கட்டுரைகள்
Trending

எழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை

வாசகசாலை

‘வாசகசாலை’ யின் இலக்கிய நிகழ்வுகள் குறித்தும் அதன் நோக்கங்கள் குறித்தும் எவ்வித அடிப்படைப் புரிதலுமின்றி, தமிழ் இலக்கியத்தை ‘வாசகசாலை’ யிடமிருந்து காப்பாற்றும் ஆதங்கத்தில் (முற்றிலும் எழுத்துப் பிழைகளால் நிரம்பியது)) எழுதப்பட்ட ஒரு கடிதத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் பதிலெழுதி தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.ஐந்து ஆண்டுகளாக பல்வேறு நண்பர்களின் ஒத்துழைப்பில் தமிழ் மொழிக்காகவும் நவீன இலக்கியத்தை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்துகிற வேலைகளையும் நமது பலதரப்பட்ட நிகழ்ச்சி வடிவங்களின் வழியே தீவிரமாக முன்னெடுத்து வருகிறோம்.இந்நிலையில் இம்மாதிரியான மேம்போக்கான அவதூறுகளுக்கு எதிர்வினை ஆற்றுவதோ அல்லது எதன் பொருட்டும் நமது செயல்பாடுகளை இப்படி பதிவுகள் எழுதுவதின் வழியாகவும் அல்லது வெற்று வாய்வார்த்தைகளின் மூலமாகவும் நிறுவுவதிலோ நமக்கு உடன்பாடு இல்லை.ஆனாலும் தமிழின் முக்கிய எழுத்தாளர் ஒருவரது இம்மாதிரியான கருத்துக்களால் வருத்தம் கொண்ட எண்ணற்ற வாசக நண்பர்கள் கேட்டுக்கொண்டதன்படி சில விளக்கங்களை மட்டும் சொல்லிக்கொள்ள முனைகிறோம்.

தீவிர இலக்கியக் கூட்டங்கள் இப்படித்தான் நடக்க வேண்டுமென எழுத்தாளர் ஜெயமோகன் சில புரிதல்களைக் கொண்டிருக்கிறார்.அதன்படிதான் இங்கே இலக்கிய நிகழ்வுகள் நடக்க வேண்டுமென விரும்புகிறார்.’வாசகசாலை’ என்றுமே இம்மாதிரியான தீவிர இலக்கியக் கூட்டங்களை முன்னெடுப்பதாக சொல்லிக் கொண்டது கிடையாது.எப்போதும் குறிப்பிடுவதைப் போல, நமது கூட்டங்கள் அனைத்துமே ஆரம்பநிலை வாசகர்கள் அல்லது வாசிப்புப் பழக்கமே இல்லாத பொதுமக்களுக்கானவை.மேலும் திரு.ஜெயமோகன் முன்னிறுத்துகிற வரையறைகள் முழுக்க முழுக்க எழுத்தாளர்களை மட்டுமே சார்ந்தவை.அதில் வாசகர்களுக்கு எந்த இடமும் கிடையாது.எழுத்தாளர்கள் பேசுவதை கேட்டுக் கொள்ள வேண்டும், அவ்வளவுதான்.ஆனால் ‘வாசகசாலை’ யின் இலக்கிய நிகழ்வுகள் சமத்துவமானவை.அதாவது இங்கே எழுத்தாளர்களும் வாசகர்களும் சரிசமம்.நிகழ்வில் பேசுகிற எழுத்தாளர்களும் வாசகர்களும் ஒரே மேடையில்தான் அமர்ந்திருப்பார்கள்.முதலில் வாசகர்கள் பேசுவார்கள், பின்னர் எழுத்தாளர் பேசுவார், வாசகர்கள் செய்கிற தவறுகளையும் தடுமாற்றங்களையும் எழுத்தாளர்கள் சுட்டிக்காட்டிப் பேசுவர்.ஒவ்வொரு நிகழ்விலும் கண்டிப்பாக கலந்துரையாடல் இருக்கும்.அதில் யார் வேண்டுமானாலும் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.அவை முக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் அவை குறித்தும் விவாதிக்கப்படும்.

இப்படி வாசகர்களையும் படைப்பாளிகளையும் சமமாக பாவித்து நடத்தப்படுகிற நிகழ்வுகளில் சில வாசகர்கள் பேசத் தடுமாறுவது சகஜம்தான்.அப்படி அவர்கள் பதற்றத்தில் தங்களது கருத்துக்களை அரைகுறையாக முன்வைத்தாலும் கூட அது ஒரு பிரச்சனையாகவே இதுவரை இருந்ததில்லை.ஏனெனில் எல்லோரும் நன்றாகப் பேச வேண்டும் என்பதற்காக பேச்சாளர்களை பலகட்டப் பரிசோதனைகள் செய்து தேர்ந்தெடுப்பதற்கு இது ஒன்றும் பேச்சுப்போட்டி அல்ல.புதிய வாசகர்களுக்கான நிகழ்வுகள் என்பவை இப்படித்தான் இருக்கும்.அதேபோல் வாசகசாலை யின் அழைப்பிதழ்கள் எதிலுமே ‘விமர்சனக் கூட்டம்’ என்கிற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டிருக்காது.ஏனெனில் நாங்கள் நடத்துபவை நூல் அறிமுகக் கூட்டங்கள் அல்லது சிறுகதைகள் மற்றும் கவிதைகள் குறித்து விவாதிப்பதற்கான ‘கலந்துரையாடல்’ கூட்டங்கள் மட்டுமே.

இதன் வழியே ’இலக்கிய வாசிப்பு’ என்கிற பழக்கத்திற்குள்ளேயே வராத புதிய இளம் வாசகர்களையும் பொது மக்களையும் அவர்களுக்கு இம்மாதிரியான இலக்கியக் கூட்டங்களின்பால் உள்ள தயக்கங்களைப் போக்கி அவர்களை இயல்பாக இவற்றில் பங்குபெறச் செய்வதே அடிப்படை நோக்கம்.எனவே இவற்றில் பேசுகிற வாசகர்கள் சிலர் நன்றாகப் பேசுவார்கள், சிலர் மோசமாகப் பேசுவார்கள், சிலருக்கு பேச்சே வராது.இதெல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது. ஒரு நிகழ்வில் சரியாகப் பேசாத வாசகர்கள் மீண்டும் இன்னொரு நிகழ்வில் கலந்துகொண்டு மிகச் சிறப்பாக பேசியுள்ளனர்.தொடர்ந்து இதன் வழியே எத்தனையோ வாசகர்கள் பேச்சாளர்களாக உருமாறி இருக்கிறார்கள்.தீவிர இலக்கிய வாசகர்கள் உருவாகியிருக்கிறார்கள். சிலர் எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள்.ஆனால் இதற்கான க்ரெடிட்டை ஒருபோதும்  ’வாசகசாலை’ எடுத்துக் கொண்டதில்லை. இனிமேலும் அப்படித்தான்.இவற்றையெல்லாம் கூட எவ்வித அடிப்படைப் புரிதலும் இல்லாது எழுதப்பட்ட எழுத்தாளர் ஜெயமோகனது கருத்துகளுக்காகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

இதில் நாம் நமது முதல் நிகழ்விலிருந்து செய்து வருவதையே நமக்கு ஆலோசனையாகவும் வழங்கியுள்ளார் திரு.ஜெயமோகன்.

//ஆனால் அரங்கேறி தேர்ச்சி அடைவதற்குரிய வாய்ப்பை இளையோருக்கு அளித்தாகவேண்டும். அதற்கு ஒரு முறை உள்ளது. ஒரு தேர்ந்த பேச்சாளர் பேசும் அரங்கில் அதற்கு முன்னர் ஒரு பயில்முறைப்பேச்சாளர், இளைஞர் பேசலாம். எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த மேடையிலேயே அவருக்கு முன் ஒரு இருபது நிமிடம் ஓர் இளம்பேச்சாளர் சற்று திறனில்லாத உரையை நிகழ்த்தியிருந்தால் வாசகர்கள் பொறுத்துக்கொள்வார்கள். அந்த இளம்பேச்சாளர்களுக்கும் அது ஒரு நல்ல வாய்ப்பு. அவர்கள் எஸ்.ரா பேசும் அரங்கில் தங்கள் உரையை முன்வைக்க முடிகிறது. அவர்கள் தங்கள் தரத்தை மதிப்பிட்டுக்கொள்ள, மேம்படுத்திக்கொள்ள அது வழிவகுக்கும்.//

இதைத்தான் துவக்கத்திலிருந்தே செய்து வருகிறோம்.இதெல்லாம் திரு.ஜெயமோகனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.ஒரு நிகழ்வையாவது பார்த்திருந்தால்தானே தெரியும்? மேலும், “சிற்றிதழ்ச் சூழல் மறைந்துவிட்டது..” என்கிறார். சிற்றிதழ்களில் வெளிவருகிற சிறுகதைகளுக்காக மட்டுமே    ‘கதையாடல்’ என்கிற நிகழ்ச்சியை மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.மொத்தம் 36 நிகழ்ச்சிகள்.இதன் மூலம் கிட்டத்தட்ட 200 சிறுகதைகள் இந்த மூன்றாண்டுகளில் மட்டும் புதிய வாசகர்களிடையே விவாதிக்கப்பட்டுள்ளன.அனைத்தும் இச்சமகாலத்தில் தீவிர இலக்கிய இதழ்கள், சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் வெளிவந்த சிறுகதைகள்.

இலக்கிய நிகழ்வுகளுக்கு பெண்களின் வரவு மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்து வருகிற சூழலில் நமது ‘கதையாடல்’ நிகழ்வுகளுக்கான பெண்களின் பங்களிப்பு என்பது மிக மிக முக்கியமானது.மேலும் இலக்கிய நிகழ்வுகளை தனி அரங்குகளில் மட்டுமல்லாது அரசு நூலகங்களில் நடத்துவதன் வழியே நவீன இலக்கியத்தின் எத்தனையோ மகத்தான படைப்புகள் பொது வாசகர்களிடம் அறிமுகமாகியுள்ளன.அதன்பின் அவர்களில் இருந்து எண்ணற்ற வாசகர்கள் தீவிர இலக்கியத்தின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள்.அனைத்தையும் தாண்டி அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் கல்லூரிகளிலும் கூட்டங்கள் நடத்தியிருக்கிறோம்.எத்தனையோ மாணவ மாணவிகளும் கூட நமது முன்னோடிகளின் சிறுகதைகளைப் படித்து அழகாக உள்வாங்கி பேசியிருக்கிறார்கள்.

#கவிதைஇரவு என்கிற நிகழ்ச்சியின் வழியே இதுவரை 220 தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளுக்கு முகநூலின் வழியே நிகழ்வுகள் நடத்தியிருக்கிறோம்.அவ்வளவும் நேரலை.வெளிநாடு வாழ் தமிழ் வாசகர்களும் கூட இந்நிகழ்வுகளை ஆர்வத்துடன் கேட்டு வருகிறார்கள். அக்கவிஞர்களின் கவிதைகளை படிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.

எனவே இப்படி எதுவுமே தெரியாமல் போகிறபோக்கில் தனது உள்ளக் கிடக்கைகளை வெளிப்படுத்தியிருக்கிற திரு.ஜெயமோகன் அவர்களது பார்வைக்காக நமது ஒட்டுமொத்த செயல்பாடுகள் குறித்த பட்டியல் ;

’வாசகசாலை’ யின் சென்னை நிகழ்வுகள்:-

1)இலக்கியம்:- (வாராந்திர நிகழ்வுகள்)

 • அண்ணா நூற்றாண்டு நூலக தமிழ் சிறுகதைக் கொண்டாட்டம் -129
 • அசோக் நகர் நூலகம் -122(நாவல்களுக்கான நிகழ்வு 52) (கவிதைகளுக்கான நிகழ்வு 70)
 • பெரியார் நகர் நூலகம் -35
 • கதை வழிப் பயணம் -14
 • குழந்தைகளுக்கான கொண்டாட்டம்-47
 1. மாதாந்திரம்:
 • இலக்கிய கலந்துரையாடல் நிகழ்வுகள்-48
 • கதையாடல்-36
 • ராயபுரம் நிகழ்வு -8
 1. இரு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வுகள் ;
 • ஈழத்தமிழ் எழுத்தாளர் வரிசை -10
 • மேடை -1
 1. முழுநாள் நிகழ்வுகள்:
 • எழுத்தாளர் சுஜாதா
 • எழுத்தாளர் எஸ்.வி.ஆர்
 1. இதர இலக்கிய நிகழ்வுகள்:
 • பபாசி புத்தக கண்காட்சி நிகழ்வுகள் 2017 (தினசரி நிகழ்வுகள்….மொத்தம் 14)
 • பரிசல் புத்தக நிலையத்துடன் இணைந்து நடத்திய கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் கவிதை நூல்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு) – 1
 • எழுத்தாளர் பாலகுமாரன் நினைவஞ்சலி
 • பள்ளி நிகழ்வுகள்-2
 • ஆண்டு விழா- 2015, 2016, 2017, 2018

***

 1. கலை: (மாதாந்திர நிகழ்வுகள்)
 • திரைக்களம்-26
 • ஒளியும் ஒலியும்-20
 • இணைத்திரை-2
 • முழுநாள் நிகழ்வுகள்:- திரைக்களம்-2018,2019

***

 1. சமூகம்:-
 • முழுநாள் நிகழ்வுகள்:
 • எழுத்தாளர் பெரியார்-2017,18, 19
 • எழுத்தாளர் அம்பேத்கர் – 2018,19
 • எழுத்தாளர் மார்க்ஸ் – 2018,19

சென்னையில் மட்டும் நமது கலை, இலக்கிய சமூக நிகழ்வுகளின் மொத்த எண்ணிக்கை – Around 530

வெளியூர் நிகழ்வுகள்:-

மதுரை (இலக்கியம்) -18 ; திரைக்களம் -13

கோயம்புத்தூர்- 18

திருச்சி-19

சின்னமனூர்-2

புதுக்கோட்டை-4

சேலம் -18

தூத்துக்குடி-18

திருவாரூர்-17

திருநெல்வேலி -16

திண்டுக்கல் -15

கும்பகோணம்-12

காஞ்சிபுரம்-4

காரைக்குடி -10

Outside TN:-

பெங்களூரு (இலக்கியம்) – 58; (திரைக்களம்) – 5, மனதில் நின்ற கவிதைகள்- 03

மும்பை – 7

பாண்டிச்சேரி – 3

தஞ்சாவூர் -14; கல்லூரி – 3

விருதுநகர் – 2

திருவள்ளூர் – 6

கரூர் – 1

திருவண்ணாமலை – 6

தர்மபுரி – 7

வேலூர் – 17

திருப்பூர் – 16

விழுப்புரம் – 12

ஈரோடு – 5

இராஜபாளையம் – 8

இராமநாதபுரம் – 2

கன்னியாகுமரி – 4

செங்கல்பட்டு – 5

மேலும்….

#கவிதை இரவு – முகநூல் ஒலி நேரலை -226

#வாசகசாலை இணைய இதழ்கள் – 14

#வாசகசாலை பதிப்பக வெளியீடுகள்- 24

இவையனைத்தும் கடந்த ஐந்தாண்டுகளில் ‘வாசகசாலை’ என்கிற கலை இலக்கிய சமூக அமைப்பு நம் மக்களிடையே முன்னெடுத்த செயல்பாடுகள்.இவற்றில் ஏதேனும் ஒரு நிகழ்வைக் கூட உருப்படியாய் கவனிக்காமல் அவதூறுகளையும் ஆலோசனைகளையும் வழங்குவது நாம் பெரிதும் மதிக்கிற ஒரு எழுத்தாளருக்கு ‘அறம்’ ஆகுமா?

யார் என்ன சொன்னாலும் எவ்வளவு தூற்றினாலும் எந்தெந்த விதங்களில் எல்லாம் இடையூறுகள் அளித்தாலும் ‘வாசகசாலை’ யின் செயல்பாடுகள் தொடர்ந்தபடியேதான் இருக்கும்.ஏனெனில் இது தனிநபர் அமைப்பு அல்ல.தமிழ் மொழியின் மீதும் மக்களின் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்ட எண்ணற்ற நண்பர்களால் ஆனது.

நன்றி.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

 1. ஜெயமோகன் அவர்களின் பதிவைப் படித்ததும், வாசகசாலை மீது ஏன் இத்தனை வன்மம் என்று வியப்பாக இருந்தது.

  பத்தியில் உள்ள கேள்விக்குஜெயமோகன் பதில் பொதுவாக ஒட்டுமொத்த இலக்கிய அமைப்பு களைப் பற்றியது போல் தோன்றினாலும், தலைப்பு (‘வாசகசாலை கூட்டங்கள் குறித்து’) ஆயுதம் யாரை நோக்கி ஏவப்பட்டது என்பதை அம்பலப்படுத்தி விட்டது..

  கேள்விகேட்ட தேவிபாரதியின் குற்றச்சாட்டு என்ன? வாசகசாலை நிகழ்வுகளில் பேசப்படுபவை ‘மேசமான’ இலக்கிய உளறல்கள் என்பது. பதிலளிப்பதற்கு தேவையான தகவல்கள் ஏதும் இல்லாத, தரம் தாழ்ந்த, பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு. தன்னைமட்டும் எல்லாமறிந்தவராக எண்ணிப் பேசுவோரை நினைத்து அனுதாபப் படலாமே தவிர வேறென்ன செய்ய இயலும் !

  ஜெயமோகன் பதிலிலும் வாசகசாலை நிகழ்வுகள் பற்றிய நேரடியான விமர்சனம் எதுவும் இல்லை. பல குற்றச்சாட்டுகளை “நண்பர்கள்” கூறியிருப்ப தாக சொல்கிறார். யார் அந்த நண்பர்கள் ? அவர்களின் குற்றச்சாட்டுகள் தாம் என்ன ? நியாய மான விமர்சனமென்றால், அவற்றை சொன்னால் அல்லவா பதில் தரமுடியும்.

  டீ கடையின் அரட்டை போல பேச்சு நடப்பதாக இன்னொரு இலக்கற்ற தாக்குதல் ! வாசகசாலை நிகழ்வுகளில் பங்கு கொண்டோர் அறிவார்கள்; வெற்று அரட்டையையோ, பேசுபொருள் விலகிய விவாதத்தையோ அவர்கள் அனுமதிப்பதே இல்லை.

  ‘அரசியல்கருத்துக்களை இலக்கியக் கருத்து களாக மாறுவேடமிட்டு மேடையேற்றுகிறார்கள்’ என்றொரு குறிப்பு வருகிறது. ஒருவேளை, இந்த எண்ணமே மொத்த பதிவிற்கும் காரணமாக இருக்கக்கூடும்.

  உண்மை என்ன ? வாசகசாலை அமைப்பா ளர்களுக்கு ஒரு அரசியல் கண்ணோட்டம் இருக்கக்கூடாதா? அதற்கு தடையேதும் உண்டா. அதில் மாறுவேடத்திற்கான தேவை என்ன ? நம்மில் ஒவ்வொருவரு க்கும் ஒரு அரசியல் பார்வை இருக்கத்தானே செய்கிறது. ஐயா ஜெயமோகனுக்குக் கிடையாதா ? அதுதானே ஜனநாயகம் !

  அந்த அரசியல் பார்வையை அவர்கள் இலக்கிய வாசிப்புக் கூட்டங்களில் திணிப்பதில்லை. இலக்கியப்படைப்பு தொடர்பான வாசிப்பு குறித்த கருத்துகளே அந்தக்கூட்டங்களில் பேசப்படு கின்றன என்பதை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டோர் அறிவர்.

  ஜெயமோகன் பதிலில் ஓரிடத்தில் ‘..பேசவிடாமல் தடுப்பதே ..முதல் கடமை’ என்பதாக வருகிறது. வேதனை ! உங்கள் எழுத்தை அனைவருமே நேசிக்கிறோம். ஏமாற்றி விடாதீர்கள் என்று மட்டும்
  சொல்லத் தோன்றுகிறது.

  நன்கொடை வாங்காமல், சமோசா; டீ வழங்காமல் வாசகசாலையின் நிகழ்வுகள் பல ஊர்களில் வாசகர்களின் பெரும் ஆதரவுடன் இலக்கியத் தேடலை முன்னெடுத்து வருகின்றன. இந்த வளர்ச்சி சிலருக்கு உறுத்தலாக அமைகிறதோ என்னவோ !

  இறுதியாக, வாசகசாலை அருண் அவர்களின் எதிர்வினை பற்றி.. நியாயமற்ற பதிவிற்கோர் நாகரீகமான பதில். இதிலிருந்தும் வாசகசாலை யின் இலக்கியத்தரத்தைத் தெரிந்துகொள்ளலாம். மனமிருந்தால் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close