கவிதைகள்

விலா எலும்புகள் 

இரா.கவியரசு

அவனிடமிருந்து உடைத்தெடுத்த
விலா எலும்புகளின் வயிற்றில்
பிரபஞ்சம் ஊறுவதைப் பார்த்தவுடன்
வானத்துப் புத்தகத்தில்
ஏதோ எழுதுவதற்காக
சென்றுவிட்டார் கடவுள்

விலா எலும்புகளின் வயிற்றை
முதுகெலும்பை உடைத்துக் குத்தினான்
வழிய ஆரம்பித்த கடலில்
நிறைந்து பெருகின மீன்குஞ்சுகள்

முளைத்த குரலை
கழுத்து எலும்புகளால் குத்தியவன்
அதிலிருந்து
கூட்டம் கூட்டமாகப்
பாடிக்கொண்டே பறக்கும் பறவைகளைப்
பிடிக்க முடியாமல் கீழே விழுந்தான்

மென்தசைகள் முளைத்த நாளில்
முறுக்கவிழ்ந்த தோட்ட மலர்களை
யானைகளை அழைத்து வந்து
மிதித்தழித்தான்.
மலர்களால் மதம் கொண்ட யானைகள்
இவனை மிதித்தன.

தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த
ஆட்டுக்குட்டிகளுக்கு
பாலூட்ட ஆரம்பித்தபின்
அந்த எலும்புகளுக்கு
வேறெதுவும் தேவையற்றிருந்தது

மெல்லிய எலும்புகளைக் கொல்வதற்காக
பாறைகளில் ஆயுதங்கள் செய்யக்
கிளம்பிச் சென்றவன்
ஒவ்வொரு பாறையிலும்
விலா எலும்புகள்
காணாமல் போயிருப்பதைக் கண்டான்

திரும்பிய கடவுள்
வானத்துப் புத்தகத்தில் எழுதியவை
கீழே நடந்திருப்பது கண்டு திடுக்கிட்டார்
விலா எலும்புகளை மீண்டும்
அவன் உடலில்
பொருந்த ஆணையிட்டார்

அவரது உடலின்
விலா எலும்புகளும்
வெளியேறி வளர ஆரம்பித்திருந்தன.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close