கட்டுரைகள்
Trending

பிக் பாஸ் 3 – நாள் 27 & 28 – என்னது நண்பர்கள் நடுராத்திரில பேசக்கூடாதா?

மித்ரா

இந்த நாட்டாமை வரும் வார இறுதி எபிசோட்கள் எல்லாம் அந்த நாட்டாமைக்காக மட்டுமே பார்க்கப்படுபவை தான் (நான் என்னைச் சொன்னேன்). மத்தபடி நாம் அடித்து துவைத்த பஞ்சாயத்துகளைத் தான் அவரும் வந்து இரண்டு நாட்களாகப் பேசிக் கொண்டிருப்பார். மொக்கை மொக்கை கேம்ஸ் வேறு. பெரிய மனிதத் தன்மையோடு நமக்குத் தோன்றியதையே அவரும் பேசி விட்டால் ஓகே. எதாவது வழக்கம் போல வாயை விட்டால் அதையே கன்டென்ட் ஆக்கலாம் என நினைத்தால் ஓரளவு பங்கமில்லாமல் சமாளித்து விடுகிறார் கமல்.

Big Boss Day 27 28
Big Boss Day 27 28

‘வெந்த சப்பாத்தியில் வேலைப் பாய்ச்சியது’ பற்றி நாசூக்காக லாஸ்லியாவிடம் கேட்ட கமல், கழிவறை சுத்தம் செய்யும் அணியில் இருந்து மாற்றச் சொல்லி மோகன் வைத்யா வைத்த கோரிக்கையை, “ஏன் அருவறுப்பாக இருந்ததா?” என நேரிடையாகக் கேட்டார். இரண்டு பேரும் நேர்த்தியாகச் சமாளித்தனர்.

கவின் பிரச்சனையை பேசும் போது தான் சற்றே கடுப்பைக் கிளப்பினார். முதலில் கவினின் பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட மூவருக்குமே மிக மிக பெர்சனலானது. அத்தனை பேருக்கு முன்னால் லைவாக கமல் கேட்கும் கேள்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதே அவர்களுக்கு தர்ம சங்கடமான நிலை. அதைப் பற்றி கவினும் சாக்ஷியும் கூட புலம்பிக் கொண்டிருந்தனர். பின் விசாரணையின் போது, உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் புண்படுத்தியது தவறு என கவின் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டதும், சாக்லேட்டால் ஆரம்பித்த பிரச்சனைக்கு வீட்டிற்குள் சாக்லேட்டை அனுப்பி சமாதானம் செய்து வைத்ததும் நன்றாகத் தான் இருந்தது. அப்போது கமல் சொன்ன ஒரு விஷயம் கவனிக்க வேண்டியது. “நீங்கள் இந்த நாலு சுவற்றுக்குள் இருப்பதால் இதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரிகிறது. வெளியே வந்தால் தெரியாது.” என்றார். உண்மை தானே. ஒரே வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு, செய்ய வேறு வேலையின்றி, தவிர்க்க வேண்டிய முகங்களைத் தவிர்க்க வாய்ப்பில்லாமல் மீண்டும் மீண்டும் அதையே யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் சின்ன விஷயம் கூட பூதாகரமாக மாறும். மனித மனம் அந்த வேலையைச் செவ்வனே செய்யும். ஆறாம் அறிவை மனிதன் எதற்கு உபயோகப்படுத்துகிறானோ இல்லையோ இப்படிக் கண்டதை யோசித்துக் குழப்பமாகப் பயன்படுத்துகிறான். வேறு மனிதர்களை, சூழல்களை, பிரச்சனைகளைச் சந்திக்கும் போது மற்றவையெல்லாம் பெரிதாகத் தெரியாது.

ஆனால், இடையில் “காமேஸ்வரன் இப்படியெல்லாம் பண்ணலாம் கவின் பண்ணக் கூடாது.” என மைக்கேல் மதனகாமராசன் திரைப்படத்தைப் பற்றியெல்லாம் பேசியது சம்பந்தமில்லாமல் பேசுவது போல இருந்தது.

இந்த சீசனின் முதல் குறும்படம் மீராவுக்காக ஒளிபரப்பப்பட்டது. ஆனால், “இந்த சப்பை மேட்டர்க்கெல்லாம் குறும்படமா? குறும்படத்துக்குண்டான மரியாதை போச்சே..” எனத் தோன்றியது. ஆனால் மீராவுக்கு அதெல்லாம் தான் பெரிய பிரச்சனைகள். ஆனால், அந்த விவகாரத்தில் சேரன் சொன்ன பாய்ண்ட் சரியானதாக இருப்பதாகப் பட்டது. கவினும் தன் பஞ்சாயத்திற்கு முன் அதை நினைத்துத் தான் பயந்தார். ஒரு வாரமாக யாரிடம் என்ன வார்த்தைகளப் பயன்படுத்திப் பேசுகிறோம் என்றெல்லாம் யாரும் நினைவில் வைத்துக் கொண்டிருக்க முடியாது. நாம் பெரிதாக நினைக்காத விஷயங்கள் மறந்து விடும். சில நேரங்களில் சொல்ல நினைத்ததை சொல்லி விட்டதாக மூளை குறித்து வைத்து விடும். இதையெல்லாம் பஞ்சாயத்தாக்கினால் என்ன செய்லது?

அடுத்ததாக நாம் அனைவரும் ஆலுடன் எதிர்பார்த்த மோகன் வைத்யா வெளியேற்றுப்படலம். ஒரு மனிதன் எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழவே கூடாது என்பதற்கு ஒரு ஆகச்சிறந்த உதாரணம் மோகன் வைத்யா தான். அவரைப் பற்றி மேலதிகமாகப் பேச எதுவுமேயில்லை.

சொல்ல மறந்து விட்டேன். கவின் விஷயத்தில் பஞ்சாயத்து செய்த போது கமல் ஒன்று சொன்னார். அது உச்சகட்ட அதிர்ச்சியைத் தந்தது எனக்கு. அதாவது, “லாஸ்லியாவுடன் இருப்பது நட்பு என நீங்கள் சொல்லலாம். ஆனால் அதை மக்கள் நம்ப மாட்டார்கள். ராத்திரி 1.45 க்கு நண்பர்களுக்கு என்ன பேச்சு எனக் கேட்பார்கள்?” என்றார். அடப்பாவிகளா. நண்பர்கள் நடுராத்திரி பேச மாட்டாங்க. பேசுனா அது நட்பில்லனு எல்லாம் யாருய்யா சொல்லித் தரது உங்களுக்கு. நாங்கல்லாம் விடிய விடிய பேசுவோமே. உண்மையாகவே நட்பாகப் பேசுற ஆண்-பெண் நண்பர்களை நம்புகிற அவர்களின் துணைகளும், குடும்பத்தினரும் இதைப் பாத்தா என்னய்யா நினைப்பாங்க. சின்ன சின்ன விஷயங்களைக் கூட யோசிச்சுப் பேசுங்க ஆண்டவரே. பேசனும்னு எதையாவது பேசாதீங்க ப்ளீஸ்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button