நேர்காணல்கள்

“மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை; இதுவே இன்றைய இலக்கு” – பேராசிரியர் அருணன் நேர்காணல்

ஜி.செல்வா

நாடறிந்த சிந்தனையாளரும் எழுத்தாளருமான பேராசிரியர் அருணன் ‘தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை’யின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகச் செயல்பட்டுவருகிறார். உழைக்கும் மக்களின் பக்கம் நின்று மதவெறி சக்திகளுக்கு எதிராக எழுதியும் பேசியும் வருபவர். ‘தமிழகத்தில் சமூக சீர்திருத்த இரு நூற்றாண்டு வரலாறு’, ‘தமிழரின் தத்துவ மரபு’, ‘காலந் தோறும் பிராமணியம்’, ‘கடவுளின் கதை’, ‘இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு’ என்பது உள்பட மார்க்சியம், அரசியல், தத்துவம், இலக்கியம், வரலாறு, பயண இலக்கியம் எனப் பல தளங்களில் ஏராளமான நூல்களைப் படைத்தவர்.

வெற்றுக் கூச்சலாய் மாறிப்போகும் ஊடக விவாதத்தை கருத்துப் பரிமாறும் இடமாக மாற்றுவதில் நிபுணத்துவம் பெற்றவர். ஜனநாயக சக்திகளின் செயல்பாடு மதநல்லிணக்கத்தை தளமாகக் கொண்டு செயலாற்ற வேண்டும், இதுவே இன்றைய தேவை என்கிறார் பேராசிரியர் அருணன்.

அவரோடு தோழர் ஜி.செல்வா நடத்திய நேர்காணலின் முக்கிய பகுதிகள்:

மதப் பகைமையை தூண்டுகிற சக்திகள் நீண்ட காலமாக இந்த மண்ணில் இருந்து வருகின்றன. விடுதலைப் போராட்ட காலத்தில்  பொது எதிரியாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இருந்தது. ஆகவே, மதப் பகைமைவாதிகள் எவ்வளவு தூண்டிவிட்டாலும் பெரிதாக எதுவும் அன்றைக்கு நடக்கவில்லை. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர்கள் ஆகிய நாலு பிரிவினரும் இணைந்து மிகப்பெரிய வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.

ஆனால், அந்த போராட்டத்தின் முடிவிலேயே மதப்பகைமையை அந்த சக்திகளால் உருவாக்க முடிந்தது. மதத்தின் அடிப்படையில் இந்த நாடு துண்டாடப்பட்டது. உண்மையில் இங்கே இரண்டு நாடுகள் இருக்கின்றன என்று முதலில் சொன்னவர் சாவர்க்கர். 1924இல் எழுதப்பட்ட அவருடைய ‘இந்துத்வா’ நூலில் இது உள்ளது. ஒரே நாடு – அதில் பல மதங்கள் என்பதற்கு மாறாக, மத அடிப்படையில் இங்கு இரண்டு நாடுகள் இருக்கின்றன, சேர்ந்து வாழ முடியாது என்பதுதான் அவர்களின் நிலைப்பாடாக இருந்தது.

1925இல் ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டது. அவர்களுடைய கொள்கை என்னவென்றால், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்பதுதான். தோற்றுவித்த ஹெட்கேவகரும், அதற்குப் பிறகு தலைவராக இருந்த கோல்வால்கரும் சொன்னது ‘உங்கள் சக்திகளையெல்லாம் வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக வீணாக்காதீர்கள், அவற்றைச் சேமித்து வையுங்கள், நமக்கு எதிரிகள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் ‘ என்பதுதான். இதுவே அவர்களின் நிலைப்பாடு. இது எழுத்துபூர்வமாக கோல்வால்கரின் சிந்தனை தொகுப்பில் இருக்கிறது.

ஆனால், இதையெல்லாம் தாண்டி மத வேறுபாடின்றி, மதமாச்சரியமின்றி ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. ஆனால், அதன் முடிவிலேயே மத அடிப்படையில் நாட்டை பிரித்துவிட்டார்கள். இது அந்த மதவெறி சக்திகளுக்கு பெரிய வெற்றியாகிவிட்டது.

விடுதலை இந்தியா எதிர்க்கொண்ட சவால்கள்

காந்தி படுகொலை  மிகப்பெரிய எதிர்ப்பு ஆவேச அலையைதான்  உருவாக்கியது. ஆர்.எஸ்.எஸ். மீதும் இந்து மகாசபை மீதும் மிகப்பெரிய கோபம் எழுந்தது. ஆனால், 60-களுக்கு பிறகு அந்த சக்திகள் மீண்டும் எழ ஆரம்பித்தன.

1951-லேயே தனது அரசியல் பிரிவாக ஜனசங்கத்தை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிவிட்டது. அது மெல்ல மெல்ல வளர்ந்து 1967 தேர்தலிலேயே முக்கிய சக்தியாக வட மாநிலங்களில் வந்துவிட்டது. இந்தியாவில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தது மிகப்பெரிய தவறு. அதை முன்வைத்துத் தாங்கள் ஜனநாயகவாதிகள் என்பதைப் போல காட்டி கொண்ட ஜனசங்கம் பெரிய கட்சியாக வளர்ந்தது. ஜனதா கட்சிக்குள் புகுந்து 1977லேயே ஜனசங்கத்தை சார்ந்த வாஜ்பாய் – அத்வானி மத்திய அமைச்சர்களாகவே ஆகிவிட்டார்கள்.

இவர்கள் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார்கள் என அப்போதுகூட யாரும் நினைக்கவில்லை. கூட்டணி ஆட்சியை 1998, 99இல் அவர்களால் உருவாக்க முடிந்தது. ஆனால், 2014இல் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து 2019இல் மீண்டும் வந்துவிட்டார்கள்.

தமிழகத்திலும் காலூன்ற துடிக்கும் மனுவாத சக்திகள்

இந்தியா முழுக்க முக்கியமாக வடமாநிலங்களில் நடப்பது தமிழ்நாட்டில் எப்படி பிரதிபலிக்காமல் இருக்கும்?

அயோத்திதாசர், தந்தை பெரியார், சிந்தனைசிற்பி சிங்காரவேலர் ஆகியோரின் பூமி இது. ஆர்.எஸ்.எஸ். தமிழகத்தில் காலூன்ற மிகப் பெரும் சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

ஆதிகாலத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ்.இன் முக்கியமான தந்திரம் என்னவென்றால், அரசியலை கவனிக்க ஜன சங்கத்தையும் அதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியையும் உருவாக்கி ஆட்சியை பிடித்துவிட்டார்கள். ஆனால், 1925இல் இருந்தே சிவில் சமூகத்தில் -நேரடி அரசியல் இல்லாத களத்தில் – தீவிரப் பணியாற்றினார்கள். அது தமிழ்நாட்டிலும் நடந்தது.

ஆனால் இந்த மண்ணில் அது எடுபடாமல் போனது. எப்போது அது எடுபட ஆரம்பித்தது என்றால் 1998, 99-லிருந்து. ஆக, இவர்கள் மத்தியில்  ஆட்சிக்கு வரக்கூடும் என நினைத்த சக்திகளுக்கு தமிழ்நாட்டில் உற்சாகத்தை தந்தது. 2014இல் அது உத்வேகமாக மாறியிருக்கிறது.

ஆதிக்க சக்திகள்  வெறும் ஆயுத பலத்தால் மட்டும் ஆள்வதில்லை, பிரச்சார பலத்தாலும் ஆளுகிறது, சித்தாந்த பலத்தாலும் ஆளுகிறது. வெகு மக்களை ஆளுகிற அந்த ஒப்பந்தத்தை அவர்களிடம் இருந்தே பெறுகிறார்கள்.

அவர்களுடைய நோக்கம் மத கலவரத்தை உருவாக்குவது, மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவது. அதன் அடிப்படையில் இந்துக்கள் என்னும் பெயரில் வெகு மக்களை தங்கள் பின்னால் அணிதிரள வைப்பது. இதற்குக் கலவரம்தான் அவர்களுடைய அடிப்படை, பகைமையை ஊட்டுவதுதான் அவர்களுடைய கருவி.

அத்திவரதரும் ஹைகோர்ட் நீதிபதியும்

கடவுள் நம்பிக்கையில் சாதாரண இந்துக்கள் பேதத்தைப் பேணவில்லை. ஆனால், அவர்கள் மனதில் கிறிஸ்தவர்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை வளர்க்கிற வேலை, அதற்காக கலவரம் செய்கிற வேலை, வன்முறையைத் தூண்டுதல் தமிழ்நாட்டிலும் நடக்கிறது. உதாரணத்துக்கு மூன்று விஷயங்களை சுட்டிக்காட்ட முடியும்.

 

1, காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திவரதர் குளத்தில் இருந்து எடுத்து வழிபாட்டுக்கு வைத்த நிகழ்வை மத துவேஷத்துக்கு பயன்படுத்தியுள்ளார் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர். முஸ்லிம்களுக்கு பயந்துதான் குளத்துக்குள் அத்திவரதர் சிலையை வைத்ததாக அவர் பேசினார். ஆனால் உண்மை என்ன? குளத்திலுள்ள கோயில் கல்வெட்டு 1937-ல் அத்தி வரதரை குளத்தில் வைத்ததாக சொல்கிறது. 42 ஆண்டுகளுக்குப் பிறகு 1979இல் அத்திவரதர் வழிபாடு நடந்து உள்ளது. அதையடுத்து 40 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் வழிபாடு நடந்துள்ளது. 1937-க்கு முன்பு குளத்துக்குள் அத்திவரதர் போனதாக எந்த சான்றும் இல்லை. ஜீயர் சொன்னதற்கு ஆதாரம் எங்கே என உயர் நீதிமன்றம் கேட்டபோது, அவர்களுடைய ஆட்கள் போட்ட ஒரு நோட்டீசை ஆதாரமாகக் கொடுத்திருக்கிறார். அத்தி வரதரை வழிபடும் சாதாரண இந்து மக்களிடம் முஸ்லிம் வெறுப்பை உருவாக்க இத்தகையோர் எடுக்கும் முயற்சியை நாம் சாதாரணமாகக் கருதிவிடக்கூடாது. ஒருநாள் நடைப்பயிற்சியின்போது ஏழாம் வகுப்பு படிக்கும் எனது நண்பரின் பிள்ளையிடம் பேசிக் கொண்டிருந்தபோது, “முஸ்லிம்களுக்கு பயந்துதான் அத்திவரதரை குளத்தில் வைத்துவிட்டதாக” அந்தக் குழந்தை கூறியது. இது எந்தளவுக்கு ஜீயரின் விஷமப் பிரச்சாரம் கீழே இறங்கி உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

 

  1. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தனது தீர்ப்பின்போது போகிறபோக்கில் “கிறிஸ்தவக் கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, மதமாற்றப் பிரச்சாரம் நடக்கிறது” என்று ஒரு கருத்தை விதைக்கிறார். இச்செய்தியை இரண்டு முக்கியமான நாளிதழ்கள் முதற்பக்க செய்தியாக பிரசுரிக்கின்றன. இதையெடுத்து பா.ஜ.க.வினுடைய எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக விஷத்தைக் கக்குகிறார். நல்லவேளையாக ‘ஜனநாயக மாதர் சங்கம்’ நீதிபதியின் கருத்துக்களுக்கு எதிராக அறிக்கைவிட, பல அறிவு ஜீவிகள் எதிர்க்க நீதிபதி தனது கருத்தை திரும்பப் பெற்றுக்கொண்டார்.

 

  1. வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து வழிபடச் சென்றவர்களை, மதமாற்றத்தில் ஈடுபடுவதாக சொல்லி இந்து முன்னணியினர் தாக்கினர். ‘டைம்ஸ் மிரர்’ஆங்கிலத் தொலைக்காட்சி மட்டுமே இதை ஒளிபரப்பியது, வேறு எந்த ஊடகங்களும் இதை வெளியிடவில்லை. இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக இத்தகைய வன்முறைகள் ஏவப்படும்போது ஊடகங்கள் அமைதிகாப்பது, அத்தகைய செயலை ஏற்றுக்கொள்வதற்கு சமம்.

மேற்கண்ட சம்பவங்களை  லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தமிழகத்தையும் மதக் கலவர பூமியாக்க சங் பரிவார் திட்டம் தீட்டியுள்ளது. மனிதநேயர்களே விழித்தெழுங்கள், வருமுன் காப்பதே புத்திசாலித்தனம் என்ற அடிப்படையில் ஜனநாயக சக்திகள் செயலாற்ற வேண்டியுள்ளது.

இருமுகம் ஒரு நாக்கு

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அண்ணா திமுகவும் பாரதிய ஜனதா கட்சியின் ஊதுகுழலாக பேசிக்கொண்டிருப்பதை காண முடிகிறது. கட்சிகள் வேறாக இருந்தாலும் சிந்தனைகள் ஒன்றாகிவிட்டன. பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் “தமிழகம் பெரியார் மண் அல்ல, ஆழ்வார்கள் நாயன்மார்களின் மண் என்பதை நிருபிப்போம்” என்று பேசினார். இதற்கு அர்த்தம் என்ன? சமண, பௌத்த மதங்களை எதிர்த்து அடக்குமுறைகளை ஏவியவர்கள் நாயன்மார்கள், ஆழ்வார்கள். ஆனால், பெரியார் மண் என சொன்னால் மதநல்லிணக்க பூமி என்று அர்த்தம். இந்த மரபை சீர்குலைக்க முனைகிறார்கள்.

இதற்கு உதவியாக அண்ணா பெயரில் செயல்படும் ஆளுங்கட்சி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, கமல்ஹாசன் ‘‘காந்தியைக் கொன்றது இந்து தீவிரவாதி’’ எனக் குறிப்பிட்டார். “இந்துத்துவா தீவிரவாதி” என்றுசொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும். அவன் தீவிரவாதிதானே. அவ்வாறு  பேசியதற்காக கமல்ஹாசனின் நாக்கை வெட்ட வேண்டும் என்று சொன்னது பா.ஜ.க. அல்ல. அ.தி.மு.க. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இப்படிப்பட்டவர்கள் ஆட்சியில்தான் இன்று இருக்கிறோம்.

மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்தவர்கள் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. இவர்கள் வழிவந்த ஆட்சி என சொல்லிக்கொள்பவர்கள் ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியதை, 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்திருக்கிறார்கள்.

எனவேதான் சொல்கிறோம், தமிழகத்தில் மதநல்லிணக்கத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது அரசியல், சமூக, சித்தாந்தத் தளத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதை எதிர்கொள்வதற்கு பல தரப்பட்ட அரசியல் கட்சிகளும் ஜனநாயக எண்ணம் கொண்டோரும் இணைய வேண்டிய சூழலும் தேவையும் உருவாகிவிட்டது.

இல்லாத எதிரியை கட்டமைக்கும் மனுவாதிகள்

“ஐந்து ரூபாய் கொடுத்து பிஸ்கட் வாங்கமுடியாத சூழலில் இந்திய பொருளாதாரம் இருப்பதாக பிரிட்டானியா நிறுவன அதிகாரி சொல்கிறார். 70 ஆண்டு காலத்தில் இல்லாத பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்துகொண்டிருப்பதாக நிதி ஆயோக் துணைத்தலைவர் பேசுகிறார். இதிலிருந்து திசைதிருப்ப இல்லாத எதிரியை கட்டமைக்கிறார்கள் மனுவாதிகள். கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் இந்து மக்களுக்கு எதிரானவர்களாக கட்டமைக்க முயல்கிறார்கள்.

மக்கள்தொகையில் 2 சதவீதமாக உள்ள கிறிஸ்தவர்களும் 14 சதவீதமாக உள்ள முஸ்லிம்களும் எப்படி பெரும்பான்மை இந்து மக்களுக்கு எதிரியாக முடியும்? உயர் கல்வி, அரசு வேலைவாய்ப்பு, சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளில் எத்தனை இடங்களில் சிறுபான்மை மக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்? 14 சதவீதத்துக்கு மேல் முஸ்லிம்கள் இருக்கும் ஒரே இடம் சிறைச்சாலைதான். ஆனால் கூச்சமே இல்லாமல் பொய் சொல்லி சிறுபான்மையினருக்கு எதிராக இந்து சமூகத்தைக் கட்டமைக்க முயல்கிறார்கள்.

சிறுபான்மையினருக்கு மட்டும் இந்த மதவெறி சக்திகள் எதிரிகள் அல்ல, இந்து மக்களுக்கும் எதிரிகள்.  இந்து சமூகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீட்டை வி.பி.சிங் கொண்டு வந்தபோது அதற்கு எதிராக கலவரத்தை உருவாக்கியவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர். பாபர் மசூதியைத் தகர்க்க அத்வானி ரதயாத்திரை சென்றதை தடுத்ததால் வி.பி. சிங்  ஆட்சிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக குடியரசுத் தலைவரிடம் வாஜ்பாயி கடிதம் கொடுத்தார். இப்போதும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக விவாதம் நடத்தவேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். தலித்துகள் மீதான தாக்குதல்களைத் தூண்டி விடுகிறது சங் பரிவாரம், தீண்டாமையை இயல்பானதாக கருதச் சொல்கிறது. இந்துப் பெண்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.

1951இல் இந்துப் பெண்களுக்கு திருமணம், சொத்து ஆகியவற்றில் உரிமை தரவும் பலதார மணத்தை தடுக்கவும் அம்பேத்கர் எடுத்த முயற்சியை சனாதன சக்திகள் தடுத்து நிறுத்திவிட்டன. இதனாலேயே டாக்டர் அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இப்போதுகூட குருமூர்த்தி “30 சதவீத பெண்களே பெண்மைத்தன்மையோடு இருப்பதாகப்” பேசியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அடிப்படைக் கருத்தியலே ஆணுக்கு பெண் அடங்கி இருக்க வேண்டும் என்பதே. அதனால்தான் இன்றுவரை ஆர்.எஸ்.எஸ். சில் இந்துப் பெண்களைக்கூட சேர்க்க மறுக்கிறார்கள்.

தொழில்நுட்பம் வேண்டும், அறிவியல் வேண்டாம்

தொழில்நுட்பத்தை எல்லோரும் உற்சாகமாக வரவேற்பார்கள். ஆனால், அறிவியலை மனுவாதிகள் எதிர்ப்பார்கள். அறிவியலின் கண்டுபிடிப்பான தொழில்நுட்பத்தை வரவேற்கும் மனுவாதிகள், அடிப்படை அறிவியல் சிந்தனையை மறுப்பது ஏன்? ‘பிறப்பின் அடிப்படையில் பேதம் பார்ப்பது’ – மத அடிப்படைவாதிகள் பணி. ‘பேதம் என்பது பிறப்பின் அடிப்படையில் இல்லை’ – இது அறிவியல்பூர்வ சிந்தனை. எனவேதான், மத அடிப்படைவாதிகள் தொழில்நுட்பத்தை கொண்டாடுவார்கள், ஆனால் அறிவியல்பூர்வ சிந்தனைக்கு எதிராகச் செயலாற்றுவார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அறிவியல்பூர்வமான சிந்தனையோட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என வழிகாட்டி உள்ளது. ஏனென்றால், அறிவியல் சிந்தனையை வளர்ப்பது மத நல்லிணக்கத்துக்கு அடிப்படை.  மதத்தின் பெயரால் அடித்துக்கொள்ளக் கூடாது, மற்றவர்களையும் நேசி எனப் பேசுவதும், அறிவியல்பூர்வமாக உரையாடுவதும் மிகக் கடினமான பணி. ஆனால், இதை செய்தே தீர வேண்டும்.

பிற மதநிந்தனை இல்லாத இலக்கியமும் பண்பாடும் கொண்ட பூமி இது. இந்த மரபை உடைத்து மதப் பகைமைதான் இன்றைய நடப்பு என்ற நிலையை உருவாக்க பார்க்கின்றன சனாதன சக்திகள்.

தொழில் அமைதியை சீர்குலைத்து வெகுமக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதைக் கெடுத்து சின்னாபின்னமாக்கக் கூடியது மதவெறி..

தமிழகத்தில் சனாதன சக்திகளை வேரறுக்கவும், சிவில் சமூகத்தில் மதநல்லிணக்கத்தை பேணுவதற்கான உரையாடலை வளர்த்தெடுப்பதுமே இன்றைய தேவை.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close