கட்டுரைகள்
Trending

இரண்டு அணிகள் ஒரே கனவு. 4 வருடக் கனவல்ல… 44 வருட கனவு! யாருடைய கனவு நனவாகப் போகிறது?

சேவியர் ராஜதுரை

அரையிறுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளை வென்று இதுவரை ஒருமுறை கூட கோப்பை வெல்லாத நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இன்று எந்த அணி கோப்பையை வென்றாலும் அது கொண்டாட்டமான ஒன்றாகவே இருக்கும்.

இங்கிலாந்து அணி இதுவரை 3 முறை (79,87,92) உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. 27 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. கிரிக்கெட்டை கண்டுபிடித்த அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பை வாங்கவில்லை போன்ற விமர்சனங்களுக்கு இன்றைய வெற்றியின் மூலம் இங்கிலாந்து முற்றுப்புள்ளி வைக்கலாம்.

நியூசிலாந்து அணி கடந்த உலகக்கோப்பையில் மட்டுந்தான் இறுதிப்போட்டி வரை சென்றது. அதிலும் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறியது. அங்கு செய்த தவறுகளில் பாடம் கற்றுக் கொண்டு அதை திருத்தி எழுத மீண்டும் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.

உலகக்கோப்பையில் இரண்டு அணிகளும் இதுவரை 8 முறை மோதியுள்ளன. அதில் 5 ல் நியூசிலாந்து அணியும் மூன்றில் இங்கிலாந்து அணியும் வென்றுள்ளன. ஆனால்  இந்த உலகக்கோப்பையில் குரூப் போட்டிகளில் இங்கிலாந்தின் கையே ஓங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியில் உள்ள பதினைந்து வீரர்களில் ஏழு வீரர்கள் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அணியின் கேப்டன் இயான் மார்கனே அயர்லாந்தை சேர்ந்தவர். 2007 உலகக்கோப்பை போட்டியில் அயர்லாந்து அணிக்காக விளையாடினார். அவருடைய திறமையே அவரை இங்கிலாந்து அணியின் கேப்டனாக்கியது.” இயான் மார்கன் மிகவும் கூலான கேப்டன். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதட்டப்படமாட்டார். எவ்வளவு கடினமான நிலையிலும் தெளிவாக முடிவெடுக்ககூடியவர். அணி எப்படி விளையாட வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்வார்.அணியும் அவரை முழுதாக நம்புகிறது.” இது இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் மார்கன் பற்றி கூறிய வார்த்தைகள்.

இதே போலத்தான் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும்.மிகவும் பொறுப்பான திறமையான கேப்டன். களத்தில் பொறுமையாக இருக்கக் கூடியவர். பேட்டிங்கில் மட்டுமல்ல கேப்டன்ஷிப்பிலும் மிகச்சிறப்பாக செயல்படுபவர். தன்னுடைய அணிக்கு முதல் கோப்பை பெற்றுத் தரவேண்டும் என்ற வேட்கையோடு இருக்கிறார்.

இன்றைய போட்டி பற்றிய பல கணிப்புகள் நிஜமாகவே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தன்னுடைய ட்விட்டரில் “இந்திய அணியை வெல்லும் அணியே கோப்பையை கைப்பற்றும்” என பதிவிட்டிருந்தார். இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள இரண்டு அணிகள் மட்டுமே இந்த உலகக்கோப்பையில் இந்தியாவை வென்றுள்ளன.

இதேபோல சேலத்தைச் சேர்ந்த ஒரு ஜோசியர் இந்த உலகக்கோப்பையில் நியூசிலாந்து வெல்லும். வில்லியம்சன் தொடர் நாயகன் விருது பெற வாய்ப்புள்ளது என ஜனவரி மாதம் கூறியிருந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அதேபோல அரையிறுதிக்கு தகுதிபெற்ற நான்கு அணி கேப்டன்களும் புள்ளிப்பட்டியில் வரிசையில் ரோட்டில் நடந்து செல்வது போன்ற புகைப்படத்தை ஐசிசி வெளியிட்டிருந்தது. அதில் முதலில் கோலியும் பின்னால் பின்ச்சும் மூன்றாவதாக மார்கன் நான்காவதாக வில்லியம்சன் நடப்பது போன்றிருக்கும்.அந்த வரிசைப்படியே அரையிறுதியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வெளியேறியது.மூன்றாவதாக மார்கன் நின்றிருப்பார். எனவே இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வெல்லும் எனக் கூறி வருகின்றனர்.

இவையெல்லாம் வெறும் கணிப்புக்களே. இதில் எல்லாமே நடந்தது விடும் என்பதில்லை. அன்றைய நாளில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்.

நியூசிலாந்து அணியைப் பொருத்தவரை அணியின் கேப்டன் வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

அணியின் சீனியர் வீரர் ராஸ் டெய்லரும் அவருக்குத் துணையாக ஆடுகிறார்.இந்தத் தொடரில் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் துவக்க வீரர் இன்று ஜொலிக்கும் பட்சத்தில் அணி நல்ல ஸ்கோரை எட்டலாம். பவுலிங்கில் போல்ட், மாட் ஹென்றி,சாண்ட்னர், பெர்குசன் அசத்துகின்றனர்.தங்களுடைய வழக்கமான பந்துவீச்சை தொடரும் பட்சத்தில் எதிரணியினைத் திணறடிக்கலாம். பீல்டிங்கில் நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்படுகிறது. அரையிறுதிப்போட்டியில் அவர்களின் சிறந்த பீல்டிங்கே இந்தியாவைச் சிதற வைத்தது.

இங்கிலாந்து அணியின் பேட்டிங்கைப் பொருத்தவரை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜோரூட் அசத்துகிறார். அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் & பேர்ஸ்டோவிற்கு நாள் சிறப்பாக அமையும் பட்சத்தில் நியூசிலாந்து அணியின் கோப்பைக் கனவு நிச்சயம் பறிபோகும். அதிரடி ஆட்டக்காரர்களான இவர்கள் இருவரும் ரன்ரேட்டை சர்வசாதரணமாக 6 க்கு மேல் கொண்டு சென்று விடுவர். கேப்டன் மார்கனின் ஆப்கானிற்கு எதிரான ஆட்டத்தையும் மறந்துவிடமுடியாது. மிஸ்ட்ரி பவுலர் என வர்ணிக்கப்டும் ரஷித்கானின் பந்துவீச்சில் சிக்ஸர்களாக பறக்கவிட்டவர். ஸ்டோக்ஸ்,பட்லர் இருவருமே மிகச்சிறந்த வீரர்கள்.பவுலிங்கைப் பொருத்தவரை ஆர்ச்சர் எதிரணியினரை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார். அவருக்குத் துணையாக ப்ளங்கட் ,மார்க்வுட்,வோக்ஸ் சிறப்பாக பந்து வீசுகின்றனர். முக்கியமான நேரங்களில் ரஷீத் விக்கெட் கைப்பற்றி திருப்பம் தருகிறார். மேலும் இது இங்கிலாந்தில் நடைபெறும் தொடர் என்பதால் இங்கிலாந்து அணிக்கு கூடுதல் பலம்.

தொடர் நாயகன் யாராக இருப்பார்கள் என்பதற்கான ஆர்வமும் இப்பொழுதே வந்துவிட்டது. அதிக ரன்கள் எடுத்த ரோகித் சர்மா(648), வார்னர்(647), ஷகிப்(606) மூவரின் அணிகளுமே வெளியேறிவிட்டது.

இதற்கடுத்த இடங்களில் ஜோ ரூட் (549),வில்லியம்சன்(548) உள்ளனர்.இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடும் பட்சத்தில் இவர்கள் இருவரில் ஒருவருக்கு தொடர் நாயகன் விருது கிடைக்கலாம்.

அதேபோல பந்துவீச்சிலும் அசத்திய ஸ்டார்க்கும்(27விக்), முஸ்தபிஜூரும் (20) இறுதிப்போட்டி ஆடமுடியாது. இவர்களுக்கடுத்தபடியாக ஆர்ச்சர் 19 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். மார்க்வுட் 17 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். அதேபோல நியூசிலாந்திலும் போல்ட் (17விக்), பெர்குசன்(18விக்) வீழ்த்தியுள்ளனர். இன்றைய போட்டியில் இவர்கள் அசத்தும் பட்சத்தில் இவர்களில் ஒருவருக்கு கிடைக்கலாம்.

லார்ட்ஸ் மைதானத்தில் இந்த உலகக்கோப்பைத் தொடரில் நடந்த நான்கு போட்டிகளிலுமே முதலில் பேட் செய்த அணியே வென்றிருக்கிறது. நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் சேஸிங் செய்த அணி ஆல்அவுட்டாகியுள்ளது. ஆகவே நாளைய போட்டியில் டாஸும் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வதைத்தான் விரும்பும். பொதுவாக இங்கிலாந்து மைதானங்களில் கடந்த இரண்டு வருடங்களில் முதலில் பேட்டிங் செய்த அணியே 50 சதவீதத்திற்கும் அதிகமாக வென்றிருக்கிறது. மார்கன் மைதானம் பற்றி கூறுகையில் நாளை ஹைஸ்கோரிங் மேட்சாக இருக்காது. 300 க்கு கீழ் தான் ரன்கள் வரும்.ஆனால் போட்டி இரு அணிகளுக்குமே நெருக்கடியாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

இரண்டு அணிகளும் தங்களது முதல் கோப்பையை வாங்க மும்முராக இருக்கும் என்பதால் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close