இணைய இதழ்இணைய இதழ் 53நேர்காணல்கள்

“கணிதத்தைப் பாடமாகப் பார்க்காமல் வாழ்க்கையில் ஒரு அங்கமாகப் பார்க்கவேண்டும்” – கணித ஆசிரியை யுவராணியுடனான நேர்காணல்

நேர்காணல்கள் | வாசகசாலை

காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரியும் யுவராணி மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாகவும் இனிமையாகவும் கற்றுத்தரும் பொருட்டு, கணித மேதைகள் போலவும் கோமாளி போலவும் வேடமிட்டும், வில்லுப்பாட்டு மற்றும் பொம்மலாட்டம் போன்ற கலை வடிவங்களிலும் பாடம் எடுத்து வருபவர். இவரது சிறந்த சேவைக்காக 2021-ஆம் ஆண்டு தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ளார். 

மாணவர்களுக்குப் பிடித்த வகையில் பாடம் எடுப்பதுடன், மாணவர்களின் ஒழுக்க நெறிகளையும் கலைத் திறமைகளையும் வளர்த்து, கல்வியின்மேல் ஆர்வத்தைத் தூண்டும் பணியினையும் பெரு விருப்பமுடன் செய்து வரும் ஆசிரியை யுவராணி உடனான சிறு நேர்காணல்.

மாணவர்களுடன் ஆசிரியை யுவராணி
 1. மாணவர்களுக்காக பல்வேறு புது வழிகளில் பாடம் எடுத்தல் என்பது குறித்த எண்ணம் உங்களுக்கு முதலில் எங்கிருந்து வந்தது? இந்த செயல்பாடு உங்களுக்கு தனிப்பட்ட வகையில் எவ்வளவு நிறைவைக் கொடுக்கிறது?

மாணவர்களுக்காக பல்வேறு புது வழிகளில் பாடம் எடுக்கவேண்டும் என்பது குறித்த எண்ணம் எப்படி வந்தது என்றால், கணிதப் பாடம் என்னும் பொழுதே மாணவர்கள் கடினமாகவும், கசப்பானதாகவும் உணர்கிறார்கள். குழந்தைகள் மட்டும் அல்ல, பெரியவர்களுக்கே கணக்குப் பாடம் என்று எண்ணும் பொழுது ஒரு சின்ன பயம் இருக்கத்தான் செய்கிறது. கணக்குப் பாடத்தின் மீதான அந்த பயத்தை எப்படிப் போக்கவேண்டும் என்றுதான் முதலில் நான் நினைத்தேன். 

அதற்காக எடுத்த முயற்சிதான் இது. தமிழ்ப் பாடம் என்று எடுத்துக்கொண்டால் திருக்குறளை எழுதியது யார் என்றால் குழந்தைகள் எல்லாருமே திருவள்ளுவர் என்று சொல்லிவிடுவார்கள். அந்த மாதிரி ஒவ்வொரு செய்யுளை எழுதியது யார் என்று கேட்கும் பொழுதும் குழந்தைகள் அழகாகச் சொல்லிவிடுவார்கள். அதே மாதிரி ஆங்கிலப் பாடம் என்று எடுத்துக்கொண்டாலும் ஒருசில ஆங்கிலக் கவிஞர்களையாவது மாணவர்களுக்கு கண்டிப்பாகத் தெரியும்.

அறிவியல் பாடத்தில் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் யார் என்றால் குழந்தைகளுக்குக் கண்டிப்பாகத் தெரியும். மேலும் பல அறிவியல் அறிஞர்களையும் குழந்தைகளுக்கு ஓரளவுக்குத் தெரியும். செய்முறைத் தேர்வுகள் வேறு இருப்பதால், அவர்களுக்கு அதன்மூலமாக ஓரளவுக்கு இதுகுறித்துத் தெரிந்துவிடுகிறது.

அதேபோல சமூக அறிவியல் பாடத்தில் எடுத்துக்கொண்டாலும் நம் விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளின் பெயர்கள் கேட்டால், குறைந்தபட்சம் பத்து தியாகிகள் பெயரையாவது சொல்லிவிடுவார்கள்.

ஆனால், கணித மேதைகள் என்று சொல்லும் பொழுது குழந்தைகளுக்கு யாரையுமே தெரிவதில்லை. அதிகபட்சமாக நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீனிவாச ராமானுஜத்தைத் தவிர மற்றபடி வேறு யாரையும் அவர்களுக்குத் தெரிவதில்லை.

அதனால் ஏன் நாம் கணிதப் பாடத்தை சொல்லிக் கொடுக்கும் பொழுது கணித மேதைகளாவே மாறிச் சொல்லிக் கொடுக்கக்கூடாது என்று முதலில் தோன்றியது. நான் அப்படிக் கணித மேதையாகவே வேடமிட்டுப் போகும்பொழுது குழந்தைகளுக்கு இன்னும் கொஞ்சம் ஈர்ப்பு ஏற்படுமே, அது நம்முடைய கணக்குப் பாடத்தில் இன்னும் அதிகமான ஆர்வத்தை ஏற்படுத்துமே என்று தோன்றியது.

அதற்கான ஒரு சின்ன முயற்சிதான் இது. இதனால் குழந்தைகள் கணிதப் பாடவேளை எப்பொழுது வரும் என்கிற அளவுக்கு ரொம்ப புத்துணர்வாகவும், “மிஸ் எப்ப எங்க கிளாஸ்க்கு வருவீங்க நீங்க?” என்று கேட்கிற அளவுக்கு ஆர்வமாகவும் இருக்கிறார்கள்.

 அதுவே பெரிய வெற்றியாக நான் நினைக்கிறேன்.

கணித மேதை சகுந்தலாதேவியாக ஆசிரியை யுவராணி
 1. பாடத்தினை எளிமையாகக் கற்பிக்கத் தாங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்காக செய்த மெனக்கெடல்கள் பற்றிக் கூறவும்.

கணிதப் பாடத்தினை எளிமையாகக் கற்பிக்க பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற சில முறைகளைக் கையாண்டேன். தற்பொழுது இக்கல்வியாண்டு முதல் கணித மேதைகளாகக் குழந்தைகளிடம் சென்று கணித மேதைகளின் வரலாற்றையும், அவர்களின் வாழ்க்கைக் குறிப்பையும், அவர்கள் ஏன் அந்த கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்தார்கள், நம் வாழ்க்கையில் நாம் எந்த இடத்தில் அவர்களின் கண்டுபிடிப்புகளை பயன்படுத்துகிறோம் என்பது குறித்தும் விளக்கி வருகிறேன். ஆனால், இதற்குப் பல இடையூறுகள் வரத்தான் செய்கிறது. அதற்கான வேடம் எங்கு கிடைக்கும் என்று தேடியும், அந்த வேடத்திற்கான துணிமணிகள், மீசை, தாடி, தலைமுடி போன்றவைகளை சென்னையிலும் காஞ்சிபுரத்திலும் தயார் செய்தும், அலைந்தும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கினேன். இவை அனைத்தையும் எனது சொந்த செலவில்தான் செய்து வருகிறேன்.

 1. பல்வேறு வேடங்களில் வந்து பாடம் எடுக்க உங்களுக்கு உத்வேகமாக உங்கள் ஆசிரியர்கள் யாராவது இருந்திருக்கிறார்களா?

பல்வேறு வேடங்களில் எல்லாம் வந்து எனக்கு ஆசிரியர்கள் யாரும் பாடம் எடுத்ததில்லை. ஆனாலுமே எனது கணித ஆசிரியர் எத்தனை முறை கேள்விகள், சந்தேகங்கள் கேட்டாலும் அதற்குத் தொய்வில்லாமல், முகச் சுளிப்பில்லாமல் திரும்பத் திரும்ப, இதுதான் விடை; இப்படிதான் வந்தது என்று இன்முகத்தோடு எனக்குக் கணிதத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவரையே மிகப்பெரிய முன்மாதிரியாக நான் நினைக்கிறேன்.

 1. தங்களது பிள்ளைகள் மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ ஆக வேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்க்கும் சூழலில், அதற்கு அடிப்படையாக அமைந்துள்ள கணிதப் பாடத்தில் நிறைய மாணவர்கள் சிரமப்படுவதற்கான அடிப்படைக் காரணமாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?

சிறுவயதிலிருந்தே கணிதப் பாடம் என்றாலே கடினமான ஒரு பாடம்; புரியாது என்று அனைவருக்குமே ஒருவிதமான பயம் உண்டு. அது போன்று இல்லாமல் சிறுவயதில் இருந்தே கணிதம் கற்கண்டாய் இனிக்கும் பாடம்தான் என்று குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும். கணிதத்தைப் பாடமாகப் பார்க்காமல் வாழ்க்கையில் ஒரு அங்கமாகப் பார்க்கவேண்டும். நம்மைச் சுற்றி இருப்பவை அனைத்தும் கணிதம்தான் என்று குழந்தைக்குப் புரியவைத்துவிட்டாலே கணிதப் பாடம் இயல்பாகப் புரிந்துவிடும் . இது தெரியாமல்தான் கணிதப் பாடத்தை மிகுந்த கடினமான பாடமாக இருப்பதாக மாணவர்கள் பொதுவாகவே நினைக்கிறார்கள்.

கற்கண்டு கணிதம்
 1. தனித்துவமான வகையில் பாடம் எடுக்க பல ஆசிரியர்கள் விருப்பப்பட்டாலும் எல்லாராலும் அப்படி மாணவர்களைக் கவர முடிவதில்லை. எது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தடையாக இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு விதமான முறையினை பாடம் எடுக்கும் பொழுது மாணவர்களிடம் கையாளுகிறார்கள். பாடம் எடுப்பதில் கரும்பலகை முறை, உரையாடல் முறை, நாடக முறை , நடிப்பு முறை, விளையாட்டு முறை இப்படி பல முறைகள் உண்டு. அதில் ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு விதமான முறையைக் கையாள்கிறார்கள்.

கணக்குப் பாடத்தை பொறுத்தவரை, சிலபஸை விரைவாக முடித்து மாணவர்களைத் தேர்விற்குத் தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் வேண்டுமானால் சிறிது தொய்வு ஏற்படலாம் என்று நான் எண்ணுகிறேன்

 1. மாணவர்களுக்கு பிடித்த வகையில் பாடம் எடுத்தல் என்பது மாணவர்களின் ஒழுக்கத்திலும் முன்னேற்றத்தைக் கொடுக்கிறதா? அதை நீங்கள் உணர்கிறீர்களா? 

ஆம், மாணவர்களுக்குப் பிடித்த வகையில் பாடம் எடுத்தல் என்பது மாணவர்களின் ஒழுக்கத்திலும் முன்னேற்றத்தைக் கொடுக்கிறது. இதன்மூலம் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. உற்சாகமும் ஆர்வமும் அதிகமாகிறது. அவர்களின் தனித்திறன்கள் இன்னும் மென்மேலும் அதிகரிக்கிறது.

நாடக முறையில் கற்பிக்கும் பொழுது மாணவர்களுக்கு நாடகத் திறமை ஏற்படுகிறது. நடிப்பு, படிப்பு முறையில் கற்பதால் தனி நடிப்பு போன்ற திறன்கள் அதிகரிக்கிறது.

 1. மதிப்பெண்களுக்காக மாணவர்கள் விரட்டப்படும் ஒரு சூழலில் மாணவர்களின் தனித்திறமையினை வளர்த்தல் என்பது எவ்வளவு முக்கியமாக அமைகிறது?

தற்காலச் சூழலில் மாணவர்கள் மதிப்பெண்களை நோக்கி மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நம்மைச் சுற்றியுள்ள சமுதாயமும், பெற்றோர்களும் மதிப்பெண்களை நோக்கி மட்டுமே குழந்தைகளின் எதிர்காலம் இருப்பதாய் ஊக்குவித்து வருகிறார்கள். 

இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தமும், மன உளைச்சலும் அதிகமாகிறது. அதனால்தான் தற்சமயங்களில் அதிகமான தற்கொலை எண்ணங்கள், தன்னம்பிக்கை இழத்தல் போன்ற நிகழ்வுகள் எல்லாம் நடைபெறுகின்றன. 

ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளும் ஒவ்வொரு தனித்திறன் ஒளிந்திருப்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களை தொடர்ந்து கண்காணித்தாலே கண்டுபிடிக்க இயலும். அவ்வாறு தனித்திறமையான குழந்தைகளை வெளிக் கொண்டு அவர்களின் திறமைகளை ஊக்குவித்தல் மட்டுமே இதுபோன்ற தற்கொலைகளுக்கு எல்லாம் தீர்வாக அமையும்.

 1. தமிழக அரசின் நல்லாசிரியர் விருது கிடைத்த தருணத்தில் எப்படி உணர்ந்தீர்கள்?

தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருது கிடைத்த பொழுது மிகவும் மகிழ்வாய் உணர்ந்தேன். எனது பள்ளி செயல்பாடுகளில் ஆக்கமும் ஊக்கமும் அளித்து மென்மேலும் என்னை ஊக்கப்படுத்தி வரும் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்மா அவர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களுக்கும், என்னுடன் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும், என் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் எனது மகிழ்வையும் நன்றியையும் உரித்தாக்கி கொண்டேன். மாணவர்களுக்காக உண்மையாக உழைக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் நல்லாசிரியரே.

ஆசிரியை யுவராணி நல்லாசிரியர் விருது பெற்ற பொழுது
 1. அரசுப்பள்ளிகளின் தரம் குறித்து தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும் அரசுப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து வெவ்வேறு துறைகளில் சாதனைகள் படைத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். நீங்கள் பார்த்த அப்படிப்பட்ட மாணவர்களைப் பற்றி சில வரிகள்?

அரசுப் பள்ளி மாணவர்கள் என்பவர்கள் அனைத்து திறமைகளையும் கொண்டவர்கள். படிப்பு மட்டுமல்ல அனைத்து விதமான திறமைகளிலும் மிகவும் தனித்துவம் மிக்கவர்கள். விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, ஒழுக்க நெறிகள், பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி என அனைத்து திறன்களிலும் மிகவும் தனித்துவம் மிக்கவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் . 

எங்கள் பள்ளியிலேயே கடந்த வருடம் 12-ஆம் வகுப்பு முடித்த துளசிராமன் என்ற மாணவர் கானா பாடல்கள் பாடுவதில் மிகவும் கைதேர்ந்தவர். அவரின் திறனை ஊக்குவித்து முகநூலில் நான் பதிவிட்ட பொழுது அந்தக் காணொளியானது வைரலாகப் பார்க்கப்பட்டு பல மில்லியன் பார்வைகளைக் கடந்தது. அதைப் பார்த்து அவருக்கு சினிமாத்துறையில் வாய்ப்புகள் பல கிடைத்தது. 

தற்பொழுது இங்கே 12-ஆம் வகுப்பில் படித்து வரும் ரூபன் என்ற மாணவர் மாவட்டத்தில் எங்கு பேச்சுப்போட்டிகள் நடந்தாலும் தொடந்து முதலிடம் பிடித்து வருகிறார். இது போன்ற பல திறன்கள் அரசுப் பள்ளி மாணவர்களிடம் பொதிந்து கிடக்கின்றன.

 1. மாணவர்கள் ஆர்வத்துடம் கற்க அரசுப் பள்ளிகளில் என்ன மாதிரியான உள்கட்டமைப்பு வசதிகள் தேவை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

மாணவர்கள் மகிழ்வாகக் கற்க ஏதுவாக காற்றோட்டமான, வண்ணம் மிகுந்த வகுப்பறைகள், தூய்மையான கழிப்பறைகள், சுத்தமான குடிநீர், கணித, அறிவியல் ஆய்வகங்கள், நூலகம், ஸ்மார்ட் கிளாஸ், இணைய வழி வசதியுடன் கூடிய வகுப்பறைகள், விளையாட்டு வழியில் கற்க மைதானங்கள் போன்றவை தேவைப்படுகின்றன என நான் நினைக்கிறேன்.

 1. வரும் காலங்களுக்கு ஏற்ப மாணவர்களுக்கு என்ன மாதிரியான புதிய வழிகளில் பாடங்களைக் கற்பிக்கலாம்?

அனைத்து பாடங்களையும் வாழ்வியலோடு தொடர்புபடுத்திக் கற்பித்தால் மாணவர்களுக்கு அப்பாடங்களில் இன்னும் ஆர்வம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 1. நீங்கள் மாணவராக இருந்த காலகட்டத்துக்கும் இப்போது ஆசிரியராக இருக்கும் காலகட்டத்துக்கும் என்ன வித்யாசங்கள் காண்கிறீர்கள்.

நாங்கள் மாணவர்களாக இருந்த காலகட்டத்தில் ஆசிரியரிடம் ஒருவித பயம் கலந்த மரியாதை இருந்தது. இப்பொழுது மாணவர்கள் ஆசிரியர்களோடு நெருக்கமாக ஒரு நண்பர்களைப் போல இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி நண்பர்களாக இருந்தால் மட்டுமே குழந்தைகளின் மனதைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது.

 1. தற்கால பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பிள்ளைகள் பெற்றோர்களிடம் எதிர்பார்ப்பது என்னவென்று நீங்கள் கருதுகிறீர்கள்? 

தற்கால பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் “நோ” என்பதைச் சொல்லிப் பழகிக்கொள்ள வேண்டும். எதைக் கேட்டாலும் உடனுக்குடன் வாங்கித் தருவதை பழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் குழந்தைகளுக்கு அப்பொழுதுதான் சகிப்புத்தன்மை ஏற்படும். சகிப்புத்தன்மையே வாழ்வில் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை என்றாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைக் கொடுக்கும். 

அதே சமயம் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் நண்பர்களாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று பிள்ளைகளும் நினைக்கிறார்கள். ஆனால், நண்பர்கள் எப்பொழுதும் பெற்றோர்களாக முடியாது. அதேபோல் பெற்றோர்களும் நண்பர்களாக முடியாது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்லதை கற்பிக்கும் பெற்றோர்களாகவே இருங்கள். நண்பர்கள் நண்பர்களாகவே இருக்கட்டும்.

 1. சமீப காலங்களில் ஆசிரியர் – மாணவர் உறவு தொடர்பாக வருத்தமூட்டும் சம்பவங்களைக் கேள்விப்படுகிறோம். அதனை சுமூகமாக்க தங்களது யோசனை என்ன?

ஆசிரியர்கள் மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். மாணவர்கள் எந்த குடும்பச் சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள் என்று தெரிந்து கொண்டு, அவர்களுக்கு ஒரு ஒரு நல்ல தோழனாகவும், தோழியாகவும் பெற்றோராகவும், இருந்து வழிநடத்த வேண்டும்.

பாடத்தை போதிக்கும் ஆசிரியர்களாக மட்டுமல்லாமல் இரண்டாவது பெற்றோராகவும் ஆசிரியர்கள் நடந்துகொண்டால் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது.

 1. கடைசியாக, மாணவர்களுக்கு நீங்கள் கூறவிரும்பும் அறிவுரை என்ன?

பள்ளிக்கு வருவது படிப்பை கற்றுக் கொள்வதற்கு மட்டுமல்ல. முதலில் பள்ளிக்கு வருவது ஒழுக்கத்தைக் கற்றுக்கொண்டு செல்லவே. அதனால் படிப்பு என்பது அடுத்த கட்டம்தான், ஒழுக்கம் என்பதே ஒரு குழந்தைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஒருவனுக்கு ஒழுக்கம் இருந்தாலே படிப்புத் தானாக வந்து விடும்.

அதனால் ஒழுக்கத்தை கற்போம், பிறகு பாடத்தை கற்றுக் கொள்வோம். 

மதிப்பெண் மட்டுமே உன்னுடைய வாழ்க்கை அல்ல, மதிப்பெண்ணை மட்டுமே நோக்கி ஓடாதே.

தங்கமே, உனக்கான வாழ்க்கை, உனக்கான உலகம் பரந்து விரிந்து கிடக்கிறது, உன் தனித் திறமைகளை வளர்த்துக்கொள், வாழ்வில் முன்னேறு!

***

தொடர்புக்கு: yuvaishayuva@gmail.com 

******

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close