தொடர்கள்
Trending

‘யாதும் டிசைன், யாவரும் டிசைனரே’: 4 – எழுத்தறிந்தவன் டிசைனர் ஆவான்

தொடர் | வாசகசாலை

ஒரு டிசைனில், மொழியின் நடையும் அதன் அர்த்தங்களும் எப்படிப் பங்களிக்கிறது என்று முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம். எப்படி நாம் ஏற்றி இறக்கிப் பேசும்போது அதன் அர்த்தம் மாறுகின்றதோ, அதே போல எழுத்திலும் காட்டலாம். எழுத்தின் பாணி, அதாவது ஸ்டைல் (style) மூலம் இதைச் செய்யலாம்.

கல்யாண மேடையில் மணமக்கள் பெயர் எழுதியிருக்கும் ஸ்டைலுக்கும், பேருந்தில் பெயர்ப் பலகையில் ஊர்ப் பெயர் எழுதியிருக்கும் ஸ்டைலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று உங்களுக்கே தெரியும். இப்படி எழுத்தின் தன்மையை வேண்டிய இடத்திற்கு ஏற்றவாறு மாற்றுவதற்கு Typography என்று பெயர். அதாவது,

எழுத்தினுடைய பாணி (style) மற்றும் தோற்றம் (Appearance) எப்படி இருக்க வேண்டும் என்பதே தீர்மானிப்பது.

உதாரணத்திற்கு, ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டால், அதன் தலைப்பு எது, ஆசிரியரின் பெயர் என்ன என்பதைப் படித்து தெரிவதற்கு முன்னரே அதன் பாணி நமக்குக் காட்டிக் கொடுத்துவிடும்.

மேலே காட்டிய உதாரணத்தில், தலைப்பும் ஆசிரியரும் மனிதர்களின் பெயர்களைக் கொண்டிருக்கிறது. அவ்விரண்டு பெயர்களில் மஞ்சள் நிறத்தில் பெரிதாகக் காட்டப்பட்ட எழுத்து தான் புத்தகத்தின் தலைப்பு என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

இங்கே அந்த ‘மஞ்சள்‘ மற்றும் ‘பெரிதாக்கப்பட்ட‘ என்ற இரண்டு பண்புக்கூறுகளும் தான் நம் சிந்தனையை எளிதாக்குகின்றன. இது போல நிறம், உருவம், அளவு, இடைவெளி, எழுத்துரு (font) மற்றும் பல பண்புக்கூறுகளை பயன்படுத்தியும் தனித்துப் பொருள்பட வைக்க முடியும்.

இவற்றைச் சரியாகப் பயன்படுத்தாமல் போனால் மிக எளிதாகக் குழப்பங்கள் உருவாக வாய்ப்புள்ளது.

உதாரணத்திற்கு, ஒரு மருத்துவமனையின் பெயர் மேலிருந்து கீழாக எழுதப்பட்டிருந்தது (கீழே புகைப்படம்).

 

பொதுவாக நாம் இடமிருந்து வலம் வாசிக்கப் பழக்கப்பட்டவர்கள் (சில மொழிகள் மேலிருந்து கீழும், வலமிருந்து இடமும் உள்ளன) அப்படி இருக்கையில், அவசரத் தேவையில் படிக்கப்பட வேண்டிய ஒரு தலைப்பு, இப்படி அசௌகரியமான முறையில் எழுதப்படுவது தவறு.

இது போன்ற தவறுகளால் ஏற்படும் குழப்பங்களும் விளைவுகளும் எப்பொழுதும் சிறியதாகவே இருக்கும் என்று சொல்ல முடியாது. உதாரணத்திற்கு, 2017 ம் ஆண்டு ஆஸ்கார் திரைப்பட விழாவில் Typography ஆல் ஒரு சுவாரசியமான தகராறு நடந்தது.

சிறந்த படத்திற்கான விருது தவறுதலாக மாற்றி அறிவிக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான விருதை ‘La La Land’ என்ற திரைப்படம் வென்றதாக அறிவிக்கப்பட்டு, அப்படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியுடன் மேடையேறிப் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர்களுக்குப் பின்னால் ஏதோ குழப்பம் நடக்கிறது.

La La Land இன் தயாரிப்பாளர் வேகமாக வந்து கோவம் கலந்த பதட்டத்துடன் மைக்கைப் பறித்து “ஒரு தவறு நடந்துள்ளது. சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது நாங்கள் அல்ல, Moonlight தான். ஒரு தவறு நடந்து விட்டது” என்றார்.

அறிவிப்பில் தவறு ஏற்பட்டுவிட்டது என்று கூறி, Moonlight குழுவினரை மேடை ஏறச் சொல்லி விருதை ஒப்படைத்தனர்.அந்த வீடியோவைக் காண

https://www.youtube.com/watch?v=8KeOxeuiZjs

விருதை அறிவிப்பவர் தவறு செய்து விட்டார் என்று கூறினார்கள் சிலர். சிலர், இது விழா நடத்தியவர்கள் தவறு என்றார்கள். ஆனால் உண்மையில் இது முழுக்க முழுக்க டிசைனால் ஏற்பட்ட தவறு. ஏன் என்று பார்க்கலாம்….

விருதை அறிவித்தவர்க்குக் கொடுக்கப்பட்ட அந்த அட்டையைப் பாருங்கள்.

Source: Why Typography Matters — Especially At The Oscars

இந்த அட்டை தவறுதலாக அறிவிப்பாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது சிறந்த படத்திற்கான (Best Picture) அட்டைக்குப் பதிலாகச் சிறந்த நடிகைக்கான (Best Actress) விருதிற்கான அட்டை தவறாகத் தரப்பட்டுள்ளது.

அந்த அட்டையில் நடிகையின் பெயரும் அவர் நடித்த படத்தின் பெயரும் எழுதப்பட்டுள்ளது. குழப்பம் அடைந்த அறிவிப்பாளர் ஒரு நொடி சிறிது தடுமாறுகிறார். பின்னர் நடிகையின் பெயரை ஒதுக்கி விட்டுப் படத்தின் பெயரை (La La Land) மட்டும் வாசிக்கிறார்.

இது சரியான அட்டை தான் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய முக்கியமான வார்த்தை (Best actress) கீழே மிகவும் சிறியதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. எனவே அறிவிப்பாளர் அதை கவனிக்கத் தவறி விட்டார் அல்லது அவரால் வாசிக்க முடியவில்லை. இதை எப்படிச் சரி செய்யலாம்?

கீழ்க்கண்டவாறு இந்த அட்டையின் டிசைன் (வலது) மாற்றியமைக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக இந்த தவறு நடந்திருக்காது. அறிவிப்பாளர் அவராகவே கண்டு பிடித்திருப்பார், தனக்குத் தவறான அட்டை தரப்பட்டுள்ளது என்று.

விழாவில் கொடுக்கப்பட்டது (இடது) – டிசைன் சரி செய்யப்பட்டது (வலது)

வலது பக்கம் உள்ள மாற்றியமைக்கப்பட்ட அட்டையில் Best Actress என்பது மேலே பெரியதாகக் காட்டப்பட்டுள்ளது. எனவே வாசிப்பவர் முதலில் அதைத் தான் கவனிப்பார்.

ஒரு டிசைன் பிழை எத்தனை பேரைப் பாதித்திருக்கிறது என்று பாருங்கள். மேடையேறிப் பேசிய பின்னர் வெற்றி நம்முடையது அல்ல என்று தெரிந்த La La Land குழுவினர், வெற்றியைக் கொண்டாட முடியாமல் தவித்த Moonlight குழுவினர், தவறாக வாசித்ததாகக் குற்ற உணர்வு கொண்ட அறிவிப்பாளர், சரியாக நடத்த முடியாமல் போய் விட்டதே என்று வருத்தப்படும் விழா அமைப்பாளர்கள் என்று பலர், ஆனால் பிழை செய்தது டிசைனர் தான்! இந்த தவற்றை நடக்காமல் தடுக்க கண்டிப்பாக டிசைனரால் முடிந்திருக்கும்.

எனவே எழுத்திற்கான ஸ்டைலை தேர்ந்தெடுப்பதில் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். நமக்குப் பிடித்தவாறு மட்டும் செய்யக் கூடாது. பார்ப்பவர்களுக்கு குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் டிசைன் செய்ய வேண்டும்.

எழுத்துருக்கள் (Icons) எவ்வாறு டிசைனில் முக்கிய பங்காற்றுகிறது என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

தொடரும்…

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close