சிறுகதைகள்
Trending

நரேனின் கனவுத் தொழிற்சாலை – சரத்

சிறுகதை | வாசகசாலை

நரேனுக்கு உடலெல்லாம் வியர்த்தது. இதயம் படபடத்தது. மூடப்பட்ட கதவு எப்போது திறக்கும் என அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தான்.

எத்தனை வருடக் கனவு? இதற்காகத்தானே சொந்த ஊரை விட்டு, சென்னைக்கு வந்து வருடக்கணக்கில் காத்திருக்கிறான்.

‘தம்பி ஒரு அஞ்சு நிமிஷம் வெளிய வெயிட் பண்ணுங்க. கூப்பிடுறேன்’ என்று சொன்ன தயாரிப்பாளர் ரமணன், இரண்டு மணி நேரங்கள் ஆகியும் அழைக்கவில்லையே.

பதற்றத்தோடு காத்திருந்த நரேனின்  போன் வைப்ரேட் ஆனது.

‘ஹலோ’

‘என்னாச்சுடா?’

‘வெயிட் பண்ண சொல்லி இருக்காங்க’

‘கிடைச்சுடுமா?’

‘தெரியலயேடி’

‘அப்பாகிட்ட நம்பிக்கையா சொல்லியிருக்கேன். இந்த டைம் கிடைச்சுடும்னு’

‘ம்…நான் அப்புறம் பேசறேன்’

போனில் ரம்யா. நரேனின் காதலி. அவள் எவ்வளவோ சொல்லியும் முதல் பட வாய்ப்பு கிடைத்த பிறகே திருமணம் என்பதில் உறுதியாக இருக்கிறான் நரேன்.

நரேனுக்கு சினிமாதான் எல்லாமும்.

ஊரில் யாராவது, ‘சென்னைக்கு போக எவ்வளவு தூரம்டா?’ எனக் கேட்டால், ‘இரண்டு ஹாலிவுட் படங்கள் பார்ப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம்’ என்பான்.

‘அப்புறம் மச்சி. லைஃப் எப்படி போகுது?’ என்று நண்பர்கள் யாராவது கேட்டால், ‘பாலா படம் மாதிரி ரஃப்பா போகுதுடா’ என்பான்.

இனி சினிமாதான் தனது வாழ்க்கை என்று முடிவெடுத்தபோது நரேனுக்கு வயது பதினைந்து.

நினைவு தெரிந்த நாள் முதலே ரஜினி ரசிகன். ஆனால் சமீப காலமாக கமலின் படங்களைப் பற்றியே ஏனோ நண்பர்களிடம் சிலாகித்துப் பேசுகிறான்.

அவனுக்குப் பிடித்த விஸ்காம் படிப்பைத் தொடர முடியாமல் வேண்டா வெறுப்பாக ஏதோ ஒரு டிகிரியை படித்து முடித்தான்.

‘அப்பா போனதுக்கு அப்புறமாச்சும் உனக்கு புத்தி வரும்னு பாத்தேன். ஆனா இந்த பாழாப் போன சினிமாவால இன்னும எத்தன வருசம்தான் நீ இப்படி பொறுப்பில்லாம இருக்கப் போறயோ?’

அம்மாவின் திட்டுகளைப் பொறுக்க முடியாமல் சென்னைக்கு ஓடி வந்து, மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. அசிஸ்டன்ட் டைரக்டர் வாய்ப்பிற்காக ஏறி இறங்காத இடங்களே இல்லை. சில புதிய இயக்குநர்கள் அவன் திறனைப் பார்த்து அசிஸ்டன்டாக சேர்த்துக் கொண்டாலும், அடுத்த படத்தில் அவர்களுக்கே வாய்ப்பில்லாமல் போனது.

சென்னை வாழ்க்கை நரேனை நிறையவே மாற்றியது. ஒருவேளை மட்டுமே சாப்பிட கற்றுக்கொண்டான். கிடைக்கும் வேலையை செய்து கொண்டு, மாதம் மூவாயிரம் பணத்தை அம்மாவிற்கு அனுப்பி வைத்தான்.

‘டேய். நீ இப்படி கஷ்டப்பட வேண்டிய ஆளே இல்லையேடா. ஊருல உங்க அண்ணன் கூட சேர்ந்து நீயும் ‘ட்ராவல்ஸ் பிசினஸ்’ பண்ணியிருந்தா இந்நேரம் எங்கேயோ போயிருப்ப’.

சென்னைக்கு வந்த ஒரு மாதத்தில் ரகு, நரேனிடம் சொல்லிய வார்த்தைகள் இவை.

‘உன் கூட நான் இருக்கிறது கஷ்டம்னா சொல்லிடு ரகு. நான் வேற எங்கேயாவது போயிடறேன். ஆனா இப்படி டிஸ்கரேஜ் மட்டும் பண்ணாத’ – இது நரேன்.

அதற்குப் பிறகு இதைப் பற்றி ரகு நரேனிடம் பேசுவதே இல்லை.

சென்னையில் நரேனுக்கு சில அசிஸ்டன்ட் டைரக்டர்களைத் தவிர ஆறுதலாக இருக்கும் ஒரே நண்பன் ரகு மட்டும்தான். நரேனின் கல்லூரித் தோழன். ஒரு தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கிறான். சொந்த ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்க முயற்சி செய்து கொண்டிருப்பவன்.

தியேட்டரைத் தவிர நரேனை வீட்டின் அருகில் இருக்கும் லைப்ரரியில் அடிக்கடி பார்க்கலாம். தான் எழுதும் கதைகளுக்கு சில குறிப்புகளை அங்கு எடுத்துக் கொள்வான். ரம்யாவை அவன் சந்தித்ததும் அங்கு தான்.

நரேனின் வார்த்தைகளாலே சொல்லவேண்டும் என்றால், சரியாக நரேன் சுஜாதாவின் ’கனவுத் தொழிற்சாலை’ வாசித்துக் கொண்டிருந்த போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

‘என்ன விட உனக்கு சினிமாதான் ரொம்ப பிடிக்கும்ல?’, போன்ற கேள்விகளை ரம்யா எப்போதும் கேட்பதில்லை. கேட்டாலும் நரேனிடமிருந்து என்ன பதில் வரும் என்று அவளுக்கு முன்கூட்டியே தெரியும்.

‘உனக்கு ரொம்ப பிடிச்ச படம் என்னடா?’

‘எந்த லேங்குவேஜ் படம்?’

‘தமிழ்லயே சொல்லு’

‘முகவரி’

‘ஓ…நீ அஜித் ஃபேனா?’

‘இல்ல’

‘அப்புறம்?’

‘கடைசி வர ம்யூசிக் டைரக்டர் ஆகலனா நீ என்ன பண்ணுவனு ஹீரோகிட்ட க்ளைமாக்ஸ்ல கேப்பாங்க. அதுக்கு ஹீரோ அப்பவும் திரும்ப ம்யூசிக் டைரக்டர் ஆக முயற்சி செய்வேன்னு சொல்வான். அந்த தன்னம்பிக்கைதான் என்ன இன்னும் ஓட வச்சுட்டு இருக்கு. அவனப்போலதான் நானும்.’

காதலிக்க ஆரம்பித்தபோது இருவருக்கும் நடந்த உரையாடல் இது. அன்றே நரேனை முழுமையாகப் புரிந்துகொண்டாள் ரம்யா.

தன் வெற்றிக்காக எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்ற எண்ணம் நரேனுக்கு அழுத்தத்தை உண்டாக்கியது. வெளியே சொல்ல முடியாமல் தினமும் உள்ளுக்குள்ளே குமுறிக் கொண்டிருந்தான். சில நேரங்களில் போர்வையை எடுத்து, முகத்தை மட்டும் மூடிக்கொண்டு அழுவதை ரகுவே பார்த்திருக்கிறான்.

‘டேய் நரேன்…எழுந்திருடா…டேய்…’.

இரவெல்லாம் எதையாவது எழுதிவிட்டு லேட் நைட்டில் உறங்கப்போகும் நரேனை, காலை ஒன்பது மணிக்கு அலுவலகம் கிளம்பும் ரகு எழுப்புவது மிகவும் அரிதான செயல்.

பாதி கண்கள் மட்டும் விரிய,

‘என்னடா…’ என்றான் நரேன் வெறுப்புடன்.

‘டேய்…உன்னத் தேடி ஒருத்தர் வந்துருக்காரு. அசிஸ்டன்ட் டைரக்டராம். தயாரிப்பாளர் ரமணன் சொல்லி அனுப்பியிருக்காரு. நீ சொல்லப் போற கதை அவருக்குப் பிடிச்சு இருந்தா உடனே ஷீட்டிங்னு சொல்லியிருக்காராம். எழுந்திருடா…’ என்றான் ரகு.

இத்தனை வருடங்களில் இப்படி ஒரு விடியலை நரேன் எதிர் கொண்டதேயில்லை. இதுவே பாதி வெற்றிதான் என நினைத்துக் கொண்டான் நரேன்.

தான் இதற்கு முன்பு அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்த ஒரு படத்தின் தயாரிப்பாளர்தான் ரமணன் என்று அவனுக்குப் புரியவே சிறிது நேரம் எடுத்தது.

அம்மாவுக்கும் ரம்யாவுக்கும் போனில் விஷயத்தை சொல்லிவிட்டு, அடுக்கி வைத்திருந்த ஃபைல்களை எல்லாம் எடுத்துக்கொண்டு உற்சாகமாக ரமணனைப் பார்க்க புறப்பட்டான் நரேன்.

‘வாங்க தம்பி. உட்காருங்க. என்னோட படத்துல வேலை பார்த்தப்பவே உங்கள கவனிச்சேன். என் மைன்ட்ல ரொம்ப நாளா நீங்க இருந்திங்க. அதான் இன்னைக்கு கூப்பிட்டு அனுச்சேன்’.

‘தேங்க் யூ சார்’ என நரேன் சொன்னபோது தொண்டை நீர் வற்றி இருப்பதை உணர்ந்தான் அவன்.

‘தம்பி. உங்கிட்ட இருக்கிற கதைகள்ல பெஸ்ட் சொல்லுப்பா. நல்லா இருந்தா சேர்ந்து பண்ணலாம்’.

ரமணன் சொல்லிவிட்டு வாய் மூடாத அந்த நொடிப்பொழுதில் தன் கதை ஒன்றை சொல்ல ஆரம்பித்தான் நரேன்.

நேஷ்னல் ஹைவே ரோட்டில் நூறு கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் லாரியைப் போல கடகடவென கதையை சொல்லி முடித்தான்.

டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த சூடான காபி மறந்து போகும் அளவிற்கு, கண்களைக் கூர்மையாக வைத்து நரேன் சொன்ன கதையை உன்னிப்பாக இறுதிவரை கவனித்தார் ரமணன்.

நரேன் கதையை சொல்லி முடித்தவுடன், ரமணன் எதுவும் பேசவில்லை. சற்று நேரம் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்.

‘தம்பி ஒரு அஞ்சு நிமிஷம் வெளிய வெயிட் பண்ணுங்க. கூப்பிடுறேன்’ என்றார் ரமணன்.

இரண்டு மணி நேரங்கள் ஆகிவிட்டது. இன்னும் அழைப்பு வரவில்லை.

யாரிடமோ பதற்றமாக பேசிவிட்டு போனை அணைத்த நரேனை ரமணன் கவனித்தார்.

‘தம்பி. ஸாரி ஃபார் த டிலே. உள்ளே வாங்க’ என சிரித்த படி நரேனை வெளியே வந்து அழைத்தார் ரமணன்.

நம்பிக்கையுடன் எழுந்து அழுத்தமாக தன் நடையை முன்னோக்கி வைத்தான் நரேன்.

***************

‘நரேனின் கனவுத் தொழிற்சாலை’ என்ற பெயரில் நண்பன் கார்த்திக் எழுதிய கதையை முழுவதுமாக வாசித்த அருண், ‘டேய் என்னடா அவ்வளவுதானா?’, ‘நரேனுக்கு வாய்ப்பு கிடைச்சுதா இல்லையா? அவன் லவ் என்னாச்சு?’ என்றான்.

அதைக் கேட்டு சிரித்த கார்த்திக், ‘அத நீ தான் சொல்லனும்’ என்றான்.

‘டேய். இது உன்னோட கதைடா. நதான் முடிவ சொல்லனும்’.

‘இல்ல அருண். எப்போ என்னோட படைப்ப நீ வாசிக்க ஆரம்பிச்சுட்டயோ அப்பவே அது உன்னோட கதையா மாறிடுச்சு. பாதி கதையை படிக்கும்போதே நரேனுக்கு என்ன ஆகிருக்கும்னு நீ கற்பனை பண்ணி வச்சுருப்ப சரியா? அந்தக் கற்பனைதான் இந்த கதைக்கான முடிவு. அப்போ இது உன்னோட கதையும்தான?’.

‘என்னதான்டா சொல்ல வர?’.

‘வெரி சிம்பிள். முடிவ வாசகர்கள்கிட்ட விட போறேன். அவ்வளவுதான்’.

சொல்லிவிட்டு தான் எழுதிய இந்த வார, ‘நரேனின் கனவுத் தொழிற்சாலை’ சிறுகதையை விகடன் பத்திரிக்கைக்கு மின்னஞ்சல் செய்து வைத்தான் கார்த்திக்.

***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

5 Comments

  1. நல்ல கதை.. திரு பார்த்திபன் அவர்களின் கதை, திரைக்கதை வசனம் இயக்கம் படம் பார்த்ததன் நினைவு வந்தது. கதையின் முடிவை வாசகர்களின் கைகளிலேயே விட்டது மிகவும் அருமை..

    வாசகர்கள் வாசிக்க தொடங்கியபின் கதை எழுத்தாளருடையது அல்ல.. வாசகருடயது…
    கான்செப்ட் அருமை…

    இன்னும் பல கதைகள் எழுத வாழ்த்துக்கள்..❤️✨

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close