சிறுகதைகள்
Trending

ஈரம் – தீபா நாகராணி

சிறுகதை | வாசகசாலை

அம்மா எழுந்து செல்லும்போது பின்னால் பார்த்தால் சேலையில் இலேசான ஈரம். அது கத்தரிப்பூ வண்ணமானதால் பளிச்செனத் தெரிந்தது. கீழே இருந்த ஈரத்தைப் பார்க்காமல் அமர்ந்திருப்பார் என நினைத்த லதா தேர்வுக்குப் படிப்பதைத் தொடர்ந்தாள். இந்தப் பருவத்தோடு முதுகலைப்படிப்பு நிறைவு பெறுகிறது. அடுத்து முனைவர் பட்டத்துக்குப் படிக்க ஆசை. வீட்டில் இப்போதே பெண் கேட்டு அடிக்கடித் தொந்தரவு. இதில் இன்னும் சில வருடங்கள் காத்திருக்கச் சொன்னால், அப்பாவின் கோபம் அம்மா மீது திரும்பும். அம்மா செய்த சிபாரிசால்தான் முதுகலைப் படிப்பைப் படிக்க முடிகிறது. தம்பி செல்வம் பள்ளி இறுதி வகுப்பில் படிக்கிறான். இருவரும் மற்ற வீடுகளில் இருப்பது போல் அடித்துக் கொள்வதோ, சண்டை பிடிப்பதோ இல்லை. தொலைக்காட்சியில் பார்க்கும் நிகழ்ச்சிகளை, சுற்றிலும் உலவும் மனிதர்களைக் கிண்டல் செய்து பேசி மகிழ்வர். நண்பர்கள் போலப் பேசிக் கொள்வர். வீட்டுக்குள் நுழைந்ததும் தம்பியைத்தான் தேடுவாள் லதா. தந்தை ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் அதிகாரியாகப் பணிபுரிகிறார்.

இரவு உணவு தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருந்தார் லதாவின் அம்மா. வசிப்பறையில்தான் குளிர் சாதனப் பெட்டி இருந்தது. அதன் பக்கத்தில் இருந்த மேஜையில் புத்தகங்களை வைத்துப் படித்துக் கொண்டிருந்தாள் லதா. விறுவிறுவென வந்து ஃபிரிட்ஜ் கதவைத் திறந்தவர் ஒரு சில நிமிடங்கள் அப்படியே நின்றார். அடுப்பில் ஏதோ வெந்து கொண்டிருப்பதை சிம்னி சத்தம் தெரியப்படுத்தியது. உள்ளே தெரிந்த வெளிச்சத்தில் எதையோ பார்த்துக் கொண்டே இருந்தார். நிமிடங்கள் சில கடந்த பிறகு கீழே பட்டாணி அடைத்து வைக்கப்பட்டிருந்த டப்பாவை எடுத்துக்கொண்டு கதவை அடைத்தார்.

“இங்க பாருடா, கதவைத் திறந்திட்டுத்தான் என்ன எடுக்கணும்னு யோசிக்கவே செய்றாங்க அம்மா”

“இன்னைக்குள்ள முடிவு செஞ்சாதான் லதா, இல்லாட்டி ராத்திரி நாம பட்டினிதான்”

குருமாவில் பட்டாணியைக் கொட்டிக் கிளறியபடி அடுப்பைக் கூட்டி வைத்தவள் காதுகளிலும் விழுந்தன சொற்கள். பெற்ற பிள்ளைகள் தாயைக் கிண்டலாகப் பேசி மகிழ்கின்றன. பதிலுக்குப் பேசி என்ன ஆகப் போகிறது என்றபடி வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா. உண்மையில் அடுப்பில் வெங்காயத்தை வதக்கும்போதுதான் பட்டாணி நினைவுக்கு வந்தது. அதையும் சேர்க்கலாம் என அடுப்பைக் குறைத்து வைத்துவிட்டு ஃபிரிட்ஜ் அருகே வந்து கதவையும் திறந்தாகிவிட்டது. இந்தச் சில நொடிகளில் எதற்காக வந்தோம் என்பதை முழுமையாக மறந்திருந்தாள். உள்ளே இருந்தவற்றில் எதற்காக இதைத் திறந்தோம் என ஒவ்வொரு பொருளாகப் பார்த்து, பட்டாணியைக் கண்ட பின்தான் நினைவுக்கு வந்திருக்கிறது.  நாற்பத்திரண்டு வயது முடிந்துவிட்டது. இந்த ஒரு வருடமாக அடிக்கடி இதே மாதிரி அனுபவங்கள். பெரிதாகப் பாதிப்பில்லை.

இன்றும் அதே மாதிரி லதாவின் அம்மா உடுத்தியிருந்த  சிவப்பு நைட்டியில் பின்புறம் ஈரம். அவளது அப்பாவும் வீட்டில் இருந்தார்.

“ஏம்மா வீட்டிலதான் பாத்ரூம் இருக்குல, போக வேண்டியது தான, அப்படி என்ன அவசரம், உன் நைட்டியைப் பாரு”

பின்னால் இருப்பதை முன் பக்கம் கொண்டு வந்து பார்த்தாள். உள்ளங்கை அகலத்திற்கு ஈரம் இருந்தது. அறைக்குள் சென்று அலசி காயப் போட்டுவிட்டு வேறு உடை அணிந்து வெளியே வந்தாள்.

“ஏம்மா இப்பிடி எல்லாம் பண்ற?”

“இல்ல, இல்ல, அது அங்கன முந்தியே இருந்த ஈரம்”

“எனக்குத் தெரியும், சும்மா ஏதாச்சும் சொல்லாத.”

மற்றொரு நாள் வசிப்பறையில் மகன் சொன்ன நகைச்சுவைக்குச் சத்தம் போட்டுச்  சிரித்தவர், சடாரென எழுந்து அறைக்குள் சென்றார். செல்லும்போது தான் அவரின் பின்புறம் நிறமாறி இருப்பதைப் பார்த்த லதா பிளாஸ்டிக் இருக்கையிலும் ஈரத்தைப் பார்த்தாள். உலக மகா நகைச்சுவையை ரசிப்பது போல சத்தம் போட்டுச் சிரித்தாள். தம்பியையும், அப்பாவையும் அழைத்துக் காட்டினாள். அம்மாவுக்குப் பலமாய்ச்  சிரித்தால் சிறுநீர் கொஞ்சம் வெளியேறிவிடுகிறது என்பதைத்தான் தான் முதலில் கண்டு பிடித்துச் சாதனை செய்த மாதிரி பேசிக்கொண்டே இருந்தாள். மற்றவர்களும் இவளோடு இணைந்துகொள்ள, ரொம்ப நேரம் சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

இப்போதெல்லாம் சிரிக்கிற மாதிரி விஷயங்களைச் சொல்ல ஆரம்பிக்கும்போதே, அம்மாவைக் கழிப்பறைப் பக்கத்தில் நிற்கச் சொல்கிறாள் லதா.

அவளது அப்பாவும் நிறைய இதை வைத்துச் சீண்டலானார். தொலைக்காட்சியில் நகைச்சுவைக் காட்சி பார்க்கும்போது தவறாமல் சொல்லிவிடுவார்.

“ஒண்ணுக்கு இருந்திடாம பாரு”

அடிக்கடி இந்த வசனத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தார். என்ன செய்வதென்று புரியாத லதாவின் அம்மாவும் அவர்களோடு ஒப்புக்கு சங்கோஜப் புன்னகையை உதிர்த்துச் செல்வார்.

“பேம்பர்ஸ் கட்டிக்கோ ம்மா”

ஒருநாள் உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குச் சென்று கொண்டிருந்த அம்மாவிடம் சொன்னபோது, அவள் இரண்டு உள்ளாடை அணிந்திருப்பதால் கவலைப்படத் தேவையில்லை எனச் சொல்லிக் கிளம்பினாள்.

மழலையர் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது சீவி சிங்காரித்து அழகு பார்த்து அனுப்புவார் அம்மா. கடையில் துணி எடுக்கச் சென்றால் லதாவுக்கு அதிக விலையில் உடை இருக்கும்படி பார்த்துக் கொள்வார். தலையில் வைக்க வாங்கும் பிச்சிப்பூவில் முக்கால்வாசியைத் துண்டித்து லதா தலையில் தொங்க விட்டு, ஹேர் பின் குத்துவார்.

ஏழாவது படிக்கும்போது லதாவுக்கு முதல் மாதவிடாய். சொன்னதும் தேம்பித் தேம்பி அழுது கொண்டே இருந்தாள் வெகு நேரம். எதற்காக அம்மா அழுகிறாள் எனப் புரியாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் லதா. அவளை ஓர் ஓரமாய் அமர வைத்து விட்டு, போனில் லதாவின் அப்பாவை அழைத்து சொல்ல ஆரம்பித்தார்.

அதற்கடுத்து வந்த சில வருடங்களில் கோபமும், எரிச்சலும் அதீதமாய் வெளிப்படும் அம்மாவாய் இருந்தார். இப்படி ஏன் உட்கார்ந்திருக்க, இந்த மாதிரி உடை உடுத்தாத, அவன் யாரு? அவன் கூட என்ன பேசின? மீசை எல்லாம் அவனுக்கு மொளச்சிருக்கு, இப்படி நின்னு பேசினா என்ன நினைப்பாங்க? அண்ணன் மாதிரின்னு நீ சொன்னாலும் நம்ப மாட்டாங்க, அங்கெல்லாம் நிக்காத, அவங்க வீட்டுக்குப் போகாத, அதுங்க கூடச் சேராத, அந்தப் பய பார்வை சரியில்லை, பேசாத, மாடிக்குப் போகாத, தனியா கடைக்குப் போகாத, தம்பியைத் துணைக்குக் கூட்டிட்டுப் போ, அவங்க கொடுத்தா எதுவும் வாங்காத, இதைத் திங்காத, இங்க இருந்து எதையும் எடுத்து என்னைக் கேக்காம கொடுக்காத,  இன்னைக்கு மொத நாளு தலைல தண்ணி ஊத்திக்காம எப்படி மத்த சாமானைத் தொடுவ, முடிஞ்சிடுச்சுன்னா தலைக்கு ஊத்தி முடிக்காம சாமி ரூம்க்குள்ள ஏன் போன, இனிப்பு அளவா சாப்பிடு, காலை அகட்டி உக்காராத, இனி இந்த பனியன்லாம் போடாத…. ட்ரில் மாஸ்டர் கணக்காக விசில் ஊதாமல் அறிவுரைகளைச் சகட்டு மேனிக்குச் சொல்லிக் கொண்டே இருப்பார். ஆவேசமாக அவர் ஆணையிடும்போது, பணியாவிட்டால், இன்னும் உக்கிரம் ஆவார். உள்ளுக்குள் என்ன கணக்கு ஓடுகிறது என்று கணிக்கும் திறனற்றவளாய் லதா இருந்தாள்.

ஆணைகளுக்குக் கீழ்படிந்து நடந்து வாழப் பழகிக் கொண்டிருந்த லதா பத்தாம் வகுப்பு வந்துவிட்டாள். ஒருநாள் இப்படியான ஆணைகளில் ஒன்றை மீறி நடந்தவளை அடிக்கக் கையை ஓங்கினாள் அம்மா. ஓங்கிய கையைத் தனது  கைகளால் தடுத்து நிறுத்திய லதாவை ஒன்றும் செய்ய இயலவில்லை. தன்னை மீறி வளர்ந்து விட்டாள். இனி தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என நினைத்தாள். அதன் பின் கட்டளை இடுதல்கள் நடக்கவில்லை. மாறாக ஓரிரு வார்த்தைகளில் வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்தார். ஆறு மணிக்குள் வீட்டுக்கு வந்து விடு, இந்தக் கோவிலுக்குப் போக வேண்டும் என்பது மாதிரியானவை அவை.

இவைதான் அம்மாவின் மீதான கேலிக்குக் காரணங்களா அல்லது வீட்டில் எதிரித்துப் பேசாத எளிதான மனுஷி என்பதால் அம்மாவைக் குறி வைத்து லதா கிண்டல், செய்து பேசினாளா என்பது குழப்பமான கேள்வி. ஆனால் அவளின் தம்பியும், அப்பாவும் கூட இணைந்தே நக்கலடித்துச் சிரித்தது ஏன் என்றும் புரியவில்லை. கோபப்படாமல் பக்குவமாய்ப் பதிலைச் சொல்லிவிட்டுத் தன் செயலைச் செய்து கொண்டிருக்கும் அம்மா லதாவை மிகவும் ஆச்சரியப்படுத்துவாள்.

உறவினர் வீட்டுத் திருமணங்களில் கலந்து கொள்வதைத் தவிர்க்கும் லதாவைக் கெஞ்சிக் கூத்தாடி கூட்டிக்கொண்டு செல்வார். இவளுக்கே விசித்திரமாய் இருக்கும், எப்படி எல்லாம் விரட்டிய அம்மா இப்போது இப்படி ஆகிவிட்டார் என.

அம்மாவும் இவள் இப்படித்தான் பேசுவாள் எல்லோரும் சிரிப்பார்கள் எனத் தயாராய் இருப்பதால் கண்டு கொள்வதில்லை. பழகிப் போய் விட்ட ஒரு பேச்சு அமிலமாய் இருந்தாலும் உறைப்பதில்லை போலும்.

சதா ஏதாவது வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு பார்ப்பார். இரவு படுக்கையில் அமிர்தாஞ்சனைக் கையில் எடுத்து கை, கால், இடுப்பில் தேய்த்துக் கொள்வது அவரின் வாடிக்கை.

பிறந்து நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரை வெவ்வேறு முகங்களைக் காட்டிக் கொண்டே வந்துள்ள அம்மாவை அவளால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்ததே இல்லை.

முனைவர் படிப்பெல்லாம் படிக்க விடவில்லை குடும்பத்தில். அவளின் அப்பா விருப்பப்படி மின்வாரியத்தில் பொறியாளராக வேலை செய்யும் மாப்பிள்ளையை மணந்து குடும்பத் தலைவியானாள் லதா. அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகள். சிசேரியன்.  குழந்தைகள், கணவனைக் கவனித்துக் கொள்ள, பொழுது போதாமல் ஓடிக் கொண்டிருந்தாள். இரண்டு பிரசவங்களின் போதும், இப்போதும் கூடக் கொஞ்சம் உடல் நிலை சரியில்லாமல் போனால், அம்மா வந்து விடுவார். முழுமையாகச் சமைத்துப் போட்டுக் கவனித்துக் கொள்வார். ஓய்வு வேண்டும் என அவர் வாய் சொல்லி லதா கேட்டதில்லை. தம்பி மனைவியும் வேலைக்குச் செல்பவளாக அமைந்து விட்டதால் அங்கும் வீட்டு வேலைகளை அவரே தொடர்ந்து செய்தார். அதில் எள் அளவும் சலித்துக் கொண்டதில்லை. ஓய்வு பெற்ற அப்பாவோடு மாலை நேரத்தில் அருகில் உள்ள மைதானத்துக்குள் நடை பயிற்சி செய்வார். வேறெங்கும் போவதில்லை.

தம்பியை அவள் கடிந்து பார்த்ததாய்  நினைவில் இல்லை. எல்லாக் கால கட்டங்களிலும் அவன் மீது நேசமாய் மட்டுமே இருந்திருக்கிறாள். பெரிதாக ஆணைகள் இட்டதில்லை. குறிப்பாக அவன் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்டதில்லை. ஆரம்பத்தில் இருந்தே வேண்டுகோள் விடுக்கும் தோரணையில்தான் அவனிடம் பேசுவாள். இப்போது வரை அப்படித்தான் இருக்கிறாள். ஆனால் லதாவிடம் மட்டும் குறிப்பிட்ட காலகட்டத்தில் வந்து சென்ற கிரகணம் என நினைத்துக் கொள்வாள். என்ன குணம் இது, பெற்ற தாய் என்றெல்லாம் யோசிக்காமல் பதிலுக்குப் பதில் உன்னை என்ன செய்கிறேன் பார் என்பது. அவரது இடத்தில், ஏன், எதற்காகச் செய்கிறார் என்பதைப் பற்றிச் சற்றும் ஆராயாமல் மூர்க்கத்தனமாக என்றோ ஏறிய கோபத்தைத் தணித்துக் கொள்ள கையாண்ட வழிமுறை தவறு என்கிற அளவில் மட்டும் லதாவின் புரிதல் இருந்தது.

ஒவ்வொன்றின் மீதான பார்வையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்றாக இருக்கிறது. மாறிக் கொண்டே இருக்கிற இந்தப் பார்வை, வாழ்க்கையின் பதில் தெரியாத கேள்விகளுக்கு விடை அளிக்க முனைகிறது.

இப்போது நாற்பதை நெருங்குகிறது லதாவுக்கு. இன்று, கடுமையாய்த் தொடர்ச்சியாக  இருமிக் கொண்டிருந்தபோது அவளது நைட்டியின் பின்புறத்தை உள்ளுணர்வு உந்த தடவிப் பார்த்தாள் லதா, ஈரமாய் இருந்தது.

***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

  1. ஈரம் நெஞ்சின் ஈரத்தையும் அம்மாவின் கஷ்டத்தையும் புரிய வைத்து விட்டது…✨

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close