சிறுகதைகள்

விழிப்பு

சித்துராஜ் பொன்ராஜ்

புரண்டு படுத்ததில் திடுக்கிட்டு எழுந்த பால்சாமி தன் வாயோரமாகக் கிடந்த கைத்தொலைப்பேசியின் ஒளிவிடும் திரையை விரலால் தடவி அதில் ஓடிக் கொண்டிருந்த திரைப்படத்தை நிறுத்தினான். திரைக்கு அடியில் ஓடிய சிவப்பு நிறக் கோடு திரைப்படத்தில் கணிசமான பங்கு ஓடியிருந்ததைக் காட்டியது.
கொரியப் படம். பால்சாமி படத்தை நிறுத்தியபோது கதாநாயகியான ரொட்டிக் கடை நடத்தும் திருமணமான மத்திய வயதுப் பெண் தன் கள்ளக்காதலனுக்கு மூளையில் புற்றுநோய் என்ற செய்தி கேட்டுப் பதறிக் கொண்டிருந்தாள். கள்ளக்காதலன் அவளைவிட மிகவும் வாலிபமாக இருந்தான்.

இருவரும் மிக அழகாகவே இருந்தார்கள்.
அவன்: அதிகப்படியான சலனமேதுமின்றி மிகவும் கவனத்தோடு செதுக்கிய விலை உயர்ந்த கைக்கடிகாரம் போல.

அவள்: மிகப் பெரிய துயரத்துக்கு நடுவிலும் பீங்கான் தட்டில் அடுக்கி வைத்த செவ்வந்தி மலர்களைப்போல கைக்கடக்கமாக.
பால்சாமி திடீரென்று திரைப்படத்தை நிறுத்தியதில் அவர்கள் இருவரும் திரையில் வியப்பு நிறைந்த முகங்களோடு ஒருவரை ஒருவர் கண்கள் விரியப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தொலைப்பேசித் திரையில் பதிந்திருந்த கைரேகையில் மங்கலாகப் பிரதிபலித்த பால்சாமியின் முகத்திலும் அதே வியப்பு ஒட்டியிருந்தது.
பால்சாமி இதுவரைக்கும் எந்தத் திரைப்படத்தையும் முழுமையாகப் பார்த்ததில்லை. திரைப்படத்தின் தொடக்கத்தில் பெயர்கள் ஓடும்போதே தூங்கிவிடுவான். அல்லது படத்தின் முதல் காட்சியில்.
படத்தின் தொடக்கத்தில் கதாநாயகன் ரௌடிகளோடு சண்டை போட்டு ஜெயித்துவிட்டுக் கும்பலாகத் தன் பராக்கிரமங்களைச் சொல்லிப் பாட்டுப் பாடும் திரைப்படங்கள் பால்சாமிக்கு வசதியாக இருந்தன. சண்டைக்கும் பாடலுக்கும் இடையே உள்ள நனைந்த மணல்மேடு போன்ற இடைவெளியில் பால்சாமி தரைதட்டிய கொள்கலக் கப்பலாகச் செருகி ஆடாமல் அசையாமல் நின்று கொள்வான்.

திரைப்படங்களை முழுமையாகப் பார்க்க முடியாவிட்டாலும் பால்சாமி இணையதள விமர்சனங்களைப் படித்தும் தன் இயற்கையான கற்பனை ஆற்றலைப் பயன்படுத்தியும் அவற்றின் கதைகளை ஓரளவுக்கு யூகித்து விடுவான் இப்போது பால்சாமி திரையின் கீழிருந்த சிவப்புக் கோட்டை ஏக்கத்தோடு பார்த்தபடி கைத்தொலைப்பேசியை அவன் மல்லாந்து படுத்திருந்த படுக்கையின் ஓரமாக சலிப்போடு போட்டான். இன்றும் உண்மையில் எவ்வளவு நிமிடங்கள்வரை திரைப்படத்தைப் பார்த்தான் என்று அவனால் தீர்மானிக்க முடியவில்லை.
நீட்டிப் படுத்து விட்டத்தைப் பார்த்தபடியே தன்னையும் இப்படி ஒரு நாற்பது வயதுக்காரி காதலித்தால் எப்படியிருக்கும் என்று கனாக் கண்டான். பிறகு ஒரு திரைப்படத்தைக்கூட முழுமையாகப் பார்க்க முடியாத ஒருத்தனை எந்தப் பெண்ணாவது காதலிப்பாளா என்று யோசிக்க ஆரம்பித்தான். இருபத்தைந்து வயதில் காமம் என்பது பால்சாமிக்கு முழுமையாகப் பார்க்க முடியாத திரைப்படம்போலவே பிடிபடாமல் இருந்தது.

கொரிய நடிகையை நினைத்தபடியே பால்சாமி தன்னையும் அறியாமல் படுத்தபடியே இரண்டு தொடைகளையும் மிக இறுக்கமாக இழுத்து வைத்துக் கொண்டான். அடர்த்தியானதும் எளிதில் புரட்ட முடியாத ஆயிரமாயிரம் கூர்மையான முனைகள் வாய்ந்தததும் அதே சமயம் கனமே இல்லாததுமான ஓர் உணர்வு அவன் அடிவயிற்றில் இறங்கி பின்பு கால் நடுவே பாய்ந்து சிறுநீரின் ஜில்லிட்ட குறுகுறுப்போடு கரைந்து ஓடியது.

அவன் கண்களின் முன்னால் வெண்மையான உடல் பாகங்களாகவும் திரைப்படகத் துணுக்களாகவும் காட்சிகள் தோன்றி மறைந்தன. கண்ணிமைக்கும் வேகத்தில் தோன்றி மறைந்த சதைப் பிண்டங்களில் ஓர் உடல் அவன் தாயின் நிர்வாண உடம்பாக இருக்கவே பால்சாமி திடுக்கிட்டுப் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான். அவன் நெற்றிப் பொட்டில் ஜில்லென்ற வியர்வைத் துளி இறங்கி ஓடியது.
அம்மாதான் அவனைச் சமீபத்தில் மனநல மருத்துவரிடம் அழைத்துப் போனாள்.
”இருபத்தஞ்சு வயசு வாலிபப் பிள்ளைங்க டாக்டர். எப்பப் பார்த்தாலும் பேயடிச்சாப்புல ரூமுலயே உக்கார்ந்துக்கிறான். யூனிவர்ஸிட்டி முடிஞ்சு இத்தனை வருஷமாச்சு. வேலைக்கு முயற்சி பண்ணாமலேயே இருக்கான். அது பரவாயில்ல, டிவியாவது பார்த்துக்கிட்டு இருடானா அப்பக்கூட பேந்த பேந்த முழிக்கிறான். எந்த படத்தையும் அஞ்சு நிமிஷத்துக்கு மேல பார்க்க முடியலையாம். அப்படியே உக்காந்தபடியே தூங்கிடுறான். கர்த்தர்தான் கண்ணைத் தொறக்கணும்.”
பழக்க தோஷத்தில் மருத்துவர் இருந்த அறையின் சகல மூலைகளிலும் சிலுவையைத் தேடினாள். எந்த மூலையிலும் சிலுவை கண்ணில் படாததால் மீண்டும் மருத்துவர்மீதே பார்வையைத் திருப்பித் தன் மார்பின்மீது அகலமாக சிலுவைக் குறியைப் போட்டுக் கொண்டாள். வியர்வையில் முற்றும் நனைந்த அவளுடைய தொண்டைக்குழி அடிக்கடி ஏறி இறங்கியது.

மருத்துவர் பழைய சிலோன்காரர். நகரத்தின் விரைவுச் சாலையின் ஓரமாய்ப் பல காலமாக தன் தொழிலை நடத்தி வந்தார். பால் அதிகமாக விட்டுக் கலந்த காபி போன்ற நிறம். விளக்குகள் நிலவாய் பொங்கி வழியும் அளவுக்கு வழுக்கை. முகத்தில் பாதியை மறைத்த வட்ட வடிவ மூக்குக் கண்ணாடியில் அவருடைய பெரிய விழிப்பைகள் கடற்கரை மண்ணில் புதைந்திருக்கும் கடலாமையின் முட்டைகளாக சுடர்விட்டன. அவர்மீது ஆண் விந்தின் வாசனை வீசுவதாக பால்சாமிக்குத் தோன்றியது.

மருத்துவர் பால்சாமியின் கண்ணிமைகளை விரல்களால் மேலேற்றி டார்ச்சடித்துப் பார்த்தார். பின் கண் ரப்பைகளை பெருவிரலால் இழுத்து வைத்துச் சோதித்தார். அழுந்தத் துடைத்த அவருடைய மூக்குக்கண்ணாடியின் பளபளப்பான மேற்பரப்பில் தனது சிவந்த கண்களின் பிரதிபலிப்பு அருவெறுப்புக் கொப்புளிக்கப் பிதுங்கி நிற்பதையும் தன் முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் திரைப்படக் காட்சிகளாக விரிவதையும் பால்சாமி ஆர்வத்தோடு பார்த்தபடி இருந்தான்.
மருத்துவர் பால்சாமியை ஒருமுறை நாக்கை நீட்டிக் காட்டச் சொன்னார். பிறகு சலிப்புடன் அடித்தொண்டையைச் செருமிவிட்டுத் தனக்கு முன்னாலிருந்த தாளில் எதையோ எழுத ஆரம்பித்தார்.
“எதுக்கும் மூளையை ஸ்கேன் செய்து பார்த்துருங்களேன். மூளையில கட்டி இருந்தாலும் இப்படியெல்லாம் திடீர் திடீர்னு தூக்கம் வரும். எதுலயும் கவனம் வைக்க முடியாமப் போகும். எத்தனை நாளா இப்படி இருக்குனு சொன்னீங்க?”
மருத்துவரின் விரல் நுனிகளிலிலிருந்தும் கைகளையும் உடம்பையும் அவர் நகர்த்தும்போது சட்டைப் பொத்தான் இடைவெளிகளிலிருந்தும் மீண்டும் ஆண் விந்தின் உப்பு வாசம் வெள்ளி நிறச் சர்ப்பமாய் மீண்டும் பலமாக எழுந்தது. அம்மா இரண்டு கைகளையும் சேர்த்துக் கோர்த்து வைத்தபடி பயத்தின் உச்சத்துக்கே போய் மருத்துவரிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்.
“எப்படியாவது இவனைக் காப்பாத்துங்க டாக்டர். இவன் அப்பா அந்த காலத்துல போஸ்ட்மாஸ்டரா இருந்தவரு. அவரும் உங்க ஊர்க்காரர்தான். இவன் பதினஞ்சு வயசா இருக்கும்போதே கர்த்தர்கிட்ட போயிட்டாரு. இவன் எனக்கு ஒரே பிள்ளை.”
அம்மா உங்க ஊர்க்காரர் என்றதும் மருத்துவரின் பெர்ஸிமன் கனிபோன்ற கீழுதடு ஏளனத்தில் கோணியதை பால்சாமி மட்டும் கவனித்தான்.
ஆனால் பால்சாமியைக் கேட்டால் சொல்லியிருப்பான். அவனுக்கு இந்த வியாதி பதினைந்து வயதில் அப்பா மூச்சுக்குழல் நோயால் செத்த சில நாட்களிலேயே வந்துவிட்டது.

அப்பா காரியத்துக்குப் பின் அப்போதுதான் பால்சாமி பள்ளிக்கூடத்துக்குத் திரும்பியிருந்தான். மழை பெய்து கொண்டிருந்த ஒரு பிற்பகல் நேரம். பால்சாமியின் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பள்ளியின் ஒளிஒலி அறையில் அமர்ந்திருந்தார்கள். அறிவியல் ஆசிரியர் அன்று வரவில்லை என்று அறிந்தவுடன் தேவா என்ற மாணவன் புத்தகப்பையிலிருந்த் வீடியோ கேஸட் ஒன்றை உருவி எடுத்து தன் பக்கத்திலிருந்த மாணவர்களை விளக்குகளை அணைத்து விடவும் வகுப்பறையின் எல்லாக் கதவுகளையும் மூடிவிடவும் அவசரம் கலந்த குரலில் உத்தரவிட்டான்.

வகுப்பறையின் முன்புறத்தில் அறிவியல் பாடத்தின் போது ஆசிரியர் மாணவர்களுக்கு விளக்கப்படங்களைப் போட்டுக் காட்ட இரும்புப் பெட்டிக்குள் சிறிய தொலைக்காட்சி ஒன்றும் அதற்குக் கீழுள்ள அறையில் வீடியோ டெக் ஒன்றும் வைத்திருந்தார்கள். தேவாவிடம் இரும்புப் பெட்டியைத் திறப்பதற்கான சாவி இருந்தது.

பாலுவுடைய நண்பர்கள் சில பேர் கதவுகளின் ஓரமாய்க் காவலுக்கு நின்று கொண்டார்கள். ஆனால் மற்ற மாணவர்களின் கண்களைப்போல் அவர்கள் கண்களும் தொலைக்காட்சிப் பெட்டி மீது நிலைக்குத்தி இருந்தன. அதில் ஓடும் காட்சிகளின் நிழல்கள் நீரில் நனைத்த நிறங்களாய் அவர்களின் விழிகளில் கூடிக் கலைந்தன.
பால்சாமி தொலைக்காட்சியின் எதிரில் அமரவில்லை. விதிவசத்தாலோ அல்லது சுத்த அசட்டுத்தன்மையாலோ தொலைக்காட்சித் திரையில் கால் பகுதி மட்டும் தெரியும் அளவில் வகுப்பறையின் ஓர் மூலையில் அமர்ந்திருந்தான். அதனால் இதுவரைக்கும் பால்சாமிக்குத் திரையில் தோன்றிய நடிகர்களின் முகங்களோ அவர்கள் ஒருவருக்கொருவர் என்ன செய்து கொண்டார்கள் என்பதோ சுத்தமாக நினைவில் இல்லை.

அவன் நினைவில் கலந்திருப்பதெல்லாம் அன்று தேவா போட்டுக் காட்டிய நீலப்படத்தில் முதல் சில நிமிடங்களில் திரையில் தோன்றிய நிறங்களும், ஓசைகளும், மாறி மாறி விழுந்த வெளிச்சமும்தான். அந்த வெளிச்சங்களும் சத்தங்களும் அவனுக்குள் மிகப் பெருய பாதிப்பை ஏற்படுத்த பால்சாமி எங்கும் பரவும் நீலமாக திகைத்துப் போய் அமர்ந்திருந்தான்.

பால்சாமியைச் சுற்றி அமர்ந்திருந்த மாணவர்களின் சிரிப்பும் கேலியும் நிறைந்த தாழ்ந்த கட்டைக் குரல்கள் பால்சாமியைச் சுற்றியும் மெள்ளப்படும் சுண்டல்களாகவும், கசக்கப்படும் பிளாஸ்டிக் பைகளாகவும் ஒலித்தன. அவற்றின் மத்தியிலிருந்து அபூர்வமான வெள்ளை நிற மலராய் பூத்து எழுந்த விந்து வாசத்தில் பால்சாமி அத்வைத நிலைக்கு ஏறிப் போனான். தன் உடல், மனம், உணர்வுகளுக்கு இடையே எவ்விதமான பிளவுமின்றித் தன் நண்பர்களிடையே அமர்ந்திருந்தான்.
கடலாழத்தில் உணரப்படுவதைப்போல் தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து புறப்பட்ட ஒளியும் ஓசைகளும் பால்சாமியின் காதுகளிலும் நெற்றிப் பொட்டின் நரம்புத் துடிப்பிலும் தனித்தனியே இரண்டாகப் பிரிந்து வெவ்வேறு வேகங்களில் மோதிக் கொண்டன.

கர்ணகடூரமான ஓசைகளோடு நீண்ட உருளையின் வடிவிலிருந்த ஸ்கேன் கருவிக்குள் பால்சாமியை மருத்துவ உதவியாளர்கள் படுக்க வைத்தபோதும் அவனுக்கு அதே அனுபவம் ஏற்பட்டது.
ஸ்கேன் அறிக்கை பால்சாமியின் மூளையில் குறிப்பிடும்படி எந்த வியாதியும் காணப்படவில்லை என்றே வந்தது. பால்சாமி மருத்துவரிடமிருந்து அம்மா கொண்டு வந்த மருத்துவ அறிக்கையை முதலிலிருந்து இறுதிவரை பல மணி நேரங்களாகப் படித்துக் கொண்டிருந்தான்.

ஏதோ ஒரு பெயரற்ற மழைநாளில் பள்ளிக்கூடத் தோழர்களின் கேலிச் சிரிப்புக்கிடையே நீலப்படம் பார்த்த போது மனதுக்குள் ஏற்பட்ட பிளவு தொடர, பல்லாயிரம் அர்த்தமற்ற அசையாத சித்திரங்களாய் பால்சாமி புகுமுக வகுப்பையும், பல்கலைக் கழகப் படிப்பையும் எப்படியோ படித்து முடித்தான்.
ஆனால் பால்சாமிக்கு வயது ஏற ஏற காட்சிக்கும் ஓசைக்கும் இடையே உள்ள இடைவெளி கூடிக்கொண்டே போனது. பல நேரங்களில் திரைப்படக் காட்சியும் வசனமும் வெவ்வேறு வேகங்களில் புரிவதால் பால்சாமிக்கு கதையின் முடிச்சுத் தெரியாமல் போனது.

நாளடைவில் பால்சாமி தாளில் வாசிக்கும் எழுத்துக்களுக்கும் தன் மண்டைக்குள் கேட்கும் ஓசைக்கும் இடையே தொடர்பு அறிய முடியாதவனாய் திண்டாடினான். பிறகு தன் முன்னால் நடக்கும் காரியங்களுக்கும் அவற்றோடு தொடர்புடைய ஓசைகளையும் அர்த்தம் செய்ய முடியாதவனாய் அவன் உறைந்து போய் நிற்க ஆரம்பித்தான். அதைத்தான் மற்றவர்கள் தூக்கம் என்று கருதினார்கள்.
படுக்கையின் ஓரத்தில் வீசி எறிந்த கைத்தொலைப்பேசியை பால்சாமி மீண்டும் கையில் எடுத்துக் கொண்டு படுக்கையிலிருந்து இறங்கினான். கால்கள் பளிங்குத் தரையைத் தொட்டதும் ஜில்லிட்டன.

முடிவெட்டும் மாசிலாமணி மாமாதான் முதன்முதலில் வழி காட்டினார். இது பால்சாமி மருத்துவரிடம் போய் வந்த சில வாரங்களில் நடந்தது. வெள்ளி நிறக் கத்திரிக்கோலின் ஓயாத நகர்வில் உறைந்து போய் அமர்ந்திருந்தவனை மாசிலாமணி பிடறியைப் பிடித்து உலுக்கினார்.

“எதுலயும் இப்படி லயிச்சறக் கூடாது தம்பி. உலகம் ஓடிகிட்டே இருக்கு இல்லையா, நாமளும் ஓடிக்கிட்டேதான் இருக்கணும். உங்க அம்மா பாவம் இல்லையா. பார்க்குறவங்க கிட்ட எல்லாம் ஓவுன்னு அழறாங்க ஒரே புள்ள பித்துப் பிடிச்சதுபோல உக்கார்ந்து இருந்தா எந்த தாய்க்குத்தான் பொறுக்கும் சொல்லு?”
சிறிய சிறிய வட்டங்களாய் கத்தரிக்கோலை நகர்த்தி அவன் தலைமுடியை வெட்டினார். ஜன்னலிலிருந்து கொட்டும் சூரிய வெளிச்சத்தில் அவன் தலையைச் சுற்றி அச்சடித்த சின்னச் சின்ன எழுத்துக்களாய்க் கிளம்பும் மயிர்களை பால்சாமி மிகுந்த சுவாரஸ்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

மாசிலாமணி மாமா பேசுவதுதான் இப்படி எழுத்துக்களாக மாறித் தன் தலையைச் சுற்றி வருகிறது.
“பாவம் உங்க அப்பாவும் எப்படி இருந்த மனுஷன். எப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவரு. தெலுங்குப் பொம்பளையான உங்க அம்மாவை மதம் மாறிக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்க பக்கத்துக் உறவுக்காரங்களை எல்லாம் பகைச்சுக்கிட்டாரு. கடைசியில வாங்குன கடனையும் அடைக்க முடியாம சீக்கு வந்து செத்துப்போனாரு.”
நாற்காலியைச் சுற்றிக் குவியலாய் முடிக்கற்றைகள். அத்தனையும் மாசிலாமணி மாமா சொன்ன வார்த்தைகள்.
”ஒரு நிமிஷத்தைக்கூட வீணாக்கக் கூடாது தம்பி, ஒரு விஷயத்தைக் கண்ணால பார்த்தோடனேயே அது வார்த்தையாறதுக்குள்ள நாம சுதாரிச்சுக்கணும். அந்த விநாடி இருக்கே அதுதான் முக்கியம்.”
மூச்சுக் குழாய் நோய் முற்றி ரப்பர் தோட்டத்திற்கு சற்றுத் தொலைவே இருந்த சிதிலமடைந்த கல் வீட்டில் படுத்திருந்த போஸ்ட்மாஸ்டர் அப்பா தகரத்தைச் சுத்தியலால் தட்டியதுபோல் ஆழமாக இருமிய விநாடியில் அவரைக் கட்டிக் கொண்டு படுத்திருந்த பதினான்கு வயது பால்சாமி திடுக்கிட்டு எழுந்து அவர் மார்பை ஆதுரமாய்த் தடவிக் கொடுத்தான். பிறகு எதிர்க் கட்டிலில் படுத்திருக்கும் அம்மா அங்கு இல்லை என்பதைக் கவனித்தான். கழிவறைக்குப் போயிருப்பாள் என்று காத்திருந்தவனின் காதுகளில் ரப்பர் தோட்ட நள்ளிரவின் நிசப்தத்தில் ஆணும் பெண்ணும் மெல்லிய குரலில் சிரித்துப் பேசும் சத்தம் மிதந்து வர எழுந்து போய்ப் பார்த்தான்.

வீட்டுக்குப் பின்னாலிருந்த ஸ்டோர் ரூமில் அம்மா யாரோ ஒரு கறுப்பான ஆடவனின் மீது அமர்ந்து இயங்கிக் கொண்டிருந்தாள். அவள் முகம் பால்சாமியைப் பார்த்தபடி இருந்தது. கண்களை மூடியிருந்தாள். கம்பிகள் அமைத்த சின்ன சாளரத்தின் வழியாக ஸ்டோர் ரூமுக்குள் புகுந்த விளக்குக் கம்பத்தின் மஞ்சள் நிற அரை வெளிச்சத்தில் அவள் முலைகள், வயிறு, இடுப்பு மற்றும் தோட்ட வேலைக்காக அலைந்து திண்ணென்று வீங்கியிருந்த தொடைகள் அனைத்தும் எண்ணெய் தேய்த்து உருவி விட்டதுபோல் சுடர்விட்டன. அவள் பெருமூச்சு விட்டபடியே முதுகை பின்னால் வளைத்து மீண்டும் நிமிர்கையில் திம்மென்று விறைத்திருந்த அவள் பருத்த முலைக்காம்புகள் தங்க நிறமாய் ஜுவாலை விட்டு எரிந்தன.

பால்சாமி பல நிமிடங்களாய் அவன் அம்மாவின் அசைவுகளை மூச்சடக்கிப் பார்த்தபடி நின்றிருந்தான். அவன் கண்களுக்கு அரையிருட்டில் நடக்கும் காட்சி தெரிந்ததே தவிர காதுகளில் அவர்கள் இருவரும் பேசிக் கொள்வது எதுவும் கேட்கவில்லை. அவனுக்குள்ளிருந்து தலை சிலுப்பி எழுந்த கறுப்புநிற ராட்சச மிருகம் ஒன்று அவன் காதுகளில் ஓலமிட்டுச் சிரிப்பதுபோல் பால்சாமிக்குத் தோன்றியது. அந்த இரைச்சலில் அம்மாவும் அந்த மனிதனும் மேலும் மேலும் சிரித்துப் பேசிக் கொண்டது எதுவும் பால்சாமியின் காதுகளில் கேட்கவில்லை.
யுகயுகமாய் சுகித்ததுபோல் களைத்திருந்த அம்மா உடம்பின் முன்புறமாய் சேலையைச் சுற்றிக் கொண்டு இரு கைகளையும் உயர்த்தி தலைமயிரை முடிந்தவாறே சமையலறைக்குள் வந்தாள். அங்கு உடலெங்கும் வியர்வை ஓட உறைந்து போய் நிற்கும் பால்சாமியை ஒரு கணம் வியப்புடன் பார்த்துவிட்டு அவனிடம் சொன்னாள்:
“பசிக்குதா கண்ணு? அம்மா ஓவல் கலக்கித் தரேன். அப்பாகிட்ட இதை எதையும் சொல்லாதே. அம்மாவும் பாவம் இல்லயா? அப்பாவையும் பார்த்துக்கிட்டு தோட்ட வேலைக்கும் போயிகிட்டு எவ்வளவு நாளுதான் நான் இப்படியே இருக்க முடியும்?”
பால்சாமி அவள் வாய் அசைவதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சொன்னதெல்லாம் சில வாரங்கள் கழிந்துதான் அவனுக்குக் கேட்டது. பால்சாமி அம்மாவின் வியர்வையில் நனைந்த கழுத்து வளைவைத் தாண்டி ஸ்டோர் ரூமில் படுத்திருக்கும் இளைஞனைப் பார்த்தான். தோட்டத்தில் காலியாகச் சுற்றிக் கொண்டிருக்கும் சாதாரண இளைஞன். தன் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவனின் அண்ணன். அதே நேரத்தில் அந்த இளைஞன் முழங்கைகளால் மூட்டுக் கொடுத்து எழுந்து அம்மாவையும் பால்சாமியையும் திரும்பிப் பார்த்தான். அறையின் இருட்டில் அவன் முகம் பால்சாமியின் முகம்போலவே இருந்தது.

இந்தச் சம்பவம் முடிந்து ஆறாவது மாதத்தில் அப்பா செத்துப் போனார்.
படுக்கையில் நிமிர்ந்து அமர்ந்த பால்சாமி கைத்தொலைப்பேசியை மீண்டும் கையில் எடுத்தான். திரையை விரலால் தடவி மீண்டும் திரைப்படத்தை ஓடவிட்டான். மாசிலாமணி மாமா சொன்னதுபோல் ஒளிக்கும் ஒலிக்கும் இடையேயுள்ள மிக நுண்ணிய நொடியை பால்சாமி தேடிக் கொண்டிருந்தான். பல முறை அந்த விநாடியைக் கண்டதாய் எண்ணிக்கொண்டு பால்சாமி அந்த விநாடியைப் பயன்படுத்தி திரைக்குள் நுழைய முயன்றிருக்கிறான். அவனது இரண்டு தோள்களிலும் திரைமீது மீண்டும் மீண்டும் மோதி உராய்ந்த காயங்கள் இருந்தன.

ஸ்டோர் ரூமில் தரையில் கலைந்து கிடந்திருக்கும் இளைஞன்மீது அம்மா வெறி கொண்டதுபோல் இயங்கும் காட்சியும், வகுப்பறையில் நீலப்படம் பார்க்கும்போது வகுப்புத் தோழர்களின் கேலிச் சிரிப்பும், இப்போது இந்தக் கொரிய படமும் தனித்தனியே வெவ்வேறு வேகங்களில் பால்சாமியின் கண்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருந்தன. திடீரென்று அவை மூன்றும் வேகமெடுத்து நிறங்களாகவும் சத்தங்களாகவுமே தனித்தனி அடையாளமேதுமின்றி கலந்தன. வெறும் நிறங்களாகவும் ஓசைகளாகவுமே மாறியிருந்த அந்தச் சுழலும் கோளம் கடைசியில் பால்சாமியின் நெற்றிப் பொட்டில் தலை நோவாகவும், அம்மா என்ற சொல்லின் விடுதலையாகவும் வெடித்துச் சிதறியது.
இந்த முறை தொடக்கக் காட்சியில் மத்திய வயது கொரியக்காரி எதையோ சொல்ல முனைந்த போது திரைப்படம் சற்றுத் தடுக்கியது. பால்சாமி அந்த விநாடியைப் பயன்படுத்தி கைத்தொலைப்பேசித் திரையை தோளால் மோதி படத்துக்குள் நுழைந்து கொண்டான். நுழைந்தவுடன் அவனும் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரமாகவே ஆகிக் கொண்டான். அவனைச் சுற்றி அவனுக்கு இப்போது நன்கு பரிச்சயமான கதை எவ்வித மாற்றமும் இல்லாமல் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தது. காட்சிகளும் வார்த்தைகளும் கடைசியில் பொருந்திப் போன ஆனந்தத்தில் பால்சாமி ஞானவான் ஆனான்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு பால்சாமி காணவில்லை என்று தேடும் அவன் அம்மா கைத்தொலைப்பேசியை எடுத்து அதன் திரைக்குள் பால்சாமி நின்று கொண்டிருப்பதைக் காணக் கூடும். அப்போது பால்சாமி அவள் கைவிரல்கள் எட்டாத தூரத்தில் ஜில்லென்று குளிர்ந்திருப்பான்.

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close