சிறுகதைகள்
Trending

பிட்டுத் துணி – கணேசகுமாரன்

சிறுகதை | வாசகசாலை

ஆகாசமூர்த்தி பிறப்பில் எப்படியோ வளர வளர அவனுக்கு எதிலும் நிறைவின்றிப் போனது. எதிலும் நிறைவு கொள்ளாத மனம் சந்தோசம் அடையத் தகுதியற்றது என்பதை அரை மனதுடன் நம்பினான் ஆகாசமூர்த்தி. பால்யம், படிப்பு, வேலை, திருமணம், செக்ஸ் என்று எதிலும் நிறைவு கொள்ளாமல் இப்போது சாவிலும் முழு திருப்தியின்றி இழுத்துக்கொண்டு கிடக்கிறான். தனக்கு ஏன் இப்படி நிகழ்கிறது என்பதை ஆகாசமூர்த்தி அறிந்து ஆராயத் தொடங்கும்போது வயதில் பாதியைக் கடந்திருந்தான். பிறப்பிலே நோஞ்சான் ஆகாசமூர்த்தி. வீட்டில் பழைய சோற்றின் மிச்சம், வயிறு முழுக்க நிரப்பப்படும் நீராகாரம் என்று அவன் வயிறு எப்போதும் பசித்துக்கொண்டே இருக்கும். தாராளமாக ஒருமுறை ஒண்ணுக்குப் போனால் வயிறு ஒட்டி தோலை இழுத்துப் பிடிக்கும் எலும்புகள் கசாப்புக் கடையின் கொக்கியில் தொங்கும் ஆட்டின் நெஞ்செலும்பைக் காட்டியபடி இருக்கும். பள்ளிக்கூட காலத்தில் இந்த நோஞ்சான் பட்டம்தான் ஆகாசமூர்த்தியின் கோபத்தை மூக்கு நுனியில் அமர்த்தி சொறிந்துகொண்டே இருந்தது. அடிக்கடி மூக்கைச் சொறிந்துகொள்ளும் இதனாலேயே அவனை விட பலசாலியான நண்பர்களிடம் அடி வாங்கத் தொடங்கினான். அடிப்பவர்கள் நண்பர்களா என்ன…இப்படித்தான் ஆகாசமூர்த்திக்கு அனைவரும் எதிரிகளாகிப் போனார்கள்.

ஆகாசமூர்த்தியின் அப்பா கல்யாண ஆசையே இல்லாமல் இருந்தார். வாரிசு வேண்டுமென்று ஏதோ ஒரு தலை நிமிரா பெண்ணின் முகம் காணாமலே தாலி கட்டினார். ஆகாசமூர்த்தி பிறந்தபோது பிள்ளை பிறந்த சந்தோசம் கொண்டாடாமல் வீட்டுச் செலவில் புதிதாய் ஒரு வரவு என்றுதான் மனம் சங்கடப்பட்டார்கள் இருவரும். தான் தோன்றியாய் வளர்ந்தான் ஆகாசமூர்த்தி. படிப்பு என்பது ஒட்டவேயில்லை. சுட்டெரிக்கும் வெயிலில் ஓணான் பிடித்து சுருக்கிட்டு மகிழ்ந்தவன் பள்ளிக்கூடத்துக்குப் போவதை மறுத்து மழைக்கு ஒதுங்கினான். சோகையாய் வளர்ந்து எட்டாம் வகுப்புத் தோல்வியுடன் புத்தகம் சுமந்த மஞ்சள் பையைத் தூக்கி ஓரமாய் போட்டான். அவனுடன் படித்த தேள் கடிக்கி நாராயணனின் அண்ணன் வைத்திருந்த டெய்லர் கடையில் காஜா எடுக்கவும் டிராயருக்கு பட்டன் தைக்கவும் வேலைக்குச் சேர்ந்தான். சினிமாவில் காட்டப்படுவது போல் தையல் மெஷினின் சக்கரம் சுற்றச் சுற்ற ஆகாசமூர்த்தியின் வளர்ச்சி முதிர்ந்துவிடவில்லை. மிக சீக்கிரத்திலேயே ஆகாசமூர்த்தியின் அப்பா அம்மாவுக்கு வயதாகிப் போனது. ஊரே கொண்டாடும் தீபாவளி நாட்களிலும் தையல் கடையில் படுத்துறங்கினான். தையல் கடை முதலாளி எடுத்துத் தரும் பிட்டுத் துணியில் தைத்த சட்டையும் மிச்சத் துணியில் தைத்த டிராயரும்தான் அவனது விழாக்கால உற்சாகத்துக்கு மத்தாப்பு சொரிந்தன.

ஒருநாள் கடை முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் ஒற்றைக்காலில் அடிபட்டு ரோட்டோரமாய் துடித்துக்கொண்டிருந்த வெள்ளை நிற நாய்க்குட்டி ஒன்றைக் கண்டான். தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தவன் அடிபட்டிருந்த காலைச் சுற்றி பிட்டுத் துணியால் கட்டுப் போட்டான். டீ வாங்கிவந்து பிளாஸ்டிக் சோப்பு டப்பாவின் மூடும் பகுதியைச் சுத்தமாகக் கழுவி ஆறிப்போயிருந்த டீயை அதில் ஊற்றினான். சப்புக்கொட்டி குடித்த அந்தக் குட்டி, உடம்பில் தெம்பு ஏறியவுடன் கட்டுப் போட்டிருந்த வண்ணமயமான பிட்டுத் துணியை இழுத்துக்கொண்டு வீடெங்கும் ஊன நடை பயின்றது. ஆகாசமூர்த்தியின் தையல் முதலாளி வளர்க்கும் உயர்தர நாயின் பெயர் தாரா. தன் ஒற்றைக்கால் நாய்க்குட்டிக்கும் தாரா என்று பெயர் வைத்து டீயூற்றி வளர்த்தான்.

புண் ஆறினாலும் ஒட்டுத்துணி கட்டு மட்டும் மாறவேயில்லை. கடையிலிருந்து வந்ததும் தினமும் கட்டு போட்டுவிட்டே டீ ஊற்றுவான். உபரியாய் சில நாட்களில் அவன் சாப்பிடும் வரிக்கியும் போடுவான். ஆகாசமூர்த்தி வீட்டில் இல்லாத நேரத்தில் அவன் அம்மாவால் மோர் சோறு போட்டு வளர்க்கப்பட்டது தாரா. அதிகம் குரைக்காத மென் சோக முனகலுடன் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் தாராவின் சின்னஞ்சிறு உலகம் ஆகாசமூர்த்திக்கு சிறிது சந்தோசத்தைத் தந்தது எனலாம். தாராவின் கண்களின் நன்றியை தன் கரங்களில் சேமித்தான் ஆகாசமூர்த்தி. தினமும் காலை கடைக்குப் புறப்படும்போது அவன் காலையே சுற்றிச் சுற்றி வாலாட்டும் தாராவை இரு கைகளால் அள்ளி முகர்ந்து பார்த்துவிட்டு இறக்கி விடுவான். அவன் நாசி தன் உடம்பில் உரசிட கண்களில் காதல் கசியவிடும் தாரா.

தையல் கடையில் அவனுக்கு ஜாக்கெட் தைக்கும் பணி தரப்பட்டது. அளவு ஜாக்கெட் தந்துவிட்டுச் செல்பவர்கள் ‘கைய மட்டும் கொஞ்சம் புடிச்சிடுங்க’ ‘பின்னாடி முதுகுப்பக்கம் லேசா எறக்கம் வேணும்’ என்ற ஆணைகளுக்கிணங்கி மிகச் சரியாய் ஆகாசமூர்த்தி ஜாக்கெட் தைத்ததில் ஊரில் உள்ள பெண்களின் முதுகுப்புறங்கள் அவனால் பெருமைப்பட்டன. திருவிழாக்களிலும் திருமண வீடுகளிலும் கச்சிதமான ஜாக்கெட் அளவுகள் விசாரிக்கப்பட்டு பகிரப்பட்டன. சரியாய் தைப்பது ஒருபுறம் இருக்க குறித்த நேரத்துக்கு முன்பே தயாராகும் ரவிக்கைகள் முதலாளியையும் வாடிக்கையாளப் பெண்களையும் ஆச்சரியத்தில் தள்ளி திருப்தியுறச் செய்தன. ஓணான் அடிப்பதில் இருக்கும் குவிந்த ஒருமித்த கவனத்தை தையல் மெஷினில் நகரும் ஊசியில் சிரமேற்கொண்டு செலுத்தினான் ஆகாசமூர்த்தி. காலம் அவனை ஒரு சிறந்த லேடிஸ் டெய்லராய் உருவாக்கிக் கொண்டிருப்பதை உணராமலே இருந்தான்.

ஒரு வருடத்தில் வாலை வேகமாக ஆட்டியபடி திமுதிமுவென்று வளர்ந்த தாராவை ஒருநாள் பாம்பு கடித்து நுரை தள்ளி செத்துக் கிடந்த நிலையில் கண்டாள் ஆகாசமூர்த்தியின் அம்மா. அதிகாலையில் வாசல் பெருக்க வந்தவள் எந்தச் சலனமும் இன்றி வாசலில் படுத்துக் கிடந்த தாராவின் மீது தண்ணீர் தெளித்து எழுப்பினாள். அசையாத தாராவைக் கண்டதும் சற்றே துணுக்குற்று குழப்பத்துடன் புருசனை எழுப்பி விபரம் சொல்ல, தாராவைப் புரட்டிப் பார்த்தவர் அதன் மூக்குக்கு அருகில் இரண்டு விஷப்பற்களின் தடம் இருப்பதைப் பார்த்தார்.  நீலம் பூத்திடாத தாராவைக் கொல்லைப்புறத்தில் குழி தோண்டி புதைத்து மூடினார் ஆகாசமூர்த்தியின் அப்பா.

கடைக்குச் செல்லும் முன்பு முகர்ந்து பார்ப்பதற்காக தாராவைத் தேடிய ஆகாசமூர்த்தியிடம் விபரத்தைச் சொல்லி குழியைக் கை காட்டினார் அப்பா. புதைக்கும் முன் அவிழ்த்திருந்த ஒற்றைக் கால் கட்டின் பிட்டுத் துணியை ஆகாசமூர்த்தியின் கையில் தந்தார். டீ ஊற்ற வந்த தன் கையை ஒருமுறை பசி அவதியில் தாரா நக்கியது ஆகாசமூர்த்திக்கு ஞாபகம் வந்து உள்ளுக்குள் பெருந்துக்கமொன்று ஒற்றைக் காலுடன் முனகத் தொடங்கியது. குரல் உயர்த்திக் கத்தாத அத்தனை அன்பையும் நம்பிக்கையையும் நன்றியையும் திருப்தியையும் கண்களில் மட்டும் வெளிப்படுத்தி உறங்கிப் போகும் தாராவின் மென்மை ஆகாசமூர்த்தியின் உள்ளங்கையில் உரசியது. கடைக்குப் போகாமல் ஊர் சுடுகாட்டு அரளிச் செடியையே அன்று முழுவதும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனையறியாமல் விம்மல் வந்தது. கையில் வைத்திருந்த தாராவைக் கட்டிய துணியில் கண்களைத் துடைத்துக்கொண்டான்.

சாயங்காலமாக அவனைத் தேடி சுடுகாட்டுக்கு வந்த அவனின் அப்பா, கடை முதலாளி வந்து அவனைத் தேடிவிட்டுப் போனதாகச் சொன்னார். ஆகாசமூர்த்தி கடைக்குப் போனபோது அவன் வேலைக்குச் சேர்ந்த இத்தனை வருடத்தில் இன்றுதான் கடைக்கு வரவில்லையென்றும் அதனால்தான் அவனைத்தேடி வீட்டுக்கு வந்ததாகவும் சொன்னார் முதலாளி. ஆகாசமூர்த்தியின் இருப்பை உணர்ந்தவர் அடுத்த மாதம் அவன் சம்பளத்தை உயர்த்தினார். தீபாவளி, பொங்கல் பொழுதுகளில் வேலையோடு ஊதியமும் அதிகமானது. காசு இருந்தாலும் ருசியான சாப்பாட்டையோ அழகான ஆடைகளையோ விரும்பவில்லை ஆகாசமூர்த்தியின் உலகு. சந்தோசம் என்பது வேறெங்கோ இருப்பதாய் தீர்மானித்து இயங்கினார்கள் அவனும் அவனைப் பெற்றவர்களும்.

திருமண வயது தாண்டியும் எதன் மீதும் பிடிப்பற்று ஒரு முழுக்கைச் சட்டையும் நீல நிற லுங்கியுமாய் திரிந்து கொண்டிருந்தான் ஆகாசமூர்த்தி. வயதான அம்மாவின் வற்புறுத்தலுக்கு வேண்டா வெறுப்பாகத் தலையாட்டி வைத்தான். உள்ளூரிலேயே ஒரு பெண்ணைப் பார்த்து முடித்தாள் பெற்றவள். தலை நிமிராமல் தாலி வாங்கிக்கொண்ட பாக்கியத்தின் முகம் பாராமல் தாலி கட்டினான் ஆகாசமூர்த்தி. முதலிரவில் தான் ஒருமுறை ஆகாசமூர்த்தியின் தையல் கடைக்கு வந்து ஜாக்கெட் தைக்கக் கொடுத்ததாகவும் மிகக் கச்சிதமாக ஜாக்கெட் தைக்கப்படிருந்ததாகவும் அதிலிருந்து தான் எந்த ஜாக்கெட் தைத்தாலும் ஆகாசமூர்த்தியிடம்தான் தருவது என்றாள் பாக்கியம். ஆகாசமூர்த்தி கழற்றிப் போட்டிருந்த பாக்கியத்தின் ஜாக்கெட்டையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

எப்போதும் ஈர வாசனை வீசும் தன் வீட்டில் புதிதாய் ஒரு வாசனை உலவுவதை உணர்ந்தான் திருமணமான சில நாட்களிலேயே ஆகாசமூர்த்தி. பாக்கியத்தின் வாசனை ஆகாசமூர்த்தியின் நாசியில் மோதிக்கொண்டே இருந்தது. ஒற்றைக்கல் சுவர் எழுப்பி வீட்டை இரண்டாகப் பிரித்து புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் தனி அறை தந்திருந்தாலும் அவர்களின் அந்தரங்க வெட்கச் சிவப்பு சுவர் தாண்டி ஆகாசமூர்த்தியின் அம்மா கண்ணில் விழத்தான் செய்தது. தன் மகன் இப்படியெல்லாம் பேசுவானா சிரிப்பானா என்று ஆச்சரியமானாள் தாய்க்கிழவி. தன் வீட்டில் தான் காணாத கேளாத கதைகளை புகுந்த வீட்டில் கேட்டு சந்தோசமானாள் பாக்கியம். கருவுற்ற ரகசியத்தைக் கணவனின் காதோரம் குசுகுசுத்தபோது அவர்களுடன் சேர்ந்து அன்றைய மழையும் கொண்டாடியது பெரு மகிழ்ச்சியை. மழை நீர் சேமிக்கும் அம்மாவை அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாசமூர்த்தி. பாக்கியத்தின் ஆசைக்காக டிவி வாங்கி வந்தான். சாணம் போட்டு மெழுகிய தரையில் விழுந்த தொலைக்காட்சி வெளிச்சத்தில் மாறும் பிம்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் கணவன் மனைவி இருவரும். பணம் என்பது சந்தோசம் தரும் கருவி என்பதை முதன்முறையாக  உணர்ந்தான் ஆகாசமூர்த்தி. முற்பிறவி சாபம் ஒன்று பாக்கியத்தைக் கண்டடைந்தபோது அவள் அரசாங்க ஆஸ்பத்திரியில் உலகத்து வலிகளை ஒன்று சேர்த்து பல்லிடுக்கில் வைத்து முக்கிக் கொண்டிருந்தாள். வீறிட்டுக் கத்தியபடி ஆகாசமூர்த்தியின் பெண் மகவு பூமியில் இழுக்கப்பட்டபோது பாக்கியம் தன் மூச்சை நிறுத்தியிருந்தாள். ஆகாசமூர்த்தியின் இல்லற வாழ்வெனும் ஆயிரம் காலத்துக் குறிப்பு சில வரிகளிலேயே முடிந்துபோனது.

ஆகாசமூர்த்தியின் குழந்தை அவன் வீட்டிலும் பக்கத்துத் தெருவில் இருந்த பாக்கியம் அம்மா வீட்டிலுமாய் மாறி மாறி வளர்ந்தாள். மறுபடியும் தனியனானான் ஆகாசமூர்த்தி. அவனது வீடு பழைய ஈரத்திலும் ஒலியற்ற நிசப்தத்திலும் அடங்கிப்போனது. தாராவின் காலில் சுற்றப்பட்ட வண்ணத்துணிக்கு அருகில் சேகரமானது பாக்கியத்தின் பழைய ஜாக்கெட். ஒருநாள் கடையிலிருந்து வீட்டுக்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரியின் டிரைவர் போதையின் மயக்கத்தில் ஆகாசமூர்த்தியின் மீது மோத சாலையோரம் இருந்த எல்லைக்கல் மீது ஆகாசமூர்த்தியின் கால் பட்டு பாத நரம்பு நசுங்கிப்போனது. ஆஸ்பத்திரிக்குச் சென்று சிகிச்சை எடுத்தாலும் முன்போல் தையல் மெஷினில் உட்கார முடியாமல் போயிற்று. வீட்டுக்குள்ளேயே ஒடுங்கினான். ஆகாசமூர்த்தியின் அப்பாவின் சம்பாத்தியம் மூன்று பேருக்குமான கஞ்சி ஊற்றியது. தன் கனவுகளில் பச்சையம் நிரந்தரமாவதைக் கவனித்த ஆகாசமூர்த்தி கண்மாய் நிரம்ப மழை கொட்டிய ஒருநாளில் பெருங்குரலெடுத்து அழுதான்.

வலது பாதம் தரையில் படாமல் கக்கத்தில் கம்பு ஊன்றியபடி தாங்கித் தாங்கி நடந்து வெளியே போய் வந்தான். ஆற்றுப்பக்கம் கருவைக் காட்டுக்குள்ளே நின்றுகொண்டே மலம் கழித்தான். பேப்பரில் துடைத்து எறிந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான். நிறைந்த அமாவாசை நாளன்று பொங்கிய சோற்றில் சாம்பார் ஊற்றிப் பிசைந்து கூரை மேல் விட்டெறிந்து காகா என்று கத்திவிட்டு வந்த ஆகாசமூர்த்தியின் அம்மா கணவனையும் மகனையும் சாப்பிட அழைத்தாள். கை கழுவிவிட்டு வந்து பார்த்தபோது சமையல் பாத்திரங்களின் மீது குப்புறப் படுத்தபடி செத்துப் போயிருந்தாள்.

இரு ஆண்கள் மட்டும் இருந்த  அந்த வீடு மெள்ள ஒரு துக்கச் சாயலைப் பூசிக்கொண்டது. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கூட அங்கொரு வீடு இருப்பதையும் அதில் மனிதர்கள் வசிப்பதும் கவனத்துக்கு வராமல் போனது. காசும் பசியும் இருக்கும்போது ஆகாசமூர்த்தியின் அப்பா கடையில் இட்லி வாங்கிச் சாப்பிட்டார். மகனுக்கும் வாங்கி வந்து தந்தார். சாப்பிடும் உணவின் நிறம் நாளுக்கு நாள் மாறி வருவதைக் கவனித்தான் ஆகாசமூர்த்தி. ஒருநாள் இரவு கனவு வந்தது. தாராவின் ஊனக் காலிலிருந்து வண்ணமயமான ஒட்டுத்துணி அவ்வூரெங்கும் நீண்டிருந்தது. ஜாக்கெட் அணியாத பாக்கியம் உடம்பெங்கும் பிட்டுத் துணியால் போர்த்திக்கொண்டு பறந்து வந்து ஆகாசமூர்த்தியின் கண்களில் மோதினாள். அவளின் கைகள் அவனின் கண்களை இறுகப் பொத்தியதில் மூச்சுத் திணறி விழித்தான். நடு இரவில் உலகம் சாவின் அமைதியைப் பூசிக்கொண்டு அமர்ந்திருந்தது.

தான் எதற்குப் பிறந்தோம், எதற்கு இந்த வாழ்வு, வாழ்வுக்குத் தன்னைப் பிடிக்கவில்லையா, தனக்கும் வாழ்வுக்குமான பிணைப்பு இந்த ஜென்மத்தில் இல்லையா…இந்த வாழ்வில் தனக்குப் பிடித்த இனிப்பு, தான் கொண்டாடும் திருவிழா, தனக்கான முத்தம் என்ற ஒன்று இல்லாமல் போனது ஏன் என்று யோசித்தான். தகப்பனின் இருமல் சத்தம் இரவைக் கிழித்து எழுந்ததும் ஆகாசமூர்த்தி தீர்மானித்தான். தாங்கு கம்பைப் பொருத்திக்கொண்டு வீட்டை விட்டு ஒரு கால் வெளியேறுவதை கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தார் ஆகாசமூர்த்தியின் அப்பா.

ரோட்டோரமாய் நின்று சிறுநீர் கழித்துக்கொண்டிருந்த ஆகாசமூர்த்தியின் மீது வளைவில் திரும்பிய லாரி மோதியது. சாலையில் பாய்ந்த வெளிச்சத்தில் டிரைவர் கடைசி விநாடியில் ஆகாசமூர்த்தியைக் கவனித்து வண்டியைத் திருப்புவதற்குள் முன் சக்கரம் ஆகாசமூர்த்தியின் காலில் ஏறி நசுக்கி எலும்பை நொறுக்கி முன்னேறியது. பின் சக்கரம் அடுத்த காலில் ஏறி இறங்க டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாய் விரைந்தான். இரண்டு கால்களும் கூழான நிலையில் வலி தாள முடியாமல் மயங்கிய ஆகாசமூர்த்திக்கு நினைவு வந்தபோது அதே இடத்தில் கிடந்தான். தன் மீது மழை பெய்து கொண்டிருப்பதை உணர்ந்தான். முகத்தில் விழும் மழையை தவிர்க்க முடியாமல் ஏற்றுக்கொண்டு அழுதுகொண்டிருக்கும் ஆகாசமூர்த்தி இன்னும் சாகவில்லை.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. இலக்கிய பத்திகளை பிட்டு வைத்து இருக்கிறார் கணேச குமாரன் தாயின் பிடிசோற்றுக்கு தன் சிறுதை வரிகளால் ஏங்கிடும் குழந்தை போன்று வாசிக்கிற வாசகனின் இதயத்தில் வசிக்க வைத்துவிட்டார் சிருகதை படித்த உணர்வில்லை
    ஆனாலும் பிட்டுத்துணி, சாரா குட்டி நாய், அம்மா பாத்ததிர படைப்பு, குறைந்த கால அளவில் ஒரு நெடுங்கதை படித்து விட்ட மாயை. எழுத்து வித்தகன் என்றழைத்தால் பொருத்தமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button