கட்டுரைகள்

ஆ.இரா. வேங்கடாசலபதியின் ‘திராவிட இயக்கமும் வேளாளரும்’ வாசிப்பு அனுபவம் – ச.ந.விக்னேஷ் –

கட்டுரை | வாசகசாலை

 

திராவிட இயக்கமும் வேளாளரும் (காலச்சுவடு – 2019 டிசம்பர் வெள்ளிவிழாப் பதிப்பு)

திராவிடம் என்னும் கருத்துநிலைக்கும் இயக்கத்திற்கும் நீண்ட பாரம்பரியம் உள்ளபோதிலும் அதுபற்றிய வரலாறு நேரடியாகத் தமிழில் எழுதுவதற்கான முயற்சி 1990களிலிருந்துதான் தொடங்குகிறது. அதற்கு முன்பாகவே ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியிருந்தாலும் ‘திராவிடம்’ பற்றிய தமிழ்நாட்டின் / தமிழர்களின் நோக்குநிலை இந்தக் காலத்திலிருந்துதான் பதிவு செய்யப்பட்டது. இந்த இருவகை ஆய்வுகளிலும் ஈடுபட்டவர் ஆ.இரா. வேங்கடாசலபதி. அதிக கவனம்பெற்ற தனது நூல்களுள் முதன்மையானதாகச் சலபதியே கருதும் நூல் ‘திராவிட இயக்கமும் வேளாளரும்’.

இது 1989இல் கட்டுரை வடிவில் எழுதப்பட்டுப் பின்னர் விரிவாக்கப்பட்டு 1994இல் நூலாக வெளியிடப்பட்டது. 1927 முதல் 1944 வரையிலான காலகட்டத்தில் சுயமரியாதை இயக்கத்திற்கும் சைவசபைகளுக்கும் இடையிலான உறவையும் முரணையும் ஆராய்வதன்வழி ‘திராவிட இயக்கம் வேளாளர் இயக்கம்’ என்ற விமர்சனத்திற்குப் பதில் தேடப்பட்டுள்ளது.

நூலின் தலைப்பு அதன் எடுகோளின் பொருட்டு ‘திராவிட இயக்கமும் வேளாளரும்’ என இடப்பட்டுள்ளது. ஆனால், வேளாளர் என்பதினும் பார்க்கச் சைவர் என்ற பதமே பொருத்தமானது என்று சலபதி கருதியுள்ளார். ‘சைவர்’ என்பது சாதி, சமயம், தத்துவம் ஆகிய மூன்று அடையாளங்களையும் தழுவி நிற்பதாக முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

திராவிட இயக்கம் வேளாளர் இயக்கம் எனில், வேளாளர்களின் அதிகாரபூர்வ அமைப்பாகக் கருதப்படும் சைவசித்தாந்த மகாசமாஜம் முதலான சைவசபைகளுக்கும் திராவிட இயக்கத்துக்குமான உறவு என்ன? என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு விடை தேட இந்நூல் முயன்றுள்ளது. சைவம் / சைவர் பற்றிய சுயமரியாதை இயக்கத்தின் பார்வை, அதற்குச் சைவ சபைகளின் எதிர்வினை, சுயமரியாதை இயக்கம் சைவருடன் அமைத்த கூட்டணி ஆகியன நூலின் முதலிரண்டு பகுதிகளில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

சுயமரியாதை இயக்கம் சைவ சமயத்தின் மீதும் சைவரின் மீதும் வைத்த விமர்சனங்கள் சைவத்தின் அடிப்படையையே அசைப்பதாக அமைந்தன. இதனால் சைவர்கள் தனிக்கூட்டம், மாநாடுகள் நடத்தித் தமது சமயத்தில் திருத்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர். மேலும், சுயமரியாதை இயக்கத்திற்கும் சைவருக்கும் பொதுவான கருத்து ‘பார்ப்பனர் அல்லாதார் நலன்’ என்பது மட்டுமே. அதுவும்கூட சுயமரியாதை இயக்கத்திற்குப் பல்வேறு கூறுகளுள் ஒன்றாக அமைய, சைவருக்கோ ஒற்றைப் பெரும் இலக்காக அமைகிறது. எனவே, இதிலும் ‘இருவரும்’ வேறுபட்டே நிற்பதாக இந்நூல் வாதிடுகிறது.

சுயமரியாதை இயக்கத்தோடு சைவர் இணைந்து செயல்பட்டது ‘இந்தித் திணிப்பு’ என்ற பொது ஆபத்தை எதிர்கொள்வதற்கு மட்டுமே. அந்தத் தற்காலிகக் கூட்டணியும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு முறிந்தது என்பதை இந்நூல் சுட்டுகிறது.

நூலின் முதல் இரண்டு பகுதிகள் நிகழ்வுப்போக்குகளைப் பகுத்தாய்கின்றன. மூன்றாவது பகுதி சைவத்தின் மீதான சுயமரியாதை இயக்க விமர்சனத்திற்கு முகம் கொடுத்த சைவர்கள் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. தனிநபர் பங்களிப்புகளை விளக்கும் அதே வேளையில், சைவர் எவரும் முழுமையாக சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்து நிற்கவில்லை என நிறுவுகிறது. ஒன்று அதை முற்றாக எதிர்த்தனர் அல்லது இரட்டை மனநிலையில் இருந்தனர் எனக் குறிப்பிடுகிறது.

நிகழ்வுப்போக்கு, தனிநபர் பங்களிப்பு என்ற இருநிலைகளிலும் சுயமரியாதை இயக்கத்திற்கும் சைவருக்குமான உறவை இந்நூல் கவனப்படுத்துகிறது. சுயமரியாதை இயக்கத்தின் கருத்துநிலை, இலக்கு, செயல்திட்டம், நடைமுறை ஆகியன விரிவடைந்து ஓரளவு முழுமையடைந்ததன் பெறுபேறாக 1944இல் அது ‘திராவிடர் கழகமாகப்’ பரிணமித்தது எனப் புரிந்துகொள்ளலாம். இப்படிப்பட்ட மாற்றம் ஏற்படுவதற்கு முன்னரே திராவிட இயக்கத்திற்கும் வேளாளருக்குமான உறவு நிச்சயிக்கப்பட்டுவிட்டது. எனவே, திராவிட இயக்கம் வேளாளர் இயக்கம் என்ற விமர்சனம் காலப்பொருத்தமற்றது என்றுகூட  சொல்லத் தகுதியற்றது என இந்நூல் வாதிடுவதாகவும் புரிந்துகொள்ளலாம்.

சைவர்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு ஆற்றிய எதிர்வினைகளின் வழியாக ‘திராவிடர் இயக்கம் வேளாளர் இயக்கம்’ என்ற விமர்சனம் மறுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் திராவிட இயக்கங்களில் வேளாளர்களின் எண்ணிக்கை பலம், அதிகார பலம் என்ன? என்ற கேள்வி முக்கியமானது. வேறுவகையில் சொல்வதானால், திராவிட இயக்கங்களில் ஏற்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு – பரவலாக்கம் பற்றிய விளக்கம் பெறப்படும்போது இந்நூலின் முடிபு கூடுதல் துலக்கமடையும்.

எனினும், தமிழ் என்பது சைவமே, தமிழ்ப்பண்பாடு வேளாளப் பண்பாடு மட்டுமே என்று கட்டியெழுப்ப எண்ணிய சைவரின் முயற்சியை முறியடித்ததிலும் தமிழ்ப் பண்பாடு என்பதற்கான அடிப்படை நூல்களாகச் சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றை நிறுவியதிலும் அந்நூல்களின் சமயச் சார்பற்ற தன்மை / சமயப்பொதுமையை வற்புறுத்தியதில் திராவிட இயக்கத்தின் பங்கு முக்கியமானது. அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தின் வரலாற்றை அறிய இது முக்கியமான நூல்.

***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close