கட்டுரைகள்நூல் விமர்சனம்

ஓநாய் குலச் சின்னம்- உயிர் நிலத்தின் மீதான வன்முறையும் குட்டி ஓநாயின் விடுதலையும் (நூல் அறிமுகம்)

-பிரபாகரன்

 

உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் “மனிதன் × இயற்கை” என்ற முரண்பாடுகள் எத்தனை இயற்கைப் பேரிடர்கள் வந்தாலும் மாறுவதில்லை. அவை மனிதர்களுக்கு எந்த படிப்பினைகளையும் தருவதில்லை. இவற்றை ஆவணப்படுத்திய முக்கிய திரைப்படைப்புகளாக Netflix-ன் “Our planet” ஐயும், HBO- வின் “Chernobyl” ஐயும் சொல்லலாம். இப்பொழுது கொரொனா வைரசின் காரணமாக மக்கள் வீடுகளிலே முடங்கிக் கிடக்கும் இந்த சமயம் உலகம் முழுவதும் இயற்கை தன்னை மீட்டெடுத்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். அடிப்படையில் இந்த நாவல் பேசக் கூடியதும் “மனிதன் × இயற்கை” என்ற இந்த முரண்பாடுகளைத்தான். மனிதனின், தான்தான் பெரிய உயிர், தனக்காக மட்டும்தான் இந்த பூமி படைக்கப்பட்டுள்ளது‘, ‘தனக்குப் பிறகுதான் மற்ற எல்லா உயிர்களும்…’ என்ற சிந்தனைக்கு மாறாக, இந்த நாவலில் உள்ள ஓலேன்புலோக் மங்கோலிய மேய்ச்சல் நிலத்தின் நாடோடிகள் இயற்கையையும் புற்களையுமே பெரிய உயிர்களாக கருதுகின்றனர். இவற்றிற்குப் பிறகே மனிதன் என்ற அற்ப உயிர். அவர்களின் வாழ்வு முழுவதும் இயற்கைக்கும், அவைகளின் விதிகளுக்கும் உட்பட்டுத்தான். 

1960-70 களில் சீனாவில் கிராமப்புறத்து மக்களின் பழமையான பழக்க வழக்கங்கள், சிந்தனைகள், பழம்பெரும் நம்பிக்கைகள் போன்றவற்றை அகற்றி மனித குல மேன்மைக்கான “கலாச்சார புரட்சி” க்கு அழைப்பு விடுக்கிறார், மாவோ. அதன் விளைவாக நிறைய இளைஞர்கள், மாணவர்கள், மருத்துவர்கள் கிராமப்புற மக்களின் அறியாமையைப் போக்கி அவர்களை நாகரிகமடைந்தச் சமூகமாக மாற்றுவதற்கும், அவர்களிடையே மருத்துவ அறிவை மேம்படுத்துவதற்கும் வெவ்வேறு கிராமப் புறங்களுக்குச் செல்கின்றனர். இதன் ஒரு பகுதியாக சில சீன மாணவர்கள் வட-மத்திய உள் மங்கோலியாவின் மிகப் பழமையான ஓலோன்புலோக் மேய்ச்சல் நிலங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

அப்படி அனுப்பப்பட்ட மாணவர்களில் ஜென்சென்னும் அவனது மூன்று நண்பர்களும் ஓலோன்புலோக் மேய்ச்சல் நிலத்தில் தங்கி அங்கு ஆடு, மாடு, குதிரைகள் மேய்க்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். நாட்கள் செல்லச் செல்ல அந்த மேய்ச்சல் நிலம் அவர்களை வசீகரிக்கிறது. சீனாவில், மனிதன்தான் முக்கியம் என்ற கருத்தாக்கத்தின் பின்புலத்தில் வளர்ந்த ஜென், இந்த மேய்ச்சல் நிலத்தின் பழக்கவழக்கங்களால் ஈர்க்கப்படுகிறான். முக்கியமாக அந்த நிலத்தின் குலச் சின்னமான ஓநாய்களைப் பற்றியும் அவை அந்த நிலத்தின் குலச் சின்னமாக இருக்கும் காரணத்தையும் அறிந்து கொள்ளும் ஆவல் ஜென்னிற்கு ஏற்படுகிறது. அவனுக்கு பில்ஜி என்ற அந்த நிலத்தின் முதிய ஒரு தலைவரின் வழிகாட்டுதல் கிடைக்கிறது. அவரின் மூலம் ஜென் ஓநாய்களைப் பற்றி நிறைய தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறான். பின்பொரு நாளில் பில்ஜியின் அனுமதி இல்லாமலே தன் உயிரைப் பணையம் வைத்து ஒரு ஓநாய் குகைக்குள் சென்று அங்கிருக்கும் ஓநாய் குட்டிகளைக் கடத்தி அவற்றில் ஒரு ஓநாயை மட்டும் தேர்ந்தெடுத்து வளர்க்கத் தொடங்குகிறான். 

ஓலோன்புலோக் நாடோடிகள் அவர்களின் பெரிய உயிரான புற்களை மேய்த்து அழிக்கும் மான்களைத் தங்கள் எதிரியாகவும், அந்த மான்களை வேட்டையாடும் ஒநாய்களைத் தங்கள் குலச் சின்னமாகவும் பார்க்கிறார்கள். தங்களது இறந்த உடல்களை ஓநாய்களுக்கு உணவாக்குவதன் மூலம் தங்களது ஆன்மா, தங்களின் மேய்ச்சல் நிலக் கடவுளான “டெஞ்ஞர்” க்கு அனுப்பப்படும் என நம்புகிறார்கள். ஆனாலும் இயற்கைச் சமநிலைக்கு ஏற்ப, அவர்களின் குலச் சின்னமான ஓநாய்கள் தங்கள் கால் நடைகளான ஆடு, குதிரைகளை அதிக அளவு வேட்டையாடும் பட்சத்தில், அவர்கள் அவற்றை- தங்கள் குலச் சின்னத்தை- வேட்டையாடவும் தயங்குவதில்லை. அவர்கள் ஓநாய்களைப் புனிதப்படுத்துவதில்லை. ஆனால் அந்த நிலத்தின் ஓநாய்கள் மனிதர்களை விட நுண்ணறிவு வாய்ந்தவை. ஒரு ஓநாய்த் தலைமையின் கீழ் கூட்டமாக சேர்ந்து அவைகள் மேய்ப்பர்களின் கால் நடை மந்தைகளைத் தாக்கும்போது, அவை மகத்தான வெற்றி பெறுகின்றன. 

ஜியாங் ரோங்

மிகவும் மெதுவாக ஆரம்பிக்கும் நாவல் குதிரைகளை ஓநாய்க் கூட்டம் வேட்டையாடும் இடத்திலிருந்து சூடு பிடிக்கிறது. தொடர்ச்சியாக அடுத்தடுத்து சுவாரஸ்யமான சம்பவங்களால் ஒரு மொழிபெயர்ப்பு என்ற உணர்வையே ஏற்படுத்தாமல் பயணிக்கிறது. எர்லாங், எல்லோ, யிர் ஆகிய மூன்று வேட்டை நாய்களும், ஜென் வளர்க்கும் குட்டி ஓநாயின் மீது மற்ற நாய்கள் வெறுப்புக் காட்ட, எர்லாங் மட்டும் அதற்கு தந்தை போல் பாதுகாப்பு தரும் பாசமும் மனதில் ஒட்டி நிற்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக அந்த குட்டி ஓநாய். ஜென்னின் குடிலுக்கு வந்ததற்குப் பிறகு யாரோடும் பழகாமல் ஜென்னிடம் மட்டுமே அன்பு காட்டும் இடமும், ஜென் அதற்கு சாப்பாடு வைக்கும் போதெல்லாம், “குட்டி ஓநாய், குட்டி ஓநாய்.. சாப்பாட்டு நேரம்” என்ற அழைப்பைத் தொடர்ந்து குட்டி ஓநாய் துள்ளி குதித்து ஓடி வரும் காட்சியும் நாவல் முடித்த சில நாட்களுக்குப் பிறகும் மனதில் நிற்கும் கவிதைகள். ஆனால் ஓலோன்புலோக் மேய்ச்சல் நிலத்தின் ஓநாய்கள் ஒரு போதும் வீட்டு நாய்களைப் போல அடிமை ஆவதில்லை. அவை விரும்புவது கட்டற்ற விடுதலை மட்டுமே. இறுதியில் குட்டி ஓநாய் தேர்ந்தெடுப்பதும் அந்த விடுதலையைத்தான். 

இத்தகைய மேய்ச்சல் நிலம் வெறும் 20-30 வருடங்களில் மெல்ல மெல்ல கலாச்சாரப் புரட்சியின் விளைவால் அழிக்கப்படுகிறது. மனித நன்மைகளை மட்டும் கணக்கில் கொண்டு மேய்ச்சல் நிலம் முழுவதும் விளை நிலங்களாக மாற்றப்படுகிறது. அவர்களின் ஓநாய் குலச்சின்னம் அந்த நிலத்தை விட்டு நவீன ஆயுதங்களின் உதவியுடன் துரத்தப்படுகிறது. துரத்திய வெகு காலங்களுக்குப் பிறகும் தூரத்தில் அவைகளின் சோகமான ஊளைகள் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. பில்ஜி கூறியது போல இந்த அவலத்தின் விளைவை சீனா சந்தித்து விட்டது. அவர்கள் பனிப் புயல் மூலமாக இப்போது வரை அதை அனுபவிக்கத்தான் செய்கின்றனர். 

சி.மோகன்

 

இப்படியாக மங்கோலிய மேய்ச்சல் நிலத்தின் வளமும் அதன் உயிரோட்டமும் பழங்கதைகளாகிப் போன அவலத்தைப் பார்த்துணர்ந்த நாவலாசிரியர் ஜியாங் ரோங் அப்படியே நாவலாக வடித்துள்ளார். அந்த சுவை சிறிதும் மாறாமல் எழுத்தாளர் சி.மோகன் அவர்கள் தமிழில் இந்த நாவலை ஓநாய் குலச் சின்னமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close