண்டு போய்விடு. உன்னால் எனக்கு பெரும் தொல்லையாகவிருக்கிறது; எனது நிம்மதியே போய் விட்டதென்றும் புலம்பும், அவர் இயலாமையை சகிக்காது மூடிவைப்பதும் நடக்கும்.

இந்த நெருக்கடியிலிருந்து தப்புவதற்கும், நான் அறைக்குள் இல்லையென்பதை உணர்த்துவதற்கும் அறைக் கதவை மூடி வைப்பதுமுண்டு.

இன்றும் எனது அறையின் கதவு திறந்தே கிடந்தது. . அறைக்குள் நானிருந்தேன் பலவிதமான வர்ணக்கலவையான சிந்தனைகளுக்குள் அகப்பட்டவனாக.

அறை முழுவதும் என்னால் வாசித்ததும் வாசிக்கப்படாததுமான புத்தகங்கள். கிறுக்கப்பட்ட கடுதாசிகள். எழுதுவதற்காக சிறிய மேசை, உறங்கிடுவதற்கு சாக்கு கட்டில், துணிமணிக்கென ஒரு அலமாரி. அதன் லாச்சிக்குள் சில தஸ்தாவேஜூகளடங்கிய பைல்கள், சில உடைந்துபோன காதல் கடிதங்கள், கொஞ்சம் பணம் இருப்பதாக நம்புவேன்..அப்படி நம்புவதால் அங்கு பணம் இருந்திடுவதில்லை என்பதும் உண்மை. 

ஜன்னல். ஜன்னல் அருகே ஒரு சாய்வு நாற்காலி. வெறுமை படரும் பொழுதுகளிலும், மழை பொழியும் நாட்களிலும் ஜன்னல் வழியே என் உலகையும் தனிமையையும் தணித்திருப்பேன். உஷ்ணமிகும் கோடை காலத்தில் இதே ஜன்னலின் வழியே காற்றை எதிர்பார்த்து தவமிருந்திருக்கிறேன். உடல் வருடும் காற்று, அதன் சில்மிஷம், நான் தனித்தவனில்லை; உன்னோடு நானிருக்கிறேன் என்று சொல்வதாக இருக்கும்.

பல நாள் இதனுள் தனித்திருந்தேன். மந்திரவாதியின் சாபத்திற்குள்ளான உயிராக பேதலிக்கிறேன். அறையினுள் அமானுஷ்ய சப்தங்கள் , பேசும் குரல் நடமாடும் காலடித்தட ஓசை. நானுறங்கும் கட்டிலில் யாரோ உறங்குவதைப் போன்றும், சாய்வு நாற்காலியில் எவரோ அமர்ந்திருப்பதைப் போன்றும், ஜன்னல் வழியே ஏதோவோர் உருவம் வெளியே வெறிப்பதை போன்ற காட்சி நிழல் படிமங்களாக.. 

இவை தென்படுவதற்கு முன்னர் கடிகாரத்தின் டாங்..டாங்..சத்தம், பூனையின் கறாவுதல் , திரைச் சீலைகள் காற்றில் ஆடுதல், ஐன்னல் படீர்..படீரென அசைதல். அறைக்குள் கிடந்த பொருட்கள் காற்றில் பறத்தல், எகிறி விழல் இப்படி ஏதும் நிகழவுமில்லை; நான் போதைக்குள் தள்ளாடவும் இல்லை.

இப்படி ஏதாவது நிகழ்ந்திருக்கலாமென்று நீங்கள் ஊகிக்கலாம்.மன சஞ்சலமென்று அறிவுரையும் சொல்லலாம். தனிமைக்குள் அடைந்து கிடப்பதால் இவ்வாறான அருட்டுணர்வு தோன்றியிருக்கலாம் என்று என்னைத் தேற்றவும் முயற்சிக்கலாம்.

நடந்தவைகளை இட்டு நான் பயப்படவில்லை. அவ்விடத்தை விட்டு நகர்ந்து உதவிக்கு ஆட்களைத் தேடவில்லை. இவ்வறையை வெறுக்கவுமில்லை. இதற்குள்ளேயே நான் வாழ்ந்தாக வேண்டும்.என் பொழுதுகளை கடத்தியாக வேண்டும். இதனால் வலிமைமிக்கவன் என்றும் நீங்கள் நம்பலாம்.உங்களை போன்று நான் சாதாரணமானவன். எல்லோரை போலவும் என்னிலும் பன்மைத்துவ குணமும் உணர்வும் உணர்ச்சியும் உண்டென்பதையும் நான் கூறியாக வேண்டும்.

மனோதத்துவ நிபுணர் ஒருவருடன் கலந்தாலோசித்து, மத அடிப்படையிலான சிகிச்சையை முயற்சிக்கலாம் என்று கூட நான் சிந்திக்கவில்லை.அவர்களுக்கு கொடுக்க என்னிடம் பணமும் இல்லை என்பதும் உண்மையாக இருந்தது..

ஒரு இடியாப்ப சிக்கலில் பின்னித்தவித்தேன். அதன் சிக்கலிருந்து விடுவித்துக்கொள்ள முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன். சூழலின் நெருக்குதல் என்னை வலிமையற்றவனாக்கியது. இந்நிலை தொடர்ந்தால் நான் மடிந்து விடுவேனோ என்று அச்சம் கொண்டேன்.

காரணமற்று சார்லஸ் டார்வின் என் நினைவில் தோன்றினான். இந்நிலைதவிர்ந்த வேறொன்றாக நான் உருமலர்ச்சி கொள்ளக்கூடாதா..! இயற்கை என்னை தேர்வுக்குள்ளாக்கிடக் கூடாதா..? சூழலில் வலிமைமிக்கவையே போட்டியிட்டு பரிணாம வளர்ச்சிக்கொள்கின்றனவே..! நான் வலிமை குறைந்தவனா…மீண்டும் குளறுபடிக்குள் வீழ்ந்தேன். இவற்றிலிருந்து விடுபடுவது எவ்வாறு..? என்ற சிந்தனை சாத்தியமற்று துவண்டு கொண்டிருந்தேன்.

 (2)

மீண்டும் சொல்கிறேன் என் ஜன்னலருகே சாய்வு நாற்காலியில் யாரோ அமர்ந்திருக்கிறார்கள். கோர்ட் சூட், வெண்மை படர்ந்த நீண்ட தாடி, கம்பீரமான உருவம்.என்னை அச்சுறுத்தும் முக இலட்சினையற்ற தோற்றம். எனக்கும் சாந்தம் தந்தது.

இருந்தும் என்னையறியாது எனக்குள்ளேயே பயமும் ஊறிக்கொண்டேயிருந்ததும் உண்மை. நிதானமற்று உடலும் உள்ளமும் பதறியவாறே இருந்தது. பூத்து விரிந்த வியர்வைப் பூக்கள் உடலில் வடிந்து மேலாடையை நனைத்தது. 

தொண்டைக்குழிக்குள்ளிருந்து வார்த்தைகள் வெளிவராது குழறியது நாவு.

நானறியாது இக்கிழவர் என் அறைக்குள் எப்படி நுழைந்திருப்பார்?

அமானுஷ்ய உருவாக இருப்பாரோ…!

விழியை அக்கிழவரை நோக்கி சுழலவிட்டு, மேலிருந்து கீழ்நோக்கி படர விடுகிறேன். அப்பாடா…! கால்கள் இருக்கின்றன. பாதங்களுக்கு பாதணி அணிந்து நம்பிக்கையூட்டினார் அக்கிழவர். இருந்தும் அவரை அறியும் வரை என் பதற்றம் என்னில் நிலையாயிருந்தது.

வரும்போது வார்த்தைகள் வெளிவரட்டும். வார்த்தை வெளிவரும்போது, இக்கிழவர் இங்கிருக்கக்கூடாது. இந்நிகழ்வு நிஜமாகவன்றி கற்பனையாகவிருக்கவேண்டும். இவ்வாறான ஒரு நிகழ்வை, ஓர் கிழவரை என் வாழ்வில் பார்த்ததாக என் நினைவுகள் என்னிலிருந்து மரத்து போக வேண்டுமென்று உளம் பிரார்த்தித்தது.

கிழவன் மறைந்து விடவில்லை.

இப்போது சாய்வு நாற்காலியை முன்னும் பின்னுமாக அசைத்து ஆடத் துவங்கியிருந்தார். என்மீது படர்ந்த பார்வை மட்டும் என்னை விட்டு அகலாமல் அப்படியே நீடித்தது.

ஒரு புன்னகை, ஒரு வார்த்தையேனும் அக்கிழவன் எனை நோக்கி உதிர்க்கவில்லை. 

அழையா விருந்தாளியாக வந்திருக்கும் கிழவன் பேச்சைத் தொடரவேண்டும். இல்லையெனின் நான் அவரோடு பேச்சுக்கொடுக்க வேண்டும். இதிலொன்று நிகழ்ந்தாலொழிய புதிர் விடுக்கப்படுவதில்லை.

கிழவன் பேச்செடுக்கும் வரை காத்திருப்பதென முடிவெடுத்தேன்.

எவ்விதமான உடல் உள கூனி குறுகலற்று அவனின் வீட்டிலிருப்பதைப் போன்று, உளபூரிப்புடன் கிழவன் சாய்வு நாற்காலியில் அசைந்தாடிக்கொண்டிருந்தான்.

 (3)

சூழல் மாறியது. கருமை போர்த்தி, புழுதிக் காற்றில் தூசு துணிக்கை காற்றில் மேலெழ, முகில்கள் கூடி, மழை பொழியலாமென்ற எதிர்வு கூறல், நிறைவு பெரும் முன்பே மழைத்துளிகள் பூமியைத் தொட்டு முத்தமிட்டது. சோவென்று மழை குதுகலத்துடன் பொழிய தொடங்கியது

சூழலில் மிதந்த ஈரலிப்பு உடவெங்கும் குளிராகி குறுகுறுத்து ஊசி குத்தத் தொடங்கிற்று.

திறந்திருக்கும் ஐன்னலை மூடவேண்டும். இடையில் கிழவன். நான் ஐன்னலை சாத்தப் போக முனைகையில், கிழவனைத் தாக்கதான் என்று விபரீதமாக சிந்தித்து கிழவன் ஏதேனும் முடிவு எடுத்துவிட்டால்? என்ற சிந்தனையே நகரவிடாமல் என்னைத் தடுத்து கொண்டிருந்தது. 

‘எனக்கு குளிருது’ என்றான் கிழவன் ஓர் அசரீ ரீயாக.

“எனக்கு குளிருது. ஒரு கப் காபி கிடைக்குமா? உன்னிடம்தான் கேட்கிறேன்”

அமானுஷ்ய சக்தியல்ல; கிழவன் நம்மை போன்று சாதாரணமான பிறவி என்பதில் திருப்தி.

“கொஞ்சம் பொறுங்கள். இதோ தயாரித்து தருகிறேன்” என்றவாறு எனது குட்டி குசினிக்குள் புகுந்து சிறிது நாழிகையின் பின் காப்பி கோப்பையுடன் வெளிப்பட்டு, கிழவனுக்கு நீட்டுகிறேன்.

‘தேங்க்ஸ்’ என்றவாறு காப்பிக் கோப்பையை வாங்கி அமைதியாக மெதுமெதுவாக ரசித்து உறிஞ்சத் தொடங்கினான் .

“நன்றி. உனது காப்பி தயாரிக்கும் பக்குவம் அலாதியான சுவை தரவல்லது. எனது தாகத்திற்கும் இச்சூழலுக்கும் அமிர்தம் போன்றிருந்தது. உடலுக்கும் புத்தூக்கம் கிடைப்பதாக நம்புகிறேன்.”

“நன்றி காப்பி பற்றிய உங்கள் உள்ளார்ந்த வார்த்தைக்கு”

“என் பெயர் சார்லஸ் டார்வின்”

சிநேகத்திற்கான அழைப்பு உள்ளத்திலிருந்து வெளிக்கிடத்துவங்கியது. எனக்குள் வியப்பும் பேரதிர்வும் ஒரே தருணத்தில் முட்டி தாக்கியது.

“நீ…நீங்கள் இறந்து விட்டீர்களல்லவா..!”

“ஆமாம். இறந்து விட்டதால் இருக்கிறேன்” 

“குழப்புகிறீர்கள்..?”

“நான் இறந்து விட்டேன் என்பது உண்மை. இறப்பின் பின்னும் வாழ்கிறேன் என்பதும் உண்மை.”

“விளங்குவதாக இல்லை…!”

“இறப்பின் காலத்தில் சொர்க்கம் நரகம் இணையும் பொறிக்குள் தள்ளாடிக்கொண்டிருந்தேன். நெடுங்காலம். அந்த இடைவெளியில் பாதையற்று அமிழ்ந்திருந்தேன். பசியும் ஆபத்தும் நம்மை நெருக்கும்போது,இயற்கை நம்மைத் தேர்வு செய்கிறது. ஒன்றிலிருந்து இன்னொன்றாக பரிணாமம் அடைகிறது அந்த விதி. எக்கணத்தில் ஏதோவொன்றுக்காக நீ என்னை நினைத்தாய்.. அது இங்கு வந்து அமர செய்திற்று.”

“உங்களை அறிந்து கொள்தில் சந்தோஷம்.”

“உன்னைப் பற்றிச் சொல்” என்றார். பெரிதாக சொல்வதற்கு இல்லையென்றேன்.

“சிறிதாகவேணும் சொல்” என்றார் கலகல சிரிப்போசையுடன்.

“நான் எழுத்தாளனாக இருப்பதாக நம்புகிறேன். பிறரும் அப்படிதான் நினைக்கிறார்கள். ஆனால், வெட்டிவேலை, ஒண்ணுக்கும் ஒதவாதவன்னு என்னோடு இருப்பவர்கள் சொல்கிறார்கள்.அதுவே உண்மையென்றும் நினைக்கிறேன்.”

“அப்படியா…!”

“ஆமாம். பிகிள் கப்பலின் தலைவன் உங்கள் மூக்கை பார்த்து இகழவில்லையா..! உங்கள் பரிணாம கொள்கையை வெளியிட்ட வேளை, மக்கள் கூட்டம் உங்களை தூஷிக்கவில்லையா.. அதே போன்றுதான் இதுவும்”

‘ஹா…ஹா’ – அறை அதிர அவரின் சிரிப்பலைகள். 

“நல்லது..நல்லது..என்னைப்பற்றியும் என் எழுத்தை பற்றியும் அறிந்தும் வாசித்தும் இருக்கிறாய்”

“கலகம் இல்லாத எழுத்து சரித்திரமாவதில்லை. மனிதம் பேசாத எழுத்தும் உலகம் வெல்வதில்லை” என்றார்.

“இரண்டுமே உங்கள் எழுத்து வகையா?”

“முன்னையது எனக்குரியது. பின்னையது உன்னைப் போன்றவர்களுக்குரியது” – டார்வின் விழி புருவமுயர்த்தி சிரித்தார்.

“பிகிள் கப்பலில் பிரயாணித்து கடற்கரை பிரதேச நாடுகளை சுற்றி ஆய்வுகளை மேற்கொண்டபோது, நீரிலும் நிலத்திலும் வாழ்கின்ற உடும்பு, ஆமை போன்ற பிராணிகள் ஒன்றாகத் தென்படினும் இரண்டிலும் உடலியல் மாற்றங்கள் வெவ்வேறானவை…”

‘ம்’

“அதே போன்று, பிரின்ஸஸ், பட்டுப்பார்வை பறவைகளும் தாம் வாழும் சூழலுக்கேற்ப தம்மை மாற்றி அச்சூழலின் நியதிகேற்ப இயைந்து வாழும் போக்கை கடைப்பிடித்தொழுகுகின்றன. இது எதனால் ஏற்படுகிறதென்பதை சிந்தித்தீர்கள்…?”

“அப்படித்தான்”

“இது சூழலால் எப்படி மாறுகிறதென்பது விளங்காத புதிராக உங்களை ஆட்கொண்டது.”

“ஆமாம். அப்போது தாமஸ் மால்தாஸின் ஆய்வு கண்டுரையின் வாசகமொன்று, அம் மாற்றத்திற்கான காரணத்தை எனக்கு உரைக்க வைத்தது.

இது எவ்வாறெனில் நியூட்டனின் தலையில் விழுந்த ஆப்பிளைப் போன்றும், அரச மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தரின் நிலமையினையும் போன்றிருந்தது.

அதிகரிக்கும் சனத்தொகைக்கேற்ப உணவு உற்பத்தி நடைபெறவில்லையென்றால், வறுமை பட்டினியால் ஏழைகள் செத்து மடிவர். பணக்காரர் பணக்காரராகவே நீடிப்பர்.இப்படியாக வலிமைமிக்கவை சூழலை தாக்குப் பிடித்து வாழ்வதைபோன்று, வலிமையற்றவை சூழலில் போட்டியிட முடியாமையால் அழிந்து போகின்றன. இதனாலேயே பரிணாம வளர்ச்சி ஏற்படுகின்றது என்றேன்.

எலியின் கழுத்து சிறியதாக இருந்ததைப்போன்றே ஒட்டக சிவிங்கியினதும் கழுத்து நடுத்தரமானதாக இருந்திருக்க வேண்டும்.

உயர்ந்த மர இலை குழைகளை, மூங்கில் இளகுருத்துகளை சாப்பிட ஏதுவாக இயற்கை அதன் கழுத்தை நீண்டதாகத் தேர்வு செய்திருக்கலாம் அதற்காகவே ஒட்டக சிவிங்கியின் கழுத்தும் நீண்டிருக்க முடியும்.

இதனடியாகவே எனது ஆய்வு. நடந்திருக்கலாம், நடந்திருக்க வாய்ப்புள்ளது என்ற வாதத்தில் கருத்துக்களை முன்மொழிந்திருந்தேன். 

“குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் யானையின் தும்பிக்கை கீழ்நோக்கியுள்ளது அவை உயர்ந்த மரத்தினதும் தாழ்ந்தவைகளையும் சாப்பிட ஏதுவாக இருக்கிறது.அதேப் போன்று கங்காருக்கு வயிற்றில் பை எதற்கு..? இயற்கை எவ்வகையில் இதனை தேர்வு செய்திருக்கலாம்?”

“நோ கமெண்ட்ஸ்.”

“குரங்கிலிருந்துதான் மனிதன் பரிணாமம் அடைந்தானா..?”

“அப்படியென்று நான் சொல்லவில்லை. எனக்குப் பின் வந்த தோமஸ் ஹென்றி ஒக்ஸ்லே சொன்னது. நான் வாலில்லா பிராணி ஒன்றிலிருந்துதான் மனிதன் பரிணாமம் அடைந்திருக்கலாமென்கிறேன்.”

“மரபு ரீதியிலான ஆய்வுமுறையும் மரபணுக்களும் கண்டறியப்படாத காலத்தில், இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா..?”

“மாற்றம் தானே மாறுதலுக்குரியது. தோமஸ் ஹென்றி ஒக்லே மனிதனின் மற்றும் சிம்பன்ஸி குரங்கினதும் எலும்புக்கூடுகளை ஆய்வு செயது இரண்டும் ஒன்றுபடுவதைக் கண்டு, என் ஆய்வு முறை சரியென்றிருக்கிறார்.”

“உண்மைதான். அவ்வாறெனில் குரங்கின் அவயங்களை மனிதனின் சந்திர சிகிச்சைகளுக்கு பயன்படுத்தலாமா? மனிதனின் இரத்த தேவைகளுக்கு குரங்கின் இரத்தத்தை ஏற்றலாம் என்கிறீர்களா…?கிரேக் வெல்டர் சிம்பன்ஸியின் DNA வுக்கும் மனிதனுக்குமிடையிலான வித்தியாசம் 0.2 புள்ளி என்கிறார். அவ்வாறெனில் பன்றியின் இதயத்தை மனித இருதய சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்கிற வைத்தியத்துறையினரின் செயற்பாடும், பன்றியின் இரத்தத்தை மனிதனுக்கு ஏற்றலாம் என்கிற ஆய்வும் உங்கள் இருவரின் கூற்றையும் பொய்மை படுத்துவதாக இருக்கிறதே…!”

“எனக்குத் தெரியாது…!”

“பன்றியிலிருந்து மனிதன் பரிணாம் அடைந்தான் எனலாமா…?”

“நோ கமெண்ட்ஸ்.”

டார்வினுடனான சுவராஸ்யமான கலந்துரையாடலில் கவனிக்கத் தவறிய ஒரு விடயம். எதிர்பாராத நிலைகுலைவென்றும் கருதலாம். கதவைப் பார்த்தவாறு பேசிக்கொண்டிருந்த டார்வின் கூட கவனிக்கவில்லையா..? அல்லது என்னிடம் சொல்ல நினைவு தோன்றலையா…?

 (4)

டார்வினைப் போன்றே எதிர்பாராமல் அனுமதியின்றி வீட்டு உரிமையாளர் கதவோரத்தில் நின்றிருந்தார். ஒரு விசித்திரப் பிராணியை பார்ப்பதைபோல் என்னைப் பார்த்தவாறே விழியால் அறையைத் துழாவினார்.

எதைத் தேடுகிறாரோ..? எனக்கென்ன பயம்..கதிரையில் டார்வின்தானே அமர்ந்திருக்கிறார்.பார்த்தால் பார்த்துவிட்டு போகட்டுமென்று இருந்தேன்.

“நான் வரும்போது வயதான ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தாயே .! யார் அவர்..?”

“டார்வின்” 

“டார்வின் எங்கே..?”

“அதோ.. அந்த நாற்காலியில் சாய்ந்தாடிக்கொண்டிருக்கிறாரே”

“கதிரை இருக்கிறது. டார்வின் எங்கேன்னு கேட்டேன்” என்றார் அவர் மீண்டும்.

ஒருவேளை டார்வின் அவரின் கண்களுக்கு தென்படவில்லையோ…!

“எந்த சாய்வு நாற்காலியில்?”

விரலை நீட்டி கதிரையைச் சுட்டிக்காட்டுகிறேன்.

அங்கே கதிரை ஆடிக்கொண்டிருக்கிறது.

வீட்டு உரிமையாளர் என்னையும் கதிரையையும் மாறி மாறிப் பார்த்தவாறு, அச்சம் படர்ந்த முகத்துடன் சொல்லாமல் படியிறங்கிப் போனது எனக்கு வியப்பைத் தந்தது.

 (5)

“டார்வின், நாம் பேச்சை எங்கே நிறுத்தினோம்?”

“பன்றியிலிருந்து….நோ கமெண்ட்ஸ்”

“ஆமாம் ஆமாம். அதோடுதான் நம் பேச்சு தடைப்பட்டது. ஒன்று பரிணாமம் அடையவேண்டுமெனில், இயற்கைக்குள்ளேயே போட்டி சூழல் ஏற்படவேண்டும். அது சிற்றினங்கள் தனக்குள்ளே போட்டிகள் நடைபெறுவதோடு, உணவுக்கான தேவையும், பாதுகாப்பும், மாறவேண்டிய சூழலும், அதனை இயற்கை தேர்வு செய்யும் நிலையிலேயே பரிணாமம் நடைபெறுகிறது

இயற்கைத் தேர்வு இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்பதை சுட்டுவதே முன்னே சொன்ன எலி, ஒட்டகச் சிவிங்கியின் நிலைப்படுத்தல். மற்றும் முன்னோர் சொன்ன கதைகள்தாம் ஓநாய்களை வளர்த்தோம்.பின்னர் வந்த காலங்களில் அவை நாய்களாக மாறின என்பன இதை ருதுபடுத்தும் காரணங்கள்.

இவைகள் வலுவான ஆதாரங்களில்லையே ஒரு புனைவின் இரசனையை தருகிறதே ஒழிய நம்பகமானதல்ல” என்று நான் கூறியதும், டார்வின் உணர்ச்சி வசப்பட்டவராக, கோபத்தில் முகம் சிவந்திட என்னை நோக்காமல் வேறேங்கோ பார்வையைப் படியவிட்டார்.

தனது இரு கைகளையும் இறுகப் பற்றி தனது மிகை உணர்ச்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தார்.

 (6)

“என் ஜந்தாண்டுகாலத் தேடலின் தகவல்களை கட்டமைத்து இப்படியும் நடந்திருக்கலாம், இப்படியும் நடந்திருக்கும் வாய்ப்புகள் உண்டு என்பதை முன் மொழிந்திருக்கிறேன்”

“முதல் உயிர் தோற்றம் பற்றிக் கூறியிருக்கிறீர்களா…?”

“அதைப் பற்றி நான் கூறவில்லை.எனக்கு பின் வந்தவர்கள் கூறி இருக்கிறார்கள்.”

“என்னவென்று…’கனிம கரிமப் பொருட்களுடன் வேற்றுக் கிரகப் பொருளான நீர் (H2o) சேர்ந்து, உயிர் செல், புரட்டோசோவா ஒரு செல் உயிரினம் தோன்றியதாக சொல்கிறார்கள். அந்த ஒரு செல் உயிரிக்கு.உயிர் அளித்தது..உயிர் வந்தது யாராலாம்.. எப்படியாம்..?”

“நோ கமெண்ட்ஸ்”

“பரிணாமம் இன்னும் உலகில் நடந்து கொண்டிருப்பது உண்மையாயின், உணவு தேவைக்காகவும் தனது பாதுகாப்புக்காகவும், ஒரு உயிர் சூழலின் மாற்றத்தால் பரிணாமம் கொள்ளமுடியுமாயின் எல்லாவற்றையும் இழந்து வாழ்வின் விரக்திக்குள் செத்துக் கொண்டும், ஒவ்வொரு நாளும் தினுசு தினுசான பிரச்சினைகளும் காட்டுத்தீ போல் பரவும் விலைவாசிக்குள்ளும், இருளுக்குள்ளும் சிதைந்து வாழ்கின்ற எனக்கும் இந்த இலங்கை தேச மக்களுக்கும் ஏன் பரிமாணம் நடைப்பெறவில்லை.?”

டார்வின் என்னையும் எனது உதட்டசைவையுமே அவதானித்துக்கொண்டிருந்தார். ஏதேதோ தனக்குள் முணுமுணுத்தவாறே இருந்தார்.

“உங்களுக்கு நோய் கண்டு அல்லது வறுமையில் துவண்டும் மரணம் மோகிக்கும் பொழுதில் ஏன் மனிதனை விட சக்தி வாய்ந்த ஒரு உயிரியாக உங்களால் மாறிவிட முடியாது போனதேன்…?!

நெருங்கி வரும் மரணத்தை வெல்வதற்கு பரிணாமத்தால் முடியாமல் போனதேன். அல்லது சூழல் அதனைத் தேர்வு செய்து, மனிதனைவிட சுப்பர் சக்தி மிக்க மரணத்தை வெல்லும் ஒன்றாக பரிணாமம் ஏன் பரிணமிக்கவில்லை?”

“நோ கமெண்ட்ஸ்.”

“பரிணாமத்தை மாய்க்கும் அந்த மரணத்தை உருவாக்கும் சக்தி எது..?”

“அறிவியல் என்பது இறுதி உண்மை அல்ல, மெய் நோக்கி நடக்கும் பயணம். நியூட்டன் கட்டியெழுப்பிய பாரம்பரிய அறிவியலை விட்டு நவீன அறிவியல் என்று காட்சி மாற்றப்பட்டதைப்போன்று, இந்த நவீன அறிவியல் சித்தாத்தம் என் ஆய்வை உண்மையென்று நிரூபிக்கும்” – ஆக்ரோஷமாக குரல் கொடுத்தார் டார்வின்.

“கணிதம் நேரிடையான செயற்முறைகளால் சரியான விளக்கத்தை விடையைத் தருவதைப்போன்று, அறிவியல் தருவதில்லையே…

குழப்பகரமான முடிவுகள் வருவதாயினும் தமக்கு ஏற்புடைய, நெருங்கிய சாதகமானதையே அறிவியலாளன் ஏற்கிறான். அதை உண்மையாகக் கருதுகிறான்.இந்த உண்மையென்பது பொய்யை உண்மையென்று நிறுவுவது போலிருக்கிறது.

அப்படியேதும் நிகழவில்லையே…!

குவாண்டம் என்ற சொல்லாடலும் அவ்வகையானதே.. புதிய குவாண்டம் ‘நிச்சயம்’, ‘தீர்மானம்’ என்பதிலிருந்து விலகி ‘சாத்தியக்கூற்றை’ வகைப்படுத்துவதாக அமைவதாக கொள்ள வேண்டுமென தானே விஞ்ஞானிகள் அறைகூவல் விடுக்கின்றனர்.”

டார்வினிடமிருந்து எந்த பதிலுமில்லை.

“உங்களின் பரிணாமக் கொள்கையும் முடிவற்றது. தீர்மானமற்றது. இன்னும் உண்மையும் தேடலையும் தேடி செல்லவேண்டியதே!”

சாய்வு நாற்காலியில் அசைந்தவாறு அமர்ந்திருந்த டார்வினின் உருவம் ஒரு புகையாக கரைந்து மறைந்து மெல்ல மெல்ல மேலெழுகிறது.

என் சாய்வு நாற்காலி ஆடாமல் சத்தமின்றி அவ்விடத்திலேயே கிடந்தது

இப்போது அறைக்குள் நான் மட்டுமே. நடந்தேறியவை பற்றிய குழப்பத்தில் நான் ஆழ்ந்திருக்க, அறைக் கதவு திறந்தவாறே!

****

amrithaakram@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button