தொடர்கள்

யாதும் டிசைன் யாவரும் டிசைனரே;10 – மாரியப்பன் குமார்

தொடர் | வாசகசாலை

 படைப்பாற்றலின் ரகசியம் – Secret of creativity

‘எனக்கு புதுப்புது படைப்புகள் பிடிக்கும், வழக்கம் போல் இல்லாமல் வித்தியாசமாகப் படைக்கப் பட்டவற்றை நான் ரசித்திருக்கிறேன். எனக்கும் அது போன்ற நூதனமான யோசனைகள் தோன்றும், நானும் எனது படைப்பாற்றலைக் காட்டி உலகத்திற்கு என்னை நிரூபிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் என்னால் முடியவில்லை’ என்று நினைக்கிறீர்களா?

நாம் எல்லோருமே படைப்பாளிகள்தான் என்று ஏமாற்ற விரும்பவில்லை. ஆனால் உண்மையில், நாம் நமக்குள் இருக்கும் படைப்புத் திறமையைக் கண்டு பயப்படுகிறோம். எங்கே வெளியே கொண்டு வந்தால், விமர்சனம் செய்யப் பட்டு விடுவோமோ? தோற்று விடுவோமோ? என்றெல்லாம் நினைத்து அதற்கு ஒரு வாய்ப்பு கூடத் தர மாட்டேன் என்கிறோம்.

இதனால் உங்களால் படைக்கப்பட வேண்டியவை வெளி உலகுக்கு வராமலே தொலைந்து போகிறது. எனக்கு வரையத் தெரியாது என்பார்கள் ஆனால் தினமும் கோலம் போடுவார்கள் அது போலத்தான் சிலருக்கு அவர்களின் திறமையே அவர்களுக்கேத் தெரியாது.

சரி எப்படித்தான் படைப்புத் திறமையை வெளிக் கொண்டு வருவது? அதற்கு ஒரு சுலபமான எல்லோராலும் செய்யக் கூடிய வழி ஒன்று உள்ளது.

மாற்று சிந்தனை!

தினமும் ஒரே விஷயத்தைச் செய்வதால் ஒரு சுழலில் மாட்டிக் கொள்கிறோம். சலிப்பு ஏற்படுகிறது. தினமும் சாப்பிடும் சாம்பாரில் ஒரு நாள் மாங்காய், ஒரு நாள் முருங்கைக்காய், மற்றொரு நாள் வெண்டைக்காய் என மாற்றி மாற்றி செய்வதன் மூலம் அம்மா அவரது மாற்றுச் சிந்தனையைக் காட்டுகிறார். இதனால் சமையல் செய்பவருக்கும், சாப்பிடும் நமக்கும் ஏற்படும் சலிப்பு குறைகிறது. ஆனால் மெயின் விஷயம் ஒன்றுதான், சாம்பார்.

இதை அப்படியே எல்லாவற்றிற்கும் பொருத்திப் பார்க்கலாம்.

உதாரணத்திற்கு, ஆப்பிள் நிறுவனம் தொடு திரையுடன் கூடிய ஸ்மார்ட்போன் ஒன்றைச் சந்தைக்கு கொண்டு வருகிறது. செவ்வக வடிவத்தில் முழுவதும் திரை, ஒரு ஹோம் பட்டன், சத்தம் குறைக்க அதிகரிக்க இரு பட்டன்கள், போனை லாக் செய்ய ஒரு பட்டன், மேலே ஸ்பீக்கர் மற்றும் கீழே மைக்ரோபோன். இந்த பரிட்சயமான வடிவத்தை முதன்முதலில் ஆப்பிள் நிறுவனம்தான் அறிமுகப்படுத்தியது. இன்று வரை எல்லா நிறுவன ஸ்மார்ட்போன்களும் இதே வடிவத்தைத் தான் கொண்டிருக்கின்றன. ஆனால் சிறு சிறு மாற்றங்களோடு.

இந்த வடிவம் மக்களிடம் வெற்றி பெற்று விட்டது என்பதால் இதில் சில மாற்றங்களை செய்து தங்களுடைய சொந்த டிசைன் என்று மற்ற ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் உருவாக்கின. ‘ஹே…ஈயடிச்சான் காப்பி’ என்று சிலர் கிண்டல் செய்தாலும் அவைகள் சந்தையில் தோற்கவில்லை. ஆப்பிள் போன்களின் சில அம்சங்கள் பிடிக்காதவர்கள், அவற்றில் விரும்பத்தக்க மாற்றங்களை செய்து விற்ற மற்ற நிறுவனங்களின் போன்களை மக்கள் வாங்க ஆரம்பித்தனர்.

இந்த நிகழ்வில் மற்ற (ஆன்ட்ராய்டு) போன் தயாரிப்பாளர்கள் செய்தது ஒரு படைப்புதான். ஒரு படைப்பு எப்போது முழுக்க முழுக்க புதியதாக இருக்க வேண்டும் என்றில்லை. இயற்கையில் அப்படி இருக்கவும் முடியாது. எந்த ஒரு படைப்பும் ஏதோ ஒன்றைத் தழுவித்தான் இருக்கும். ஆப்பிள் நிறுவனமும் எல்லா அம்சங்களையும் சொந்தமாகக் கண்டுபிடிக்கவில்லை. ஏற்கனவே வெற்றிகரமாக இருப்பவற்றைச் சரியான முறையில் சீரமைத்து, ஒரு கையடக்க கணிணியாகவே போன் உலகத்தை மாற்றியது.

‘நான் முற்றிலும் புதிதாக ஒன்றை உருவாக்கும் வரை எதையும் படைக்க மாட்டேன்’ என்று நாம் அடம்பிடிப்பதால் தான் கடைசி வரை படைப்பாற்றலை வெளியே கொண்டு வர முடியாமல் தோற்றுப் போகிறோம்.

எனவே ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் அல்லது விரும்பப்படும் விஷயங்களில் மாற்றுச்சிந்தனயை புத்துவதன் மூலம் புதியதாக ஒன்றை படைக்கலாம். அது 100% புதியதாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமேயில்லை.

சரி அதற்காக நாம் எதையும் புரட்சிகரமாகப் படைக்கக் கூடாது என்றில்லை. அதற்கு முன்னர் அதில் இருக்கும் ஒரு சிக்கல்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பயனாளர்களுக்கும் மற்றும் வியாபாரத்திற்கும் அது இப்போது தேவையா? யாருக்காக கண்டுபிடிக்கப்பட்டதோ அவர்களால் விரும்பப்படுமா? சந்தையில் வெற்றி காணுமா? என்பதையெல்லாம் உறுதி செய்ய வேண்டும்.

அதே ஸ்மார்ட்போன் சங்கதியை எடுத்துக் கொள்வோம். புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கிறோம் என்று கிளம்பியவர்கள் கதி என்ன ஆயிற்று எனப் பார்க்கலாம். Motorola நிறுவனம் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகப் படுத்தியது. அதன் புற வடிவமைப்பு  தற்போது சந்தையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் இருந்து முற்றிலும் வேறாக இருந்தது. மடக்கக்கூடிய திரை, (Flip type) இது 2000 ஆண்டுகளில் மிகப்பிரபலம். ஆனால் அப்போது போன்களில் முழுவதும் திரை இல்லை. அதோடு பயனாளர்கள் விரும்பும் நவீன போன்கள் மேலும் மேலும் மெல்லிதாக ஆகிக் கொண்டே இருக்க, இந்த புதிய அறிமுகம் மிகவும் தடிமனாக இருந்தது. முக்கியமான பிரச்சனை, வெறும் 27000 முறை மடக்கியதிலேயே அது பழுதடைந்தது. (சராசரியாக 1 வருடம் கூட தாங்காது)

‘அதனால் என்ன? நான் ரொம்பலாம் மடக்க மாட்டேன்ப்பா. நான் வாங்கத் தயார்’ என வாங்க ஆசைப்பட்டவர்களுக்கு (நான் உள்பட) ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதன் விலை 1,50,000 ரூபாய்!.(யாத்தே…)

இவ்வளவு விலைக்கு இந்த போன் தகுதியானதா? பழுதடைந்தால் எங்கே கொண்டு போய் சரி செய்வது? மடக்கும் திரை போன்ற பிரத்தியேக உதிரி பாகங்கள் திரும்பக் கிடைக்குமா? இது போன்ற குறைகள் மற்றும் சந்தேகங்களெல்லாம் ஒன்று சேர்ந்து, வாங்கும் எண்ணத்தையே கை விட வைத்தது. வெளியாகி 10 மாதங்களில், இதன் விலை 80000 ரூபாயாகக் குறைந்து விட்டது. எனவே இந்த முயற்சியைத் தோல்வி என்றே அழைக்க வேண்டும்.

ஆப்பிள் நிறுவனம் முதன்முதலில் தொடுதிரையுடன் கூடிய ஸ்மார்ட்போனை வெற்றிகரமாகச் சந்தைப்டுத்தியது மிகப்பெரிய புரட்சி, அதேபோல மற்றொரு புரட்சியைக் கொண்டு வர முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அவற்றில் ‘மடக்கும் போன்கள்’ புரட்சி செய்யாது என்பதை உலகத்திற்கு தனது தோல்வியால் Motorola நிறுவனம் நிரூபித்து விட்டது. அதில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட மற்ற நிறுவனங்கள் இந்த டிசைனை இனிமேல் கண்டிப்பாகத் தொடாது. இந்த புரட்சியில் காட்டிய ஈடுபாட்டை வழக்கத்தில் உள்ள ஸ்மார்ட்போன்களிள் காட்டியிருந்தால் அந்நிறுவனம் இப்போது சந்தையில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருக்காது. (ஹெல்லோ..மோட்டோ…!)

எனவேதான் மாற்றுச்சிந்தனையை வியாபாரமாக்குவதில் ஒரு கடிவாளம் வேண்டும். இது புது ஐடியா என்பதால் மட்டுமே சந்தை அவற்றை ஏற்றுக் கொள்ளாது.

சரி இந்த மாற்று சிந்தனை முதலில் எப்படி வரும்?

நாம் நமது துறை சம்பந்தப் பட்ட மற்றவர்களின் சாதனைகளை, நவீன வெளியீடுகளை தொடர்ந்து கவனித்துக் கொண்டே வர வேண்டும். அவற்றைக் கவனிக்கும் போது, ‘அட…இப்படி மாற்றம் செய்றதிருக்கலாமே’ என யோசனைகள் தோன்றும். திரைப்படங்கள் பார்க்கும் போது நாம் கமெண்ட் அடிப்பதில்லையா, அது போலத்தான். நாம் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களப் பார்ப்பதன் மூலம் நாமே ஒரு கதாசிரியர் போல நம்மை நினைத்துக் கொண்டு அதில் திருத்தங்கள் கொண்டு வர முயற்சிக்கிறோம் இல்லையா?

உதாரணத்திற்கு ஒரு கதை சொல்கிறேன் இது எந்த தமிழ்ப்படம் என ஊகியுங்கள். ஒருவன் அமைதியாக தான் உண்டு, தனது வேலை மற்றும் குடும்பம் உண்டு என வாழ்ந்து கொண்டிருக்கிறான், திடீரென ஒரு நாள் அவன் உண்மையில் யார் என அவனது எதிரிகள் மூலம் தெரிய வருகிறது. முன்னாளில் அவன் ஒரு புகழ் பெற்ற ஒரு புள்ளியாக இருந்திருப்பான். அந்த வாழ்க்கையால் அவனுக்கு நெருக்கமான யாரையோ இழக்க நேரிட்டதால் எல்லாவற்றையும் உதறி விட்டு இந்த அமைதியான வாழ்க்கைக்கு திரும்பி விட்டான். ஆனால் இனிமேல் எதிரிகளை விட்டு வைக்கக் கூடாது எனக் கிளம்பி அவர்களை வென்று முடிக்கிறான். இந்த ஒரேக் கதையை, 90 களுக்குப் பின்னால் வந்த 70% தமிழ்ப் படங்களில் பொருத்திப் பார்க்கலாம். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவற்றில் முக்கால்வாசி வெற்றிப் படங்கள்.

‘ஏலியன்’ என்ற ஒரு பிரபல ஆங்கிலத் திரைப்படம் ஒன்று உள்ளது. விண்வெளி வீரர்களை ஒரு வேற்றுக் கிரக மிருகம் வேட்டையாடிக் கொள்ளும். அந்தப் பட இயக்குனரிடம் இந்த வித்தியாசமான ஐடியா எப்படி கிடைத்தது என்று கேட்டார்கள்.

“ஜாஸ் என்ற படத்தில் ஒரு சுறா மீன் கடலுக்குள் வருபவர்களை வேட்டையாடும். அதில் சுறா மீனுக்குப் பதிலாக வேற்றுக் கிரக வாசியையும், கடலுக்குப் பதிலாக விண்வெளிக் கப்பலையும் மாற்றி அமைத்தேன். கதை கிடைத்து விட்டது” என்றார். நாம் எல்லோரும் பார்த்த ‘ஜுராசிக் பார்க்’ படமும் இதேக் கதை தான். முக்கியமாக எல்லாப் பேய் படங்களுக்கும் இதே கதைதான். இடமும் வேட்டையாடும் மிருகமும் தான் வேறு. இப்போது இவையெல்லாம் காப்பியடிக்கப்பட்டது என யாரும் சொல்ல முடியாது. கதைக்கருவை அப்படியே வைத்துக் கொண்டு களத்தை மட்டுமே மாற்றி மாற்றி வெற்றி கண்டிருக்கிறார்கள்.

எனவே தொடர்ந்து நாம் சம்பந்தப்பட்ட துறையில் இருக்கும் வெற்றிகரமான, நவீனமான, அதிகமாகப் பேசப்படும் படைப்புகளைப் பற்றி தெரிந்து கொண்டே இருக்க வேண்டும். கூச்சப்படாமல் காப்பி அடியுங்கள். அதில் உங்களுக்கே உரித்தான சிறு மாற்றம் செய்ய்ங்கள்.  உங்களுக்குள் தோன்றும் ஒரு சிறு பொறி கூட பெரிய விளைவை ஏற்படுத்தும். பிரத்தியேகமாக உங்கள் துறைக்கு என உருவாக்கப்படும் பத்திரிக்கைகள், டி.வி. சேனல் தொடர்கள், யூடியூப் சேனல்கள் இவற்றைப் பார்க்கலாம். சமூக வலைதளங்களில் இது சம்பந்தப்பட்ட தலைப்புகளைப் பின் தொடரலாம். துறை சார்ந்த சக ஆர்வலர்களுடன் பேசலாம். விவாதம் செய்யலாம். இதன் மூலம் புதுப்புது யோசனைகள் கிடைக்கும்.

தொடர்ச்சியாக (முடிந்தால் தினமும்) இதைக் கடந்து செல்லவது போல அமைத்துக் கொண்டால் கஷ்டப்படாமல் படிப்பது போல ஒரு பழக்கமாக மாறிவிடும்.

தொடரும்…

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button