“இலக்கியத்திற்கான என் பங்களிப்பாக பதாகைகளை ஆட்டோவில் ஒட்டுகிறேன்” – ஆட்டோ ஓட்டுநர் பிரம்மநாயகம் அவர்களின் நேர்காணல்
நேர்காணல்கள் | வாசகசாலை

வாசிப்பை நேசித்தும் பிறரையும் வாசிப்பை நோக்கி ஈர்க்கும் ஆட்டோ ஓட்டுநர் பிரம்மநாயகம் அவர்கள் உடனான சிறு நேர்காணல்.
- ஆட்டோ ஓட்டுநர் / தீவிர வாசகர் பிரம்மநாயகம், வணக்கம்; நமது வாசகர்களுக்காக முதலில் உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.
நான் இளங்கலை தமிழ் பட்டப்படிப்பை முடித்துள்ளேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஒருவர் கல்லூரியில் முன்றாம் ஆண்டும், இன்னொருவர் 12 ம் வகுப்பும் படித்து கொண்டிருக்கிறார்கள். நான் ஒரு 15 வருடமாக ஆட்டோ ஓட்டிவருகிறேன்.
- எப்போது உங்களுக்கு வாசிப்பு மீதான ஆர்வம் துவங்கியது? அதற்கு யார் காரணம்?
நான் சென்னையில் ஐந்து வருடம் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்தேன் (98 முதல் 2003). அப்போது நான் விகடனின் தீவிர வாசகன், எனது உறவினரான மாரியப்பன் சித்தப்பா நிறைய வாசிப்பார்கள். நானும் அவரும் சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு வருடந்தோறும் சென்று வருவோம். அவரிடமிருந்துதான் எனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
- புனைவு – அபுனைவு நூல்களுள் நீங்கள் விரும்பிப் படிப்பது எது? என்ன காரணம்?
நான் பெரும்பாலும் வரலாற்று ஆய்வு நூல்களை தேர்ந்தெடுத்து வாசிப்பேன். தமிழறிஞர்களைப் பற்றி சாகித்ய அகாடமி நூல்களையும் வாசிப்பதுண்டு. கவிதைத் தொகுப்புகளையும் வாங்கிவாசிப்பேன்.
- ஆட்டோ நிறுத்தத்தில் புத்தகமும் கையுமாக இருக்கும் உங்களை சக ஆட்டோ ஓட்டுநர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?
‘படிக்கும் போது படிக்கல; இப்ப உக்காந்து படிச்சிட்டு இருக்காரு’ என கிண்டல் செய்வார்கள். இப்போது எதுவும் சொல்வதில்லை. ‘அவனப்பத்தி தொந்தரவு இல்லப்பா’ என அமைதியாகி விட்டார்கள்.
- உங்கள் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள், அங்கிருக்கும் நூல்களைப் பார்த்துவிட்டு என்ன கூறுவார்கள்?
எந்த நேரமும் புத்தகம் வாசிச்சிட்டே இருக்கீங்க என்பார்கள் சில நெருக்கமான பயணிகள் ‘இப்ப என்ன புத்தகம் வாசிச்சிட்டு இருக்கீங்க’ என்பார்கள். அவர்களில் இலக்கியப் பரிட்சயம் உள்ளவர்களும் உண்டு.
ஒருசிலர் ஆட்டோல புதுமைப்பித்தன்னு போட்டிருக்கீங்கலே அது யாரு எனக் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.

- தாமிரபரணி கரையில் உருவான படைப்பாளிகள் தமிழ் இலக்கிய உலகிற்கு அளித்துள்ள கொடைகள் மிகப்பெரியது. அவர்களில் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் யார்? ஏன்?
வண்ணதாசன் ஐயா. பொதுவெளி, இலக்கிய கூட்டம் என எங்கு என்னைச் சந்தித்தாலும் கரம் பற்றி நலம் விசாரிப்பார்கள். ‘குழந்தைகள் எப்படியிருக்காங்க? இப்ப எந்த புத்தகம் வாசிச்சிட்டிருக்கீங்க’
எனக் கேட்பார்கள், சில மாதங்களுக்கு முன் என் பிறந்தநாளுக்கு ‘பிரம்மநாயகம் நல்லாயிருங்க’ என முகநூலில் பதிவிட்டிருந்தார்கள், இதைவிட வேறென்ன வேனும் ஒரு வாசகனுக்கு?
- உங்கள் ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நீங்கள் வாசிக்கப் புத்தகங்களைப் பரிந்துரை செய்வவதுண்டா?
சில புத்தகங்களை பரிந்துரை செய்துள்ளேன். அதனை வாங்கி வாசித்தவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்கள்
- புத்தகம் வாசிக்க நேரமில்லை என்று பலர் காரணம் கூறிக்கொண்டிருக்க, எந்தெந்த நேரங்களில் நீங்கள் புத்தகம் வாசிக்கிறீர்கள்?
காலை பத்து மணிக்குள் தி இந்து தமிழ்திசை வாசித்து முடித்துவிடுவேன். காலையில் ஒரு சவாரிக்கு இடையிலும், காத்திருத்தலின் போதும் வாசிப்பேன். மாலையில் நிறைய நேரம் கிடைக்கும். அப்போது கொஞ்சம் அதிகம் வாசிப்பேன். ஒரு நாளைக்கு குறைந்தது 40 பக்கங்கள் வாசிப்பேன். புத்தகம் வாசித்தபின் முக்கியமான குறிப்புகளை நோட்டில் எழுதி வைப்பேன். பின்பு அக்குறிப்புகளை எனது முகநூலில் பதிவிடுவேன்.
- புத்தகம் வசித்து விட்டு, அது தொடர்பான வாசிப்பு அனுபவத்தை முகநூலில் எழுதுகிறீர்கள். எப்போது அந்தப் பழக்கம் தொடங்கியது?
மூன்று வருடங்களாக இப்பழக்கத்தை கடைபிடித்து வருகிறேன். என் புத்தகவாசிப்பின் மூலம் நான் அடைந்த பலனை பிறரும் பெற வேண்டும் என்ற நோக்கோடு முகநூலில் பதிவிடுகிறேன்.
- அதேபோல புத்தக விமர்சனத்தைத் தாண்டி, மனங்கவரும் புத்தகங்களின் அட்டைகளை உங்கள் ஆட்டோவில் பதாகையாக ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது? அதற்கு என்ன காரணம்?
கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான பத்மஜா நாராயணன் மொழிபெயர்ப்பு நூல்களான தடங்கள், வெண்ணிற இரவுகள் போன்ற நூல்களை எனக்கு இலவசமாக அனுப்பி வைத்தார்கள், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதாகைகளை ஆட்டோவில் இரண்டு பக்கமும் ஒட்டினேன். அப்படித் தொடங்கியதுதான் இப்பழக்கம். தற்போது இலக்கியத்திற்கான என் பங்களிப்பாக பதாகைகளை ஆட்டோவில் ஒட்டுகிறேன்
- உங்கள் ஆட்டோவில் படைப்பாளிகள் யாரேனும் பயணம் செய்துள்ளார்களா? சுவாரஸ்யமான அனுபவம் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்.
தொ.ப, ஆ. இரா. வேங்கடாசலபதி, வண்ணதாசன், வண்ணநிலவன், விக்ரமாதித்தன் கலாப்ரியா, பவா செல்லத்துரை, பாரதி கிருஷ்ணகுமார், சுகா, இரா. முத்துநாகு என நிறைய ஆளுமைகள் எனது ஆட்டோவில் பயணம் செய்திருக்கிறார்கள். அவர்கள் பயணம் செய்ததே எனக்குக் கிடைத்த சுவராஸ்யமான அனுபவமாகக் கருதுகிறேன்.
- பயணிகள் புத்தங்களைக் கேட்டால் கொடுத்து விடுவீர்களா? அவ்வாறு அளிக்கும் புத்தங்கள் திரும்ப வருமா?
பயணிகள் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். இலக்கியத் தோழர்கள்தான் வாங்கிய புத்தகங்களை திருப்பித் தருவதில்லை.
- தொழிலுடன் சேர்த்து வாசிப்பு என்று இருப்பதால் ஏதேனும் கசப்பான அனுபவங்களை சந்தித்துளீர்களா?
அது நிறைய, நான் புத்தகத்தில் மூழ்கி இருக்கும்போது, அடுத்த ஆட்டோ தோழர்கள் சவாரிய எடுத்துட்டுப் போயிருவாங்க, சில வாடிக்கையாளர்கள், ‘யோவ்! எத்தனை தடவையா கூப்பிடுறன். என்னையா படிச்சிகிட்டே இருக்கீரு?’ அப்படிம்பாங்க. அவங்களுக்கு என்ன தெரியும் புத்தகத்தோட ருசி?
- நீங்கள் இதுவரை வாசித்ததிலேயே உங்களுக்கு மிகவும் நெருக்கமான நூல் எது? ஏன்?
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் (தமிழருவி மணியன்) அறம் சார்ந்த வாழ்வியலோடு மனிதன் வாழ தேவையான கருத்துக்களை இந்நூல் தாங்கி நிற்பதால்.
- வாழ்வில் அவசியம் வாசிக்கவேண்டியது என நீங்கள் பரிந்துரைக்கும் ஐந்து நூல்கள் எவை?
(1) தம்மபதம் (ஓஷோ)
(2) இன்றைய காந்தி (ஜெயமோகன்)
(3) ஜே ஜே சில குறிப்புகள் (சுந்தர ராமசாமி)
(4) கவிஞனும் காப்புரிமையும் (ஆ. இரா. வேங்கடாசலபதி)
(5) நிலம்பூத்து மலர்ந்த நாள் (கே. வி.ஜெயஸ்ரீ)
******
தானி ஓட்டுநர் பணியில் இருந்து
தானே முன்வந்து அனைவரிடமும்
தனது வாசித்தல் நுண்ணாய்வு
பற்றி மிகத் தெளிவாக இருக்கிறார்.