கட்டுரைகள்
Trending

பிக் பாஸ் 3 – நாள் 25 & 26 – மழையைத் தானே யாசித்தோம்… கண்ணீர்த் துளிகளைத் தந்தது யார்?

மித்ரா

சுற்றிச் சுற்றி நிறைய சிக்கல்கள். ஒரு மனிதனால் தனக்குத் தெரிந்த அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது. அனைவர் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய முடியாது. இதை உணர்பவர் தான் நிம்மதியான வாழ்வை வாழ்கின்றனர். உணராதவர்கள் தானும் குழம்பி காயப்பட்டு, மற்றவர்களையும் குழப்பி காயப்படுத்தி குற்றவாளியாகின்றனர். சில நேரங்களில் எதன் பொருட்டும் அசராதவர்களையும் சூழல் தரும் அழுத்தம் சற்று அசைத்துப் பார்த்து விடுகிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் கடந்த வாரம் முழுவதும் நடக்கும் பிரச்சனைகள் அனைத்துமே, சாக்ஷி-கவின்-லாஸ்லியா, ஷெரின்-தர்ஷன்-லாஸ்லியா இவர்களுக்கிடையேயான உணர்வுப் போராட்டங்கள் தான். நிச்சயமாக இதில் யார் மீதும் நாம் பொத்தாம் பொதுவாக குற்றம் சொல்லி விட முடியாது. மனித மனங்களின் இயல்பென்பது மீண்டும் மீண்டும் நம்மை வியப்புக்குள்ளாக்கி திகைக்க வைக்கக் கூடியது. இதில் கவின் மற்றும் லாஸ்லியாவின் பார்வையில் மட்டும் இந்தப் பிரச்சனைகளை அணுக முயலலாம்.

கவினை இந்தப் பிரச்சனைகள் எதிலுமே நாம் குற்றம் சாட்ட முடியாது. அது பெரும்பான்மை ஆண்களின் பொது குணம். கவின் போன்ற ஏராளமான ஆண்களை சாக்ஷி சந்தித்திருப்பார். லாஸ்லியா சந்தித்திருப்பார். நீங்களும் நானும் கூட கடந்திருக்கிறோம். கவினுக்கு சாக்ஷி மீதிருப்பது, நட்பு, அது தரும் உரிமை, பொசசிவ்னெஸ், கொஞ்சம் க்ரஷ், ஈர்ப்பு எல்லாமுமே. அது காதலென்று அப்பட்டமாகச் சொல்லி விட முடியாத நிலை. அதே நேரம் லாஸ்லியா மீதிருப்பது க்ரஷ், ஈர்ப்பு மட்டுமே. லாஸ்லியாவிடம் கவின் செய்தது வெறும் Flirt மட்டுமே. இப்படி ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மேல் ஈர்ப்பு வருவது மிக மிக இயல்பான ஒன்று. அப்படியெல்லாம் இல்லை எனச் சொல்பவர்கள் சர்வ நிச்சயமாகப் பொய் சொல்கிறார்கள்.

ஒரு கட்டத்தில், தான் லாஸ்லியா பக்கம் கவனத்தைத் திருப்புவதை சாக்ஷி விரும்பவில்லை எனத் தெரிந்து அதை சரி செய்ய முயல்கிறார் கவின். உண்மையில், சாக்ஷி மீது தோன்றிய பொசசிவை அடுத்தகட்டத்திற்கு நகர விடாமல் தடுக்க நினைத்து கவின் எடுத்த முடிவு தான் லாஸ்லியாவுடன் பழகுவது. ஆனால், தன்னைப் பற்றி யோசித்த கவின் சாக்ஷி அதை எப்படி எடுத்துக் கொள்வார் என யோசிக்க மறந்து விட்டார். இங்கு தான் சிக்கல் ஆரம்பிக்கிறது. சாக்ஷி காயப்படுவது தெரிந்து பதறியடித்து சரி செய்ய முயலும் போது, இங்கே லாஸ்லியா கவினிடம் வெட்கப்படத் தொடங்கி விடுகிறார். “நான் நம் உறவை காதலை நோக்கி நகர விட வேண்டாம் என நினைத்துத் தான் விலகிச் சென்றேன்.” என வெளிப்படையாகவே கவின் ஒப்புக் கொள்வது சாக்ஷியை இன்னும் காயப்படுத்தவே செய்யும். ஆனால், லாஸ்லியாவிற்கு கிடைக்கும் கைதட்டல்களுக்காகத் தான் கவின் அந்தப்பக்கம் சாய்ந்து விட்டார் என சாக்ஷி நினைப்பதெல்லாம் அபத்தம். சாக்ஷி மனதில் இப்படியொரு எண்ணம் இருப்பதைச் சொல்லி சரி செய்யுமாறு கவினுக்கு அறிவுரை சொல்கிறார் சேரன்.

சாக்ஷி இடத்தில் எந்தப் பெண் இருந்தாலும், இப்படித் தான் செய்வாள். அபிராமி வெளிப்படையாக கவின் மீது இருக்கும் மையலைத் தெரிவித்தும் அவரை கண்டுகொள்ளாமல் தன் பின்னால் கவின் சுற்றுவது சாக்ஷியை குஷிப்படுத்தியிருக்கும். அது திடீரென்று இல்லையென ஆகும் போது, தனக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டதாகத் தோன்றும் போது, தன்னிடம் பேசியது போலவே இன்னொருவரிடமும் கவின் பேசுகிறார் எனத் தெரியும் போது ஏமாற்றத்தாலும் அவமானத்தாலும், கோபமும் வருத்தமும் கொள்கிறார் சாக்ஷி. அது அழுகையாக வெடிக்கிறது. எந்தத் தப்புமே செய்யாமல் குற்றவாளியாகிறார் கவின்.

இந்தப் பக்கம் லாஸ்லியா. பொதுவாக ஒரு 15 பேர் மட்டுமே இருக்கும் ஒரு வீட்டில் வேறு எந்த பொழுதுபோக்கிற்கும் வழி இல்லாத சூழலில் அங்கு என்ன நடந்தால் நமக்கென்ன என தேமேயென்று நம்மால் இருக்க முடியுமா? அது மனித இயல்பா? ஆனால், அப்படித் தான் கடந்த 23 நாட்களாக இருக்கிறார் லாஸ்லியா. இதுவே மிகப்பெரிய மன அழுத்தம். அப்படி எதற்கு இயல்பை விட்டுக்கொடுத்து எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க நினைக்கிறார்கள் என்றே புரியவில்லை. கவின் செய்யும் சேட்டைகளை, அவர் தன்னிடம் வழிவதை ரசிக்கிறார் லாஸ்லியா. இவருக்கும் முன்பிருந்தே கவின் மேலொரு மையல் இருந்ததாம். இதனால் இயல்பாகவே லாஸ்லியாவின் மனம் கவின்பால் வீழத் தொடங்கும் போது தான் சாக்ஷி வெடிக்கிறார். கவின் பதறியடித்துக் கொண்டு சமாதானம் செய்ய ஓடுகிறார். இதெல்லாம் லாஸ்லியா இத்தனை நாள் காத்து வந்த ஒரு நிலைத்தன்மையை சிறிது சிறிதாக இழக்கக் காரணமாகின்றன. சாக்ஷியிடம் கெஞ்சி விட்டு இரவு 12 மணிக்கு மேல் கவின் வரும் வரை வெளியே இயல்பாக இருப்பது போல தேவுடு காக்கிறார் லாஸ்லியா. ஆனால் அப்போது அவர் மனதிற்குள்ளேயே பெரும்போர் நிகழ்ந்து கொண்டிருந்திருக்கும்.

இதை எப்படிக் கையாள்வது? தானும் மல்லுக்கு நிற்பதா? மெச்சூர்டாக விலகி விடுவதா என்ற குழப்பத்தில் இருப்பவரிடம், “பிரச்சனை எல்லாம் சரி ஆகுற வரைக்கும் நம்ம கொஞ்சம் விலகி இருக்கலாம் மச்சான்” எனக் கவின் சொல்ல வேறுவழியின்றி வலியுடன் இரண்டாவது ஆப்சனைத் தேர்ந்தெடுக்கிறார் லாஸ்லியா. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாம் நேசிக்கும் ஒருவன் நம்மிடம் வந்து, உன்னுடன் பேசினால் என் இன்னொரு தோழிக்கு வலிக்கிறது அதனால் நாம் விலகியிருக்கலாம் எனச் சொன்னால் நமக்கு எப்படியிருக்கும்? எத்தனை வலிக்கும்? அத்தனை வலியையும் கண்ணில் வைத்துக் கொண்டு, ” சரி எனக்கு புரியுது அவ ரொம்ப ஹர்ட் ஆகியிருக்கா. நீ அவளைப் பாரு. எனக்கும் வலிக்குது தான் ஆனா, நான் மேனேஜ் பண்ணிக்குறேன்.” என சொல்ல எத்தனை மனவலிமை வேண்டும் தெரியுமா. அவள் மனம் அவமானத்தால் குறுகிப் போயிருக்கும். அப்போ நான் முக்கியமில்லையா, நான் ஹர்ட் ஆகுறது உனக்கு பிரச்சனை இல்லையா என்ற கேள்வி இரவு முழுவதும் அவரை உறங்க விட்டிருக்காது.

அடுத்த நாள், தர்ஷனுக்கு வெளியே ஆள் இருப்பது தெரிந்தும் ஒரு டைம் பாஸிற்காக அவரைச்சுற்றி வரும் ஷெரின், தர்ஷனுக்காக இதய வடிவில் சப்பாத்தி செய்து அதை லாஸ்லியாவிடம் காட்ட சப்பாத்தியைக் கத்தியால் குத்திக் காயம் செய்கிறார் லாஸ்லியா. மன அழுத்தத்தின், அடக்கி வைத்திருக்கும் உணர்வுகளின் வெளிப்பாடு அது. ஷெரின் சாக்ஷியின் தோழி. கவின் தன்னிடம் இருந்து விலகக் காரணமான சாக்ஷியின் தோழி, தான் சகோதரனாக நினைக்கும் தர்ஷனுடன் பழகுவதை லாஸ்லியா விரும்பவில்லை. “அவன் என் மனிதன்” எனும் உரிமையைக் குறைந்தபட்சம் தர்ஷனுடனேனும் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பு. அது தான் தர்ஷனிடம் நான் அப்படித் தான் செய்வேன் எனப் பேச வைக்கிறது. அதே நேரம், மீண்டும் மீண்டும் அழும் சாக்ஷியிடமும் சென்று சமாதானம் செய்கிறார் லாஸ்லியா. “உங்களுக்குள் நட்பைத் தாண்டிய உறவு இருந்தது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்டேன். நீங்கள் பழையபடி இருங்கள்.” எனப் பேசுகிறார். பரிதாப நிலை.

பிறகு, சேரன் சொன்னது போல அனைவர் முன்னிலையிலும் தன் தவறு செய்து விட்டதாகச் சொல்லி விட்டு, வெளியே ஷெரின் சாக்ஷியிடமும் மன்னிப்புக் கேட்கிறார். அப்போதும் சாக்ஷி இறங்கி வராமல் இருக்க பாத்ரூமில் சென்று அழுகிறார் கவின். ஒருவாறு தேற்றிக் கொண்டு வெளியே வந்து, இவளை வேறு காயப்படுத்திவிட்டோமே என எண்ணி லாஸ்லிவை சமாதானம் செய்ய நினைக்கும் போது, “சாக்‌ஷி சொன்ன பிறகு தான் எனக்கு விஷயம் தெரிகிறது, உனக்கும் சாக்ஷிக்கும் இருந்த உறவை நீ ஏன் எங்கிட்ட மறைச்ச? சாக்‌ஷியுடன் அத்தனை தூரம் பழகிவிட்டு, என்னையும் அதே போல எப்படி உன்னால் நினைக்க முடிந்தது?இதெல்லாம் உனக்கு விளையாட்டா போச்சா கவின்?” என லாஸ்லியா கேட்கிறார். அந்தப் பெண் மட்டும் எத்தனை நாள் மன அழுத்தத்தை சமாளிக்கும் பாவம். மீண்டும் கவின் குற்றவாளியாக்கப்படுகிறார்.

அதற்கு மேல் சமாளிக்க முடியாமல் நொறுங்கிப் போகிறார் கவின். இயலாமையின் கண்ணீர் கொடுமையானது. “உன் மேல எந்தத் தப்பும் இல்லாத போது நீ ஏன் அழற?” என்ற கேள்வியெல்லாம் சுத்த முட்டாள்தனம். உண்மையில் தன் மீது தப்பிருப்பவன் அழ மாட்டான். அப்படி அழுதால் பெரும்பாலும் நடிப்பான் இல்லையென்றால் கோழையாக இருப்பான். ஆனால், எந்தத் தப்பும் செய்யாமல் அனைவராலும் குற்றம் சாட்டப்படும் நிலை மிக மோசமானது. அந்தச் சூழல் தரும் இறுக்கம், அழுத்தமெல்லாம் சகிக்க இயலாதது. நாம் நினைப்பதைப் பேசக் கூட அனுமதிக்க யாரும் தயாராய் இல்லையெனும் வலியில், தன்னை மீறி தன்னால் உருவாகியிருக்கும் சிக்கல்களுக்கு எந்த வகையிலும் தீர்வைத் தர முடியாத நிலையில் ஒருவன் வெடித்து அழத் தான் செய்வான். அப்போதிருக்கும் மனநிலையில் எதுவும் வேண்டாமென ஓடத் தான் தோன்றும். கவினுக்கும் தோன்றியது. கேமரா முன் தன்னை வெளியே அனுப்பிவிடுமாறு கெஞ்சுகிறார். அது கோழைத்தனம் அல்ல. தன்னைப் புரிந்து கொள்ளாத இடத்தில் இருந்து விலகி நிம்மதியைத் தக்க வைத்துக் கொள்ளும் சிறிய முயற்சி. இப்போது சாக்ஷி சற்று இறங்கி வர லாஸ்லியா மேலே ஏறியிருக்கிறார்.

இத்தனை விஷயங்கள் இங்கே நடந்து கொண்டிருக்கையில், எப்படியாவது எபிசோடில் தான் தெரிந்து விட வேண்டும் என மெனக்கெட்டு யாருடனாவது உப்புச்சப்பில்லாமல் வம்பிழுக்கும் மீரா வேறு. அவரைப் பற்றி பிறகு சாவகாசமாகப் பேசலாம்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close