சிறுகதைகள்

அவன் – ராம்பிரசாத்  

சிறுகதைகள் | வாசகசாலை

 

யாராவது இருக்கீங்களா? ஓவர்

ரிசீவ்டு ஓவர்

சார். ஒரு பாடி கிடக்கு காட்டுக்குள்ள. ஓவர்

ரிசீவ்டு ஓவர்

காவல் அதிகாரி சதாசிவம், காட்டுப் பகுதிக்குள் வந்து பார்த்தபோது, ஒரு பாறை மீது ஆண் உடல் கிடந்தது நிர்வாணமாக

சமீபத்தில் மண் அரித்து மலையின் ஒரு பகுதி சரிந்தது போலிருந்தது. ஆண் உடல் மீது மண்ணும் காட்டுச்செடிகளின் எச்சங்களும் கலந்து விரவிக்கிடந்தன. உடல் பாறை மீது விழுந்து கிடந்திருப்பதைப் பார்க்கையில், அந்த ஆண் உடல் மலை உச்சியிலிருந்து விழுந்திருக்கலாம் என்பதாக ஊகம் கொள்ளவைத்தது

கான்ஸ்டபிள் கனகராஜ் சல்யூட் அடித்தார்எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீமிலிருந்து ஆட்கள் வந்துவிட்டிருந்தார்கள். தலைக்கு மேல் ஆளில்லா விமானங்கள் பறந்தபடி, உடலை எல்லாக் கோணங்களிலும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தன.

சார், பேச்சு மூச்சு இல்லை சார். பையன் வயசு இருபத்தி அஞ்சு இருக்கலாம். உடம்புல காயங்கள் ஏதும் இல்லை. ஆனா, மூச்சு, இதயத் துடிப்பு, நாடித் துடிப்பு இல்லை. உடம்பு கெடாத மாதிரி இருக்கு. அதைவச்சுப் பார்த்தா, சமீபத்துலதான் சார் செத்திருக்கணும்என்றார் கனகராஜ்.

சதாசிவம் உடலைச் சுமந்துகிடந்த அந்தப் பாறையை ஒருமுறை சுற்றிவந்து பார்த்தார். மலை உச்சியிலிருந்து தற்கொலை செய்யும் எண்ணத்துடன் பாறை மீது விழுந்திருந்தால், உடலில் காயங்களே இல்லாமலா இருக்கும்? அந்த ஆண் உடலின் கழுத்தில் ஓர் உலோகப்பட்டை இருந்தது. அதில் கோடு கோடாகத் தெரிந்தது.

ஒண்ணு, ரெண்டு, மூணு…’ என்று எண்ணத் துவங்கிய சதாசிவம், ‘எழுபத்தி நாலுஎன்று முடித்தார். தன் சட்டைப் பையில் கைவிட்டு அலைபேசியை எடுத்து, அந்த உலோகப்பட்டையைப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்

என்னோட வேகன்ல டூல்ஸ் இருக்கு. அதை எடுத்துட்டு வாங்கஎன்று கனகராஜைப் பணிக்க, கனகராஜ் சதாசிவம் வந்த வேகனிலிருந்து ஒரு இயந்திரத்தை எடுத்துவந்து கொடுத்தார். அதில் அவன் கழுத்தில் கிடந்த உலோகத்தை வைத்து, சில பொத்தான்களை  அழுத்திவிட்டு, இயந்திரத்தின் திரையைப் பார்க்க, அதுசுமார் ஐந்தாயிரம் ஆண்டுகள்என்று காட்டியது

முகம் தெளிவா இருக்கு. முடி ஏதும் நரைச்சா மாதிரி தெரியலை. இளம் வயசா இருக்கணும். காயமும் இல்லை. அப்படீன்னா கொலையாவோ, அனிமல் அட்டாக்காவோ இருக்க வாய்ப்பில்லை. உடனடியா ஹாஸ்பிட்டலுக்கு கொண்டுபோங்க. பின்னாடியே வரேன்” என்றார் சதாசிவம்

கனகராஜ் கனநேரத்தில் இயங்க, மருத்துவமனைக்குத் தகவல் அனுப்பப்பட்டு, ஆகாய மார்க்கமாக ஒரு ஆம்புலன்ஸ் பறந்துவர, அதிலிருந்து இருவர் கீழே இறங்கிவந்து, கையோடு கொண்டுவந்த நைலான் கயிற்றின் இன்னொரு முனையில் இருந்த படுக்கையில் உடலை கிடத்த, அந்த ஆம்புலன்ஸ் அந்த உடலை மேலேற்றிவிட, ஆம்புலன்ஸ் உள்வாங்கி வந்த வழியே திரும்பிச் சென்றது.

சதாசிவம் அந்த இடத்தைவிட்டு சற்றுத் தள்ளி நடந்துவந்து வேறு ஏதேனும் பொருட்கள் சிக்குகிறதா என்று பார்த்தார். சற்றுத் தள்ளி துணி போல கிடந்த ஒன்றை, அருகிலிருந்து ஒரு மரக்குச்சியால் எடுத்து உயர்த்திக் காட்ட, கனகராஜ் அதைப் பார்த்துவிட்டு…

பாம்பு உரிச்ச தோல் மாதிரி  இருக்கு சார்என்றார். அதை அப்படியே ஒரு புகைப்படம் எடுத்த பிறகு, கீழே போட்டுவிட்டு மீண்டும் அவன் உடல் கிடந்த பாறையின் அருகில் வந்தார்.

சமீபத்துல யாராவது இருபத்தி அஞ்சு வயசுப் பையன் காணோம்னு புகார் குடுத்திருக்காங்களான்னு செக் பண்ணுங்க. நான் ஹாஸ்பிடல் வந்துடறேன்என்றார் சதாசிவம்.

சார். யாரும் புகார் கொடுத்திருக்கலைன்னா..?”

 

உடம்பு கெடலை. அப்படீன்னா சமீபமாத்தான் செத்திருக்கணும். அது உண்மைன்னா, இனிமேல்தான் புகார் கொடுக்க யாராச்சும் வருவாங்க. எல்லா ஸ்டேஷனுக்கும் அலர்ட் பாஸ் பண்ணிடுங்க. முக்கியமா, மாநகரத்துல இருக்கிற எல்லா ட்ரெக்கிங் கிளப்லயும் யாரெல்லாம் தனியா ட்ரெக்கிங் போறாங்கன்னு பட்டியல் எடுத்து வையுங்கஎன்றுவிட்டு, தன் ஆகாய ஊர்தியைக் கிளப்பினார் சதாசிவம்.

 ~ * ~

மருத்துவமனையில்,

சார், அந்த பையன் சாகலை. உயிரோட தான் இருக்கான். அதிர்ச்சியில இருக்கான். ஏதோ ஒரு மொழி பேசுறான். ஒண்ணுமே புரியலை.” என்றார் மருத்துவர் சிவபாலன். பேச்சில் இரண்டு கிராம் அதிர்ச்சியும், நாலு கிராம் ஆச்சர்யமும் கலந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது.

எங்க?” என்றார் சதாசிவம் அதிர்ச்சியுடன்.

உள் அறையில அப்சர்வேஷன்ல வச்சிருக்கோம். எந்திரிச்சதும் நிறைய தண்ணி குடிச்சான். இதுக்கு முன்னாடி தண்ணியை பாத்தே இருந்திருக்க மாட்டானோன்னு தோணுற அளவுக்கான தண்ணி அது. திட உணவுன்னு எதுவும் சமீபத்துல சாப்பிட்டிருக்க மாட்டான் போல. உடம்புல தெம்பே இருக்கலை. க்ளுகோஸ் ஏத்தியிருக்கோம். மயக்கத்துல இருக்கான். இப்ப பாக்க முடியாது. நீங்க யாராச்சும் ஒரு மொழிபெயர்ப்பாளரை அழைச்சிட்டு வாங்களேன்

என்ன மொழின்னு தெரியாம எப்படி, யாரை அழைக்கிறது?”

இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. வேணும்னா ஒரு மொழியியல் அறிஞரை கூப்பிட்டுப் பாருங்க.. அவர்களுக்குத்தான், அவன் பேசுற மொழி, அதோட நெளிவு சுளிவுகளை வச்சி அது எந்த மொழின்னு அடையாளப்படுத்த முடியும். ட்ரான்ஸ்லேட்டர் வந்ததும் எனக்கு தெரியப்படுத்துங்கஎன்றுவிட்டு அகண்டார் சிவபாலன்.

புருவச்சுருக்கங்களுடன் திரும்பிய சதாசிவம், காவல் துறை மேலிடத்துக்குத் தகவல் சொல்லி, நாட்டிலேயே மிகவும் அறியப்பட்ட மொழியியல் வல்லுனரான, சுந்தரமூர்த்தியை வரவழைத்தார். இருவருமாக சிவபாலனைச் சந்திக்க, சிவபாலன், அவனைப் போதிய மருத்துவ வசதிகளுடன் கிடத்தி வைத்திருந்த அறைக்கு இருவரையும் அழைத்துச்சென்றார்.

மயக்கத்திலிருந்த அவனை மூவரும் எட்ட நின்று சற்று நேரம், வேடிக்கை பார்த்தார்கள்.

கழுத்துல போட்டிருக்கானே.. அது என்னன்னு ஏதாச்சும் ஐடியா இருக்கா?” என்றார் சதாசிவம்.

சுந்தரமூர்த்தி அதை உற்றுப்பார்த்துவிட்டு

தெரியலை சார். எனக்கு தெரிஞ்ச சரித்திரத்தை வச்சு இந்த மாதிரி ஒரு உலோகத்தை செயின் மாதிரி போட்டுக்குற ஒரு சமூகம் அந்தமான், மற்றும் அமேசான் காடுகள்ல தான் சாத்தியம். அவங்கள்லாம் ஆதிவாசிகளா இருப்பாங்க. அவங்க கூட, தாங்கள் வேட்டையாடுகிற மிருகங்களோட பற்கள், விரல் நகங்கள்ன்னு தான் போட்டுக்குவாங்க. இவனைப் பாத்தா அப்படித் தெரியலை. நீங்க எதுக்கும் ஒரு சரித்திர ஆய்வாளர்கிட்ட ஒரு ஒபீனியன் வாங்கிடுங்கஎன்றார்.

சதாசிவம் சுந்தரமூர்த்தியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு

இப்படியே ஒவ்வொருத்தரா கை காமிச்சு விட்டா, இந்த கேஸை எப்ப முடிக்கிறது?” என்றார் சலிப்பாக.

சார், ஒரு ஆலோசனை தான். மொழியைப் பத்தி தெரிஞ்சவங்களுக்கு கணக்கு தெரியாது. கணக்கு தெரிஞ்சவங்களுக்கு அறிவியல் தெரியாம இருக்கும். நீங்க யாரையாச்சும் கூப்பிட்டனுப்பிச்சா, அவுங்க இன்னொருத்தரை கை காமிக்காம இருக்க மாட்டாங்க. பேசாம யாராச்சும் சயின்ஸ் ஃபிக்ஷன் எழுத்தாளரா பார்த்து கூட வச்சுக்கோங்கஎன்றார் சுந்தரமூர்த்தி.

 

ஏன்?”

மனிதர்களையும், மனித இயக்கங்கள்லயும் தன்னிறைவு அடைஞ்சிட்டவங்களுக்கு வானம் தான் சுவாரஸ்யப்படும். எவன் வானத்தைப் பார்க்கிறானோ அவனுக்கு எல்லா மானுட இயக்க ரகசியங்களும் புரிஞ்சிடுச்சுன்னு அர்த்தம்என்றார் சுந்தரமூர்த்தி.

சதாசிவம் சற்று யோசித்துவிட்டு,

நீங்களே ஒரு நல்ல எழுத்தாளரா சஜஸ்ட் பண்ணுங்களேன்?” என்றார்.

ஆர்பிட்

ஆர்பிட்ன்னு ஒரு பேரா?”

ஆமா. சயின்ஸ் ஃபிக்ஷன் ரைட்டர் இல்லையா? சுற்றுவட்டப்பாதைகள் மேல ரொம்ப ஈர்ப்பாகி அதையே பேரா வச்சிக்கிட்டார்.”

சரி, அவரோட கான்டாக்ட் நம்பர்?”

எழுத்தாளர் ஆர்பிட் வரவழைக்கப்பட்டார்.

 ~ * ~

சதாசிவம், ஆர்பிட்டை மருத்துவமனைக்கு ஆகாய மார்க்கமாக அழைத்து வருகையில், தன் அலைபேசியிலிருந்து தான் எடுத்த புகைப்படங்களை வருவித்துக் காட்டினார்.

சார், அவன் போட்டிருக்கிற செயின்அது ஒரு உலோகம். அதுல எழுபத்தி நாலு சின்னச் சின்னக் கோடுகள் இருக்கு. அதைப் பத்தி ஏதாச்சும் ஐடியா இருக்கா?”

எனக்குத் தெரிஞ்சு இது எந்தக் கலாச்சாரத்துலயும் இல்லை. எதையாச்சும் குறிச்சுவைக்க இப்படிப் பயன்படுத்தியிருக்கலாம்னு தோணுது. உங்களுக்கு இதுமேல ஏதாச்சும் ஃபிஷி ஐடியாஸ் இருக்கா?”

இல்லை. இவனுக்கு இருபத்தி அஞ்சு வயசுக்கு மேல இருக்காதுங்குறது என்னோட கணிப்பு. இந்த உலோகம் அவனுக்கு எங்கயாச்சும் கிடைச்சிருக்கலாம். அல்லது இந்த உலோகத்துக்காகத்தான் உயிரை விட இருந்திருக்கானோ என்னமோ. சரி,  அப்படி என்னத்தை குறிச்சுவைக்க இது இவனுக்குப் பயன்பட்டிருக்குன்னு நினைக்கிறீங்க?”

அப்படி ஊகம் பண்ணத் துவங்கினா ஏகப்பட்ட பாசிபிலிட்டீஸ் கிடைச்சிடும். நாரோ டவுன் பண்ணிப்போறது கஷ்டம்அவனையே பேச விட்டா ஏதாச்சும் க்ளு கிடைக்கலாம்ன்னு தோணுது.”

மருத்துவமனையின் ஹெலி பேடில் தரையிறங்கிய பிறகு, சதாசிவம் ஆர்பிட்டை சிவபாலனிடம் அழைத்து வர… 

வந்துட்டீங்களா, உங்களுக்கு ஆயுசு நூறு. இப்பத்தான் அவன் மயக்கம் தெளிஞ்சு எழுந்தான்என்றுவிட்டு, இருவரையும் அவனை இருத்தி வைத்திருந்த அறைக்கு அழைத்துச்சென்றார்

போகிற வழியில், “அவன் அப்பப்போ மயங்கிடறதால, நினைவு இருக்கிறப்பவே எந்தெந்த தகவல்கள் முதலில் தெரிஞ்சுக்கிட்டா அவன் மறுபடி மயங்கிட்டாலும்கூட கேஸை தொடர்ந்து நடத்த உதவியா இருக்கும்ங்குற அடிப்படையில, கேள்விகள் சிலதை அவற்றின் முக்கியத்துவ வரிசையில குறிச்சு வச்சிருக்கேன். அதுல முதல் கேள்வி, அவன் போட்டிருக்கிற அந்த செயின் பத்தி. அதை முதல்ல கேளுங்கஎன்று ஆர்பிட்டிடம் சொல்லிக்கொண்டே வந்தார் சதாசிவம்.

அவனது அறையில், ஆர்பிட் அவனது கழுத்திலிருந்த செயினைச் சுட்டிக்காட்டி என்னவென்று சைகையில் வினவ, அவன் எதையோ பதிலாக அளிக்க, சதாசிவத்திடம் திரும்பி…

அது அவனோட வயசைக் குறிக்கிதாம்என்றார் ஆர்பிட்.

வயசா? எழுபத்தி நாலா? ஆனா, பார்க்க இருபத்தி அஞ்சு வயசுப் பையன்  மாதிரிதானே இருக்கான்என்றார் சதாசிவம்.

அவன் வேற ஒண்ணும் சொன்னான்.” 

என்ன?” 

ரொம்பவும் பழைய மொழியில சொன்னான். மனுஷன் மொழியை முழுசா கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே கணக்கை கண்டுபிடிச்சுட்டான். பிறகு நிறைய மொழிகள் புழக்கத்துல வந்துச்சு. ஒரு முறைப்படுத்தப்படாம, கண்ணால பாக்குற உருவத்தை எல்லாம் வச்சி எழுத்துகளை உருவாக்கி, அதுக்கெல்லாம் ஒரு இலக்கணம் உருவாக்க முயற்சி பண்ணி, ஒண்ணுக்கொண்ணு பொருந்தாம ஒரு கட்டத்துல ரொம்ப குழப்பமா போயிருக்கணும். தனக்குத் தெரிஞ்ச கணக்கை வச்சு உருவ எழுத்துகளை இரண்டு பகுதிகளாகப் பிரிச்சு, ஒவ்வொரு பகுதியில இருக்கிற ஒவ்வொண்ணையும், இன்னொரு பகுதியில இருக்கிற ஒவ்வொண்ணோட இணைத்துச் சேர்த்து மொழியா உருவாக்கிற வித்தை, ரொம்பவும் பண்பட்ட சமூகமா மாறிய பிறகு தெரிஞ்சிருக்கணும். இப்ப நமக்குத் தெரிஞ்ச கணிதத்துல இதை கார்டீஷியன் ப்ராடக்ட்னு சொல்வாங்க. தமிழ் அப்படி முழுமையடைந்த மொழி தான். உயிர்மெய்யெழுத்துக்களை கவனிச்சா இது புரியலாம். ஆக, மொழி உருவாகுறதுக்கு முன்னாடியே கணக்குங்குற ஐடியா உருவாகிடிச்சு. அப்படி உருவான பல மொழிகள்ல இதுவும் ஒண்ணு.”

மொழி உருவாகுறதுக்கு முன்னாடியே ஐடியா உருவாகி, அதன் அடிப்படையிலதான் மொழியே கட்டமையுதுன்னா, நம்மூர் பட்டிமன்றங்கள்லயும் இலக்கிய பத்திரிகைகள்லயும் ஏன் சுத்தமான, பிறமொழிக் கலப்பு இல்லாத தமிழ்ல பேசணும், எழுதணும்னு அடிச்சிக்கிறாங்க? சுத்தத் தமிழ்ல பேசுறதால அவுங்க பேச்சுலயோ, எழுத்துகள்லயோ புதிய ஐடியாக்கள் இருக்காதுன்னு எடுத்துக்கணுமா? ” என்று கேட்டு இடைமறித்தார் சிவபாலன்.

சிவபாலனை ஒருமுறை கேள்வியாய் ஏறிட்டுப் பார்த்துவிட்டு, “சார், பாலிடிக்ஸ் பேச நீங்க என்னைக் கூப்பிடலைன்னு நினைக்கிறேன்என்றார் ஆர்பிட்.

கட் தட் க்ராப், சிவபாலன். ஆர்பிட், நீங்க சொல்லுங்க. அந்த மொழியில அவன் அப்படி என்னதான் சொல்றான்?” என்றார் சதாசிவம்.

எனக்கு நேரமாச்சு. நான் போகவேண்டிய நேரம் வந்துடுச்சுங்குறான்என்றார் ஆர்பிட்.

 ~ * ~

சதாசிவமும் ஆர்பிட்டும் மருத்துவமனை உணவகத்தில் அமர்ந்திருந்தனர்

மறுபடி மயங்கிட்டான். இன்னும் ரெண்டு கேள்வி கேட்டுடலாம்னு இருந்தேன்என்றார் சதாசிவம் அலுப்புடன்.

விடுங்க. இப்போ நமக்கு ஓரளவுக்கு தகவல் தெரியுமே?”

என்னத்தை தெரியும்? வயசு எழுபத்தி நாலுங்குறான். ஆனா, உடம்பு இருபத்தி அஞ்சு வயசுக்காரன் மாதிரிதான் இருக்கு. இப்படி ஏன் பொய் சொல்லணும்? யார் நம்புவாஒருவேளை இவன் பைத்தியமா இருப்பானோ?”

அப்படி ஏன் யோசிக்கணும். கொஞ்சம் வேற மாதிரி யோசிக்கலாம். தெரிஞ்ச தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, அவனுக்கு ஒரு வினோதமான பயாலஜி இருக்கிறதா தோணுது.”

அப்படீன்னா?”

நம்ம எல்லொருக்கும் உடம்புல நூறு செல்கள் இருந்தாநூறும் சாகும்போது தொண்ணூறுதான் மறுபடி பிறக்குது. இதுதான் நாம வயசாகுறதுக்குக் காரணம். அப்படி இல்லாம நூறும் செத்த பிறகும், அத்தனையும் மறுபடி பிறந்தா மட்டும்தான், அவன் சொல்றது உண்மையா இருக்க வாய்ப்பிருக்கு.

அப்படி இருக்க வாய்ப்பிருக்கா?”

இருக்கு. அவனுக்கு நமக்கெல்லாம் தெரிஞ்சதவிட அதிகமா வேற ஏதோ தெரிஞ்சிருக்கு. அது என்னன்னு நாம தெரிஞ்சிக்கணும். நாம மருத்துவமனையிலதானே இருக்கோம். மருத்துவர்களை வைத்து அவன் உடம்பை சோதித்துப் பார்த்தா என்ன?”

அவன் இன்னும் சாகலை. இந்த சூழ்நிலையில அவன் உடம்புல கத்தி வைக்கணும்னா, கோர்ட் பர்மிஷன் வேணும். கத்தி வைக்க மருத்துவர்கள் வேணும். ரெண்டுமே இன்னிக்கு முடியாது.

ஏன்?”

நீங்க இன்னிக்கி தினசரி பார்க்கலையா? இன்னிக்கு ஒரு தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம், ஒரு ராக்கேட்டை விண்ணுக்கு அனுப்புது. இந்த மாதிரி ராக்கெட் அணுப்பப்படும்போது, உள்ளூர் மருத்துவர்கள் ராக்கேட் ஏவுதளத்துல பணியில் இருக்கணும்னு விதி 2030லிருந்து அமலில் இருக்கு. கடந்த முப்பத்தியோரு வருஷமா இதை அட்சரம் பிசகாம அமல்படுத்திக்கிட்டு இருக்கோம். அதனால, இன்னிக்கு மருத்துவமனையில அதிகம் மருத்துவர்கள் இருக்க மாட்டாங்க. சிவபாலனுக்கு இருக்கிற எமர்ஜென்சி கேஸஸை அட்டென்ட் பண்ணதான்  நேரம் சரியா இருக்கும். கோர்ட், பேப்பர் ஒர்க்குன்னு நிறைய ஃபார்மாலிட்டீஸ் வேற இருக்கு. “

துரதிருஷ்டம் தான்.

சரி, நான் என் மேலதிகாரிகிட்ட பேசிட்டு வந்துடறேன்என்றுவிட்டு, பேன்ட் பாக்கேட்டிலிருந்து அலைபேசியை பிதுக்கி எடுத்து, எண்களை ஒற்றியபடி எழுந்து ஆர்பிட்டைவிட்டு விலகி நடந்தார் சதாசிவம்.

ஹலோ

சார், சதாசிவம் ரிப்போர்டிங் சார்

கோ அஹெட்!

சார், அந்தப் பையன் முழிச்சான். புரியாத மொழியில பேசறான். கழுத்துல வேற ஒரு வினோதமான செயின் போட்டிருக்கான். அதுல எழுபத்தி நாலு கோடு இருக்கு. கேட்டா அது அவன் வயசுங்குறான் சார்.”

வாட் யூ ஃபவுன்ட்?”

அந்த உலோகத்தை கார்பன் டேட் பண்ணினதுல, அது ஐயாயிரம் வருஷம் பழமையானதுன்னு தெரிஞ்சது சார். நான் இதை வேற யார்கிட்டயும் சொல்லலை. எனக்கேதோ அவன் ஒரு பைத்தியம்னு தோணுது சார். ஆனா, ஆர்பிட்ன்னு ஒரு ரைட்டர் என்ன சொல்றாருன்னா…” என்றுவிட்டு, ஆர்பிட் சொன்னதை அப்படியே வரிமாறாமல் பகிர்ந்தார் சதாசிவம்.

அவரை நானும் படிச்சிருக்கேன். இந்த ரைட்டர்ஸ் எல்லாம் அதீத கற்பனாவாதிங்கதான். அவுங்க சொல்றதை முழுக்க நம்ப வேணாம். அவனை ஏதாச்சும் ஒரு மென்டல் ஹாஸ்பிடல்ல சேத்துடுங்க. பொதுமக்கள் கூடுற இடத்துல பைத்தியங்களை வைக்க நமக்கு ரூல்ஸ் இல்லை.

சரி சார்!

சதாசிவம் போனை அணைத்துவிட்டுத், திரும்பி ஆர்பிட்டைப் பார்த்தார். பின், பக்கவாட்டில் திரும்பி வேறெங்கோ பார்த்தபடி, “அதீத கற்பனாவாதிகள்என்றார் சலிப்புடன்.

காவல் நிலையத்தில்,

தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான, ஸ்பேஸ்டீ நிறுவனம் தனக்குச் சொந்தமான நர்மதா ராக்கெட்டை, இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது. இந்த ராக்கெட், ஒரு நீள் வட்டப்பாதையில் பூமியையும்  நிலவையும் ஒரு சேர சுற்றிவரும். இப்படிச் சுற்றிவருகையில் நிலவின் ஈர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றங்களையும், இந்த மாற்றங்களால் பூமியின் ஈர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றங்களையும் குறித்த தகவல்களைப் பூமிக்கு அனுப்பும். சற்றுமுன் வெளியான செய்தி…”

தொலைக்காட்சியில் செய்திகள் வாசித்துக்கொண்டிருந்தாள் ஒரு பெண். அப்போது சிவபாலன் காவல் நிலையத்துக்குள் அவசரமாகப் பதற்றத்துடன் நுழைந்தார்

சார், ஒரு தப்பாயிடிச்சு…”

என்ன?”

சார். அவனை கவனமாத்தான் பாதுகாத்து வச்சிருந்தோம். ஆனா ,எப்படியோ தப்பிச்சிட்டான் சார். இப்போ காணலை. எங்க போனான்னே தெரியலை.

என்ன சொல்றீங்க? உங்க பொறுப்புலதானே விட்டுட்டு வந்தோம். இப்ப நடந்ததுக்கு யார் பொறுப்பாகிறது? பதில் சொல்றது? உங்களுக்கு என்ன உங்க இஷ்டத்துக்குக் கவனக்குறைவா இருப்பீங்க. இந்த விஷயம் வெளியில தெரிஞ்சா, உங்க மருத்துவமனை பேரு கெட்டு, அங்க வேலை பார்க்கிற எல்லாரோட வேலையும் பறிபோகும்நாட்டுல இருக்கிற வேலைவாய்ப்பின்மையோட இதுவும் சேரணுமான்னு கேட்டு உங்க  நிர்வாகம் மேல ஆக்‌ஷன் எடுக்கக்கூட எங்க மேலிடம் அனுமதிக்காது. நாங்கதான் லோல்படணும். நல்லா வந்து சேர்ந்தீங்கய்யா, தாலிய அறுக்குறதுக்குன்னு. மருத்துவமனையில சி.சி.டி.வி ஆர்கைவ்ஸ் எல்லாமும் இன்வெஸ்டிகேஷனுக்கு வேணும். அதையாச்சும் முறையா ஏற்பாடு பண்ணுங்க” – சதாசிவம் சலித்தார்

~ * ~

இரண்டு நாட்களுக்குப் பிறகு,

தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்டீ நிறுவனம், தனக்குச் சொந்தமான நர்மதா ராக்கெட்டை இரண்டு நாட்களுக்கு முன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருந்தது. தொழில் நுட்பக்கோளாறு காரணமாக அந்த ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து நிலவை நோக்கி பாதை விலகி விண்வெளியில் பயணித்திருப்பது தெரியவந்திருக்கிறது. விண்வெளி ஆய்வுக்கூடத்தில் பணியில் இருந்தவர்களின் துரிதமான நடவடிக்கையால், நிலாவில் மோத இருந்த ராக்கெட் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டுள்ளது. தற்போது அந்த ராக்கெட் விண்வெளி ஆய்வுக்கூடத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஸ்பேஸ்டீ நிறுவனத்தின் தகவல் தொடர்பு அலுவலர் சா.பார்த்திபன் இன்று அறிக்கை வெளியிட்டார்….”

தொலைக்காட்சியில் செய்தித் தொகுப்பாளினி அறிவிக்கையில், திரையில் மீட்கப்பட்ட தானியங்கி ராக்கெட் காட்டப்பட்டது

தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த சிவபாலன், உடனே சதாசிவத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

சார், இன்னிக்கு நியூஸ் பாத்தீங்களா?”

பாத்தேன்.

அதுல அந்த ராக்கெட்ல அவன் போட்டிருந்த செயின் இருந்துச்சு பாத்தீங்களா?”

என்னது செயினா?”

சதாசிவம் மேஜையிலிருந்த ரிமோட்டைப் பயன்படுத்தி, செய்தி ஒளிபரப்பின் அந்தப் பகுதியை மீட்டார்.

திரையில் காட்டப்பட்ட ராக்கெட்டில், விண்வெளி ஆய்வுக்கூடத்திலிருந்து ராக்கெட்டை மீட்டது வரை அந்தச் செய்திக்கோப்பு காட்டிக்கொண்டிருக்க, அவரது பாதங்களுக்கு அருகில், அந்த உலோகம் தாங்கிய செயின் அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்தது. தொலைக்காட்சியை அந்த இடத்திலேயே தேங்கச்செய்து, அந்த உலோகத்திலிருந்த கோடுகளை எண்ணினார். எழுபத்தி ஐந்து இருந்தது.

பாருங்க. அவன் போட்டிருந்ததுல எழுபத்தி நாலுதான் இருந்துச்சு. இதுல எழுபத்தி அஞ்சு இருக்கு. இது வேற. விண்வெளி வீரர்கள் தங்களுக்குப் பிடித்தமான, தங்கள் குடும்பத்தின் நினைவாக எதை வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம்னு விதி இருக்கு. அந்த வகையில் இதை யாராவது எடுத்துச்சென்றிருக்கலாம். இது ஏதோ விளையாட்டுப் பொருளாகத்தான் இருக்கணும்மத்தபடி, அந்த ராக்கெட்டுல மனிதர்கள் யாரும் மீட்கப்படலை. அது ஒரு தானியங்கி ராக்கெட்தான். அவன் எங்க போனான்னு தேடிட்டுதான் இருக்கோம். எப்படியும் பிடிச்சிடுவோம்என்றார் சதாசிவம்.

இல்லை சார். எனக்கேதோ ஃபிஷியா தோணுது. அவன் அந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட இருந்த நாள்லதான் காணாமப்போனான். தொடர்ந்து அவன் போட்டிருந்த செயின் மாதிரியே இங்கயும் ஒண்ணு. அவனுக்கு எழுபத்தி நாலு வயசு. ஆனா, உடம்போ இருபத்தி அஞ்சு வயசுக்காரன் மாதிரி. இப்போ அவனைக் காணலை. இதையெல்லாம் சேத்துவச்சிப் பார்த்தா…”

பாத்தா? பாத்தா என்ன சிவபாலன்? நீங்க ஒரு டாக்டர். நீங்க பேசுறதைப் பாத்தா, உங்க படிப்பு மேலயே எனக்கு சந்தேகம் வருது. போய் உங்க வேலையைப் பாருங்க. அந்த ஆர்பிட் மாதிரி அதீதமான கற்பனையில விழுந்துடாதீங்க. கதை புஸ்தகமெல்லாம் படிச்சு படிச்சு உங்களுக்கெல்லாம் பைத்தியம்தான் புடிச்சிடுச்சுஎன்று எரிந்து விழ, சிவபாலன் ஏதும் பேசாமல் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தார்.

ஆர்பிட்டை அவர் ஆர்பிட்டின் வீட்டில் சந்தித்தபோது, அவரின் சந்தேகம் குறித்த தெளிவான பார்வை அவருக்குமிருந்தது அவரை ஆச்சர்யமூட்டியது

உங்களுக்கு இப்ப இருக்கிற சந்தேகம் எனக்கு அன்னிக்கே வந்துடுச்சி. அவன் இந்தக் கிரகத்தை சேர்ந்தவனே இல்லைஎன்றார் ஆர்பிட்.

எப்பக்ச் சொல்றீங்க ஆர்பிட்?”

அந்தக் கோடுகள்தான். சில சூழல்கள்ல நமக்கு தெரிஞ்ச விஷயங்களை வச்சி நடந்திருக்கிறதை நம்மால புரிஞ்சிக்க முடியாது. அந்தச் சில சூழல்களைப் புரிஞ்சிக்க, நமக்கு முற்றிலும் வித்தியாசமான வேற ஒரு கோணம் தேவைப்படுது. அந்தக் கோணத்தால மட்டும்தான் சில நிகழ்வுகளை விளக்க முடியும். அந்தக் கோணங்களை கற்பனாவாதம்தான் உருவாக்கும். தர்க்க ரீதியா, கற்பனாவாதத்தோட பல்வேறு விளைவுகள்ல ஒண்ணாதான் நிஜம் இருந்திருக்கு. எதுக்கு அவன் தன்னோட வயசை ஒரு உலோகத்துல குறிச்சிக்கணும்? நமக்கெல்லாம் அந்தத் தேவை இருக்கிறது இல்லை. ஏன்னா, நமக்குத் தொடர்ச்சியான நினைவுகள் இருக்கு. ஒரு கேள்வி கேக்குறேன். கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க. நீங்க வருஷக்கணக்கா தூங்குறவரா இருந்தா, என்னிக்கோ ஒரு நாள் கண் விழிக்கிறப்போ, உங்களுக்கு என்ன வயசுன்னு எப்படித் தெரிஞ்சிக்குவீங்க?”

சிவபாலன் தீவிரமாக யோசித்துவிட்டு, “ஒவ்வொரு முறை தூங்கப்போறப்போவும் அப்போது இருக்கிற வயசை எங்கயாச்சும் குறிச்சு வைப்பேன்.”

அதைத்தான் அவனும் பண்ணியிருக்கான்.

சரி, ஆனா சரியா ஒவ்வொரு வருஷமும் கண்ணு முழிச்சாதானே இது நடக்க வாய்ப்பிருக்கு?”

கரெக்ட், ரொம்ப சரியான கேள்வி இதுதான். இந்தப் புள்ளியை வச்சிதான் என்ன நடந்திருக்குன்னு நான் கண்டுபிடிச்சேன்.

என்ன? என்ன அது?”

அவன் வருஷா வருஷம் எழுந்துக்கிறவன் இல்ல. இப்ப நான் சொல்லப்போறதை புரிஞ்சிக்க, நீங்க ஒரு விஷயத்தைத் தெரிஞ்சிக்கணும்சிக்காடோன்னு ஒரு பூச்சியினம் நம்ம பூமியில இருக்கு. பன்னிரண்டு வருஷம் மண்ணுக்கு அடியிலதான் வாழும். ஆனா, பன்னிரண்டாவது வருஷம் மட்டும் மண்ணைவிட்டு வெளியில வரும். இனப்பெருக்கம் செய்யும். கேள்வி இதுதான். அந்தப் பூச்சியோட ஒட்டுமொத்த வாழ்நாளே சில மாசங்கள் மட்டும்தான். அப்படி இருக்கிறப்போ சரியா பன்னிரண்டு வருஷம் கழிச்சு மண்ணுக்கு மேல வந்து இனப்பெருக்கம் செய்யணும்ன்னு அதுக்கு சொல்றது யாரு? அதோட வாழ்நாளையும் தாண்டின நினைவாற்றல் அதுக்கு எங்கிருந்து கிடைக்குது?”

சிவபாலன் ஆர்பிட்டையே பார்த்துக்கொண்டிருக்கஆர்பிட் மேலும் தொடர்ந்தார்.

இந்தப் பூமியைச் சுத்தி நிறைய ஈர்ப்பு விசைகள், காந்த விசைகள்னு நிறைய விசைகள் பரவிக் கிடக்கு. அந்த விசைகள்ல ஒரு குறிப்பிட்ட பேட்டர்ன் இருக்கு. பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு முறை மட்டுமே நிகழ்கிற பேட்டர்ன், அந்தப் பூச்சியோட மரபணுவுல எப்படியோ பதிஞ்சிருக்கு. அதன் பிரகாரம், பன்னிரண்டு வருஷத்துக்கு ஒருமுறை வெளிப்படுற அந்த விசையை வச்சு அந்தப் பூச்சியினம் சரியா பன்னிரண்டாவது வருஷத்துல மண்ணுக்கு மேல வருது. இனப்பெருக்கம் செய்யுது.”

சரி, இதுக்கும் அந்தப் பையனுக்கும் என்ன சம்பந்தம்?”

அந்தப் பையன் உண்மையில பையனே அல்ல. அவன் கடவுளாகூட இருக்கலாம்.”

ஏன் அப்படி சொல்றீங்க?”

அவன் கண்விழிச்ச தினம், ஒரு பிரத்தியேகமான தினம். அது புரியணும்னா, உங்களுக்கு இப்ப நான் சொல்லப்போறது புரியணும். இப்ப வருஷம் 2061. ஹாலீஸ் காமெட் (Halley’s comet) ஒவ்வொரு 75 வருஷத்துக்கு ஒரு முறை பூமியை அண்மிக்கும். கடைசியா அது அண்மிச்சது 1986ல். அது அண்மிக்கிறப்போ பூமியோட விசைகள்ல ஒரு மாற்றம் வருது. அதை ரொம்ப நுணுக்கமா உணர்கிற தன்மை அவனோட மரபணுவுல பதிஞ்சிருக்கு. அவன் நீள் உறக்கத்துல இருந்தா, வருஷம் கடந்துபோகுறது தெரியாது. ஆனா, ஹாலீஸ் காமெட் பூமியை அண்மிக்கிற நேரம், அவனோட மரபணுவுல எங்கயோ பதிஞ்சிருக்கு. அதாவது, ஹாலீஸ் காமெட் எப்போல்லாம் பூமிக்கு வருதோ, அப்போல்லாம் அவன் தானாவே எழுந்துக்குவான். அப்போதெல்லாம் தனக்கு ஒரு வயசு ஏறிட்டதா குறிச்சிக்கிறான். அவனைக் கண்டெடுத்தப்போ அவன் கழுத்துல இருந்த செயின்ல எழுபத்தி நாலு கோடுகள் இருந்ததா சொன்னார் சதாசிவம். அப்படீன்னா, எழுபத்தி நாலு ஹாலீஸ் காமெட் வருகைன்னு அர்த்தம். அவன் சுமாரா ஒரு ஐயாயிரம் வருஷத்துக்காவது இந்தப் பூமியில உறக்கநிலையில இருந்திருக்கணும். அதுனாலதான் அப்போ இருந்த மனிதர்கள் பேசின மொழி மட்டுமே அவன் பேசுறான்.”

சரி, அப்போ அந்த ராக்கெட்ல இருந்த செயின்? அதுல இருந்த எழுபத்தி அஞ்சு கோடுகள்?”

ஹாலீஸ் காமெட் 75 வருஷத்துக்கு ஒரு தடவை பூமிக்கு வருதுன்னு சொன்னேன் இல்லையா? அதோட  நீள்வட்டப்பாதை ப்ளூட்டோ வரைக்கும் போகுது. அப்படின்னா, ப்ளூட்டோவை அது நெருங்குறப்போ ஒரு முப்பத்தி ஏழு வருஷம் முடிஞ்சிருக்கும். இப்படி யோசிச்சுப் பாருங்க. அவனுக்கு நம்ம சோலார் சிஸ்டத்தைவிட்டு வெளியேறி வேற எங்காச்சும் போகணும்ன்னா இருக்கிற ஒரே வழி, ஹாலீஸ் காமெட்டுக்கு தாவுறதுதான். ஹாலீஸ் காமெட்டுக்கு எப்படித் தாவுறது? அதுக்கு மனிதர்களான நாம ராக்கெட் உருவாக்குற வரைக்கும் பொறுக்கணும். இப்போ கேள்வி இதுதான். ஒருவேளை நீங்க எத்தனை வருஷமானாலும், உயிரோட நீள் உறக்கத்துல இருக்கக்கூடிய சக்தியைப் பெற்றிருந்து, சோலார் சிஸ்டம் தாண்டி போகணும்னு நினைச்சிருந்து, கி.மு. 3000 வருஷத்துல உயிரோட எப்படியோ பூமியில அகப்பட்டுகிட்டு, அதேசமயம் மனிதர்கள் 22ம் நூற்றாண்டுலதான் கிரகம்விட்டு  கிரகம் செல்லும் விண்வெளிப் பயணங்களுக்கு தயாராவாங்கங்குற ஆரூடமும் உங்களுக்கு இருந்திருந்தா நீங்க என்ன செய்வீங்க?”

சுமார் ஐயாயிரம் வருஷம் நீள் உறக்கத்துல இருப்பேன். ஒவ்வொரு 75 வருஷமும் ஹாலீஸ் காமெட் பூமியை அண்மிக்கிறப்போ உருவாகுற விசை வித்தியாசங்களால கண்விழிப்பேன். ஒவ்வொரு முறை கண்விழிக்கிறப்போவும் அதைக் குறிச்சிக்குவேன். 22ம் நூற்றாண்டு இருக்கலைன்னா மறுபடி தூங்குவேன். ஆனா, 22ம் நூற்றாண்டுலதான் மனித இனம் ராக்கெட் கண்டுபிடிக்கும்குறது அவனுக்கு எப்படி முன்கூட்டியே தெரிஞ்சிருக்கும்?”

சக்கரத்தை நாம கண்டுபிடிச்சோம். சக்கரம் கண்டுபிடிக்க என்னவெல்லாம் சமூகத் தேவைகள் இருந்துச்சு, எப்படியெல்லாம் கண்டுபிடிச்சோம்ன்னு நமக்குத் தெரிஞ்சப்புறம், இப்போ ஒரு காட்டுக்குப் போறோம். அங்க வெளி உலகத்தோட கொஞ்சமும் தொடர்பு இல்லாத ஒரு ஆதிவாசிக் கூட்டம் இருக்கு. இப்ப நம்மால அவங்க இயங்கற விதத்தை வச்சு, அவங்க யோசிக்கிற வேகத்தை வச்சி, இவங்க தாமாவே சக்கரத்தை கண்டுபிடிக்க எத்தனை காலம் ஆகும்னு நம்மால சொல்லமுடியும்தானே?”

ஆமாம்!

அந்த மாதிரி அவன் உலகத்துல இதெல்லாம் ஏற்கனவே கண்டுபிடிக்கட்டிருக்கணும். அந்த வேகத்தோட பூமியில மனிதர்களோட இயங்கு வேகத்தையும் பொருத்திப் பார்த்து இந்தக் கணிப்புக்கு அவன் வந்திருக்க வாய்ப்பிருக்கு.

நீங்க சொல்றதை ஒப்புக்கிறேன்.

பாத்தீங்களா? நான் சொன்ன தகவல்களோட யோசிக்கிறப்போ நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் உங்களால கனெக்ட் பண்ணமுடியுது. அவன் மருத்துவமனையிலிருந்து தப்பிச்சப்போவே எழுபத்தி அஞ்சாவது கோடை, அந்த உலோகத்துல இட்டிருக்கணும். ஹாலீஸ் காமட்டை அவன் நெருங்கினதுக்கப்புறம், பூமிக்கு அந்த காமெட் மறுபடி வரப்போறதை குறிச்சு வைக்கவேண்டிய தேவை மறுபடி வரப்போறதில்லைன்னு நினைச்சு, அந்த ராக்கெட்லயே அவன் அதைக் கழற்றி வீசியிருக்கணும்.”

 

ஆனா, அது ஒரு ஆளில்லா விண்களம்தானே. அவனுக்கோ ஆதி மொழிதான் தெரியும். அவன் எப்படி அந்த விண்களனை எடுத்துக்கிட்டு ஹாலீஸ் காமெட்டை அடைந்திருக்க முடியும்?”

நல்ல கேள்வி. 2030லயே விண்வெளியில மிதக்கிற ஒவ்வொரு களனுக்குள்ளும் ஒரு தானியங்கி கணிப்பொறியான டார்ஸ் இருக்கணும்னு விதி வந்தாச்சே. எல்லா நாட்டு விண்வெளி ஆய்வாளர்களும் எதிர்பாராத ஆபத்து காலத்தில் விண்வெளியில பிழைக்கணும்குறதுக்காக, விண்வெளி களன்கள் எல்லாத்தையும் பொதுவுடைமை ஆக்கவும் 2030லயே சட்டம் போட்டாச்சு. தவிரவும், மொழி தெரியலைன்னாலும் சைகைகளை வைத்து கட்டளைகளை தனக்குத்தானே உருவாக்கிக்கிற சிஸ்டமும் எல்லா விண்களன்களுக்குள்ளும் இருந்தாகணும்குற விதியும் இருக்கு.

சரி, விண்களன் நிலாகிட்ட கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. அவன்கிட்ட ஸ்பேஸ்சூட் இல்லையே. அப்புறம் எப்படி ஹாலீஸ் காமெட்டுக்குத் தாவி இருப்பான்?”

இன்ஸ்பெக்டர் சதாசிவம் என்கிட்ட தன்னோட மொபைல்ல எடுத்த புகைப்படங்களைக் காட்டினப்போ, தோல் மாதிரி ஒண்ணு காட்டினார். இந்தப் பூமியில சில உயிரினங்கள் இருக்கு. அவை தங்களுக்கு தோதான புறச்சூழல் இல்லாதப்போ, தோல் போல ஒண்ணை தனக்குத்தானே உருவாக்கி, அதுக்குள்ள ஒளிஞ்சிக்கும். சதாசிவம் என்கிட்ட காட்டினப்போ அவருக்கு அது பாம்பு உரிச்ச தோல்ங்கற அளவுக்குத்தான் புரிதல் இருந்திருக்கு. ஒருவேளை அவர் இடத்துல நான் இருந்திருந்தா, அந்தத் தோலை ஆராய்ச்சி பண்ணியிருப்பேன். அந்த உலோகத்தை கார்பன் டேட்டிங் பண்ணி, அதோட வயசும், எழுபத்தி நாலு ஹாலீஸ் காமெட் வருகைக்குத் தேவைப்படும் கால அவகாசமும் பொருந்துதான்னு சோதிச்சிருப்பேன். இந்த ரெண்டும் ஒண்ணா இருந்தா, அப்ப அவன் நிச்சயமா வேற்றுகிரகவாசிதான். இந்த விஷயத்துல துரதிருஷ்டம் என்னன்னா, ஒரு மங்குனி காவல் அதிகாரியா இருக்குறதுதான். நடந்ததை வச்சுப் பார்க்கும்போது அப்படி ஒரு தோல் அவனுக்கு மனிதர்கள் பயன்படுத்துகிற ஸ்பேஸ்சூட் போல பயன்பட்டிருக்கணும்.”

அப்போ, அந்த ராக்கெட் மூலமா அவன் ஹாலீஸ் காமெட்டுக்குத் தாவி, அதன்மூலமா சோலார் சிஸ்டத்தின் விளிம்புக்குப் போறதாவே வச்சிக்குவோம். அங்கிருந்து எங்க போவான்?”

நாம பூமி மனிதர்கள். நாம இதுநாள் வரைக்கும் நம்ம ஆராய்ச்சிகளைப் பூமியை மையப்படுத்தித்தான் செஞ்சிருக்கோம். யாரு கண்டது? எப்படி சூரியனைச் சுத்தி நீள்வட்டப்பதையில சுத்துற ஒரு காமெட்டைப் பிடிக்க அவன் நம்ம ராக்கெட்டை பயன்படுத்திக்கிட்டானோ, அதேமாதிரி வேற ஏதோ ஒரு விண்வெளிப் பொருளைச் சுத்தி ஒரு நீள்வட்டப்பாதையில பயணிக்கிற எதையோ பிடிக்க, அவன் ஹாலீஸ் காமெட்டை பயன்படுத்த முயற்சித்திருக்கலாமோ என்னமோநம்மால அதைக் கண்டுபிடிக்க முடிஞ்சா, நாம தேடிக்கிட்டிருக்கிற கடவுள் இந்தப் பிரபஞ்சத்துல எந்த மூலையில இருக்கார்னுகூட கண்டுபிடிக்கவே செய்யலாம்என்றார் ஆர்பிட்

எனக்கு ஆச்சரியம் என்னன்னா, அவனுக்கு எப்படி இந்த ஐயாயிரம் வருஷத்துல பூமி மனிதர்களோட இயக்கம், பூமியோட வனப்பு, அதிசயங்கள், ஆச்சரியங்கள் ஈர்க்கவே இல்லைங்கிறதுதான். ஈர்த்திருந்தா அவன் இங்கயே இருந்திருப்பான்ல?”

அதான் கேள்வி. இப்படிக் கேட்டுப் பாருங்க. அவன் போயிட்டு இருக்கிற உலகம் எத்தகையதா இருந்தா, நம்ம உலகம் அவனுக்கு ஒரு பொருட்டாவே இல்லாம இருந்திருக்கும்? நான் கொஞ்சம் வேற மாதிரி யோசிச்சுப் பார்க்கிறேன்.”

எப்படி?”

இன்னிக்கு என் வீடு தேடி என்னைச் சந்திக்கணும்னு நீங்க வந்தீங்க. ஒருக்கால், நான் ஒரு அரை மணி நேர வேலையா வெளியில போயிருந்தா என்ன செய்திருப்பீங்க?”

பக்கத்துல இருக்கிற பார்க்லயோ, பீச்சிலயோ, அல்லது ஏதாச்சும் ஷாப்பிங் மால்லயோ அந்த அரைமணி  நேரத்தைக் கடத்திட்டு திரும்பவும் வந்திருப்பேன்.”

பூங்காவில 24 மணி நேர கால அவகாசத்தை வாழ்நாளா கொண்ட ஒரு பூச்சி இருக்குன்னு வச்சிக்குவோம். அந்தப் பூச்சியைப் பொருத்தவரை ஒவ்வொரு நொடியும் ஒரு வருஷமா இருக்கலாம். அப்படீன்னா, அதோட பார்வையில நீங்க பல வருஷமா சாகாம வாழ்கிற ஒரு உயிராத்தானே இருக்கணும்?”

சிவபாலன் அங்கீகரிப்பாய்த் தலையசைத்தார்.

சரி. இன்னொரு கேள்வி. இப்போ நீங்க பூங்காவிலே இருக்கீங்க. அந்தப் பூச்சியோட செய்கைகள், உங்களுக்கு அனர்த்தமா தோன்றியிருக்கு. பிடிக்கவே இல்லை. பூச்சி சீக்கிரம் அழிஞ்சிடும்ங்குற ஒரு பிம்பம் உங்களுக்கு கிடைச்சிடுது. இப்போ  நீங்க என்ன பண்ணுவீங்க?”

அனர்த்தமா தோணிச்சுன்னா பார்க்கவே சலிப்பூட்டும்.”

சலிப்பூட்டினா என்ன செய்வீங்க?”

வேற எங்கயாச்சும் போவேன்

போக்கிடம் இல்லைன்னா?”

கண்டும் காணாம ஏதாச்சும் நடந்துட்டு போகட்டும்ன்னு தூங்கியாச்சும் காலத்தை கழிப்பேன்.

எக்ஸாக்ட்லிஅவனும் பூமியில் அதைத்தான் செய்திருக்கிறான்.”

என்ன சொல்றீங்க? ஐயாயிரம் வருஷங்குறது நேரம் கடத்துற கால அவகாசமா ஆர்பிட்?”

நீங்க இப்பவும் பூமியையும், அதில் இருக்கிற மனித வாழ்வையும் வச்சே எல்லாத்தையும் கணக்கிடறீங்க. அதனாலதான் ஐயாயிரம் வருஷம், ரொம்ப பெரிய விஷயமா தெரியுது. பூமி இந்த காலாக்ஸியோட மையத்தை சுத்தி வருகிற வேகத்துக்குக் காலம் இங்க ரொம்பவும் நீளமா இருக்குன்னுதான் சொல்லணும். இப்படி யோசிச்சுப் பாருங்க. ஒளியோட வேகத்துல 99% பயணிக்கிற ஒரு கிரகத்துல இந்த ஐயாயிரம் வருஷம்ங்குறது சில மணி நேரங்களா இருக்கலாம். அந்த சில மணி நேரங்களைக் கடத்தணும்னுகூட அவன் பூமியை ஒரு பூங்காவாவோ, அல்லது ஒரு கடற்கரையாவோ, அல்லது ஒரு ஷாப்பிங் மாலாவோ நினைச்சு வந்திருக்கலாம்தானே. வந்த இடத்துல அனர்த்தமா நிகழ்கிற மனித வாழ்க்கையைக் கவனிச்சுப் பார்த்துட்டு, அதுல சலிப்புற்று நீள் உறக்கத்துக்குச் சென்றிருக்கலாம்.

சிவபாலன் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஒருசேர ஆட்கொண்டவராய் ஆர்பிட்டையே பார்த்தபடி இருந்தார்.

ஒரு மருத்துவனா, இத்தனை காலமும் மனித உடலை, அதன் வேதியியலை, உளவியலை கரை கண்டுட்டேன்னு நினைச்சிட்டு இருந்தேன் ஆர்பிட். இப்போ எனக்கு ஒண்ணுமே தெரியலையோன்னு தோணுது. அவன் என் கண் முன்னால படுக்கையில கிடந்தான். அவன் உடம்பை நான் என்கிட்ட இருந்த உபகரணங்களை வைத்து சோதிச்சப்போ எனக்கு ஏதும் வித்தியாசமா படலை. ஐயாயிரம் வருஷம் உயிரோட இருந்த உடலா அது? தனக்குத்தானே ஒரு தோல் செய்து, விண்வெளியின் வெற்றிடத்திலும் ஒரு டார்டிகிரேட் போல அழியாமல் நீளும் உடலா அது? எப்பேர்பட்ட உடலை மிக மிகச் சாதாரணமா கையாண்டிருக்கேன்னு யோசிச்சா, எனக்கே என்னை நினைச்சு கேவலமா இருக்கு ஆர்பிட்என்றார் சிவபாலன்

ஒண்ணு புரியுது, தன்னை கடவுள்னு மதிக்கிறவன் கிட்டதான் கடவுள், கடவுளாவே இருக்கான். மதிக்காதவங்ககிட்ட அவன் தன்னை வெளிப்படுத்திக்காம கடந்துபோயிடறான். தலையெழுத்துங்குறது கடவுளும் விதிவிலக்கில்லையோ என்னமோஎன்றார் சிவபாலன் தொடர்ந்து

நாம மனிதர்கள் இல்லையா? அதிலும் அற்பமான மனிதர்கள். அதனாலதான் நம்மை மையப்படுத்திய கோணங்கள் தவிர ஏனைய எல்லாமும் நமக்கு மிகவும் அற்பமா, மதிப்பற்ற ஒண்ணா தெரியுது சிவபாலன்என்றார் ஆர்பிட்

கடவுளை நேருக்கு நேராக சந்திச்சும் விட்டிருக்கோம். அதைத்தான் ஜீரணிச்சுக்கவே முடியலை. நாமளாச்சும் பரவாயில்லை. சதாசிவம், கடவுளையே பைத்தியம்ன்னு சொல்லிட்டாருஎன்றார் சிவபாலன்.

அற்ப மனிதர்களுக்கு நடுவுல கடவுளே வந்தாலும், பைத்தியமாத்தான் இருக்கணுமோ என்னமோஎன்றார் ஆர்பிட்.

 

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button